வீடழகு

எனக்கான வீடு
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.

வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.

நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.

மழைத் தூரிகை பூசணம்
சூரியக்குடைத் தடுப்புதாண்டி
வரவிட்டதில்லை
ஒரு தேன்சிட்டோ., குருவியோ.

காலைப் பனியும்
மதிய வெய்யிலும்
மாலை வாடையும் நுழைந்து
அள்ளி அள்ளித் தெளித்துக்
கொண்டேயிருந்தது அழகை.

ஆசையோடு மொண்டு
மொந்தையிலிட்டுக் குடித்துக்
கொண்டிருந்தேன் வீடழகை.

நீர்குடித்த ஈரத்தால்
கசிந்து முறிகிறது முதலில்
ஒற்றைச் சிலாகை
வெட்டு வாதமாய்.

வாதத்தில் படுத்தபடியே

பார்த்துக் கொண்டிருந்தேன்
அதன் ஒவ்வொரு துணுக்கும்
உதிர்ந்து கொண்டிருப்பதை.
Series Navigationசுத்த மோசம்.வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.