வேறென்ன வேண்டும்?

Spread the love

பிச்சினிக்காடு இளங்கோ

இறைவா நீ
வயிற்றுக்குச்சோறிடும்
உழவனாய் இருப்பதறிந்து
மதிக்கிறேன்

இறைவா உன்னை
கழிவுகள் அகற்றும்
துப்பரவுத்தொழிலாளியாய்க் கண்டு
துதிக்கிறேன்

இறைவா உன்னை
வியர்வையை விதைக்கும்
தோழனாய்க் கண்டு
தொழுகிறேன்

இறைவா நீ
நீதிமன்றத்தில்
நடுவராய் இருந்து
வழங்கிய நீதிக்கு வணங்குகிறேன்

வாங்கிக்கொண்டு
நீதியை விற்றதுகண்டு
வெதும்புகிறேன்

நடுவராய் இருந்து
நடுநிலைப்பேணினால் நல்லது

ஒருபக்கம் தலைசாயும் உனக்காகத்
தலைவணங்குவது நியாயமா?

கர்ப்பகிரகத்திலேயே
கண்டுகொள்ளாமல் இருக்கும்
உன்னை
கண்டுகொள்வது எப்படி?

உன்னைத்தொழுவதாய்
உன்பெயரைச்சொல்லி
உன்முன்னே
உன்னைமறப்பவனை
உன்னைமறைப்பவனை
விளையாட விடுவதுகண்டு
விலகிநிற்கிறேன்

அன்பின் முகவரிதெரியாதவனை
இரக்கத்தின்
இருப்பிடம் இல்லாதவனை
அறத்தின்
அரிச்சுவடி அறியாதவனை
கொண்டாட விடுவதும்
கொண்டாடிக்
கொண்டிருப்பதும்கண்டு
கொதிக்கிறேன்

வெடிகுண்டு
வெடிக்கும்போதெல்லாம்
வேடிக்கைப்பார்ப்பதுதான் வேலையா?

அச்சத்தில் இருக்கும்
எங்களைக் காக்காமல்
உச்சமாய் உனக்கு
வேறென்ன வேலை?

கடல்நீலம் பூசும்
மீனவராய்
சுரங்கம் தோண்டும்
ஊழியராய்
சேவைசெய்யும்
செவிலியராய்

இப்படி
விரிந்த பூமியில்
உழைப்பால் நிறைந்த உன்னை
ஒவ்வொருமுறையும்
வணக்கத்திற்குரியவனாய் வைத்திருக்கிறேன்

உனக்கும் எனக்கும்
இடையில்
தரகர் தேவையில்லை
தடைகள் ஏதுமில்லை

நான்
மனிதத்தை நேசிக்கிறேன்
மனிதத்தை வாசிக்கிறேன்
மனிதத்தைதான் மதிக்கிறேன்

Series Navigationஎழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:மருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்