ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?

என்.எஸ்.வெங்கட்ராமன்

                                                                                                      

வேதியல் பொறியாளர்

மின் அஞ்சல்: nsvenkatchennai@gmail.com

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?

விவசாயிகளும், சில அரசியல் கட்சிகளும், சில சமூக  ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்ததால், ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா பகுதிகளில் கைவிடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சாதக பாதகங்கள் தீவிரமாக ஆராயப்படாமலும், மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்களிடம் விளக்கம் கேட்காமலும் எடுக்கப்பட்ட முடிவு என்பது என்னுடைய கருத்து.

எனது கருத்துகளுக்கு ஆதாரமாக கீழ் கண்ட விவரங்களை கூறியுள்ளேன்.

  1. மீதேன் திட்டம் கைவிடப்பட்டது  சரியே. ஆனால், அது வேறு. தற்போதைய எரிவாயு, கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டம் வேறு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.இந்த திட்டத்தில் நிலத்தடி நீர் எடுக்கப்படாது. மீதேன் திட்டத்தில் நிலத்தடி தண்ணீர் எடுக்கப்படும் என்பதே பிரச்சினை. ஆதனால் மீதேன் திட்டத்தை கைவிட்டது சரியான முடிவு.     
  • காவேரி டெல்டா என்று சொல்லப்படும் இடம் சுமார் 30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நிலத்தடியிலிருந்து எரிவாயு,கச்சா எண்ணெய் எடுக்க கிணறு அமைப்பதற்கு தேவையான நிலம் 500 ஏக்கருக்கும் குறைவாகவே இருக்கும்.
  • தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், விவசாய நிலம் கட்டுமானப்பணிக்காக கடந்த பல வருடங்களில் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, திருச்சியில் பல ஏக்கர் பரப்பளவில் தில்லை நகர் என்ற இடம் 50 வருடங்களுக்கு முன்பு பசுமையான விவசாய நிலங்களாக இருந்தது. சென்னையில் நங்கநல்லூர் போன்ற இடங்கள் விவசாய நிலங்களாக தான் இருந்தன. இவையெல்லாம், தற்போது கட்டிட அமைப்புகளாக மாறிவிட்டன. ஆயிரக்கணக்கான பரப்பளவில் விவசாய நிலம் நகர்புறமாக மாற்றப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்காதவர்கள், சிறிய அளவு நிலம் எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் ?
  • எல்லோருக்கும் வாகன வசதி வேண்டும். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தவறில்லை. அவை எரிவாயு அல்லது கச்சா எண்ணெய் மூலமாகத்தான் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் அந்நிய செலவாணி 20 சதவீதம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யத்தான் செலவிடப்படுகின்றன. தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 7 சதவீதம் கூடிவருகின்றன. இந்த வேகத்தில், கச்சா எண்ணெ;, எரிவாயு தேவை கூடினால், இந்தியாவின் அந்நிய செலவாணிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். நம் நாட்டில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவேண்டாமா?  இது காலத்தின் கட்டாயம்.

எரிவாயு, கச்சா எண்ணெய் எல்லா இடத்திலும் கிடைக்காது. அவை கிடைக்க கூடிய இடங்களில், டெல்டா பகுதியும் ஒன்று. சென்னையிலோ அல்லது மதுரையிலோ கச்சா எண்ணெய் கிடைக்குமா ?

  • இந்தியாவில் தற்போது, 450 இடங்களுக்கு மேல் கச்சா எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு எந்தவிதமான ஆபத்தோ, சுற்றுப்புற சூழலுக்கு கெடுதலோ ஏற்படவில்லை. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான கச்சா எண்ணெய், எரிவாயு கிணறுகள் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லாமல் இயங்கிவருகின்றன. எதிர்ப்பவர்கள் அங்கு சென்று பார்த்தார்களா?
  • இந்தியாவில் ஒரு ஏக்கருக்கு சுமார் 2.4 டன் அரிசி விளைகிறது. ஆனால், சீனாவில் ஏக்கருக்கு 4.7 டன் என்ற நிலையிலும், பிரேசிலில் ஏக்கருக்கு 3.4 டன் என்ற அளவிலும் அரிசி விளைகிறது. இந்தியாவிலும் விவசாய ஆராய்ச்சிகளை தகுந்த அளவில் மேற்கொண்டு, மற்ற நாடுகளைப் போல அரிசி உற்பத்தியை ஏக்கருக்கு 4 டன் என்ற அளவில் அதிகரிக்கச்செய்தால் டெல்டா மாவட்டத்தில் அரிசி உற்பத்தி  மடங்கு கூடும். இதை குறித்து யாரும் குரல் எழுப்பாதது ஏன்?
  • எரிவாயு, கச்சா எண்ணெய் குழாய் அமைத்து பூமியிலிருந்து அவற்றை எடுப்பதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. இருப்பினும், வேண்டிய அளவு தண்ணீர் நிலத்தடியிலிருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.மாறாக கடல்நீரை சுத்தமான தண்ணீராக மாற்றும் திட்டத்தை  அமல்படுத்தி,தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம். நிலத்தடி நீர் எடுத்தால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் என்ற குற்றச்சாட்டு தேவையில்லாமல் ஆகிவிடும்.
  • நிலம் கையகப்படுத்துவதால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தேவையான  நிவாரணங்களை அளிப்பது மிகவும் அவசியம். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கலந்து பேசி ஆரோக்கியமான வாழ்க்கை அவர்கள் பெற, ஆவன செய்ய வேண்டுவது மிகவும் அவசியம். இது அரசின் கடமை.
  • நமக்கு அரிசியும் வேண்டும். கச்சா எண்ணெயும், எரிவாயுவும் வேண்டும். ஒருமுகமாக சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமில்லையா?.
  1. இன்றைய தமிழ் நாட்டில், பல பிரச்சினைகளை குறித்து ஆக்க பூர்வமாக சிந்திக்காமல், அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதே தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்.

நன்றி

என்.எஸ்.வெங்கட்ராமன்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  நான் ஆதரிப்பது ஏன் ?

nsvenkatchennai@gmail.com

Series Navigationஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறதுஊர் மாப்பிள்ளை