வரைமுறைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 24 in the series 7 ஜூன் 2015

நடராஜன் பிரபாகரன்

இந்த முறை எப்படியும் தீபாவளிக்கு ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் மாறன். டீம் லீடரிடம் இருந்து முதலில் அனுமதி வாங்கி, பின்னர் மேலாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர் மனித வள துறை மேலாளரிடம் ஒப்புதல் பெற்று அதற்கு பின்னர் ஊர் போய் வருவது என்பது சுலபமான காரியம் இல்லை.

பரமபத விளையாட்டாய் தினசரி வாழ்கை போய்க் கொண்டு இருப்பதாக நன்றாகவே புரிந்தது. கொஞ்சம் நாள் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால் இப்படியே தொடர்ந்து சென்று விட முடியும் என்றுதான் தோன்றியது.

இன்னமும் பொறியியல் கல்வி படிக்க வாங்கிய கடன் ஆரம்பிக்க போகிறது. ஒவ்வொரு முறையும் அதைப் பற்றி என்னும் போதே தலையெல்லாம் பாரமாக, உடலையும், மனதையும் பாரம் அழுத்த ஏன் இப்படி படித்தோம் என்று சோகமாக இருந்தது. கலைக் கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக எதையோ செய்து கொண்டிருக்க, தான் மட்டும் இப்படி ஒவ்வால், ஆந்தை போல வாழ்வதை நினைத்தால் மிகவும் துக்கமாக இருந்தது.

சொல்லப் போனால் தாம் எல்லாம் பறவைகளை போல வாழ்வதாய் அவனுக்கு தோன்றியது. வாழ்வாதரத்துக்காக பல நாடுகளும், ஊரும் கடந்து இன பெருக்கம் செய்து வாழ்வை நடத்தி தனது குஞ்சுகளை தனித்து விட்டு சென்று வாழ்வை நடத்தும் இடம் பெயரும் பறவைகளுக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றியது.
ஆச்சரியமாய் இப்படியான சிந்தனைகள் வித்யாவிடம் இருந்துதான் அவனுக்கும் தொற்றிக் கொண்டது. வித்யாவைப் பார்க்கையில் அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகவும், நிறைய ஆச்சரியங்களும், சந்தோஷமும் இருக்கும். அதை கூட அவளிடம் இப்போது சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

உன்னைப் பார்த்தாள் எனக்கு ஆச்சரியமாய் இருக்கு வித்யா என்று அவன் சொல்லிப் பார்த்த போது அவன் அருகில் யாருமேயில்லை. கண்ணாடியின் முன் நின்று கொண்டு அவன் அதை ஒரு தேர்ந்த நடிகன் தனது திறமையெல்லாம் ஒரு நொடியில் வரும் பிம்பத்தில் காட்ட முயலும் ஆர்வத்துடனும், திறமையானவுடன் சொன்னான்.

முன்பிருந்த பிம்பம் அவனைப் பார்த்து இன்னமும் நன்றாக சொல் என்று உடத்தை சுழித்து, பற்கள் தெரிய, கொஞ்சம் கேவலமாக சிரிப்பதாக தோன்றியது. இதையும் விட எப்படி அழகாக கேட்க முடியும் என்று யோசித்து தலை மயிர் கற்றையில் விரல்களை நுழைத்து பின் தள்ளிக் கொண்டான்.

இன்னமும் அதிகமாக தலை மயிர் வளர்த்துக் கொண்டால் அழகாக இருப்போம் என்று தோன்றியது. இரண்டு கை விரல்களையும் தலை மயிர்க் கற்றையில் நுழைத்து நிறுத்திப் பார்த்தான். கோழி கொண்டை போல துருத்திக் கொண்டு நின்றது மயிர்க் கற்றை. நூடுல்ஸ் விளம்பரத்தில் வரும் ப்ராய்லர் கோழி போல தான் இருப்பதாய் அவனுக்கு தோன்றியது. தொலைக்காட்சியில் கூட ஒரு பாடகர் கார்ட்டூனில் தன்னை போலவே கோழி கொண்டை மயிருடன் பாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது மீண்டும் மனசுக்குள் பொறாமை துளிர்த்தது.

வித்யாவைவிட, அந்த இளம் பாடகனிடம் தென்பட்ட ஊக்கமும், மகிழ்ச்சியும், உற்ச்சாகமும் அவனுக்கு தாங்க முடியாத பாரத்தை அளித்தது. வாழ்க்கையில் சிலருக்கு பிறக்கும்போதே உற்ச்சாகத்தையும், சந்தோஷத்தையும் அதிகமாக சேர்த்து உலகுக்கு கடவுள் அனுப்புவதாய் தோன்றியது. அந்த இளம் பாடகன், வித்யா, அப்புறம் முருகேசன். முருகேசனை பற்றி கண்ணாடி முன்பாக நின்று யோசித்து கொண்டிருந்த போது முருகேசனின் சிரித்த முகம் தெரிந்தது.

அவனால் எப்படி எல்லாவற்றையும் மிக சுலபமாக எடுத்துக் கொண்டு, எவ்வளவு கஷ்ட்டமான நேரங்களிலும், அந்த தருணங்களை எல்லாம் அற்பமாகவே எதிர் கொள்ள முடிகிறது என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. முருகேசன் என்றில்லை. வித்யாவும்கூட. அவர்களது குடும்பங்கள் எல்லாம் மிக இனிமையாக, விக்ரமன் திரை படங்களில் வருவது போல இருப்பதாக தோன்றியது. ஒரு பாட்டு கண்டு பிடித்து விட்டால் தன் குடும்பம் கூட ஒரு சந்தோஷமான குடும்பமாக மாறி விடுவோம் என்று எண்ணினான்.

கண்ணாடியில் இருந்த வித்யாவின் முகம் அவனை பார்த்து சிரிப்பது போல தோன்றியது. என்ன வித்யா இப்படி அடிக்கடி என்னைப் பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கே என்று கண்ணாடியிடம் சொல்லிப் பார்த்தான். வித்யா எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தாள். ஒவ்வொரு முறை அவளது பிம்பத்தை பார்த்து பேசும் போதெல்லாம் எதையோ இழந்து விட்ட ஒரு ஆழ்ந்த துக்கம் அவனுக்குள் வருவது வழக்கமாகி விட்டது.

மேதுவாக கேவி பார்த்தான். பூனை, குட்டி போட்டு விட்டு அழும் மெல்லிய குரலில் அவனது கேவல் ஆரம்பித்தது. அவன் அழும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, தான் இழந்து போன எல்லாவற்றையும் நினைதுக் கொண்டு பெரும் குரல் எடுத்து அழ வேண்டும் போல தோன்றியது அவனுக்கு. அழுகையில்தான் அவனது முகம் அழகாக இருப்பதை அவனுக்கு தோன்றியது. அவனது குரல் கம்ம, அம்மா என்று மெதுவாக குரலெடுத்து அழ, கொஞ்சம், கொஞ்சமாக அதிலேயே லயித்து பெரும் குரல் எடுத்து கேவலுடன் அழத் தொடங்கினான். அந்த அழுகையில் இழந்து போன மகிழ்ச்சிகளையும், விலகிச் சென்ற நெருக்கங்களையும், நட்பையும், சொந்தங்களையும் நினைவு கொண்டு நீண்ட நேரம் அழ வேண்டும் போல அழுதுக் கொண்டிருந்தான். கண்ணாடியிலிருந்த வித்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வை எந்த விதமான சலனங்களும் இல்லாமல், வெறுமே அவனது அழுகைக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள். வித்யா ஏன் இப்படி என்னையே பார்த்து கொண்டிருகிறாள் என்று அவன் மனம் பதறியது. ஒரு கண்ணை கைகளால் மூடிக்கொண்டு, மற்றொரு கண்ணால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று ஆர்வமாக கண் சிமிட்டி கண்னாடியைப் பார்த்தான். வித்யா குறு,குறுவென்று அவனை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான்.

கண்ணை மறைத்த கையை விலக்கி இரண்டு கண்களாலும், வித்யாவை பார்த்த போதுதான், வித்யாவின் மேல் அமர்ந்திருந்த அந்த கரப்பான் பூச்சியை கவனித்தான். விழிகள் இரண்டையும் பெரிதாக்கி கொண்டு அதனை உற்று நோக்கினான்.

கரப்பான்பூச்சி அவனையே பார்த்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது. இல்லை இல்லை வித்யாதான்.. ஆனால் அவள் இப்படிப் பார்க்க மாட்டாளே என்று யோசித்த படி, உதட்டைக் குழித்து, காற்றை உள் வாங்கி, அந்தக் கரப்பான் பூச்சியின் மிக அருகாமையில், அதனை நோக்கி ஊதினான். ‘சட்’டென்று அந்தக் கரப்பான்பூச்சி வேகமாக பறந்து அவன் அணிந்திருந்த கால் சட்டையின் ஊக்கின் மீது அமர்ந்தது.

அவசரமாக அவன் கரப்பான் பூச்சியை அடிப்பதற்காக அவன் கால் சட்டையின் மீது வெகு வேகமாக கையை வீசினான். ஒரு நொடியின் இடைவெளிக்குள் அந்த கரப்பான் பூச்சி அவனது கால் சட்டையில், அவனது ஆண் குறியின் மீது உயிர் விட்டது. கைகளில் வெள்ளையாக கரப்பான் பூச்சியின் பாச்சை பதிய, இறக்கை ஒடிந்த ஆகாய விமானம் போல் வான் பார்த்து பிளந்து மரணத்தின் விளிம்பில் துடி,துடித்துக் கொண்டிருந்தது அந்த கரப்பான் பூச்சி.

‘உவ்வே’, என்று வாந்தி வரும் பாவனையுடன் வெகு அவசரமாக அணிந்திருந்த கால் சட்டையை அவிழ்த்து எரிந்து உள்ளாடையுடன் நின்றான் அவன். துடித்துக் கொண்டிருந்த கரப்பான் பூச்சியை பார்க்க, பார்க்க கண்களில் ஒரு குழந்தையின் குதுகாலத்துடன் ஒவ்வொரு இறக்கையாக அதனில் இருந்து பிரித்து எடுக்க துவங்கினான் அவன்.

முள் நிறைந்த அதன் கால்களும், கைகளும் வானை பார்த்து பற, பறத்துக் கொண்டிருந்தது. எங்கோ தொலைவில் கயிறு கொண்டு இழுக்கும் மகத்தான சக்தியின் முன்பு அநாதரவாக தப்பிச் செல்ல முயலும் அந்த கரப்பான் பூச்சியின் பரிதவிப்பைக் காண்கையில் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

மேஜையின் மீது வைத்திருந்த பேனாவை எடுத்து, அதன் முனையால் அந்த கரப்பான் பூச்சியின் வயிற்றில் குத்தி, அதற்க்கு மோட்சம் அளித்த போது ஒரு மகத்தான வேட்டைக்காரனாய், மிகுந்த வலிமையுடையவனாய் தன்னை உணர்ந்தான். ‘என்னோ சந்தோஷமடா உனக்கு. இப்படித்தான் சாவனும்’ என்று சொல்லி பார்த்துக் கொண்டான். இனிமையாக இசை போல ‘இப்படித்தான், இப்படித்தான்’ என்று ஒரே சந்தத்தில் ராகமாக சொல்லிக் கொள்ளும் போது நிறைவாக இருந்தது..

உள்ளாடையுடன் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தபோது போய் ஒரு குளியல் குளித்து விட்டு பேருந்து நிலையம் போக வேண்டும் என்பது ஞாபகம் வந்தது. எழுந்து கண்ணாடி முன்பு நின்ற போதும் வித்யா அவனைக் குறு, குறு பார்வையுடன் பார்பதைக் கண்டான்.

“என்ன பாக்கற வித்யா. இதையும் கழட்டி காட்டட்டுமா” என்று அவளை பார்த்துக் கேட்டான். அலைபேசி சிணுங்கியதும் அவசரமாக ஒரு துண்டை இடையில் கட்டிக் கொண்டு அலை பேசியில் பேசலானான்.

எதிர் முனையில் சத்திரத்தில் இருந்து ராசாத்தி பேசினாள். வழக்கம் போல காடு பொய்த்து கம்பு காய்ந்து விட்டதை சொல்லி புலம்பினாள். ஏதோ நூறு நாள் திட்டத்தில் மண்ணை எடுத்து கால்வாயை நிரப்புவதால் மாறனின் தம்பி சேரனின் கல்லூரி படிப்பும் தொடர முடிகிறது என்று சொன்னாள்.

இந்த முறை நிச்சயமாக தீபாவளிக்கு வர வேண்டும் என்றும் நூறு நாள் திட்டத்தில் கையெழுத்து போட்டாள் ரெண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதால் அவன் வருவது அவசியம் என்பதைத் தெரிவித்தாள்

அப்பா மலேசியாவுக்கு போய் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகி விட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஊர் வரும்போது ஒரு வாரம் உறவுகளும், நண்பர்களும் மஞ்சள் குளித்து விட்டு போவார்கள். ஆக மொத்தம் அவர் வந்து விட்டு போவதால் பொருளாதார ரீதியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. பள்ளி படித்த காலத்தில் இருந்து அப்பாவின் அருகாமை இல்லை. பத்தாவது முடித்தவுடன் நாமக்கல் பள்ளியில் ஹாஸ்டல் படிப்பு என்று மாறனின் வாழ்கையில் தொடர்ச்சியாக குடும்பத்தை விட்டு வெளியேவே இருக்கிறான். ஊரில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. விவசாயம் அந்த அளவுக்கு பிரமாதமாக இல்லை. அப்பாவுக்கு அவன் நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வம்.
படிப்பதற்காக பணம் வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம் உடனடியாக வீட்டில் பணம் அனுப்பி விடுவார்கள். எப்போதும் பணம், செலவு பற்றி வருத்தமும், புலம்பலுமாய் அவன் வேலையில் சேரும் வரை அப்படியே ஓடிக் கொண்டிருந்தது.

விருப்பம் இல்லாமலேயே படித்து, விருப்பம் இல்லாமலேயே வேலை செய்து கொண்டு, விருப்பமில்லாத வாழ்க்கையை தான் வாழ்வதாய் எப்போதுமே மாறனுக்கு தோன்றும். ஒரு நொடியில் எல்லாவற்றையும் விட்டு ஓடி விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அடிக்கடி யோசிப்பான். தன்னைச் சுற்றி ஒரு மாயக் கயிறு கட்டி வைத்திருப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான் அவன். அந்த கயிற்றை வெட்டி எரிந்து ஓடுவது என்பது மிக சுலபமானது என்று தெரிந்திருந்தாலும் அதனைச் செய்வதற்கு மனசுக்குள் துளியேனும் தைரியம் வரவில்லை.

அவளது இயல்புக்கு நேர் எதிராக வித்யா இருந்தாள். வீட்டில் யாருமே படித்தவர்கள் இல்லை என்றாலும் அவள் இயல்பாகவே படித்தவர்கள் போல ஒரு பாவனையுடன், எல்லோருடனும் சுவாதீனமாக பழகுவதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவள் தைரியமாக பேசும் ஆங்கிலம், அவனுக்கு ஆச்சரியம் அளித்தது.

வித்யாவிடம் கேட்ட போது அவள் தனக்கு மொத்தமே முந்நூறு ஆங்கில வார்த்தைகள்தான் தெரியும் என்றாள். எந்த மொழியிலும் முந்நூறு வார்த்தைகள் தெரிந்தால் அதில் பேசி விட முடியும் என்றாள். எழுதப், படிக்க தெரிவதற்கும், பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றாள். முட்டாள் கூட பேச முடியும், ஆனால் பேசுவதை பொருள் பட பேசுவதில்தான் புத்திசாலித்தனம் தேவை என்றாள். அப்படி பேசுவதற்கு அறிவை விட பொதுஅறிவும், சூடிகையாய் அந்த சமயத்தில் என்ன முக்கியமோ அதனை கிரகித்துக் கொண்டு பேசுவதுதான் முக்கியம் என்றாள்.

தமிழில்கூட வித்யா நன்றாகவே பேசுவதை அவன் புரிந்திருந்தான். அவள் பேசக் கேட்கும் போது சுலபமாக இருந்தாலும், தானும் பேச முயற்சி செய்யும் போதெல்லாம் மாறனுக்கு தோல்வியாகவே இருந்தது.

மறைமலை நகரில் பேருந்து சரியாக பத்தரை மணிக்குதான் வரும் என்று முன்பதிவு செய்யும்போதே சொல்லியிருந்தார்கள். ஒவ்வொருமுறை ரயிலில் ஊர் போக பயண சீட்டு வாங்கும்போதும் அரை நாள் வீணாக போய் விடும். இரண்டு மணி நேரம் காத்திருந்துகூட, சுலபமாக ரயில்வேயின் இணையதளத்தில் நுழைந்துவிட முடியாது. காத்திருந்து, காத்திருந்து, இரண்டு மணி நேரம் கழித்து இணையதளத்தில் நுழையும் போது அனைத்து பயணச் சீட்டுகளும் தீர்ந்து போயிருக்கும். தீபாவளி, பொங்கல் ஏதேனும் அரசு விடுமுறை, வெள்ளி, சனி அல்லது திங்களில் வரும்போதெல்லாம் இதேதான் கதை.

சென்னை வந்த புதிதில் எல்லா வாரமும் ஊர் போய் விட்டு வருவதற்கு பயணச் சீட்டு வாங்கி வைத்திருப்பான். பின்னர் அது மெதுவாக மாதம் இருமுறை, மாதம் ஒரு முறை என்று மாறி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆகி விட்டது. இப்போதெல்லாம் ஊர் போகவே சோம்பலாகவும், பிரயாணத்தை நினைத்தாலே அயர்ச்சியாகவும் இருக்கிறது.

இம்முறைகூட அம்மாவின் விடாத தொன,தொணப்பு காரணமாகத்தான் ஊர் செல்ல வெண்டியது அவசியமாகி விட்டது. அப்போதும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கே ஊர் பக்கமாகவே யாராவது பெண் பார்த்து வைத்திருக்கேன், கல்யாணம் செய்துக் கொள் என்று அம்மா சொல்லி விடுவாளோ என்று.

மாறன் மதுரை செல்லும் பயணத்துக்காக மறைமலை நகர் பேருந்து நிலையம் வந்து நின்ற போது சரியாக ஒன்பது மணி இருக்க கூடும். இன்னமும் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. பக்கத்து வாகன தொழிற்ச்சாலை மற்றும் அதற்கான துணை தொழிற்ச்சாலைகளில் வேலை செய்யும் நிறைய பேர் ஷிப்ட் முடிந்து வருபவர்களும், அடுத்த ஷிப்ட்க்கு போகுபவர்களுமாய் நிறையக் கூட்டம். அதைத் தவிர பக்கத்தில் மகிந்திரா சிட்டியின் மென்பொருள் அலுவலகங்களில் பணி புரியும் ஆண்கள், பெண்கள் என நிரம்பியிருந்தது மறைமலைநகர் பேருந்து நிலையம்.

தான் சென்னை வந்த புதிதில் இவ்வளவு கூட்டம் இந்த இடத்தில் இருந்தது இல்லை என்பதை நினைவு கொண்டான் மாறன். அவன வந்த போது சென்னையில் தான் இருப்பதாக சொல்லியபோது, மறைமலை நகர் சென்னை கிடையாது, செங்கல்பட்டு என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். இன்று செங்கல்பட்டுகூட சென்னையாகி விட்டதை உணரும்போது இந்த காலம் ஓடும் ஓட்டத்தை பார்க்க அவனுக்கு கவலையாக இருந்தது.

கால்சட்டை அணிந்த வட கிழக்கு மாநில பெண்கள் கூட்டம் ஒன்று பரோட்டா கடையில் தங்களது இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தார்கள். அசப்பில் பார்த்தபோது அவர்களது முகங்கள் ஒரே மாதிரியாய் இருந்தது. அவர்களில் ஒருவருக்கு ஒருவர், வித்தியாசப் படுத்தியது அவர்களது ஜடை அழகும், ஒருவரை ஒருவர் வித்தியாசப்படுத்திய மார்பளவுதான். மாறன் அவர்களை உற்றுப் பார்த்தபோது, நீல நிற கால் சட்டை அணிந்திருந்தவளை அடையாளம் கண்டு கொண்டான். “அட இவள்தானே எனக்கு சலூனில் முடி வெட்டி விட்டாள்.” ஊரில் இருபது ரூபாய்க்கு முடிய வேண்டிய விஷயம் இங்கே நூறு ரூபாய் ஆகிறதே என்பதை நினைத்தபோது வயிற்றெரிச்சலாக இருந்தது.

சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒருவனை தூக்கி வைத்து ஒரு நடிகனாக, ஒரு அரசியல்வாதியாக கொண்டாடும் மனப்போக்கே நகரங்களையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் தெரிவதாக யோசிக்க வைத்தது. ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்ப நகரங்களும் அதன் பொலிவையும், வரலாற்றையும் இழந்து மிக சாதரணமாக ஆகி விடுவதை காண முடிகிறது. அதற்க்கு பிரம்மாண்டமான சாட்சிகள்தான் காஞ்சிபுரமும், மாமல்லபுரமும் என்று எண்ணினான்.

இந்த சமயத்தில் வித்யா அருகில் இருந்தாள் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். அவளைப் போன்ற பெண்களை தன்னுடைய வாழ்க்கையில் துணையாக்கி கொள்ள முடியுமா என்று யோசித்த போதே மீண்டும் துக்கமாக இருந்தது. வித்யா என்றில்லை, வித்யாவைப் போல அழகான, திறமையான, பெண்களைத் தன்னால் பெற முடியுமா என்ற போது சந்தேகமேயில்லை கிடைக்காது என்றுதான் மனசாட்சி சொலலியது. துக்கமாக இருந்தது.

தான் வித்யாவிடம் தைரியமாக பேச வேண்டும். இனியும் எத்தனை நாளைக்கு பயந்தவனாய் இருக்க போகிறேன் என்று கேட்டுக் கொண்டான். வித்யா எந்த ஊரு. அவளது வீட்டில் எத்தனை பேர். அவளுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர். அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள் அவளுக்கு என்ன நிறம் பிடிக்கும். அவளுக்கும் இளையராஜா இசை பிடிக்குமா. அவளுக்கு மழை பிடிக்குமா அவளுக்கு யாருடைய கவிதைகள் பிடிக்கும். அவள் என்ன புத்தகங்கள் படிக்கிறாள். அவளுக்கு பிடித்த எழுத்தாளர் யார். அவளுக்கு என்ன தொலைக்காட்சி தொடர் பிடிக்கும். அவள் ராஜேஷைப் பற்றி என்ன நினைக்கிறாள். அவள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள். ….சே எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது நித்யாவிடம் பேசுவதற்கு. எப்படி இத்தனை நாட்களாக பேசாமலிருந்து விட்டேன். வெறுமே அவள் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு எவ்வளவு விஷயங்கள் அவளிடம் எனக்கு இருப்பதை அவளிடம் வெளிப்படுத்த வாயில்லாமல் இருக்கிறேன் என்பதை என்னும் போதே அவன் உடம்பு உஷ்ணமாவதை உணர்ந்தான். முஷ்டியை உயர்த்தி காற்றை தன் பலம் கொண்ட வரையில் மிக அதிக வேகத்தோடு ஒரு குத்து விட்டு என்னால் முடியும் என்று உரக்க சொன்னான்.

“தம்பி என்ன சொன்னீங்க” என்று எதிரே ஒரு பெரியவர் அவனிடம் விசாரித்தார்.

“ஒன்றுமில்லை” என்று அவரிடம் சொல்லிக் கொண்டு பேருந்து வரக் காத்திருந்தான்.

இப்போது பேருந்து நிலையத்தில் அவனைப் போல ஒரு பத்து பேர்தான் இருந்தார்கள். அவர்களும் அவனைப் போலவே வேறு ஊர்களுக்கு செல்பவர்களாக இருக்கக் கூடும். தான் மட்டுமே மிக தொலைவாக செல்வதாய் தோன்றியது. சென்னையைக் காட்டிலும் மதுரையோ, திருச்சியோ, கோவையோ இது போல முன்னேற்றம் அடைந்திருந்தால் தன்னைப் போன்றவர்கள் இது போல தொலைவாக வந்து கஷ்டப்பட வேண்டாமே என்று எண்ணினான். இந்த ஊரில் எங்கே போனாலும் மளிகை கடை மட்டுமே நம்ம ஆட்கள் வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தபோது சென்னையின் மொத்த மளிகையும், காய்கறியும் நம்ம ஆட்களால்தான் நடக்கிறது என்று பெருமை பட்டுக் கொண்டான்.

அவன் செல்ல வேண்டிய பேருந்து ஊதா வண்ணவிளக்குகள் கண் சிமிட்ட மறைமலை நகர் வந்து சேர்ந்தது. அவனைத் தவிர மேலும் இருவர் அந்த பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். நடத்துனர் அவன் இருக்கை செல்லும் முன்பே காதுகளில் கிசு,கிசுத்தார் – “தம்பி சீட் மாறிக்கிரீங்களா. தனியா லேடீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.”

தான் அமர வேண்டிய இருக்கையைப் பார்த்தான். இருக்கையின் வெளியே சிரித்த முகத்துடன் வித்யா. “மாறன். வாங்க” என்று கையசைத்தாள். தோளில் மாட்டியிருந்த பிரயாணப் பையை அவளது தலைக்கு மேலே ‘ராக்’கில் வைத்து விட்டு கொஞ்சம் தள்ளி அவள் அருகில் அமர்ந்தான் மாறன்.

நடத்துனர் யாரிடமோ ஆற்றாமையுடன் சொல்லி கொண்டிருந்தார். “எல்லாம் சொல்லி வெச்சு புக் செய்வானுங்க இவங்க..”

“மாறன் நல்லா ரிலாக்ஸ் செஞ்சு உட்காருங்க. இந்தப் பிரயாணம் முழுக்க நாம பேசிக்கிட்டே போகலாம்” என்று மிக உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் மாறனிடம் சொன்னாள் வித்யா.

தொண்டை அடைத்திருக்க, செருமிக் கொண்டான் மாறன். அந்தப் பிரயாணத்தின் முடிவு எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டே. “ ஆமாம், வித்யா, நிறைய பேச வேண்டும்” என்றான்.

“ஏன், குரல் கம்மலா இருக்கு. உடம்பு சரியில்லையா?’’ என்று கேட்டாள்
வித்யா.

“அப்படியில்ல, பஸ் ஸ்டாண்ட்ல குளிர்ல நின்னுக்கிட்டு இருந்ததால கொஞ்சம் குளிர் இருந்திருக்கலாம்” என்று மாறன், அவளைப் பார்த்துச் சொன்ன போது, பேருந்து சென்னையைக் கடந்திருந்தது.
.

Series Navigationவல்லிக்கண்ணன் எனும் ரசிகர்கண்ணப்ப நாயனார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *