“அவர் தங்கமானவர்”

நாய்க் கொரு நண்பகலில்
வாய்த் ததொரு தெங்கம்பழம்
தா னுண்ணத் தெரியாமலும்
தரணிக் குத் தராமலும்
உருட்டியும் புரட்டியும்
ஊர்சுற்றி ஊர்சுற்றி
ஓய்ந்து போனதந்த நாய்

தமக்கும் வாய்த்தது
தங்கமானவர் எனும் பட்டம்
தரங் கெட்ட தலைக்குப் பின்
தெளிவான ஒளிவட்டம்
சோளக் காட்டு பொம்மைக்கு
சேலையில் பரிவட்டம்

சோற்றுக்கு வழி யில்லை
மாற்றுக்குத் துணியில்லை
இற்றுப்போன கூரை வேய
கீற்றுக்கும் காசில்லை

தகரத்தின் தரம்கூட
தமக்கில்லை என உணர்ந்து
தங்கமானவர் எனும் பட்டம்
துறக்கவும் முடியவில்லை

தங்கம் அடகு பிடித்து
தணம் தரும் வங்கியரே
தம்மை அடகுப் பிடித்து
தம் குடும்பப் பசிக்கு
தம்பிடி உணவு கேட்கும்
தங்கமானவருக்கு
தருவீரோ தயைகூர்ந்து?

Series Navigationநினைவு நதிக்கரையில் – 1வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!