வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

 

மனிதனின் வாழ்க்கையில் பல பருவங்கள்

அவன் உருவாகும் காலத்தில் பிள்ளைப் பருவம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. உடல் மற்றும் மனம் வலிமை பெறுவது இக்காலத்தில்தான். மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இப்பருவத்தினைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கும் விளையாடு வதற்கும் மட்டுமல்ல.  மனிதன் பொறுப்புடனும் அக்கறையுடனும் பாதுகாக்கப்பபட வேண்டியது , குழந்தைப் பருவம், சிறுவர்களாக இருக்கும் காலம்.  இவைகளில் கவனம் செலுத்தும்  பெரும் அமைப்புகளை இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

அதற்கு முன்னர் ஒருவரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பெயர். திருமதி. ருக்மணி லட்சுமிபதி. இவர்தான் முதல் பெண் அமைச்சராக இருந்தவர். சுகாரத்துறை. இவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறைக்குச் சென்றவர். பல பதவிகள் வகித்தவர். பழமையான சாதன வழக்கங்களைக் கடுமையாகச் சாடியவர். பெண் விடுதலைக்கு வேண்டியவற்றில் அவரும் ஊழியராக  இருந்து  பல காரியங்களில் முன்னின்று செயலாற்றினார். இவர் அமைச்சராக இருந்த ஆண்டு 1946. இவரை நேரில் நான் பார்த்த்தில்லை. 1951 இல் மறைந்துவிட்டார்

நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில்  பெண்மணிகள் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் பெண் விடுதலைக்கும் வித்திட்டனர். இவர்கள் அனைவரும் வரலாற்று நாயகிகளாகக் காண்கின்றோம். அவர்கள் விதைத்த பயிரின் வளர்ச்சியை நாம் இப்பொழுது ஒவ்வொன்றாகக் காணப் போகின்றோம்.

மனிதன் குழந்தையாக இருந்துதானே பெரியவனாகின்றான். இனி குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளைக் காண்போம். சில அமைப்புகள் பெயரை முதலில் பார்ப்போம்

(ஆங்கிலத்தில் குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும் )

INDIAN COUNCIL OF CHILD WELFARE

UNICEF

WORLD HEALTH ORGANISATION

இந்த மூன்று அமைப்புகளூம் இந்தியாவில் ஐக்கிய நாட்டு சபையின் விதிகளின்படி திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. .மகளிர் நலத்துறை, சுகாதார நலத்துறை இரண்டும் இணைந்து நடத்தும் திட்டங்கள் பல. இவைகளில் முதலில்  இந்திய குழந்தைகள் நல மையத்தினைப் பார்க்கலாம் .இது ஓர் தொண்டு நிறுவனம். இதற்குத் தலைவி திருமதி சரோஜினி வரதப்பன் ஆவார். துணைத் தலைவியாக இருப்பவர் திருமதி ஆண்டாள் தாமோதரன் அவர்களாகும். சரோஜினி அம்மா தலைவியாக இருந்தாலும் இந்த அமைப்பின் வேலைகளை முழுமையாகக் கவனித்து வருபவர் திருமதி ஆண்டாள் தாமோதரன் ஆகும்

இதிலிருந்து ஒன்றைக் கவனிக்கலாம். பொறுப்புகளை இன்னொருவரிடம் கொடுத்து சுதந்திரமாக இயங்க வைப்பது ஓர் தலைமையின் சாமர்த்தி யத்தியத்தையும் தொலை நோக்கும் அமைந்துள்ளது. எப்பொழுதும் ஓர் பொறுப்பில் தலைமை ஏற்று நடத்தும் பொழுது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைகளில் சிலரைத் தயார் செய்தல் வேண்டும்.ஒருவரை மட்டும் நம்பி ஒரு திட்டம் இருத்தல் கூடாது. ஒருவர் இயலாமையிலும், இல்லாத நிலையிலும், காரியங்கள் தடைப்படாமல் தொடர்ந்து நடத்திடுவதற்கு இன்னொருவர் அவசியமாகின்றது. அப்படித் தேர்ந்தெடுப்பவர்கள் தலைமைப் பதவி மேல் ஆசைப்பட்டு குறுக்கு வழிகளை நாடாதவராக இருக்க வேண்டும். அத்தகைய மனிதர்களைத் தேந்தெடுக்கும் திறன் தலைமைக்கு இருத்தல் வேண்டும். திருமதி சரோஜனி வரதப்பன் இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்காரர். அவர் பங்கேற்கும் ஒவ்வொரு அமைப்பிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருந்தார் . அவரிடம் இன்னொன்றையும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் அரசியல்பற்றி எங்களிடம் பேச மாட்டார். தன் குடும்பப் பெருமைகளையும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். அனுபவங்களைக் கூறும்பொழுதும் அக்கறையுடனும் அடக்கத்துடனும் விளக்குவார். இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு படிப்பினை

