ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 

பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் துரோணாச்சாரியார் கௌரவப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். . துரோணப் பர்வத்தின் ஆரம்பப் பகுதிகளை ஸ்ரீ கிருஷ்ணர் பிரத்யேகமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல்தான் உண்டு அர்ஜுனனின் தேர் உண்டு என்று அர்ஜுனன் போகச் சொன்ன இடத்திற்கெல்லாம் தேரை ஓட்டிச் சென்றார். மகாபாரதத்தை இந்த ஒரு பகுதியை அளவுகோலாக வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் மகாபாரத யுத்தத்தை ஸ்ரீ கிருஷ்ணர்தான் தூண்டி விட்டார் என்பதும் மகாபாரதப் போர் ஸ்ரீ கிருஷ்ணர் தலைமையின் கீழ்தான் நடந்தது என்பதும் அடிபட்டுப் போகும். இது போன்ற நேரங்களில் அவர் அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் செய்யவில்லை. தேவைப் படும்பொழுது அர்ஜுனனுக்கும் , தருமருக்கும் வேண்டும் என்ற புத்திமதிகளைக் கூறிக் கொண்டிருந்தார். அவ்வளவுதான். இந்தப் பர்வத்தில் பதினோராவது அத்தியாயமான துரோணாபிஷேகம் என்ற பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணரின் வீரப் பிரதாபங்களை ஒரு நீண்ட உரையாக சஞ்சயன் கூறும் பகுதித் தேவையில்லாத ஒன்று என்றுதான் கொள்ள வேண்டும். இது கண்டிப்பாக ஒரு தேர்ந்த இடைச் செருகல்தான். ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைப் போற்றும் துதிகள் மகாபாரதம் நெடுகிலும் காணப் படுகிறது. இருப்பினும் நாமும் சேர்ந்து அவரைப் போற்றுவது என்பது நாம் மேற்கொண்டுள்ள வேலைக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. அவரை ஒரு மானுடராக அவருடைய செயல்கள் மூலம் வெளிக் கொணர்வதே நமது நோக்கம்.

துரோணப் பர்வத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பக தத்தனைக் கொல்வதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்வது தெரிகிறது. பக தத்தன் ஒரு சிறந்த வீரன். அவனை எதிர்க்கப் பாண்டவர்களில் ஒரிருவரைத் தவிர வேறு யாராலும் எதிர்க்க முடியாத வலிமை பெற்றவன். அவனுடன் மோதிப் பலரும் புறமுதுகிட அர்ஜுனன் ஒருவன்தான் அவனை எதிர்த்து அழிப்பதற்கு முன்வருகிறான். இருவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடை பெறுகிறது. அர்ஜுனனனை எதிர்த்துச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்பொழுது பக தத்தன் அவன் மீது எவராலும் எதிர்கொள்ள முடியாத வைஷ்ணவாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் உடனே அர்ஜுனன் முன்னால் ஒரு தடுப்புச் சுவரினைப் போல் நின்று கொண்டு அந்த வைஷ்ணவாஸ்திரத்தை தன் மார்பில் வாங்கிக் கொள்கிறார். அந்த அஸ்திரம் வைஜயந்தி மலர்களால் தொடுக்கப் பட்ட ஒர் அழகிய மாலையாக மாறி ஸ்ரீ கிருஷ்ணர் மார்பை அலங்கரிக்கிறது.

இந்தக் கதை நம்ப முடியாமலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கூறுகள் அடங்கியதாகவும் உள்ளது. மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் எதனையும் நம்பக் கூடாது என்று எனது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்தக் கதையை நம்புவதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்தக் கதையை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.

துரோணப் பர்வத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வினையாற்றுவது அபிமன்யுவைக் கௌரவர்கள் சூழ்ந்து கொண்டு வதம் செய்த நிகழ்ச்சிக்குப் பின்புதான். பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் கௌரவ வீர்கள் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டு நேர்மையற்ற முறையில் அவனைக் கொன்று விடுகிறார்கள். அபிமன்யு யுத்த களத்தில் இறக்கும்பொழுது ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் அந்த இடத்தில் இருக்கவில்லை. கௌரவர்களுக்குத் துணையாக அனுப்பப் பட்ட நாராயணப் படையை எதிர்ப்பதில் மும்முரமாக இருந்தனர்.

அன்று இரவு போர் முடியும் பொழுதுதான் இருவருக்கும் அபிமன்யு இறந்த செய்தித் தெரிய வருகிறது. அர்ஜுனன் தாங்க முடியாத துயரத்தி மூழ்குகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர். தனது நிலையினை எந்த வேளையிலும் இழக்காதவர்.அவருடைய அப்போதைய முன்னுரிமை அர்ஜுனனைத் தேற்றுவது மட்டும்தான். அவர் கூறும் ஆறுதல் வார்த்தைகள் கீதையில் தான் தோற்றுவிக்க நினைக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் சாயலிலேயே உள்ளது. யுதிஷ்டிரனைச் சமாதானம் படுத்தும் ரிஷிகள் அனைவரும் கௌரவர்களைக் கொல்ல வேண்டும் என்று ஆவேசமாகக் கூறுகின்றனர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு ஆவேசப் படவில்லை. அவர் கூறுகிறார்> “சத்திரியர் எனப்படுபவர்கள் திறமை மிக்க வீரர்கள். அவர்கள் போர்க்களத்தில் வீர மரணம் அடைவது இயல்பே.”

அபிமன்யுவின் தாயும் தனது சகோதரியுமான சுபத்திரைக்கு ஸ்ரீ கிருஷ்ணர் இதே போன்றுதான் ஆறுதல் கூறினார்.” உறுதியும் உயர்குடிப் பிறப்புமுடைய  ஒரு சத்திரிய வீரன் போர்களத்தில் எப்படி மடிவானோ அவ்வாறே உன் மகன் மரணம் அடைந்துள்ளான். அவனுடைய மரணம் வருத்தப்பட வேண்டிய மரணமன்று.. தீரனும், நிலைகுலையாதவனும், தந்தைக்கு நிகரான வீரம் பொருந்திய அபிமன்யு ஒரு வீர புருஷன் போர்க்களத்தில் எதனைப் பெற வேண்டுமோ அதனைப் பெற்றுள்ளான். பலவாறு எதிரிகளைத் தோற்கடித்து அவர்களை எமனுலகம் அனுப்பி விட்டுப் புண்ணியம் செய்தவர்களுக்கு உரியதும்,சகல அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும், அழிவில்லாததுமான உலகத்தை அடைந்து விட்டான். ஞானத்தினாலும்,முனிவர்கள் தவத்தினால் எத்தகைய நற்கதியை அடைய விழைகிறார்களோ அப்படி ஒரு நற்கதியை உன் மகன் அடைந்துள்ளான். ஓ! சுபத்ரா! நீ ஒரு வீரனின் மனைவி. ஒரு வீரனின் தாய்.ஒரு வீரனின் புதல்வி. ஐந்து வீரர்களின் சகோதரி. அப்படிப்பட்ட நீ உன் மகனின் வீர மரணம் குறித்து சோகத்தில் மூழ்கலாகாது.”

எனக்குத் தெரியும் எந்தத் தாய்க்கும் தன் மகனுடைய மரணத்திற்குக் கூறப்படும் எவ்வளவு உயரிய ஆறுதல் மொழிகளையும் ஏற்கும் மனப்பக்குவம் இருக்காது.. ஆனால் இது போன்ற ஒர் இழப்பிற்கு ஆறுதல் கூறும் முன்பு ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய ஆறுதலை நினைவில் கொள்வது நலம்.

இதற்கிடையில் மகனை இழந்த சோகம் தாளாது அர்ஜுனன் ஒரு மிகப் பெரிய சபதத்தை எடுத்து விடுகிறான்.அந்த மரணத்தின் தாக்கத்தைச் சிறிதும் தாங்க முடியாத அர்ஜுனன் அபிமன்யுவின் மரணத்திற்கு முக்கியக் காரணமானவன் ஜயத்ரதன்  என்பதை அறிந்து கொள்கிறான். எனவே மறுநாள் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் ஜயத்ரதனைக் கொன்று விடுவதாகவும் அப்படி தன்னால் அவனைக் கொல்ல முடியவில்லை என்றால்  எரியூட்டி அதில் வீழ்ந்துத் தான் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் சபதம் எடுத்தான்.

அந்தச் சபதம் இரண்டு அணியினரையும் கொதிப்படைய வைக்கிறது. பாண்டவர்கள் அந்தச் சபதத்தைக் கேள்விப் பட்டதும் இன்னும் அதிக வேகத்துடன் கௌரவர்களை எதிர்க்கத் தொடங்கினர். கௌரவர்கள் ஜெயத்ரதனைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தார். அர்ஜுனன் முட்டாள்தனமாக எடுத்த சபதத்தை நிறைவேற்றுவது சாத்தியமான செயலன்று. சிந்து தேசத்தின் தலைவனான ஜெயத்ரதன் எவராலும் வெல்ல முடியாத வீரனாகத் திகழ்ந்தான். அவனிடம் பெருஞ்சேனை ஒன்றிருந்தது. மேலும் அவன் துரியோதனனின் மைத்துனனும் ஆவான். தீரர்களான கௌரவப் படையினர் கண்டிப்பாக ஜெயத்ரதனைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள்.ஆனால் இதற்கு நேர்மாறாகப்  பாசறையில் அபிமன்யு இழந்த துக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் பாண்டவர்கள் எவ்வித ஆலோசனைக்கும் முனைப்புக் காட்டாமல் இருந்தனர். எனவே ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர் பாசறைக்கு ஓர் உளவாளியை அனுப்புகிறார். உளவு பார்க்கச் சென்றவன் துரியோதணனும் கர்ணனும் சேர்ந்து ஒரு தற்காப்புப் படை அமைத்து ஜெயத்ரதனைக் காவல் காக்கப் போவதாகச் சொல்கிறான். அர்ஜுனனுக்குக்கூட அந்த அதிசியக் காவலை உடைத்து உள்ளே நுழைந்து ஜெயத்ரதனைக் கொல்வது சாத்தியமில்லாத விஷயம்.

எனவே ஸ்ரீ கிருஷ்ணர் தானே முன்வந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று இயலில் இறங்குகிறார்.அவர் தன்னுடைய தேரோட்டியான தாருக்கனை அழைத்து அன்று மாலை தனது தேரினில்  உயர்ச் சாதிக் குதிரைகளையும் மிகுதியான ஆயுதங்களையும் நிரப்பி வைக்கும்படி உத்தரவிடுகிறார்.பகல் பொழுது முடிந்து அந்தி சாய்வதற்கு+ள் அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொல்ல முடியாமல் போகும்பொழுதுத் தானே அவனைக் கொல்வதாகத் தாருகனிடம் கூறுகிறார்.

ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் தானே முன்வந்து போர் புரியும் அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அர்ஜுனன் தனது போர்த் திறமையால் தனது சபதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். இந்த இடத்தில்ஸ்ரீ கிருஷ்ணர் தானே ஜயத்ரதனை அழிக்க நேரிட்டிருந்தாலும் அவர் தான் போரில் நேரிடையாகப் பங்கு கொள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியிலிருந்து வழுவியவர் ஆக மாட்டார். ஏன் எனில் இந்த மோதல் முற்றிலும் சிக்கலான ஒன்று. இப்பொழுது ஏற்பட்டுள்ள மோதல் ஒரு ராஜ்ஜியத்தின் பொருட்டுப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தொடங்கிய யுத்தம் போன்றதில்லை. ஜெயத்ரதனைக் கொல்வதற்காக  அர்ஜுனனின் சபதம் காரணமாக எழுந்த இந்த யுத்தம் வேறு இலக்கைக் கொண்ட யுத்தம். இது பாண்டவர் கௌரவர் யுத்தமில்லை. இந்த யுத்தம் அர்ஜுனன் ஜெயத்ரதன் இருவருக்கும் நடுவில் மட்டுமே கட்டமைக்கப் பட்டது. அர்ஜுனன் இந்த யுத்தத்தில் தோல்வியடைந்தால் அவனுக்குத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நிலம் காரணமாக யுத்தம் எழுந்த நேரத்தில் இப்படி ஒரு மோதல் அர்ஜுனனுக்கும் ஜெயத்ரதனுக்கும் நேரவில்லை. எனவே யுத்தத்தில் தான் ஆயுதம் ஏந்தப் போவதில்லை என்ற தனது வாக்குறுதியை இந்தத் தனிப்பட்ட மோதலுக்கும் நீட்டிக்கக் கூடாது. அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் உயிர் நண்பன். தங்கை சுபத்ரையின் கணவன் என்ற ரீதயில் உறவில் மைத்துனனும் ஆகிறான். எனவே அவனைத்  தற்கொலையிலிருந்து காப்பது அவருக்கு அவசியமான ஒன்றாகிறது.

 

Series Navigationமருமகளின் மர்மம் – 15நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்திண்ணையின் இலக்கியத் தடம்-21தினம் என் பயணங்கள் – 4ஜாக்கி 27. வெற்றி நாயகன்தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்ஓவியம் விற்பனைக்கு அல்ல…பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்புமந்தமான வானிலைநாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.மனோபாவங்கள்புதியமாதவியின் மின்சாரவண்டிகள்சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வுபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *