வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயற்கையான இயல்புகளும் இடையில் மனிதனே விதித்த சில விதிகளூம் ஒன்றிணைந்து இயங்குவது வாழ்வியல்
பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்புடைத்தே என்ற இலக்கணக்கோடும் வரைந்து கொண்டோம். மனிதன் உணர்வுகளால் ஆன ஓர் பிண்டம். யானையை அடக்க முடிந்தவனுக்கு அவன் மனத்தை தனக்குள் ஆளுமைப் படுத்துவது கடினமான செயலாக இருக்கின்றது. மனிதனின் அமைதிக்கு அறியாமை தேவையா அல்லது அறிவு சிறந்ததா? அறிவினால் ஒவ்வொன்றையும் கூறுபோட்டு பார்த்துக் கொண்டே போகையில், வெங்காயம் தோலுரித்துப் பார்க்கையில் இறுதியில் ஒன்று மில்லாதது போல் வெறுமை உணர்கின்றோமா? வாழ்வியல் சொல் அழகானது. வள்ளுவர் சட்ட நூலையும் எழுதியுள்ளார். ஆனால் வாழ்க்கைப் பாதை எளிமையாக இனிமையாக இல்லையே, இருப்பது போன்று தோற்றமாகிவிட்டதே. நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. அமைதி வேண்டாம் என்று சொல்வோமா? விலை மதிக்க முடியாத உயர்ந்த ஒன்று  “அமைதி.”
சிகப்பு விளக்குப் பகுதியிலிருந்து புறப்பட்டு இரவு நேர மும்பையைப் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு பக்கம் கண்ணைப் பறிக்கும் விளக்குகள். விண்ணை எட்டிப் பிடிக்க முயலும் கட்டடங்கள்.! இன்னொரு பக்கம் மங்கிய வெளிச்சம் அல்லது இருள். நடைபாதை படுக்கையில் மனித உடல்கள். உயிருள்ளவைகள்தான். பகலில் அலைச்சல். இரவில் ஒதுங்க அவனுக்குக் கிடைத்த இடம். அவன் இல்லறம் எப்படி நடக்கும் ? அங்கே ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள் (எதிர்கால குடிமகன்) எல்லோரும்தான் இருந்தனர். இருப்பு இருந்தால்தானே இழப்பு பற்றி கவலை. பாதுகாப்பாக வைப்பதற்கு ஒன்றுமில்லை.பசிக்கு உணவு , உடலை மறைக்க துணி. இது போதும். உணர்ச்சிகளின் உரசல்களும் அங்கேயே.. யாரும் பார்ப்பார்களோ என்ற எண்ணம், தயக்கம் கிடையாது. நடப்பதைப் பார்த்துவிட்டும் போகட்டும். அலுப்பில் தூக்கம் வந்துவிடும்.  இறந்தால் ஒரு நாள் கொஞ்ச நேரம் அழுகை. அங்கே உறவின் பலமும் அவ்வளவுதான். அவர்கள் துறவறம் போக வேண்டியதில்லை. காவி உடுத்திக் கொண்டு இருப்பவனுக்குக் கூட சலனங்கள், சபலங்கள், ஆசைகள் வருகின்றன. ஒரு நாள் கழிந்தால் சரி என்று வாழ்பவர்களின் ஆசையின் வாழ்வு சில வினாடிகளே.
தூங்குகின்றவர்களை எழுப்பி பேட்டி காண்பீர்களா என்று கேட்டவர் சாரி. ஒன்றும் பேசாமல் மவுனமாகப் பார்த்துக் கொண்டு வருகின்ற என்னை அவர் எப்படி பார்க்கின்றார் என்ற நினைவு கூட எனக்கு வரவில்லை. நடைபாதை வாழ்க்கை பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவர்களுடன் பேசியிருக்கின்றேன். நானும் மேரி அம்மாவும் நீலமலை உச்சியில் நின்று கொண்டு இந்த நடைபாதை மனிதர்களை நினைத்து உரையாடியிருக்கின்றோம். இளங்குற்றவளிகள், நடைபாதை மனிதர்கள், வாழக்கையைத் தொலைத்த விலைமாதர்கள் இவர்களைப்பற்றிய ஆய்வுகள், அவர்களின் வாழ்வின் சீரமைப்புக்குச் சில ஆலோசனைகள் கூறி வந்தார்.  நம்மிடையே வழிகாட்டும் மிகச் சிறந்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். இப்பொழுதும் இருக்கின்றார்கள். ஆனால் நாம் கவர்ச்சியின் பின் அலைகின்றோம்.
மும்பை நகரத்தின் சிகப்பு விளக்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களை தமிழக அரசு 1990 ஆம் ஆண்டு சென்னைக்கு அழைத்து வந்து புழல், செங்கல்பட்டு சிறைகளில் புனர் வாழ்வு அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் வைத்திருந்தனர். சமூக நலத்துறைக்குப் பொறுப்பு கொடுத்திருந்தனர். அதே வருடம் ஜனவரி மாதம் 23 ந்தேதி என் தாயார் கீழே விழுந்து ஸ்ட்ரோக் வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிர் பிழைத்தார்கள். ஆனால் கால்கள் நடக்க முடியாமல் போய்விட்டது. நினைவுகளும் பாதிக்கப்பட்டு விட்டன. மூளை பாதிக்கப்பட்டுவிட்டது. வீட்டில் யாரும் இல்லை. நான் களப்பணியில் கடுமையாக உழைக்க முடிந்தது என்றால் எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்காமல் என் தாயார் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டதால்தான். இப்பொழுது என் முதல் கடமை என் தாயின் பக்கத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.எனவே விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து கொண்டேன்.
என் பணியில் ஒரு பிரச்சனை. அக்காலத்தில் பிறப்பு இறப்பு அதற்குரிய அலுவலகங்களில் பதிய வேண்டும் என்பது காட்டாயமில்லை. நான் பிறந்தது ஒரு தேதி. ஆனால் என் பள்ளிச் சான்றிதழில் இருந்த தேதி வேறு.   2 வருடங்கள், ஆறுமாதங்கள் பத்தொன்பது நாட்கள் கூடுதலாகப் போட்டுவிட்டனர். அப்பொழுது என் தாயருக்குத் திருமணம் ஆகவில்லை யென்பதைவிட அவர்கள் பெரிய மனுஷிகூட ஆகவில்லை. அக்காலத்தில் பெரிய மனுஷி ஆகும் முன்னர் பெண்ணிற்குத் திருமணம் நடத்திடல் வேண்டும். அரசில் நுழைந்த ஐந்து ஆண்டுகளில் இதனை மாற்றம் செய்து கொள்ளலாம். அதுவும் அப்பொழுது தெரியவில்லை. பின்னால் தெரிந்து மனுச் செய்த பொழுது முடியாது என்று உத்திரவு வந்துவிட்டது. அதன்படி 1990 ஏப்ரிலில் பதவி ஓய்வு பெற வேண்டும். என் துறைக்கு நான் வேண்டும். வீட்டிற்கு வண்டி அனுப்பினார்கள். மீனுபாய் என்ற ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துவிட்டு அலுவலகம் சென்றேன்.
இப்பொழுது பிரச்சனை சாதாரணம் அல்ல. ஆயிரக் கணக்கான பெண்களைக் கூட்டிவந்து இங்கே ஓரிடத்தில் வைத்துவிட்டனர். எங்கள் துறையில் வேலை பார்க்கும் களப்பணியாளர்களின் கணவன்மார்கள் விடுப்பு எடுக்கச் சொல்லி மனைவியை அனுப்பவில்லை. ஏதோ தையல் இயந்திரம் கொடுத்து நான்கு வரி புத்திமதி கொடுத்தால் போதும் என்று நினைத்துவிட்டனர்.
ஆர்வம் இருந்தால் போதாது. கட்சிக்கு சாதனைப் பட்டியலுக்காகச் சில திட்டங்கள் அறிவித்து விடுகின்றனர். நடைமுறைச் சிக்கல் பார்த்து அறிவிப்புகள் தெரிவிப்பதில்லை. எல்லோருக்கும் ஓர் வேண்டுகோள்  தாங்கள் அறிவிக்க விரும்பும் திட்டங்களை முதலில் பட்டியல் தயாரித்து அவைகளில் பயன்பெறும் திட்டங்கள் எவை என்று முதலில் வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்துவிட்டுச் செய்யவும். மக்கள் பயன் பெறும் பொழுது அந்தக் கட்சிக்கு புகழ் சேரும். பயனின்றி வீணாகும் பொழுது கட்சிக்கு ஒரு கரும் புள்ளியைக் குத்திவிடுவார்கள். அரசு இயந்திரமும் பொறுப்புடனும் அக்கறையுடனும் பரிசீலனை செய்து வழி காட்ட வேண்டும். கிருஷ்ணவேணி கதையை ஏற்கனவே இத்தொடரில் பதிந்திருக்கின்றேன்
அலுவலகம் சென்ற நான் வெளிப்படையாக என் கருத்தைக் கூறினேன். மும்பையிலிருந்து இப்படி கூட்டி வரும் முன்னர் அவர்கள் வந்தால் என்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். ஏற்கனவே பல ஆண்டுகள் அத்தொழிலைச் செய்து வந்தவர்களால் வேறு தொழிலுக்கு அவ்வளவு சீக்கிரம் போக முடியாது. ஒரு காலத்தில் தையல் இயந்திரங்கள் சில பெண்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அவைகள் வீட்டிலே ஒரு மூலையில் வைக்கப்பட்டு துணிமணிகள் , கையில் கிடைக்கும் பொருட்களை வைக்கும் ஓர் இடமாக இருக்கின்றது. கிடைத்த காசிற்குச் சிலர் விற்று விட்டனர். இனிமேல் தையல் பயின்று இவர்கள் தொழில் ஆரம்பிப்பது என்பது நடைமுறையில் நடக்காது என்றேன். முதலில் இவர்கள் யாரென்று தெரிந்தால் அந்த சமுதாயம் ஏற்காது. மும்பையில் செய்த தொழிலை இங்கே பரவலாகச் செய்வார்கள்.  இடம் மாற்றமே தவிர தொழில் மாற்றம் நடக்காது என்றேன் .என்னைக் கோபமாகப் பார்த்தாலும் அவர்களுக்கும் உண்மை புரிந்த்து. அரசியலை எதிர்த்து அரசு இயந்திரமும் செயல்பட முடியாது. சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சிலர் தங்கினர். பலர் குடிசைத் தொழிலாக தொழில் நடத்துவதைவிட மும்பை நகர வாழ்க்கை பிடித்திருந்ததால்  வெளிவந்தவர்கள் அதே இடத்திற்குத் திரும்பினர். எத்தனை பேர்களுக்கு இது தெரியும் ?
ஶ்ரீசாதனா என்ற நிறுவனம்பற்றிச் சொல்லும் பொழுது ஒரு நிகழ்வைக் கூறுவதாகச் சொன்னேன். அதனை இப்பொழுது கூறுகின்றேன். தொடங்கும் முன்னர் ஒரு வேண்டுகோள்.. ஒரு ஊரின் பெயர், தொழிலின் பெயர் இதுபோன்று குறித்தால் அக்கூட்டமே மொத்தமும் அவர்களை இகழ்வதாக நினைத்து சண்டை போட ஆரம்பித்திருக்கின்றோம். தயவு செய்து அப்படி நினைக்காதீர்கள். மனிதர்களில் எல்லாத் தரப்பிலும் நல்லது செய்பவர்களும் தீயது செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
1963 இல் நடந்த நிகழ்ச்சி.  மலையில் ஜீப்பில் போய்க் கொண்டிருக்கும் பொழுது அந்த வாகன ஓட்டி வண்டியிலிருந்த அந்தப் பெண்  அதிகாரியைக் கெடுத்துவிட்டான். இந்தச் செய்தியில் எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் அதன் பின்னர் அந்த அதிகாரி வீட்டில் அதிக நாட்கள் அந்த டிரைவர் தங்க ஆரம்பித்தான். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருந்தன. நான் அப்பொழுது வட ஆற்காடு மாவட்டத்தில் மாவட்ட அலுவலராக இருந்தேன்.  எந்த ஊரில் பணியாற்றினாலும்  ஒரு பெண்ணிற்குத் துன்பம் என்றால் விசாரிக்க ஆரம்பித்துவிடுவேன். முடிந்த அளவில் காப்பாற்றவும் முனைவேன். முதலில் செய்தி உண்மையா என்று பார்த்ததில் அந்த டிரைவரின் பிடியில் அந்தப் பெண் இருப்பது உண்மை என்று தெரிந்தது. உடனே என் மேலதிகாரிகளிடம் போய் அதிலும் அந்தப் பெண்ணின்மேல் பிரியமான அதிகாரியிடம் சொன்னேன். அவர்கள் என்மேல் கோபப்பட்டார்கள். உண்மையில் அந்தப் பெண் அடக்கமானவள் நல்லவள் எல்லோருக்கும் பிரியமானவள். எனவேதான் என்மேல் கோபம் வந்தது. ஆனாலும் அவர்களை அந்த ஊருக்குப் போய்ப் பார்க்க நிர்ப்பந்தம் செய்தேன். அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டு போனார்கள்.  திரும்பி வந்தவுடன் என்னை கூப்பிட்டனுப்பினார்கள். அந்தப் பெண்ணின் வீட்டில் அவன் உடைகள் இருப்பதும் விருப்பம் போல் வருவதும் போவதையும் நேரில் பார்க்கவும் என் கூற்றின் உணமையைப் புரிந்து கொண்டார்கள். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெண் துணிந்து வெளிவர முடியாத நிலை. நான் ஒரு ஆலோசனை சொன்னேன். பதினைந்து நாட்களுக்கு ஓர் சிறப்புப் பயிற்சி ஏற்பாடு செய்து வரச் சொல்லுங்கள்.. வந்த பின்னர் சென்னையிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்யலாம் என்றேன்.அப்படி கூறியதற்குக் காரணம் அதிகமான உடைகள், மற்றும் தேவையானவைகள் எடுத்துவரலாம். அவனுக்கும் சந்தேகம் ஏற்படாது என்றேன்.ஒப்புக் கொண்டு வரவழைத்துவிட்டார்கள். இந்த நிறுவனத்தில் தான் பயிற்சி. இதற்கு காவல் அதிகம்,  யாரும் உள்ளே அனுமதியின்றி நுழைய முடியாது. காவலர் களுக்கும் இவன் வந்தால் உள்ளே விடக் கூடாது என்று சொல்லியாகிவிட்டது. நானும் அந்த பரிவு அதிகாரியும் அந்தப் பெண்ணிடம் மனம்விட்டுப் பேசினோம். பயத்தால்தான் இருந்திருக்கின்றாள். இனி நான் பார்த்துக் கொள்கின்றேன் என்றேன்.
என்ன பார்க்கின்றீர்கள்? இந்த அம்மாள் பேட்டை ரவுடியா என்று பார்க்கின்றீர்களா? நான் பழகியவர்களில் அதிகம் ஏழைகள்.  சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுடன் பரிவுடன் பழகுகின்றவள். எனவே எனக்குத் தம்பிகள் அதிகம். அவர்களில் சிலரைக் கூட்டிச் சென்று  வீட்டைக் காலிசெய்தேன். அவன் அங்கே வந்து அந்தப் பெண்ணின் புருஷன் என்று கூறி கலாட்ட செய்ய ஆரம்பித்தான் ஏற்கனவே மணமானவன் என்ற முறையில் அவனைக் கைது செய்யலாம் என்று கூறவும், போலீசைக் கூப்பிடவா என்று கேட்கவும் போய்விட்டான். அந்தப் பெண் காப்பாற்றப் பட்டாள்.
பின்னால் அங்கே வேலைக்குச் சென்ற பலரும் ஏதோ ஒருவகையில் இன்னலைச் சந்தித்து வந்தனர். பல ஆண்டுகள் தொடர்ந்தன. கடைசியில் என்துறை என்னையே அவனுக்கு அதிகாரி யாகப் போட்டது. ஒரு மாதம் அமைதியாகக் கழிந்தது.
ஒரு நாள் போய்க் கொண்டிருந்த பாதையில் வண்டி தகராறு செய்தது. அதனை அப்படியாக்கியது அவன்தான். நான் பஸ்ஸில் திரும்பிவிட்டேன். அவன் அந்த வண்டியை அரசுமனையில் பழுது பார்க்கக் கொண்டு போய்விட்டுவிட்டான். இது அவன் வாடிக்கை. வண்டியை அப்படி விட்டுவிட்டு லாரி ஓட்டியும் சம்பாதித்தான்.  அவன் இந்த முறை தப்புக் கணக்கு போட்டுவிட்டான். நான் பழைய பதிவேடுகளைப் பார்த்து ஓர் அறிக்கை தயார் செய்தேன். இந்த வண்டி அடிக்கடி பழுதாவதால் இனி இது பயனற்றது என்று முடிவு எடுக்கலாம், வண்டி இல்லாததால் இந்த ஓட்டுனரை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று எழுதி அனுப்பிவிட்டேன். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகம் வந்து சம்பளப் பட்டியல் பதிவேடு முதல் சில பதிவேடுகளைக் கிழித்துவிட்டான். இது போதும். அவனைத் தற்காலப் பதிவி நீக்கம் உடனே செய்துவிட்டேன். அரசியல் அழுத்தம் கொண்டு வந்தான். அப்பொழுது எங்களுக்கு அமைச்சராக இருந்தவர் திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள். எங்கள் துறைக்கு அமைச்சர்களாக வந்தவர்கள் அனைவருக்கும் என் மீது பிரியம் உண்டு. ஆனால் இருவரிடம் போராட வேண்டி வந்தது. அதனைப் பின்னர் தெரிவிக்கின்றேன்.. இவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக எனக்குத் தீங்கு செய்ய முடிவு எடுத்தான் அதுவும் என் தம்பிகளுக்குத் தெரிந்து அவன் ஒடுக்கப்பட்டான். பின்னர் வேலையினின்றூம் எடுக்கப்பட்டான்.
நிர்வாகம் என்பது எளிதல்ல. வேலை செய்வது எளிது. வேலைவாங்குவது கடினம். நிர்வாகத்தில் சோதனைகள் நிறைய வரும்.
சமாளிக்கும் வழிகள் தெரிந்திருக்க வேண்டும்
அதற்கும் ஓர் உதாரணம் கூறுகின்றேன். ஒரு மாவட்டத்தில் பணிக்குச் சேர்ந்த மறுநாளே ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் அவர் ஊரில் வேலை பார்க்கும் பெண்ணைத் தரக் குறைவாகப் பேசினார்.
அவ வேலையா பாக்குறா, பிராத்தல் நடத்தறா
இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
நீங்க அங்கே போனீங்களா?
இது விவேகமற்ற பதில்தான் ஆனாலும் சொல்லிவிட்டேன். அவர் கோபத்துடன் சென்றுவிட்டார். அவர் எந்த கட்சி, அவர் பலம் எல்லாம் விசாரித்தேன். அந்த மாவட்டத்தில் அக்கட்சியில் பலம் வாய்ந்த மனிதரைப் பார்க்கச் சென்றேன். புதிய அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றேன் இப்பொழுது அவர்கள் குடும்பத்தின் அன்பு கிடைத்துவிட்டது. இதே போல் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் நானே அறிமுகம் செய்து கொண்டு அவர்கள் குடும்பங்களுடன் பழக ஆரம்பித்துவிடுவேன். பத்திரிகை நிருபர்களிடமும் பழகிவிடுவேன்.. மாவட்ட  ஆட்சியாளரின் மனைவியும் பழக்கமாகி விடுவார்கள். இந்த மூன்றும் எனக்கு அரண்களாகிவிடும்.
நான் வேலைக்கு வந்த பொழுது தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் திரு காமராஜ் அவர்கள். அவர் வழி காட்டலில்தான் இந்த வேலைக்கே வந்தேன். முதல்வர்கள் எல்லோரிடமும் பேசியிருக்கின்றேன். ஆனால் அதிகம் தொடர்பில் இருந்தவர்கள் கலைஞரும், எம்ஜிஆர் அவர்களும்தான். நான் அரசு ஊழியர் என்பதுடன் எங்கள் துறைப் பெண்கள் களப்பணியாளர் சங்கத்தின் தீவிர உறுப்பினர். ஓய்வு பெறும் வரை செயலாளர். பன்னாட்டு தொழிற்சங்கத்தின் சிறப்பு உறுப்பினராக நான்காண்டுகள். இத்துடன் பத்திரிகைகளின் தொடர்பு. எனவேதான் பிரச்சனைகள் வரும் பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மந்திரிகள், முதல்வர்கள் இவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியாது. என் துறைக்கு, எங்கள் பணியாளர்களுக்கு சோதனைகள் வரும் பொழுது இந்தப் பொறுப்பில் களத்தில் இறங்கிவிடுவேன். இந்தப்படிப்பினையைக் கொடுத்தது 1967 சம்பவம். இன்னும் அதனை நான் கூறவில்லை. அதற்கு முன் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லிவிட்டு அதனையும் கூறுவேன்.
பெண்ணின் வேதனை என்றால் பாலியல் உறவில்படும் வேதனைகளும் சோதனைகளூம் மட்டுமல்ல. வாழ்வியலில் வாழும் முறைகள் மாற்றப்பட்ட பொழுது பெண்விடுதலை என்று சொன்னாலும் சோதனைகளும் வேதனைகளும் கூடியதை மறுத்தல் முடியாது. பேசும் விழிகளில் அவ்வப்பொழுது கண்ணீர்த் துளிகள். இதுதான் பெண்ணின் வாழ்க்கை.
பெண்ணியம் பேச ஆரம்பித்து விட்டாள் என்று உடனே நினைக்காதீர்கள். பெண் செய்யும் தவறுகளையும் அடுத்தப் பதிவில் எழுதப் போகின்றேன். வாழ்வியல் வரலாறு என்பதில் உண்மைகள் துலாக்கோல் எப்பக்கமும் சாயாமல் நடுநிலைமையுடன் எழுதப்பட வேண்டும். எழுதப்படும். நம் வாழ்க்கையில் அகம் புறம் என்று வாழ்வியலைப் பிரித்து தொகுத்து எழுதி யிருக்கின்றோம். பெண்ணின் நிலைமையை அகத்திலும் புறத்திலும் பார்க்கலாம். சுருக்கமாக எழுத விரும்புகின்றேன். அல்லது அதுவே நீண்ட தொடராகிவிடும்.
எங்கிருந்தோ வரும் பெண் புதுமனை புகுகின்றாள். அக்காலத்தில் அவளுக்கு வீட்டுப் பொறுப்புகள் மட்டுமே. திட்டமிடுதலோ, கொண்டு செலுத்தலோ பெரியவர்கள் கவனித்துக் கொண்டனர். அதிகப் பொறுப்புகள் கிடையாது. மாறிய சமுதாயத்தில் நாம் வகுத்த கோடுகள் கலைந்து வாழ்வியல் மாறத் தொடங்கிவிட்டது. காலையில் எழுந்திருப்பவள் வீடு சுத்தம் முதல் ஆரம்பித்து கணவன், பிள்ளைகள், பெரியவர்கள், இவர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டும். வேலைக்குப் போகின்றவளாக இருந்தால் இவைகளைச் சீக்கிரம் முடித்துவிட்டுப் புறப்பட வேண்டும். பெண் என்றால் மனைவி யென்று மட்டுமல்ல.  மனைவி, மாமியார், நாத்தனார், மகள் இப்படி பல நிலைகளில் பெண் வருவாள்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மாமியார் ஒருவர் தன் மருமகளிடம் “குழந்தை புறந்தாச்சு இன்னும் என்ன புருஷன் பக்கத்தில் படுத்தக்கறது”  என்று கூறி மருமகளைத் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வாள். இது மாமியார் கொடுமை. சில மருமகள்கள் மாமியார் பசிக்குக் கூட சரியான ஆகாரம் கொடுக்காதவர் உண்டு. வீட்டிற்குள் மவுன யுத்தம் நடக்கும். இருபாலாரும் பெண்களே. உரிமைகளின் போராட்டம், சண்டை, அழுகை.   குடும்பத்தில் பல பிணக்குகள், சண்டைகள் என்று வீட்டுக்குள் ஒரு புயல் சுழன்று கொண்டே இருக்கும். வேகமான காற்றாக இருக்கலாம். சூறாவளி யாகவும் இருக்கலாம். வீட்டுச் சண்டையில் தலையிட வேண்டாம் என்று ஆண் வெளியில் சென்று விடுகின்றான். அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்ற குடும்பங்கள் இக்காலத்தில் குறைவு.
வேலைக்குப் போகின்றவள் வீட்டைவிட்டுப் புறப்பட்டால் கூட்டம் நிறைந்த  நெரிசலில் பஸ் அல்லது ரயில் பிடித்துப் போக வேண்டும். சென்னையில் வசிக்கும் பொழுது முதலில் 17 ஆண்டுகள் ஆதம்பாக்கத்தில் இருந்தேன். பரங்கி மலையில் ரயிலில் ஏறும் பெண்களைப் பார்ப்பேன். முகத்தில் அவசரம். அங்கு வந்து இருவாய் சாப்பாடு சாப்பிட்டவர்களைப் பார்த்திருக்கின்றேன். ஜபம் செய்கின்றவர்கள் சிலர். உற்றவர்கள் அருகில் இருந்தால் வீட்டுச் சண்டைகளைப் புலம்புவாள். அங்கே பார்க்கும் சீரியல்கள் வராது. அவர்கள்தான் சீரியல் காட்சிகளாக இருப்பார்கள்.
அலுவலகம் வந்தவுடன் அங்கு அனுபவங்கள் வேறு. அரசு அலுவலகம், தனியார் அலுவலகம் எதுவாயினும் பெரியவர்களைக் காக்காய் பிடிக்கத் தெரிந்தவர்களுக்குப் பல சலுகைகள் கிடைக்கும். “காக்காய்” என்று சொல்வது எல்லோரும் அறிந்ததே. அங்கே நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். சில மேலதிகாரிகள் ஆண்களாக இருந்தால் அவர்களில் சிலர் அனாவசியத் தொடல் சீண்டல், அவர்களின் அசட்டுச் சிரிப்பு இத்தனையும் சகித்துக் கொள்ள வேண்டும்.உடன் வேலை பார்ப்பவர்களில் சில ஆண்கள் அனுதாபப் பார்வையுடன் விசாரணையில் தொடங்கி நெருங்கி வரப்பார்ப்பார். மறுத்தால் தொல்லைகள். உட்பட்டால் இழப்பு, எரிச்சல்.  வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போகையிலேயே தீப்பார்வைகளைத் தாண்டிக் கொண்டுதான் போக வேண்டும். எத்தனை இடிகள் எத்தனை உரசல்கள். சிகப்பு விளக்கு பகுதியில் வருகின்றவன் தங்கும் நேரம் மட்டும் அவள் ஈடு கொடுக்க வேண்டும். ஆனால் வெளியில் நடமாடும் பொழுது பெண்களின் நிலை ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது சோதனைகள். அவள் பொறுமையைச் சோதிக்கும் மணித்துளிகள். முள் குத்துவது போன்ற உணர்வுகள்.
வீட்டுக்குத் திரும்பும் பொழுது அவள் மனச் சுமையுடன் வருவாள்.  ஆனால் வீட்டில் வந்தவுடன் அங்கு பணிகள் தொடங்கிவிடும்.  அந்த எரிச்சலை எல்லோரிடமும் காட்டுவாள். ஆணுக்கும் வீட்டின் நிலைமையால் நேரம் கழித்து வருவான். இல்லறத்தின் இனிமை எங்கே? நான் இப்பொழுது கூறியவைகள் பொதுப்படையான நிலைமை. நம் வாழ்க்கை இப்பொழுது மகிழ்ச்சிதரும் ஆனந்த பைரவியல்ல. போர்க்களத்திற்குப் பாட வேண்டிய ராகம் நாட்டை. அதுவும் கம்பீர நாட்டையல்ல. முகாரி கலந்த ராகமாலிகை. என்ன இந்த அம்மா சங்கீதத்தைப் பற்றிப் பேசுகின்றர்களே என்று தோன்றுகின்றதா? குடும்பத்தில்தான் இசைவான சூழல் இல்லையே எழுத்திலாவது இசையைப் பற்றி எழுதலாமே என்று எழுதிவிட்டேன்.
வேலையில் முக்கியமான இரு பிரிவுகள். ஒன்று ஒரு இடத்தில் காலை முதல் மாலை வரை இருந்து வேலை பார்த்தல். இன்னொன்று களம் சென்று பலரைச் சந்தித்துப் பணியாற்ற வேண்டியது. இவர்களுக்கு நேரம் குறிக்க முடியாது. எந்த நேரமும் இவர்கள் களத்திற்குச் செல்ல வேண்டியிருக்கலாம். ஏற்கனவே களப் பணிகளில் வரும் சோதனைகளில் சில எடுத்துக் காட்டியிருக்கின்றேன். இன்னும் வரும். இப்பொழுது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களின் நிலையைப் பற்றிய சில செய்திகள். தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே பணியாளர்களாக இருப்பவர்களின் சோதனைகளில் சில தொட்டுக் காண்பித்தேன். நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு வரும் ஒன்றிரண்டு சோதனைகளையும் கூற விரும்புகின்றேன்.
சில பெரிய மனிதர்கள், அதாவது அரசியலைச் சேர்ந்தவர்கள், அலுவலக மேலதிகாரிகள் இவர்களில் சிலர் பெண் பித்தர்களாக இருந்தால் சில பிரச்சனைகளை அதிகாரிகள் சந்திக்க வேண்டிவரும். பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் துறைகள் எல்லாவற்றிலும் வரும் சோதனைகள்தான். வக்ர புத்தியுள்ளவனுக்கு ஒன்று அந்தப் பெண் நிர்வாகி விருந்தாக வேண்டும் அல்லது கீழே வேலை பார்க்கும் பெண்களை அவனுக்கு விருந்தாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாமா வேலை என்று சொல்வார்களே,, அதுதான். எவ்வளவு வேதனையான சோதனைகள் ?
இதைப் பற்றி உயர் அதிகாரிகளிடமோ, மோசமான அணுகல், மிரட்டல் என்றால் போலீஸிடமோ போகலாமே என்று சுலபமாகச் சொல்லி விடலாம்.  சாட்சி வைத்துக் கொண்டா இந்தத் தவறு செய்கின்றார்கள். சாட்சிகள் இருந்தால் கூட சட்டத்தில் இருக்கும் சில இடுக்குகளில் வக்கீல் நுழைந்து விடுவார். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நேர்ந்தால் அந்தப் பெண் சாவதையே விரும்புவாள். .சாமர்த்தியமாகத்தான் தப்பிக்க வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பெண் கோழை என்ற பெயர் எடுக்கக் கூடாது. அதே நேரத்தில் வேகத்துடன் விவேகமகவும் நடந்து கொள்ளத் தெரிய வேண்டும். சில பெண்களைப் பார்க்கும் பொழுது மரியாதை கொடுத்து ஒதுங்கி விடுவதும் உண்டு. அவள் நடை உடை பாவனைகளைப் பார்க்கலாமே.  வீட்டுப் பிரச்சனைகளை எல்லோரிடமும் கூறக் கூடாது. அலுவலகத்தில் கண்கலங்கி இருத்தல் கூடாது. ஓடுகிறவனை விரட்டுவது உலக இயல்பு. புறவாழ்க்கையில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு தூர எறிந்துவிட்டு விவேகத்துடனும் சாமர்த்தியத்துடனும் நடத்தல் வேண்டும். பெண்ணுரிமை யென்று நினைத்து சுதந்திரமாக இயங்க நினைத்தல் கூடாது. சுதந்திரத்தைவிட தந்திரம் கைகொடுக்கும்.
அடுத்து ஒரு பிரச்சனை. இது ஆண், பெண் இருவருக்கும் வரும். கீழே உள்ளவர்கள் தவறுகள் செய்யும் பொழுது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகிகளுக்குச் சிக்கல். அவன் ஆணாக இருந்தால் வருவது
இவர் லஞ்சம் கேட்கின்றார்.
இவர் சாதி பார்க்கின்றார்.
இவர் தவறான வழிக்குக் கூப்பிடுகின்றார்.
நிர்வாகி பெண்ணாக இருந்தால் முதலில் ஆணுக்குச் சொன்ன இரண்டு பிரச்சனைகள், அத்துடன் இன்னொன்று வரும். அந்த பெண் நிர்வாகி நடத்தை மோசமானவள். அவளுக்கும் இவனுக்கும் அசிங்கம்மான தொடர்பென்று மொட்டை பெட்டிஷன்கள் எழுதிவிடுவார்கள். பெண் என்றாலே அவள் மேல் சேற்றை வாரி வீசுவது இயல்பாகிவிட்டது.
சீதையை சிறையெடுத்தான் இராவணன். அவன் பார்வை பட்டதாலேயே அவள் பத்தினித்தனம் போய்விட்டதா? தீயினும் கடும் சொற்கள் அவள்மேல் அள்ளி வீசப்பட்டதே!. அக்கினியில் குளித்துவிட்டு வரவேண்டி வந்ததே.! இன்றைய வாழ்க்கையில்  நெருப்பில் நடக்கும் பெண்கள் அதிகம். இது பெண்ணியப் புலம்பல் இல்லை.
பெண்களில் திருமணமாகாதவள், விதவை, வாழாவெட்டி என்று இருக்கும் மூன்று பிரிவுகளில் வாழாவெட்டிகளின் நிலைமை பரிதாபகரமானது. அவளுக்கு வரும் சோதனைகளூம் அவப் பெயர்களும் அதிகம். மற்ற இரு நிலையில் இருக்கும் பெண்களிடம் பழகினால் அவள் ஒட்டிக் கொள்வாளோ என்று ஆண் நினைக்கின்றான். மணமாகித் தனித்து இருப்பவள் உரிமை கோர மாட்டாள். வேலியிழந்த தோட்டம். அவள் எதைத்தான் நினைத்து அழ முடியும்?!
சமூக நலத்துறையில் அதிகமாக அக்கறையெடுத்துப் புனர்வாழ்வு கொடுக்க வேண்டியவர்கள்
கணவனால் கைவிடப்பட்டோர்
வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள்
விதவைகள்
ஆதரவற்றோர்
ஊனமுற்றோர்
இவர்களுக்கும் மனமுண்டு. உணர்ச்சிகள் உண்டு. ஆசைகளும் உண்டு. ஆனால் எதுவும் கிடைக்காமல் ஏக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும். அவளால் அழத்தான் முடியும்.
பெண்ணுக்கு சோதனை விலைமாதர் இல்லம் மட்டுமல்ல, வீடும் வெளியும் கூட அவள் உணர்வுகளைப் பாதிக்கும் தொல்லைகள் தொடர்ந்துவரும் இடங்கள்.
“பெண்ணென்று பூமியில் பிறந்துவிட்டால்
பீழை இருக்குதடி”
இதைச் சொன்னவன் கவிஞன் பாரதி.
மும்பையில் தாராவி, சிகப்புவிளக்குப் பகுதி, நடைபாதை வாழ்க்கைகளைப் பற்றி எழுதும் பொழுது  நாம் வாழும் தமிழ் மண்ணையும் தொட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
என்னிடம் இருவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கு விடைகள் அடுத்த பதிவில் விளக்கமாக எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றேன்.
“வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றைச் சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொணடு அதைக் கச்சிதமாகச் சந்திக்கும் விதத்தில் தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறான். ஒவ்வொரு பிரச்சனையும் அவனை உயர்த்தும் படிக்கட்டாக அமைந்து அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்திவிடுகிறது.
எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்”
என்.கணேசன்.
வாழும்கலை :  www.enganeshan.blogspot.com
[தொடரும்]

Series Navigationதேவதைமதிலுகள் ஒரு பார்வை