Posted in

வழக்குரை காதை

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து

அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை.

சும்மாயிருக்க முடியவில்லை.

வைராஜாவை என்று சற்றுத் தொலைவில்

பாட்டுச் சத்தம் கேட்டதும்

‘ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்;

ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்’ என்று

விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார்

வானொலிப்பெட்டியின் மீது.

 

‘மகாராஜா’ என்று கூறாமல் ராஜா என்று குறிப்பிட்டது

முதற்குற்றம் நீதியரசே’ என்று

வாதத்தைத் தொடங்கினார் வழக்குரைஞர்.

‘ராஜ்யாதிபதி என்று குறிப்பிட்டிருக்கலாம்.

சாம்ராஜ்யதிபதி வெகு சிறப்பு.

சக்கரவர்த்தியோ சூப்பராயிருக்கு….!

என்று குரலை உயர்த்திக்கொண்டே போனவரைப் பார்த்து

கா…கா…கா…. என்று கரைந்தது வானொலிப்பெட்டி.

 

‘என்னைத் தான் எளக்காரம் செய்கிறது; என்ன திமிர்’

என்று எழுந்து நின்று முழங்கினார் மன்னர்பிரான்.

….மாமா, மாமா, மக்கு மாமா

என்று பாடிக்கொண்டே போயிற்று வானொலிப்பெட்டி.

காணொளிக்காட்சிகள் ஆயிரம் வந்தாலுமே

வானொளிப்பெட்டியோர் அருவரமே.

அது புரியாமல்_

’திரும்பத் திரும்ப வேண்டுமென்றே என் காதருகில்

விளிக்கிறது ‘மாமா’ என்று.

கூடவே ‘மக்கு’_

போடு இன்னொரு வழக்கு’.

 

உழக்கு அளவு இருக்கிறது _

கிழக்கு மேற்கெங்கும் அதிர அதிர

என்னமாய் ஒலிக்கிறது….

கழுத்தைத் திருகிப்போட வேண்டும்.

பழுக்கக் காய்ச்சிய கம்பியால் இழுக்கலாமென்றால்

வழுவழுப்பான அடிவயிறு எங்கே?

அட வலிக்காதே வனொலிப்பெட்டிக்கு…’

அது பாட்டுக்குப் பாடத் தொடங்கியது:

”சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா…”

 

மன்னர்க்கெல்லாம் மன்னன் நான் _

என்னையா சொன்னாய் சின்னப்பயலென்று?

உன்னை என்ன செய்கிறென் பார்

_வன்மம் தாக்கிய நெஞ்சோடு

வானொலிப்பெட்டியைத் தூக்கினார்

வீசியெறிய.

போடா போடா புண்ணாக்கு என்று பாடியபடியே

வானொலிப்பெட்டி பறந்தேகிவிட்டது விண்ணி லோர்

எண்ணப்பறவையாய்!

————————

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *