நினைவுகளின் சுவட்டில் – 88

This entry is part 12 of 41 in the series 10 ஜூன் 2012

வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் நான் மீன் சாப்பிட ஆரம்பித்து, பின் எல்லா மீன் வகைகளையும் ருசித்து அவற்றின் தராதரம் அறிந்த பின் தானே அந்த அபூர்வ ஹில்ஸா மீனை வங்காளிகளைப் பைத்தியமாககும் அதன் தனி ருசியை நான் அனுபவிக்க முடியும்? முதலில் நான் மீனே சாப்பிட்டதில்லையே. பட்நாயக்குக் கொடுத்த பார்ட்டி தினத்தன்று அவன் சொல்ல ஆரம்பித்தது. பல தடவை சொல்லி விட்டான். அது அவனுக்கு என்னிடம் இருந்த பற்றுதலின் வெளிப்பாடு .

அந்த ஒரு நாளும் வந்தது. “என் தங்கை வந்திருக்கிறாள். ஹில்ஸா கொண்டு வந்திருக்கிறாள். நாளைக்கு நீ வா சாப்பிட,’ என்றான் ஆபீஸில் இருக்கும் போது. இதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது எங்கள் செக்ஸனில் வயதில் மிகவும் மூத்தவரும் எங்களோடு வயது வித்தியாசம் பார்க்காது தமாஷாக கிண்டல் அடித்துக்கொண்டு, மற்றவர் செய்யும் கிண்டலையும் கேட்டுத் தானும் சிரித்துக்கொண்டு இருந்தவரான பாண்டே, எஸ். பி. பாண்டே என்று நினைவில் பதிந்திருக்கிறது, எஸ் பி. யின் முழுப்பெயர் என்னவென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. எங்களுக்கெல்லாம் அவர் ”பாண்டே சாப்” தான். அது போதும். அவர் அந்த ஊர்க்காரர். அதாவது ஒடியா. எப்போதும் 10 முழ வேட்டியை வங்காளிகளைப் போல் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு முனையை பஞ்சாபி குர்த்தாவின் பக்கவாட்டு பையில் வங்காளிகளைப் போல சொருகிக்கொண்டு தான் வருவார். “ஏய், பங்காளி சோக்ரா,,, என்னை ஏன் கூப்பிட மாட்டேன் என்கிறாய், ஒரு மதராஸி சோக்ராவை மாத்திரம் போய் மீன் திங்க கூப்பிடுவாயா? அதுவும் அபூர்வமா ஹில்ஸா மாச் வந்திருக்கு. நீ கூப்பிடாட்டாலும் நான் வந்துவிடுகிறேன். கவலைப் படாதே. நான் கிராமத்துக்கு போகலை அடுத்த வாரம் போய்க்கொள்கிறேன். நாளைக்கு காலை 12 மணிக்கு வந்துவிடுகிறேன்,”” என்று சொல்லிவிட்டார். எல்லோரும் சிரித்தார்கள். அவர்களைக் கூப்பிடாததை மிருணாலைச் சீண்டுவதற்கு வைத்துக்கொள் வார்கள். ஆனால் காலை 12 மணிக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்ல மாட்டார்கள். பாண்டே சாபுக்குத் தான் அந்த உரிமையும் ஆசையும் உண்டு. மிருணாலுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவனும் சிரிப்பில் கலந்துகொண்டான். .

மிருணாலின் தங்கைகள் இரண்டு பேர். அவர்கள் டாக்காவிலிருந்து வந்து கல்கத்தாவில் உறவினர்களுடன் இருந்திருக்கிறார்கள். மிருணாலுக்கு இங்கு வேலை கிடைத்ததும் இங்கு வர இருந்தார்கள். மிருணாலின் அப்பா சுரேஷ் சந்திர சக்கரவர்த்தியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். குட்டித் தங்கையிடம் அப்பாவிற்கு மிகவும் பிரியம். அது பற்றியெல்லாம் மிருணால் முன்னாலேயே அவ்வப்போது பேச்சோடு பேச்சாக சொல்லி வந்திருக்கிறான். அவர் இன்னும் டாக்காவில் தான் இருக்கிறார். டாக்காவிலிருந்து நண்பர்கள் அவ்வப்போது கல்கத்தா வருவார்கள். அவர்களிடம் தன் கடைக்குட்டிக்கு ஏதாவது வாங்கி வரச்சொல்வார். மிருணாலின் அப்பா. இது வழக்கம். எல்லா இடத்திலும் உள்ள வழக்கம் தான். ஒரு தடவை கல்கத்தா போய் வந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி சொன்ன பொருளை வாங்கி வரவில்லை. மிருணாலின் அப்பாவுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. முதலில் கோபத்தை அடக்கிக்கொண்டு “ஏன்? என்று சாதாரணமாகக் கேட்டிருக்கிறார். அவர்,”விலை கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கணுமா என்று வந்துவிட்டேன் என்று சொன்னதும், சுரேஷ் உடனே வெடித்துக் கனல் கக்கிவிட்டாராம். “ என் குழந்தைக்கு எது விலை அதிகம்?.என்று நீ யார் தீர்மானிப்பதற்கு? என்ன விலையானால் என்ன?, நான் என் சம்பளம் முழுதையுமே என் கோக்கிக்கு (குழந்தைக்கு) செலவழிக்கமாட்டேன் என்று நீயாக எப்படித் தீர்மானித்துக்கொண்டு கை வீசி வந்தாய்? உனக்கு என்னைப் பத்தி கோக்கியைப் பத்தி என்ன தெரியும்? எப்படி நீ என்னை அப்படிப் பட்ட கருமி என்று தீர்மானித்தாய்? என்ன ஆதாரத்தில்.? சொல்லு பாப்போம் ஏதாவது ஒரு சம்பவம் சொல்லு? என்று பிடி பிடி என்று பிடித்து குதறிவிட்டார் குதறி என்றே சொல்ல வேண்டும். அந்த மனிதன் பாவம், ஒரு ஸ்கூல் வாத்தியார். எவ்வள்வு தான் செலவழிக்க முடியும் என்று பரிதாப்பப்ட்டு வந்தால், இபபடி எரிந்து விழுவார் என்று நினைக்கவே இல்லை

விளையாடப் போன குழந்தை குறித்த நேரத்துக்குள் திரும்பாவிட்டால், கைலியோடேயே செருப்பை மாட்டிக்கொண்டு உடனே கிளம்பி விடுவாராம். அப்படி ஒரு நாள் போய்தான் ஒரு ஸ்கூலில் நடந்த கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டு அவர்க்ளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து அவர் பேசியது அடுத்த வார கல்கத்தா தேஷ் பத்திரிகையில் அது வெளிவந்திருந்தது. அதை மிருணால் என்னிடம் காட்டினான். தேஷ் மிக தரமான, பத்திரிகை. மிகப் பெரிய தலைகள் எல்லாம் அதில் எழுதினார்கள். ஆனால் ஒவ்வொரு வங்காளியின் வீட்டிலும் வாங்கப்படும் பிரபல பத்திரிகையும் ஆகும். புர்லாவிலும் அது வந்தது. மிருணால் வீட்டில் பார்த்திருக்கிறேன். சில சமயம் ஆஃபீஸுக்கு எடுத்து வருவான்

அந்த ஹில்ஸா மீன் விருந்து ஒன்றும் நினைவில் தங்கியிருக்கும் அளவுக்கு விசேஷமான ஒன்றல்ல. மனோஹர் லால் சோப்ராவின் தங்கை, செய்து கொடுத்த பராட்டாவும் உருளைக்கிழங்கு சப்ஜியும் சலாதும் இன்னம் நினைவில் இருக்கிறது. அது பழகிவிட்ட உணவு சிறந்த முறையில் ஒரு சிறுமி செய்தது என்ற காரணங்கள் இருக்கலாம் இதற்கு முன்னால் ஹிராகுட்டில் அங்கு போய் வேலைக்குச் சேர்ந்த புதிதில் என்னுடன் இருந்த மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்னை ஒரு நாள் சாப்பிடக் கூப்பிட்டிருந்தான். அது இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்னாக இருக்கும். அவனுடன் அதிக நெருக்கமோ, சினேகமோ இல்லை. ஆனால் தினப்படி அலுவலகத்தில் அவனுடன் உரசல் இருந்து கொண்டே இருக்கும். அதைச் சரிக்கட்டத் தான் அவன் சாப்பிட அழைத்தான். அது ஒரு சமாதான உடன்படிக்கைக்கான சடங்கு. முதல் தடவையாக ஒரு பெங்காளியின் வீட்டுச் சாப்பாடு. அது நினைவிலிருக்கக் காரணம் மீன் இல்லாத பெங்காளி சாப்பாடு. இந்த ஆளுக்கு இது போதும் என்று நினைத்தானோ என்னவோ. வீட்டில் அவன் மனைவி. ஒரு கைக்குழந்தை. நல்ல ஜீவன்கள். ஏதோ பருப்பு, சாதம் பின் ஏதோ கீரையில் செய்த ஒன்று. முதல் தடவையாக மோர் இல்லாத ரசம் இல்லாத சாப்பாடு. ஒரு Three course meal என்பதை எப்படியோ தமிழர்கள் கண்டுபிடித்துவைத்திருக்கிறார்கள். மேற்கத்திய நடைமுறைக்கு கொஞ்சம் கிட்ட வருகிற சமாசாரம். இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. நீராவியை வைத்து இட்லி என்ற ஒரு உணவுப் பண்டம் தென்னிந்தியா முழுதும் பழக்கமாகிவிட்ட, இந்தியாவிலும் தன் கியாதியைப் பரப்பி விட்ட இட்லி. அது தமிழ் தானா? தமிழ் ஒலிகொண்டதாக இல்லை. 19-ம் நூற்றாண்டு அன்றாட வாழ்க்கைச் சித்திரம் தரும் உ.வே.சா. கூட இட்லி காஃபியைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவருக்கே தெரியாத விஷய்ங்கள் போலும். பாரதியும் பேசவில்லை. அவர்கள் எல்லாம் காலை உணவு என்ன சாப்பிட்டார்கள்? சத்திரம் பற்றிப் பேசுகிறார்கள். ஹோட்டல்கள் பற்றி ஏதும் இல்லை. இவை பற்றியெல்லாம் எந்த தமிழறிஞரோ, பல்கலைக் கழகமோ ஆராய்ந்ததில்லை. இன்னமும் சங்ககால புலியை விரட்டிய முறம், பெண்டிர், கற்பு களவு பற்றிய ஆராய்ச்சிகளே இன்னம் முடியவில்லையோ என்னவோ.

மிருணால் வீட்டிலும் அதே கதை தான். ஹில்ஸாவைத் தவிர வேறு நினைவிருக்கும் பண்டம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் அங்கு அன்பு மழை கொட்டியது. ஒரு சின்ன பெண் 10-12 வயசுப் பெண் நான் மீனைச் சாப்பிட தடுமாறுவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? ஹில்ஸா மீனின் சின்னச் சின்ன எலும்புகளை நீக்கி சதைப் பற்றை மாத்திரம் எடுத்துக் கொடுத்தார்கள். எனக்கு அந்த சாமர்த்தியம் இல்லாத காரணத்தால். இங்கே நின்று கொண்டிருக்கிறதே, இன்னொரு தங்கை. மிருணாளினுடைய 18-19 வயசுத் தங்கை அவளுக்கு இன்னம் இரண்டு வருஷங்களில் கல்யாணம் ஆகப் போகிறது. மாப்பிள்ளை எங்கள் ஆபீஸிலேயே வேலை பார்க்கும் சன்யால் எனபவன். தான் மாப்பிள்ளை. கல்யாணம் கல்கத்தாவில். கல்யாணம் முடிந்து திரும்பி வந்ததும் என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள். அன்று அந்தத் தங்கை தான் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என் தட்டிலிருக்கும் மீனின் எலும்புக்ளை நீக்கி சாப்பிடும் பக்குவத்தில் தரவிருக்கிறாள். அதற்கு நான் இன்னம் இரண்டு வருஷம் காத்திருக்க வேண்டும். என் எதிர் நாற்காலியில் உடகார்ந்திருக்கும் சன்யாலும் மிருணாலும் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரிக்கவிருக்கிறார்கள்.

உண்மையில் அது சிரமமான காரியம் தான். அப்போது தான் இந்தியாவின் Naval Chief எஸ் முகர்ஜி என்பவர் ஜப்பானுக்கு அரசு அழைப்பில் போயிருந்தவர் எங்கோ விருந்தில் மீன சாப்பிடும் போது அதன் எலும்பு அவர் தொண்டையில் சிக்க மூச்சடைத்து அங்கேயே அந்த விருந்து மேஜையிலேயே இறந்து போனார். ஒரு வங்காளி கடற்படை வீரர் போயும் போயும் மீன் எலும்பு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி உயிர் இழந்தார் என்றால், பத்தொன்பது வயது தமிழ் கிராமத்து பிராமணன் பாடு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அது தெரிந்து தானோ என்னவோ மிருணாளின் வீட்டில் ஹில்ஸா மாச் தந்தது மட்டுமல்லாமல் அதைச் சாப்பிடவும் முதல் பாடம் கற்றுத் தந்தார்கள்.

மீன் சாப்பிட்டது, அதுவும் புர்லாவில் இருந்த வேறு எந்த பெங்காளிக்கும் அன்று கிடைக்காத ஹில்ஸா மாச் எனக்குக் கிடைத்தது. ஒரு பெங்காளி அடைந்திருக்கக்கூடும் பரவசம் எனக்கு கிடைக்காவிட்டாலும், அதற்கு வேண்டிய ரசனை எனக்கு இருக்காவிட்டாலும். அந்தச் சூழல் புதுமையாகவும் அன்பில் தோய்ந்த தாகவும் இருந்தது. பொழுது மிக நன்றாகக் கழிந்தது. மறு நாள் அலுவலகத்தில், ஒரே ரகளை. ”மதராஸி மீன் சாப்பிட்டுட்டு வந்திருக்கான் பார், நமக்குக் கிடைக்காத அதிர்ஷடம் ஒரு மதராஸி சோக்ராவுக்கு கிடைச்சிருக்கு” என்று. ஒரே கூச்சல்

மார்ச் மாதம். எங்கள் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் இரண்டே இரண்டு கிறித்துவர்கள் தான் இருந்தார்கள். தேவசகாயமும், ஜியார்ஜும் தான். ஈஸ்டருக்கு வெளியே போ9கவேண்டும் என்று முன்னர் ஒரு நாள் புது வருஷ பிரார்த்தனைக்கு சம்பல்பூர் போய் அங்கு நான் தூங்கிக் வழிந்த தினத்திலிருந்து, ஜியார்ஜ் ஈஸ்டர் பற்றியே பேசி வந்தார். எங்கே போவது, எங்கே தங்குவது போன்ற ஏற்பாடுகளையெல்லாம் ஜியார்ஜ் தலையில் தான் சுமத்தப்பட்டது. இரண்டு கிறித்துவர்கள், இரண்டு சிந்தாதிரிப் பேட்டைகள், ஒரு உடையாளூரான், வேலுவும் சகாயம் போல் நாஸ்ரத் காரர் தானா? தெரியாது. ஆனால் சகாயத்தின் நண்பர். அவர் மூலம் தான் எங்கள் கூட்டத்தில் அவர் சேர்ந்தார். ஏன். புர்லாவுக்கே வந்தார். ஆக அவரும் திருநெல்வேலிக்காரராகத் தான் இருக்கவேண்டும். நாஸரெத் இல்லையென்றாலும்.

நாங்கள் போக விருந்தது கலுங்கா என்னும் காட்டு நடுவிலிருந்த ஒரு இடத்துக்குப் போக விருந்தோம். முதலில் சம்பல்பூருக்கு பஸ்ஸில் போய், அங்கிருந்து கல்கத்தா- பம்பாய் மெயில் ரயில் பாதையில் இருந்த ஜர்ச்ஸகுடா ஜங்ஷன் சென்று அங்கிருந்து கல்கத்தா மெயில் ஏறி சிலமணி நேர பயணத்த்திற்குப் பிறகு வரும் கலுங்கா நிலையத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து உள்ளே ஒத்தடிப் பாதையில் காட்டுக்குள் நடந்து செல்லவேண்டும்.

நாங்கள் கலுங்கா போய்ச்சேர்ந்தது இரவில். இரவில் எங்கே போவது. காட்டுக்குள் ஒத்தடிப் பாதையில் போவது? ஸ்டேஷனிலேயே படுத்துக்கொள்வது என்று தீர்மானித் தோம். படுத்திருந்தோம். நடு இரவில் மணி விழித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை தொட்டு எழுப்பி, இது யார் பாருங்க, ஒரு மாதிரியா இருக்கு” என்று எழுப்ப, இரண்டு பேரும் எழுந்து உட்கார்ந்து பார்த்தால் பஞ்சாட்சரத்துக்கும் அது வினோதமாக இருந்திருக்கிறது. ஒரே கசமுச என்று சாதாரண மனிதக் குரல்களே ஆனாலும் நிசப்தமான, நடு இரவில் அதுவே சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனித அரவமாகத் தோன்றவில்லை. தேவசகாயத்துக்கு “இனி தூங்கினாப்பல தான்” என்று அலுத்துக் கொள்ளத்தான் தோன்றியது. ”அது ஒண்ணும் இல்லிங்க நாம் மாட்டிலே தூங்கலாம். எல்லாரும் ஈஸ்டர் ப்ரேயர்ஸ்க்கு சுத்து வட்டாரத்திலேருந்து வந்திருக்காங்க,” இவங்கள் எல்லாம் பழங்குடிங்க,” என்று சொன்னார்.. ”இல்லிங்க, தெரியாமச் சொல்றிங்க. சர்ச்சுக்கு பிரார்த்தனை பண்ணப் போறவனா இப்படி ஒவ்வொத்தனும் கம்பும் கழியுமா வருவானுங்க. வேறே என்னமோ இருக்குங்க, நீங்க எதுனாச்சும் தெரிஞ்சாப்பில கதை விடாதீங்க.” என்று மணி சொல்ல, கடைசியில் ஒவ்வொத்தரும் முறை வைத்து ஒரு மணிநேரம் விழித்திருப்பது என்று தீர்மானமாயிற்று. ஆனால் தீர்மானம் தான் ஆயிற்றே ஒழிய அந்தக் களைப்பில், நடு இரவில் யார் விழித்திருந்து காவல் காப்பார்கள்?. அதுவும் தனியாக?. எல்லோருமே தூங்கிப் போயிருந்தோம். அது காலையில் விழித்த போது தான் தெரிந்தது. .

—————————-

Series Navigationதங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *