வேறு ஒரு தளத்தில்…

Spread the love

– பா.சத்தியமோகன்
வானில் பறக்கும் பறவையிடம்
இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன்
அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது.

தவழும் மழலையிடம்
கூர் கத்தி ஒன்றை நீட்டினேன்
மேலும் கலகலப்பானது.

அப்போதுதான் பனியில் துளிர்த்த
மலர்க்கொத்து ஒன்றிடம்
என் துக்கக் கம்பியை விவரித்தேன்
அதுவோ மலர்ச்சியை நிறுத்தவேயில்லை.

எனது குளியலால் சிதறப்போகும் எறும்புகளிடம்
அச்சத்தை விளக்கினேன்
அவையோ சுறுசுறுப்புடன் உள்ளன

நாளைய உலகம் நீருக்குத் தவிக்கும் எனும் மிரட்டலை
ஓடிச்சென்று தாமரை ததும்பும் குளத்திடம் சொன்னால்
அதன் அலைகள் அமைதி காக்கிறது.

குடும்ப உறவுகளின் நலிவையும் வலியையும்
விண்மீன்களிடம் கண்சிமிட்டி
என்ன ஆகப்போகிறதென்று
சும்மாயிருந்து பார்த்தேன்
ஆஹா அப்போது நெஞ்சில் ஒரு நிம்மதிப் புறா
உருவாவதை தரிசித்தேன்.
*****

Series Navigationசந்தனப் பூ…..வம்பளிப்புகள்