2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

           

கிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம்  வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி வந்தவன் கார்காலத்தைப் பாராட்டிக் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இப்பத்துப் பாடல்களும் தலைவன் கூற்றாகவே இருக்கின்றன.

=====================================================================================1.ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்

கார்தொடங் கின்றால், காமர் புறவே;

வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்

தாழிருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே!

      [ஆர்குரல்=மிக்க ஒலி; எழிலி=மேகம்; அழிதுளி=கடுமழை; காமர்=அழகு; தாழ்குழல்=நீண்ட கூந்தல்; வம்மதி=வருக]

      அவன் அவளிடம் கூறும் பாட்டு.

       ”நீளமான கருப்பான கூந்தல் இருக்கறவளே! அதோபார். மேகம் இடிக்குரலால பேசி கடுமையான மழை பெய்யுது. கார்காலம் தொடங்கிடுச்சு. காட்ல நமக்குப் புடிச்ச புதுத்தண்ணி வந்திடுச்சு. நாம ரெண்டு பேரும் அதுல போய் நீராடுவோம். சீக்கிரம் வா”

====================================================================================

2. காயா, கொன்றை,நெய்தல், முல்லை

போதுஅவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்து கவினிப்

பூஅணி கொண்டன்றால் புறவே!

பேர்அமர்க் கண்ணி! ஆடுகம், விரைந்தே.

      [போது=மொட்டு; தளவம்=செம்முல்லை; கவினி=அழகுமிகுந்து; அணி=அழகு; அமர்=பொருந்திய]

      அவன் சொல்றான்.

“பெரிசா அழகா கண்ணு இருக்கறவளே! முல்லை நெலத்துல இருக்கற காயா, கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவுன்னு எல்லாப் பூக்களும் செடியிலயும், கொடியிலயும் அழகாப் பூத்திடுச்சு. நாம போயி நீராடலாம். சீக்கிரம் வா.

=====================================================================================3. நின்நுதல் நாறும் நறும்தண் புறவில்

நின்னே போல மஞ்ஞை ஆலக்

கார்தொடங் கின்றல் பொழுதே;

பேர்இயல் அரிவை நாம்நயத் தகவே!

      [நுதல்=நெற்றி; நாறும்=மணக்கும்; தண்=குளிர்ச்சி; மஞ்ஞை=மயில்; ஆல=ஆட; நயத்தல்=விரும்புதல்]

      அவன் அவகிட்ட சொல்ற பாட்டுதான் இதுவும்.

“நல்ல கொணமெல்லாம் இருக்கறவளே! நாம விரும்பற மாதிரி, ஒன் நெத்தி போல வாசனையா இருக்கற குளிர்ச்சியான முல்லை நெலத்துல ஒன்னைப் போலவே அழகா மயிலெல்லாம் ஆடுது. கார்காலமும் வந்திடுச்சு.

——————————————————————————————————————————————————

4. புள்ளும் மாவும் புணர்ந்து இனிதுஉகளக்

கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி;

மெல்இயல் அரிவை! கண்டிகும்;

மல்லல் ஆகிய மணம்கமழ் புறவே.

      [புள்=பறவை; மா=விலங்கு; உகள்=துள்ளி விளையாட; கோட்ட=கிளைகள் உள்ள மரங்கள்; கொடிய=கொடிகளை உடைய; பழுனி=நிறைந்தது; மல்லல்=வளம்; கண்டிகும்=காண்போம்; புறவு=முல்லை நிலம்]

      ”மென்மையான கொணம் இருக்கறவளே! பறவையெல்லாம் விலங்கெல்லாம் ஒன்னோட ஒன்னு கலந்து மகிழ்ச்சியா இருக்கு. மரம் கொடியெல்லாத்துலயும் நெறய பலவகையாப் பூவெல்லாம் பூத்திருக்கு. இப்படி வாசனையா இருக்கற முல்லை நெலக் காட்டை நாமும் போய்ப் பாப்போம்

——————————————————————————————————————————————————

5. இதுவே, மடந்தைநாம் மேவிய பொழுதே;

இதுவே, மடந்தைநாம் உள்ளிய புறவே;

இனிதுஉடன் கழிக்கின், இளமை

இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே!

      [மெவிய=விரும்பிய; உள்ளிய=நினைத்த; கழிக்கின்=போக்குதல்]

போன பாட்டு மாதிரியேதான் இதுவும். அவன் சொல்றான்.

      ”காதலியே! நாம கூட நெனச்சப் பொழுது இந்தக் கார்காலமே. நாம மகிழ்ச்சியா இருக்க நெனச்ச எடமும் இந்த முல்லை நெலம்தான். இந்தப் பொழுதை என்னோட கூடி இங்கக் கழிச்சா ரொம்ப இன்பமா இருக்கும். நம்மப் போல இளமையா இருக்கறவங்களுக்கு இது போலக் கூடி இருக்கற பொழுது கெடச்சா அந்த இளமையே ரொம்ப இனிமைதானே.”

——————————————————————————————————————————————————6. போதுஆர் நறுந்துகள் கவினிப் புறவில்

தாது ஆர்த்து,களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்

மடப்பிடி தழீஇய, மாவே;

சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம், யாமே!

      [போது=மொட்டு; துகள்=தாது; கவினி=அழகுபெற்று; தாதுஆர்த்த=மகரந்தப் பொடியை உண்டு; களி=மகிழ்ச்சி; சுரும்பு=வண்டு; காமர்=அழகு; புதல்=புதர்; மடப்பிடி=இளமையான பெண் யானை; மாரி=ஆண் யானை]

      பிரிஞ்சு போகும்போது கார்காலத்துல வருவேன்னு சொல்லிட்டுப் போனான். ஆனா அதுக்கு முன்னாடியே வந்துட்டான். அவ்ளோட கூடிக் கலந்து மகிழ்ச்சியா இருக்கறான். ஒரு நாள் அவன் அந்த மகிழ்ச்சியைத் தனக்குத் தானே சொல்லிக்கற பாட்டு இது.

      ”பூத்திருக்கற பூவுல இருக்கற மகரந்தத் தூள் படியறதால வண்டு ரொம்ப அழகா இருக்கு. அதுங்க தேனைக் குடிச்சு ஆரவாரமா காட்டுல இருக்குதுங்க. அந்தக் காட்டுய்ல இருக்கற பொதர்ல இளமையான பெண் யானையைத் தழுவிக்கிட்டு வர்ற ஆண்யானையே! நானும் ஒன்னைப் போலவே அழகான இளமையான நல்ல வெள்ளையான ஒளி தர்ற வளையல்லாம் போட்டுக்கிட்டு இருக்கற அவளோட சேந்துட்டுதான் மகிழ்ச்சியோடு இருக்கேன். பாத்துக்க.”

——————————————————————————————————————————————————7. கார்கலந் தன்றால் புறவே; பலவுடன்

ஏர்பரத் தனவால் புனமே; ஏர்கலந்து

தாதார் பிரசம் மொய்ப்பப்

போதுஆர் கூந்தல் முயங்கினள், எம்மே.

      [ஏர்=அழகு; புறவு=காடு; புனம்=பயிரிடப்பட்ட நிலம்; பிரசம்=வண்டு; போது=புதுப் பூக்கள்; முயங்கினள்=தழுவினள்]

      இந்தப் பாட்டு அவன் அவனோட மனசுக்குள்ளயே அவன் சொல்லிக்கற பாட்டு.  அவன் அவனோட மனைவிகூடப் போயி நீராடறான். அப்பறமா அதை நெனச்சுச் சொல்றான்.

      ”முல்லை நெலத்துல கார்காலம் வந்திடுச்சு. அதை வரவேக்கற மாதிரி காடு அழகா இருக்கு. பூத்திருக்கற பூவிலெல்லாம் தேன் குடிக்க வண்டுகள் நெறய வந்து வந்திருக்கு. அப்படியான பூவை நெறய அவ கூந்தல்ல வச்சிருக்கா. அவ அன்னிக்கு என்னோடகூடித் தழுவினாள்.”

=====================================================================================

8. வானம்பாடி வறம்களைந்து, ஆனாது

அழிதுளி தலைஇய புறவில், காண்வர

வானர மகளோ நீயே;

மாண்முலை அடைய முயங்கி யோயே?

      [வானம்பாடி=மழை வேண்டிப் பாடும் பறவை; வறம்=வறுமை; களைந்து=நீங்கி; ஆனாது =குறையாது; அழிதுளி=மிக்கதுளி; தலைஇய=இடத்தையுடைய; நாண்வர=பார்க்க; அடைய=அழுந்த]

      அவன் சொன்னபடி அதே பருவத்தில வந்துட்டான்; ஊட்டு உள்ளப் போறான். அவ ஆசையோட வந்து அவனைக் கட்டிக்கறா. அப்ப அவன் அவகிட்டச் சொல்ற பாட்டு இது.

      ”வானம்பாடிப் பறவையோட வறுமையான தாகம்  நீங்கற மாதிரி மழை அதிகமா பெய்யறக் கார்காலம் வந்திடுச்சு. நான் அப்ப முல்லை நெலக் காட்டுவழியில வந்துகிட்டு இருந்தேன். அப்ப நான் பாக்கற மாதிரி என் முன்னாடி வந்த வானர மகள் நீதானோ? அழகான ஒன் மார்பகங்கள் அழுந்திப் பதியற மாதிரி என்னைக் கட்டித் தழுவிக்கிட்டதும் நீதானோ?”

====================================================================================

9. உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்

பிரிந்துறல் அறியா, விருந்து கவவி,

நம்போல் நயவரப் புணர்ந்தன;

கண்டிகும் மடவரல்! புறவின் மாவே.

      [செயிர்தீர்=குற்றம் நீங்கிய; விருந்து=புதுமை; கேண்மை=உறவு; கவவி=அணைந்து; மா=விலங்கு]

      அவன் சொன்ன பருவத்தில வந்துட்டான். அவளக் கூட்டிக்கிட்டுக் காட்டுக்குப் போறான். அங்க வெலங்கெல்லாம் கூடறதைக் காட்டி அவக்கிட்டச் சொல்ற பாட்டு இது.

      ”மென்மையான பொண்ணே! இதோ காட்டுல இருக்கற வெலங்கையெல்லாம் பாரு. இதெல்லாம் உயிரோடு உயிர் கலந்து குத்தமில்லாத ஒறவு வச்சிருக்குதுங்க; அதால ஒண்ணொட ஒண்ணு உயிர்கலந்து நம்ம மாதிரியே கூடி இருக்கு”

=====================================================================================

10.பொன்என மலர்ந்த, கொன்றை; மணிஎனத்

தேம்படு காயா மலர்ந்த; தோன்றியொடு

நன்னலம் எய்தினை; புறவே! நின்னைக்

காணிய வருதும், யாமே;

வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.

      [மணி=நீல மணி; தேம்படு=தேன்மிகுந்த; நன்னலம்=நல்லழகு; வாள்நுதல்=ஒளிமிகுந்த நெற்றி; ஆய்நலம்=சிறந்த அழகு; படர்தல்=நினைத்தல்]

      இது முல்லை நெலக்காட்டைப் பாத்து அவன் சொல்ற பாட்டு. சொன்னபடி அவன் பருவத்தில ஊட்டுக்கு வந்துக்கிட்டிருக்கான். அப்ப அந்தக் காட்டைப் பாத்துச் சொல்ற பாட்டு இது.

      ”ஏ காடே! பொன்னைப் போல கொன்றைப் பூவெல்லாம் பூத்திருக்கு. தேன் அதிகமா இருக்கற காயாப் பூவெல்லாம் நீலமணி மாதிரி இருக்கு. இப்படிப் பூக்கள் நெறயப் பூத்திருக்கறதால நீயும் ரொம்ப அழகா இருக்க. நல்லா நெத்தி அழகா  இருக்கற அவளோட அழகையும் ரசிச்சுக்கிட்டு, ஒன்னையும் பாக்கறதுக்கு அவளோட நானும் வரேன் பாரு.

========================================

Series Navigationசினிமாவிற்குப் போன கார்