விளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்

விளக்கு விருது 2010

தமிழின் தனித்துவமான கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ள கவிஞர் தேவதச்சன் 2010 -ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறுகிறார். திரு சபாநாயகம், திரு சிபிச்செல்வன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கொண்ட விளக்கு நடுவர் குழுவால் கவிஞர் தேவதச்சன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். “அத்துவான வேளை”, “கடைசி டைனோசார்”, “யாருமற்ற நிழல்”, “ஹேம்ஸ் என்னும் காற்று”, “இரண்டு சூரியன்” ஆகிய கவிதைத் தொகுதிகள் கவிஞரது கவிதை வெளியின் பரப்பை அடையாளப்படுத்துகின்றன. ‘அவரவர் கைமணல்’ என்ற முதல் தொகுதி இவரது கவி  நண்பர் அனந்த்துடன் சேர்ந்து வெளியிடப்பட்டது.

எழுபதுகளில் கசடதபற, ழ போன்ற இதழ்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் கவிதையைத் தாண்டி வேறெதிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத தமிழ் ஆளுமைகொண்டது. இலக்கியத்தின் உள்வட்ட எண்ணங்களுக்குரிய கவிதையைத் தொடர்ந்து எழுதும் தேவதச்சனின் கவிதைகளை உயிர்மை பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

“யாருமற்ற நிழல்” என்ற கவிதைத் தொகுப்பை அறிமுகப்படுத்துகையில்

“தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையறாது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக எளிய சொற்களின் வழியே அனுபவத்தை மர்மப் பிரதேசங்களுக்குச் செலுத்துகிறார்” என்கிறது 600024.காம் என்ற இணைய தளம்.தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கவிஞர் அறுபது வயதை எட்டிக்கொண்டிருக்கிறார். கோவில்பட்டியில் வசிக்கிறார். கவிஞருக்கு விளக்கின் நல்வாழ்த்துக்கள். கடந்த மூன்றாண்டுகளாக விளக்கு விருதுக்குரியவர்களை

த்தெரிவு செய்த நடுவர் மூவருக்கும் விளக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.பரிசளிப்பு விழா ஜனவரி 2012 ல் நடைபெறும். விழா குறித்த விவரங்கள் விளக்கின் இந்தியத் தொடைபாளரான வெளி ரங்கராஜன் அவர்களால் விரைவில் வெளியிடப்படும்.

நா. கோபால்சாமி
விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்

Series Navigationவருங்காலம்கல்லா … மண்ணா