வெகுண்ட உள்ளங்கள் – 4

Spread the love

                                           கடல்புத்திரன்

நாலு

அடுத்த நாட்காலை, கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “கூட்டத்திற்கு உங்களை உடனடியாக வரட்டாம்” என்று அன்டனுக்கும்  நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான்.

“கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத் தாரியோ” என்று அன்டன் கேட்டான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கவில்லை. வாசிகசாலைக் குழு அடிபட்ட பிறகு இயக்கத்துக்கு உதவுவதை  வெறுப்பாகப் பார்த்தது. “கொண்டு போ என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்தான்’ முந்தின மாதிரி இருந்தால் வளர்ந்தவனாய் இருந்தாலும் கோபத்தோடு தடுத்திருப்பான். அல்லது ஏதாவது சொல்லி இருப்பான் .இப்ப, எதிலேயும் பற்றற்றவன் போல ஈழநாடு பேப்பரில் கவனத்தை பதித்திருந்தான். சனமும் தீவிரமாக வாசிப்பது போல் மெளனமாக இருந்தது. இந்தச் சூழல் கனகனின் மனதையும் நோகச் செய்தது.

அவனைப் பிடிச்சுக் கொண்டு போன போது அழுது கொண்டு மன்னியும் பிள்ளைகளும் ஒடி வந்தது ஞாபகம் வந்தது. அண்ணன் ஒரு வித்தியாசமான பிறவி. முன்னர், மன்னியின் ஊர்ப் பக்கமிருந்த செல்லாச்சி மாமி வீட்ட அடிக்கடி போய் வந்தான். மாமிட மகள் வதனியில் ஒரு பிடிப்பு இருப்பதாக.அவன் கூட நினைத்திருந்தான். ஆனால் பக்கத்து வீட்டிலே இருந்த
மன்னியைப் பார்க்கத் தான் போனான் என்பது யாருக்குமே தெரியாது. இருவருக்குமிடையில் எப்படி காதல் ஏற்பட்டது?அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் கலப்பு மணம் என்றால் இலேசிலே எத்தரப்பினரும் அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்குள் செய்யவே கட்டுப் படுத்தினார்கள். முருகேசன் மன்னியைக் கூட்டிக் கொண்டு வந்த போது கத்தி, பொல் சகிதம் தொடர்ந்து வந்திறங்கிய அவர்களை தனியனாக திருக்கை வாளோடு துணிஞ்சு எதிர் கொண்டவன். பிறகு மண்டா, மீன் முள்ளு, தடி என கையில் பட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பஞ்சன், தியாகு, அவன் என செட் திரண்டு வர  ஒடி விட்டார்கள். 

வாசிகசாலைக் குழு நிலைமையை கவனத்தில் எடுத்துச் சமாளித்தது. “எல்லாரும் கட்டாயம் அமைதி காக்க வேண்டும்” என கட்டுப்பாட்டை விதித்தது. மன்னியின் இடத்திலுள்ள‌ வாசிகசாலை (சனசமூக நிலையம்) குழுவுடன் நேரே சென்று பேச்சு நடத்தியது. “புனிதம் அவனோடயே வாழ விரும்புவதால் இப்படியே விடுறது தான் நல்லது” எனக் கேட்டுக் கொண்டது. “உங்கள் பேச்சை நம்ப  மாட்டன்” என்று சத்தம் போட்டுக் கொண்டு அவளுடைய அண்ணன் குழுவோடு அங்கே வந்தான். அந்த நேரம் “நான் வர மாட்டேன்” என மன்னி அவர்கள் மத்தியில் ஒடி ஒளிந்தது எல்லார் மனதையும் கரைத்தது.

பிறகு அண்ணன் மன்னி வாழ்வு நல்ல படியாக‌வே ஒடியது. வெளிநாடு போற ஆசை அண்ணனுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கிடையில் காசு போதியளவு கிடைக்காமையால் பூசல்கள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. ‘என்னடாப்பா வீட்டில் சத்தம் கேட்கிறது’ என்று அவனுடைய நண்பர்கள் கேட்க.ஒரளவு அடங்கிப் போயிருந்தான்.

இயக்கம் அவனை பிடிச்ச போது மன்னி “விடமாட்டேன்” என குழறி அழுதார்.அப்படியும் கொண்டு போய் விடவே, பிள்ளைகளோடு  கனகன் வீட்டையே ஒடிவந்தார்.

திரும்பிய பிறகு அடிவாங்கியவர்கள் இரண்டு மூன்று நாள்.நோவால் வேலைக்கு போக முடியாமல் தவித்தார்கள்.

கனகனை, அன்டனை, நகுலனைக் கண்டால் ஏதாவது சொல்வார்கள். நேற்று,  அண்ணனோடு வந்த பஞ்சன் அவனைப் பார்த்து-விட்டு “உங்கட ஆட்கள் மோசமில்லையடா, ஆனா, அடி வாங்கினால் 2,3 நாளைக்கு கட்டாயம் புக்கை கட்ட வேணும்” என்றான். அந்த நிலையிலும் பகிடி விடுறான்.

அவனுக்கு சிரிப்பு வந்தது. அன்டனும் நகுலனும் நண்பர்களாகவிருப்பதால் அவனையும் இயக்கமாக கருதி முறைப்பாடு தெரிவிக்கிறார்கள்.

அண்ணனும் மெளனமாக இருப்பது சங்கடமாக இருக்கிறது. அவனைக் குறித்து புறுபுறுத்தாவது இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் என்ற மரியாதையும் அவர்களுக்கு இருக்கவே செய்தன.

எனவே இயக்கத்தோடு இழுபடுகிறவர்களையும், சப்போட் பண்ணுறவர்களையும் அவர்கள் தடுக்க முயல‌வில்லை.

லிங்கனோடு சென்ற,‌ வலக்கம்பறை தேர்முட்டியிலே, நடந்த‌ எ.ஜி. எ கூட்டத்திலே, புதிதாய் ஒருத்தனை அறிமுகப் படுத்தினார்கள். இருவருக்கும் அவனை முன்னமே நன்கு தெரியும். லிங்கனுக்கு அவ்வளவாக‌  தெரியாது.

“இவன், தற்காலிகமாக தெற்கு அராலிப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்படுகிறான்” என பிரபா அறிவித்தான்.

சங்கானை உப அரசாங்கப் பிரிவில், அராலியும் ஒரு கிராமம் தான் . மற்ற 12 கிராமங்களைப் போல இல்லாமல் பெரிய கிராமமாக இருந்ததே பிரச்சனை. அதன் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒவ்வொன்றுமே நிலப்பரப்பில் ,சாதிப்பிரிப்பில் தனி தனிக்கிராமத்துக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருந்தன.

முழு கிராமத்துக்கு ஒரு கிராமசேவகரையே இலங்கை அரச பிரிவால் நியமிக்கப்படுவ‌தால் அவ்விடத்து மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். அதை ஒட்டியே இவர்களும் வடக்கைச் சேர்ந்த லிங்கனை, பொது ஜி.எஸ்.ஆக  நியமித்து விட்டிருந்தனர். ஆனால், தெற்குக்கு இன்னொரு ஜி.எஸ்.ஐ நியமிக்க வேண்டியளவிற்கு நிலமும் , மக்கள் தொகையும் விரிந்தே கிடந்தது தற்காலிகமான திலகனின் தெரிவு  நல்லது தான் .

ஆனால், வாலையம்மன் பகுதி ஆட்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமளிக்கப் போகிறது. மற்றைய எல்லா கிராமங்களிலிருந்து இரண்டு , இரண்டு அங்கத்தவர்கள் வந்திருந்தார்கள். லிங்கன் ,தன்னுடைய தோழர்களிற்கு அரசியல் தெரிய வேணும் என்பதற்காக எப்பவும் இரண்டு தோழர்களை கூட்டத்திற்கு மாறி, மாறி அழைத்து வாரவன். தெற்குக்கு புதியவர் நியமிக்கப் படுவதால் இவ்விருவரையும் இன்று அழைத்திருந்தான்.

       அடுத்த கூட்டத்திற்கு வடக்கிலிருந்து இருவர் வருவார்கள். லிங்கனுக்கும் கூட‌ பெரிதாக அரசியல் தெரியாது தான்.ஆனால் இவர்களிற்கு எல்லாம் அவன் மூத்த வனாக இருப்பதால் கிராமத்திற்கும்,மேலிடத்திற்குமிடையில் இருக்கிற‌ ஒரு தபால்காரனாக‌ தன்னை நினைவில் வைத்திருந்து எப்பவும் தொடர்பையும் பேணி வருகிறான்.

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது