விமரிசனம்: இரு குறிப்புகள்

 

ஸிந்துஜா 

மீபத்தில் படித்த ஒரு புத்தகம்: “கு.ப.ரா.கதைகள்”. அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே “ஆய்வுப்பதிப்பு” என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள்  படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே ஊடாடும் உணர்வுகளின் மீதான நுண்ணிய அவதானிப்பு, பெண்களிடம் கொண்ட எல்லையற்ற பரிவு ஆகியவற்றைக் கு.ப.ரா.கொண்டாடினார் என்று தெரிவிக்கின்றன. இவரைக் குருவாக வரித்துக் கொண்ட தி. ஜானகிராமன் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினர்: “ராஜகோபாலனைப் போல ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகுகால ஆசை. அது நிறைவேற மறுத்துக் கொண்டே இருக்கிறது.”  

இத்தகைய எழுத்தாளருக்கான அறிமுகமாக இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் முன்னுரை, அறிமுகமாகவும் இல்லை, முன்னுரையாகவும் இல்லை என்பது பெரிய துரதிர்ஷ்டம்தான். தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர்-மாணவர் உறவு  போன்ற வேறு வேறு மதிப்பீடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு முன்னுரை எழுதுபவரைத் தெரிவு செய்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இம் முன்னுரை கு.ப.ரா.வின் எழுத்துக் காலம், அவருடைய சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றை சில புற விவரங்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 

“பெண் உறவுகளைப் பதிவு செய்த கு.ப.ரா.,புதுமைப்பித்தன் போன்றவர்கள் காட்டிய பெண்ணை ஏன் பதிவு செய்ய இயலாமல் போனது?” என்று முன்னுரையாளர் கேட்கிறார். எதை எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்ற  எழுத்தாளனின் சுதந்திரத்தில் குறுக்கிட யாருக்கும் உரிமை கிடையாது என்ற பால பாடத்தையே அறியாதவர் என்று முன்னுரையாளரை இது சுட்டிக் காட்டுகிறது.  கு.ப.ரா.வின் அகஉலகைத் தரிசித்த பார்வை இங்கு காணக் கிடைக்கவில்லை. ஏனென்றால் அதைத் தடுத்து நிறுத்த இடது சாரி மற்றும் திராவிடக்  கருத்துக் கொந்தளிப்புகள் முன்வந்து நிற்கின்றன. “பெண் குறித்த பதிவுகளில் மனிதாபிமானம் மட்டும் போதாது. பெண் அடிமையாக்கப்பட்டிருக்கும் சமூக வரலாற்றையும் கவனத்தில் கொள்வது அவசியம்” என்கிறார்.  திராவிடத் தலைவர்கள் நான்கு பெண்களை மனைவியாக வரித்துக் கொள்வதை, மகள் வயதுப் பெண்ணை மணம் செய்து கொள்வதைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாத திராவிட சிந்தனையாளர்கள் பற்றி நமக்குத் தெரியாதா என்ன? இவர்கள் பெண் உரிமை, பெண்ணடிமை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்று ஆய்வு செய்வது பெரும் கேலிக்கூத்து.     

புதுமைப்பித்தனை கு..ப.ரா.வை விடச் சிறந்த எழுத்தாளன் என்று சொல்வது ஒருவருடைய கருத்து என்றால்  தமிழில் புதுமைப்பித்தன் கதைகள் மொத்தமாகப் பார்க்கும் போது அவ்வளவு ஒன்றும் உசத்தி இல்லை என்ற கருத்தும்  முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மு ன்பே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘புதுமைப் பித்தனை மறந்து வாசிக்க முடியவில்லை’ என்பது பட்டை அணிந்து பார்க்கும் பார்வை. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

முன்னுரைப் பக்கங்களை ஒதுக்கி விட்டுப் படிக்க வேண்டிய அருமையான இலக்கியப் புத்தகம் இது என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயம் இருக்க முடியாது.

                                          &&&

தமிழில் விமரிசனக் கலை வளர்ந்து வருகிறது என்று யாராவது சொன்னால் ஒரு pinch of salt டுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.விமரிசனம் என்றால் சிடுமூஞ்சித்தனம் என்கிற பொது அபிப்பிராயத்தை விலக்கி இப்போது நகைச்சுவையாகவும் விமரிசனங்கள் எழுதப்படுகின்றன. சமீபத்தில் நான் படித்த ஒரு இலக்கிய விமரிசனத்திலிருந்து சில பகுதிகள் கீழே :

“இவர் எழுத்தை விமர்சிக்கும் பாக்கியத்தை எனக்கு நல்கியதற்கு நன்றியை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.” 

“கதாபாத்திரத்தின் கால் அரிக்கும் போதெல்லாம் கை நம் கால்களை சொரிய எத்தனிக்கிறது.”

“புள்ளிக்காரன்னா என்னன்னு தெரியல. ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்” இதுக்கும் அர்த்தம் விளங்கலை. இது போல் நிறையவார்த்தைகள் சொல்லலாம். …….அருமையான வட்டார வழக்கு”.

ஒரு சில இடங்களில் வலுக் கட்டாயமாக பக்கங்களை நகர்த்த வேண்டியுள்ளது. ஒரு நல்ல நாவல் என்பது படிப்பவர்களை உறங்க விடக்கூடாது. அதைப் படித்து முடிக்கும் வரை அவர்களால் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் கதை நினைவாகவே அவர்களைத் திணறடிக்க வேண்டும்……ஆனாலும் இது அற்புதமான ஒரு இலக்கியப்படைப்பு என்பதில் ஐயமில்லை.” 

(கலாப்ரியாவின் வேனல் நாவல் பற்றி முகநூலில் ஒரு விமரிசனம்)  

Series Navigationஏதோ ஒன்னு எனக்காக இருக்குது