பருந்தானவன்

This entry is part 31 of 45 in the series 4 மார்ச் 2012

இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு மட்டுமே தனது இருப்பை உணர்த்திவிட்டு மறைவது போன்றது தான் எனது தெறிப்பும் இருத்தலும்.தாமரை இலை மீது உருண்டு திரண்ட துளிகளாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் எனது விழைவு கூட என்னை உங்களிலிருந்து தனித்துக்காட்டுவதாய் படலாம்.ஆனால் சேற்றில் ஏது நீர்த்திவலைகள்.
ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதுமே எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போகின்ற நிலையில் தான் என்னை நானே கதாநாயகனாய் உருவகப்படுத்தி கொள்ள வேண்டியிருக்கிறது.இருந்தாலும் நீங்கள் நினைக்கலாம் இவனெல்லாம் கதாநாயகனாவென்று.எப்படியிருந்தாலும் இன்னும் கொஞச நேரத்துக்காயினும் நீங்கள் என்னோடு பயணப்பட்டுத்தான் ஆகவேண்டும்.விருப்புடனோ அல்லது கட்டாயத்துடனோ.ஏனென்றால் நான் சாப்பிடப்போகும் ஒரு கவளம் சோற்றில் சிறிதை நீங்கள் வாங்கி சாப்பிட முயற்சிக்கலாம்.அல்லது முகம் சுளித்து என்னை விட்டு தூர விலகி ஓடவும் முயற்சிக்கலாம்.ஆனால் எனது நினைவுகள் மட்டுமே அட்டையாய் உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.ஆகச் சிறந்த படைப்புக்களில் எதாவது ஒரு சிறு விஷயம் மட்டும் அடிக்கடி நம்மை தொற்றிக்கொள்வது போலத்தான் எனது இருப்பை நீங்கள் உணரப்போகிறீர்கள்.

நண்பர்களே நேர்த்தியான துணியை பலவாறாக கிழித்து பின்பு அதையே பல கோணங்களில் இணைத்து உடையாய் தைத்து தருகிற தையற்கலைஞனின் செயல் போன்றே எனது இருப்பும் பலவாறாய் பகுக்கப்பட்டு பின்பு நிகழ்வுகளை இணைக்கும் போது என் மீதான உங்களது அபிமானம் பெருகும்.இவன் தானா என்று நீங்களே கூட ஆச்சரியப்படலாம்.ஆனாலும் நான் எள்ளளவும் இதற்காகவெல்லாம் முயற்சிப்பவன் அல்ல.அதிர்ச்சி அடையாதீர்கள்.சாறு பிழியப்பட்ட கரும்புச்சக்கை போன்றே தூரவும் நான் வீசப்படலாம்.தேநீர் அருந்திய பின் கசக்கி எறியப்படும் காகிதக்குவளையாகவும் என்னை நீங்கள் ஆக்கலாம்.

அல்லி மலரோ ரோஜாவோ ஏந்தி காதலிக்காய் காத்திருக்கும் காதலனாய் என்னை காண நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.நான் ஏமாற்றுகாரனல்ல. உங்களுக்கு அந்த உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும்.இல்லையேல் நமக்குள் இடைவெளி பெருகிக்கொண்டே போகலாம்.புள்ளியாய் போன பின்பு கோலமிட மட்டுமே என்னை நீங்கள் உபயோகிக்கலாம்.பாருங்கள் எனது இருப்பை நீங்கள் உணர்வாக கொண்டு பயணிக்க தொடங்குதல் போலன்றி ’அவனா’ல் அது முடியாதுபோனது எனது துர்பாக்கியம் என்று தானே சொல்ல வேண்டும்.

அவன் கறுப்பாய் தடித்து தலைக்கு தடவின எண்ணெய் வடியும் கன்னக்கதுப்போடு,”டேய் முறுக்கு அந்த 25 கிலோ பொன்னி சிப்பத்த எல்லாம் ஒரு பக்கமா அடுக்கிட்டு அக்காவ விட்டு பெருக்கிட சொல்லு”என்றான்.வெள்ளை வேட்டி சட்டை சற்று கசங்கியிருந்தது.முறுக்கு என்பவன் பர்ர(மார்பு) எலும்பெல்லாம் தெரிகிற மாதிரி ஒடிசலான உடம்போடு’சரிண்ணா’என்றவன் ‘ய்க்கோவ்’என்று குரல் கொடுத்தான். அப்போது தான் நான் கையில் துணிப்பையோடு அவன் முன் நின்றேன்.
என்ன என்பதாய் பார்த்தான்.’அந்த அரிசி வேணும்’கீழே இரைந்து கிடக்கும் வீணான அரிசியை எடுத்து ஒரு ஓரத்தில் வட்ட வடிவ தகர டப்பாவில் வைத்திருந்ததை கண்களால் காண்பித்தேன்.’காலங்காத்தால வந்தா எப்புடி.இப்பத்தான் கடையே தொறந்தது’ என்றான் அவன்.

வீணாகிப்போகும் அரிசியை கவுண்டர் இலவசமாக தருவதாக கேள்விப்பட்டு தான் நான் வாணியம்பாடியிலிருந்து நகரத்தையே ஒட்டியிருந்த அந்த கிராமத்து அரிசி மண்டிக்கு வந்திருந்தேன்.சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலையோரத்திலேயே இருந்தது அந்த நகரத்து கிராமம்.வாகனங்கள் இரைச்சலோடு விரைந்து பயணித்தபடியே இருக்கும் பரபரப்பான நெடுஞ்சாலை.முன்பு எப்போதோ ஒரு இசைக்குழு தனது இசைக்கச்சேரியை முடித்துவிட்டு திரும்புகையில் இரவின் தூக்கக்கலக்கத்தில் ஓட்டுனரின் கவனக்குறைவால் முன்னால் சென்று கொண்டிருந்த பார வண்டியின் மீது மோதி மொத்த குழுவே அலங்கோலமாய் அகால மரணமடைந்திருந்த இடம் அது என்பது ஞாபகத்திற்கு வந்தது.

சாலையை பார்த்தபடியே மெதுவாக அரிசி மண்டியை விட்டு ஒதுங்கி ஒரு ஓரமாய் நின்று கொண்டேன்.மறுபுறம் தூரத்தில் ஏலகிரி மலையின் மலைச்சாலை வளைந்து நெளிந்து மேலேறினதாய் கண்களில் பட கீழிறங்கிக் கொண்டிருந்த வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் சூரிய ஒளி பட்டு பளீரென்று ஒளிக்கற்றை அவ்வப்போது தோன்றித்தோன்றி மறைந்தது.மழை பெய்து தணிந்திருந்த பருவமாதலால் பசுமையாய் சிலிர்த்து நின்றிருந்தது மலை.முப்பது வருடங்களுக்கு முன்பு ஒற்றைச்சாலையாய் இருந்த போது இந்த நெடுஞ்சாலையிலிருந்து பார்த்ததைப் போலத்தான் இப்போதும் இருந்தது மலை.மலை மாறவில்லை.எங்கெல்லாமோ சுற்றிவிட்டு காதோரம் நரை முடிகளை வாங்கிக்கொண்டு நான் மட்டும் தான் மாறினவனாய் அங்கு நின்றிருந்தேன்.

1980-களின் ஆரம்பம்.இசுலாமியா மேனிலைப்பள்ளியில் துவங்குகிறது வாழ்வின் மாற்றுப்பாதை.

நாற்பத்தைந்து வயதை கடந்து விட்ட பார்வதிக்கு மெலிதான குள்ள உருவம்.சாப்பாட்டு கூடையை தூக்கிக்கொண்டு அன்று பள்ளிக்கு வந்து சேர ஒன்றரை மணிக்கு மேலாகிவிட்டது.கடுமையான வெயில்.வியர்வையால் நனைந்த முகத்தை சேலைத்தலைப்பால் துடைத்தபடி கூடையை இறக்கி வைத்தவளிடம் வந்து நின்றான் முஸ்தாக்.’ஏன் லேட்டு?’ என்றவன் 12.50 க்கு சாப்பாட்டு மணியடித்து பார்வதி வர தாமதமாகிப்போனதால் சற்குணம் ஓட்டலில் மதிய சாப்பாடு சாப்பிட்டு முடித்திருந்தான்.

‘தம்பி வீட்ல லேட் பண்ணிட்டாங்க’என்றவளிடம்,’நான் சாப்டுட்டேன்.இந்த சாப்பாட நீங்களே சாப்டுடுங்கோ’என்று விட்டு பதிலுக்கு காத்திராமல் வகுப்பறையை நோக்கி சென்றான்.ஆனால் பார்வதி சாப்பாட்டை சாப்பிடாமல் அவனது வீட்டில் விஷயத்தை வேறு கூறிவிட்டாள்.அம்மா தான் ’மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றார்கள்.அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.இதற்கடுத்த தினங்களில் பார்வதி வர தாமதமானால் இவன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டிருந்தாலும் தனது டிபனை நண்பர்களுக்கு கொடுத்து அதை காலி செய்துவிட்டு தான் கொடுப்பான்.

பள்ளியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் நண்பர்கள் யாருமில்லாது பின்பு நாட்கள் நகர நகர அனைவரும் நட்பாகினர்.அப்படித்தான் பழனிச்சாமியும் நண்பனானான்.சாப்பிடும் போது,’என்னடா டிபன்ல’ என்றால்,’கம்பஞ்சோறு’என்பான்.சிறு சிறு பசிய நிற தானியச்சோறு.’சாப்பிடறியா’ என்று கவளம் எடுத்து கொடுப்பான்.ஆனால் யாரும் அதை சீண்டியதே இல்லை.

ஒரு நாள் சற்குணம் திடீரென்று,’டேய் எங்க ஓட்டல்ல வாரத்துக்கு ஒரு வாட்டி பிரியாணி செஞ்சு போடறதா எங்கப்பா சொல்லினு இருந்தாரு.நாளக்கி மொத நாள்.நம்முள்ளுக்கெல்லாம் ப்ரியா தரதா சொல்லியிருக்காரு’ என்று விருந்துபசரித்தான்.அன்று மட்டும் முஸ்தாக்கின் சாப்பாட்டுத்தூக்கு கறிச்சோறு நாய்களுக்கு விருந்தாற்றியது.

வாரத்தின் இறுதி நாளொன்றில் பழனிச்சாமி திடீரென்று அனைவரையும் தனது ஊருக்கு அருகிலுள்ள ஒரு கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தான்.’கோயிலுக்கு பக்கத்துல ஒரு ஜொன இருக்குது.அதுல ரொம்ப தண்ணி ரொம்பிகீது.போனாக்கா நல்லா நீந்தலாம்’ என்றான்.ஆனால் அன்று அவனது ஊருக்கு சென்றவர்கள் இரண்டு பேர் மட்டும் தான்.ஷபியுல்லாவும் முஸ்தாக்கும். சற்குணத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஓட்டல் தான் சுகவாசம்.’கல்லா’வில் அவனை உட்கார்த்திவிட்டு அவனது அப்பா மற்ற வேலைகளில் ஈடுபட்டுவிடுவார். ’ஓனர் தம்பி,ரெண்டு சாப்பாடு.காசு வாங்கிகங்க’,இப்படியாக அவன் புளங்காகிதம் அடையும் அளவுக்கு உபசரிப்புக்கள்.

பழனிச்சாமியின் வீட்டிற்கு சைக்கிளில் சென்றடைந்தனர் இருவரும்.அங்கிருந்து ஊரையே ஒட்டியிருந்த அந்த கானகத்து நீர்ச்சுனையை அவர்கள் அடைந்தனர்.வழியில் மரவள்ளி கிழங்குகளை வட்டமாக அரிந்து வெயிலில் உலர வைத்திருந்ததை கண்டு,’என்னடா அது’என்று ஷபியுல்லா கேட்க, ’அது கெழங்குடா.அத்த காய வச்சி மாவாக்கி ரொட்ட சுடுவாங்க’என்று பதிலுரைத்தான் பழனிச்சாமி.

பழனிச்சாமி லாவகமாக பாறைகளுக்கு நடுவிலிருந்த அந்த நீர்ச்சுனையின் அருகே சென்றுவிட்டான்.இவர்கள் இருவரும் சற்றே தடுமாறியபடி அங்கு சென்றடைந்த போது ‘பாத்துடா அங்க கால வெக்காதிங்க.அது முருகர் பாதம்’ என்றான்.பாறையில் பாதம் பதித்து வைத்தது போன்று சிறு பள்ளத்தின் சுவடு தெரிந்தது.’அதுல கால வெச்சவங்க ரத்தம் கக்கி இந்த ஜொனையில உலுந்து செத்துட்டாங்கடா’.கதையாய் சொன்னான் பழனிச்சாமி.

பயத்துடனே நீரில் இறங்கி ஆவேசத்துடன் நீந்தும் பழனிச்சாமியை ஆதங்கத்துடன் பார்த்தனர் இருவரும்.கரையோரமே அமர்ந்தபடி தண்ணீரை கைகளால் அள்ளி உடம்பை நனைத்துக்கொண்டு நேரமாகிவிட்டபடியால் கிளம்ப ஆயத்தமாகினர்.

பழனிச்சாமியின் வீட்டில் சூடான கம்பஞ்சோறும் பச்சைமிளகாய் போட்ட கார குழம்பும் பசித்த வயிற்றுக்கு அமிர்தமாய் உள்ளே இறங்கியது.அன்று வரை கம்பஞ்சோற்றை தவிர்த்து வந்தது குறித்து ஆற்றாமை ஏற்பட்டது.

ஊருக்கு திரும்பியவர்களில் முஸ்தாக் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வரமுடியாதபடிக்கு ஜுரத்திலும் ஷபியுல்லா ஒரு வாரமாக பள்ளிக்கு வராமலும் காலம் கடந்து சென்றது.பின்பு பள்ளிக்கு முழு ஆண்டு பரிட்சை விடுப்பு துவங்கி அனைவரும் பிரிந்து சென்றனர்.

தூரத்தில் காக்கி உடுப்பு உடுத்திய உயரிய உருவம் என்னை நோக்கி வந்தது.என்னைக்கடந்தும் சென்றது.என்னை ஒரு பொருட்டாகவே மதியாத அந்த உருவத்தை அடையாளம் காண எனக்கு சிறிது நேரம் கூட ஆகவில்லை.அவன் தங்கராஜ்.ப்ளஸ் டூ இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே போலீஸுக்கு தேர்வாகி பணியில் சேர்ந்துவிட்டவன்.தயக்கத்துடன் ‘தங்கம்’என்று கூப்பிட்டேன்.சட்டென்று நின்று என்னை திரும்பிப்பார்த்தான்.என்ன நினைத்தானோ திரும்பி என்னருகே வந்தவன்,’யாரது’ என்று கேட்டான்.
’நான் தான்…’ என்று கூறும் முன்னரே ‘அடேய்…நீயாடா?’என்று என்னை அடையாளம் கண்டு கொண்டான்.என்னைப்பற்றி விசாரித்தான்.பேச்சின் இடையிலேயே,’இந்த அரிசி மண்டி வச்சிருக்கிறவன் நம்ம பழனிச்சாமிடா.அவங்க அப்பாவுக்கு அப்புறம் இவன் தான் பாத்துக்குறான்’என்றான்.

‘ஆமா நீயெங்கே இங்க.எதாவது வேலையா வந்தியா?’இப்போது தான் என்னை அவன் முழுவதுமாக ஏற இறங்க பார்த்தான்.

நான் அந்த அரிசி மண்டியில் இலவசமாக அரிசி வாங்க வந்ததை கூறுவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையிலேயே அவன் ‘இரு நான் போய் பழனி இருக்கானான்னு பாத்துட்டு அவன கூப்புடறேன்’என்றுவிட்டு என் பதிலையும் எதிர்பார்க்காது அரிசி மண்டிக்குள் நுழைந்துவிட்டான்.

நான் செய்வதறியாது நின்றிருந்தேன்.மனதுக்குள் ஏதோ ஒன்று குடைய ஆரம்பித்தது.மெதுவாய் துணிப்பையை கக்கத்துக்குள் இடுக்கிக்கொண்டு சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.சாலையை நெருங்கும் போது எனக்கு பின்னாலிருந்து, ’டேய்…முசு..முசு’ என்ற குரல் என்னை துரத்துவது போன்றே கேட்டுக்கொண்டிருக்கிறது.

எனக்கு குடும்பம் என்று ஒன்றிருந்திருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா என்று யோசிக்கிறேன்.இங்கில்லையென்றால் வேறெங்காவது யாராவது இல்லாமலா போய்விடுவர் என்ற எண்ணமும் மேலோங்க பருந்தாய் மாறி இரை தேட வேகமாய் பறக்க ஆரம்பிகிறேன்.மனதின் எங்கோ ஒரு மூலையில் என்னை அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நப்பாசையும் துளிர்விட்டதை மறுக்க முடியாது பறத்தலில் ஈடுபட்டேன்.

-சு.மு.அகமது

Series Navigationமார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.
author

சு.மு.அகமது

Similar Posts

4 Comments

  1. Avatar
    Thambi Firdous says:

    பருந்தானவன் இரை தேடி பறக்க ஆரம்பித்தான் இரை கிடைக்குமென்ற நம்பிக்கையில்…!

  2. Avatar
    Thambi Firdous says:

    ”அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு மட்டுமே தனது இருப்பை உணர்த்திவிட்டு மறைவது போன்றது தான் எனது தெறிப்பும் இருத்தலும்”.

  3. Avatar
    Thambi Firdous says:

    “நேர்த்தியான துணியை பலவாறாக கிழித்து பின்பு அதையே பல கோணங்களில் இணைத்து உடையாய் தைத்து தருகிற தையற்கலைஞனின் செயல் போன்றே எனது இருப்பும் பலவாறாய் பகுக்கப்பட்டு பின்பு நிகழ்வுகளை இணைக்கும் போது என் மீதான உங்களது அபிமானம் பெருகும்”

  4. Avatar
    Thambi Firdous says:

    “நேர்த்தியான துணியை பலவாறாக கிழித்து பின்பு அதையே பல கோணங்களில் இணைத்து உடையாய் தைத்து தருகிற தையற்கலைஞனின் செயல் போன்றே எனது இருப்பும் பலவாறாய் பகுக்கப்பட்டு பின்பு நிகழ்வுகளை இணைக்கும் போது என் மீதான உங்களது அபிமானம் பெருகும்.இவன் தானா என்று நீங்களே கூட ஆச்சரியப்படலாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *