வாழ்க்கை ஒரு வானவில் 27

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

 

ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து அந்தப் பெண்ணின் கையையோ, காலையோ முறித்தாலென்ன என்று கூட ஒரு கணம் அவர் யோசித்தார். பின்னர் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று தோன்றியதில் சினிமாத்தனமானது என்று தம்முள்ளேயே முனகிக்கொண்டு அவ்வெண்ணத்தைக் கைவிட்டார். அப்படியே அவர் செய்தாலும், மிகவும் நல்லவனான ரமணி அவர்தான் அதைச் செய்தவர் என்பது தெரியவரா விட்டாலுமே கூட, அங்கவீனப்பட்ட பெண்ணைக் கைவிடமாட்டான் என்றும் அவருக்குத் தோன்றியது. ’திருமணம் ஆனதன் பிறகு அப்படி நேர்ந்திருப்பின்?’ என்கிற எதிர்க்கேள்வியைத் தன்னுள் எழுப்பிக்கொண்டு மனச்சாட்சியின்படி நடப்பான் என்று அவருக்குத் திட்டவட்டமாய்த் தோன்றியதில் அம்மாதிரியான அதிரடி வேலை எதையும் செய்யக்கூடாது என்று முடிவு செய்தார். முடிவில், எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். எது எப்படி இருந்தாலும், அவனைக் கூப்பிட்டுச் சமரசம் செய்து கொள்ளுவது கூடாது என்கிற பிடிவாதம் மட்டும் அவரைவிட்டுப் போகவில்லை.

”நீங்க ரொம்பவே இளைச்சுப் போயிட்டீங்க!” என்றபடி அவருக்கு முன்னால் சாப்பாட்டு மேசை மீது தட்டை வைத்து அதில் இரண்டு தோசைகளை வைத்த வேலுமணி, தேங்கய்ச் சட்டினியையும் அதனருகில் பரிமாறிவிட்டு, சட்டினிக் கிண்ணத்தையும் எதிரில் வைத்தார்.

கணேசன் பதில் ஒன்றும் சொல்லாமல் சிற்றுண்டியைச் சாப்பிடத் தொடங்கினார். தோசைக்கல்லில் காய்ந்துகொண்டிருந்த தோசையைத் திருப்புவுதற்காகச் சமையற்கட்டுக்குப் போன வேலுமணி குடிக்கத் தண்ணீரும் கொண்டு வைத்துவிட்டு எதிரில் நின்றுகொண்டார்.

”நீ போய் உன் வேலையைப் பாரு, வேலுமணி. எனக்கு ரெண்டு தோசை போதும்.”
”அதெப்படிப் போதும்? இன்னும் ஒண்ணாவது போட்டுக்குங்க!” என்று வற்புறுத்தும் தொனியில் கூறிய வேலுமணி வெந்திருந்த தோசையை எடுத்துவந்து அவரது தட்டில் போட்டார். அவரும் மறுக்காமல் அதை ஏற்றுக்கொண்டார்.

”ரமணி ஃபோன் பண்ணி உன்னோட பேசிட்டு இருக்கானில்ல?”

”ஆமாங்கய்யா. தினமும் பேசுறான். உங்களைப் பத்தித்தான் முதல் கேள்வியே கேக்குறான்.”

”என்னன்னு? இருக்கேனா செத்தேனான்னு கேக்குறானா?”

“என்னங்கையா இப்பிடிப் பேசுறீங்க? அவனுக்கு உங்க மேல எம்புட்டுப் பிரியம், தெரியுமா?”

”அதான் பார்த்தேனே அவனோட பிரியத்தை! நேத்துப் பார்த்த எவளோ ஒரு சிறுக்கி அவனுக்கு ஒசத்தியாப் போயிட்டா! பெத்த அப்பன் கூட வேணாம்னு அதான் ஒதறிப்பிட்டுப் போயிருக்கானாக்கும்!”

”அது வேற விஷயம் அய்யா! அவனுக்குப் பிடிச்சுப்போயிட்ட பொண்ணை அவனுக்குக் கட்டி வெச்சுடுங்கையா! நான் பேசுறது உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்… இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை, சொல்றேன். மன்னிச்சுக்குங்கையா!”

”அதுக்காக ஒரு அன்னக்காவடிக் குடும்பத்துலேர்ந்து எனக்கு மருமக வரணுமா!”

ரமணிக்குப் பரிந்து மேலும் ஏதேதோ சொல்ல வேலுமணியின் உதடுகள் துடித்தன. ஆனால் அது அவருக்குப் பிடிக்காது என்பதால் அத்துடன் வாயை மூடிகொண்டார். இருப்பினும் சில கணங்களுக்கு மேல் அவரால் மவுனமாக இருக்க முடியவில்லை:                                                       \

“சில வீட்டுப் பிள்ளைங்க மாதிரி அவன் இல்லீங்கய்யா. உங்க அனுமதி கிடைக்கிற வரையில அவன் காத்துக்கிட்டு இருக்கப் போறானாம். சொன்னான்.”

”அப்ப அவன் எப்பவும் கல்யாணம் கட்டாத பிரும்மசாரிப் பிள்ளையாவே இருக்க வேண்டியதுதான்!” – இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தண்ணீரைப் பருகிய பின் எழுந்தார். வேலுமணி அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் தட்டை எடுத்துக்கொண்டு குழாயடிக்குப் போனார்.

…. தனக்குப் பழக்கமே இல்லாத புதிய கையெழுத்தில் இருந்த அந்த உறையினுள்ளிருந்து கடிதத்தை ஆவலுடன் உருவிப் பிரித்த சேதுரத்தினம் முதலில் கடைசிப் பகுதியைப் பார்த்தான். அதை எழுதியிருந்தது கோமதி என்பதைக் கண்டதும் சற்றே வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தான். கடிதத்தை உடனே படிக்கலானான்.

’ அன்புள்ள சேது சார் அவர்களுக்கு.

வணக்கம். என்னிடமிருந்து வரும் இந்தக் கடிதம் உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் சில உண்மைகளை நான் உங்க:ளுக்குச் சொல்லியாக வேண்டும். என்னை உங்க:ளுக்கு மணமுடித்துக் கொடுக்கும் எண்ணம் சில நாள்களாக என் அம்மாவுக்கு இருந்து வருவதாக அறிகிறேன். நேற்று நீங்கள் அதற்குச் சம்மதித்துவிட்டதாக என் அம்மா சொன்னாள். என் அம்மாவுக்குத் தெரியாத – ஆனால், என் அக்காவுக்கும் அண்ணாவுக்கும் தெரிந்துள்ள என்னைப் பற்றிய ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லாமல் என் அண்ணா மறைத்து விட்டான் என்று தோன்றுகிறது. நான் அவனிடம் அது பற்றிக் கேட்கவில்லை. ஆனால் எந்த அண்ணன்தான் அதைப் பிறரிடம் சொல்லுவான் – அதிலும் தன் தங்கையை விரைவில் மணக்கப் போகிறவரிடமே? அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்று நான் நினைக்கிறேன். இந்தக் கடிதத்தை நான் எழுதுவது வீட்டில் யாருக்கும் தெரியாது.                                                               சில நாள்களுக்கு முன்னால், கோவிலுக்குப் போயிருந்த போது திடீரென்று பவர்கட் ஆன நேரத்தில் ஒரு முரடனிடம் நான் சிக்கிக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரிக்க என்னால் முடியாது. மொத்தத்தில் நான் கெட்டுப் போனவள். இந்த உண்மையை என் அண்ணா நிச்சயம் உங்களிடம் சொல்லியிருந்திருக்கவே மாட்டான். என்னைப் பற்றிய இந்த மோசமான உண்மையை உங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது என் கடமை என்று நினைக்கிறேன். அது பற்றிப் பரவாயில்லை என்பது உங்கள் கருத்தாக இருந்தால் மட்டுமே நான் உங்கள் மனைவியாகச் சம்மதிப்பேன். எது எப்படி இருந்தாலும், உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கித் தர நிச்சயம் நான் சம்மதிப்பேன். இதை நான் சொல்லுவதற்குக் காரணம் குழந்தையை உத்தேசித்து மட்டுமே நீங்கள் என்னை ஏற்கச் சம்மதிக்கக் கூடாது என்பதே. எனக்கு நேர்ந்துவிட்டதை உண்மையாகவே நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் மட்டுமே நீங்கள் என்னை மணக்கலாம். என் அம்மாவுக்கு இது தெரியாது என்பதால் அவருக்கு இது பற்றிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

இப்படிக்கு

கோமதி.’

கடிதத்தைப் படித்த சேதுரத்தினம் நெகிழ்ந்து போனான். ‘என்ன நேர்மை!’ என்று வியப்புற்றான். அதற்காகவே தான் கொடுத்துள்ள வாக்கின்படி அந்தப் பெண்ணை எக்காரணங்க்கொண்டும் கைவிடாமல் மணந்துகொள்ள வேண்டும் என்று அவன் உடனேயே ஒரு முடிவுக்கு வந்தான்.

கோமதிக்கு நிகழ்ந்த கொடூரம் அவள் அம்மாவுக்கு மட்டுமே தெரியாது என்பதால் அக் கடிதம் பற்றி ராமரத்தினத்திடம் சொல்லுவது தவறாகாது என்று அவனுக்குத் தோன்றியது.

மறு நாள் ராமரத்தினத்தை அவன் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்த துணிக்கடையில் தன் சாப்பாட்டு நேரத்தின் போது சென்று சந்தித்து சேதுரத்தினம் கோமதியின் கடிதம் பற்றிச் சொன்னான். அவனுக்கும் அப்போது சாப்பாட்டு இடை வேளையாதலின், அவளது கடிதத்தையே அவனுக்கு இவனால் காட்டவும் முடிந்தது.

”ராமு! உன் தங்கைக்கும் உன்னை மாதிரியே நேர்மையான சுபாவம். நீ என்கிட்டேர்ந்து உண்மையை மறைச்சிருப்பியோன்ற சந்தேகத்துல இன்னது நடந்ததுன்றதைத் தானாவே முன்வந்து எனக்குத் தெரிவிச்சிருக்கா, பாரு. நல்ல பொண்ணு…” என்று கோமதியைப் பாராட்டிவிட்டு சேதுரத்தினம் அந்தக் கடிததத்தைத் திரும்பப்பெற்றுக் கொண்டான்.

”நீங்களே கோமதியோட அது பத்திப் பேசறீங்களா, சேது சார்?” என்று கேட்ட ராமரத்தினத்திடம், ”எனக்கென்னமோ லெட்டரே எழுதிக் குடுத்துடணும்னு தோண்றது. ஆனா நீ எப்படிச் செய்யலாம்னு சொல்றியோ அப்படியே செய்யறேன்.” என்று சேதுரக்தினம் பதில் சொன்னான்.

”முதல்ல லெட்டர் எழுதிக் குடுங்க. நானே அதை அவ கிட்ட குடுத்துடறேன். ஏன்னா, அம்மா பக்கத்துல இல்லாத நேரம் பார்த்துக் குடுக்கணும். அதுக்கு அப்புறம் நீங்க நேர்லயும் அவ கிட்ட பேசிடலாம். எப்பவுமே முகம் பார்த்துப் பேசுற மாதிரி ஆகாது….”

”நீ சொல்றது சரிதான். … அப்ப நான் கெளம்பறேன். கோமதிக்கு நான் எழுதிக் குடுக்கப்போற லெட்டரை நீயும் படிச்சுட்டே அவ கிட்ட குடு.”

”சரி, சேது சார்….”

ராமரத்தினத்தின் வேலை பற்றிப் பொதுவாகச் சிறிது நேரம் பேசிய பின் சேதுரத்தினம் தன் அலுவலகத்துக்குத் திரும்பிப் போனான்…..

……… இரண்டு நாள்கள் கழித்துப் பருவதம் கடைக்குப் போயிருந்த நேரத்தில், ராமரத்தினம் கோமதியிடம் சேதுரத்தினத்தின் கடிதத்தைக் கொடுத்தான்.   அப்போது மாலாவும் பக்கத்தில் இருந்தாள்..

”என்னண்ணா?”

”உன்னோட லெட்டருக்கு சேது சார் பதில் எழுதி எங்கிட்ட குடுத்தார். தபால்ல அனுப்பினா அம்மா கையில மாட்டும் இல்லையா? அதான்…”           அதைப் பெற்றுய்க்கொண்ட கோமதியின் முகம் சிவந்திருந்தது. அவள் அருகில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்த மாலாவை ஓரத்துப் பார்வை பார்த்தாள். மாலா சிரித்தாள்.

”சேது சாருக்கு லெட்டர் எழுதினது பத்தி நீ எங்கிட்ட கூடச் சொல்லல்லே, பார்த்தியா?’

’”சொல்லக் கூடாதுன்னுட்டு இல்லே, மாலா. நீ தடுத்துடுவியோன்னுதான் சொல்லல்லே. அதுக்கு அவர் என்ன சொல்றார்னு தெரிஞ்ச பிற்பாடு உங்கிட்ட சொல்லலாம்னுதான் இருந்தேன். தப்பா எடுத்துக்காதே, மாலா…”

”சேது சார் தன்னோட லெட்டரை நான் படிக்கலாம்னுட்டார். அதனால நான் படிச்சாச்சு. மாலாவுக்கு வேணா அதைக் காட்டு…”

”சரி, அண்ணா…”

”வா, மாலா. அம்மா வர்றதுக்குள்ள படிச்சுடலாம். குழந்தையும் தூங்கிண்டு இருக்கு….”

மாலா அதை வாங்கி முணுமுணுப்பாய்ப் படிக்கலானாள்.

’அன்புமிக்க கோமதிக்கு.

சேது எழுதியது. உன் கடிதம் பார்த்தேன். உன்னைப்போலவே உன் அண்ணா ராஜாவும் நேர்மையானவன்தான். எல்லா விஷயங்களையும் அன்றே அவன் என்னிடம் சொல்லிவிட்டான். எதையும் அவன் என்னிடமிருந்து ஒளிக்கவில்லை. அதைப்பற்றி என்ன? அப்படிப் பார்த்தால், நானும் மணமாகி வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்றவன் தானே? என்னை மணக்க நீ சம்மதிக்கும் போது உன்னை மணக்க நான் ஏன் தயங்க வேண்டும்? தவிர அந்த அசம்பாவிதத்துகு நீ பொறுப்பு இல்லையே? எனவே உன் தயக்கத்தை விடு. என் குழந்தை மீது ஒரு தாய்க்குரிய பரிவை நீ. காட்டி அதை வளர்த்து வரும்போது, இந்த அற்ப விஷயத்தை நான் பெரிதாக நினைப்பேனா? — உன் அன்புள்ள, சேது….’

”உனக்கு சேது சார் கிட்டேர்ந்து வந்திருக்கிற முதல் லெட்டர். பத்திரமா வெச்சுக்கோ!” என்று சிரித்த மாலா அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு அதை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள். வெட்கத்துடன் அதை வாங்கிக்கொண்ட கோமதி தன் பெட்டியின் அடியில் அதை உறையோடு வைத்துக்கொண்டாள்.            கதவு தட்டப்பட்டது. ராமரத்தினம் போய்க் கதவைத் திறந்தான். பருவதம்தான் கடையில் வாங்கிய பலசரக்குச் சாமான்களுடன் திரும்பியிருந்தாள்.

”சேது சார் இன்னைக்கு ராத்திரி வருவாரா?”

”வருவார், அம்மா. …”

”வெங்காய சாம்பார் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ராத்திரி சாம்பார் பண்ணலாம்னு. பலலசரக்கு சாமான்களோட சின்ன வெங்காயமும் வாங்கிண்டு வந்தேன். காய்க் கடைக்கு வேற போனேனா? அதான் லேட்டாயிடுத்து. ……..”           பைகளைத் தரையில் வைத்துவிட்டுப் பருவதம் களைப்புடன் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.: “ஆச்சு. நம்ம வீட்டிலெ கூடிய சீக்கிரம் ரெண்டு கல்யாணங்கள் வருது. என்னதான் சிக்கனமாப் பண்ணினாலும் சில ஆயிரங்களாவது வேணும்…”

”சரி, சரி. வழக்கம் போல புலம்ப ஆரம்பிச்சுடாதே. எல்லாம் நல்லாவே நடக்கும்…” என்று ராமரத்தினம் அவளைச் ச,மாதானப்படுத்தினான்….

… அன்றிரவு ரமணியையும் சாப்பாட்டுக்கு அழைத்திருந்ததால் அவனும் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தான். சாப்பாட்டுக்கடை முடிந்து மூன்று ஆண்களும் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது, வாசல்கதவு தட்டப்பட்டது. ரமனிதான் விரைந்து சென்றான்.

அவன் திறந்த கதவுக்கு வெளியே வேலுமணி நின்றிருந்தார். அவர் கண்கள் கலங்கி யிருந்தன.

அவர் எதுவும் சொல்லாமலே, ரமணிக்கு விஷயம் ஓரளவு புரிந்தது.

“அப்பாவுக்கு ரொ,ம்ப உடம்பு சரியில்லே, ரமணி. அவரை நர்சிங் ஹோம்லெ சேர்த்திருக்கேன். ஹார்ட் அட்டேக்….”

ரமணி கலங்கித்தான் போனான்: “எந்த நர்சிங் ஹோம், வேலுமணி?”

”சுவிஜயா சர்சிங் ஹோம்லதான். நம்ம ஃபேமிலி டாக்டரோட நர்சிங் ஹோமாச்சே? உங்கப்பா ஏற்கெனவே எங்கிட்ட சொல்லி வெச்சிருந்தாரு. தனக்கு ஏதாவது சவுகரியக் குறைச்சல் ஏற்பட்டா தன்னை அங்கதான் சேர்க்கணும்னு….”

ரமணியின் கலக்கம் மறைந்து அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது. அதைக் கண்டு வேலுமணி வியப்படைந்தார். விழிகள் விரிய அவனைப் பார்த்தார்.

 

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *