வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21

சீதாலட்சுமி

                            அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொல னாகப் பெறின்

 

இசையில் ஏழு ஸ்வரங்கள்

ஆனால் அது காட்டும் பரிமாணங்கள் எத்தனை எத்தனை !

இசை கற்றவரெல்லாம் சுயமாக ஸ்வரங்கள் அமைத்து ராகம் பாடிவிட முடிவ தில்லை. அது ஒரு சிலரால் மட்டுமே முடிகின்றது. இது சங்கீதத்தில் மட்டுமல்ல. சமூக நலப் பணிசெய்ய வந்தவரெல்லாம் பெரிதும் ஈடுபட்டு தொண்டு செய்ய முடிவதில்லை .அதனால் பலரின் விமர்சனங்களுக்கு இந்த பணி ஆளாக நேரிடுகின்றது.

எனக்கு நான் வாழ்ந்த சூழலால் சமுதாய அக்கறை தோன்றியது. நான் இறங்கிய பணிக்களத்திலும் ஆரம்ப காலங்களில் நான் கற்றவைகளை வைத்து என் திறமைகளைக் காட்டும் வாய்ப்பும் கிடைத்ததால் பணிக்களம் மகிழ்ச்சியாக அமைந்தது. சிலருக்கு மட்டும் வாய்ப்புகள் தானாக அமைகின்றது. எனக்குப் பயிற்சி தந்தவர்கள் மிகப் பெரியவர்கள். எனக்கு வழி காட்டிகள் மட்டுமல்ல, என்னுடன் பணிப்பயணத்தில் உடனிருந்தவர்களும் சிறந்தவர்கள்.  அவர்களில் இருவரைப் பற்றி எழுதப் போகின்றேன். நினைவுகளே நெஞ்சிலே ஓர் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றது

திருமதி சரோஜினி வரதப்பன்

இந்தப் பெயரைக் கணினியில் தேடலில் போட்டுவிட்டால் கிடைக்கும் தகவல்கள் கொஞ்சமல்ல. எனவே இப்பொழுது அவர்களைப் பற்றிய புள்ளி விபரங்கள் தருவதைவிட பணிக்களத்தில் அவர்கள் செயலாற்றும் முறைகளைக் காண்பது, வருங்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவைகளைச் சொல்லும் முன்னர் ஓரளவாவது அவர்களின் பின்புலம் தெரிந்துகொள்வது நல்லது.

ஓர் செல்வந்தர் வீட்டுப் பெண். அந்தக் கால சமுதாயக் கட்டுப்பாடுப் பிடிகளில் அக்குடும்பமும் அடங்கியதே.  அக்காலச் சூழல் பரபரப்பான காலம். விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் தந்தையும் உறவினர்களும் கலந்து கொண்டு பல முறை சிறைக்குச் சென்றனர். வீட்டு ஆண்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாமல் பெண்கள் தவிப்பார்கள். என் தந்தை வீட்டை விட்டுப் போய் ஐந்தாண்டுகள் கழித்துத்தான் வீடு திரும்பினார். அவர் உயிருடன் இருக்கின்றாரா என்று தெரியாது.  “அவர் இருப்பார் என்று தாலியைக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்” என்று சொல்லிக் கொண்டு என் தாயார் அழுவார்கள். பெண்களின் நிலை இப்படி என்றால் பிள்ளைகள் நடப்பதை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது திண்டாடுவர். திருடனைத் தேடிவந்தது போல் போலீஸ் திடீரென்று வீட்டுக்குள் வந்து வீட்டையே புரட்டிப் போடும் காட்சிகளைக் காணும் பிள்ளைகள்.

சிறுவயதில் சரோஜினி அம்மா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் அவர்கள் எடுத்துக் கொண்டது சேவைப்பணி, போராட்டக்காரர்கள் குடும்பங்களுக்குச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். அவரின் சமுதாயப்பணி அப்படித்தான் தொடங்கியது.  ஆண்களின்றி தவிக்கும் குடும்பங்களின் துயர் போக்க முடிந்த உதவிகளைச் செய்யலானார். தன்னைப் போன்ற சிறுமிகளையும் சேர்த்துக் கொண்டு பணி செய்தார். விளையாட்டிலும் வேடிக்கையிலும் பொழுது போக்கும் பருவத்திலகிருக்கும் சிறுமிகளை ஒருங்கிணக்கும் திறன் அம்மாவின் சிறு வயதிலேயே இருந்தது

(organizing skill , leadership quality )

வாசகர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். இந்தத் தொடர் யாருடைய புகழையும் பாராட்ட எழுதப்படவில்லை. இது ஓர் சமுதாய வரலாறு. சோதனைகள் வரும் பொழுது அவைகளைப் போக்குவது பற்றி எழுதும் பொழுது எப்படி சூழலைக் கையாளுகின்றார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். உதாரணமாக மூன்று வயது குழந்தை ஓர் ஊழியரின் அறியாமையால் சாவதை எழுதினேன். தொடர்ந்து வந்த பிரச்சனைகளையும் எழுதி எப்படி அதனை முடித்தேன் என்று எழுதினேன். அச்சூழலில் ஓர் பிரச்சனையைக் கையாளும் விதத்தைகாட்ட எழுதப்பட்டது. என் குணத்தைக் காட்டவோ, என் திறமையைச் சொல்லவோ எழுதவில்லை. சரியாகக் கையாளப் படவில்லை யென்றால் அந்தப் பிரச்சனை பல நகரச் சேரிகளில் பரவி பல உயிர்களைப் பலி வாங்கி இருக்கும். அங்கே அதிகாரம் செல்லுபடி யாகாது. நிர்வாகத் திறன் கொண்டு சீர் செய்ய வேண்டிய பிரச்சனை

(management skill) சரோஜினி அம்மாவைப்பற்றி சொல்லும் பொழுது அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் நமக்கு நிறைய படிப்பினைகள் கிடைக்கும்.

அவர்களால் கல்வியைத் தொடர முடியவில்லை. வயதான பின்னர் திறந்த வெளிக் கல்வி திட்டத்தில் பயின்று பட்டம் பெற்றார். அவரது எண்பது வயதில் முனைவர் பட்டமும் பெற்றார். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றவுடன் மிகுந்த மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் இந்தச் செய்தியை அவர்களே என்னிடம் கூறினார். பட்டதாரியான நானும் பணிக்குச் சேர்ந்த பிறகு முதுகலைக் கல்வி பல தலைப்புகள் படித்தேன். ஆனால் தேர்வு எழுத வில்லை. தெரிந்து கொள்ள வேண்டியவை புத்தகங்கள் படித்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும் கல்வித் திட்டத்தில் படித்தால் ஓர் ஒழுங்கிலே அந்தப் பொருளைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இதனை எழுதும் பொழுது மதிப்பிற்குரிய திரு. காமராஜ் அவர்கள் சொன்னது நினைவிற்கு வருகின்றது

“நாலு எழுத்து தெரிஞ்சாத்தான் உலகத்துலே என்ன நடக்குதுன்னு புரியும்”

பொருளில்லையேல் வாழ்க்கை கஷ்டப்படும் உண்மைதான் ஆனால் பொருளே வாழ்க்கையல்ல. நிறைய விஷயங்கள் புரிந்து கொள்ளாமல் மனிதன் தன்னை இழந்து கொண்டிருக்கின்றான். கற்றவனும் சிந்திப்பதில் அக்கறை காட்டாதது வருந்தத்தக்கது.

சரோஜினி அம்மா பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்தார். அகில இந்திய மாதர் சங்கத்தில் பல ஆண்டுகள் இருந்து அதன் தலைவியாகவும் இருந்தார். இப்பொழுதும் அவர்கள் அந்த அமைப்பின் பொறுப்புகளில் இருக்கின்றார். அடையாரில் அந்த நிறுவனம் இருக்கின்றது. ஆதரவற்ற பெண்களுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதுடன் பல பணிகளைச் செய்து வருகின்றது. திருமதி துர்காபாய் தேஷ்முக் அவர்கள் 1953 ல் மத்திய சமூக நல வாரியம் தொடங்கியவுடன் 1954 ஆண்டில் சென்னையில் தமிழ் நாடு சமூக நல வாரியம் தொடங்கப் பட்டது. ஆரம்பத்திலிருந்தே அம்மா அவர்கள் வாரியத்துப் பணிகளில் பொறுப்பு வகித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவியும் ஆனார்.

சமுதாயத்தில் காணும் பிரச்சனைகளைத் தீர்க்க பல நிறுவனங்கள் உள்ளன. நீண்ட பட்டியலே இருக்கின்றது. அம்மா அவர்கள் எல்லாவற்றிலும் பொறுப்புகளைத் தயங்காமல் ஏற்றுக் கொண்டார். கவுரத்திற்காக அவர் பதவிகளில் அமர வில்லை. ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர் உழைப்பைப் பார்க்கலாம்.

இதை எழுதி வரும்பொழுது வாசிப்பவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அவரது தந்தை பல ஆண்டுகள் அமைச்சர் பதவியிலும் பின்னர் முதல்வர் பதவியிலும்  இருந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்ற நினைப்பைத் தவறாகக் கருதமாட்டேன். அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு வெறும் “பதவி” என்ற பெருமைக்காக  இருக்கவில்லை. அவர் உழைப்பின் காரணமாகத்தான் தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்க முடிந்தது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் அவர்களைத் தெரியும். இந்தியா என்ற நாட்டை நேசிப்பவர். அன்று நான் புகழ்ந்தால் குறை சொல்லலாம். இன்று அவர்களும் நானும்  முதுமையில் ஒடுங்கிப் போய் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஓர் அரசியல்வாதியின் மகள் தான். அதிலும் முதல்வராக இருந்தவரின் மகள்தான். நமக்கு இப்பொழுது தெரியும். அரசியலில் அதிகாரத்தில் இருப்பவர்களின் வீட்டுப் பிள்ளைகளும் சுற்றி இருக்கும் நட்புகளும் எந்த அளவு நடக்கின்றார்கள் என்று தெரியும். நான் விளக்க வேண்டியதில்லை. ஆனால் இவர்கள் எளிமையுடன் இருந்தவர். இனிமையாக எல்லோரிடமும் பழகுவார். திறமைகளை மற்றவர்களிடம் கண்டால் அவர்களுக்கு உடன் வாய்ப்பு கொடுப்பார். திறமைகளை வளர்ப்பார். கொஞ்சம் தடுமாறுகின்றவர்களையும் வழி நடத்துவார்.

காந்திஜி சென்னையில் தங்கி இருந்த பொழுது அவரின் தேவைகளில் சிறு பணிகளை இவர் செய்திருக்கின்ரார். தினமும் அங்கே இருந்த காலத்தில் நடந்தவைகளை எங்களுடன் பகிர்ந்திருக்கின்றார்.

ஓர் சம்பவம் கூறுகின்றேன்

வட ஆற்காடு மாவட்டத்திற்கு கிராமங்களில் மகளிர் நலத்திட்டங்களைப் பார்வையிட வந்திருந்தார். ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்த பொழுது அதன் ஆணையாளரைப் பார்த்துப் பேச எண்ணினார். அந்த அலுவலர் வீட்டில் இருப்பதாகக் கூறினார்கள். வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றார்கள். அந்த வீடு ஒரு தோட்டத்தில் இருந்தது. வயல் வரப்பில் நாங்கள் இருவரும் நடந்து சென்றோம்.. அந்த அதிகாரியின் ஒப்புதலைப் பெற்றுத்தான் சென்றோம். வீட்டிற்குச் சென்ற பிறகும் சிறிது தாமதமாக அலுவலர் வந்தார். அவர் உடல் நலம் விசாரித்து அம்மா கண்ட பிரச்சனைகளை அவரிடம் கூறி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கொண்டார். அவருடைய அணுகலில் அதிகாரம், தற்பெருமை கிடையாது. அவர்களின் பேச்சில் நகைச் சுவை இருக்கும். என்னிடம் அது குறைவு.

ஓர் முதல்வரின் மகள். எந்த பந்தாவும் இல்லை. சாதாரணமாக பொது மக்களில் ஒருத்தி போல் நடந்து கொள்வதைப் பார்த்து எங்களைப் போன்றோருக்குப் படிப்பினைகள் நிறைய அவர்களிடம் காணலாம். என் கல்விச் சான்றிதழில் என் பிறந்த தேதி மூன்று வருடங்கள் அதிகமாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்தக் காலத்தில் அதன் முக்கியத்துவம் தெரிய வில்லை. 1958 இல் ஓய்வு பெற வேண்டிய நான் 1955 இல் ஓய்வு பெற்றேன். என் தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு முடமான நிலையில் இருந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு பங்களூர் போய்விட்டேன். எப்படியோ என் விலாசம் கண்டு பிடித்து அம்மா அவர்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார்கள்.

நான் வீட்டில் இருக்கக் கூடாதாம் சமுதாயப் பணிக்கு ஓய்வு கிடையாதாம். அவர்களிடம் உள்ள நிறுவனங்களின் பட்டியல் வைத்து எதில் வேண்டு மானாலும் வந்து சேர்ந்து கொள்ள அன்புக் கட்டளை யிட்டிருந்தார். திறமைகள் யாரிடம் இருந்தாலும் அது வீணாகக் கூடாது, சமுதாயத்திற்கு அதன் பயன் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த கவுரமும் பார்க்காமல் தன் எண்ணத்தை வெளிப்படுத்துவார். யாரிடம் பழகினாலும் எளிமையாக அன்புத் தாயாகப் பழகுவார். அதுதான் சமூக நலப்பணிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள். பொருத்தமாக  இருப்பவர்க்குத்தான் புகழ்ப்பாட்டு பாடுகின்றேன்.

இன்னொரு சம்பவமும் கூற விரும்புகின்றேன்.

1990 இல் பங்களூரில் தாயைக் கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. அரசியல் உலகில் உயர் நிலையில் இருந்த ஓர் பெண்ணையும் இன்னொரு அரசியல்வாதி ஆணையும் இணைத்துப் பேசியது இன்னொரு கட்சி.  என்னால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. அதே நேரத்தில் ஒரு பெண் அரசியல் கட்சியில் இருந்தால் அவளை கேவலமாகப் பேசுவதைக் கேட்க என் பெண்மனம் இடம் கொடுக்கவில்லை. என் தாயைக்.கவனிக்க ஒருவரை வைத்துவிட்டு சென்னைக்குச் சென்றேன். உடனே அம்மாவைப் பார்த்தேன். மயிலாப்பூரில் ஓர் கண்டனக் கூட்டம் போட்டோம். கூப்பிட்டவுடன் வந்தவர்கள் சரோஜினி அம்மா அங்கே கட்சி பிரச்சாரம் செய்யவில்லை. பேசிய அந்த அரசியல்வாதி சொந்த வாழ்க்கையில். அவர் ஒழுக்கம் காக்கவில்லை. கூட்டம் போட்ட பின்னரும் ஓர் மகளிர் மன்ற சார்பாக ஓர் கண்டனக் கடிதம் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டு அது பத்திரிகையின் முன் பக்கத்தில் வெளியானது. பெண்களுக்காக எக்காரியம் செய்தாலும் கூப்பிட்டவுடன் தயங்காமல் உடன் வருவார்கள் அம்மா.

செஞ்சுலுவைச் சங்கத்தின் தலைவியாக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்து வந்தார். சாதாரணமாக கவர்னரின் துணைவியார்தான் அதற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். ஒருமுறை கவர்னரின் துணைவியார் பொறுப்பை ஏற்க இயலாத நிலையைக் கூறவும் திருமதி சரோஜினி அம்மாளை அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டது. இங்கும் ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.

சமுதாயப் பணியில் பொறுப்பேற்பவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும். ஆட்சி மாற்றங்கள் வரும் பொழுது எல்லோருக்கும் மந்திரிப் பதவி கொடுக்க முடியாத நிலையில் வாரியப் பொறுப்புகளில் வைக்கின்றார்கள். அரசியலில் இருப்பதால் சமுதாய நலனில் அக்கறை இருக்காது என்று கூற மாட்டேன். ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்தான். ஆனால் விடுதலைப் போராட்ட காலங்களில் இருந்த அரசியலும் அதன் பின் இருக்கும் அரசியலையும் என்னால் ஒன்றாக நினைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி கூட தற்கால அரசியல் அமைப்பாகி விட்டது. ஆனால் என்றும் எக்கட்சியிலும் சமுதாயப் பணி செய்கின்ற திறமை உள்ளவர்கள் இருகின்றார்கள். எனவே எல்லாக் கட்சிகளுக்கும் இது பொதுவான வேண்டுகோள். வாரியங்களில் பொறுப்பு கொடுத்தாலும் அவர்கள் தகுந்தவர்களா என்று பார்த்து பதவிகள் கொடுக்கப்பட வேண்டும்.

மந்திரி பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் சிலரின் அக்கறையின்மையைப் பார்த்துவிட்டு இதனைக் கூறுகின்றேன்.

செஞ்சுலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் பலரும் அறிந்ததே. திடீர் விபத்துக்களில் மக்கள் பாதிக்கப்படும் பொழுது இந்த அமைப்பில் பயின்ற வர்கள் உடனே சென்று விரைவாக மீட்பு நடவடிக்கை எடுப்பார்கள். இங்கேயும் ஒரு தகவல் கூற விரும்புகின்றேன். காலச் சூழ்நிலையில் வர வர முதியோர்களை, படுக்கையில் கிடக்கும் நோயாளிகளை வீட்டில் வைத்துப் பராமரிக்கக் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களைக் கவனிக்க ஓரளவு படித்த பெண்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது செஞ்சுலுவைச் சங்கம். தேவைப்படுவோர் இங்கே விண்ணப்பித்தால் பயிற்சி பெற்றவர்களை அனுப்புவார்கள். மிகவும் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். மாதச் சம்பளம் கொடுக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களை வைத்தால் பல வேண்டாத செயல்கள் நடக்கலாம். நம்பிக்கையுள்ளவர்கள் வீட்டில் இருந்தால் கவலை இல்லை. இது போன்று மற்ற இடங்களிலும் பயிற்சி மையங்கள் தொடங்கி முதியோர்களை, நோயாளிகளைக் கவனிக்கலாம். முதியோர் இல்லத்தில் விடாமல் வீட்டில் வைத்திருப்போர்க்கு இந்த வசதி உள்ளது. முன்பு கூட்டுக் குடும்பம் இருந்தது. அது இப்பொழுது மாறிவிட்டது. மனநிலையும் மாறிவிட்டது. காலத்தையும் அனுசரிக்க வேண்டியுள்ளது.

பல ஆண்டுகள் வகித்த பதவியிலிருந்து அம்மா அவர்கள் ஓய்வு பெற்ற சூழல் மனத்தை உறுத்தும் நிகழ்வாக நடந்தது. அவர்களுக்கு வயதாகி விட்டது. நிச்சயம் ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். ஆனால் அதனைக் கவுரமாக செய்திருக்க வேண்டும். அம்மா அவர்கள் அலுவலகம் சென்ற பொழுது வாயில் காப்போன்தான் தகவல் கொடுத்தான்.

“அம்மா உங்களுக்குப் பதிலாக இன்னொருவர் வந்துவிட்டார்கள் அவர்கள் இப்பொழுது தான் தன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்”.

உள்ளே கூட நுழையாமல் வீடு திரும்பினார்கள். ஆமா அரசியல் விளையாட்டு

ஆன்மீகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள். மக்களுக்கு செய்யும் சேவைகள் இறைவனுக்குச் செய்யும் அர்ச்சனைப் பூக்கள் என்று நினைப்பவர்கள்.

திருமதி .சரோஜினி வரதப்பன் அவர்கள் பொறுப்பில் இப்பொழுதும் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இவர்களுடன் இப்பொழுது இருப்பவர் செல்வி பார்கவி தேவேந்திரா

பார்கவியை நான் கண்ட மதர் தெரசா என்று அடிக்கடி கூறுவேன். இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆந்திர நாட்டைச் சேர்ந்தவர்கள் சமுக நல வாரிய அலுவலகத்தில் செயலாளர் பொறுப்பில் பணி புரிந்தவர். இவரும் இவர் தங்கையும் ஶ்ரீராமகிருஷ்ணர் மடத்தைச் சேர்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

வாழ்க்கையில் எளிமையும் இனிமையும் கொண்டு வாழ்ந்து காட்டியவர்கள். கைத்தறி துணிதான் உடுத்துவார்கள். நகைகளோ, அலங்காரப் பொருட்களோ கிடையாது. உணவுப் பழக்கம் முதல் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வந்தவர்கள். பார்கவி சமூக நல வாரியத்தில் பணி என்றால் அவர் தங்கை ஓர் தனியார் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருந்தார்கள். நல்ல அழகி. திடீரென்று வேலையை விட்டுவிட்டார்கள். பூஜையும் தியானமும் வாழ்க்கை என்று வீட்டில் தவ வாழ்க்கையில் அமர்ந்து விட்டார்கள். ஆனால் பார்கவி இப்பொழுதும் பணி புரிகின்றார். அவர்களிட மிருந்து நான் கற்றவை நிறைய. பகுதி நேர ஊதியம் வாங்குகின்ற ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கும் துறை.  அலுவலத்தில்தான் எத்தனை பிரச்சனைகள் ! எத்தனை வம்புகள் ! சில சமயங்களில் என் மனம் சுருண்டுவிடும். உடனே இவர்கள் அறைக்குப் போவேன். எங்கள் அலுவலகத்தில் எல்லோரையும் பார்கவி அறிவார்கள். என் முகம் வாடி யிருப்பதைக் கண்டவுடன் புன்னகை முகத்துடன் சில வார்த்தைகள்தான் என் மனச் சுளுக்கை எடுத்துவிடும்.

தொண்டு நிறுவன்ஙகள் நடத்துபவர்கள் அனைவரும் பார்கவியை அறிவர். சமுதாயப் பணி செய்கின்றவர்கள் அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அதிகம். அவர்களை நான் ஏன் மதர் தெரசாவை ஒப்பிட்டு சொல்கின்றேன் என்பதற்கு ஓர் சிறு விளக்கம்.

எந்த மண்ணிலும் ஐரோப்பியர், குறிப்பாக பிரிட்டீஷார் கால்வைக்கும் பொழுது அவர்கள் நோக்கம் நாடு பிடிப்பதாயினும் சொல்வது வியாபார நோக்கத்தில் வந்ததாக ஆரம்பிப்பர்.  மக்களின் சேவை என்று கிறிஸ்துவ மதம் கால் ஊன்றும். அவர்களால் கல்வி மையங்களும் ஆஸ்பத்திரிகளும் வந்ததை மறுப்பதற்கில்லை. தூத்துக்குடியில் நான்கு ஆண்டுகள் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்தேன். அப்பொழுது பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றனர். தொழு நோய் உள்ளவர்களை எந்த அளவு அன்புடனும் அக்கறையுடனும் மேலை நாட்டு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் கவனித்தனர் என்பதைப் பார்த்தவள். எனவே மக்கள் சேவை அவர்களுக்குப் புதிதல்ல. ஆனால் அரசுப் பணியில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள் பார்கவி. அரசிலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம் ஆனால் சமுதாயப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். சரோஜினி அம்மாவுடன் இருந்து கொண்டு அனைத்து அமைப்புகளையும் கவனித்து வருகின்றார்கள். ஊதியம் வாங்காமல் உழைக்கின்றார்கள்.

ஒரு முறை நான் ஓர் ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன். அங்கே இந்த சகோதரிகள் வந்தார்கள். ஓர் ஏழைப் பெண்மணிக்கு சிகிச்சை வேண்டி கூட்டி வந்திருந்தார்கள். பார்கவி டாக்டரிடம் சென்ற பொழுது அவர்களின் தங்கை என்னிடம் குறை பட்டுக் கொண்டார்.

“எதுக்கு வேலை? வீட்டில் இருந்து பூஜையும் தியானமும் செய்து வாழ்க்கையை முடிக்கக் கூடாதா?” என்றார்கள்

உடனே அவர்களுக்கு நான் கொடுத்த பதில்.

“நீங்கள் செய்யும் பூஜை, தியானம் உங்கள் ஆன்மாவிற்காக. அவர்கள் செய்யும் பணி ஆண்டவனால் படைக்கப்பட்டு ஆதரவின்றி தவிக்கும் பொழுது அந்த உயிர்களைக் காப்பாற்றுவது. தனக்காகச் செய்யவில்லை. கடவுளின் பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். இறைவனுக்கு எது பிடிக்கும்? உங்கள் முயற்சியில் சுய நலம் கலந்திருக்கின்றது. அவர்களின் பணிகள் ஆண்டவனுக்கு, அவன் குழந்தைகளுக்கு செய்யும் சேவைகள். “என் கடன் பணி செய்வதே” என்ற அப்பரும் பாடல்கள் மட்டும் பாடிக் கொண்டிருக்காமல் செல்லும் கோயில்களை முடிந்த மட்டும் சுத்தப் படுத்திய வரலாறு எங்களிடையே உண்டு. உங்களை விட பார்க்கவிதான் கடவுளூக்கு இசைந்த பணி செய்கின்றார்கள்”

பார்க்கவியின் தங்கை திகைத்துப் போய் உட்கார்ந்துவிட்டார்கள். பார்க்கவியும் வந்துவிட்டதால் எங்கள் உரையாடல் நின்றது.

சகோதரிகள் இருவரும் இருந்த வீட்டை விற்று விட்டு அடையாரில் அகில இந்திய மாதர் சங்கம் நடத்திவரும் புனர் வாழ்வு இல்லத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருகின்றார்கள். இப்பொழுதும்  என்னை அங்கு வந்து தங்கி முடிந்த பணிகளைச் செய்யுமாறு அழைத்துக் கொண்டே இருக்கின் றார்கள். என் கால்களுக்கு மட்டும் வலுவிருந்தால் இப்பொழுது அங்குதான் இருப்பேன்.

நான் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றது மட்டுமல்ல பல ஆய்வுகளும் செய்திருக்கின்றேன். வரலாறு படித்தேன், அதிலும் ஆய்வுகள். படித்த பல பிரிவுகளில் நிறைய ஆய்வுகள் செய்திருந்தாலும் மனம் சமுதாயப் பணியில் தான் ஒன்றுகின்றது. ஒரு காலத்தில் நானும் ஒர் சிறுகதை எழுத்தாளர். 63 கதைகளுக்கு மேல் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன புத்தகங்களும் வெளியிட்டேன். ஆனால் எதிலும் எனக்கு மன நிறைவு கிடைக்கவில்லை. சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும் என்னால் முடிந்த மட்டும் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முயலும் பொழுது ஏற்படும் நிறைவு வேறு எவற்றிலும் எனக்கு கிடையாது.

“நீங்கள் வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும் பாடமாக எடுத்துக் கொள்பவராக இருந்தால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்று பொருள்.”

— சத்குரு ஜக்கி வாசுதேவ்

தொடரும்

படத்திற்கு நன்றி

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3முள்வெளி அத்தியாயம் -17