தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

This entry is part 12 of 33 in the series 12 ஜூன் 2011

அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. ‘நல்லரத்தினம் சிங்கராசா’வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார்.

 

அவரது ஊர் மட்டக்களப்பின் நாவற்காடு. ஒளிந்திருப்பது இரு குழுக்களின் மீதுள்ள அச்சத்தால். ஒரு குழு இலங்கை அரசின் இராணுவப் படை. மற்றைய குழு விடுதலைப் புலிகள் இயக்கம். இது பயனற்ற கதையொன்றென எவருக்கும் தோன்றக் கூடும். விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அரசாங்கம் இரண்டுமே எதிரிகள். ஒருவர் இவ்விரண்டு குழுக்களிலும் ஒரு குழுவைச் சார்ந்தவரெனில், மற்றக் குழுவைக் குறித்து அவர் அச்சமுறுவது சாதாரணமானது. எனினும், சிங்கராசா இந்த இரண்டு குழுக்களுக்குமே பயந்து ஒளிந்திருக்கிறார்.

 

அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும்படி இந் நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய சொற்ப அளவேயான மக்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், ‘சிறையிலிருப்பது பேரூந்துகளில் குண்டு வைத்த புலிகள்’ என மிகவும் இலகுவாக கருத்துரைத்துக் கொண்டிருக்கும்  ஐயாக்களிடம், நாம் இங்கு சொல்லப் போகும் கசப்பான செய்திகளை நிதானமாக ஒரு கணம் செவிமடுக்கும்படி வேண்டுகிறோம்.

 

இன்று அந்த மக்களை ‘அவர்கள் புலிகள்’ என எலும்பில்லாத நாவினால் தயங்காது சொல்பவர்களுக்கு, இத் தமிழ் இளைஞனின் உண்மைக் கதையானது நிச்சயமாக உள்ளத்தை உருக்கக் கூடியது.

 

‘சிங்கராசா’வை கருணா அம்மானின் படைப்பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த ‘இனிய பாரதி’யின் குழுவினர் வந்து பலாத்காரமாகக் கொண்டு சென்றபோது அவருக்கு வயது 15. (இன்று, இனிய பாரதி இலங்கை சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்.)

 

பயிற்சியிலும் செயற்பாடுகளிலுமிருந்த சிரமங்களின் காரணமாக சிங்கராஜா அக் குழுவிலிருந்து தப்பி வந்தார். எனினும் அதனால் நடந்தது சிங்கராசாவின் வாழ்க்கை இன்னும் சிரமங்களுக்குள்ளானது மட்டும்தான். அன்றிலிருந்து இராணுவம், விடுதலைப் புலிகள் ஆகிய இரு படையினருமே அவரது எதிரிகளாயினர். அந்த இரு படைகளிலுமேயுள்ள வேட்டைக்காரர்களிடமிருந்து இந்த ‘இளம் மான்’ ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. அவர் நாட்கணக்காக உயிரச்சத்தில் தவித்தபடி பரணில் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது இதனாலேயே. எனினும் துரதிஷ்டம் அவரை விட்டும் போயிருக்கவில்லை.

 

அரசின் இராணுவப் படை,  பல மடங்குச் சோதனைகளைப் பிரயோகித்து சிங்கராசாவின் கிராமத்தைச் சுற்றிவளைத்து இம் மாபெரும் ‘தீவிரவாதத் தலைவரை’க் கைது செய்தது. இரு கரங்களுக்கும், இரு பாதங்களுக்கும் விலங்கிட்டு இராணுவப் படை ஜீப் வண்டிகள் பலவற்றின் மத்தியில் சிங்கராசாவை முட்டிக்காலிடச் செய்து, கொண்டு சென்றது. தாயினதும் குடும்பத்தினரதும் ஒப்பாரி ஓசைகளுக்கு மத்தியில் சிங்கராசாவுக்கு நினைவில் வந்தது ஒன்றே ஒன்றுதான். அது இரண்டு வருடங்களுக்கு முன்பு கருணா அம்மானின் குழு வந்து தன்னைக் கொண்டு சென்ற விதம்.

 

அன்றும் அவர் இன்று போலவே ஒளிந்துகொண்டிருந்தார். அன்றும் ஆயுதப் படை வீட்டின் மூலையொன்றில் இருந்த அவரை கழுத்தைப் பிடித்து வெளியே கொண்டு வந்தது. அன்றும் ஆயுதங்கள் தாங்கிய போர்ப் பட்டாளமொன்று நள்ளிரவு நேரத்தில் ஊர் மத்தியில் வைத்து அவரைக் கொண்டு சென்றது. அன்றும் கூட அவரது தாயாரின் வாயிலிருந்து இதே போன்ற மரண ஒப்பாரி எழுந்தது.

 

இது சிங்கராசாவின் கதை மட்டுமல்லாது இன்னும் அனேக ‘புலிகளின்’ கதை. பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ‘ராசையா துவாரகா’வின் கதை கூட இது போன்றதுதான். அவரும் இதே விதத்தில்தான் அவரது ஊரான கிளிநொச்சியில் வைத்து விடுதலைப் புலிகளாலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வைத்து அரச இராணுவப் படையினராலும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

 

மட்டக்களப்பின் முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரனும் அவ்வாறான ஒரு இளைஞர்தான். விடுதலைப் புலிகள் இயக்கம் அவரைக் கொண்டு சென்றது அவரது 14 வயதில். கைது செய்யப்படும்போது அவரது வயது 15. அது 1993இல். இங்குள்ள மிக மோசமான விடயம் இதுவல்ல. இன்று அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் அல்லாதுவிடின் விதிக்கச் செய்யப்பட்டிருக்கும் தீர்ப்பு. இன்றுவரைக்கும் , இந்தக் கணம் வரைக்கும் இந்த இளைஞர், யுவதிகள் இருப்பது சிறையில். விடுதலைப் புலிகளால் ‘புலியொன்றாக்குவதற்கு’ மகேந்திரனைக் கொண்டு சென்றது அவரது 14 வயதில். ஒரு வருட காலத்துக்கு இயக்கம் அவருக்கு பயிற்சியளித்திருக்கிறது. அதன்பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம் அவரது கைக்கு T56 ரக துப்பாக்கியொன்றைக் கொடுத்து யுத்த களத்துக்கு அனுப்பியிருக்கிறது. அங்குவைத்தே அவர் இராணுவத்தால் கைது செய்யப் பட்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 15. இன்று வரைக்கும் அவர் அரசாங்கச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இன்று அவருக்கு வயது 33.

 

பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களே, இது நியாயமானதா எனச் சொல்லுங்களம்மா ! 14 வயதேயான சிறுவனொருவனைக் கொண்டு பலவந்தமாகச் செய்யப்பட்ட குற்றமொன்றுக்கு, அவர் 33 வயதாகும்வரை சிறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதை யாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

 

விடுதலைப் புலிகளால் முதன்முறையும், அரசால் இரண்டாம் முறையும் ‘வன்முறைக்காளாக்கப்பட்டிருப்பது’ வானமும் பூமியும் கூடப் பொறுக்காத குற்றமொன்று அல்லவா? இரு படையினராலுமே அப்பாவிப் பிள்ளைகளின், இளைஞர்களின் வாழ்க்கை நாசப்படுத்தப்பட்டிருக்கிறது. வியப்புக்குரியது அது மாத்திரமல்ல. தீவிரவாதம் எனச் சொல்லப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் அவரது வாழ்க்கை சிதைக்கப்பட்ட காலம் ஒரு வருடம்தான். ஜனநாயகம் என அழைக்கப்படும் அரசாங்கத்தால் அவரது வாழ்க்கை நாசப்படுத்தப்பட்டிருக்கும் காலம் 18 வருடங்கள்.

 

இன்று இதுபோல தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கானோர் இலங்கை ஜனநாயக சமூகவாத மக்களுக்கான அரசாங்கத்தின் சிறைச்சாலைகளுக்குள் தமது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாமுமே ஒரு வசனம் கூடக் கற்பனையற்ற உண்மைச் சம்பவங்கள். இவற்றை சிங்கள பௌத்தர் என பிறப்புச் சான்றிதழில் பதியப்பட்டிருக்கும் எனது கையினால் எழுதத் தூண்டிய அண்மைய காரணமானது, ஜனநாயக ஆட்சியெனச் சொல்லப்படும் அரசாங்கத்தினாலேயே எனக்கு வாய்ப்பளிக்கப்பட்ட ‘அரியதொரு சந்தர்ப்பத்தினால்’ ஆகும். அந்தச் சந்தர்ப்பங்கள் மும் முறை கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவையாகும். அதனால் நான் இந்த இளைஞர்களோடு ஒன்றாக உண்று குடித்து ஒரே சிறையில் பல மாதங்களைக் கழித்திருக்கிறேன். ஒரே பாயில் ஒன்றாக உறங்கியிருக்கிறேன். அவர்களது வாழ்க்கை வரலாறுகளை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை சாவதானமாகக் கேட்டிருக்கிறேன். அண்மைய காரணம் அதுதானெனினும், பிரதானமான காரணம் அதுவல்ல. பிரதான காரணமானது, இக் கணத்தில் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியம்தான்.

 

தமிழ் இளைஞர்கள் ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டது அவர்கள் முகம்கொடுக்க நேர்ந்த அநியாயங்களின் காரணமாகவேதான். எனினும் அவர்கள் அவ் அசாதாரணத்துக்குக் காரணமான உண்மையான எதிரியையோ உண்மையான தீர்வொன்றையோ தெளிவாகக் கண்டுகொள்ளவில்லை. பேரரசுகளின் தலையீடு, இந்தியாவின் காரணமாக எங்கள் தேசத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்களின் தவறுகளுக்கு தர்க்கரீதியான பதிலானது, பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனும் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞனும் ஒன்றிணைந்து, பிழையான சமூக நடைமுறைகளுக்கு எதிராக செய்ய வேண்டியிருந்த போராட்டங்களை, ஒருவருக்கொருவர் எதிராக நின்று செய்யப்பட்ட போராட்டமொன்றாக மாற்றியமைத்ததுதான்.

 

இப் பாரதூரமான தவறுக்காக, ஒரு சில சமாதானத் தூதுவர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறுபட்ட கருதுகோள்களும் இனங்களுக்கிடையிலான சுய முடிவுகளை எடுக்கும் உரிமை குறித்த தலைமயிர் நரைக்கும் தர்க்கங்களாகவே அமைந்தன. அநீதி தொடர்பான பிரச்சினையானது, பாதிக்கப்பட்ட இனம் முகம்கொடுக்கும் சிக்கலொன்றெனவோ அல்லது அதற்கான தீர்வாக அமைவது  ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் ஒத்துழைப்புடன் கூடிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் செய்யப்படும் போராட்டமேயன்றி பிரிவினைவாதப் போராட்டமொன்றல்ல எனச் சொன்னவர்கள் சொற்பமானவர்கள்தான். அச் சொற்பமானவர்களும் அனேகமாக இப் பிரச்சினையைத் தீர்ப்பது ‘எங்களது எதிர்கால ஜனநாயக அரசாங்கத்தில் மட்டுமே’ என மிக இலகுவாக திரும்பத் திரும்பத் தெரிவித்துக் கொண்டிருந்ததோடு, அதன் சமூக மாற்றத்தின் போது அத்தியாவசியப்படும் வகுப்புவாதப் போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்களை ஒன்றுபடுத்துவது குறித்த நம்பிக்கையானது பாரதூரமான முறையில் நழுவிச் செல்வதற்கும் வழிவகுத்தனர். அதேபோல வகுப்பினரின் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான வகுப்புவாதக்கிளர்ச்சியை தமிழ், சிங்கள, முஸ்லிம் எனப் பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, நாட்டைப் பாதுகாப்பதெனச் சொல்லிக் கொண்டு தேசப்பற்று, இனப்பற்று போன்ற தேசிய போக்குகளிடம் அடிமைப்படுவது தொடர்பான துயரமான நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

 

எவ்வாறாயினும், இன்றைய புதிய லிபரல் பொருளாதார முறைமை முன்னெப்போதையும் விட மிக வேகமாக செயற்பட்டுக் கொண்டிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது போரிடக்கூடிய, புத்திசாலித்தனமான தமிழ் இளைஞனையும், சிங்கள இளைஞனையும் ஒரே சிறையிலடைத்து பாதிக்கப்பட்ட இனத்தை ஒற்றுமைப்படுத்தும் செயலை மிகவும் நல்ல முறையில் செய்திருக்கிறது. இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைத் தவிர்த்திருப்பதற்கு நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.

 

இன்று இந் நாட்டின் எல்லாவிதமான மக்களும், இந்த பிழையான சமூக, பொருளாதார முறையிலிருக்கும் சிக்கல்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். கல்வி சார்ந்த பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள், விலைவாசி, வேலை வாய்ப்பு மட்டுமல்லாது இயற்கை அபாயங்கள் குறித்த பிரச்சினைகளும் மீண்டும் மீண்டும் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருப்பது, நடைமுறையிலுள்ள சிக்கல்களைத்தான். 30 வருடங்களாக, தெரிந்த எல்லா விளையாட்டுக்களையும் ஆடினாலும், இருப்பவைகளுக்கும் இல்லாதவைகளுக்குமான இடைவெளி அதிகரித்து கல்வி, சுகாதார உரிமைகளை இழந்து, கடன் தொல்லை, துயரங்களில் துன்பப்பட்டு வந்திருக்கும் பயணம் தெளிவானது. எவ்வளவுதான் தெளிவானதாக இருந்த போதிலும், எங்கள் தேசத்தில் இன்னல்படும் மக்களிடம் ‘மஹிந்த ஐயாவுக்கு உங்கள் வாக்கினைச் செலுத்துவீர்களா?’ என யாரேனும் வினவக் கூடும். எனினும் தமிழ் இளைஞர்களுடனும் சாதாரண மக்களுடனும் பழகிய அனுபவங்களின் மூலம் தெளிவான விடயம் என்னவெனில், அவர்கள் தமது பிரச்சினைகளுக்காக எந்தத் தயக்கமுமில்லாது போராடுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்பதுதான். துன்பங்களின் எதிரில் முதலில் தந்திரோபாயம் என எண்ணுமளவிற்கு அமைதியாக இருப்பினும், ஒரு எல்லையைக் கடந்த பின்னர் எண்ணிப் பார்க்க முடியாதளவுக்கு போராட்டக்காரக்களாகின்றனர். இதனால் இன்று தேவையாக இருப்பது சரியானதொரு தலைவரின் வழிகாட்டுதலின் மூலம் அமைக்கப்பட்டிருக்கும் தலைமைத்துவமே. சிங்களம், தமிழ், முஸ்லிம் எல்லோருக்குமே இன்று இருக்கும் சிக்கலானது தெளிவானது. கல்விக்காக பணம் அறவிட அரசாங்கம் தயாராகிறது. கல்விக்காக பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதைப் போலவே இன்று பெற்றோர்களால் பணம் கொடுக்கவும் இயலாது. அது தமிழ்ப் பெற்றோருக்கும், சிங்களப் பெற்றோருக்கும் பொதுவானதொரு யதார்த்தம்.

 

வடக்கு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் இன்னும் வடபகுதி பாடசாலைகளில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள். தெற்கில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் தென்பகுதி பாடசாலைகளில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள். வடக்கில் தேங்காயொன்றின் விலை ரூபாய் 60. தெற்கிலும் தேங்காயொன்றின் விலை ரூபாய் 60. அரசாங்கம், தன்னை விமர்சிக்கும் வடக்கினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு தாக்குதல் நடத்துகிறது. கைது செய்கிறது. கொன்று போடுகிறது. அரசாங்கம், தன்னைக் கேள்வி கேட்கும் தெற்கினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் நோக்கி தாக்குதல் நடத்துகிறது. தீ வைக்கிறது. கொன்று போடுகிறது.

 

வடக்கில் யுத்தம் செய்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் சிறைச்சாலையில் புல் வெட்டுகிறான், வடிகால்களைச் சுத்தம் செய்கிறான், சமையலறையில் காய்கறிகளை வெட்டுகிறான். தெற்கிலிருந்து சென்று யுத்தம் செய்த இராணுவப்படையைச் சேர்ந்த சிங்கள இளைஞனும் பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் புல் வெட்டுகிறான், வடிகால்களைச் சுத்தம் செய்கிறான், சந்தைகளில் காய்கறி விற்கிறான் !

 

இறந்துபோன தமிழ்த் தாய்மார்களின் கல்லறைகள் மீது அனுமதி பெறப்பட்ட துப்பாக்கிகளின் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டுச் சென்று தேசிய ஒருமைப்பாட்டைத் தோற்றுவிக்க முடியாது. அவசர காலச் சட்டம், தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அழிவுச் சட்டங்களை இன்னும் நடைமுறைப் படுத்துவதன் மூலம் , தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது. சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் போன்ற இனவாதத் தீர்மானங்களை இன்னுமின்னும் எடுப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பிள்ளைகள், தமிழ்ப் பெண்களின் கணவர்கள், தமிழ்க் குழந்தைகளின் தந்தைகள் என  16000 பேரை இனியும் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டையோ அமைதியையோ ஏற்படுத்த முடியாது.

 

அதனால் அரசியல் சிறைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசாங்கத்தின் அமைச்சர்களின் கருத்தாவது ‘அரசியல் சிறைக்கைதிகள் கொலைகாரர்கள்’ என்பதுதான். அவர்கள் இந்த உணர்வு பூர்வமான விடயத்தைப் பார்ப்பது அவ்வாறுதான்.

 

மகேந்திரன்களுக்கு, துவாரகாக்களுக்கு பலவந்தமாக போர்ப் பயிற்சியை அளித்தது கருணா அம்மான்கள். பயிற்சியின் முடிவில் யுத்த களத்துக்குத் தள்ளிவிடப்படும்போது கொடுக்கப்படும் T56 துப்பாக்கியை சர்வதேச ஆயுத வலையமைப்புக்குக் கொண்டு சென்றது கே.பிக்கள். எனினும் கருணா அம்மான்களும் கே.பிக்களும் யுத்தத்தில் காட்டிக் கொடுத்ததன் காரணத்தாலும், அரசாங்கத்தின் முன்னிலையில் முழங்காலில் நின்றதாலும், இன்று ‘அரச மாளிகை’யில் இருக்கிறார்கள். அவர்களது பலாத்காரத்துக்கும் தலைமைத்துவத்துக்கும் கீழ் நின்று போரிட்ட தமிழ் இளைஞன் ‘சிறைச்சாலை’யில் இருக்கிறான்.

 

தேசிய ஒருமைப்பாட்டை மதிக்கும் சகலரையும் இந் நிலைமைக்கு எதிராக நிற்க முன்வருமாறு நாங்கள் வேண்டி நிற்கிறோம்.

 

உந்துல் ப்ரேமரத்ன

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

Series Navigationகவிதைபீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *