வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8

This entry is part 16 of 44 in the series 15 ஏப்ரல் 2012

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. நம்மில் எத்தனை பேர்கள் அனுபவங்களிலிருந்து சரியான படிப்பினையைப் புரிந்து கொள்கின்றோம். நமக்குள் குறைகள் இருக்கின்றன என்பதைக் கூட மனம் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த குறைதான் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்குக் காரணம். அமைதியைவிட அல்ப சந்தோஷங்களை விழைகின்றோம். வாழ்வியலின் வழுக்கல்களுக்கு நாமே காரணமாகின்றோம்.

மைனரிடம் துடுக்குத் தனமாகப் பேசி வந்த பின்னர் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று நினைத்தேன் நண்பர்கள் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் விரோதிகளைச் சம்பாதிக்கக் கூடாது. முன்னேற்றத்திற்கு அது பெரிய முட்டுக் கட்டை யாகிவிடும். இந்த சுய மதிப்பீட்டால் என் துடுக்குத்தனம் ஓரளவு குறைந்தது. என் வெளிப்படையான பேசும் தன்மை என்னைக் காக்கவும் செய்ததை மறுக்க முடியாது.

யாராவது தீய நோக்கத்துடன் நெருங்க நினைப்பவர்களுக்கு என் பேச்சு ஓர் தடையாக இருந்தது

“இந்த பொம்பிள்ளை கிட்டே பேசுவானேன். பத்து பேருக்கு முன்னால் மரியாதை இல்லாமல் பேசும். இந்த வம்பே வேண்டாம்” என்று ஒதுங்கிச் சென்றவர்கள் அதிகம். முள்ளம்பன்றிக்கு முட்கள் போல் எனக்கு என் பேச்சு உதவியது. இக்குணத்தால் சில சமயங்களில் பிரச்சனைகளும் வரும். என்னைப் பாதிக்கும்படியாக எதுவும் நிகழவில்லை.

பெரிய கருப்பன் என்னைப் பார்க்க வந்தான். அவன் முகத்தில் ஓர் பதட்டம்

அக்கா, இனிமேல் உங்களுக்கு மைனர் தொந்திரவு தரமாட்டார்

கருப்பனின் பதட்டத்திற்குரிய காரணம் இப்பொழுது புரிந்தது. அதற்குள் தோப்பில் நடந்தது இவனுக்கு எட்டியிருக்கின்றது. அதற்குள் செய்தி பரவும் அளவில் கிராமங்களில் ஓர் அமைப்பைக் கண்டேன். மைனருக்கருகில் நின்றவர்கள் கருப்பனுக்கு நண்பர்கள். நான் வந்த பிறகு அவர்கள் அந்த மைனரிடம் கருப்பனின் அக்கா என்று சொல்லியிருக்கின்றார்கள். விளையாட்டைத் தொடர்ந்தால் விபரீதம் நிகழலாம் என்று அடக்கமாகி விட்டார். காசுக்கு உழைக்கும் ஏழைகள் தான். ஆனால் அன்புக்காக உயிரையும் கொடுப்பவர்களும் அந்த ஏழைகள்தான். கருப்பன் சொல்லச் சொல்ல வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழி எனக்கும் உதவியது. எனக்கும் என்னைக் காக்கத் தம்பிகள் கூட்டம் இருந்தது.

சோதனைக் களத்தில் இறங்குகின்றாவர்கள் பாதுகாப்பு வளையத்தைப் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்.

“கற்பு” என்ற சொல் உண்டாக்கிய இன்னொரு சோதனை

எங்கள் பணியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமான கடமை. தனி மனிதர் சந்திப்பு, குழுமங்களின் சந்திப்புடன் ஊரை வயப்படுத்த கலை நிகழ்ச்சிகள் மூலம் எண்ணங்களை விதைப்போம். கதாகாலஷேபம், வில்லுப் பாட்டு நிகழ்த்தியிருக்கின்றேன். திரைப்பட பாடல்களின் மெட்டுக்களில் திட்டப் பாடல்கள் எழுதி பல மணி நேரக் கச்சேரி செய்திருக்கின்றேன். நாடகங்களும் நிகழ்த்தியிருக்கின்றோம்.

மனமாற்றம் என்று ஓர் நாடகம். கதையின் நாயகர் வயதானவர். சுய நலக்காரர். ஊரை ஏமாற்றுபவர். அவருக்கு முதல் மனைவி இறந்த பின் இரண்டாவது மனைவியாக நடித்தேன். அவர் கொடுமையைத் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் பாத்திரப் படைப்பு. ஏற்கனவே நான்கு இடங்களில் போட்டுவிட்டு ஐந்தாவது இடத்தில் போடும் பொழுது என் தாயைக் கூட்டிச் சென்றிருந்தேன். அவர்கள்தான் நாடகம் பார்த்து வீட்டிற்குத் திரும்பியவுடன் ஓவென்று கதறி அழுது என்னைத் திட்டினார்கள். என் கற்பு போய்விட்டது என்று சொன்னவர் என் தாயார்தான்

நாடகத்தில் மனைவி இறந்தவுடன் தன் தவறை உணர்ந்த பண்ணையார் மனைவியின் தலையை மடியில் வைத்துக் கொண்டு புலம்புவார். அந்த ஒரு காட்சியில் தான் மனைவியைத் தொடுவார். பிற ஆடவன் எப்படி தொடலாம்.? என்னை வெட்கம் கெட்டவள் என்று திட்டிவிட்டு இனி உடன் இருக்க முடியாது என்று வீட்டைவிட்டுப் புறப்பட முடிவு செய்து விட்டார்.

வீட்டிற்குள் பிரளயம். நான் இதனை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஜீப்பில் பல ஆண்களுடன் இடித்துக் கொண்டு உட்கார்ந்து பயணம் செய்யும் மகளைப் பார்த்தால் என்னவாகியிருப்பார்?!. நான் மட்டுமா? களப்பணியில் இருந்த எல்லாப் பெண்களுக்கும் ஜீப்பில் போகும் பொழுது அந்த நிலைதான். பலரை அழைத்துக் கொண்டுதான் ஜீப் புறப்படும். வாகன வசதி இல்லாத காலம்.

என் தாயாரைச் சமாதானப் படுத்த மிகவும் கஷ்டப்பட்டேன். நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். மக்கள் தொடர்புப் பணி என்னுடையது. ஆனாலும் என் தாயைச் சமாதானப்படுத்த வேண்டும். இனிமேல் ஆண்களைத் தொட்டு நடிக்க மாட்டேன் என்றேன். வாடிப்பட்டியில் நான் பங்கு கொண்ட கலை நிகழ்ச்சிகளுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. எனக்கும் அக்காலத்தில் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கிக் குழுவுடன் உதவி இயக்குனர் வசந்த குமாரியும் நானும் வாடிப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த ஓர் கிராமத்திற்குச் சென்றோம். குழுவின் தணிக்கைக்கு நாங்கள் கிராமங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. வரைபடம் கொடுப்போம். அவர்கள்தான் கிராமத்தைத் தேர்ந்தெடுப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் நடந்தது அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் வியப்பைக் கொடுத்தது

வெளிநாட்டாரைப் பார்க்கவும் ஊர் பெரிய மனிதர்கள் வந்துவிட்டார்கள். பேசிக் கொண்டே வருகையில் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான் வியப்பிற்குக் காரணம்

அய்யா, இப்போ எல்லாம் இந்தப் பிள்ளைங்க அவ்வளவு சரியா வேலை செய்யறது இல்லே. முன்னாலே எங்க ஊர்லே ஒரு பொண்ணு வேலை பார்த்துச்சு. நல்லாப் பழகும். அருமையாப் பேசும். பாடும்,ஆடும், நாடகத்திலும் நல்லா நடிக்கும். அது மாதிரி அதுக்கப்புறம் வந்தவங்கள்ளெ யாரும் இல்லே

உடனே வசந்த குமாரி அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லச் சொன்னார்கள்.

அவர்கள் கூறிய பெயரைக் கேட்கவும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது

சீதாலட்சுமி

வசந்த குமாரிக்கு உடனே புரிந்துவிட்டது.

இதோ அந்தப் பொண்ணூதான் அந்த அம்மா என்று என்னைச் சுட்டிக் காட்டினார்கள். ஆவலுடன் என்னை நோக்கியவர்கள் முகத்தில் சிறிதளவு ஏமாற்றம் தெரிந்தது

அவுங்க அழகா இருப்பாங்களே

அய்யோ கொடுமை. அவ்வளவு கோரமாகவா மாறிவிட்டேன்

உடனே வசந்த குமாரி என்னிடம் வருடங்களைக் கேட்டுவிட்டு இருபது வருஷமாச்சே, ஊர் சுற்றி சுற்றி இப்படி ஆய்ட்டாங்க என்றார்கள். உலக வங்கிக் குழுவிடம் விளக்கியவுடன் அவர்களுக்கு நான் ஓர் உதாரணப் பொருளாகி விட்டேன். மக்கள் தொடர்பு பற்றி அதிகமாகப் பேசுபவர்கள் அவர்கள்.. ஓர் திட்டம் வெற்றி பெறுவது அதனை மக்களிடம் கொண்டு போகும் விதத்தைப் பொறுத்தது என்று அடிக்கடி கூறுவார்கள் (communication skill is important )

நான் ஓர் சாதாரணமான பெண்மணி. நான் அழகானவளும் இல்லை. ஆனால் மேடையில் கூத்தாடியவள். மக்களின் மத்தியில் கூத்து கலை அப்படி வேரூன்றி இருக்கின்றது. இன்றல்ல நேற்றல்ல பல்லாயிர வருடங்களங்களாக நாம் வாழும் வாழ்வியல் அப்படி. ஓலைத் தடுக்கில் மேடை அமைத்து நடித்த எனக்கே ரசிகர்கள் என்றால். பல ஆண்டுகளாக ஓர் நல்லவன் எப்படி இருக்க வேண்டுமென்று நடித்த நடிகர், மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட உயர்திரு .எம்.ஜி.ஆர் அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் அதிசயமென்ன இருக்கின்றது!

நான் கடைசியாக நடித்த நாடகம் “அம்மா” சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இரண்டு வகையான பெண்கள். ஒருத்தி குடும்பமே வாழ்க்கை என்று வாழும் அம்மா. இன்னொருத்தி மாறி வரும் நாகரீகங்களை ஏற்றுக் கொண்டு குடும்பத்தையே நடுத்தெருவிற்கே கொண்டு வருபவள். இந்த புதிய அநாகரீகம் வளர்ந்து வரும் காலம். எங்கள் நாடகம் எல்லாம் பிரச்சார நாடகங்கள். நாடகங்களின் உயிர்நாடியாக இருக்க வேண்டியது வசனங்கள். பிரச்சார நாடகம் போலவும் தெரியக் கூடாது. .கதை வசனம் எழுதியதுடன் நானே நடித்தேன். என்னுடன் நடித்தவர்கள் மனோகர் ட்ரூப்பிலிருந்தும், சேஷாத்திரி குழுவிலிருந்தும் நடிகர்கள் வந்திருந்தனர். நாடக அரங்கின் அலங்காரமும் சேஷாத்ரி குழுவிடமிருந்து பெற்றது.. அந்த நாடகத்திற்கு நல்லவரவேற்பு இருந்தது. அதன்பின் நாடகத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

1962 க்கு முன் மேடை வாழ்க்கை.,. .என் கலைப்பணியால் எனக்கு இன்னொரு முக்கியமான உதவிக் கரம் கிடைத்தது.

வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் காலத்தில்தான் பஞ்சாயத்து தேர்தல் வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் வந்தனர். எங்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர் . திரு . பாலகுருவா ரெட்டியார் அவர்கள். என் மீது மதிப்பும் பிரியமும் உள்ளவர். திரு எம்.ஜி. ஆர் அவர்கள் ஆட்சியில் சுற்றுலாத்துறையின் தலைவரானார் எங்கள் ஊர் சேர்மன். ஓர் அரசியல் சூறாவளியில் நான் சிக்கித் தவித்த பொழுது எனக்காகப் போராடியவர்.

அங்கே பணியாற்றிய பொழுதுதுதான் ஏ.எஸ். பொன்னம்மாள் பழக்கமானார். சட்டமன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே பழக்கமானவர். காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்குச் சென்ற பொழுது சில சமயம் உடன் துணைக்குச் சென்றிருக்கின்றேன். அச்சமும் நாணமும் கொண்ட அந்த சின்னப் பெண் பின்னர் துணிச்சலுடன் செயலாற்றியதையும் பார்த்திருக்கின்றேன்.

என்னிடமிருந்த திறமைகளில் முதல் இடம் பெறுவது மேடையில் பேசுவது. நான் படித்த பள்ளி கொடுத்த பயிற்சி. அக்காலத்தில் நான் மேடையில் பேசினால், திரு அனநத நாயகியின் நினைவு வருகின்றது என்பார்கள். தோற்றத்தில் கூட அவருடைய சகோதரி போல் இருக்கின்றேன் என்று சொன்னவர்களும் உண்டு. இப்படி பேசப் பேச எனக்கு அந்த அம்மாவைப் பார்க்கும் ஆவலே கிளம்பிவிட்டது. சென்னைக்கு சிறப்புப் பயிற்சிக்குச் சென்ற பொழுது அவர்களைப் பார்க்க முடிந்தது. சின்னப் பெண்ணின் ஆசை.

என்னைப் பெற்றவருடன் குழந்தைப் பருவத்திலேயே ஊர் சுற்றித்திரிந்த அனுபவம் உண்டு. சுதந்திரப் போராட்ட காலத்தில் என் அப்பா தூத்துக்குடிக்குச் செல்வார். ஏ. பி. சி வீரபாகு இன்னும் பலருடன் இரவு நேரங்களீல் ரகசியக் கூட்டங்கள் போட்டுப் பேசுவர். எனக்கு ஒன்றும் தெரியாது. கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டு பக்கத்து அறைக்குத் தூங்கப் போய்விடுவேன். திரு சோமயாஜுலு அவர்களைக் காண அடிக்கடி போவார். பல அரசியல் தலைவர்களைச் சந்திக்கப் போவார். ஏனோ என்னையும் கூட்டிச் செல்வார். மகள் துணிச்சல்காரியாக வளர வேண்டும் என்ற. ஆசை போலும்.

சிறு வயதிலேயே அரசியல் களம் அப்பாவுடன் பார்த்தவள். அன்று ஒன்றும் தெரியாது. ஆனால் பிற்காலத்தில் அரசியல் களம் கண்ட பொழுது அச்சமோ, தயக்கமோ ஏற்பட்டதில்லை. . நான் ஏற்றுக் கொண்ட பணிகளின் சோதனைக் காலங்களில் எனக்கு அரசியல் களத்திலிருந்தும் உதவிகள் கிடைத்தன. மீண்டும் ஒன்றை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. அதுமட்டுமல்ல. அரசுப் பணியில் இருக்கின்றவர்கள் யாரும் தங்களை அரசியல்வாதியாக நினைத்தலும் கூடாது என்று சொல்கின்றவள். யார் ஆட்சிக்கு வரினும் எங்களுக்கிட்ட பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும். அரசில் வேலை பார்க்கின்றவர்கள் மைக் மாதிரி என்று கேலியாகச் சொல்வேன். மைக் தானாகப் பேச முடியாது. அதன் முன்னே பேசுகின்றவர்களின் பேச்சுக்களை ஒலிபரப்பும் ஒர் கருவி. திட்டமிடுதல் அரசின் உயர்மட்டப் பணி. எங்கள் பணி அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதுதான்.

அனுபவங்கள் ஓர் புதிய பாடமும் கற்றுக் கொடுத்தது. பெண்கள் களத்தில் பணியாற்றும் பொழுது பல சோதனைகள் வரும். அப்பொழுது எங்களைக் காக்க பலர் உதவியை நாட வேண்டிவரும். அந்தப் பெரியவர்களில் சில சமயம் அரசியலைச் சேர்ந்தவர்களாகவும் அமையலாம். எங்கு வேலைக்குச் சென்றாலும், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத்தலைவர்களின் நன்மதிப்பை பெற்றிருக்க வேண்டும். மாவட்ட அளவில் நிர்வாகத்திற்குச் சென்றால், மாவட்ட ஆட்சியாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவரவர் ஊர்ப் பிரச்சனைகள் என்று எல்லோரும் வருவார்கள்.சாதி, மதம், அரசியல் கட்சி எல்லாவற்றிலும் நடு நிலைமையுடன் இல்லையென்றால் அவர்கள் அங்கே பணியாற்ற முடியாது. இந்த விஷயங்களில் பெண்கள் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். முற்காலத்தில் அரசுப் பணியாளர்கள் எல்லோரும் சம நிலையில்தான் இருந்தனர். ஆனால் இக்காலத்தில் அரசுப் பணியாளர்களில் சிலர் அதிகமாக அரசியலில் ஈடுப்பாட்டைக் காண்பிப்பதையும் வேதனையுடன் பார்க்கின்றேன்.

நான் பணிக்கு வந்த காலத்தில் கிராமப் பஞ்சாயத்துகள் சக்தி வாய்ந்ததாக இருந்தது. உள்ளூரில் இருக்கும் சாதிகளில் எந்தக் கூட்டம் பெரிதோ அவர்கள் கையில் அதிகாரம் இருக்கும். அதே போல் பணம் படைத்தவனும் அதிகாரம் படைத்தவனாக இருந்தான். சுதந்திரப் போராட்டத்தில் உழைத்த காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியும் பலம் பெற்றுக் காலூன்றாத காலம் அது.

கிராமத்தின் கட்டமைப்புகளை இந்த பஞ்சாயத்து பார்த்துக் கொள்ளூம். தவறு செய்கின்றவர்களை இதனால் தண்டிக்க முடியும். நீதி மன்றங்களில் கூட வக்கீலின் வாதம், சட்டம் இருந்தும் தப்பித்து வர முடியும். ஆனால் கிராமப் பஞ்சாத்துக்கள் தண்டனை விதித்தால் தப்பிக்க முடியாது.

வாடிப்பட்டியில் வேலை பார்த்த காலத்தில்தான் மகளிர் நலத்துறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. ஊரக வளர்ச்சியில் இருந்த மகளிர்ப் பணிகளூம் மகளிர் நலத்துறையில் இணைக்கப் பட்டன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் எல்லாக் கிராமங்களிலும் மகளிர் மன்றங்கள் இருக்க வேண்டுமெனத் திட்டம் வந்தது. ஆனால் பின்னர் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முப்பது மகளிர் மன்றங்கள் என்ற முறை வந்தது. மாதிரித் திட்டம் என்றும் ஒன்று வரைந்து, அது செயல்பட ஆரம்பித்தது. சமூகக் கல்வி அமைப்பாளார் என்ற பெயரை முக்கிய சேவிக்கா என்றும் மாற்றினர் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டன

.நிலக்கோட்டைக்கு அருகே வத்தலக் குண்டு வட்டாரம் இருந்தது. வினோபாஜியின் கிராமதான், பூமிதான் திட்டங்கள் அந்த வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டன.. ஜகன்னாதன் அண்ணாவும் கிருஷ்ணம்மாள் அக்காவும் பொறுப் பேற்று பணி புரிந்தனர். என் நெருங்கிய தோழி கஸ்தூரி அங்கே முக்கிய சேவிக்காவாக வேலை பார்த்தாள். அவள் ஓர் அனாதைப் பெண்ணாக காந்தி கிராமத்தில் நுழைந்தவள் அம்மாவால் வளர்க்கப் பட்டு அங்கேயே வளர்ந்த நடராஜனுக்கு மணமுடித்து வைத்தார்கள். இருவரும் தங்களை கிராமப் பணிகளுக்கே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

அந்த வட்டாரத்தில் இன்னொரு திட்டமும் இருந்தது. சமூக நல வாரியத்தின் முலமாக மாதிரித் திட்டம் அது. (run by project implementation committiee) மையம் ஓரிடத்தில் இருந்தாலும் சில கிராமங்களைத் தத்தெடுத்து மகளிர், குழந்தைகள், ஊனமுற்றோர் நலன் பாதுகாத்தது.

நான் அடிக்கடி கஸ்தூரியுடன் அங்கு சென்று அந்தப்பணிகளைப் பார்ப்பேன். சில பணிகளை நான் வேலைபார்த்த வட்டாரத்தில் அறிமுகப்படுத்தினேன். அக்காலத்தில் அரசில் வேலை பார்த்தாலும் எண்ணங்கள், உணர்வுகள் எங்கள் பணிகளில் ஒன்றிப்போயிருந்தது. மதுரையில் இருந்த காந்தி ம்யூசியத்தில் ஜகன்னாதன் அண்ணாவையும் கிருஷ்ணம்மா அக்காவையும் காணலாம். குழந்தைப் பருவம் முதல் என்னை ஆட்கொண்ட அண்ணல் காந்திஜி உபயோகித்த சில பொருட்கள் அங்கே இருக்கும். மனம் நெகிழ அவைகளைப் பார்ப்பேன்.

குழந்தைப்பருவ முதல் வளரும் சூழலால் ஏற்பட்ட குறைகள் இது போன்று நல்லவர்களுடன் ஏற்படும் தொடர்பும், நல்ல காட்சிகளைக்க் காண்பதிலும் நிச்சயம் பக்குவப்படுத்தபடுகின்றோம். இரட்டை குணங்கள், போலித்தனம் உள்ளவர்களால் திருந்த முடியவில்லை. இதுதான் வாழ்வியல்.

என் துறையைப் பற்றிய முழு விபரங்கள் மட்டுமல்ல, இந்த சமுதாயத்தில் பெண்கள் நலனுக்காக மகளிர் அமைப்புகள் எத்தகைய பணிகள் செய்து வருகின்றன என்பதை நான் சென்னைக்குச் சென்ற பொழுது அறிந்தேன். ஊக்கமும் அதிகமாகியது சென்னையில் கிடைத்த பயிற்சி காலத்தில்தான். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பு, ஒருபக்கம் சார்பு இருத்தல் கூடாது. இருந்தால் கடமைகளைச் செவ்வனே செய்ய முடியாது என்பது உணர்த்தப்பட்டது. . அனுபவங்கள்தான் பாடங்கள் கற்றுக் கொடுக்கும்.

வாடிப்பட்டி வாழ்க்கை வசந்த காலம் அது முடிவிற்கு வந்தது. சென்னைக்குச் செல்ல வேண்டிய அழைப்பு வந்தது. மகளிர் நலத்துறையில் முதல் முறை யாக ஓர் திட்டம் கொண்டு வந்தனர். குழந்தைகளுக்கு பூர்வாங்கக் கல்வி மையங்கள் திறப்பதுதான். ( preschool education ) தமிழகத்தில் 32 ஊராட்சி ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. . அதன் ஆசிரியைகளுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுக்க முடிவு செய்து 32 முக்கிய சேவிக்காக்களுக்கு அழைப்பு விடுத்தனர்..சிறப்புப் பயிற்சி பெறும் முக்கிய சேவிக்காக்கள் அந்த வட்டாரம் சென்று ஆசிரியைகளுக்குப் பயிற்சி கொடுக்க வெண்டும். அவர்களில் நானும் ஒருத்தி. சென்னைக்குப் பயணம் புறப்பட்டேன் என் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான கட்டத்திற்குச் செல்கின்றேன் என்று அப்பொழுது தெரியாது. என் வேலையில் மட்டுமல்ல என் வாழ்க்கையில் என்னைப் பல்முனைகளைப் பார்க்க வைத்து பல திசைகளுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தது சென்னை வாழ்க்கை.

அடுத்த வரும் பகுதியில் எங்களுக்கு வந்த சோதனையைப் பற்றிக் கூறுவேன்.

தமிழ் மண்ணில் மகளிர் நலன்களுக்காக பெண்கள் அமைப்புகள் தோன்றுய வரலாறு எழுதப்படும். இத்தொடர் ஆவணப்படுத்தும் முறையில் அதன் வரலாறு விளக்கமக எழுதப்பட வேண்டும். எங்களில் ஒரு பெரிய குறை உண்டு. உங்கள் வேலை என்னவென்று கேட்டால் அவர்கள் சார்ந்த பணியைப் பற்றி மட்டுமே கூறுவர். இது ஓர் ஒருங்கிணந்த திட்டம். ஆலமரம் போல் பெரியது. . இதன் வேர்கள் ஆழமானவை. விழுதுகளும் பரந்திருக்கும். ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள் வேண்டிய செய்திகள். சோதனை நம் குடும்பத்திதான் வர வேண்டுமென்ப தில்லை. அண்டை வீட்டில் வந்தாலும் அவர்கள் புனர் வாழ்விற்கு வழிகாட்டவாவது தெரிந்திருக்க வேண்டும். இந்த நற்பணிக்கு வித்திட்டவர்கள் வரலாற்று நாயகிகள். அவர்களைப் பற்றியும் அவர்கள்,தொடங்கிய அமைப்புகளின் பணிகளையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் ஆண்களும் பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைத்திருப் பதையும் காண்போம். முடியாத நிலையில் நான் எழுத்த் தொடங்கியதற்குக் காரணம் அக்காலத்திலிருந்து பார்த்து, பணியாற்றி வந்தவள் இது என் கடமை. என்னால் இப்பொழுது செய்ய முடிந்த ஒரே காரியம் இதனை ஆவணப் படுத்தும் அளவில் எழுதப்பட வேண்டும்.

இறைவன் எனக்கு சக்தி கொடுக்க வேண்டிக் கொள்கின்றேன்

“மனதைத் தந்திரமாகவும், சாமர்த்தியமாகவும் கட்டுப்படுத்து. சரியாகவும், தெளிவாகவும் சிந்தனை செய். நாவைக் கட்டுப்படுத்து. இனிமையாகவும் , சாந்தமாக்வும், உண்மையாகவும் பேசு. வார்த்தைகளை அளந்து பேசு.”

சுவாமி சிவான்ந்தா

(பயணம் தொடரும்)

படத்திற்கு நன்றி

Series Navigationசட்டென தாழும் வலி‘பிரளயகாலம்’
author

சீதாலட்சுமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *