வெற்றிக் கோப்பை

 

 

நீங்கள் கைப்பற்றலாம்

விலங்குகள் இல்லா கானகத்தை

உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம்

தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை

உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம்

இறையாண்மையை அடகு வைத்து

பூம்பூம்மாட்டினைப் போல்

உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம்

சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு

உங்கள் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கலாம்

கடனை திருப்பித் தர இயலாத கிராமத்திலிருந்து

வாசலில் கோலமிட்டு அழைக்கலாம்

நீல வண்ணத்தில் யார் வந்தாலும்

நீங்கள் நதியை நாடலாம்

பாவமூட்டையை இறக்கி வைக்க

உங்கள் கால்களை வருடும் அலைகள்

ஆழ்கடலிடம் சொல்லிவிட்டு வருவதில்லை

உங்களை பின்தொடரும் நிழல்

காயங்களும்,வடுக்களும் நிறைந்ததாக இருக்கலாம்

வரிசையில் நின்று தரிசனம் பெறலாம்

அருள் வேண்டி முடியை காணிக்கை தரலாம்

எல்லா போட்டிகளிலும் தோற்றவனுக்காக

வெற்றிக் கோப்பை தவங்கிடக்கலாம்.

Series Navigationஎம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி