(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”

Spread the love

 

 

 

கண்கள்தாம்

கண்டன அவரை

கண்களால்(தான்)

நானும் கண்டேன் அவரை

அதனால்தான்

எனக்கு

இத்தீராநோய்

 

தீராகாமநோய்

தீயில் இருப்பது நான்

தீர்வின்றித்

தவிப்பது நான்

துடிப்பது நான்

துவள்வது நான்

 

கண்கள் ஏன்

அழுகின்றன?

எதற்கு அழுகின்றன?

 

காரணமின்றிக்

கண்ணீர் சிந்துவதேன்?

 

ஆய்ந்து அறியாமல்

அவரைப்பார்க்க

அவசரப்பட்ட கண்கள்;

பார்த்தலால் காதல்தீ

பற்றிக்கொண்ட கண்கள்;

நல்லவரெனப்

பார்வையில்

பரிவை அன்பை

பகிர்ந்த கண்கள்;

காரணமறிந்தும்

காரணமின்றி வருந்துவதேன்?

 

அன்றைக்கு

அவ்வளவு அவசரமேன்?

நானொருத்தி இருப்பதை

நினைக்கவே இல்லை

கண்கள்

 

விரைந்து பார்த்து

விவரமறிந்த கண்கள்

இப்போது துன்பத்தில்

துடித்து அழுவதேன்

 

 

 

இது

நகைப்பிற்குரியதன்றி

வேறென்ன?

 

நான்

உயிர்பிழைக்கமுடியா

ஒரு நோயைத்தந்தன கண்கள்

நானும் உயிரும்

ஒன்றிணைந்து

அந்நோயுடன் போராடும்

தருணத்தில்

நீரில்லா கேணியாய்

வற்றிய ஊற்றாய்

வறண்டன கண்கள்

 

கடலினும் பெரிதான

காதல்நோய் தந்த கண்கள்

உறங்காது துன்பத்தில்

உழல்கின்றன

இமைமூடா இன்னலில்

நசிகின்றன

 

துன்பம்தரும் இந்நோய்க்குக்

காரணம் கண்கள்

கண்களே இப்போது

வருந்துவது

துன்பத்திலும் அடையும்

இன்பம்தான்

அன்று எப்படி?

 

அவரைப்பார்க்க

கண்கள்

ஒரு சொல்

கேட்டதா என்னை?

கண்கள்

ஒரு நொடி

பார்த்ததா என்னை?

 

விரும்பி விரும்பிப்

பார்த்து

விழுந்து விழுந்து

பார்த்து

விழுங்கிய கண்கள்

இன்று உறங்காமல்

நீரற்றுப்போனது

 

உதட்டளவே எல்லாம்

அவர்

உள்ளத்தால் விரும்பவில்லை

 

விரும்பாத அவர்மீது

விரும்பும் கண்களுக்கு

அமைதியில்லை

 

 

 

அவர் இல்லையெனில்

எனக்குத் தூக்கமில்லை

அவர் இருந்தாரெனில்

தூக்கமே இல்லை

 

அவர்

வரவில்லையெனில்

தூக்கம் வராது

வந்துவிட்டால்?

தூக்கம்

வரவே வராது

 

இந்த

இரண்டுக்குமிடையே

துன்பம் கண்களுக்கே

 

பறைகொட்டித் துன்பத்தைப்

பறைசாற்றும கண்களை

உடைய எங்களிடம்

மறைப்பதற்கு ஏதுமில்லை

 

நாங்கள் மறைக்கும்

மறைபொருளை

மக்கள்

அறிவது ஒன்றும்

அரிதில்லை.

(24.03.2014 நள்ளிரவு 11.30 லிருந்து 1.30)

Series Navigationஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்