வெட்கச் செடியும் சன்யாசி மரமும்

மழைவரும்போல் தெரிகிறது

பாதையோர குறுநீலப் பூக்கள்

பாவாடைப் பச்சையில் விரிகின்றன.

ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம்.
தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச்
சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம்.
இறுக்க மூடிவரும் இரவில் மோதிப்
போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை மொக்கு.
தொடப்போகும் மரவிரல் பார்த்து
சிணுங்கிச் சலிக்கிறது சர்க்கரைத் தீர்வு.
காதல் சீண்டலில் வெட்கித் தலைகுனிகிறது
காணாமலே உணரும் காமவர்த்தினி.
பரஸ்பரத் தொடுகையில் பூத்து விரிகின்றன
குறுஞ்சாமரங்களாய் இளஞ்சிவப்புப் பூக்கள்

உறங்கப் போகும் பறவைகள் தாலாட்டில்
மோனத்தில் ஆழ்கிறது மழை மரம்.
மேகமாய் உறைந்து மரத்தின் மேல்
பொழிகிறது வெள்ளை நிலாச்சாரல்.
சடைப்பிடித்து நிஷ்டையில் மூழ்குகிறது
சதா தூங்குமூஞ்சி மரமென.
ராஜாவுடன் ராணியாய் கைபிடித்துத்

துயில்கிறது தொட்டாற்சுருங்கியும்.

Series Navigationவார்த்தெடுத்த வண்ணக் கலவை – திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்துவைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி