வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  -35
This entry is part 10 of 31 in the series 4 நவம்பர் 2012

 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

 

கணக்கு

ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு.

1மணி = 60 நிமிடங்கள்

24 மணி =1440 நிமிடங்கள்

இப்படியே கணக்கு போட்டு 60 வருடங்கள் வாழ்ந்தால் ஏறத்தாழ 31 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் வருகின்றது இதில் எத்தனை நிமிடங்கள் பிறருக்கு உபயோகமாக நாம் வாழ்கின்றோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்கள் கணக்குக் கூட வேண்டாம். ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நாம் பேசுவது, எழுதுவது செயல்படுவது இவைகளில் அர்த்தமுள்ள மணித்துளிகள் கணக்கு கூடப் போதும். ஆன்மீக வாதிகள் ஆண்டவன் கோயிலுக்குக் கூடப் போக வேண்டாம். கன்னத்தில் தட்டிக் கொண்டு , உண்டியலில் காசு போட வேண்டாம். உதவி தேவையாக இருப்போர்க்குச் சிறிதளவில் உதவி செய்தாலும் போதும். அப்படி கருணை காட்டி யிருக்கின்றோமா என்று பக்த சிரோண்மணிகள் சிந்தித்துப் பார்க்கட்டும். அறிவுப் பாசறை என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்பாற்றுகின்றார்களா என்று சுயப் பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

எனக்கு ராமச்சந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கின்றார். என் தேடலுக்கு அவர் ஓர் நூலகம். சென்னைக்குச் சென்றால் அவரைப் பார்த்துப் பேசாமல் வரமாட்டேன். அவர் வீட்டில் அவர் அறையில் ஒரு சின்ன நாற்காலியிருக்கும். ஒரு ஸ்டூலும் இருக்கும். அதிலும் புத்தகங்கள் இருக்கும். ஒருவர் அந்த அறையில் நடப்பதே கஷ்டம். எங்கும் புத்தகங்கள். பிரமிப்பாக இருக்கும். நம்மிடையே ஒரு குணம் உண்டு. புத்தகக் கண்காட்சி செல்வோம். ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்குவோம். சில பக்கங்கள்தான் புரட்டியிருப்போம். நம்மிடம்தானே புத்தகம் இருக்கப் போகின்றது, பின்னால் படித்துக் கொள்ளலாம் என்று வைத்துவிடுவோம். அப்படி புத்தகங்களைச் சேமிப்பவர் நிறைய.   ராமச்சந்திரன் அப்படிப்பட்டவரல்ல. அவரிடம் இருக்கும் எல்லாப் புத்தகங்களையும் படித்தவர். நாம் கேள்வி கேட்டால் உடனே புத்தகத்தைக் கண்டுபிடித்து எடுத்து சான்றுகளைக் காட்டிவிடுவார். அத்தகைய அறிவாளியிடம் ஓர் குணம். அவருக்கு ஓர் அரசியல்வாதியைப் பிடிக்காது. அவர் பேச ஆம்பித்தால் 10 நிமிடங்களில் 7 நிமிடங்கள் அந்த அரசியல்வாதியை வசைபாடுவார்.எனக்கோ நேரம் முக்கியம். சிலரைப் பார்க்கும் பொழுது ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான் இருப்பேன். ராமச்சந்திரனிடம் போகும் பொழுது மட்டும் கணக்கு பார்க்க மாட்டேன். சொல்லிப் பார்த்தேன். அவர் மாறவில்லை. ஒரு குயர் நோட்டுப் புத்தகம் வாங்கி அந்த அரசியல்வாதியைப் பற்றி ராமச்சந்திரன் கூறிய வசைபாட்டுக்களைப் பதிவு செய்து கையொப்ப மிட்டேன். அவரைப் பார்க்கும் பொழுது அதனை எடுத்துக் கொண்டு போய் “ நாம் இதைப் பற்றி மட்டும் பேச வேண்டாம். உங்கள் வசையை ஏற்றுக் கொண்டு கையொப்ப மிட்டிருக்கின்றேன். நாம் நம் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கலாமே “ என்றேன். அவர் சிரித்துவிட்டார். அதன் பிறகு பேசும் பொழுது வசை ஆரம்பித்தால் இதனைக் காட்டினால் போதும் சிரித்துக் கொண்டே பேசமாட்டார். இதுதான் மனித இயல்பு.

வெறுப்பு மனத்தில் நுழைந்துவிட்டால் அது வேரூன்றிவிடும். நம் அறிவைக்கூட அழுத்திவிடும். இதனால் சாதிப்பது என்ன? பேசுவதற்கும் எண்ணுவதற்கும் நல்லவைகள் நிறைய இருக்க மனத்தை வெறுப்பில் அரிக்க விடுவானேன்?

வெட்டிப் பேச்சில் மனிதன் வீணாக்கும் வினாடிகள் நிறைய.

குறையில்லாதவர்கள் யாரும் கிடையாது. அளவில்தான் மாறுபாடு. தவறிழைக்காதவர்களும் கிடையாது. ஆனால் அதையே வழக்கமாகி பழக்கமாகிப் போய் குற்றங்கள் செய்பவர்களாக இருக்கும் பொழுதுதான் கண்டனம் செய்ய வேண்டிவருகின்றது. அப்பொழுதும் பயனற்ற பேச்சும் செயலும்  நாமும் செய்தால் நாமும் அவர்களில் ஒருவராகி விடுவோம்.

இப்பகுதியில் பல எடுத்துக்காட்டுகள் வருகின்றன. சிலரிடம் பேசும்பொழுது நான் எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிடங்கள். மற்றும் சிலரிடம் நேரம் கூடுதலாக இருக்கும். அலுவலகத்தில் மட்டும் உட்கார்ந்து செய்யும் பணியல்ல என்னுடையது. எனவே சந்திப்புகளும் போராட்டங்களும் செய்ய முடிந்தது. முழு வெற்றி கிடைத்ததும் உண்டு. ஓரளவுதான் செய்ய முடிந்தவைகளூம். இருந்தன. என்ன முயன்றும் தோல்வி கண்டதும் உண்டு. வாழ்க்கையில் அலைந்து அழிந்து போனவனிடம் உறங்கிக் கொண்டிருந்த “ மனிதம் “ ஒரு நாளாவது விழிப்படைய முயற்சி செய்ததும் உண்டு.. காட்சிகளைக் காண்போம். . எழுதும் பொழுது உண்மைப் பெயர்களை எழுத வில்லை.

சண்முகம் ஓர் அரசியல்வாதி. மனைவியை இழந்தவர். மறுமணம் செய்து கொள்ள வில்லை. குடிப்பழக்கம் உண்டு. சில சமயங்களில் பெண்கள் தொடர்பும் உண்டு. கட்டாயப்படுத்துவதில்லை. ஒரு தொழில் வைத்திருந்தார். தொழில் மையத்தின் அருகிலேயே தனக்கு ஓர் அறையைக் கட்டிக் கொண்டு அதைத் தங்கும் இடமாக வைத்திருந்தார். கட்சியில் ஓர் முரட்டுப் பேர்வழி என்று பெயர் எடுத்தவர். அவரை நான் “அண்ணா” என்றுதான் அழைப்பேன். அவருடைய குறைகளைக் கண்டு பயந்ததில்லை. அவர் மீது எனக்குப் பரிவு உண்டு.

ஒரு நாள் அவர் என்னைத் தேடி வந்தார். வரும் பொழுது அவருடன் ஒரு பெண்ணும் வந்தாள் பெயர் ஆண்டாள். அவளையும் எனக்குத் தெரியும். அவருடைய கட்சிக்காரி. அரசியலில் சேர்ந்தது மட்டுமல்ல பலரால் கெடுக்கப்பட்டவளும் கூட. ஆனால் மற்ற குணங்களில் நல்லவள். அவள் எடுத்துக் கொண்ட அரசியலும் சூழ்நிலையும் அவளைக் கெடுத்துவிட்டது. சண்முகமும் ஆண்டாளும் சேர்ந்து வந்தது வியப்பைக் கொடுத்தது. அதிலும் அவர் மேலும் சொன்ன செய்தி என் வியப்பை அதிகரித்தது.

சண்முகம் ஆண்டாளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். என் அபிப்பிராயம் கேட்க வந்திருக்கின்றார். நான் அவருக்குத் தங்கையாம் அவருக்கு இருக்கும் ஒரே உறவாம்.

அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். மேலும் இருவருக்கும் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்டு விட்ட கோணல் தெரியும். திருமணம் செய்து கொண்டால் அந்த மண வாழ்க்கை நீடிக்குமா?

“அண்ணா, திருமணம்  செய்து கொள்வது பெரிசில்லே. அது மணமா இருக்கணும். கட்டுப்பாடு வேணும். கடைசிவரை சேர்ந்து வாழணும். அது பற்றி இருவரும் பேசினீங்களா? உங்கள் இருவருக்கும் வயது வித்தியாசமும் அதிகம்…”

இதைச் சொன்னவுடன் ஆண்டாள் குறுக்கிட்டாள்.

“அக்கா ( என்னை அவள் அக்கா என்றுதான் கூப்பிடுவாள் ). என் வாழ்க்கையில் நடக்கக் கூடாதது நடந்து போச்சு. ஒரு நாளாவது ஒருத்தனைக் கட்டிக்கிட்டு கவுரவமா வாழணும்னு ஆசை. எங்க இரண்டு பேருக்கும் ஒருத்தரைப் பத்தி ஒருவருக்குத் தெரியும். நிச்சயம் பிரிய மாட்டோம்.”

நான் சில வினாடிகள் யோசித்தேன் மீண்டும் பேசினேன்

“ஒரு வாரம் தரேன். மீண்டும் நல்லா யோசிச்சுக்கிட்டு வாங்க. இரண்டு பேர்களும் கல்யாணத்துக்கு அப்புறம் தப்பு செய்யக் கூடாது. ஒற்றுமையா வாழணும். பிரியக் கூடாது. உங்கள் இருவராலும் கட்டுப் பாடாக இருக்க முடியுமான்னு மீண்டும் யோசிங்க. இது வரை பேசியிருப்பீங்க. இன்னொரு முறையும் யோசிங்க. அவசரம் வேண்டாம்”

உடனே சண்முகம்தான் பேசினார்.

“தங்கச்சி சொல்றது சரி. ஒருவாரம் கழிச்சு வந்து பார்க்கலாம்”

என் பேச்சிற்கு மதிப்பளித்து இருவரும் சென்றனர். அவர்கள் நடந்து கொண்ட முறையில் நிதானம் தெரிந்தது. மீண்டும் வந்தார்கள். மகிழ்ச்சியுடன் அவர்களை வாழ்த்தினேன். இருவருக்கும் திருமணம் ஆயிற்று. கட்சியில் வேடிக்கை பார்த்தனர். ஆனால் அவர்கள் குடும்பம் நடத்தியவிதம் கண்டு எல்லோருக்கும் ஆச்சரியம். இல்லறத்தின் அருமை தெரிந்து சேர்ந்தவர்கள்.

ஆண்டாள் அரசியலில் இருந்தவளா என்று கேட்கும் அளவில் அடக்கமான பெண்ணாக இருந்து குடும்பத்தை நடத்தினாள். இருவருக்கும் இரு குழந்தைகள் பிறந்தனர். அவ்வப்பொழுது அவர்கள் வீட்டிற்குச் செல்வேன். ஒரு முறை அவர் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்ப தாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. உடனே நான் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

அண்ணன் படுக்கையில் கிடந்தார். என்னைப் பார்க்கவும் அவர் கண்களில் கண்ணீர். அவர் அருகில் உட்கார்ந்து அவர் கைகளைப் பிடித்துத் தடவிக்கொடுத்தேன். ஆண்டாளும் அழுது கொண்டிருந்தாள். அண்ணன்தான் பேசினார்.

“ தங்கச்சி, பாசம்னா என்னன்னு தெரியாமல் இருந்தேன். அண்ணேன்னு நீ கூப்பிட்டு பழக ஆரம்பிக்கவும் முதல் முறையா பாசம்னா என்னன்னு புரிஞ்சுது. அப்புறம்தான் எனக்கும் குடும்பம் வேணும்னு ஆசை வந்தது. நான் கெட்டுப் போனவன். என்னைப்போல ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கணும்னு நினைச்சேன். ஆண்டாள் கிடைச்சா. அவள் மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு நல்ல வாழ்க்கை. உன்னாலேதான் அந்த எண்ணமே வந்துச்சு. எனக்கு ஒண்ணு ஆனாலும் ஆண்டாளை, உங்க அண்ணியைக் கவனிச்சுக்கோ”

ஆண்டாள் சத்தம் போட்டு அழுதுவிட்டாள்.

“இரண்டு பேர்களும் உணர்ச்சி வசப்படாதீங்க. அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது. இன்னும் கொஞ்ச நாட்கள் இருப்பீங்க. என் மனசு சொல்லுது”

இப்பொழுது அவர்களுக்கு வேண்டியது நம்பிக்கை. அவர்களுக்குப் பிரியமானவர்கள் மூலம் அந்த சொல் வர வேண்டும். அண்ணன் அம்முறை பிழைத்து எழுந்துவிட்டார். அதன் பின்னரும் சில ஆண்டுகள் இருந்தார். அதன் பின்னரே இறந்தார். ஆண்டாள் தன் குழந்தைகளுடன் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

நான் எந்த அறிவுரையும் கூறவில்லை. பாசமாகக் கூப்பிட்டதற்கு, அவரை மதித்துப் பழகியதற்கு இந்தப் பலன். நாம் எல்லோரிடமும் அன்பைச் செலுத்துவதில் என்ன குறைந்துவிடும். அன்புக்காக ஏங்கும் இதயங்கள் நிறைய இருக்கின்றன.

இன்னொருவர். பெயர் கண்ணன். ஓர் பேராசைக்காரர். பெண்பித்தர். குடிகாரர். அவர் கண்களில் நான் பட்டுவிட்டேன். தவறாகப் பழக எண்ணி என்னுடன் பேச ஆரம்பித்தார். அவர் திருந்த மாட்டார் என்று தெரியும். சுடு சொல்லால் சுட்டுவிட்டுத் திரும்பினேன். அதற்குள் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு  சந்திக்க முயன்று பார்த்தார். அப்பொழுது மீண்டும் என்னிடம் சொல்லடி பட்டார். இதுவரை அவரை எதிர்த்தவர்கள் இல்லை. அவருக்குப் புதிய அனுபவம். தற்செயலாக மீண்டும் சந்தித்தோம்.

என் வாழ்க்கையில் உன்னை முன்னாலேயே சந்தித்திருக்க வேண்டும்.

அன்று அவர் பார்வையில் ஓர் வேதனை கண்டேன். என் கோபம் தணிந்தது.

பொதுவாக ஆண்களிடம் ஓர் இயல்பு. பயந்தவர்களையும் பதுங்குகின்றவர்களையும் விரட்டிப் பிடிப்பதில் இன்பம். முரட்டு மனிதர்களிடம் மோதிப் பார்ப்பர். அப்படியும் படியாதவர்களை வியப்புடன் பார்க்க ஆரம்பித்து விடுவர். எதிர்ப்பவர்களை வன்முறையால் அழிப்பவர்களும் உண்டு  இவ்விருவகைகளில் ஒன்றானார் கண்ணன்.

அவரிடம் குறைகள் இருப்பதைப்போல் புத்தி கூர்மை, ரசனை இன்னும் பல சிறப்புகள் உண்டு. அவரைச் சரியான வழியில் கூட்டிச் செல்லவோ, பரிந்து வழிபடுத்தவோ இதுவரை யாரும் அமைய வில்லை. அவளைப் பற்றி விசாரித்ததில் அவளைத் தெரிந்த எல்லோரும் அவள், குணம், திறமை எல்லாவற்றையும் கூறியிருக்கின்றார்கள் இப்பொழுது தன் குறைகளை உணர்ந்தார். சுட்ட சொற்களிலும் அர்த்தம் இருந்தது. தன்னிலை உணர்ந்ததால் வேதனை. தன்னை மாற்றிக் கொள்ளவும் முடியாது என்பதையும் அவர் உணர்வார். அதுவும் அவர் வேதனையை அதிகரித்தது. அவளை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்து கூப்பிட்டு அனுப்பினார். பேசத் தெரிந்தவனால் பேச முடியவில்லை. அவள் அவர் நிலையைப் புரிந்துகொண்டாள். அவள் பேசினாள்.

“ஒரு பெண்ணுடனாவது நல்ல நட்புடன் பழகிப் பாருங்கள். இலக்கிய நட்பு. முயற்சி செய்யுங்கள். நினைப்பதுவே இன்பம் என்பதை உணர்வீர்கள்” என்றேன்

அதன் பிறகு ஏற்பட்ட தற்செயல் சந்திப்புகளில் பேசவில்லை. ஆனால் பார்வையின் பரிமாற்றங்களில் ஓர் பரிவும் மரியாதையும் தென்பட்டதை உணர்ந்தேன். அதுமட்டுமல்ல. பார்வைகளின் பரிவர்த்தனையில் உரையாடவும் முடிந்தது.

ஒரு நாள் கூப்பிட்டனுப்பினார். அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் முகம் வாடியிருந்தது. ஒரு பெரிய சோதனை வளையத்தில் இருந்தது தெரியும். என்னை உட்காரச் சொன்னார். ஒன்றும் பேசவில்லை. நான்தான் பேசினேன்

என்ன விஷயமாகக் கூப்பிட்டனுப்பினீர்கள்?

என் அம்மாவின் நினைவு வந்தது. உடனே உன்னைப் பார்க்கணும்னு தோன்றியது.

அவருக்குள் “மனிதம் “ இன்னும் செத்துவிடவில்லை என்பதைப் புரிந்து மகிழ்ச்சி

பக்கத்தில் சென்று மெதுவாகத் தட்டிக் கொடுத்தேன்.

“உங்கள் மனம் துன்பப்படும் பொழுது நான் அருகில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நட்புக்கு வலிமை அதிகம். அந்த நினைவு உங்களுக்கு ஆறுதலும் அமைதியையும் கொடுக்கும். செய்த தவறுகள் தாக்கத்தான் செய்யும். ஆனால் அந்த நேரத்தில் அன்பு உங்களுக்கு ஆறுதல் தரும். “

நாங்கள் அதன்பின் பேசவில்லை. அவரை இகழ்ந்து பேசியவர்களுக்கும் உதவிகள் செய்யும் அளவு அவருக்குள் ஓர் மாற்றம். உதவிய பெற்றவர்களே என்னிடம் கூறியது.

தவறுகள் செய்யாத மனிதன் இல்லை. ஆனால் அதுவே வழக்கமாகி பழக்கமும் ஆகிவிட்டால் மாறுவது கடினம். ஆனாலும் ஒரு காலக்கட்டத்திலாவது அவன் தன் தவறை உணர வேண்டும். அப்பொழுது சில நல்ல காரியங்கள் செய்யலாம். மரண காலத்தில் கொஞ்சமாவது அமைதி கிடைக்கும். கண்ணனுக்கும் அந்த அளவில் சிறிது அமைதி கிடைக்கும்.

அடுத்து ஓர் அனுபவம்.

காளியம்மாள் என் துறையில் பணிக்குச் சேர்ந்தாள். கெட்டிக்காரப் பெண். பரீட்சைக்காகப் படிப்பது என்றில்லை, பல புத்தகங்கள் படிக்கும் வழக்கம் அவளிடம் உண்டு. அவள் வட்டாரத் திற்குப் பயணம் செல்லும் காலத்தில் பணி முடிந்த பிறகு அவள் என்னுடன் பல விஷயங்கள் பேசுவாள். நான் அவளுடன் உரையாடுவேன். அவளுக்கு என் மீது தனி மரியாதை.

அவள் வாழ்வில் காதல் புகுந்தது. அவ்வளவுதான் போராட்டம் ஆரம்பித்தது. அவள் தந்தை என்னிடம் வந்து மிரட்டினார். அவள் சாதிவிட்டு ஒருவனுடன் சென்றால் என்னைக் குத்திக் கொன்று விடுவதாகக் கூறினார். எங்கள் வேலையில் எப்படியெல்லாம் தாக்குதல் வருகின்றது என்று பாருங்கள். அவளை அவளின் சொந்த ஊருக்கு மாற்ற சிபாரிசு செய்தேன். அவள் மாறுதலாகிப் போகும் பொழுது என்னிடம் கத்திவிட்டுப் போனாள். அங்கு போனவுடன் சொந்தத்தில் அதே சாதியில் ஒருவனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டார் அவள் அப்பா.

காளியம்மாள் குடும்பத்தில் தினமும் சண்டை. கத்துகின்றவள் காளியம்மாள்தான். மீண்டும் அவளுக்குச் சென்னை அருகில் மாற்றலாகியது. சண்டையும் தொடர்ந்தது. அவனை அடிக்கவும் ஆரம்பித்தாள். அவனோ பொறுமைசாலி. முடிந்தமட்டும் மவுனம் காத்தான். இதற்கிடையில் அவள் இன்னொருவருடன் பழக ஆரம்பித்தாள். அவர் ஓர் போலீஸ் அதிகாரி. மிகவும் நல்லவர். மணமாகாதவர். காளியம்மாள் தன் கணவரைவிட்டு அவருடன் வாழ ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய கணவரும் விட்டால் போதும் என்று ஒதுங்கி வாழ ஆரம்பித்தார்.

காளியம்மாளா என்று கேட்கும் அளவில் குடும்பத்தில் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ ஆரம்பித்தாள். ஆனாலும் அவளுடைய கோபக் குணம் பணியாற்றும் களத்தில் காட்டினாள். அங்கே எல்லோருடனும் சண்டை. வீட்டில் வேலை பார்த்த பெண்ணை அடித்துவிட்டாள். புகார் அலுவலகத்திற்கு வந்தது. யாரும் சாட்சி சொல்ல வில்லை. புகார் நிற்க வில்லை. மேலதிகாரி களிடமும் மரியாதையில்லை. துறைக்கு அவள் தலைவலியாக இருந்தாள். என்னிடம் ஏதாவது செய்யச் சொன்னார்கள்.

நான் காளியம்மாளைக் கூப்பிட்டனுப்பினேன். இப்பொழுதும் அவளுக்கு என் மீது இருந்த மதிப்பு போகவில்லை.இப்பொழுது அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டாள். முதலில் அவள் கணவர் பற்றி அதாவது அந்த போலீஸ் அதிகாரிபற்றி கேட்டேன். அவருக்கு இப்பொழுது பதவி உயர்ந்து நல்ல நிலையில் இருந்தார். அவளை ஒரு குறை சொல்ல மாட்டார். முறைப்படி மணமாகவில்லை. ஆயினும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். அவள் வீட்டிற்குக் கூப்பிட்டாள் போனேன். ஒரு நாள் யதார்த்தமாகப் பேசுவது போல் சொன்னேன். இந்த வேலையைவிட்டு வீட்டில் இருந்து விடும்படி கூறினேன். அவள் கெட்டிக்காரியானாலும் யாருடனும் ஒத்துப் போக முடியாத குறையை அவள் கோப்படாத அளவில் கூறிவிட்டு கணவர் கவுரவம் காப்பாற்றவாவது வேலையை விட்டு விடும்படி சொன்னேன். அவளும் யோசிப்பதாகக் கூறினாள். ஒரு நாள் ராஜினாமாக் கடிதம் எழுதிக் கொண்டுவந்து கொடுத்தாள். அவள் வேண்டியது ஒன்றுதான். அவள் வேலையை விட்டாலும் அவள் வீட்டிற்கு நான் அடிக்கடி வர வேண்டும் என்றுதான். அவளையும் என் வீட்டிற்கு அழைத்தேன். காளியம்மாளின் ராஜினாமாக் கடிதம் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவள் வேண்டுகோளின்படி நான் அவள் வீட்டிற்கும் அவள் என் வீட்டிற்கும் வருவதும் தொடர்ந்தது. என் தாயார் அவளைப் புகழ்ந்தார்கள்.

நாடகத்தில் ஒருவன் தொட்டுவிட்டதால் என் கற்பு போய்விட்டது என்று கத்தி அழுத அம்மா இன்று காளியம்மாளைப் புகழ்ந்தார்கள். அவர்கள் சொன்ன காரணம்.

பிடிக்காதவனுடன் அவளால் வாழ முடியவில்லை. இன்று பிடித்தவனுடன் கவுரவமாக வாழ்கின்றாள். கெட்டு அழியவில்லையே.

காலங்கள்  புதுப்புது கருத்துகளையும் தோற்றுவிக்கின்றன.

தன் கணவன் என்று நினைத்துத்தான் அகலிகை இந்திரனுடன் கூடினாள். அவளை ஏற்றுக் கொள்ளுமபடி அவள் கணவரிடம் கூறியது ஶ்ரீராமன்.

இன்னொரு எடுத்துக்காட்டு.

என் துறையில் வேலை பார்த்த பெண்மணி கமலினி. காதல் திருமணம். ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டு அவன் பிரிந்து சென்றுவிட்டான். ஏற்கனவே அவள் சிறுவயதில் தந்தை இறந்திருந்தார். மகளின் சோகம் கண்ட தாயும் மரித்துவிட்டாள். அவளை மறுமணம் செய்து கொள்ள பலர் அறிவுரை கூறினர். ஆனால் அவளுக்கு அதில் உடன்பாடில்லை. அவள் சொன்ன காரணம்:

“வருகின்றவனும் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்வானோ? முதல் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டாமல் இருப்பானா? மேல் நாடுகளில் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் இது வழக்கமாகி விடவில்லையே!. அவனுக்குக் குழந்தை பிறந்துவிட்டால் இந்தக் குழந்தையை எப்படி நடத்துவானோ? இந்தக் குழந்தை என்ன தவறு செய்தது? எனக்கு மறுமணம் வேண்டாம்”

அவள் சிறுவயது முதல் பழகிய நண்பன் ராஜன். மிகவும் நல்லவன். அவனுக்குத் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தகப்பன். அவன் மனைவி உமாவும் நல்ல பெண். அவர்கள் சென்னைக்கு வரவும். கமலினி குடியிருந்த குரோம்பேட்டையிலியே வீடு பார்த்து குடிவந்தார்கள். ராஜனின் குடும்பத்தின் உதவி அவளுக்குப் பல வகையிலும் கிட்டியது. கமலினி குழந்தைக்கு இன்னொரு தாய் கிடைத்து விட்டது. ராஜனின் அன்பு அவளுக்கு சமாதானமாக இருந்தது. அவள் தனிமையின் ஏக்கம் போகவும் ஓர் தவறு செய்யத் தன்னை மாற்றிக் கொண்டாள். எப்பொழுதாவதுதான் அந்தத் தவறைச் செய்தாள். அவள் விருப்பம் தெரிந்து அந்த தவறுக்குத் துணை நின்றவன் அவள் தோழன் ராஜன்தான். அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒரு காலக் கட்டத்தில் அந்தத் தவறையும் நிறுத்திக் கொண்டாள். ராஜன் எப்பொழுதும் போல் அவள் குடும்பத்திற்கு உதவி செய்தான். இருவரும் யாரையும் பாதிக்காத அளவில் பழகி, பின்னர் அப்பழக்கத்தையும் விட்டனர். அவள் மகனும் படித்து முடித்து பெரிய உத்தியோகம் கிடைக்கவும் முதல் மரியாதை ராஜனுக்குச் செலுத்தினான். கமலினி ஓய்வு பெறும் முன்னர் மகனுக்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டாள். அவள் ஓய்வு பெற்ற பின்னர் கமலினியே என்னிடம் மனம்விட்டுப் பேசி சொன்ன தகவல்கள் இவைகள். கமலினியைக் குற்றவாளியாக நினைக்க முடியவில்லை. யாரும் பாதிக்கபடாத அளவில் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தித் தன் கடமைகளையும் முடித்திருந்தாள்.

மனிதன் விதித்தது கற்பு. அதுவும் காரணத்துடன். அவள் காரணத்தைத் தாண்டவில்லை. மகனுக்கு நல்ல அன்புத் தாயாக இருந்து கடமையை நிறைவேற்றினாள்

சேலத்தில் நான் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையாளர் மன்றம் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன். இதன் தலைவராக இருந்தவர் டாக்டர் சூடாமணி..(பின்னால் இவர் அரசியலில் சேர்ந்து சேலம் நகராட்சிக்குத் தலைவரானார் )  இந்த மன்றத்தில் சில குறிப்பிட்ட தொழில்களி லிருந்து ஒருவர் என்று தேர்ந்தெடுத்து அவர்களுடன் கல்லூரி மாணவி ஒருத்தி, மாணவன் ஒருவன் இருவரையும் சேர்த்திருந்தோம். சமுதாயப் பிரச்சனைகளை அலசுவோம். இதன் சார்பில் மாவட்ட அளவில் மகளிர் மாநாடு ஒன்று நடத்தினோம். கேள்விகள் தயாரிக்கப்பட்டு, சில படித்த பெண்களைக் அழைத்துப் பயிற்சி கொடுத்து விவாதம் நடத்த வேண்டிய முறைகளையும் கூறி, தீர்மானங்களையும் பதியும்படி சொல்லியிருந்தோம். ஒரு கிராமத்துப் பெண்மணியின் கூற்றைப் பார்க்கலாம்.

கிராமத்தில் ஒரு பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான். அந்தப் பெண்ணை என்ன

செய்யலாம்?

கிராமத்துப் பெண்மணிகள் கூறிய பதில் என்ன தெரியுமா?

ஊரே பொறுப்பு எடுத்துக் கொண்டு எல்லாம் தெரிந்து ஏற்றுக் கொள்கின்றவனுக்குச் சீராகத் தொழில் ஏற்படுத்தி கொடுத்து வாழவைக்க வேண்டும்.

“ஏன்” என்று கேட்டதற்கு அப்படியே விட்டுவிட்டால் ஒரு நாள் என் வீட்டு ஆம்புள்ளையும் அங்கே போவான். அவளா தப்பு செய்யல்லே. இந்த ஊர்க்காரனா அல்லது வெளியூர் ஆசாமியான்னும் தெரியல்லே. இருட்டுலே நடந்திருக்கு. அந்தப் பொண்ணுக்கு ஏன் தண்டனை தரணும் ?”

இந்த மாநாடு நடந்தது 1977 ஆண்டில்.

எந்த ஒரு பிரச்சனையையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுதல் கூடாது. சமுதாய விதிப்படி கமலினி செய்தது தவறாக இருக்கலாம். ஆனால் குற்றமில்லை. அவள் தன் மகனைக் காப்பாற்றுவதற்கு முதலிடம் தந்திருந்தாள். தடுமாறும் பொழுது விழாமல் இருக்கத்தான் ராஜன் உதவி செய்தான். அவள் முற்றிலும் முடமாக வில்லை. காலத்திறகும் அவன் ஊன்று கோலாக இருக்கவில்லை. ஓர் எல்லைக் கோட்டைக் போட்டுக் கொண்டு அதனை மீறாமல் ,யாரும் மனத்தளவில் கூட காயப்பட்டு விடாமல் நடந்து கொண்டனர்.

சில நேரங்களில் பொய்மையும் வாய்மையாகலாம் என்பதற்கேற்ப வாழ்வியலில் சில தடுமாற்றங் களால் விதிகளை மீறுதலும் உண்டு. ஆனால் அதையும் ஓர் விதியாகச் சேர்த்தல் மட்டும் கூடாது.

வாழ்க்கையில் மனம் முக்கிய இடத்தில் இருக்கின்றது. ஆழ்மனத்தில் அன்பு வற்றாமல் சுரக்க வேண்டும். மனிதன் யானையைக் கூட அடக்கிவிடுகின்றான். ஆனால் அவன் மனத்தை மட்டும் அலைய விடுகின்றான். அன்பு மனம்தான் நிம்மதியைக் கொடுக்கும். அன்புதான் மற்றவர்களையும் உன்வயப்படுத்தும். அன்பாக இரு. அன்பாகப்பேசு. அன்பே இறைவன்.

ஆண்  – பெண் உறவுகள், தாம்பத்தியம் போன்ற அந்தரங்கச் செய்திகளையும் ஓரளவு எழுதி விட்டேன். இனி சிறுவர்கள், அவர்கள் கல்வி பற்றி அடுத்துப் பார்க்கலாம்.

“இவ்வுலகம் ஒரு பெரிய பள்ளிக்கூடம். இது உன் படிப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. புத்தியுடன் நடந்து கொள். கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொள். சரளமான, அன்பான சுபாவம் கொள். பிறர்க்குத் தக்கபடியும் நடக்க முயற்சி செய். மனோதிடத்துடனிரு. ஒரு பொழுதும் நம்பிக்கை இழக்காதே “

சுவாமி  சிவானந்த மகரிஷி

[தொடரும்]

புகைபடத்திற்கு நன்றி.

 

 

Series Navigationவிஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டிமச்சம்

6 Comments

  1. Avatar ஜெயஸ்ரீ ஷங்கர்.

    அன்பு சீதாம்மா..

    ///இல்லறத்தின் அருமை தெரிந்து சேர்ந்தவர்கள்.
    நட்புக்கு வலிமை அதிகம்.
    வாழ்க்கையில் மனம் முக்கிய இடத்தில் இருக்கின்றது
    காலங்கள் புதுப்புது கருத்துகளையும் தோற்றுவிக்கின்றன
    அன்பு மனம்தான் நிம்மதியைக் கொடுக்கும். ///

    அன்பான உங்கள் மனம் உணர்வு பூர்வமாக சொல்லும் இந்த வார்த்தைகளுக்குத்
    தான் கட்டுரையில் கனம் அதிகம். எந்தக் காலத்துக்கும், ஒவ்வொருவரும்
    ஆண் பெண் பேதமின்றி ஏற்கும் படியான உங்கள் எழுத்து சொல்லித் தருவது ஏராளம்.

    அன்போடு
    ஜெயா

    • அன்பு ஜெயா
      அழைக்கும் பொழுதே “ அன்பு “ என்ற சொல்லைச் சேர்க்கின்றோம். அன்புக்குள்ள வலிமை வேறு எதற்கும் கிடையாது. அன்பு ஓர் மாபெரும் சக்தி. மனிதன் அதை உணராமல் மனத்தில் கசப்பையும் வெறுப்பையும் சுமந்து வேதனைக்குள்ளாகின்றான். அன்பே சிவம் என்று அன்பையே கடவுளாகச் சொல்கின்றோம். வாழ்வியலில் முக்கிய பங்கு வகிப்பது மனம். அங்கு குடியேற்ற வேண்டியது அன்பைத்தான். அதனால்தான் அடிக்கடி அன்பு பர்றி எழுதுகின்றேன்.
      நன்றி ஜெயா
      சீதாம்மா

  2. Avatar puthiyamaadhavi

    சில நேரங்களில் பொய்மையும் வாய்மையாகலாம் என்பதற்கேற்ப வாழ்வியலில் சில தடுமாற்றங் களால் விதிகளை மீறுதலும் உண்டு. ஆனால் அதையும் ஓர் விதியாகச் சேர்த்தல் மட்டும் கூடாது.
    கருதது அருமை சீதாம்மா

    ராஜன் கமலினி கதைகள் எப்போதும் தொடர்கதைகள் தான்.
    அம்மா வந்தாள் கதையும் பள்ளிகொண்டபுரம் கதையும்
    நினைவுக்கு வந்தது. அவையும் கதையல்ல நிஜங்கள் தானே.

    கண்ணன் என்று நீங்கள் கற்பனையில் பெயர் கொடுத்திருப்பது
    இன்றும் நீஙகள் உங்கள் நட்புக்கு கொடுக்கும் மரியாதையாகவே ந்
    நினைக்கிறேன். வாழ்த்துகள்.

    • அன்பு மாதவி
      தொடர்ந்து நிங்கள் பார்த்து வருவதை நான் அறிவேன். நட்பைப்பற்றி பேசவும் வெளியில் வந்துவிட்டீர்கள். என் வாழ்க்கையில் நான் மதித்துப் போற்றிவருவது நட்பைத்தான். கண்ணனைப்பற்றி நீங்கள் குறிப்பிடவும் சிரித்துக் கொண்டேன். பல நண்பர்களைப்பற்றி முதலில் எழுதியிருந்தேன். பிறகு அதனை அனுப்பவில்லை. வேறு சிலரைப்பற்றி மட்டும் எழுதினேன். அப்பொழுது கூட கண்ணன் விடாமல் உடன் வந்துவிட்டான்.
      தவறுகள் சில சமயம் வழுக்கல்களைப் போன்றது. அது தொடர்ந்தால் குற்றம். உங்கள் பார்வை கூர்மையானது
      உங்கள் வருகைக்கு நன்றி
      சீதாம்மா

  3. Avatar R.Karthigesu

    சீதாம்மா,

    //ஒரு குயர் நோட்டுப் புத்தகம் வாங்கி அந்த அரசியல்வாதியைப் பற்றி ராமச்சந்திரன் கூறிய வசைபாட்டுக்களைப் பதிவு செய்து கையொப்ப மிட்டேன். அவரைப் பார்க்கும் பொழுது அதனை எடுத்துக் கொண்டு போய் “ நாம் இதைப் பற்றி மட்டும் பேச வேண்டாம். உங்கள் வசையை ஏற்றுக் கொண்டு கையொப்ப மிட்டிருக்கின்றேன். நாம் நம் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கலாமே “ என்றேன்//
    என்ன அற்புதமான உத்தி! அருமையாக அந்த மனிதரை வளைத்திருக்கிறீர்கள்.

    ‘ஒழுக்கம்’ என்பது சந்தர்ப்பங்களைச் சார்ந்தது (contextual) என்பது உங்கள் கட்டுரையால் உறுதிப்படுகிறது. விதிகளை நாம் கல்லின் மேல் எழுதிவைக்க முடியாது. காகிதத்தில் பென்சிலால் எழுதி அழித்து எழுதத் தயாராக இருக்க வேண்டும். நெகிழ்ந்து கொடுப்பதுதான் இயறகை விதி. உயிர் வாழ்தலில் வெற்றி பெறுதல் நெகிழ்ந்து கொடுப்பதில்தான் இருக்கிறது.

    உங்களிடம் வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி.

    அனபுடன்,

    ரெ.கா.

    • அன்பு கார்த்திகேசு அவர்களுக்கு
      உலகம் தோன்றிய காலம் முதல் நாம் ஒரே மாதிரியாக இல்லையே! எத்தனை மாற்றங்கள்!
      குடும்பம் அமைத்துக் கொண்டவுடன் விதிகளூம் வகுத்துக் கொண்டோம். ஆனால் மனம் என்பது ஆரம்பத்திலிருந்தே இருக்கின்றது. அதுதான் குரங்காட்டம் போடுகின்றது. முடிந்த மட்டும் ஊரையொட்டி வாழ முயல்கின்றோம். முடியாத பொழுது விழுகின்றோம்.
      நான் எழுத்தாளர் ஆகும் முன்னரே களப்பணியாளர். கற்பனைக்குக் கதை தேட வேண்டாம். உளவியல் படித்தவள். எனவே எல்லோரிடமும் என்னால் பழக முடிந்தது.
      தங்கள் வருகைக்கு நன்றி
      சீதாம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *