வாழ்விற்கு நெருக்கமான கதைகள்

This entry is part 9 of 17 in the series 5 ஜூன் 2022

 

 

பாவண்ணன்

தமிழ்ச்சூழலில் இலக்கிய மதிப்பீடுகளுக்கு வித்திட்டவர் க.நா.சு. இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, மிகமுக்கியமான படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய பொய்த்தேவு தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்று. க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் மொழிபெயர்ப்புகளும் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை வாசகர்கள் அவற்றை விரும்பிப் படிக்கிறார்கள். இச்சூழலில் க.நா.சு. எழுதி, எத்தொகுதியிலும் சேர்க்கப்படாத சிறுகதைகளைத் தேடியெடுத்து விசிறி என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாகக் கொண்டுவந்திருக்கிறார் ராணிதிலக். அவருடைய தேடலுக்கு தமிழ்வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது.

பதின்மூன்று சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதியில் கூஜா, திரும்பி வந்தான், தாயில்லாத குழந்தை, ரயிலில் சிரஞ்சீவி என நான்கு சிறுகதைகள் ரயில்பயணத்தின் பின்னணியில் அமைந்துள்ளன. . நான்கு கதைகளையும் நான்கு விதத்தில் க.நா.சு. எழுதியிருக்கிறார். ஒரு தருணத்தை முன்வைத்து ஒரு சிறுகதையை எழுதும் தொழில்நுட்பத்தை அறிய விருப்பமுள்ளவர்களுக்கு இவை உறுதியாக உதவக்கூடும்.

பழைய நினைவுகளும் சமகால நிகழ்வுகளும் இணைந்த சிறுகதை கூஜா. மீனா என்கிற மீனாட்சியும் ஸ்ரீநிவாசனும்தான் இச்சிறுகதையின் முக்கியமான பாத்திரங்கள். இருவரும் புதுமணத்தம்பதிகள். எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து ரயிலில் பயணம் செய்கிறார்கள். வழிப்பயணத்துக்காக நீர் நிரப்பிய கூஜாவைக் கொண்டுவந்திருக்கிறாள் மீனா. அந்தக் கூஜாவையே ஸ்ரீநிவாசன் உற்றுப் பார்க்கிறான். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கும் அந்தக் கூஜாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை கணவனிடம் பகிந்துகொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அந்தக் காலத்தில் அம்மா தன் வீட்டிலிருந்து சீதனமாகக் கொண்டுவந்த கூஜா என்றும் அந்தக் கைராசியான கூஜாவை தனக்கு சீதனமாகக் கொடுத்துவிட்டார் என்றும் வாய்க்கு வந்ததை அப்போதைக்குச் சொல்லி சமாளிக்கிறாள்.

அப்போது, ஸ்ரீநிவாசன் ஒரு கூஜாவோடு தொடர்புடைய தன் கடந்த கால நிகழ்ச்சியொன்றை அவளிடம் பகிர்ந்துகொள்கிறான். மாற்றாந்தாய்க் கொடுமைகளில் சிக்கி வளர்ந்த தன் இளமைக்காலத்தைப்பற்றி அவளிடம் கொஞ்சம்கொஞ்சமாக சொல்கிறான். ஒருமுறை அப்பாவோடும் சித்தியோடும் ரயிலில் பயணம் செய்தபோது சித்தியின் கட்டளைக்கு இணங்கி தண்ணீர் எடுத்துவருவதற்காக காலி கூஜாவோடு ரயிலை விட்டு இறங்கினான். தண்ணீரோடு திரும்பி வந்த சமயத்தில் நடைமேடையில் தண்ணீர் தாகத்தில் மயங்க விழுவதுபோல இருந்த ஒரு பெண்ணைப் பார்த்தான். அவளைக் காப்பாறுவதற்காக தண்ணீர்க்கூஜாவை அவளிடம் கொடுத்தான். அவள் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும்போதே வண்டி நகர்ந்துவிட்டது. உடனே  ஓடோடி வந்து ரயிலில் ஏறிவிட்டான். ரயில் நகர்ந்த வேகத்தில் கையில் இருந்த கூஜா நழுவி விழுந்துவிட்டது என்று சித்தியிடம் பொய்யுரைத்து சமாளித்தான். அவர்களோடு தொடர்ந்து வாழமுடியாது என்பதை அந்தப் பயணத்தில் கிட்டிய அனுபவங்கள் வழியாக அவன் புரிந்துகொண்டான். உடனே ஒரு நிலையத்தில் அவர்களைப் பிரிந்து வேரொரு ரயிலைப் பிடித்து சென்னைக்கு வந்து, பிறகு பம்பாய்க்குச் சென்று ஏதேதோ வேலைகள் செய்து படிப்படியாக உயர்ந்துவிட்டான். அந்தப் பெண் அப்போது அணிந்திருந்த ஆடைகளின் நிறத்தையெல்லாம் அவன் நினைவில் வைத்திருந்தான். அவளை எப்படியாவது கண்டுபிடித்து அவளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டான். காலம் ஓடியதே தவிர, அந்தக் கனவு நிறைவேறவில்லை. மீனாவைப் பெண் பார்க்க வந்த நாளில் அவள் அதே நிறத்தில் ஆடை அணிந்திருந்ததால் அவளைப் பிடித்துவிட்டது என்றும் சொன்னான். தற்செயலாகவே அந்த முடிவை அவன் மனம் அப்போது எடுத்ததாகவும், கூஜாவைப் பார்த்த பிறகு தான் சரியான முடிவையே எடுத்திருப்பதை நினைத்து மகிழ்வதாகவும் சொன்னான். அவளும் தன் உள்ளத்தில் இருப்பதைச் சொல்கிறாள். இருவரும் மனத்தளவில் நெருங்குவதற்கு கூஜா ஒரு நல்ல காரணமாகிவிட்டது.

திரும்பி வந்தான் சிறுகதையில்,  பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது சுதந்திரமாக திரியும் விருப்பத்தாலும் எப்போதும் குற்றம் கண்டுபிடித்து குறைசொல்பவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லும் எண்ணத்தாலும் அப்பாவிடம் சண்டைபோட்டுக்கொண்டு உடுத்திய உடுப்போடு ஊரைவிட்டுச் செல்கிறான் ஒருவன். டெல்லிக்குச் சென்று கிடைத்த வேலைகளைச் செய்து படிப்படியாக உயர்ந்து விரும்பிய பெண்ணையே மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்குகிறான். பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன. உடல்வலிமை குன்றி, மனவலிமையும் குன்றிவிடுகிறது. பெற்றோரைப் பார்க்காமல் இருப்பது ஒருவித குற்ற உணர்ச்சியை ஊட்ட, தில்லியிலிருந்து ஊருக்குப் புறப்படுகிறான். அந்த ரயில் பிரயாணத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவன் நெஞ்சில் இறந்தகால நினைவுகள் மோதுகின்றன. ரயில் சென்னையை வந்தடைகிறது. ரயிலைவிட்டு இறங்கினாலும் மனக்குழப்பத்தோடு பெட்டிக்கு அருகிலேயே நின்றுகொண்டு போகிறவர்களையும்  வருகிறவர்களையும் வேடிக்கை பார்க்கிறான். வண்டியிலிருந்து இறங்கிவரும் மாப்பிள்ளையை எதிர்கொண்டு வரவேற்க ஒரு குடும்பமே அங்கு வந்து காத்திருக்கிறது. அவர்களுடைய நடவடிக்கைகளை அவன் தொடர்ச்சியாக வேடிக்கை  பார்க்கிறான். அவர்கள் புறப்படும் சமயத்தில் அவனும் புறப்படுகிறான். அங்கு வந்திருந்த கூட்டத்தில் அவனுடைய அம்மாவும் அப்பாவும் நிற்பதை அவன் தாமதமாகவே உணர்கிறான். திரும்பி வந்த மகனை அவர்கள் மிக இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

தாயில்லாத குழந்தை சிறுகதை ஒரு சிறுமியைப்பற்றிய கதையாக முதலில் தொடங்குகிறது. அச்சிறுமி வசித்துவந்த தெருவில்  புதுமணத்தம்பதிகளாக ஒரு குடும்பம் குடியேறுகிறது. அந்தக் குடும்பத்தலைவி குழந்தைகள் மீது பாசம் கொண்டவள். வீட்டு வாசலில் விளையாடும் குழந்தைகளோடு பழகி ஒருவித நெருக்கத்தை வளர்த்துக்கொள்கிறாள். தாயில்லாத சிறுமி அவளுடைய அன்பில் கரைந்து அவளை அம்மா என்றே அழைக்கத் தொடங்குகிறாள். அம்மா பெண் பாசம் இருவரையும் நெருக்கமாக்குகிறது. மீண்டுமொரு மாற்றல் காரணமாக சில ஆண்டு கால இடைவெளியிலேயே அந்த ஊரைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள் அவர்கள். எனினும் இருவரும் ஒருவரையொருவர் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்போது அந்தச் சிறுமிக்குத் திருமணம் முடிந்து ஐந்தாறு வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. தற்செயலாக அச்சிறுமியின் முகத்தில் பழைய சிறுமியின் சாயலைக் கண்டு நின்று பார்த்துவிட்டு, அச்சிறுமிக்கு அருகில் நின்றிருந்த பெண்மணியிடம் பேச்சு கொடுக்கிறாள் அவள். ஒருவரையொருவர் அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். தாயில்லாத தன்னிடம் தாய்ப்பாசத்துடன் பழகியதோடு மட்டுமன்றி, தனக்குப் பிறந்த குழந்தைக்கு தன் பெயரையே சூட்டிவைத்திருப்பதை அறிந்து மிகவும் நெகிழ்ச்சிகொள்கிறாள் அவள்.

புராணம் சார்ந்த ஒரு கருவை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் சிறுகதை ரயிலில் சிரஞ்சீவி. நூறு வயது வாழக்கூடிய அசட்டுப்பிள்ளை வேண்டுமா, சிவபக்தனாக பதினாறு வயது மட்டுமே வாழக்கூடிய பிள்ளை வேண்டுமா என்று கேட்ட இறைவனிடம் சிவபக்தனாக வாழும் பிள்ளையே வேண்டும் என்று பதில் சொல்கிறார் மிருகண்டு மகரிஷி. அவருக்குப் பிறந்த குழந்தை சிவபக்தனாகவே வளர்ந்து பதினாறு ஆண்டுகள் ஓடிவிட்டன. உயிர்வாழும் ஆசையில் பதினாறு ஆண்டு நிறைவடையும் நாளில் இரவுமுழுதும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு மண்டியிட்டு பிரார்த்தனை செய்து இறைவன் அருளால் உயிர்பிழைக்கிறான். பல யுகங்கள் கழிந்துவிடுகின்றன. ஆனால் அவனுடைய பதினாறு வயது மாறவே இல்லை. ஒருநாள் அவனும் கதைசொல்லியும் ஒரு ரயில்பயணத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். அந்தப் புள்ளியில் புராணத்தளத்திலிருந்து கதை எதார்த்தத்தளத்துக்குள் நுழைந்துவிடுகிறது. அப்போதும் அவன் பதினாறு வயது இளைஞன். அவனை பட்டினிக்கோலத்தில் பார்க்கிறார் கதைசொல்லி. காலணா பிச்சை போட்டு கருணை காட்டுமாறு கைநீட்டிக் கேட்கிறான் அவன். உயிர்வாழப் பிடிக்கவில்லை என்று சொல்கிறான். அமிர்தகடேசுவரரின் கோபத்துக்கு அஞ்சி எமன் தன்னை  நெருங்கி வருவதையே பல யுகங்களாகத் தவிர்த்துவிட்டான் என்று சொல்லி வருத்தப்படுகிறான். பழைய வரத்தை ரத்து செய்து தன்னை அழைத்துப் போக எமனுக்கு உத்தரவிட வேண்டும் என்று சிவனைப் பார்த்து வேண்டிக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கிறான். யுகம்யுகமாக தொடரும் வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மனம் கசந்து சொல்கிறான்.  ரயில் திருக்கடையூர் நிலையத்தில் நின்றதும், அவன் இறங்கிச் செல்கிறான். புராணக்கருவையும் எதார்த்தத்தையும் அழகாக இணைத்துவிடுகிறார் க.நா.சு. வாழ ஒரு வழியில்லாத வாழ்க்கை உருவாக்கும் வெறுமையையும் கசப்பையும் உணரும்படி செய்கிறார்.

தெருப்புழுதி இத்தொகுதியின் முக்கியமான சிறுகதை. பதினாலு வயதுப் பையனாக பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது பார்த்த தாத்தாவையும் பாட்டியையும் பத்து ஆண்டுகள் கழித்து வந்து பார்க்கும் ராஜா என்னும் இளைஞனின் பார்வை வழியாக இந்தக் கதை முன்வைக்கப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து வெகுதொலைவில் ஒரு கிராமத்திலிருந்தது அந்தத் தாத்தாவின் வீடு. அவருடைய வீட்டிலிருந்துதான் அவன் படித்தான். அந்தப் பள்ளிக்கூடத்தையே அவர்தான் சொந்தமாக நடத்திவந்தார். அந்தப் பள்ளியில் படித்த பிறகு அவன் கல்வியைத் தொடரும்பொருட்டு, அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறவேண்டியதாக இருந்தது. குழந்தைப்பேறில்லாத அந்தத் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அவனைத் தத்தெடுத்துக்கொள்ள விருப்பமிருந்தது. ஆனால் அவனுடைய பெற்றோர்களுக்கு அதில் விருப்பமில்லை. அதுவும் ஒரு காரணம். அவன் அங்கிருந்து வெளியேறி கல்லூரியில் சேர்ந்தான். பட்டப்படிப்பை முடித்தான். பிறகு தில்லிக்குச் சென்றான். நல்ல வேலையைத் தேடிக்கொண்டான். வாழ்க்கையின் அடுத்தடுத்த படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுகொண்டே இருந்தான்.

இது ஒரு புறம். பள்ளிக்கூடம் நடத்திவந்த தாத்தா ஊரே மதிக்கும் பெரிய மனிதராக இருந்தார். பல நூறு சிறுவர்களுக்கு கல்விக்கண்களை வழங்கியவர் என அனைவராலும் பெருமையோடு மதிக்கப்பட்டார். அரசாங்கம் அவருடைய சேவையை மதித்து திவான் பகதூர் பட்டத்தை அளித்து கெளரவித்தது. அவருடைய உழைப்பால் பள்ளிக்கூடத்தின் பெருமை அந்த வட்டாரத்திலேயே உயர்ந்தது. அவருடைய பெருமையும் வளர்ந்தது. அவருடைய முதுமையைக் காரணமாகக் காட்டி, அந்தப் பள்ளிக்கூடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினர். ஆனால் நேர்மையும் பிடிவாதமும் கொண்ட அவருடைய மனத்துக்கு அந்த ஏற்பாடு உவப்பளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு எதிராக உருவாகிவரும் சூழலைப் புரிந்துகொண்டதும், அந்தப் பள்ளியிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். பள்ளியைத் துறந்த பிறகு, அவருடைய இயக்கம் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டது.

பள்ளியை அவர் துறந்தபோதும் பள்ளிக்கூட நினைவுகளை அவரால் துறக்க இயலவில்லை. பின்கட்டில் தோட்டத்தை ஒட்டி இருக்கும் வெற்றிடத்தையே தன் பள்ளியாக  உருவகித்துக்கொள்கிறார். சிறுவர்கள் மணல்வீடு கட்டி விளையாடுவதுபோல, அந்த வெற்றிடத்தில் அங்கங்கே மணல்சுவர் எழுப்பி பள்ளிக்கூட கனவிலேயே திளைக்கிறார். அந்தச் சுவரைக் கட்டியெழுப்புவதற்காக தன் வேட்டியிலேயே தெருவிலிலிருந்து மண்ணைத் திரட்டி வாரியெடுத்து வந்து தோட்டத்தில் கொட்டுகிறார். பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தம்மைப் பார்ப்பதற்காக ராஜா வந்திருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. மகிழ்ச்சியடையவும் முடிகிறது. “பள்ளிக்கூடத்தில் சைன்ஸ் ப்ளாக் கட்டவேண்டும். அதை ராஜாதான் திறந்துவைக்கவேண்டும்” என்று சொல்லித்தான் அவரால் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தமுடிகிறது. வீட்டுத்தரையில் ஒரு காலத்தில், பம்பரத்தால் உருவான ஒரு பள்ளத்தைச் சரிசெய்வதற்காக, புதிதாகவே கொத்தி தளம் போடும் அளவுக்கு நேர்த்தியின் மீது ஈடுபாடு கொண்டிருந்த தாத்தாவை தெருப்புழுதிக்கறையோடு தெளிவுக்கும் குழப்பத்துக்கும் இடைப்பட்ட நிலையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் மனிதராகப் பார்க்கும்போது ராஜா வருத்தம் கொள்கிறான். ஆயினும் அந்த வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “திறந்துவைக்கிறாயா?” என்று கேட்ட தாத்தாவின் கேள்விக்கு “திறந்துவைக்கிறேன் தாத்தா” என்று உடன்படும் விதமாக பதில் சொல்லி, அவருடைய கனவில் அவனும் இணைந்துகொள்கிறான்.

ஒருபுறம் மாணவனாக இருந்த சிறுவனின் படிப்படியான உயர்வு. மற்றொருபுறம் திவான்பகதூர் பட்டம் வாங்கிய ஒருவரின் அடுத்தடுத்த சரிவு. ஒற்றைக் காட்சியில் மிக நேர்த்தியாக அவற்றை முன்வைத்திருக்கிறார் க.நா.சு.

எழுதப்பட்டு, ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் கழிந்த பிறகும் புத்தம்புதிய சிறுகதையொன்றைப் படிப்பது போன்ற அனுபவத்தை க.நா.சு.வின் கதைகள் அளிப்பதை உணரலாம். மேலும் கீழுமான நாலைந்து கோடுகள் வழியாக ஒரு முகத்தின் சாயலைக் கொண்டுவந்து நிறுத்தும் ஓவியனைப்போல, மகத்தான சிறுகதைக்கலைஞர்கள் மிக எளிமையானதாகத் தோற்றமளிக்கும் ஒரு தருணத்தை முன்னும் பின்னுமான சில நிகழ்ச்சிச்சேர்க்கைகளோடு உயிர்ப்புடன் கூடிய ஒரு சிறுகதையாக வடித்துவிடுகிறார்கள். க.நா.சு.வின் சிறுகதைகளைப் படிக்கும்போது, அந்தக் கலை நிகழ்த்தும் மாய ஆற்றலை உணரமுடிகிறது.

 

(விசிறி – க.நா.சுப்ரமண்யம். தொகுப்பாசிரியர் ராணிதிலக். அழிசி வெளியீடு, 37-1, சந்நிதி தெரு, கீழாநத்தம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627353. விலை. ரூ.125)

Series Navigationமோஎதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *