சிரியாவில் என்ன நடக்கிறது?

பிபிஸி

ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற பார்வையாளர்களும் மார்ச் 2011இலிருந்து இதுவரை 9000 பேர்கள் சிரியா போராட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

போராட்டம் எப்படி ஆரம்பித்தது?

டேராவில் ஆரம்பித்த போராட்டம்

சிரியா நாட்டின் தெற்கில் இருக்கும் நகரமான டேரா (Deraa)வில் 14 பள்ளிச்சிறுவர்கள் துனிசியாவிலும் எகிப்திலும் மக்களது கோஷமாக இருந்த ஒரு கோஷத்தை சுவரில் எழுதினார்கள். அரபி மொழியில்.”மக்கள் இந்த அரசு வீழவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்ற பொருள். இதற்காக போலீஸ் இந்த சிறுவர்களை கைது செய்து அழைத்து சென்று சித்ரவதை செய்தது. இந்த சிறுவர்களை விடுவிக்க வேண்டும் என்று பெற்றோர்களும் மற்றவர்களும் தெருக்களில் குழுமினார்கள். இந்த கூட்டத்தில் ஜனநாயகத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும் உரிமைக்குரல் எழுப்பினார்கள். இந்த நேரத்தில் ஜனாதிபதி அஸ்ஸாத்தின் ராஜினாமாவை கோரவில்லை.

18ஆம் தேதி மார்ச் மாதம் தெருக்களில் ஊர்வலம் போனபோது போலீஸும் ராணுவமும் இந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டார்கள். அடுத்த நாள் இந்த மக்களின் சவ ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் இன்னொருவர் கொல்லப்பட்டார்.

சில நாட்களிலேயே அந்த டேரா நகரத்து கலவரம் கட்டுப்பாடின்றி பரவ ஆரம்பித்தது. இதனால், ராணுவத்தின் ஆயுதப்படை இறங்கியது. இந்த படையை நடத்தியவர் ஜனாதிபதியின் சகோதரர் மாஹெர். ஏராளமானவர்கள் கொல்லப்பட்டார்கள். டாங்கிகள் வீடுகளின் மீது குண்டுமழை பொழிந்தன. யாரெல்லாம் போராட்டத்தில் பங்குபெற்றார்கள் என்று சந்தேகப்பட்டவர்கள் வீடுகளெல்லாம் போலீஸும் ராணுவமும் புகுந்தது.

தொடர்ந்து பரவும் போராட்டம்

ஆனால், இந்த ராணுவ நடவடிக்கை டேராவில் கலவரத்தை நிறுத்த முடியவில்லை. இது மற்ற நகரங்களிலும் போராட்டத்தை துவக்க வைத்தது. பனியாஸ், ஹோம்ஸ், ஹமா, தலைநகர் டமாஸ்கஸின் சுற்றுப்புறங்கள் ஆகிய இடங்களில் போராட்டமும் கலவரமும் வெடித்தது. ராணுவம் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. மே மாதத்துக்குள் பலி எண்ணிக்கை 1000த்தை தொட்டது.

போராட்டக்காரர்களுக்கு என்ன வேண்டும்?

போராட்டம் ஆரம்பிக்கும்போது அஸ்ஸாத் பதவி விலக்வேண்டும் என்று கோரவில்லை என்றாலும், பல போராட்டக்காரர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்ட பின்னால், இப்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அஸ்ஸாத் பதவி விலகவேண்டும் என்று கோர ஆரம்பித்திருந்தார்கள்.

ஜனாதிபதி அஸ்ஸாத் பதவி விலக் மறுத்துவிட்டார். 48 வருடமாக இருந்த அவசர நிலை (state of emergency) ஏப்ரல் 2011இல் நீக்கப்பட்டது. (அவசர நிலை என்பது ஏறத்தாழ ராணுவ ஆட்சி).பல கட்சி தேர்தலும் அனுமதிக்கப்படும் என்று கூறினார். மக்கள் கொல்லப்படும்போது அஸ்ஸாதின் வாக்குறுதிகள் பொருளற்றவை என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

எதிர்கட்சி என்று ஒன்று உள்ளதா?

சிரியா அதிகாரிகள் வெகுகாலமாகவே எதிர்கட்சி நடவடிக்கைகளே இல்லாமல் பார்த்துகொண்டிருந்தார்கள். இருந்தாலும் இந்த உதிரி எதிர்கட்சிகளே இந்த போராட்டத்தின் ஆரம்பமும். போராட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததும் இந்த போராட்டத்துக்கு பகிரங்கமாக எதிர்கட்சிகள் ஆதரவளித்தார்கள். இந்த எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து சிரியன் நேஷனல் கவுன்ஸில் என்ற ஒன்றை உருவாக்கின. (இது துருக்கியிலிருந்து செயல்படுகிறது)

புர்ஹான் காலியோன்

புர்ஹான் காலியோன் என்பவர் இதன் தலைவர். இதில் பல கட்சிகள் இருந்தாலும், முஸ்லீம் பிரதர்ஹூட் என்ற அமைப்பும் இதில் உள்ளனர். இந்த அமைப்பில் சிரியா நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் சுன்னி பிரிவினரே உள்ளனர். இதில் கிறிஸ்துவர்களையும் அஸ்ஸாதின் மதப்பிரிவான அலாவயித் பிரிவினரையும் இந்த அமைப்பு சேர்க்கமுயற்சித்தாலும் அது வெற்றிபெறவில்லை. இந்த இரண்டு பிரிவினரும் சிரியா நாட்டு அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளனர். மேலும் இந்த சிரியன் நேஷனல் கவுன்ஸில் சுன்னி இஸ்லாமிய தீவிரவாதிகள் நிரம்பியது என்பதாலும் கிறிஸ்துவர்களும் ஷியா பிரிவினரான மற்றவர்களும் இதில் சேரவில்லை. ஆனால், உலக நாடுகள் இந்த சிரியன் நேஷனல் கவுன்ஸிலையே அங்கீகரிக்கிறார்கள்.

இதே நேரத்தில் சிரியா ராணுவத்திலிருந்து வெளியேறிய பலர் சுதந்திர சிரியா ராணுவம் என்ற ஒன்றை நடத்துகிறார்கள்.Free Syrian Army (FSA), இவர்களும் துருக்கியை மையமாக கொண்டு சிரியா ராணுவத்தின் மீது ராணுவ தாக்குதல்களை தொடுக்கிறார்கள்.

சுதந்திர சிரியா ராணுவம்

இந்த எதிர்ப்பு படை ஜனவரி 2012இல் ஜபாதானி என்ற நகரத்தை விடுவித்ததாக அறிவித்தது. சில நாட்களிலேயே தூமா என்ற நகரத்தையும் சில மணி நேரங்களில் இந்த சுதந்திர சிரியா ராணுவம் கைப்பற்றியது. பெப்ருவரி 2012 இல் அரசாங்க படைகள் இதே பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்தியதால், சுதந்திர சிரியா ராணுவப்படை பின்வாங்கியது. இந்த ஒரு மாத போரில் சுமார் 700 பேர்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு அரசங்க படைகள் மீண்டும் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றினார்கள்.

இந்த சுதந்திர சிரியா படையின் தலைவர் ரியாத் அல் அஸாத் தனக்கு கீழ் 15000 போர்வீரர்கள் இருப்பதாக கூறுகிறார். ஆய்வாளர்கள் இவரிடம் 7000 பேரே இருப்பார்கள் என்று கணக்கிடுகிறார்கள்.

மார்ச் 2012 இல் இந்த படை கோபி அண்ணானின் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுகொள்வதாக் கூறினார்கள். ஆனால், அரசாங்கம் தனது ஆயுதத்தை கீழே போடாது என்று மறுத்த்தால், இவர்கள் அந்த சமாதான ஒப்பந்தத்தை சந்தேகத்துடன் பார்ப்பதாக தெரிவித்தார்கள்.

உலக நாடுகள் சமூகம் என்ன செய்கிறது?

சிரியா மத்தியக்கிழக்கில் ஒரு முக்கியமான நாடு. இங்கே நடக்கும் எந்த குழப்பமும் லெபனான் இஸ்ரேல் போன்ற நாடுகளை பாதிக்கும். இந்த நாட்டு ராணுவத்தின் கையாட்களாக இருக்கும் ஹிஸ்பொல்ல்லா என்ற அமைப்பும், ஹமாஸ் என்ற அமைப்பும் வேறுவிதங்களில் தங்களை வெளிப்படுத்தும். இந்த நாடு ஈரானுடனும் நெருங்கிய தொடர்புடையது. (நாட்டை ஆளும் தலைவர் அஸ்ஸாத் ஷியா பிரிவைசேர்ந்தவர். ஈரானும் ஷியா பிரிவு நாடு) ஈரான் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் கடுமையான எதிரியாக இருக்கிறது.

சிரியா பிரச்னையில் மௌனமாக இருந்த அரபு லீக் அமைப்பு 22 நாடுகளை கொண்டது. இது ஆரம்பத்தில் இங்கே இருக்கும் வன்முறை நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், அரசியல் ராஜதந்திர காரணங்களுக்காக எந்த செயலையும் செய்யப்போவதில்லை என்று கூறிவிட்டது.

ஆனால் நவம்பர் 2011இல் கட்டார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவை அரபு லீகிலிருந்து நீக்கின. அமைதி பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா அரசு தயங்கியபோது, அதனை உந்துவதர்காக, அரபு லீக், சிரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

ஜனவரி 2012இல் அரபு லீக் இரண்டு வாரத்துக்குள் அரசியல் மாற்றத்துக்காக பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்து தன் பொறுப்புகளை ஒரு துணை ஜனாதிபதியிடம் கொடுக்க வேண்டும் என்று கோரியது. இது பிறகு பல கட்சி தேர்தலுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ரு கோரியது. இதன் பிறகு திடீரென்று அதிகரித்த வன்முறையின் காரணமாக, அரபு லீக் அமைதி பார்வையாளராக சிரியாவுக்கு செல்வதை விலக்கிக்கொண்டது.

சிரியாவில் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படவேண்டும் என்று கோரியும் பல கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும் அரபு லீக் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கேட்டுகொண்டது. ஆனால், சிரியா இது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது என்று சொல்லி மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்தை ரஷியாவும் சீனாவும் வீடோ உரிமையை பயன்படுத்தி நீக்கின. ரஷியா சிரியாவோடு நெருங்கிய பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை கொண்ட நாடு. சீனா இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு முறைதான் வீடோ சக்தியை உபயோகித்திருக்கிறது. இது இரண்டாவது தடவை.

மார்ச் 2012இல் ஒரு மாதமாக ஹாம்ஸ் நகரை ராணுவம் குண்டு மழை பொழிந்து கொன்றதில் சுமார் 700 பேர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இது உலக நாடுகளை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியது. ஐக்கிய நாடுகள் சபையும் அரபு லீக் அமைப்பும் முன்னாள் ஐக்கிய நாடுகள் செகரட்டரி ஜெனரல் கோபி அண்ணானை சமாதான தூதுவராக சிரியாவுக்கு அனுப்பின. ஆறு அம்ச சமாதான திட்டத்தை அவர் முன்மொழிந்தார். இதன் படி ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். மக்களது போராட்டம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன அடங்கியது இந்த ஆறு அம்ச திட்டம்.

கோபி அண்ணானுடன் அஸ்ஸாத் பேச்சுவார்த்தை

மார்ச் 27 2012ஆம் தேதி, சிரியா அரசாங்கம் சமாதான திட்டத்தை ஒப்புகொண்டது என்று கோபி அண்ணான் தெரிவித்தார். ஆறு நாட்களுக்கு பின்னால் , ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள்ளாக ராணுவ படைகள் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து நீக்கப்படும் என்று அஸ்ஸாத் உறுதி அளித்ததாக கூறினார். அவநம்பிக்கை இருந்தாலும் இந்த திட்டத்துக்கு மற்ற நாடுகள் ஆதரவளித்தன. போர்நிறுத்த வேளை வந்தாலும் வன்முறை தடுப்பாரின்றி அதிகரித்துகொண்டே சென்றது.

ஏப்ரல் 8ஆம்தேதி சிரிய வெளியுறவு அமைச்சகம், “தீவிரவாத குழுக்களை” ஒடுக்கும் வரைக்கும் ராணுவம் தன் வேலையை நிறுத்தாது என்று அறிவித்தது. தீவிரவாத குழுக்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்று கோரியது. சுதந்திர சிரியா ராணுவம் கோரிக்கையை நிராகரித்தது.

இது மதப்பிரிவு போரா?

அஸ்ஸாத்துக்கு ஆதரவாக சிறுபான்மையினர், கிறிஸ்துவர்கள் ஷியாக்கள்

சிரியாவில் 21 மில்லியன் மக்கள் உள்ளார்கள் (2 கோடி பேர்கள்) இதில் 74 சதவீதத்தினர் சுன்னி பிரிவினர். மீதம் 10 சதவீதத்தினர் ஷியா பிரிவினர் இந்த ஷியா பிரிவில், இஸ்மாயிலி, பன்னிரண்டாமவர், ஆலவாயித் ஆகிய பிரிவினர் உண்டு. இன்னும் 10 சதவீதத்தினர் கிறிஸ்துவர்கள். ஜனாதிபதி அஸ்ஸாத் ஷியா பிரிவான ஆலவாயித் பிரிவை சேர்ந்தவர். அரசாங்கமும் அரசாங்கத்தின் அனைத்து தூண்களிலிலும் ஆலவாயித் பிரிவே ஆட்சி செலுத்துகிறது. ஆனால், சிரியா ஒரு மதசார்பற்ற அரசாங்கம் என்பதை அஸ்ஸாத் முன்னிருத்துகிறார். இதன் மூலம் இனப்பிரிவை தாண்டி மதப்பிரிவை தாண்டி சிரியா அடையாளத்தை முன்னிருத்துகிறார்.

இருந்தாலும் அவரது குடும்பத்திலும் ஆலவாயித் பிரிவினரின் கையிலும் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் குவித்திருப்பதால், அரசாங்க அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட சுன்னி பெரும்பான்மை அரசாங்கத்தை ஒரு ஊழல் நிறைந்த அரசாங்கம் என்று அழைக்கிறது. போராட்டங்களும் கலவரங்களும் சுன்னி பெரும்பான்மை பிரதேசங்களிலேயே அதிகம் நிகழ்கின்றன. பலர் கலந்து வாழும் இடங்களில் கலவரங்கள் இல்லை.

Series Navigationகங்குல்(நாவல்)ராஜமௌலியின் “ நான் ஈ “