வாளின்பயணம்

1
கசப்பில் உருவான கொலைவாளை
மூர்க்கத்தனமாய்வீசியதில்
கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன.
மரணரத்தத்தை பூசியவாறு
நிறைமாத சூலிகளின்
உயிரைக்குடித்து திரிந்த வாள்
குழந்தைகளின் தலைகளை
வெட்டிஎறிய வேகம் கொண்டன.
அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை
ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில்
வாளின்பயணம் தொடர்கிறது.
2
வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும்
கொம்புமுளைத்த ஜின்களின்
காலடியோசைகளும்
லத்திமுனைவீச்சுக்களும்
வெகுஅருகாமையில் கேட்கின்றன.
என்னை நெருங்கிவரும்
வீச்சரிவாளின் ஓசை
கழுத்தை துண்டித்து
கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது.
தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த
வேம்படிமரநிழலில் துஆ செய்தேன்
வாவாவென ஆவல்மேலிட
தன்னை ரெண்டாய் பிளந்துகாட்டி
வேம்பு அழைத்தது.
உள்ளே சென்ற என்னை ஒன்றாய் மூடி
உயிர்காத்து கிளையசைத்து சிரித்தது.
கொலைசெய்ய துரத்திவந்த ஜின்களின்
கூர்தீட்டிய அரிவாள்கள் இப்போது
வெறியோடு மரத்தை அறுக்கத் துவங்கின

ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationபிறந்தநாள் பொம்மைகள்..:-லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை