வெண்சங்கு ..!

பொங்கும் ஆசைகள்
பூம்புனல்  மனசுக்குள்
வானமென விரிந்த
கண்கள் கொண்ட
ஞாபகப்  பொக்கிஷங்கள்

அனைத்து உணர்வுகள்
சுமந்த உயிர் மூச்சுக்கள்
பாசி படிந்த சங்குகள்
மண் படிந்த சிப்பிகள்
கடல் நுரையின் பூக்கள்
நட்சத்திர மீன்கள்
கண் முழிக்கும் சோழிகள்
பவழப் பூங்கொத்துக்கள்
உல்லாசச் சுற்றுலாவில்
உன் பாதம் பட்டு நகர்ந்ததும்
என் உள்ளங்கையில்
சிக்கிய  கூழாங்கற்கள்
பட்டாம் பூச்சியின்
ஒற்றை இறக்கையின்
இறைவன் வரைந்த
அழகோவியம்
‘குட்டிபோடும்’ நம்பிக்கையில்
மயிலிறகின் ஒற்றைக்கம்பி
அரச மரத்தின் காய்ந்த இலை
காக்காப்பொன்னு
கலர்கலரா குமரிமண்ணு
நானிருக்கும் வரை
என்னோடிருக்குமென
நான் புதைத்து வைத்த
சின்னங்கள் …!
என்று என் வாழ்க்கை

பாதைமாறிப் பயணித்ததோ

ஆழ்கடல் மனசில் இருந்தவை
அலைகடலுக்குள் அஸ்தியெனக்
கலந்து விட
என்றாவது எங்காவது
கரையோரம் கால் நனைக்கும்
உன் பாதங்களில்
சிக்கும் இந்த வெண்சங்கு ..! 


ஜெயஸ்ரீ ஷங்கர்…..
Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்