இனி திருமதி ஆண்டாள் தாமோதரனையும் அமைப்பின் வேலைகளையும் பார்க்கலாம்.

சிறுவர்கள் நலனைக் கவனிக்கும் ஊழியர்களுக்கும்,  அந்த ஊழியர்களுக்கும் பயிற்சி கொடுக்கும் பயிற்றுனர்களுக்கும் பயிற்சி கொடுக்கும் ஓர் நிறுவனம் இதன் கீழ் இயங்குகின்றது. மகளிர் நலத்துறை ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகின்றது.

அனாதரவான குழந்தைகளை வேண்டியவர்க்கு ஸ்வீகாரம் கொடுக்கும் பிரிவும் இதன் கீழ் இயங்குகின்றது. பல வழிகளில் குழந்தைகள் இவர்களிடம் வந்து சேரும். உள்நாட்டிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் வந்து குழந்தைகளைத் தத்தெடுத்துச் செல்கின்றார்கள். குழந்தைகளைக் கொடுக்கும் முன்னர் இருக்கும் விதிகளின்படி அவர்களின் தகுதிகளைப் பார்ப்பார்கள். குழந்தை களைக் கொடுத்தாலும் சிறிது காலம் வரை உலகில் எப்பகுதி யாயினும் அங்கு சென்று குழந்தைகளின் நிலைமைகளையும் ஆய்வு செய்வர். இந்த (child adoption) குழந்தைகள் தத்து கொடுக்கும் திட்டம் இருப்பதுவும் மகளிர் நலத்துறையில்தான் எனவே இந்த அமைப்புக்கும் துறைக்கும் தொடர்பு இருகின்றது. யாருக்காவது குழந்தையை சுவீகாரம் எடுக்க விரும்பினால் இவர்களை அணுகலாம்.

சிறுவர்களுக்கு இருக்கும் உரிமைகள் சட்டப்படி இருக்கின்றதா என்றும் இந்த அமைப்பு கண்காணிக்கும். அடிக்கடி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும். அவர்களிடம் பயின்றவர்கள் பெற்றோர்களை அழைத்துக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வர். இதுபோன்ற பிரச்சனைகள் பார்க்கும் பொழுது இவர்களிடம் தெரிவிக்கவும்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். சிவகாசி, சாத்தூர் பக்கங்களில் இது அதிகம். தொழில்துறை இதில் அதிகக் கவனம் செலுத்தும் இவர்களும் கண்காணிப்பார்கள். வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சிறுமிகளை வேலைக்கு அமர்த்துவது சர்வ சாதாரணமாக நடைப்பெற்று வருகின்றது. செய்திகள் கிடைத்தால் அதைத் தடுக்கும் பணியும் செய்வார்கள். வீட்டைவிட்டு ஓடி வரும் சிறுவர்கள், கடத்திச் செல்லப்பட்ட சிறுவர் சிறுமிகள் தப்பித்து தெருக் குழந்தைகளானால் அவர்களுக்குப் புனர் வாழ்வு கொடுக்கும் திட்டங்களும் இவர்களிடம் உண்டு.

14 வயது வரை கட்டாயக்கல்வி அமுலில் இருக்கின்றது. திரு. காமராஜ் அவர்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். மகளிர் நலத்துறை மட்டுமல்ல ஊரக வளர்ச்சித் துறைமுதல் பல துறைகள் இதில் அக்கறை காட்டினர். இந்த நிறுவனமும் மற்ற தொண்டு நிறுவனங்களும் இப்பணியில் ஈடுபட்டனர். நடைமுறையில் பள்ளியில் சேர்த்துவிட்டு கவலையற்று பெற்றோர் இருப்பர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதியில் படிப்பை நிறுத்திவிடுவர்.(school drop out) இது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா விலும் மற்ற நாடுகளிலும் இந்த நிலை இருப்பதை நான் கவனித்திருக் கின்றேன்

வெள்ளம், சுனாமி, தீ, சண்டைகள் போன்றவைகளால் மக்கள் பாதிக்கப் படும் பொழுது எப்படி செஞ்சுலுவைச் சங்கம் ஓடிச் சென்று உதவுகின்றதோ இவர்களும் சென்று பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக் குரியவைகளைச் செய்யும். அரசில் அதற்கேற்ப இருக்கும் துறைகளை அணுகி உதவிகள் பெற்றுத் தர ஓர் பாலமாக இயங்குவார்கள்.

பெண்குழந்தைகள் கருவில் உதயமாகும் பொழுதும், குழந்தை பிறந்தவுடனும் கொல்லப்படுவதை நிறுத்த மகளிர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவன செய்கின்றனர்.

1981 இல் மதுரை மாவட்டத்தில் இயங்கிவந்த தமிழ் நாடு ஒருங்கிணந்த ஊட்டச்சத்துத் திட்டத்தில் மதிப்பீடு துணை இயக்குனராக இருந்த திரு மோகன் அவர்கள் ஆதாரபூர்வமாக அறிக்கை அனுப்பினார். பின்னர் செய்தி வெளியில் வந்தது. ஏற்கனவே இது வெகு காலமாக சமுதாயத்தில் நடந்து வரும் கொடுமை. கருவில் அழிப்பதே தவறு. குழந்தை பிறந்தபின் கொல்வது கொடுமையிலும் கொடுமை. சட்டங்கள், திட்டங்கள் வந்தும் நிலைமை முழுவதும் சீராகிவிட்டது என்று சொல்ல முடியாது. பொது மக்கள் அக்கறை எடுத்து உரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும். செய்தி கூறுபவர்களை வெளியில் சொல்ல மாட்டோம்.

மற்ற இரு அமைப்புகளும் சுகாதார நலத்துறை, சமூக நலத்துறைகளுடன் ஒருங்கிணந்து குழந்தைகள் நலனுக்காகப் பல திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றனர். குழந்தைகளின் பிறப்பும் அதன் வளர்ச்சியும் குறிக்கோளாகக் கொண்டு இப்படி பல்முனையில் பணிகள் நடக்கின்றன. குழந்தைகள் நலத்திட்டங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன வளர்ச்சியும் இருக்கப் பல திட்டங்கள் இருக்கின்றன.

நல்லது நடக்க பல திட்டங்கள், பல சட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஏன் நாம் குறித்த இலக்கை அடைய முடியவில்லை? நிறைய விமர்சனங்கள் செய்கின்றோம். பத்தி பத்தியாக எழுதுகின்றோம். நிறைய பேசுகின்றோம். ஆழமாகப் படிப்பதில்லை. சிந்திப்பதிலும் தெளிவில்லை. இதனை உணர்கின்றவர்கள் நம்மில் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள் ?

ஓர் ஆய்வு என்று செய்யும் பொழுது சில எடுத்துக் காட்டுக்கள் வேண்டும். அதற்குக் களத்திற்குச் சென்று ஆராய்வார்கள்

CASE STUDY

நம்மைக் கொஞ்சம் நாமே ஆராயலமா? கற்பனையில் பிரச்சனை கதைகள் எழுதத் தேவை யில்லை. நிஜங்களை நான் எழுத ஆரம்பித்தால் வாழ்நாள் போதாது. ஒரு சில எடுத்துக் காட்டுக்களாவது எழுத வேண்டியது என் கடமை.

பல நிபுணர்களை வைத்துத் திட்டங்கள் தீட்டுகின்றார்கள். செயல்படுத்துவது அடிப்படை ஊழியர்களிலிருந்து பணியின் முன்னேற்றம் அமைகின்றது. சில உதாரணங்கள் பார்க்கலாம்.

குழந்தை நலன் என்று சொல்லும் பொழுதே அந்தக் கருவைச் சுமக்கும் தாயின் நலம் வந்துவிடுகின்றது. தாயின் உடல் நிலை சீராக இருக்க அவளுக்கு ஊட்டச் சத்து தேவை. கர்ப்ப காலத்தில் ஓர் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது பிரசவ நேரத்தில் வலிப்பு வராமல் காப்பாற்றும். குழந்தை பிறந்த பிறகு அதற்கு ஐந்து வயது வரை பல ஊசிகள், சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மூன்று ஊசிகள் அடுத்தடுத்த மாதங்களில் போட வேண்டும். முதல் மாதம் வரவிட்டுப் பின்னர் வருவதில்லை. பணியாளர்களின் தொடர் அழைப்பால் சிலர் வருகின்றனர்.. “அது தலைவிதிப்படி ஆகட்டும்” என்று பேசுதல் கூடாது. சினிமா பார்ப்பதில் காட்டும் அக்கறை கொஞ்சம் தான் பெற்ற பிள்ளைகளிடமும் காட்டவேண்டும். சொட்டு மருந்துதானே என்று அசட்டையாக இருத்தல் கூடாது. இளம்பிள்ளைவாதம்  வராமல் தடுக்கும். குழந்தையின் வளர்ச்சி மட்டுமல்ல தாய்மார்கள் கர்ப்ப காலத்தில், பிரசவ காலத்தில் சாவது கூடாது. குழந்தைகளும் செத்துப் பிறத்தல், அல்லது பிறந்தவுடன், அல்லது பிறந்த சில மாதங்களில் சாகக் கூடாது

It is our duty to reduce the maternal mortality rate and infant mortality rate

இந்த இலக்குடன் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் நலனுக்காக இயங்கும் அரசுத் துறைககளாயினும் தொண்டு நிறுவனங் களாயினும் அவைகள் கவனத்தில் கொண்டு செயல்படுவர். சிறந்த திட்டங்களும் செயல்படும்பொழுது சரியில்லையென்றால் இலக்கை அடைய முடியாது. திட்டங்களின் நுணுக்கமான தகவல்கள் தரப் போவதில்லை. ஆனால் பொது மக்களின் கடமைகளைக் கூறவேண்டும். அதற்கு முன் களத்தில் பணியாற்றும் பொழுது வரும் சோதனைகளைத் தெரிந்து கொள்ளலாம். சில நிகழ்வுகளைக் கூற விரும்புகின்றேன்.

ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் சென்னையில் 1979, 1980 ஆண்டுளில் பணியாற்றினேன். அப்பொழுது நடந்த நிகழ்ச்சி.

என் துறைக்குப் புதிய இயக்குனர் வந்த சமயம். அவருக்கு இத்துறையில் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை. வந்த அன்றே தற்செயலாக நான் இயக்குனர் அலுவலகம் செல்ல வேண்டி வந்தது. அப்பொழுது இயக்குனர் அவர்களைப் பார்த்த பொழுது திட்டப்பணிகளைப் பற்றி விசாரித்தார். அன்று ஒன்றும் கூற வில்லை.. திடீரென்று ஒரு நாள் மாலையில் அழைப்பு வந்து மாலை 6 மணிக்கு அவரை இயக்குனர் அலவலகத்தில் பார்த்தேன். மறுநாள் காலையில் எங்கள் மையங்களைப் பார்வையிட வருவதாகக் கூறினார். முன்னதாகச் சொல்லியிருந்தால் நான் மற்ற ஊழியர்களுக்குச் சொல்லிவிடுவேனாம். மேலும் வரைபடம் மட்டும் கொண்டு வர வேண்டுமென்றும், புறப்படும் பொழுதுதான் எந்த மையத்தைப் பார்வையிடப் போகின்றோம் என்று சொல்வாராம். எனக்குள் பதட்டமில்லை. எப்பேர்ப்பட்ட பெரியவகளாயினும் அவர்களுக்காக உண்மைகளை மறைக்க மாட்டேன். என் துறையில் இருந்த எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும்.

அவர் ஒரு மையத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கு சென்ற பொழுது அந்த மையம் சுத்தமாக இருந்தது. ஊழியரும் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கொடுத்தார். குழந்தைகளும் திறமைகளைக் காட்டின. அதிகாரிக்கு சந்தேகம். எப்படி இதற்குள் செய்தி மையத்திற்குத் தெரிந்திருக்கும்? இன்னொரு மையம் சென்றார். அதுவும் நன்றாக இருந்தது. உடனே என்னிடம் சந்தேகத்தைக் கேட்டுவிட்டார் .உடனே நான் கொடுத்த பதிலைப் பாருங்கள்

“சார், நீங்கள் பார்த்த மையங்கள் ஏற்கனவே சிறந்த மையங்கள். பரிசும் வாங்கியவை. நீங்களாகத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்களை மோசமான மையத்திற்கு நானே அழைத்துச் செல்கின்றேன்.”

என்னை விசித்திரமாகப் பார்த்தார். காரில் சென்றோம். (அந்த இடத்தைக் கூறக் கூடாது) நாங்கள் சேர வேண்டிய இடம் நெருங்கும் பொழுது அவரிடம், “ சார், நடக்கும் பொழுது பார்த்து நடக்க வேண்டும். இங்கு சுத்தமாக இருக்காது” என்று கூறினேன். மையத்திற்கு நாங்கள் சென்ற பொழுது அதிர்ச்சியான காட்சியைக் கண்டோம். நான் கூட இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அமைப்பாளர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பதிவேடுகளில் எழுதிக் கொண்டிருந்தார். மதிய உணவு கொடுக்கப்பட்டு குழந்தைகள் சென்றுவிட்டிருந்தனர். ஒரு தாயார் மட்டும் குழந்தையைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்திருந்தாள். குழந்தை பள்ளியில் மலம் கழித்துவிட்டது. அந்த தாய் ஓர் நாயைக் கூப்பிட்டு அதனைக் காட்டியிருக் கின்றாள். நாயும் மலத்தைத் தின்று கொண்டிருக்கும் பொழுதுதான் நாங்கள் உள்ளே நுழைந்தோம்.

கண்ட காட்சியால் இயக்குனரின் பொறுமை பறந்தது. அவர் சத்தம் போடவும் அங்கிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டாள் தாய். நாயும் ஓடிவிட்டது. அமைப்பாளரை வேலையைவிட்டு நீக்கும் உத்தரவை வாங்க அவளை அலுவலகம் வரச் சொல்லிவிட்டு வெளியேறினார். காருக்குள் சில நிமிடங்கள் மவுனம் நிலவியது. மெதுவாக நான் பேச ஆரம்பித்தேன்.

சார், உங்ககிட்டே ஒண்ணு சொல்லணும். மன்னிச்சுக்குங்க

அவர் பேசவில்லை. நான் தொடர்ந்தேன்,

எனக்கு 20000 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இங்கே வேலை பார்க்க மாட்டேன்.

இப்பொழுது அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்.

இங்கே இருதுறையைச் சேர்ந்த அடிமட்ட ஊழியர்கள் வாழ்கின்றார்கள். வீடுகள் கலந்துதான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவரவர் வீட்டை நன்றாக வச்சுப்பாங்க. தெருன்னு வரவும் கவுரவம் பாக்குறாங்க. ஒருவர் குப்பையை இன்னொருத்தர் எடுக்கறதான்னு சண்டை. பள்ளிக்கூடத்திலும் குழந்தைகள் சண்டை போட்டால் இந்த இரண்டு பக்கமும் கூட்டம் வந்துடும். டீச்சர் பாடு திண்டாட்டம். இவர்களைக் கூட்டிப் பல முறை பேசியாச்சு. மனுஷ குணம் மாறல்லே சார்.

இயக்குனரின் கோபம் தணிந்து பல கேள்விகள் கேட்டார். நானும் சொன்னேன். இரண்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடையேயும் பேசியதைக் கூறினேன். இயக்குனர் நிலவரத்தைப் புரிந்து கொண்டார்.

இந்தப் பிரச்சனை நகரச் சேரியில் நடந்தது. கிராமங்களிலும் சாதிப் பிரிவினைகளால் இத்தகைய பிரச்சனைகள் வரும். பள்ளிக் குழந்தைகள் சண்டை போட்டால் அது பெரியவர்களின் சண்டையாகி விடும். எத்தனை கோணங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மனிதன் மாற வேண்டும். முன்பு 100 ஆக இருந்த பிரிவினைகள் இப்பொழுது 400 ஆகிவிட்டது.

இன்னொரு இடத்தில் நடந்த சம்பவம்.

சத்துணவுக் கூடத்தில் சாப்பாட்டில் தேள். குழந்தைகள் வாந்தியெடுத்ததால் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்பொழுது அந்த அமைப்பாளரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்பாட்டுடன் தேளையும் எடுத்துக் கொண்டு போய் கலெக்டரிடம் கொடுத்து விட்டனர். நான் முதலில் ஆஸ்பத்திரிக்குச் சென்று குழந்தைகள் நிலவரம் பார்த்தேன். எல்லோரும் நன்றாக இருந்தனர். இரத்த பரிசோதனையில் உணவில் விஷம் இல்லை. பயத்தில் குழந்தைகள் வாந்தி எடுத்திருக்கின்றார்கள். செய்தி அறிந்த பின்னர் மையத்திற்குச் சென்று ஊழியர்களையும் தனித் தனியாக விசாரித்தேன். எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பது மட்டும் புரிந்த்து.

மாவட்ட ஆட்சியாளரைச் சந்திக்கச் சென்றேன். அவர் கிராமத்தினர் கொடுத்த உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். அதில் இருந்த செத்த தேளை எடுத்துப் பார்த்தேன். அமுக்கிப் பார்த்தேன். அது விரைத்திருந்தது. எனக்கு உண்மை புரிந்தது.

சார், சமைக்கும் பொழுது தேள் உணவில் விழவில்லை. தேளை அடித்துக் கொன்று பின்னால் சாப்பாட்டுடன் கலந்திருக்கின்றார்கள். இது வெந்த தேள் இல்லை சார். நான் மேலும் விசாரித்து அறிக்கை தரேன்.

மாவட்ட ஆட்சியாளர் சிரித்து விட்டார்.

பின்னர் கிராமத்திற்குச் சென்றேன். இக்காரியம் ஆயாவின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க முடியாது. அவள் உள்ளூர்வாசி. நயமாகக் கேட்க வேண்டும். அவளை விசாரித்ததில் கடைசியில் பயத்துடன் உண்மையை ஒப்புக் கொண்டாள். அதுமட்டுமல்ல விபரங்கள் அனைத்தும் கூறி அவள் சொன்னதாகச் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாள். பிறகு அவளை உயிருடன் வைத்திருக்க மாட்டார்கள்.

ஊரில் ஒரு பணக்காரன் அவன் ஆசை நாயகியை டீச்சராக வேலைக்கு வைக்க அவன் செய்த காரியம்தான் இது. ஊரில் இருக்கும் பல பெரியவர் களைப் பார்த்துப் பேசினேன். அவர்கள் நடந்தது கேட்டு வருத்தப் பட்டார்கள். தவறிழைத்தவனை விட இவர்கள் பணக்காரர்கள். ஊரில் பெரிய மனிதர்கள். இவர்கள் கூப்பிட்டு கண்டிக்கவும் அவன் தலை கவிழ்ந்தான். அந்த அமைப்பாளரை வேறு இடம் மாற்றி வேறு ஒருத்தியை நியமித்தேன். அப்பொழுது கூட தவறிழைத்தவன் விரும்பிய பெண்ணிற்கு வேலை கொடுக்க வில்லை

பணிக்களத்தில் மட்டுமல்ல பணியாற்றும் அலுவலகத்திலும் சோதனைகள் வரும்.

ஒரு பணியாளர் தன் சம்பளப் பணத்தை வாங்க அலுவலகம் சென்றிருந்த பொழுது பணத்தைக் கொடுத்த கணக்கர் அவள் கையைப் பிடித்து அமுக்கி விட்டு அசட்டு சிரிப்பு சிரித்திருக்கின்றான்.. அவள் திருமணமாகி ஓர் குழந்தைக்குத் தாயுமானவள். அவள் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு கிராமத்திற்குச் செல்லவும் தன் கணவனிடம் நடந்ததை கூறிவிட்டாள். அவ்வளவுதான் ஒரு கூட்டமே அலுவலகம் வந்து அதிகாரியிடம் புகார் செய்தது. அந்த அதிகாரி காசுக்கு ஆசைப்பட்டவள் அவளுக்குக் காசு ஏற்பாடு செய்கின்றவன் அந்தக் கணக்கன். அவளால் அவனை விட்டுக் கொடுக்க முடியாது.

சாதாரணமாகக் கை பட்டிருக்கும். உங்கள் பெண் அதைத் தப்பாக நினைத்து விட்டாள். அவர் நல்ல மனிதர்

அதிகாரியின் பேச்சு அவர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக நான் பணி செய்த காலம்.  அந்த மாவட்டத்திற்கு மையங்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதனை ஒருவர் கூறவும் கூட்டம் அதிகாரியை மிரட்டி வண்டியுடன் என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். இரண்டு ஜீப்புகளும் ஒரு ரோட்டில் சந்தித்தன. கூட்டத்தைப் பார்க்கவும் அவர்களை கொஞ்சம் ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்று விசாரித்தேன். அதிகாரியைப் பற்றியும் கணக்கரைப் பற்றியும் ஏற்கனவே மொட்டைக் கடுதாசி வந்திருந்தது. கையெழுத்தில்லாக் கடித்தத்திற்கு மதிப்பு கிடையாது.  அத்தகைய கடிதங்கள் பல காரணங்களால் வரும். இருப்பினும் அதில் சொல்லப்பட்ட குறைகள் தென்படுகின்றதா என்று மேலதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

ஊரார் பேசி முடிக்கவும் அவர்களைக் கொஞ்சம் தள்ளி நிற்கச் சொன்னேன். ஏற்கனவே வந்த புகாரைக் கூறி உண்மையைக் கூறச் சொன்னேன். அவளின் முக பாவம், பேச்சில் தயக்கம் அவளைச் சந்தேகிக்க வைத்தது.

உன் கணக்கன் வேறு துறையிலிருந்து வரவழைக்கப்பட்டவன். அவனை உடனே விடுப்பு எடுக்கச் சொல். அவன் அவனுடைய துறைக்கே போகட்டும். நீயும் அவனும் மறுத்தால் நான் மவுனமாகப் போகின்றேன். ஊரார் உங்களை என்ன செய்யட்டுமோ  செய்யட்டும். ஊரார்கிட்டே அடி வாங்கவேண்டும் என்று நினைக்கின்றாயா? ஒரு அதிகாரி தன் கீழ் வேலை பார்க்கும் பெண்களைத் தன் பிள்ளைகளாக நினைத்துக் காக்க வேண்டாமா? சாட்சி வைத்துக் கொண்டா ஒருவன் கைபிடித்து இழுப்பான். அந்தப் பெண்ணிற்கும் இவன் மேல் பழி போட என்ன காரணம் இருக்கு? உனக்குக் கேவலமா தெரியல்லியா?

என் குரலும் கோபமும் கண்டு நடுங்கி விட்டாள். நான் சொன்னபடி செய்வதாகக் கூறினாள்.

ஊராரிடம் சாமர்த்தியமாகப் பேசி  என் துறை பணியாளர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டேன். அவன் ஊரை விட்டுப் போய்விடுவான் என்றேன். பெரிது படுத்தினால் மற்ற பெண்களுக்கும் வேலை பார்க்கத் தயக்கம் வரும். நான் பார்த்துக் கொள்கின்றேன் என்றேன்.

பெண்களுக்குக் கஷ்டம் வந்தால் எந்த அளவு அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்வேன் என்பது என்னிடம் வேலை பார்த்த அத்தனை பணியாளர்களுக்கும் தெரியும். அதிகாரியாக இருத்தல் பெரிதல்ல. பணிக்களத்தில் அம்மாவாக இருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும். தவறுகளைக் கண்டிக்கலாம். ஆனால் பெண்களிடம் தவறான நோக்கத்துடன் நெருங்க விடக் கூடாது

அமைப்பாளருக்கு மட்டுமல்ல, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து பணிகளில் வழிகாட்ட ஒரு பெண் ஊழியர் இருப்பார் அவர் பணிப்பெயர் பயிற்றுனர். கல்லூரியிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்தவர்கள். இளம் பெண்கள் நிறைய பணிக்கு வந்திருந்தனர்.  அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தில்.  கணக்கர் இந்தப் பெண்ணின் கல்விச் சான்றிதழ்களை பணிப்பதிவேட்டில் பதிய என்று வாங்கியவன் அவளைத் தவறான எண்ணத்துடன் பழகக் கூப்பிட்டிருக்கின்றான். அவள் தன் மறுப்பைக் கூறியும் அவன் விட வில்லை. சான்றிதழ்களைக் கிழித்துப் போடப் போவதாகக் கூறி யிருக்கின்றான். தொல்லைகள் தொடர்ந்தன. அந்த அலுவலக அதிகாரி பயந்த சுபாவம் உள்ளவள். எனவே பிரச்சனைகள் எது வந்தாலும் ஒதுங்கிவிடுவாள். இதிலும் அப்படியே நடந்தாள்.

அந்த கணக்கர் அலுவலகத்தில் இன்னும் சில பிரச்சனைகளைக் கிளப்பி யிருக்கின்றான்.. புகார் கடிதம் வரவும் விசாரணைக்கு நான் சென்றேன். தனித் தனியாக விசாரணை செய்த பின் மற்றவர்களை அனுப்பிவிட்டு கணக்கரிடம் தனியாக விசாரணை ஆரம்பித்தேன். எல்லாவற்றிற்கும் மறுப்பு தெரிவித்தான். பின்னர் ஓர் பெண் அவரை விசாரணை செய்வதை விரும்ப வில்லையாம். அவன் வேறு துறையிலிருந்து வந்தவன் வந்திருக்கும் துறை மகளிர் நலம் கவனிக்கும் துறை. உலக வங்கித் திட்டம் வந்த பொழுது அமைச்சுப் பணியாளர்கள் போதவில்லை. எனவே மற்ற துறைகளிலிருந்து வரவழைத்திருந்தோம். ஒரு சிலர் அந்தத் துறையிலும் பிரச்சனையாக இருந்தவர்களை இங்கு அனுப்பிவிட்டார்கள். மகளிர் நலத் துறைக்கு வேலைக்கு வந்தவர் ஒரு பெண்ணிடம் பதில் கூற மறுப்பதைக் கேட்டு நான் சிரித்தேன். அறையின் கதவைச் சாத்தினேன்.

அவன் முறைத்தான்.

இங்கே பாரு சாவி கொடு. அந்தப் பெண்ணின் சான்றிதழ்களைக் கொடு. ஏதாவது பிரச்சனை செய்தால் என் ரவிக்கை, புடவை கிழித்துவிட்டு நீ என்னைத் தாக்கினாய் என்று புகார் செய்வேன். உன்னைப் பற்றி ஏற்கனவே போலீஸிடம் கூறிவிட்டுத்தான் வந்திருக்கின்றேன். ஒழுங்காய் நடந்து உன் துறைக்கே போகின்றாயா அல்லது ஜெயிலுக்குப் போகின்றாயா ?

என் புடவையை ஒரு பக்கம் கிழித்துவிட்டேன். ரவிக்கைபக்கம் கை போகவும். “நீ பொம்பிள்ளையா, இந்தா சாவி” என்று சாவியை எடுத்து வீசி எறிந்தான்.

“உன்னை போல் ஆம்புள்ளங்க கிட்டே இப்படித்தாண்டா நடக்கணும்” என்று. சொல்லிவிட்டு கதவைத் திறந்தேன். அவனையும் மற்றவர்களையும் வைத்துக் கொண்டு சான்றிதழ்களை எடுத்து பயிற்றுனரிடம் கொடுத்தேன். மற்றவைகளை தணிக்கை செய்த பின்னர் அவனிடம் விடுப்பு மனு வாங்கிக் கொண்டு அவனை அனுப்பினேன்.

ஆம் நான் முரட்டுப் பெண்மணிதான். என் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்.

நான் எழுதிய சம்பவங்கள் 1977 க்குப் பின் நடந்தவை. அப்படியென்றால் 50 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும்? பெரியவளாகி விட்டால் பள்ளிக்குப் போகக் கூடாது. அந்தப்புர வாழ்க்கை.  எங்கள் பெண்கள் களத்தில் இறங்கி வேலை செய்த பொழுது இழந்தது கொஞ்சமா?  எத்தனை பெண் போராளிகள் ? எத்தனை சட்டங்கள் ! எத்தனை திட்டங்கள் ! தினமும் படிக்கும் செய்திகளைக் கண்டு மனம் கொதிக்கின்றது. அன்று கண்ணகியால் முடிந்தது எங்களில் ஒருத்திக்கு சக்தி இருந்தால் கூட அக்கினி அம்பாகத் தேடிப் போய் தேடிப் போய் தீயவைகளை வேட்டையாடலாம்.

அடுத்தும் சட்டங்கள், திட்டங்கள் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

“குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அவை குழந்தைகளின் ஒழுக்கப் பண்பாட்டின் உயர்வுக்குத் தடையாக அமையும்”

– வேதாத்ரி மகரிஷி

தொடரும்.

 

 

 

Series Navigationசென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35