வீதியுலா

Spread the love

 

தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது.

அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை.

சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது.

பலசமயங்களில் இல்லை.

இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது

’போனால் போகட்டும் போடா’……

ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது;

நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.

வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில்

உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..?

அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _

மௌனமாய் _ மகிழ்ந்து சிரித்தபடி _ மாரிலடித்து அழுதபடி……

ஓலமும் ஆலோலமும் ஆனபடியே….

தொலைவில் தெரியும் வெளிச்சப்புள்ளி

மோட்டார் பைக்கா? தண்ணி லாரியா….?

ரய்லில்லை, கப்பலில்லை என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.

நான் நகர்ந்துகொண்டிருப்பது

நிலத்திலா, நீரிலா, ஆகாயத்திலா என்று

நிச்சயமாகத் தெரியாத நிலை.

உள்ளேயொரு ஆகாயவிமானம் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது.

ஒரு கப்பல் தரைதட்டிக்கொண்டிருக்கிறது.

இரண்டிற்குமிடையேயான வித்தியாசத்தில்

தொலைதூரத்து ஊர்வலம் தவறாமல் நடந்தவாறு.

 

Series Navigationஇப்போது எல்லாம் கலந்தாச்சு !வழிச்செலவு