வளர்ச்சி…

கறுப்பு, வெள்ளைப் பணங்கள் உரமாகி
கழனிகளில்
கான்கிரீட் காடுகளின் வளர்ச்சி
அமோகமானதால்,
கவலைக்குக் கூட
மோட்டுவளையைப் பார்க்கமுடியாத
கவலை..

மரக்கிளைகள் மறைந்துபோனதால்,
தொங்கும் மின்விசிறிக்கும்
தலைக்கும்
துப்பட்டா இணைப்புக் கொடுத்து
தற்கொலையாக்கும்
துயரம்..

தூதுப்புறாக்கள் மனிதனின்
பசிப்பிணிக்கு மருந்தாகிப்போனதால்,
பல சேதிகள்
பலான சேதிகளாய் கைபேசியால்
பரிமாறப்படும்
பரிதாபம்..

குடியிருப்புக்களில் இடக்குறைவால்,
முடக்கோழிகளாய் முதியோர்கள்
முதியோர் இல்லங்களுக்குக்
கடத்தப்படும்
கொடுமை..

சாதிக் கணக்கெடுத்து
சாதிக்கு சங்கம் வைத்து
சாதிக்காய் சண்டையிட்டு
சாதியால் விலைபேசி
ஜனநாயகம் காக்க நிற்கும்
சாபக்கேடு..

கயமை, கையூட்டு
கைமேல் பலனாய்..
ஏய்ப்பு, ஏமாற்று
ஏற்றிவிடும் ஏணியாய்..
துரோகம் என்பது
தூக்கிவிடும் கரங்களாய்..
நல்லவை தவிர்த்து
எல்லாவற்றிலும் வளர்ச்சி..

வளர்ச்சி இது போதுமா,
வேண்டுமா மேலும் மேலும்…!

-செண்பக ஜெகதீசன்…

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்