ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

Spread the love

[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் !

உலகின் மிகக்கூரான
அந்த ஆயுதம் அழகானது
தொட்டால் மென்மையானது
செயல்படும் போது மட்டும்
சில நேரங்களில் மிக அற்புதமாகவும்
பல நேரங்களில் மனம் கிழிக்கும்
பேராயுதமாக மாறிவிடும்

அது கண் காணாத தீயால்
நிரம்பியிருக்கிறது
பெண் மனத்திலும் ஆண் மனத்திலும்
மாறாத வடுக்களை
விட்டுச் செல்கிறது
மனம் கிழித்தல் அதன் வாடிக்கை

நாக்கு !
கிடக்கும் இடம் வற்றுவதில்லை
எப்போதும்…
இதன் பயன்பாடு
விசித்திரங்களில் சோதனைகளில்
நல்ல தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது !

[ 2 ] மௌனத்தை மொழியாகக் கொண்டவர்

முதுமையின் வழுக்குப் பாறையில்
அவர் நின்றுகொண்டிருக்கிறார்
அவரது கம்பீரமான சொற்கள்
நிறமிழந்து மனக்கிடங்கின் ஓரத்தில்
சிதறிக்கிடக்கின்றன

அவர் இறக்கைகளில்
எல்லா இறகுகளும் உதிர்ந்து
‘ இனி பறத்தல் சாத்தியமில்லை ‘
என்பதை
மௌனமாய் அறிவிக்கின்றன
தந்திகள் இல்லா இசைக் கருவியை
மீட்டி மீட்டி
அவர் விரல்கள் ஓய்ந்துவிட்டன

சுவை நீக்கப்பட்ட
எல்லாப் பழங்களும்
அவருக்கு எளிதாய்க் கிடைக்கின்றன

மனித உறவுகள் எல்லாம்
கைத்துப்போய் மரணக்கிளையில்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
இருளை விற்று
ஒளி வாங்குவது எப்படி ?

— மௌனத்தை மொழியாகக் கொண்ட
பயணம் மட்டும்
அனுமன் வாலாய் நீள்கிறது !

Series Navigationசெழியனின் நாட்குறிப்பு-ஒழிதல்!