‘காதல் இரவொன்றிற்க்காக

This entry is part 14 of 33 in the series 12 ஜூன் 2011

எமிலி ஜோலா

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

 

-I-

 

Émile Zola

P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் சுவரையொட்டி செங்குத்து சரிவுகளும் ஆழமும் கொண்ட சிற்றாறொன்று பாய்கிறது. படிகம்போல் உருண்டோடுகிற நீரோட்டத்தின் ஓசையைக்கேட்டவர்கள் ‘தெளிவான பாட்டு’ என்ற பொருளில் ஷாண்த்கிளேரென்று பிரெஞ்சில் ஆற்றுக்குப் பெயரிட்டிருந்தார்கள். வெர்ஸாய் சாலையைப் பிடித்து நகரத்திற்கு வருவீர்களெனில், தெற்குவாயில் பக்கம் ஒற்றை வளைவுமீது அமைத்திருக்கிற பாலத்தின் வழியாக ஷாந்த்கிளேரை கடந்து வரவேண்டும். பாலத்தின் இருபக்க தடுப்பு சுவர்களும் அகலமாகவும், உட்கார வசதியாகவும் இருப்பதால் புறநகர் கிழங்கள் ஊர்க்கதைபேச அங்கே கூடுவார்கள். உங்களுக்கு நேரெதிரே நீண்டு செல்கிற வீதிக்கு ஜொலிக்கும் சூரியன் என்ற பொருளில் போ- சொலெய் என்று பெயர். வீதியின் முடிவில் அமைதியான சதுக்கமொன்றுண்டு. நான்கு பெண்கள் சதுக்கமென்ற பொருளில் அவ்விடத்தினை லா பிலாஸ் தெ காத்ரு – ·பாம் என்று அழைக்கிறார்கள். கற்கள்கொண்டு சீரமைக்கப்பட்ட சதுக்கமெங்கும் நெருக்கியடித்துக்கொண்டு புல் பூண்டுகள். உறக்கத்திலிருப்பதுபோல குடியிருப்புகள். அரைமணிநேரத்திற்கொருமுறை மெதுவாக நடந்து செல்லும் பாதசாரியொருவனின் காலடிச்சத்தமும், அதன் எதிரொலியாக் குதிரைக் கொட்டடியொன்றின் மூடியக் கதவின் பின்புறமிருந்து நாயொன்றின் குரைப்பும் கேட்கும். அடுத்து சீந்துவாரற்ற அச்சதுக்கத்திற்கு உயிர்ப்பினை தருபவர்கள் நாளொன்றுக்கு இருமுறை அவ்வழியாக போ-சொலெய் வீதியிலிருக்கிற தங்கள் விடுதிக்குத் திரும்புகிற ராணுவ அதிகாரிகள்.

 

உங்களுக்கு இடதுபுறமிருக்கிற தோட்டக்கலைஞர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில்தான் ஜூலியென் மிஷொன் குடியிருக்கிறான். தோட்டக்கலைஞர், காதரீன் வீதி பக்கமிருக்கும் வீட்டின் மற்ற பகுதியை தம் சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு -அவரது பராமரிப்பிலுள்ள தோட்டமும் அங்கேதான் இருக்கிறது- மிஷொனுக்கு முதல் மாடியிலுள்ள மிகப்பெரிய அறையை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆக இந்தப் பக்கம் நமது கதைநாயகன் ஜூலியன் இருபத்தைந்து வயதில், எனக்கெவரும் வேண்டாமென ஒதுங்கிக்கொண்டதொரு இளம்வயது பூர்ஷ்வா போல நிம்மதியாக குடியிருக்கிறான் அல்லது  அடைந்துகிடக்கிறான்,

 

மிகச் சிறு வயதிலேயே நமது இளைஞன் தந்தையையும் தாயையும் இழந்தவன். அவனுடைய குடும்பத்தினர் ‘மாந்த்’ அருகில் ‘ஆலுவே’ என்ற ஊரில் குதிரைக்குவேண்டிய சேணம், இழுவைகள் போன்ற உபகரண தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள். பெற்றோர்கள் இறப்பிற்குப்பிறகு உறவினரொருவர் சிறுவனை விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார். அவரும் இறந்துபோக கடந்த ஐந்துவருடங்களாக இவ்வூர் அஞ்சல் அலுவலகத்தில் எழுத்தராக ஊழியம். மாத ஊதியமென்று கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு பிராங் வருகிறது. சிக்கன பேர்வழி. கூடுதலாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கைகள் இல்லாததுபோலவே, இதற்கும் பெரிய அல்லது சந்தோஷமான வாழ்க்கையோ அல்லது எதிர்காலமோ அமையுமென்கிற எதிர்பார்ப்புகளும் அவனுக்கில்லை.

 

வெடவெடவென்று நல்ல உயரம், எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும். கனத்த கைகள். சிற்பகலைஞன் ஒருவன் முடிக்காமல்  விட்டதுபோல தலை. அவைகள் அவனை உறுத்திக்கொண்டிருக்கின்றன. தான் அவலட்சணமென்கிற எண்ணம் நிறைய. எனவே யாரிடமும் ஒட்டாமல் வாழும் சுபாவம், குறிப்பாக பெண்களெனில் காததூரம் ஓடுவான். ஒரு முறை வண்ணாத்தியொருத்தி, ‘அப்படியொன்றும் நீ வில்லன்போல இல்லை, பார்க்க நல்லாதானிருக்க’ என வேடிக்கையாகச் சொல்லப்போக, அரண்டுபோனான். வெளியில் வந்தவன் கைகளை வீசி, கூன்போட்டபடி தலைகுனிய ஓட்டமும் நடையுமாக வீடுபோய்சேர்ந்தான். அன்றைக்கு, எப்போது தனது குடியிருப்பிற்கு திரும்புவோம் என்றிருந்தது. இருண்மையும், ஈனப் பிறவியென்கிற நோய்த்தன்மையும் கொண்ட அந்த இழிநிலை,  தொடர்ந்து ஒருவிதமான அச்சத்தை அவனிடத்தில் ஏற்படுத்தியது. பெண் நண்பரென்றோ அல்லது அவனை நேசிக்கக்கூடிய ஒருத்தியென்றோ எவருமில்லாமலேயே மடத்து சாமியாரின் அபிலாஷைகளுடன் இப்படி ஒதுங்கியிருந்தே முதுமையை எட்டிவிடக்கூடும் என்ற நிலமையில்தான் அவனிருந்தான். அந்த வாழ்க்கை அவனுக்கு ஒரு சுமையாகவுமில்லை.

 

ஜூலியனுக்கு அந்த வாழ்க்கை உள்ளூர பிடித்திருந்தது. பரம சாது, சூதுவாதுகளும் தெரியாது. நிரந்தர விதிமுறைகட்கு உட்பட்டு  அன்றாட வாழ்க்கை ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தது காலையில் அலுவலகம், முதல் நாள் முடிக்காதவேலையை மறுநாள் தொடருதல்; பிறகு மதிய உணவென்று ஒரு துண்டு ரொட்டி, எழுத்துப்பணிகள்; இரவு உணவு, படுக்கை, உறக்கம்; மறுநாள், சூரியன் நேற்றைய நாளின் அவ்வளவு அம்சங்களையும் திரும்பவும் அழைத்துவருவான். ஆக  இன்று நேற்றில்லை பல வாரங்களாக, மாதங்களாக இது தொடர்கிறது. நிதானமாக ஊர்ந்த வாழ்க்கையில் கேட்போரை மகிழ்விக்கும் வகையில் கடைசியாக வந்திணைந்துகொண்டதுதான் இசை. பகலெல்லாம் வண்டியிழுத்து, இரவானால் வைக்கோல் படுக்கையில் அசைபோடுகிற காளைகளின் கனவுகளை தாலாட்ட வந்ததுபோல அவனுக்கு ‘இசை’ அமைந்தது. சீராக ஒலித்த இசையின் அவ்வளவு வசீகரத்தையும் ஆசைதீர பருகினான். சில நேரங்களில் அவனு¨டைய மகிழ்ச்சியென்பது இரவு உணவுக்குப் பிறகு காலாரப் ‘போ-சொலெய்’ வீதியில் இறங்கி நடப்பது, பாலத்தின்மீது அமர்வது பிறகு ஒன்பது மணிவரை மெல்ல அங்கே பொழுதை ஓட்டுவது. ஆற்று நீருக்குமேலே கால்களைத் தொங்கவிட்டிருப்பான், கீழே ஷாந்த்கிளேர் பெருக்கெடுத்து ஓடும் சத்தத்தைக் கேட்டு ரசிப்பான். சோல் மரங்கள் ஆற்றின் இரு கரைகளிலும் தங்கள் நிழலை நீரின் ஆழத்தில் புதைத்து வெளுத்த தலைகளுடன் குனிந்திருக்கும். வானில் அந்திவேளை சாம்பலின் துகள்கள் விழுந்தபடியிருக்கும். மிகவும் வசீகரிக்கப்பட்டவனாக, ஷாந்த்கிளேர் ஆறும் அவனைப் போலவே இயற்கைக்கு மத்தியில் அமைதிக்கிடையில் பாய்வதில் மகிழ்ச்சிகொள்ளுமென்கிற குழப்பமான நினைப்புகளுடன், தியானத்தில் ஆழ்ந்ததுபோல இருப்பான். நட்சத்திரங்கள் பிரகாசிக்க தொடங்குகிற நேரத்தில், மனம் நிறைந்த சந்தோஷத்துடன் உறங்கத் திரும்புவான்.

 

ஜூலியனுக்கு வேறு வகை சந்தோஷங்களுமுண்டு. விடுமுறை நாட்களில் ஒற்றை ஆளாக கிளம்பி, வெகுதூரம் நடப்பது பிறகு களைத்து வீடு திரும்புவதென்பது அதிலொன்று. இதுதவிர செதுக்கு வேலை செய்கிற ஊமையன் ஒருவனின் சினேகிதமுமுண்டு. இருவருமாக கைகோர்த்துகொண்டு ஒரு பிற்பகல்முழுவதும், எவ்வித உரையாடலுமின்றி ‘மாய்ப்’ பகுதியில் காலாற நடந்துவிட்டுத் திரும்புவார்கள். ஒருமுறை காப்பிபார் ஒன்றின் பின்புறம், சதுரக்கட்டங்கள் ஆட்டமொன்றினை ஊமையனுடன் வெகுநேரம் கவனமெடுத்துக்கொண்டு ஆடவேண்டியிருந்தது.  அவன் கண்ணெதிரில் வாகனமொன்று மோதி நாயொன்று இறந்தச் சம்பவம் நினைவில் அழியாமலிருந்தது. அதுமுதல் வீட்டில் நாய் பூனையென்று எதுவுமில்லை. அஞ்சலகத்தில் பத்து வயது சிறுமியுடன் இவனை இணைத்துக் கிண்டல் செய்தார்கள். வெற்று கால்களுடன் கந்தல் ஆடையில் தீப்பெட்டிகளை விற்பனை செய்தாள். அவளுடய தீப்பெட்டிகளை வாங்காகாமலேயே பணம் தந்தது உண்மை. சக ஊழியர்கள் கேலிசெய்கிறபோது கோபம் கொண்டான். பிறர் அறியக்கூடாது என்பது போல ரகசியமாக அவளுக்குப் பணமும் கொடுத்தான். இருந்தபோதிலும் கோட்டை மதிற் சுவரருகில் இரவு நேரங்களில் எந்தப்பெண்ணுடனும் அவனைப் பார்த்ததாக கதைகளில்லை. P**** நகரத்தின் பெண் ஊழியர்களும் ஆட்டம் பாட்டங்களின்போது, அவனைத் தொந்தரவுசெய்வதில்லை. காரணம் அவர்களெதிரில் அவனுக்குள்ளத் தடுமாற்றம். அவனை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பெண்கள் சிரிக்கப்போக அது அவனுக்கு கேலியாகப்பட்டது. நகரத்தில் ஒரு சிலர் சரியான முட்டாளென்றார்கள்; மற்றவர்கள் நல்லவன்போலவும், எந்நேரமும் தனிமையிலும், இருக்கிற இதுபோன்ற பையன்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்றார்கள்.

 

ஜூலியனைப் பொறுத்தவரை அவனது அறைதான் சொர்க்கம். அங்குதான் நிம்மதியாக அவனால் மூச்சுவிடமுடிகிறது. இவ்வுலகத்தில் அவனை ஆதரித்து அடைக்கலம்கொடுக்கிற ஒரே ஒரு போக்கிடம் அறைமட்டுமே என்றும் கருதினான். திடீரென்று உற்சாகத்துடன் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்வான். எதிர்பார்த்ததைக்காட்டிலும் இளைஞனாக இருப்பதைக்காண ஆச்சரியம். அவனுடைய அறை மிகவும் விசாலமானது: பெரிய சோபா ஒன்று போட்டிருக்கிறது. அது தவிர வட்டமானதொரு மேசையும், இரண்டு நாற்காலிகளும், ஒரு மெத்தைவைத்து தைத்த நாற்காலியுமுண்டு; இவைகள் போக கொஞ்சம் நடக்கவும் அதில் இடமிருந்தது. பிறகு கட்டில், அறையில் அதற்கென்றமைத்த பகுதியில் போடப்படிருந்தது. இரண்டு சன்னல்களுக்கிடையில் போடப்பட்டிருந்த சிறியதொரு வால்நட் மேசை, பார்ப்பத்தற்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்போலவிருந்தது. சிற்சில சமயம் அறையில் சிறிதுநேரம் நடப்பான், கால் நீட்டி படுப்பான்; அலுத்துக் கொள்வதெல்லாமில்லை. வாசிப்பதில் ஆர்வமில்லாதவன். எழுத ஆர்வமுண்டு அது அலவலகத்தில், பணித்தொடர்பானவை,  பிற இடங்களில் எழுதுவது கிடையாது. அவனுக்கு உணவிடும் விடுதிப்பெண்மணி அவனை நல்வழி நடத்தக் கடமைப்பட்டவள்போல அவ்வபோது நாவல்களை இரவலாகக் கொடுத்துவிடுவாள். அவன் அவற்றை வாசிப்பதில்லை, எப்படி வாங்கினானோ அப்படியே திருப்பித் தந்துவிடுவான், சிக்கலான அக்கதைகள் எதார்த்தத்தைக் கவனத்திற் கொள்ளாதவையென்கிற எண்ணம் அவனுக்கிருந்தது. படம் வரைவதிலும் கொஞ்சம் ஆர்வமுண்டு. வரைவதென்று சொன்னால் ஒரேயொரு தலை, அதைத்தான் தீட்டுவான். அதுவும் பெண்ணொருத்தியின் தலை, கறாரான பார்வைகொண்டவளாக அவளிருப்பாள். தலைமுடியை முன்புறத்தில் பெரியதொரு பட்டையையிலிட்டு அடக்கியிருப்பாள். பின்புறக்கொண்டையில் மணி அலங்காரம். உண்மையில் அவனுக்கு ஆர்வமென்று ஒன்று இருக்குமேயானால் அது இசையாகத்தான்  இருக்கவேண்டும்.

 

மாலைமுழுதும் புல்லாங்குழல் வாசிப்பான். அது அவனுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு, அதற்கு ஈடானது வேறொன்றில்லை என நினைத்தான். புல்லாங்குழல் வாசிக்க எவரிடமிருந்தும் அவன் பாடம் பெறவில்லை, அவனே குரு. பழம்பொருட்கள் விற்கிற கடையொன்றில் வெகு நாட்களாக புல்லாங்குழலொன்றினை பார்த்துவந்தான். அதைக் கண்ட நாளிலிருந்து அதன்மீது தவிர்க்கமுடியாதொரு ஈர்ப்பு. கையில் பணமிருந்தும், வாங்குவதற்காக கடைக்குள் நுழைவதென்றால் வெட்கம், பிறரின் ஏளனத்திற்கு ஆளாககூடுமோவென்ற எண்ணம். ஒரு நாள் அதனை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடுவதற்குண்டான துணிச்சலும் அவனுக்கு வந்தது, மார்போடு அணைத்து மேலங்கியில் ஒளித்து எப்படியோ குடியிருப்புக்கும் புல்லாங்குழலைக் கொண்டுவந்தாயிற்று. அடுத்ததாக அவன் செய்தது, கதவு சன்னல்களென்று அனைத்தையும் இறுக மூடியது. இருந்தும் வாசிப்பைக்கேட்டுப் பிறர் கேலி செய்யக்கூடுமென அஞ்சி முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்தான். இரண்டு ஆண்டுகள் சிறியதொரு புத்தககடையில் கிடைத்த பழைய குறிப்பினை வைத்து முறைப்படி பழகினான். பழகியது போதுமென்று நினைத்திருக்கவேண்டும் கடந்த ஆறுமாதமாக சன்னல்களைத் திறந்துவைத்து வாசிக்கும் துணிச்சல் வந்திருக்கிறது. அவனறிந்ததெல்லாம் பழமையான இசைமெட்டுகள், அவை மிகவும் எளிமையானவையாகவும், துடிபற்றவையுமாக இருந்தன. அவை கடந்த நூற்றாண்டு காதல் மெட்டுகளாக இருந்ததால், உணர்ச்சிவசப்பட்ட ஓர் அசட்டுத்தனமான மாணவனைப்போல அவன் வாசித்தபோதிலும் கேட்பதில் ஓர் முடிவற்ற சுகமிருந்தது. இதமான வெப்பம் நிலவும் இரவுகளில், அப்பிரதேசம் உறக்கத்திலாழ்ந்த பின்பு, மெழுகுத்திரி ஒளியால் நிரம்பிய அப்பெரிய அறையிலிருந்து மெல்லிசையொன்று கசிந்து வரும். கீழ்ஸ்தாயியில், கலக்கத்துடன் தனிமையையும், இரவையும் முன்வைத்து இசைக்கப்படும் அப்பாடலைக் கேட்பவர்கள் காதற்பாடலென்று  சொல்லக்கூடும். மெட்டுகளை ஞாபகப்படுத்திக்கொண்டு பாடுவதால் சிக்கனம் கருதி எதற்காக மெழுகுவர்த்தி என நினைத்தவன்போல அவற்றை அணைத்துவிடுகிற பழக்கமுமுண்டு. அதுவும் தவிர அவனும் இருட்டென்றால் மிகவும் விருப்பம். சன்னலுக்கு முன்பாக வானத்தை முன்நிறுத்தி இருட்டில் வாசிக்க ஆரம்பித்துவிடுவான். கீழே நடந்து போகிறவர்கள் தலையை உயர்த்தி பார்ப்பார்கள். இத்தனை அழகாக, வலுவற்று ஓசையில் மாற்றங்களைக் புகுத்தி பாடும் வானம்பாடியின் குரல் எங்கிருந்து வருகிறதென அவர்கள் யோசிப்பார்கள். அப் பழைய புல்லாங்குழலில் சிறிய ஓட்டை, அதனால் வாசிக்கிறபொழுது, ஓசைக்குத் திரையிட்டதுபோல சப்தம் வரும், அதாவது இளமையில் மிகவும் இனிமையாக பாடிய இசைக்குறிப்பை மீண்டும் சுருதி சுத்தமாக பாடமுயற்சிக்கும் சீமாட்டியின் குரலொத்து. ஒன்றன்பின்னொன்றாக இசைக்குறிப்புகள் அவைகளின் சிறிய இறக்கைகளின் சப்தத்தோடு பறக்க ஆறம்பித்துவிடும். இரவுதான் இசைக்கிறதோ என்ற ஐயமும் நமக்கெழும், ஏனெனில் இரவின் சுவாசத்தைத்தான் அதிகமும் நாம் அதில் உணர்கிறோம். அண்டை அயலார்கள், இவனது வாசிப்பை தொல்லையாக நினைப்பார்களோ என்ற அச்சமும் அவனுக்குண்டு. பெரும் நகரத்தைபோலன்றி அவர்கள் ஆழ்ந்து உறங்குபவர்கள் என்பதால் பிரச்சினைகளில்லை.

 

தவிர காத்ரு – ·பாம் சதுக்கத்தில் இரண்டே இரண்டுபேர்தான் வசிக்கிறார்கள் ஒருவர் பத்திரப்பதிவாளர் பெயர் சவூர்னன், மற்றொருவர் காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அதிகாரி பிடூ. இருவருமே அமைதியானவர்கள், ஒன்பது மணிக்குப் படுத்தார்களெனில் உடனே உறங்கிவிடுவார்கள். ஜூலியனுக்கு அச்சமென்று ஒன்று இருக்குமேயானால் அது மாளிகை வீட்டில் வசிப்பவர்களைப்பற்றியது, அம்மாளிகைக்குப்பெயர் ஹொட்டெல் தெ மர்சான். அம்மாளிகை சதுக்கத்தின் அவனுடைய சன்னல்களுக்கு நேரெதிரில் மறுபக்கத்திலிருந்தது. முகப்பில் சாம்பல் நிறத்தைக் கொண்டிருந்த அம்மாளிகை துயரத்தில் ஆழ்ந்திருப்பதுபோல தோற்றம் தரும், அதாவது துறவிகளின் மடத்தைப்போல. நுழைவாயிற் கதவுக்கு புல்மண்டிக்கிடக்கும் ஐந்து படிகள், அவற்றைக்கடந்தால் வளைவாக ஒரு பெரிய கதவு, அவற்றிலுள்ள பெரிய பெரிய ஆணிகளைப் பொருத்தி பாதுகாப்பில் கவனம் எடுத்துள்ளார்கள் என்பது புரிந்தது.

 

பங்களாவின் மாடியில் பத்து சன்னல்களிருந்தன, அவற்றைத் திறப்பதும் மூடுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. சன்னல்களின் பின்னே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? ஒன்றையும் அறியாதபடி தடித்த சன்னல் திரைகள் எந்நேரமும் விலக்கப்படாமலிருக்கும். தெற்கே தோட்டத்தில் நன்கு வளர்ந்திருக்கும் செஸ்ட்நட்மரங்களால் பச்சைபசேலென்ற தோற்றம். அவற்றின் இலைகள் அலைஅலையாய் கோட்டை மதிற்சுவரையும் தொட்டிருந்தன.

 

மாளிகையின் தோற்றமும், பூங்காவும், கரடுமுரடான அதன் சுவர்களும், பிரபுத்துவ தன்மையும் நமது ஜூலியனுக்கு ஒன்றை மட்டும் உறுதியாக அறிவித்திருந்தன, மாளிகைவாசிகளான மர்சான் குடும்பத்தினருக்கு புல்லாகுழல் ஓசைமீது வெறுபெனில் தயங்காமல் தெரிவித்துவிடுவார்கள், மேற்கொண்டு வாசிக்க இவனை அனுமதிக்கமாட்டார்கள் என்பதே அது.

 

சன்னலில் கைகளையூன்றி எதிரில் நிற்கும் பிரம்மாண்டமான மாளிகையையும் அதன் விசாலமான தோட்ட மனையையும் பார்க்கிறபொழுது நமது இளைஞன் புனிதத் தலமொன்றை தரிசிக்கும் அனுபவத்திற்குள்ளானான். அப்பிரதேசத்தில் இந்த மாளிகையைப் பற்றி அறிந்திராதவர்களே எவருமில்லையெனலாம். அம்மாளிகைக்கு வெகுதூரத்திலிருந்து வந்துபோகும் விருந்தினர்களைப்பற்றிய பேச்சுகள் நிறைய. அதுபோலவே மர்சான் குடும்பத்தினரின் செல்வவளம்பற்றிய கதைகளும் ஊரில் நிறைய உலாவந்தன. மாளிகைப்பற்றிய செய்திகளில் இவனுக்கும் நிறைய ஆர்வம், பெரும் வலிமைபெற்ற அந்த செல்வ வளத்தின் மர்மங்களை அறியும் ஆவலில் உள்ளே சென்று பார்த்துவரவும் விருப்பம். ஆனால் அவைகளையெல்லாம் மறந்து மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருந்தான். எதிரே அவன் பார்த்ததெல்லாம் வழக்கம்போல சாம்பல நிற முகப்பு, கற்கள் பெயர்ந்த வாயிற்படிகள், ஒருபோதும் திறந்திராத பூஞ்சைக்காளான் நிறைந்த வாயிற்கதவு இவைகள்தான். கற்கள் பெயர்ந்த படிகளைக்கடந்து பூஞ்சைக்காளான் பிடித்திருந்த வாயிற்கதவினைத் திறந்து உள்ளே போன ஒரேயொரு ஆத்மாவென்று எதுவும் இதுவரை இவன் கண்ணிற் பட்டதில்லை. மர்சான் குடும்பத்தினர் வாயிற்கதவினை உபயோகிப்பதில்லையென தீர்மானமாக இருந்திருக்க வேண்டும், பதிலாக செயின்ட்-ஆன் பகுதியிலிருந்த சிறிய கம்பிக் கதவின் வழியாக மாளிகைக்குள் போகவர இருந்தார்கள். தவிர கோட்டைமதிற்சுவரருகே ஒரு சிறிய சந்தின் முடிவில் தோட்டத்துப்பக்கம் வருவதற்கு உதவும் வகையில் சிறிய கதவொன்றுண்டு, ஆனல் இவைகளிரண்டையும் ஜூலியன் தனது இருப்பிடத்திலிருந்துகொண்டு அவதானிப்பதென்பது முடியாத காரியம்.  அவனைப்பொறுத்தவரை அம்மாளிகை ஒரு சவம். தேவதைக்கதைகளில் வருகிற மாளிகைக்கு ஈடானது, அதில் வசிப்பவர்களும் அக்கற்பனை கதைகளில் வருகிற மாளிகைவாசிகளைப்போல கண்களுக்குப் புலப்படாதவர்கள். ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் சன்னற் கதவுகளை திறக்கிற வேலைக்காரியொருத்தியின் கைகளைமட்டுமே பார்த்திருக்கிறான். பின்னர் அந்த குடியிருப்புக்கு இடுகாட்டில் அநாதையாகக்கிடக்கும் கல்லறையின் சோபை வந்துவிடும். செஸ்நட் மரங்கள் தோட்டத்திற்குள் போட்டிருக்கிற பாதைகளை மறைக்கும் அளவிற்கு அடர்த்தி. ஆகக் காற்று கூட உள்ளே புகமுடியாத அதன் இருப்பும்;  எவரும் நேரில்லை என்பதுபோன்றதொரு இறுமாப்பும், பேசமறுக்கும் தன்மையும்;  நமது இளைஞனின் குழப்பங்களை இரட்டிப்பாக்கியிருந்தன. செல்வநிலை, அதன்விளைவான உறைந்துபோனதொரு அமைதி அதில் ஏதோ தேவாலயத்து விதானத்திலிருந்து வந்ததைப்போன்ற அச்சம் கலந்த உணர்வினைக் கண்டான்.

 

உறங்கப்போகுமுன், மெழுகுத் திரியை அணைத்த பின்பு மர்சான் மாளிகையின் மர்மங்களை வியப்பில் ஆழ்த்தவென்று பலமுறை சன்னலுக்கருகில் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் நின்றிரு,திருக்கிறான். இரவானால் வானத்திற்கிடையே ஒரு கறுப்பு கறைபோல மாளிகை நிற்க, செஸ்ட்நட் மரங்களோ மை கலந்த தடாகம்போல  தோற்றம் தரும். சன்னற்திரைகளை உள்ளே இழுத்து இறுக மூடியிருப்பார்கள். ஒரே ஒரு துளி வெளிச்சத்திற்கும் வெளியில் அனுமதியில்லை. மனிதர்கள் குடியிருப்பில் சாதாரணமாகக் கேட்கக்கூடிய சுவாசங்கூட அங்கில்லை பதிலாக அங்குள்ளவர்களின் ஆழ்ந்த உறக்கத்தினால் எழுகின்ற பெருமூச்சுகளே கேட்கும். மாளிகை முற்றாக இருட்டில் கரைந்துவிடும். அந்நேரத்தில் ஜூலியனுக்கு துணிச்சல் வந்துவிடும் புல்லாங்குழலை எடுத்துக்கொள்வான். பிரச்சினைகளின்றி வாசிக்க முடியும்: வெறுமைபோல நிற்கும் மாளிகை முத்துபோன்ற சின்னன்சிறு இசைக்குறிப்புகளை எதிரொலிக்கும். நிதானமாக வரும் சில வாக்கியங்கள் பூங்காவின் இருளில் தொலைந்துவிடும், அங்கே இறக்கைகள் படப்படப்பு ஒலிமாத்திரம் தனியே கேட்பதில்லை. எல்லோவுட்டில் செய்யபட்ட அப்பழைய புல்லாங்குழலில் வாசிப்பதைக்கேட்க, ஸ்லீப்பிங் ப்யூட்டி கேசலுக்கு முன்னே நின்று பழைய பாடலொன்றை கேட்பதுபோல இருந்தது.

 

 

ஒரு ஞாயிறன்று, தேவாலய சதுக்கத்தில் அஞ்சலகத்தில் வேலைபார்க்கும் சக ஊழியனொருவன் ஜூலியனிடம்  உயரமான முதியவர் ஒருவரையும், ஒரு மூதாட்டியையும் சுட்டிக்காட்டி அவர்களிருவரும் மர்சான் தம்பதிகளென்றான். அவர்களை மிகவும் அரிதாகத்தான் வெளியில் காணமுடியும். ஜூலியன் இதற்கு முன்பு அவர்களிருவரையும் பார்த்ததில்லை. இருவரும் மெலிந்தும் பெருமித தோற்றத்துடனும் இருந்தார்கள். அவர்கள் அளந்து நடந்ததும், வணங்கிய விதமும், தலையை இலேசாக அசைத்து அவர்கள் பதிலளித்த விதமும் இவனை திக்கு முக்காட செய்தது. அதேவேளை அவனுடைய அலுவலக சக ஊழியன் வேறொரு தகவலையும் தெரிவித்தான். அதன்படி வயதான தம்பதிகளுக்கு மகளொருத்தி இருக்கிறாள், அவள் இன்னமும் விடுதியில் தங்கி படிக்கிறாள்;  பெயர்: செல்வி தெரெஸா தெ மர்சான். அடுத்து பத்திரம் எழுதும் சவூர்னனிடம் ஊழியம் செய்யும் குள்ளன் கொலோம்பெல் அவளுடைய வளர்ப்பு சகோதரனெனவும் செய்தி கிடைத்தது. அன்றைக்கு உண்மையில் தம்பதிகள் இருவரும் செயின்ட் ஆன் சந்து பக்கம் திரும்பவிருந்த நிலையில், அவ்வழியாக வந்த குள்ளன் கொலொம்பெல்  அவர்களை நெருங்கினான், பிரபுக்கள் தம்பதியரும் அவனிடம் கை குலுக்கினார்கள். பொதுவாக அப்படியொரு மரியாதையை யாருக்கும் அவர்கள் சாதாரணமாக செய்வதில்லை. ஜூலியனுக்கு அவ்விடயம் கவலைகொள்ள வைத்தது. காரணம் இருபதுவயது பையனான கொலொம்பெலுக்கு கண்கள் உயிர்ப்புள்ளதென்ற போதும் வாய் கொழுப்பு அதிகம், எனவே வெகுகாலந்தொட்டு  ஜூலியனுக்கு அவன் எதிரி. அவன் ஜூலியனுடைய கூச்ச சுபாவத்தை ஏளனம் செய்திருந்தான். போ-சொலெய் வீதியிலிருந்த சலவைகாரிகளை அவனுக்கெதிராக திருப்பிவிட்டவனும் அவனே. கடைசியில் ஒருநாள் அது அடிதடியில் முடிந்தது, கோட்டை மதிற்சுவரருகே இருவரும் கட்டிபுரண்டார்கள். சண்டையின் முடிவில்,  பத்திர எழுதுபவரின் ஊழியன் கண்கள் இரண்டும் வீங்கிப்போக ஓடிப்போனான். மர்சான் பிரபு குடும்பத்தினரின் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்த அன்று மாலை ஜூலியன் புல்லாங்குழலை மிகவும் அடக்கி வாசித்தான்.

 

மர்சான் மாளிகைப்பற்றிய தகவல்கள் அவனுடைய அன்றாட அலுவல்களையோ, நேரத்தை கடைபிடிப்பதில் அவனுக்கிருந்த ஒழுங்கிலோ குறுக்கிடவில்லை. அலுவலகத்திற்குப் போனான், மதிய இரவு உணவுகள் வழக்கம்போல இறங்கின. ஷாந்த்கிளேர் பக்கமாக உலாத்திவிட்டு வருவதும் தவறாமல் நடந்தது. எதிரிருலிருந்த மாளிகையும், தனது வழக்கமான மௌனத்துடன் கடைசியில் அவனது இனிமை வாழ்க்கையில் ஒரு பகுதியாக இணைந்துகொண்டது. அப்படி இரண்டு ஆண்டுகள் கடந்தன. மாளிகையின் சாம்பல் வண்ண முகப்பும், புல் மண்டிய முன்பக்க படிகளும், கதவும், சன்னற் கதவுகளின் இருளும் அவனுக்குப் பழகியிருந்தன. அவைகள் நிரந்தரமென்றும் அப்பகுதி துயிலில் ஆழ்வதற்கு அவைகளெல்லாம் ஒரு தேவையுங்கூட என நினைத்தான்.

 

காத்ரு-·பாம் பகுதிக்கு ஜூலியன் குடிவந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. ஜூலைமாதத்தில் ஒருநாள்மாலை நடந்த சம்பவம் அவன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிபோட்டதென சொல்லவேண்டும். அன்றிரவு கடுமையான வெப்பம் நிலவியது, வானமெங்கும் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன. இருட்டில் தன்னை ஒளித்துக்கொண்டு வழக்கம்போல புல்லாங்குழல் வாசிக்கிறான், அன்றைக்கு ஈடுபாட்டோடு வாசித்ததாக சொல்ல முடியாது, சிறிது சிறிதாக வாசிப்பின் வேகத்தைக் குறைத்தவன் ஒரு கட்டத்தில் கண்ணயர்ந்து விட்டான், அப்பொழுது  கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்தது. எதிரிலிருந்த மர்சான் மாளிகையில் சன்னலொன்று திறக்க இருட்டிக்கிடந்த மாளிகையின் முகப்பில்  குபீரென்று ஒளிவெள்ளம். இமைக்க மறந்தவனாய் ஜூலியன் பார்த்துக்கொண்டிருக்க, இளம்பெண்ணொருத்தி நடந்து வந்தாள், வந்தவள் முழங்கைகளை மடித்து சன்னல் விளிம்பில் ஊன்றினாள். மெல்லிய சரீரம் வெட்டுண்டதுபோல மடிந்தது. காதுகொடுத்து கேட்க விரும்பியவள்போல தலையை உயர்த்தினாள்.  ஜூலியன் நடுங்கினான், மேற்கொண்டு வாசிக்கத் தடுமாறினான். அவள் முகத்தை தனித்து அடையாளப்படுத்த இயலவில்லை, தலைமயிர் கற்றையாய் சரிந்து கழுத்தில் இறங்கி பிரிந்திருந்தது. நிலவிய அமைதிக்கிடையில் மெல்லிய குரல். பிரான்சுவாஸ், “உனக்குக் கேட்டதா? அது இசைதான், உறுதியாகச் சொல்லலாம்”.  “மத்மசல்! குயிலென்று நினைக்கிறேன்”, தடித்த குரலொன்று அளித்த பதில் உள்ளிருந்து வருகிறது. “கதவை மூடு இராக்கால விலங்குகளிடத்தில் கவனமாக இருக்கவேண்டும்”. கட்டடத்தின் முகப்பு மீண்டும் இருளில் மூழ்க, ஜூலியன் மெத்தைதைத்த நாற்காலியில் அமர்ந்திருந்தவன் எழ முடியாமற் தவித்தான். அவனுடைய கண்கள் இதுநாள் வரை சவம்போல இருண்டுக்கிடந்த எதிர்வீட்டு சுவற்று சன்னலிற் கசிந்த ஒளியால் நிரம்பியிருந்தது. அதிர்ச்சியிலிருந்து மீளாதிருந்த ஜூலியனுக்கு வியப்பு. அவளுடைய திடீர் தோற்றம் என்னுள் மகிழ்ச்சியை விதைக்குமா? ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் அதிக மெல்ல இசைத்தான். செஸ்ட்மரங்களில் குயிலொன்று இருக்கவேண்டும் என்ற பெண்ணின் நம்பிக்கையை நினைக்க சிரிப்பு வந்தது.

 

-II-

 

மறுநாள் மத்மசல் தெரெஸா விடுதியிலிருந்து மாளிகைக்குத் திரும்பிவிட்டாள் என்பது அஞ்சலத்தில் மிகப்பெரிய செய்தியாக உலா வந்தது. முந்தைய இரவு தலைமயிரும் வெறும் கழுத்துமாக அவளைக் கண்டதை ஜூலியன் வாய் திறக்கவில்லை. மனதிற் கவலை புகுந்துகொண்டது. இன்னதென்று விவரிக்கமுடியா அளவில் பெண்ணின் தரிசனம் அவனை பாதித்திருந்தது, இனி அவனது நடைமுறை வாழ்க்கைப் பாதிக்கப்படலாம். இனி எந்த நேரமும் திறக்கப்படலாமென்றிருந்த சன்னற்கதவுகள் அவனுக்கு மிகுந்த உபத்திரவத்தைத் தந்தன. இந்த நிலையில் இங்கே தொடர்ந்து தங்க முடியாதென்ற எண்ணம் உதித்தது. ஒரு பெண்ணைக் காட்டிலும் ஆண்மகனை அவனால் நன்றாக நேசிக்க முடியும், காரணம் பெண்கள் அவனை கூடுதலாகவே கேலிசெய்கிறார்கள். இனியெப்படி குழலூதுவது?  இசையை அவள் நன்கு அறிந்தவளாக இருக்கவேண்டும், இத்தனை நாட்களாக தப்பும் தவறுமாக வாசித்திருக்கிறேன், என்னவெல்லாம்  நினைத்திருப்பாளோ? என்று யோசித்தவன், இறுதியில் அவள்மேல் தனக்கு வெறுப்பு இருக்கிறதென கருதினான்.

 

சந்தடியின்றி தனது அறைக்குத் திரும்பினான். மெழுகுத் திரியை ஏற்றவில்லை. எனவே எதிர்வீட்டுபெண் இவனைப் பார்க்க முடியாது. மனம் குழப்பமாக இருந்ததால் வேளையாய் உறங்கலாமென நினைத்தான். நினைத்தானே தவிர, அதை செயல்படுத்த தயங்கினான். எதிர்வீட்டில் என்ன நடக்கிறதென்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்திருந்தது. சன்னற் கதவுகள் திறக்கவில்லை. மணி பத்து இருக்கலாம் அப்பொழுது சன்னற் கதவின் சட்டங்களுக்கிடையே பால் போல வெளிச்சம், பின்னர் அது அணைந்துபோனது. அங்கிருந்து நகராமல் இருண்டுக்கிடந்த எதிர்வீட்டு சன்னலையே பார்த்தபடி நின்றான்.

 

அன்றிலிருந்து ஒவ்வொரு மாலையும், அவனது விருப்பத்திற்கு மாறாக எதிர்வீட்டு சன்னலை வேவு பார்க்க ஆரம்பித்தான். முதன்முதலில் எப்படி நோட்டமிட ஆரம்பித்தானோ, அவ்வாறே செய்தான். ஊமை கற்களுக்கு உயிர்கொடுக்கவல்ல சிறு சிறு மூச்சுகளிலுங்கூட கவனம் செலுத்தலானான். எல்லாம் முன்போலவே நடந்தது. மாற்றங்களென்று எதுவுமில்லை. வழக்கம்போலவே ஆழ்ந்த உறக்கத்தை மாளிகைத் தொடர்ந்தது. புதிய உயிர்துடிப்பினை வியப்பில் ஆழ்த்த நன்கு பயிற்சிபெற்ற கண்களும், காதுகளும் தேவைபட்டன. அப்புதிய உயிர்துடிப்பென்பது அநேகமாக சிற்சில சமயங்களில் கண்ணாடிகளுக்குப்பின்புறம் தெரிகிற வெளிச்சமாகவும் இருக்கலாம் அல்லது ஒதுங்கியிருக்கிற திரைத் சீலை மூலையால் கண்ணிற்படுகிற விசாலமான கூடமாகவோ, அறையாகவோ கூட இருக்கலாம். தோட்டத்து பாதையில் முன்பொலித்த மெலிதான காலடியோசைகள், பியானோவுடன் இணைந்து வெகுதொலைவிலிருந்து வரும் குரல், நிரந்தரமாக எழுகிற சப்தங்களால் சரீரத்தில்  ஏற்படுத்தும் நடுக்கம் ஆகிய இவைகளெல்லாம்  இளைஞனின் இரத்தத் துடிப்புகளாக  ஆண்டுகள் பல கடந்த அம்மாளிகையில் முன்புபோலவே இன்றைக்கும் தொடர்கின்றன. இதுபோன்ற சப்தங்கள் எழும்புகிறபோதெல்லாம் தான் படும் பாட்டினைவைத்து மாளிகைப்பற்றிய தகவல்களில் அவனுக்குள்ள ஆர்வம் விளங்கிற்று. அவனது புல்லாங்குழல் வாசிப்பு வெறிச்சோடிக் கிடக்கும் மாளிகையிலிருந்து மென்மையாக எதிரொலிக்கிறபோதெல்லாம் பலமுறை வருந்தியிருக்கிறான்.

 

இரகசியமாக மனதில் ஒளித்து வைத்திருந்தபோதும் அவனது ஆசைகளில் மிகத் தீவிரமானதென்று சொன்னால் அது மறுபடியும் தெரெஸாவை பார்க்கவேண்டுமென்பதாகும். அவனது கற்பனையில் அவள் முகம் செந்தூரம்பூசிக்கொண்டிருந்தது, முகத்தில் பிறரை ஏளனம்செய்யும் குணம், கண்களோ பிரகாசமானவை, ஆனாலும் பகலில் சன்னலைப் பார்ப்பதற்கு துணிச்சலில்லாத காரணத்தால் இரவில்  இருளினூடே மட்டுமே பார்க்கக் கிடைத்தாள்.

 

ஒருநாள் காலை தன்னுடைய சன்னற்கதவினை சூரிய ஒளியிலிருந்து காத்துக் கொள்ளும்பொருட்டு மூடும்  வேளையில் தெரெஸாவை அவளுடைய அறை நடுவே நிற்கக் கண்டான். அந்த இடத்தைவிட்டு நகர்வதற்குத் தயங்கியவளாக சிலைபோல நின்றிருந்தாள். எதையோ யோசிப்பதுபோன்றதொரு தோற்றம், நல்ல உயரம், நன்றாக வெளுத்திருந்தாள், முகம் அழகாகவும் ஒழுங்குடனுமிருந்தது.

 

இவனினும் பார்க்க அவள் உருவம் சந்தோஷம் பூரித்ததாக இருக்க அவளிடத்தில் அச்சம் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக சற்றே பெரியதாக இருந்த அவளுடைய வாயும், செக்கசெவேலென்றிருந்த உதடுகளும்; கருமையாகவும், ஒளிரும் தன்மையுடனும், ஆழமானப்பார்வையுடனுமிருந்த கண்களும் அவளை கொடூர குணங்கொண்ட அரசியாகக் காட்டியது. சன்னலருகில் மெல்ல நடந்து வந்தாள், ஆனால் அவனைப் பார்த்ததாகத் தெரியவில்லை, அவளிடத்திலிருந்து வெகுதூரத்தில் அவன் இருந்ததால் பார்த்துக்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. அவள் போய்விட்டாள், அவள் கழுத்தை அசைத்தபொழுது அதில் ஒர் அழுத்தமான நளினம் வெளிப்பட்டது. அவளுடன் ஒப்பிட்டுப்பார்க்க்கிறபொழுது பரந்த தோள்களுக்குச் சொந்தக்காரனாகவிருந்தும் ஒரு சவலைப்பிள்ளையாகத் தெரிந்தான். அதுமுதல், அவளை சந்தேகிக்கலானான்.

 

ஆக இளைஞனின் உயிர்வாழ்க்கை ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. அவனுக்கு மிக அண்மையில், பெருமிதமும், மதிப்பும்வாய்ந்த அழகான இளம்பெண்ணான அவள் இருந்தபோதும் அவணுக்கு ஏமாற்றத்தைத் தந்தாள். அவள் அவனைப் பார்ப்பதே இல்லை, அவனது இருப்பை அலட்சியம் செய்வதுபோல இருந்தது. அவள் கவனிக்கக்கூடும், ஏளனம் செய்யக்கூடுமென்கிற எண்ணமிருந்ததால் அவள்  குறைகாணும் அளவிற்கு இவன் நடந்துகொள்வதில்லை. மிகவும் அடக்க ஒடுக்கமாக வீட்டுக்குள் நுழைவான், அறையில் தேவையின்றி உலாத்துவதைத் தவிர்த்தான். ஒரு மாதம் கடந்திருந்தது. இளம்பெண் ஆணவத்துடன் தன்னை அலட்சியம் செய்வதைக்கண்டு மிகவும் வருந்தினான். ஒருபோதும் தன்னை ஏன் ஏறிட்டுப் பார்ப்பதில்லை? சன்னலருகில் வருகிறாள், வெறிச்சோடிக்கிடக்கும் தெருவின் மீது அவளுடைய சூன்யப் பார்வையை ஓடவிடுகிறாள், பிறகு சதுக்கத்தின் மறுபக்கத்தில் என்ன நடக்கிறதென்கிற ஆர்வங்களின்றி திரும்பிவிடுகிறாள். சொல்லப்போனால் எங்கே அவள் இவனைப்பார்த்துவிடுவாளோ என்ற அச்சம் இவனுக்கு நிறைய இருந்தது. இப்போது கூட அவள் இவனைப் பார்ப்பதாக கற்பனை செய்து நடுங்கிக் கொண்டிருக்கிறான். அவன் உயிர்வாழ்க்கையின் ஒவ்வொருநிமிடத்திலும் அவள்தானிருந்தாள்.

 

தெரெஸா காலையில் எழுந்திருக்கிற அன்றைக்கு அலுவலகத்தை மறந்துவிடுவான். வெள்ளைவேளேரென்றிருந்த அம்முகத்தையும் சிவத்த அதரங்களையும் காண்பதில் அவனுக்குள் ஓர் அச்சம். சுகமானதொரு அச்சம், எனவே அதிலும் மகிழ்ச்சி கிடைத்தது. சன்னற் திரைகளின் பின்னே ஒளிந்து வாழ்க்கை நடத்தியபோதும் அவளைப் பற்றிய பயம் இருந்தது. அவளால் நோயாளியாகியிருந்தான், வெகுதூரம் நடந்து முடித்து கால்களில் சோர்வுற்றவன்போல. ஒரு முறை கனவில் வந்தாள், அதில் அவனைக் கண்டு அவள் சிரித்த மறுகணம், அவளிடமிருந்த பயமெல்லாம் போயேபொய்விட்டது.

 

புல்லாங்குழலின் துணையுடன் அவளை வசீகரிப்பதென்று முடிவு செய்தான். சுகமான இரவுநேரங்களில் மீண்டும் குழலை எடுத்து ஊதுவதென்று தீர்மானம். அவனுடைய சன்னலின் இரண்டு கதவுகளும் திறந்துவைக்கப்பட்டன. இருட்டில் தன்னை ஒளித்துக்கொண்டு பழைய மெட்டுகளை வாசித்தான். ஆடுமேய்க்கும் இடையர்களின் இசைமெட்டுகள் அவை, சிறுமியரின் பாடலைப்போல வெள்ளந்தியாக ஒலித்தன. மெட்டுககள் வெகுநேரம் நீடித்ததென்பதோடு, இலேசாக நடுங்கவும் செய்தன. எளிமையான ரிதங்களில் ஒலித்த அவை ஒன்றன்பின்னொன்றாக – பண்டைகாலத்தில் காதல்வயப்பட்ட பெண்கள் தங்கள் ஸ்கர்ட்டுகளை பெருமையாகக் கடைபரப்புவதுபோல -தொடர்ந்தன. நிலவில்லாத இரவுகளையே அவன் தேர்வு செய்தான். சதுக்கம் முழுதும் இருள் மண்டிகிடக்கும். இரவுப் பறவையின் இறக்கைக்குரிய மென்மையுடன், உறக்கத்தில் மூழ்கியுள்ள குடியிருப்புகளை உரசிச்செல்லும் அத்தனை மென்மையான இசை எங்கிருந்து வருகிறதென ஒருவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவே அவளைக் கண்டதில் திக்குமுக்காடிபோனான். தெரெஸா இரவு ஆடையில் இருந்தாள், அனைத்தும் வெள்ளை நிறம், சன்னைலை நெருங்கியவள் முழங்கைகளை ஊன்றி மடிந்து நின்றாள். இசையைக் கேட்டதும் வியப்பு, விடுதியிலிருந்து மாளிகைக்கு அவள் வந்திருந்த அன்று கேட்ட அதே இசை.

 

” பிரான்சுவாஸ், உனக்கு கேட்குதா?”,  அவர்களுடைய அறைபக்கமாக திரும்பி கேட்டாள். குரலில் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டு கேட்பதுபோல தெரிந்தது

 

– ஓ!, வயதான் பெண்மணியின் பதில் – ஜூலியன் இங்கிருந்து பார்க்க இருள் மட்டுமே தெரிந்தது, குரலுக்குரியவளை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து அக்குரல்,” மேடை நடிகன் எவனோ குழலூதி விளையாடறான். அப்படித்தான் நெனைக்கத் தோணுது. பக்கத்தில் வாசிப்பதாக தெரியலை, தொலைவா கேட்குது. அநேகமாக புறநகரிலிருந்து வரணும்”, என்றாள்.

 

– நீ சொல்றதுதான் சரி. தொலைவுலே யாரோ வாசிக்கிறாங்க.”- சிறிது இடைவெளிவிட்டு இளம்பெண்ணின் பதில். இடைபட்ட நேரத்தில் தனது வெற்று கைகளை சன்னலுக்கு வெளியில் நீட்டியதில் இரவிடம் அவை புத்துணர்ச்சியைப் பெற்றிருந்தன.

 

அன்றிலிருந்து ஒவ்வொருமாலையும் ஜூலியன் அக்கறை எடுத்துக்கொண்டு வாசித்தான். அவன் உதடுகள் ஒசையை கூட்டின. அவனிடமிருந்து பதட்டமும் காய்ச்சலும் மஞ்சள்மர புல்லாங்குழலில் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு மாலையும், அவனது இசையின் வாக்கியங்கள் கூரைகள்தோறும் பயணித்துக்கொண்டிருக்க உயிர்துடிப்புள்ள அவற்றை  தெரெஸா வியந்தாள். இசையின் திசையை நோக்கி அடியெடுத்துவைக்க இரவுக்காகக் காத்திருந்தாள். மரியாதை நிமித்தமாக ஒருவரின் சன்னலுக்குகீழே பாடப்படும் செரினாட் வகை இசைப்பாடலைபோல, அந்த இசையும் தனது சன்னல் திசை நோக்கி வருமென கற்பனை செய்தாள். சில நேரங்களில் அக்கம்பக்கத்திலுள்ள கூரைகளில் ஏதேனும் தெரிகிறதாவெனப் பார்க்கத் தீர்மானித்தவள்போல கால்களை ஊன்றி வெளியில் பார்த்தாள்.

 

பிறகு ஒரு நாள் இரவு, பாடல் வெகு அண்மையில் ஆவேசத்துடன் ஒலித்து அவளைத் தீண்டிச் சென்றது. உறக்கத்திலிருக்கும் ஏதோவொரு குடியிருப்பிலிருந்துதான் அது வரவேண்டுமென ஊகித்திருந்தாள். ஜூலியன் மிகுந்த பேரார்வத்துடன் ஊதினான், பளிங்குக்கற்களின் ஓசைபோல புல்லாங்குழல் அதிர்ந்தது. சூழ்ந்திருந்த இருட்டு அத்தகைய துணிச்சலை அவனுக்குக் கொடுத்திருந்தது, பாடலுக்கிருந்த ஆற்றல் அவளை அவனிடம் சேர்ப்பித்துவிடுமென நம்பினான். உண்மைதான் தெரஸாவும் குனிந்து கவனத்துடன் கேட்பதைப் பார்க்க பாடல் அவளை வென்றிருப்பதும், பாடலால் ஈர்க்கப்பட்டிருக்கிறாளென்பதும் புரிந்தது.

 

“உள்ள வா!”, வயதான பெண்மணியின் அதட்டல். தொடர்ந்து, “காற்றும், மழையும் எந்நேரமும் வரலாம், கெட்ட கெட்ட கனவுகள் வரும்”, என்று எச்சரிக்கைவேறு. அன்றிரவு ஜூலியன் தூக்கமின்றி தவித்தான். தெரெஸா அனேகமாக அவனை யூகித்திருக்கலாம், ஏன் அவனை பார்த்துகூட இருக்கலாம் என நினைத்தான். கட்டில் தீயாய் சுட்டது. நாளை எப்படி முகத்தைக்காட்டுவதென்று யோசித்தான். உண்மையில் அவனை இனிமேலும் ஒளித்துக்கொள்வது கேலி கூத்து. எனினும் தன்னை இனி அவளுக்குக் காட்டிக்கொள்வதில்லையென முடிவெடுத்தான். மணி ஆறிருக்கலாம் அவளுடைய சன்னலுக்கு முன்னாலிருந்தான், புல்லாங்குழலை அதனுடைய உறையில் வைக்கப்போகின்ற நேரத்தில் அது நடந்தது. இளம்பெண் தெரெஸாவின் மாளிகை சன்னற் கதவுகள் சட்டென்று திறந்தன.

 

இதுவரை எட்டு மணிக்கு முன்னால் எழுந்திருக்காத அந்த இளநங்கை குளித்து முடித்த ஆடையில் இருந்தாள், வழக்கம்போல கூந்தல் கழுத்தை சுற்றிக்கொண்டிருந்து. ஜூலியன் அசையாமல் நின்றான், நிமிர்ந்திருந்த தலை அசைவின்றி அவளை பார்த்தபடி இருக்க, அவனது இடதுகை உண்மையில்  கைவசமிருந்த புல்லாங்குழலை மறைக்க முயன்றது. தெரெஸாவின் வல்லமை வாய்ந்த  குத்திட்ட பார்வையும் இவன் மீது படிந்திருந்தது. பார்த்த கணத்தில் ஏதோ அவனுடைய எலும்புகள் துருத்திய கரடுமுரடான சரீரத்தையும், அதன் கோரத்தையும், கோழைத்தன்மையும் எடைபோடுவதுபோல இருந்தது. முந்தைய இரவு பார்த்தைப்போல அவளொன்றும் பரபரப்பு மிக்க அமைதியற்ற பெண்ணல்ல. முகத்தில் கம்பீரம் குடிகொண்டிருந்தது நல்ல வெண்ணிறம், கருமையான கண்கள், சிவந்த உதடுகள். அவனைப்பற்றிய மதிப்பீட்டில் ஒரு முடிவுக்கு வந்திருக்கவேண்டும். அதிகம் அலட்டிக்கொள்ளாமல், “தெரு நாயால் நமக்கு சந்தோஷம் கிடைத்தாலென்ன கிடைக்காமல் போனால்தானென்ன எல்லாம் ஒன்றுதான்”, என தன்னைத்தானே கேட்டுக்கொண்டபள்போல முகத்தைச் சுளித்தாள். நிதானமாக சன்னலை மூடினாள்.

 

ஜூலியன் கால்கள் சோர்ந்திருந்தன. இயல்பாய் சோபாவில் விழுந்தான். சொற்களை கோர்வையின்றி உளறிக்கொட்டினான்.

 

” ஆ! கடவுளே! அவளுக்கு என்னிடத்தில் விருப்பமில்லை.. நான்தான் அவளை விரும்புகிறேன், இனி வாழ்ந்து பயனில்லை சாகப்போகிறேன்!” ஹோ வென்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுதான். “எதற்காக என்னை அவளிடம் காட்டிக்கொண்டேன். அழகாய் இல்லாதபோது மறைந்து வாழ்வதுதானே நியாயம். பெண்களை பயமுறுத்தவா பிறந்தேன்!”. தன்னைத்தானே வருத்திக்கொண்டான். அழகாய் இல்லாதது எரிச்சலூட்டியது. தொடர்ந்து “இரவு நேரப் பறவைகள்போல இருட்டில் எப்போதும்போல புல்லாங்குழலை ஊதிக்கொண்டிருக்க வேண்டியதுதானே? அப்பறவைகள் தங்கள் பாடல்களால் இதயங்களைக் கவர்ந்த போதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக பகல் நேரங்களில் ஒளிந்து வாழ்வதில்லையா?” என்கிற கேள்வி வேறு.

 

அவனிடம் இன்னமும் அவளுக்கென இனிமையான இசைத்துண்டொன்று இருந்தது, புதிரான காதலைப்பற்றிபேசுகிற ஆபூர்வமான பழைய இசை. அழகான இளவரசன் ஒருவன் பெண்ணொருத்தியின் சன்னலின் கீழ் காதலை முன்னிட்டு மரணிப்பதை சொல்லும் அந்தப்பாடலை அவள் மிகவும் விரும்பியிருக்கக்கூடும். ஆனால் அவனோ தன்னுடைய முட்டாள்தனத்தால் இச்செயல்பாட்டிலுள்ள அத்தனை அழகையும் கெடுத்துக்கொண்டான்.

 

தன்மீது கோபம் பிறந்தது. கலங்கினான். காதல் முடிந்ததென்று நினைத்தான். அதற்குப் பிறகு பலமுறை சன்னலருகில் கையூன்றிகொண்டு அவள் நின்றபோதெல்லாம் இவனை வேண்டுமென்றே அலட்சியபடுத்துவதுபோலிருந்தது. ஒரு நாள் ” என்ன வாசிக்கிறான், தப்பு தப்பா, கேட்பது கொடுமை” என அவள் கூறுவது காதில் விழுந்தது. இனி புல்லாங்குழலைத் தொடுவதில்லையென ஜூலியன் தீர்மானித்தான். உழுவதை வைத்து எருதின் பலத்தை அவள் அறியமாட்டாளா என்ன? அவனுடைய இசையை ஒருபோதும் விரும்பப்போவதில்லை. இதமான இரவுகளை தேர்வு செய்வதும், பசுமையின் நறுமனத்தில் திளைக்கும் இனிமையான காதல் மெட்டுகளை மீண்டும் இசைப்பதும் உண்மையில் அழகானதுதான், ஆனால் தெரெஸா இனி செவிமடுக்கப் போவதில்லை.

 

அறையில் குறுக்கும் நெடுக்குமாக இளம்பெண் நடந்தாள். எதிர் வீட்டில் அவன் இல்லாததுபோல பாவித்து,  சின்னஞ்சிறு இசைகுறிப்புகளின் மீது அவளுக்குள்ள பிரியத்தைத் தெரிவிக்க நினைத்தவள்போல சன்னலை நெருங்கி கையூன்றி நிற்கவும் செய்தாள். ஒருநாள் அதனை வெளிப்படையாக தெரிவிக்க விரும்பியவள்போல உரத்தக்குரலில்:

 

“கடவுளே! கேட்க கேட்க எரிச்சல் வருகிறது, அவன் ஊதுவது அவ்வளவும் மோசம், சரியான இசையே அல்ல! ” எனக்கூறக்கேட்டதும் ஏமாற்றமடைந்த ஜூலியன் தனது புல்லாங்குழலை மேசையின் இழுப்பறையில் பின்னுக்கு வைத்து இழுத்து மூடினான். இனி வாசிப்பதில்லையெனவும் தீர்மானித்தான்.

 

இங்கே குள்ளன் கொலொம்பெல் அவனை ஏளனம் செய்ததையும் சொல்லவேண்டும். ஒரு நாள் அவனுடைய அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் சன்னலுக்கு முன்பாக ஜூலியன் இசைக்குறிப்பொன்றை வாசிக்கக் கேட்டான் அதுமுதல் அவ்வழியாக போகிறபோதெல்லாம் அவனது வழக்கமான தொனியில் சிரிப்பான். ஜூலியனுக்கு பத்திரம் எழுதுபவரின் ஊழியனை,  மர்சான் குடும்பத்தினர் உபசரிக்கிறார்களென்பதை அறிந்ததுமுதல் இளம்வயதிலேயே வெம்பிப்போன அந்த உயிரிடம் பொறாமை கொண்டிருந்தான். நிலமை அவனது இதயத்தை பிளப்பதாக இருந்தது. ஒரே ஒருமணிநேரம் மர்சான் குடும்பத்தில் அவனுக்குள்ள உரிமையை விட்டுக்கொடுப்பானென்றால் ஜூலியன் அதற்காக தனது சரீரத்திலுள்ள அவ்வளவு இரத்தத்தையும் தானம் செய்யவும் தயார். கொலொம்பெல் தாயார் பல ஆண்டுகளாக மாளிகை வீட்டில் ஊழியம் செய்பவள், இப்போது அவளுடைய பணி தெரெஸாவை கண்காணிப்பது, சிறுவயதிலிருந்து அவளுடைய வளர்ப்புத் தாயாகவும் இருக்கிறாள். தெரெஸாவும் அவளுடைய வளர்ப்புத் தாயின் மகனும் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களிருக்கிடையே சிறுவயது நட்பு தொடர்ந்ததில் நியாயமிருந்தது.

 

கொலொம்பெலை வீதிகளில் சந்திக்கிறபோதும், அவனுடைய இறுகிய உதடுகளிலிருந்து வெளிப்படுகிற மெல்லிய சிரிப்பினை காணும்போதும் ஜூலியனுக்குள்ள வருத்தத்தை குறைத்து மதிப்பிட முடியாது. என்றைக்கு அந்த மனிதப்பிண்டத்தை மென்மையும், அழகும் கொண்ட ராட்சச தன்மையுடனான முகமும், பச்சை நிறக்கண்களும், மிருதுவான முகவாயில் சுருள் சுருளான இலேசான தாடியுடனும் கண்டானோ அதுமுதல் அவனை ஜூலியன் மிகவும் வெறுத்தான். மீண்டும் ஒருமுறை அவனைக் கோட்டை மதிற்சுவர்பக்கம் சந்திக்கமுடியுமெனில் தெரெஸாவுக்காக அவனை எதுவும் செய்யலாமென்று நினைத்தான்.

 

ஒரு வருடம் கழிந்திருந்தது. ஜூலியன் நிலமை பரிதாபமாக இருந்தது. தெரெஸாவுக்காகவே தனதுயிர் தரித்திருக்கிறதென்பதாக  நினைத்தான். அவனுடைய இதயம்  உறைந்துகிடந்த மாளிகையிலிருக்க, எதிர்வீட்டுக் காதலுக்காவும், விளைந்த சோதனைகாரணமாகவும் செத்துவிடுவான் போலிருந்தது. ஒரே ஒரு நிமிடம் வாய்த்தால்கூட போதும் எதிவீட்டு சுவரையும் சன்னலையும் பார்த்தபடி இருப்பான். சுவற்றில் எங்கே பாசிமுளைத்திருக்கிறது என்பதுகூட இப்போது பழகியிருந்தது.  மாதக்கணக்கில் விழிகளையும், காதுகளையும் திறந்துவைத்துக் காத்திருந்தும், தனது உயிர் சிறைபட்டிருந்த பெருமைக்குரிய மாளிகைக்குகுள்ளே என்ன நடக்கிறதென்பதை இவன் அறியாதிருந்தான். விதவிதமான சப்தங்கள், பார்வையைத் திகட்டச்செய்யும் ஒளி, ஏதேனும் கொண்டாட்டமா? அல்லது வேறு துக்க சம்பவமா? எதிர்பக்க வாழ்க்கையைப் பற்றி ஜூலியனுக்கு எதுவும் தெரியாது. சந்தோஷம் அல்லது துக்கமென்று அவனுடைய விருப்பபடி கற்பனைசெய்து கொள்வான். கொலொம்பெலும் தெரெஸாவும் இரைச்சலிட்டுக்கொண்டு விளையாடுவது, செஸ்ட்நட் மரங்களின் கீழே மெல்ல தெரெஸா நடந்துசெல்கிற ஒலி, நடனத்தின்போது ஒருவர் மற்றவர் கைகளில் இடம்மாறுகிற ஒலி, சட்டென்று கேட்கும் அழுகைக்குரல் பின்னர் அந்த அழுகை இடம்பெறுகிற இருண்ட அறைகள் அல்லது தரையில் பதித்துள்ள பழைய பர்க்கேக்களில் எலிகள் நடமாட்டத்தால் வரும் சப்தம்போல பிரபுக்கள், சீமாட்டிகள் நடமாட்டம் ஏற்படுத்தும் சப்தம் என அக்கற்பனைகளை வகைபடுத்தலாம். எதைப்பற்றியும் அறிந்திராத நிலையில் தெரெஸாவின் சன்னல் ஓர் அதிசயமாக ஜூலியனுக்குப்பட்டது. நாளுக்குநாள் இளம்பெண், இவன் அன்றாடம் காண்கிற மாளிகையின் சுவரே பரவாயில்லை என்பதுபோல நடந்துகொண்டாள். அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு நாள்கூட தன்னைக்காட்டிக்கொள்ளவில்லை. அவனுக்கும் அவளுக்குமான இடைவெளியைப் பெருக்கி மேலும் மேலும் அவனைக் கலவரப்படுத்தினாள்.

 

அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணமென்று ஒன்று இருக்குமெனில் அது சன்னல் திறந்திருக்கும் நேரம். தனது அறையின்  மூலையிலிருந்துகொண்டு பெண் இல்லாத நேரங்களில் அவதானித்துக்கொண்டிருக்க முடியுமென்பதால் அத்தகைய தருணங்கள் முக்கியமானவை. அவளுடைய அறையில் கட்டில் இடதுபக்கம் ஆல்கோவ் (சுவற்றில் கட்டில் போடுவதற்கென்றே உள்வாங்கியதுபோல ஏற்பாடு செய்துள்ல இடம்) ஒன்றில், கபில நிற திரை அலங்காரங்களுடன் போட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே ஆறுமாதங்கள் தேவைபட்டன. அடுத்து கட்டிலுக்கு எதிராக பளிங்கினாலான சட்டங்களைக்கொண்ட கண்ணாடியுடன் கூடிய பதினைந்தாம் லூயி மன்னன் காலத்து சிறிய மேசை இருப்பதைக் கண்டுபிடிக்க மேலும் ஆறுமாதங்கள் பிடித்தது.

 

அதற்கும் எதிரே பளிங்கினாலான கணப்பு அடுப்பு. அவ்வறை கற்பனையில் மட்டுமே காணமுடிந்த ஒரு சொர்க்கம்போல இருந்தது. அதிக போரடடங்களின்றி தன்னுடைய காதலை வளர்த்துக்கொள்ளவியலாது என்பதுபோன்றதொரு இக்கட்டிலிருந்தான். அவனுடைய அருவருப்பான தோற்றமேற்படுத்திய அவமானத்தின் காரணமாக பல கிழமைகள் முடங்கிக் கிடந்தான். பிறகு கோபம் தலைக்கேற அவனுடைய கை கால்களை நீட்டி மடக்கவும்; அமைதியற்றும் அவலட்சணமாகவுமிருந்த முகத்தின் பார்வையை வலிந்து திணிக்கவும் வேண்டியிருந்ததால் பல கிழமைகள் சன்னல் அருகே தொடர்ந்து நின்று கண்கள் பூத்ததுதான் உண்மை.

 

இரண்டு முறை அவளுக்கு துணிச்சலுடன் முத்தங்களையும் அனுப்பிவைத்தான், கோழையென்றாலும் குருட்டு தைரியமென்றவொன்று இருப்பதில்லையா? அப்படி வைத்துக்கொள்ளுங்களேன்.

 

தெரெஸா கோப்பபடவே இல்லை. அவன் மறைந்து வாழ்ந்தபோது மகாரணிபோல அவள் வருவதையும் போவதையும் பார்த்தான். இப்படி கோணங்கி வேலைகளை அவன் செய்தபோதும் அவளுடைய முகத்தில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் தனது பரிதாப நிலையை அவள் உணர்ந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்தான். அவனை அவளுடைய பார்வை சந்திக்க கிடைத்த நேரங்களில் தலையை முன்புபோல வேகமாகத் திருப்பிக்கொள்வதெல்லாம் அவளிடத்திலில்லை.

 

அவன் பணிபுரியும் அஞ்சலகத்தில், தெரெஸா மிகவும் நல்லவள் இரக்க குணம்கொண்டவள் என்று யாராவது கூறினால், அதை நேரிடையாகவே எதிர்ப்பான். அவளுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லை, இருந்திருந்தால் இரக்க குணம் கொண்டிருப்பாள், அவளுக்கு இரத்தம் மிகவும் விருப்பமானதொரு பொருளாக இருக்கவேண்டும், காரணம் அவளுடைய அதரங்களின் சிவப்பு அப்படிபட்டது, தவிர முகத்திலிருக்கும் வெண்மை எங்கிருந்து வந்திருக்குமென நினைக்கிறீர்கள், பிறர் மீது அவளுக்குள்ள வெறுப்பே காரணமென அனைத்தையும் மறுப்பான்.பிறகு அவளை பலரிடத்தும் அவமானப்படுத்தியதை நினைத்து அழவும் செய்வான், இறக்கை முளைத்த தேவதையாக அவளை மானசீகமாக முன்நிறுத்தி மன்னிக்கவேண்டுமென கெஞ்சவும் செய்வான்.

 

முதல் வருடத்தின்போது எல்லா நாட்களும் ஒன்றுபோலவே  கழிந்தன. கோடைகாலம் பிறந்தபோது இதுவரை கண்டிராத அனுபவம். தெரெஸா இபோது வேறொரு உலகத்திலிருந்தாள். செயல்பாடுகளில் மாற்றமில்லை, காலையில் சன்னற்கதவுகளைத் தள்ளி திறப்பதும் மாலையில் மூடுவதும், வழக்கமான நேரத்திற்கு சன்னலருகில் வந்து முழங்கைகளை ஊன்றி நிற்பதுமென்று தொடர்ந்தது; ஆனால் இதுவரை அறிந்திராத நெடுமூச்சு ஒன்றினை உணரமுடிந்தது. தெரெஸாவின் முகம் அதிகமாக வெளுத்திருந்தது. அமைதியற்ற ஒரு நாளில் மூன்றாவது முறையாக அவளுக்கு தனது விரல் முனைகளைக்கொண்டு ஒரு முத்தத்தினை அனுப்பினான். சன்னலை விட்டு அகலாமல் அவள் அவனை நேரிட்டு பார்த்தாள். அப் பார்வையில் பதட்டமும் துயரமுமிருந்தன. இம்முறை ஜூலியன் அவளை தொடர்ந்துபார்க்க மனங்கூசவே அங்கிருந்து அகன்றான்.

 

பிறகு கோடை இறுதியில் நடந்த சம்பவம் அவனை படாதபாடு படுத்திவிட்டது, இத்தனைக்கு அதுவொன்றும் அவ்வளவு முக்கியம் வாய்ந்ததல்ல. அச்சசமயம் கிட்டதட்ட எல்லா நாட்களும்  அந்திவேளைகளில் தெரெஸாவுடைய சன்னல் திறந்து வைக்கப்பட்டது, ஆனால் மூடியபொழுது இழுத்து வேகமாக சாத்தப்பட்டது, அப்படி அடித்து சாத்துகிறபோது  கைப்பிடி, மரச்சட்டங்கள் என அனைத்தும் அதிர்வதுண்டு. அந்தச் சத்தத்தைக்கேட்க தூக்கிவாரிபோட்டது. ஜூலியன் நடுங்கினான். தன்னை வதைசெய்ததைப்போல கலங்கினான். அவனுடைய இதயம் காயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தான், அதற்குண்டான காரணம்தான் விளங்கவில்லை.

 

இயல்பல்லாத அந்த பேரதிர்ச்சிக்குப்பிறகு, மறுபடியும் அம்மாளிகை சவமாக மாறியது. அந்த நிசப்தத்தைக் காண ஜூலியனுக்குப் பயம்.

 

சன்னலை மூடுவது எந்தக் கை என்பது குறித்த சந்தேகம் வெகுநாட்களாக உண்டு. ஆனால் ஒரு நாள் மாலை தெரெஸாவினுடைய வெளுத்த கைகளைக் கண்டான். அன்றையதினம் வேகமாய் சன்னற் கைப்பிடியைக் கோபத்துடன் கையாண்டு மூடியது அவள் தான். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவசரமின்றி திறந்தபோது மரியாதைக்குரிய நளினத்தை அவளிடம் கண்டான். மிகவும் களைத்திருந்தாள். சிறிதுநேரம் முழங்கையை ஊன்றி நின்றாள். பிறகு இளம்பெண்ணுக்கேயுரிய அற்பமான பொருட்களால் ஆக்ரமிக்கபட்டு அதேவேளை மிகவும் பளிச்சென்றிருந்த அறையின் மத்திய பகுதிக்காய் நடந்துசென்றாள். காதுகளில் சன்னற்கதவு கைப்பிடியின் கிரீச்சொலி கேட்டுக்கொண்டிருக்க சிந்திக்கத் திராணியற்று  ஜூலியன் நின்றான்

 

சாம்பல்வண்னத்தில் வானம் இதமாக காட்சியளித்த ஒரு கூதிர்கால மாலை. எதிர்வீட்டு சன்னற் கைப்பிடியில் ஒரு கர்ணகடூரமான சத்தம். ஜூலியன் திடுக்கிட்டு எழுந்தான், விழிகளிரண்டிலும் இவனை அறியாமலேயே கண்ணீர் துளிர்த்தது. சோர்வுற்றிருந்த மாளிகைக்கு முன்னால், மாலைநேரம் இருண்டுக்கிடந்தது. காலையில் மழை பெய்திருந்தது. பாதி இலைகளை உதிர்த்திருந்த செஸ்நட் மரங்களிலிருந்து மரணத்தின் வாசம். எனினும் சன்னற்கதவு மறுபடியும் திறக்குமென்று ஜூலியன் காத்திருந்தான். அவள் திடீரென்று திறக்கிறாள், எவ்வளவு வன்மையுடன் கதவுகள் மூடப்பட்டனவோ அதே போன்று. தெரெஸா நிற்கிறாள், வெள்ளை ஆடை, பெரிய கண்கள், தலைமயிர் கழுத்தில் விழுந்திருக்கிறது. சன்னலுக்கு முன்னால் அசையாமல் நின்றாள். அவளுடைய பத்து விரல்களையும் தனது வாயில் வைத்து ஜூலுயனுக்கு ஒரு முத்தமொன்றை அனுப்பிவைக்கிறாள்.. தனது மார்பினை கையைக் குவித்துத் தொட்டுக்காட்டி, முத்தம் எனக்கா என்றுகேட்கிறான்.  அவன் பின்வாங்குவானென தெரெஸா நினைத்தவள்போல இம்முறை சன்னல் விளிம்பில் மடிந்து சாய்ந்தவள் மீண்டும் பத்துவிரல்களையும் அவளுடைய சிவந்த அதரங்களில் தொட்டு உறுதிபடுத்துகிறாள். இரண்டாவது முத்தமொன்றையும் அனுப்பிவைக்கிறாள், தொடர்ந்து மூன்றாவது. ஏதோ இவன் அனுப்பிவைத்த மூன்று முத்தங்களுக்கு ஈடுசெய்ய நினைத்தவள்போல. வாய்பிளந்து நின்றான்.

 

அந்திமாலையில் படர்ந்திருந்த இருள் விலகியிருந்தது, சன்னலிருட்டின் பின்புலத்தில் அவளை தெளிவாய் பார்க்கமுடிந்தது. அவனை வ¨ளைத்தாயிற்று என நினைத்ததன் அடையாளமாக அண்டை அயலிடங்களை ஒரு பார்வை பார்த்தாள், பின்னர் அடங்கிய குரலில்:

 

“வாங்களேன்”, என்றாள். குரலில் தயக்கமென்று எதுவுமில்லை.

 

அவனும் இறங்கினான். வந்தான். மாளிகையை நெருங்கினான். தலையை உயர்த்தியபொழுது வாசற்கதவு திறந்திருந்தது. அக்கதவு அரை நூற்றாண்டாக மூடியிருந்த கதவு, ஒருவேளை கதவுகளில் பாசிபடர்ந்திருப்பது காரணமாக இருக்கலாம். திகைப்புண்டவன்போல நடந்தான். சற்றுமுன்னர்வரை அவனினமிருந்த பிரம்மிப்பு இப்போதில்லை.  உள்ளே நுழைந்தவுடன் கதவுகள் மூடப்பட்டன. சில்லிட்ட கையொன்று தொட்டு அழைத்துச்செல்ல பின் தொடர்ந்தான். மாடியை அடைந்தான், பின்னர் நடைகூடத்தினை முழுதுமாகக் கடந்தான், முதல் அறையைக் கடந்ததுமே அவனுக்குப் பழகியிருந்த அந்த அறை -சொர்க்கம். இளம் சிவப்பு வண்னத்தில் பட்டுத் திரைகளைகொண்ட அறை. நாள்மெல்ல மெல்ல மரணித்து கொண்டிருந்தது. இந்தவாய்ப்பிற்காக அவள் காலில்விழ தயாராகவே இருந்தான். மாறாக அவனுடைய கைகளை இறுகப் பிடித்தபடி  அவளுக்கேற்பட்ட அதிர்விலிருந்து வெற்றிகரமாக மீண்டவள்போல தெரெஸா நின்றிருந்தாள்.

 

“நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் இல்லையா?”, மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள்.

 

– – ம்ம்.. இவனுக்கு நா குழறுகிறது

 

அடுத்து அவள் நடந்துகொண்டவிதம், தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க நினைத்ததுபோலிருந்தது. தேர்ந்தெடுத்த சொற்களும் அவற்றை இயல்பாய் கையாண்ட விதமும் ஓர் இளம்பெண்ணுக்கே உரியதென்றாலும் அதிலொரு அதிகாரத்தோரணை இருக்கக்கண்டான்.

 

– என்னை உங்களுக்கு அளித்தால், எனக்காக எதையும் செய்வீங்க? இவனிடத்தில் பதிலில்லை. அவளுடைய கைகளில் தன்னுடையவைகளை பிணைத்துக்கொண்டான். ஆனால் அவள் தரப்பிலிருந்து ஒரே ஒரு முத்தமென்றாலும், தன்னையே இழக்க தாயாரென்ற நிலையில் அன்றைக்கு அவனிருந்தான்.

 

– நல்லது எனக்காக ஒன்று செய்யணும்….

 

அவன் பதிலின்றி நெடுமரம்போல நின்றிருந்தான். அவளுக்கோ தனது சக்தி அனைத்தையும் இழந்திருந்த நிலையில், இனியும் அமைதியாக இருக்கமுடியாது என்பதுபோல சத்தம்போட்டாள்

 

– இப்படி நின்றால் என்ன அர்த்தம். எனக்காக எதையும் செய்வேனெனறு சத்தியம் பண்ணு -அவள்

 

– சத்தியம், சத்தியம். நீ விரும்பறதை செய்வேன்- கையறுநிலையில் இருப்பவன்போல கூறினான்.

 

அவ்விடத்தின் மிகைபடுத்தப்பட்ட தூய்மை அவனை கிறுகிறுக்கவைத்தது. கட்டிலிருக்கும் அல்க்கோவ் பகுதியின் திரைசீலைகள் அகற்றப்பட்டன. கபிலநிற பட்டின் கருமைக்குள் அடங்கிக்கிடந்த அதிகம் உபயோகித்திராத கட்டில் ஒன்றைமட்டும் நினைத்தால்கூடபோதும் , தெய்வீகமான பரவசத்தில் மனம் தத்தளிக்கிறது. அவளுடைய கைகளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ சட்டென்று திரைச்சீலையை ஒதுக்கினாள். ஒதுக்கியதும் அல்க்கோவ் மொத்தத்தையும் பார்க்கமுடிந்தது. அங்கே அந்திமாலை சந்தேகத்திற்கிடமான ஒளிக்கதிரை விட்டுச்சென்றிருந்தது. கட்டில் அலங்கோலமாக இருந்தது, விரிப்புகள் தொங்கிக்கொண்டிருந்தன, தரையில் விழுந்துக்கிடந்த தலையணையொன்று பல் பட்டு கிழிந்திருக்கிறது.

 

அவள் கிடு கிடுவென்று நடந்தாள். மெத்தையும், தலையணைகளும் சிதறிக்கிடந்தன, கட்டில் துணிகளோடு கலந்து ஒர் ஆணின் பிணம். கசங்கிக்கிடந்த பின்னலாடைகளுக்கு நடுவே மனித உடலொன்று குறுக்குவாட்டத்தில், காலணிகளின்றிக் கிடந்தது.

 

“பார்த்தீர்களா?”, வார்த்தைகள் மிகவும் சிரமத்துடன் வெளிப்பட்டன. ”  இவன் என்னுடைய காதலன்… நான் அவனைத் தள்ளினேன், அவன் விழுந்தான். என்ன நடந்ததென்று நினைவில்லை. ஆக அவன் இறந்திருக்கிறான். நீங்கள் பிணத்தை இங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். என்ன சொல்கிறேனென உங்களுக்கு விளங்குதில்லையா? அவ்வளவுதான். வேறு சொல்ல ஒன்றுமில்லை, புரியுதில்லே?,”

 

 

-III-

 

சிறுமியாய் இருக்கின்றபொழுதே மர்சான் பிரபுக்கள் குடும்பத்தைச்சேர்ந்த தெரெஸாவுக்கு கொலொம்பெல் அடித்தும் துன்புறுத்தியும் விளையாடக்கிடைத்த ஓர் உயிருள்ள பொம்மை. அவளைக்காட்டிலும் அவன் ஆறேஆறுமாதந்தான் பெரியவன், இருந்தபோதிலும் அவன் தாய் பிரான்சுவாஸ், தெரெஸாவிற்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக சொந்தபிள்ளைக்குப் புட்டிபாலென்று முடிவெடுத்துவிட்டாள். பிறகு அவனுக்கும் மாளிகை வீட்டில் வேலையென்றாயிற்று. வீட்டில் பணிபுரிவதில் ஆரம்பித்து விளையாட்டில் தோழனாக இருப்பது வரை எப்போதும் தெரெஸாவுடன் இருக்கவேண்டியிருந்தது.

 

தெரெஸாவைக் கட்டிமேய்க்க படாதுபட்டார்கள்: வாயாடியாகவும், பையன்களைத்தேடி அலைபவளாகவும் இருந்தாள். மாறாக அவளுடைய தோற்றத்திற்குத் தனி மரியாதையை இருந்தது. பார்ப்பவர்கள் குறிப்பாக மாளிகைக்கு வரும் விருந்தினர்கள் அவளுடைய வளர்ப்பை புகழ்ந்தார்கள், மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கத்தகுந்த பெண்ணென்று பெயரெடுத்திருந்தாள்.

 

அதிசயமான கண்டுபிடிப்புகளெல்லாம் அவளிடத்திலுண்டு. அவள் தனியாக இருக்கிறபொழுது இன்னதென்று புரிந்து கொள்ளாதவகையில் திடீர் திடீரென்று கூச்சலிடுவாள், திபு திபுவென்று குதிப்பாள்; அல்லது தோட்டத்துப்பாதையில் நடந்து போய்கொண்டிருக்கிறபோதே திடீரென்று குப்புற படுத்துக்கொள்வாள், அப்படியே கிடப்பாள், அதற்கு தண்டனையும் கிடைக்கும், இருந்தும் எழுந்திருக்கமாட்டேனென அடம்பிடிப்பாள்.

 

அவள் மனதில் என்னதான் இருக்கிறதென ஒருவரும் அறிந்தவர்களில்லை. சின்னஞ்சிறுவயதிலேயே அவளுடைய பெரியக் கண்களில் இருக்கவேண்டிய சுடரொளி அணைந்திருந்தது, பளிங்குபோன்ற அக் கண்களில் பெண்களுக்கேயுண்டான கள்ளங்கபடமற்ற ஆத்மா இல்லை. பதிலாக மைபோன்ற இருளில் மூழ்கிக்கிடந்த இரு துவாரங்கள், அவற்றிலிருந்து தெரிந்துகொள்ள நமக்கு எதுவுமில்லை. கொலொம்பெலை வதைசெய்ய தொடங்கியபொழுது ஆறு வயது சிறுமி. அவன் வளர்ச்சிகுன்றியும், சிறியவனாகவும் இருந்தான். தோட்டத்தின் பின் பக்கம் அவனை அழைத்துச்செல்வாள். அங்கே செஸ்நட் மரங்கள் எண்ணிக்கையில் அதிகம், அதனால் இலைகள் மண்டி, நிழலில் எப்போதும் அவ்விடமிருக்கும். அங்கே சென்றதும் அவள்செய்யும் காரியம் அவனைப் படுக்கவைத்து முதுகில் குதிப்பது, பிறகு அவளை முதுகில் அவன் சுமக்க வேண்டும், ஒரு மணிநேர சவாரி, ஒரு பெரிய வளைவை சுற்றிவரவேண்டும். அவனுடைய கழுத்தை இறுகப் பிடித்துக்கொள்வாள். குதிகால்கள் அவன் அவயிற்றில ஆழப்பதிந்திருக்கும், அவன் மூச்சுவாங்கக்கூட நேரமிருக்காது. அவன் அவளுடைய குதிரை, அவள் அவனுடைய எஜமானி. அவன் சோர்ந்து விழும் நிலை வருகிறபோது, சட்டென்று அவன் காதுமடலை இரத்தம்வர கடிப்பாள். ஆவேசத்துடன் இறுகப் பிடிப்பாள். அவளுடைய சிறுநகங்கள் அவனது தசைகளில் பதித்திருக்கும். மீண்டும் குதிரைப் பாய்ச்சல். ஆறுவயது கொடுங்கோல் ராணி, தலைமயிர் காற்றில் பறக்க சிறுவனான விலங்கின்மீது ஆரோகணித்து மரங்களுக்கிடையில் பயணிப்பாள்.

 

பின்னர் அவளுடைய பெற்றோர்களை வைத்துக்கொண்டு அவனைக் கிள்ளுவாள். அவன் அழக்கூடாது. அழுதால் தெருவில் எறிந்துவிடுவதாக அச்சுறுத்துவாள்; அவர்களுடையை விளையாட்டுகள் எதுவும் பிறர் காதுக்கு எட்டக்கூடாதென்பதில் கண்டிப்பாக இருந்தாள். இருவரும் ஒருவகையான ரகசிய இருப்பை வைத்திருந்தார்கள், சேர்ந்திருப்பதற்கு அவர்களுக்கென்று ஒரு திட்டம், மற்ற்வர்கள் எதிரே அது வேறாக இருந்தது. அவர்களிருவரும் தனித்திருக்கிறபொழுது கொலொம்பெல் ஒரு பொம்மை. அந்தப்பொம்மையை அவ்வப்போது உடைக்கவும், அதனுள்ளே இருப்பதென்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவளுக்கு அதிகம். அதிலும் அவள் பிரபுக்கக்கள் வீட்டுப்பெண் அல்லவா? எத்தனை மனிதர்கள் அவர்கள் காலடியில் கிடக்கப் பார்த்திருக்கிறாள்? ஒரு உயிருள்ள பையனை விளையாட்டு பொம்மையென்று கொடுத்தால் சும்மாவா இருப்பாள், கற்பனைக்கெல்லாம் அப்பொம்மை இடம் கொடுக்கவேண்டுமில்லையா? பிறர் கண்களுக்குப்படாமல் கொலொம்பெலை வதைத்து அலுத்துபோன நிலையில் அவனைப் படுக்கவைத்து உதைப்பதும், ஆழ ஊசியால் குத்துவதும் நண்பர்கள் கூடியிருக்கிறபோதும் தொடர்ந்தது. அவள் கருமைக்கண்களுக்கிருந்த வசீகரத்திற்கு ஆட்பட்டு நாளடைவில் அவன் உடலில் நடுக்கம் கூட நின்று போயிற்று.

 

எப்போதாவது ஊமைத்தனமான எதிர்ப்பைக்காட்டி அதன் பலனாக நடுங்கிக்கொண்டிருக்க நேரிட்டாலும் அல்லது காதலியின் கைகளால் கழுத்து நெறிபடுவதிலிருந்து தப்பிக்க அவளை நேரிட்டுப்பார்ப்பதை தவிர்த்தாலும், சித்திரவதை வாழ்க்கைக்குக் கொலொம்பெல் பழகிக்கொண்டானென்றே சொல்லவேண்டும். அவனுமொரு கல்லுளிமங்கன். அவனைப்புரிந்துகொள்வதும் அத்தனை சுலபமல்ல. தான் வீழ்த்தப்படுவதை ஒருபோதும் விரும்பியவனல்ல என்றாலும் இதுபோன்ற சித்திரவதைகளில் சுகங்கண்டான். சில நேரங்களில் தன்னை ஊசியால் குத்தவேண்டுமென்கிற எதிர்ப்பார்ப்புடனேயே நடந்துகொள்வான். அதுபோன்ற நேரங்களில் அவன் கொண்டை ஊசியையோ அல்லது வேறு ஊசிகளையோ அவள் கைகளிற் காணநேர்ந்தால்தான் அமைதிகொள்வான். சொல்லப்போனால் வன்மத்தின் சுகத்தில் தன்னையே இழந்திருந்தான். தவிர அவளிடத்தில் கொலொம்பெல் ஏற்கனவே வஞ்சம் தீர்த்துக்கொண்டதும் நடந்திருக்கிறது. உதாரணமாக கற்களில் மீது விழுந்தால் தனியே விழமாட்டான் தெரெஸாவையும் விழவைப்பான். தனது காலொடிந்ததுபற்றி கவலைகொள்ளமாட்டான், அவனுடன் விழுந்தபோது தெரெஸா தலை புடைத்திருந்தது பாருங்கள் அதற்கு சந்தோஷப்படுவான். பொதுவாக பிறர்முன்னால் வதைபடும்பொழுது அவன் சகித்துக்கொள்ள காரணம், இவனுக்கு ஆதரவாக ஒருவரும் குறுக்கிடமாட்டார்கள் என்பதுதான். உண்மையில் தெரெஸாவுக்கும் அவனுக்குமிடையில் வழக்கொன்றிருந்தது, அவ்வழக்கின் முடிவில் ஒருநாள் ஜெயிப்பது தானாகத்தான் இருக்குமென்கிற நம்பிக்கையும் அவனுக்கிருந்தது.

 

பிரபுகுடும்பத்தினருக்குத் தம்முடைய மகளின் அரக்ககுணம்பற்றிய கவலைகள் நிறைய இருந்தன. அவளுடைய தாய்மாமன் ஒருவரின் சுபாவமும் அதுபோலத்தான் இருந்தது, ஒருநாள் புறநகர்பகுதியில் தப்பான இடத்தில் கொலை செய்யபட்டு கிடந்தார். எனவே மர்சான் குடும்பத்தினரின் வரலாற்றில் சோகமான பக்கங்களிருந்தன. அக்குடும்பத்தைசேர்ந்தவர்களில் பலரிடம் இப்படி புதிரான பேய்க்குணங்கள் வெகுகாலமாகவே இருந்து வந்திருக்கின்றன. மதிப்பும் மரியாதையும்ங் கொண்டதொரு பெரிய குடும்பத்தில் இடைக்கிடை இப்படி. அச்சோதனை ஒருபைத்தியக்காரசெயலென்றோ, புலன்களின் அத்துமீறல்களென்றோ, குடும்பத்தை சுத்திகரிக்க நேர்கின்ற கெட்ட அனுபவமென்றோ கொள்ளலாம். தெரெஸாவின் பெற்றோர்கள் முன் எச்சரிக்கையாக அப்படியொரு நிலமை பெண்ணுக்கு வரக்கூடாதென்று நினைத்து நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கிற நிறுவனத்தில் அவளை வைத்து வளர்ப்பது அவசியமென்று நினைத்தார்கள், விதிமுறைகள் அவளுடைய இயற்கையான சுபாவத்தை இளகவைக்குமெனக் கருதினார்கள். பதினெட்டு ஆண்டுகள்விடுதியில் தங்கினாள்.

 

தெரெஸா மாளிகை வீட்டிற்குத்திரும்பவும் வந்தபோது நல்ல மாற்றமிருந்தது. வளர்ந்து பெரிய பெண்ணாகவும்,  மிகவும் அடக்கமாகவும் இருந்தாள். பெற்றோர்கள் அவளிடத்தில் இதுவரையிலும் கண்டிராத ஆழமான பரிவுணர்ச்சியைக்கண்டு வியந்தார்கள். தேவாலயத்திற்குள் நுழைந்தால் மிகுந்த விசுவாசமிக்க  பெண்ணாக நடந்துகொள்வாள், இருகைகளையும் நெற்றியில் காணலாம். வீட்டிற்கு திரும்பினால் அமைதியையும், அறியாமையையும் பூண்டவள்போல இருப்பாள். குறைசொல்லவேண்டுமென்று நினைத்தால், பெருந்தீனிக்காரியாக அவள் இருந்தாள் என்பதைக் குறிபிடலாம். காலை தொடங்கி இரவுவரை மிட்டாய்களைத் தின்றாள், உடலில் இலேசான அதிர்வுகளுடன், பாதிவிழிகள் மூடியிருக்க, சிவந்த அதரங்ளில் வைத்து மிட்டாய்களை சப்பித்தின்பாள். பிடிவாதக்காரியாகவும், பேசாமடந்தையாகவும் இருக்கின்ற ஒருத்தி, தோட்டத்திலிருந்து அலங்கோலமாக திரும்பிவருகின்றபொழுது, அங்கே அப்படியென்ன நடந்தது என்பதை சொல்வதில்லை. எனவே பலருக்கும் அவள் ஒரு புதிர். பதினைந்து ஆண்டுகளாக மிகப்பெரிய அம்மாளிகைவீட்டில் அடைந்து கிடந்தவர்கள்  நல்லகாரியங்கள் நடத்திப்பார்க்கவும், வரவேற்பறையை விருந்தினர்க்கென திறந்துவைக்கவும் விரும்புவது இயற்கைதானே?  எனவே அப்பிரதேசத்தைச்சேர்ந்த பிற பிரபுக்களையும் மற்ற பெரிய மனிதர்களையும் அவ்வப்போது அழைத்து விருந்து வைத்தார்கள். வந்தவர்கள் நடனமாடவும் ஏற்பாடு செய்தனர். அதன் மூலம் தெரெஸாவுக்கு நல்ல குடும்பத்துப் பையன் கணவனாக வாய்க்கக்கூடுமென்பது அவர்கள் கனவு. உண்மையில் எதிலும் எவரிடத்திலும் பிடிப்பற்றவள் என்றபோதிலும், நல்லவள்போலவும் நாகரீகமாக உடுத்தவும், நடந்துகொள்ளவும் தெரிந்திருந்தாள். ஆனால் பெரிய குடும்பத்து  வாலிபப்பையன்களுக்கு சவம்போல வெளுத்திருந்த அவள் முகத்தைப்பார்த்ததும் பயம் வந்ததேதவிர காதல் வரவில்லை.

 

குள்ளன் கொலொம்பெல் பற்றிய கேள்வி எதையும் விடுதியிலிருந்து வந்த நாளிலிருந்து தெரெஸா எழுப்பவில்லை. அவனிடத்தில் அக்கறைகொண்டிருந்த அவளுடைய பெற்றோர்கள் பத்திரங்கள் எழுதும் சவூர்னனிடத்தில், ஓரளவு அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை விளங்கிகொண்டபிறகு அனுப்பிவைத்தார்கள். ஒருநாள் பிரான்சுவாஸ் மகன் கொலொம்பெலை அழைத்துவந்தாள். தெரெஸாவின் எதிரில் நிறுத்தி அவளுடைய இளம்வயது தோழன் என்பதை ஞாபகப்படுத்தினாள். கொலொம்பெல் அன்றைக்கு நன்றாக உடுத்திக்கொண்டிருந்தான். சங்கடங்களின்றி தாயின் அறிமுகத்தை உறுதிபடுத்துபவன்போல சிரிக்கவும் செய்தான். சிறிதுநேரம் அமைதியாக அவனைப் பார்த்த தெரெஸா, ஆமாம் எனக்கு நினைவிருக்கிறது, என்றதோடு சரி பிறகு முதுகைத் திருப்பிக்கொண்டாள். எட்டு நாட்களுக்குப்பிறகு கொலொம்பெல் திரும்பவும் வந்தான். வந்த வேகத்தில் மாளிகை வீட்டில் இளம்வயது காரியங்களை மீண்டும் தொடங்கினான். ஒவ்வொரு நாளும், பத்திர எழுத்தாளரிடத்தில் தனது அலுவலை முடித்துக்கொண்டபிறகு மாளிகை வீட்டிற்கு வருவதை வழக்கப்படுத்திக்கொண்டான், வருகின்றபோது இசைத் தட்டுகள், ஆல்பங்கள், புத்தகங்கள் என எடுத்து வருவான். மாளிகை வீட்டில் அவனை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பதில்லை, எடுபிடியாக நடத்தினார்கள் அல்லது  ஓர் ஏழமையான உறவினனை வேலைவாங்குவதுபோல கடைகண்ணிக்கு போக வைத்துக்கொண்டார்கள். அவனும் கதியற்றவன்போல அந்த வீட்டையே சுற்றிவந்தான். எதுவும் தப்பாக நடந்திடாதென்கிற நினைப்பில் இளம்பெண்ணோடு அவனை அனுமதித்தார்கள். முன்புபோலவே இருவரும் பெரிய அறைகளில் கதவினச் சாத்திக்கொண்டு சேர்ந்திருந்தார்கள், தோட்டத்து மரநிழலில் மணிக்கனக்கில் நேரத்தைக் கழித்தார்கள். உண்மையில் இப்போதெல்லாம் அவர்களுடைய பழைய விளையாட்டை விளையாடுவதில்லை. தெரெஸா புற்களிடையே தனது ஆடை  சலசலக்க நடந்துசெல்வாள். கொலொம்பெல் நகரத்தின் பணக்காரவாலிபர்கள்போல உடையணித்துகொண்டு தரையில் கையிலிருக்கும் மெல்லிய பிரம்பால் தட்டிக்கொண்டே அவளுக்குத் துணையாக செல்வான்.

 

இருந்தபோதிலும் அவள் ராணியாகவும், அவன்  அடிமையென்றும் மாறினார்கள். இப்போது அவனை கடிப்பதில்லை என்பது உண்மைதான், ஆனால் அவனருகில் நடப்பதற்கு கையாண்டமுறைகள் வேறு.  ராணியின் மேலங்கியைச் சுமந்துசெல்கிற அரசவை ஊழியனாக அவனைப் பாவித்து அவனை மேலும் சிறுமை படுத்தியிருந்தாள். நொடிக்குநொடி மாற்றிப்பேசி அவனை வதைசெய்வதும் வழக்கமாயிற்று. மிகவும் பிரியத்துடன் பேசுவதுபோல தெரியும் அடுத்த கணம் வார்த்தைகள் தடித்து வரும், அவ்வளவும் தனக்குப் புத்துணர்ச்சி ஊட்டிக்கொள்ள. அவன், அவள் தலையை திருப்புகிறபொழுது தீட்டிய கத்திபோன்றதொரு கூர்மையும் ஜ்வலிப்பும் கொண்டபார்வையை அவள் பக்கம் வீசுவான், அதே தருணம் அவனுக்குள் உள்ள சேவகத் தன்மை நெடுஞ்சாண்கிடையாக அவள்காலில் விழும், கண்காணிக்கும், வஞ்சிப்பதற்கு என்னவழியென்று கனவுகாணும்.

 

கோடைகாலத்தில் ஒருநாள் மாலை செஸ்நட்மரங்கள் நிழலில் இருவருமாக வெகுநேரம் நடைபழகிக்கொண்டிருந்தார்கள், அபொழுது தெரெஸா ஒரு சில நொடிகள் அமைதியாக நின்ற்வள் பின்னர் தீவிரமான குரலில்:

 

“- கொலொம்பெல் கொஞ்சம் நில், என்னால் நடக்கமுடியலை. தூக்கிக்கொள்ள முடியுமா? முன்பு அப்படி செய்திருக்கிறாய். நினைவிருக்கிறதா?”- என்றாள். அவன் பெல்ல சிரித்தான். பிறகு குரலில் தீவிரத்தை வரவழைத்துக்கொண்டு:

 

” – எனக்கும் ஆசைதான்”, என்றான்.

 

அவள்,” நல்லது. சும்மா தெரிந்துகொள்ளதான் கேட்டேன்.” என்று சாதாரணமாகப் பதில் கூறியவள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். இரவாகியிருந்தது. மரங்களடியில் நிழலில் கருமைசேர்ந்திருந்தது. அண்மையில் ஒரு ராணுவ அதிகாரியை மனந்த நகரத்துப் பெண்மனியைக்குறித்து இருவருமாக பேசிக்கொண்டு நடந்தார்கள். ஒரு குறுகலான நடைபாதையில் இருவரும் செல்லவேண்டியிருந்தது. அவள் முன்னால் போகட்டுமென்று இவன் ஒதுங்கி நின்றான்.

 

ஆனால் அவனை வேகமாக இடித்தாள், அவனை முன்னாற் போகும்படிசெய்தாள். பின்னர் இருவரும் அமைதியானார்கள்.

 

எதிர்பாராதநேரத்தில் தெரெஸா தனது இளம்வயது போக்கிரித்தனத்தை நினைவிற்கொண்டுவந்தவள்போல கொலொம்பெல் முதுகில்திடீரென்று தாவினாள்.

 

– “ம்.. போகலாம்..போ” சத்தமிட்டாள். குரல் மாறியிருந்தது. பால்யவயதில் அவள் குரலிலிருந்த அதே பாவம்.

 

அவனிடமிருந்த பிரம்பைப் பறித்தாள், கால்களில் அடித்தாள். தோள்களைப் பற்றி ஏறினாள். குதிரைசவாரி செய்பவர்களைப்போல தனது இருகால்களைக்கொண்டு, மூச்சுதிணறும்வகையில் அவனுடைய தலையை இறுக்கினாள். அடர்ந்திருந்த நிழலுக்கு அவனைப்போகச்செய்தாள். தான் களைத்துபோகும்வரை வதைத்தாள். ஓட்டத்தைத் துரிதப்படுத்தினாள். பாய்ச்சலெடுத்த குதிரை சுருண்டு புல்வெளியில் தினறியது. சுவாசமன்றி வேறு வார்த்தைகள் அவனிடத்திலில்லை..  பெண்ணின் இதமான சுமை கழுத்தை நெறிக்க; குள்ள ஆசாமியின் கால்கள் நேராக நிற்க எத்தனித்து மூச்சுவாங்குகிறது.

 

ஆனால் “நின்றது போதும்!” என அவள் கத்தியதும் தாமதமதிக்காமல் ஓடினான், தன்னை மறந்து பாய்ச்சலிட்டான். கைகள்  அவளுடைய இடுப்பிற்குக்கீழே இறுகப் பிணைந்திருந்தன. அவள் நினைத்தாலும் விடுபடமுடியாது. இம்முறை  குதிரை மூர்க்கத்துடன் தனது எஜமானியைப் தூக்கிச்சென்றது. பிரம்படிகள் தொடர்ந்தபோதும், தாங்கொணாத வலிகளில் துடித்தபோதும் நிற்காது தோட்டத்தைப் பராமரிப்பவர்கள் தங்கள் கருவிகளைப் பாதுகாத்து வைக்கிற கொட்டகை ஒன்றை நோக்கி ஓடினான். அங்கே சென்றதும் தாமதமின்றி அவளைத் தரையில் போட்டான், உலர்ந்திருந்த கோதுமைத்தாள்களில் கிடத்தி மூர்க்கமாகப் புணர்ந்தான். அந்நடவடிக்கையின் பலனாக, இப்போது நான்தான் எஜமானன் என நிரூபணம் செய்தான்.

 

தெரெஸா ஏற்கனவே நல்ல வெளுப்பு, இச்சம்பவம் அவளை மேலும் வெளுக்கசெய்தது. அதரங்கள் மேலும் சிவக்க, கண்களும் கூடுதல் கறுமைக்கு வந்திருந்தன. அவளுக்கு அவன்மீதிருந்த அளவுகடந்த பற்றார்வம் தொடர்ந்தது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் அச்சம்பவங்கள் தொடர்ந்தன. கொலொம்பெல் முதுகில் பாய்ந்து ஏறினாள், குதிரையை ஒழுங்காக அடக்கமுடியுமென நினைத்தாள். வழக்கம்போலவே அன்றும் சம்பவம் கொட்டகை, உலர்ந்தபுல் என்று முடிந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ அவனை பொறுத்தவரை அவள்தான் எல்லாம், மூத்த சகோதரியின் ஆங்காரம் தனக்கானது. வேறுரெவரும் பங்குபோட கூடாது. அவளும் வெளியுலகிற்கு சிரித்தமுகத்துடனான அமைதிக்குச் சொந்தக்காரி. மொத்தத்தில் இருவரும் கொடிய விலங்குக்குட்டிகள் நக்குவதும், கடித்துக்கொள்வதுமாக இருப்பதுபோல ரகசிய வாழ்க்கையை நடத்தினார்கள். இன்றைக்கு எதிர்பாராதவிதமாக தாபத்திற்கு நேர்ந்த சோதனையில் அவர்களுடைய கெட்டதிசை ஜெயித்திருந்தது.

 

அவர்கள் இருவருக்குமான காதல் விலங்குத்தனமானது. கொலொம்பெலை தனது அறைவரை அழைத்துச்செல்வது தெரெஸாவுக்கு வழக்கமாயிற்று. அவள் மாளிகை மற்றொரு வழியாக உபயோகிக்கப்பட்ட சிறுகதவின் திறப்பு ஒன்றை அவனிடம் கொடுத்து வைத்திருந்தாள், கோட்டை மதிற்சுவரில் சந்தொன்றில் அது இருந்தது. எனினும் இரவுகளில் அவளைத் தேடிவரும்போது அவனுடைய தாயார் உறங்குகிற பெரிய அறையைக் கடந்தே வரவேண்டும். எனினும் காதலர்கள் இருவரும் துணிச்சலுடன் சந்திக்கவே செய்தனர். இதுவரை எவர் கண்ணிலு படவில்லை என்பது உண்மையில் வியப்புக்குரியது. பகலில் சந்திப்பதற்கும் அவர்களுக்கு துணிச்சலுண்டு.

 

கொலொம்பெல் இரவு உணவிற்கு முன்பாகவே வந்துவிடுவான், அவனுக்காகக் காத்திருக்கும் தெரெஸா அவன் உள்ளே வந்ததும் சன்னலை மூடிவிடுவாள், அக்கம்பகத்தார் கண்களில் படக்கூடாதென்பதுதான் காரணம். விரும்பும் நேரத்தில் சந்தித்தார்கள். தங்கள் காதல் மொழிகளை பரிமாறிக்கொள்ளும் இருபது வயது காதலர்கள் சந்திப்பல்ல அது. அகங்காரத்தின் யுத்தத்தை தொடரவேண்டுமென்பதற்காக. அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதம் வரும், அவர்களை உலுக்கிப்போடும், ஒருவர்மற்றியொருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொள்வார்கள், கோபத்தின் உச்சத்திலும்  சத்தமிடவேண்டும், அடித்துக்கொள்ளவேண்டும் என்பதை தவிர்த்தார்கள்.

 

ஒருநாள் இரவு டின்னருக்கு முன்னால் வந்த கொலொம்பெல் வழக்கம்போல கால்களில் சப்பாத்தின்றி பெரிய அறையைக் கடந்தான். கண்காட்சிகளில் ஹெர்குலீஸ் போன்றவர்கள் மல்யுத்தத்தின் தொடக்கத்தில் எதிராளியை தூக்குவதுபோல தெரெஸாவைத் தூக்குவதற்காக அவளை எட்டிப்பிடிக்க முனைந்தான். தெரெஸா சிக்ககூடாதென நினைத்தாள்: “தொடாதே, உன்னைக்காட்டிலும் நான் பலசாலி தெரியுமா, பிறகு உனக்குத்தான் பிரச்சினைகள்”, என்றாள். கொலொம்பெல் கொஞ்சமாக சிரித்தான்.

 

” என்ன செய்யபோகிறாய், கொடுக்கிற பிரச்சினைகளை கொடேன் பார்ப்போம்”- அவன்.

 

தோற்கடிக்க வேண்டுமென்பதுபோல அவளைப் பிடித்து உலுக்கினான்.  அவள் கைகளை உடலோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் இந்தவிளையாட்டு பலமுறை ஏற்கனவே நடந்துள்ளது. பெரும்பாலும் தரைவிரிப்பில் கடைசியில் தடுமாறி விழுவது அவனாக இருக்கும், மூச்சுதிணறுவான், அவனது மெனமையான சரீரம் இதுபோன்ற விளையாட்டுக்கு உகந்ததல்லவெண்பதால், போதுமென்று விலகிக்கொள்வான். அவன் மிகவும் குள்ளம் என்பதால் அவனைத் தூக்குவது எளிதாக இருக்கும், தூக்கியவுடன் தன்னோடு அவனைச் சேர்த்து பிடியை இறுக்குவாள்..

 

ஆனால் அன்றைக்கு முழங்காலில் நழுவிச்செல்ல கொலொம்பெல் சட்டென்று பற்றி அவளை தரையில் போட்டாண். அவன் ஜெயித்தவன்போல எழுந்து நின்றான்.

 

 

” பார்த்தியா, இருவரில் யார் பலசாலி, என்பது புரிந்ததா என்றவன் ஏளனமாக சிரித்தான். அவள் வெறிபிடித்தவள்போலானாள் மெல்ல எழுந்தாள், ஊமையாக நின்றவள், ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் மிகமோசமான கோபத்திற்கு ஆட்பட்டவள்போல நடந்துகொண்டாள்; அவனுக்கே இப்போது பயமாக இருந்தது. ஒ! மூச்சிறைத்தது. இன்றைக்கு இதற்கு முடிவுகட்டியாகவேண்டும், அவன் இனி எழுந்திருக்கக்கூடாது, தோற்றேன் என்பதே இனி எனக்குகூடாது!

 

ஒரு நிமிடநேரம்மிருக்கலாம், பேச்சிலென்ன இருக்கிறதென தீர்மானித்தவர்கள்போல இருவரும் கட்டிப் புரண்டார்கள். மூச்சோட்டம் வேகம் குறைந்தது.  பிடிகளில் சிக்குண்டு அவர்கள் கைகால்கள் முறிந்ததுபோல சத்தமிட்டன. விளையாட்டு என்ற்ர எல்லைகளையெல்லாம் இருவரும் கடந்துவிட்டனர். இருவர் தலையிலும் கொலைவெறிக்குரிய ஆவேசம். அவன் வலிதாங்காமல் சத்தமிட்டான். அவள், அனுமதித்தால் சத்தம் கேட்டு மற்றவர்கள் வந்துவிடுவார்கள்களென அஞ்சினாள், கடைசியாக ஒருமுறை தனது பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைத் தள்ளினாள். அங்கிருந்த சிறிய மேசையில் தலை மோதியது, சுருண்டு விழுந்தான்.

 

தெரெஸா சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். கண்ணாடியைபார்த்து தலைமுடியை ஒழுங்கு படுத்திக்கொண்டாள். கசங்கிய ஸ்கர்ட்டை சரிசெய்தாள். தோற்றவன் வேலையை அவன் பார்த்துக்கொள்ளட்டும் என்பதுபோல. தவிர வேண்டுமென்றே அவன் அப்படி விழுந்திருக்கவேண்டும் எனவும் நினைத்தாள். அவன் காலைப்பிடித்து அசைத்தாள். அசைவேதுமில்லை என தெரியவந்ததும் அவளுடைய கழுத்தோரமிருந்த பூனைமயிர்கள் சில்லிட்டன, குனிந்தாள். கொலொம்பெலுடைய முகத்திற்கு அண்மையில் பார்வை சென்றது: மெழுகுபோன்று வெளுத்திருக்கும் முகம், பூஞ்சை மயிர்கள், கோணியிருந்த வாய். நெற்றியின் வலதுபுறம் ஆழமாக காயம். அலங்கார சிறிய மோதியதில், தலை நசுங்கிருந்தது. கொலொம்பெல் இறந்திருந்தான்.

 

அவள் எழுந்தாள், அவல் உறைந்துபோயிருந்தாள். நிரப்தத்துக்கிடையில் அவள் குரல் உரத்து ஒலித்தது. “மரணம், ஆமாம் சாவு. இங்கே ஒரு உயிர்க்கொலை! திடீரென்று எதார்த்தம் ஒருவித அச்சமுறுத்தும் கவலைகளை நிரப்பிக்கொண்டது. ஒரே ஒரு நொடி அவனை அவள் கொல்ல நினைத்தது உண்மை. அது மிருகத்தனம், கொடிய கோபத்தின்  குணம். சண்டையிடும் ஒவ்வொருவரும் எதிராளியை கொல்லத்தான் நினைக்கிறோம்; ஆனால் உண்மையில் அப்படி எவரையும் கொலவதில்லை, தவிர சாகும் மனிதர்களால் பிரச்சினைகள் நிறைய. இல்லை இல்லை.. அவள் மீது குற்ற சுமத்த ஒன்றுமில்லை. கொலை செய்ய அவள் ஆசைப்பட்டவள்ல்ல. அதுவும் அவளுடைய சொந்த அறையில், சாத்தியமா? சிந்தியுங்கள். அவள் தொடர்ந்து பிதற்றிக்கொண்டிருந்தாள்.

 

 

” ம்.. நல்லது! முடிந்தது. அவண் இறந்தான். ஆனால் அவன் தனித்த ஆளாக எப்படி போவான்.” இதுபோன்ற நெருக்கடி காலங்களில் வருகிற உடலை சிலிர்க்கவைக்கிற முதல்பயம் தீப்பிழம்புபோல வயிற்றிலெழுந்து தொண்டையை அடைத்தது. அவளுடைய அறையில் ஒரு மனிதனின் பிணம். அவளுடைய அ¨றைக்கு காலணியின்றி, சட்டையணிந்து தலை நசுங்கி எப்படி ஒருவன் உள்ளேவந்தான் என்ற கேள்விக்கு இவளால் கடைசிவரை பதில்சொல்லவியலாது. அவள் தோற்றுவிட்டாள் இனியெல்லாம் சூன்யம்.

 

தெரெஸா குனிந்து காயத்தைப் பார்த்தாள். பேரச்சமொன்று பிணத்தருகே அவளை உறையச்செய்தது. பிரான்சுவாஸ் – கொலொம்பெலுடைய தாயாரின் குரல், நடைகூடம் வழியாக எங்கோ போகிறாள். வேறுவகையான குரல்களும் மெல்ல மெல்ல காதில் உரத்துகேட்க ஆரம்பித்தன. காலடிகள், மனிதர் குரல்கள்; இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கிற இரவு விருந்துக் கான ஆயத்தகளாக இருக்கலாம். எந்த நிமிடமும் அவளைத் தேடிக்கொண்டு யாரேனும் ஒருவர் வரக்கூடும். இங்கே ஒரு பிணம், அவளால் கொல்லப்பட்ட காதலனின் பிணம் அவளுடையை தோளில் மறுபடியும் விழுந்திருக்கிறான் அதாவது. அவர்களுடைய பூதாகரமான தவறுகளின் அவ்வளவு பாரத்தோடும்.

 

இறைச்சல் தலைக்குள் கேட்டது, மெல்ல மெல்ல வலுத்துக்கொண்டுபோகவும் நிலைகுலைந்தாள். எழுந்தாள் தனது அறையைக்குள் பார்வை போனது. தனது எதிர்காலத்தை வழிமறிக்கிற சவத்தை தொலைப்பதற்கு ஏதேனும் சந்துபொந்துகள் கிடைக்குமா? வாய்ப்புகள் அமையுமா? சன்னல் வழியாக தூக்கி எறியலாம்…ஆனால் கண்டிப்பாக பிறர் கண்களில் படும், அது எங்கிருந்து வந்ததென்பதையும் எளிதாக ஊகிப்பார்கள். இருந்தபோதிலும், சன்னல் திரையை அகற்றி வீதியைப் பார்த்தாள், அடுத்த கணம் எதிர்வீட்டு சன்னலில், பிரியமான வீட்டுநாயின் பாவத்துடன் இளைஞன். அசடு புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கிறது. சவத்தைபோன்ற அந்த முகத்தையும் அதில் வழியும் காதலையும் வெகு காலமாகவே அறிவாள். ஆனாலும் வேறு வேலைகளெதுவும் அற்றவன்போல அடிக்கடி அவளுடைய திசைக்காய் தலையைத் திருப்பிப் பார்ப்பது எரிச்சலூட்டியது, அலுத்திருந்தாள். அன்று ஜூல்லியன் பார்வையிலிருந்த கணிவான பார்வையும் காதலும் அவள் கவனத்தைச் சிக்கென பிடித்தது. அவனது பால்போன்ற வெளுத்த முகம் புன்னகைத்தபோது ‘வணக்கம்! எப்படி இருக்கீங்க?’ என்பதுபோல ஒலித்தது.  சங்கிலியில் பிணைத்திருக்கும் நாய்போன்றிருந்த அசடு, இவளுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் அதாவது குற்றங்கள் உட்பட. இவளும் அதற்கு வெகுமதியாக தனது இதயம், உடல் இரண்டையும் முழுமையாக ஒப்படைக்க தயார். அவள் அவனுடைய மென்மையாக குணத்தைக்கண்டு வெறுப்புற்றாளே தவிர காதல்கொண்டதில்லை; ஆனால் இனி விரும்பக்கூடும், அவளுக்கு குருதியில் கையை நனைப்பானில் விசுவாசத்தின் அடையாளமாக தனது சரீரத்தை மொத்தமாக அவனுக்குத் தாரை வார்க்கமுடியும். முன்பின் தெரியாத நபரின் முரட்டுத்தனமான காதலுக்கு ஆட்பட்டவைபோல, சிவந்த அவளுதடுகள் துடித்தன. அடுத்த கணம் ஒரு துணி மூட்டையை எடுப்பதுபோல கொலொம்பெல் உடலைத் தூக்கினாள். கட்டிலின் மீது போட்டாள். பின்னர் சன்னற் கதவினைத் திறந்து ஜூலியனுக்கு முத்தங்களை அனுப்பி வைத்தாள்.

 

– IV –

 

ஜூலியனுக்கு கொடுங்கனவு அனுபவம். கொலொம்பெலை கட்டில் மீது பார்ப்பதை சாதாரணமாக எடுத்துக்கொண்டான்: அவனைபொறுத்தவதை இதில் அதிர்ச்சிகொள்ள ஒன்றுமில்லை, எதிர்பார்த்ததுதான் என்பதுபோல நடந்துகொண்டான். மாளிகையில் இளம்பெண்ணின் கட்டில்வரை வருகின்ற துணிச்சல் ஊரில் வேறு எந்த இளைஞனுக்கு வரும்? அடிபட்டதில் நசுங்கிய தலையும், விறைத்த கை கால்களுமாக கொலொம்பெல் மோசமான காமுகன் தோற்றத்தில் கிடந்தான். தெரெஸா ஜூலியனிடம் உரையாடியபொழுது நீளமான வாக்கியங்களை உபயோகித்தாள். ஒவ்வொரு சொல்லும் நிதானமாக வந்தன. நிலைகுலைந்த சூழலில், குழப்பமான ஒலியுடன் வார்த்தைகள் வெளிவந்தன. ஒரு சில நிமிடங்களுக்கு பிறகே அவள் குரல் கட்டளைபோல ஒலிக்கிறதென்பதை அவனால் உணரமுடிந்தது, அவ்வளவையும் கேட்டான். இனி, அவனால் அந்த அறையிலிருந்து வெளிவர இயலாது. விருந்தினர்கள் அனைவரும் புறப்பட்டு மாளிகை மீண்டும் வெறிச்சோடும்வரை இவனால் அங்கிருந்து போக முடியாது. அதற்கு நள்ளிரவுவரை காத்திருக்கவேண்டும்.

 

மாளிகைவீட்டில் பிரபு குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஆட்டமும் பாடமும், சற்று நேரத்தோடு இவர்களை செயல்படாமற் தடுக்கக்கூடும். ஆனாலும் கொண்டாட்டம் நல்லதொரு சந்தர்ப்பத்தை உருவாக்கியிருந்தது. இரவு விருந்து கொண்டாட்டம் கூடுதலாகவே வந்திருந்தவர்களை பிடித்துவைத்திருந்தது இளம்பெண்ணின் அறையைப்பற்றி அப்போதைக்கு நினைத்துப்பார்க்க தவறியிருந்தார்கள். இனி மேலே வரலாம். ஜூலியன் பிணத்தை முதுகில் சுமந்தபடி இறங்கவேண்டும் போ சொலெய் வீதியின் முடிவில் ஓடுகிற ஷாந்த்கிளேர் ஆற்றில் எறியவேண்டும்.  தெரெஸா நிதானமாக திட்டத்தை விளக்கியபோதிலும் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. பேச்சை நிறுத்தியவள், தனது கைகளை அவன் தோளில் போட்டாள், அவனிடம் கேட்டாள்:

 

” என்ன புரிந்ததா? உங்களுக்குச் சம்மதம் தானே?” அவனுக்கு உடல் ஒருமுறை குலுங்கி அடங்கியது. “ம்.. ம்.. நீ சொல்வதுபோல செய்யறேன். நான் உனக்கானவன்”. முகத்தில் கடுமையை வரவழைத்துக்கொண்டாள். அவள் சொன்னதை அவன் சரியாக விள்ளங்க்கொள்ள்வில்லையென்ற கவலை அவளுக்கு. அவன்பக்கமாக குனிந்தாள்:

 

“என்னை அணைத்துக்கொள்” அவனைச் சிலிர்க்கசெய்யும் வகையில் சில்லிட்டிருந்த அவன் நெற்றியில் பச்சென்று ஒரு முத்தமிட்டாள். ஓரிரு நொடிகள் இருவரும் அமைதி காத்தார்கள்.

 

தெரெஸா கட்டில் திரையை மீண்டும் இழுத்தாள்; அருகிலிருந்த நாற்காலியொன்றில் அநிச்சையாய் சரிந்தவளை, இருள் சிதைத்திருந்தது. அவளமர்ந்த பிறகு சிறிது நேரம் ஜூலியன் நின்றான், பிறகு அவனுக்கும் உட்காரவேண்டும்போலிருந்தது. ஒரு நாற்காலியைத் தேடி அமர்ந்தான்.

 

பக்கத்து அறையிலிருந்த பிரான்சுவாஸ் இப்போதில்லை. காதை செவிடாக்கும்வகையில் மாளிகையில் சப்தம்.   உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதுபோலவிருந்த அறையில் இருள் மண்டிக்கிடந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழிந்திருக்கும், அறையெங்கும் நிசப்தம். தனது தலைக்குள் மிகப்பெரிய இடி இறங்கியது போன்றதொரு ஓசையைக்கேட்டான். அவ்வோசை செய்யவிருக்கிற காரியம் சரியா தப்பாவென்று யோசிக்க விடாமற் தடுத்தது. அவன் தெரெஸா வீட்டிலிருக்கின்றான் என்ற உண்மை. அவனை இதுவரை காணாத மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. பிறகு சட்டென்று இவனை உரசிக்கொண்டிருக்கிற திரைத்துணிகளின் பின்னே கட்டிலிருக்கிற பகுதியில் ஒரு மனிதனின் பிணம் இருக்கிறதென்ற உண்மை நினைவுக்கு வந்ததும் உடல் நடுங்கியது, மயக்கம் வருவதைபோல உணர்ந்தான். அவளால் நேசிக்கப்பட்ட மனிதப் பிண்டம்., நல்லது கெட்டதென கடவுளுக்கு எல்லாம் தெரியும். இப்படியும் நடக்குமா? இப்படியொரு கொலையை அவரும் மன்னித்துவிட்டார்; என்று நினைத்தபோது இரத்தம் கொதித்தது. கொலொம்பெலின் சப்பாத்தற்ற நிர்வாணமான கால்கள் கட்டிலிற்போட்டிருந்த அலங்கார துணிகளுக்கிடையில். எவ்வகை சந்தோஷத்துடன் ஷாந்த்கிளேரில் எறியப்போகிறான், பாலத்தின் முடிவில் நீர் கறுமையாகச் சுழன்று ஓடும், அங்கே ஆழம் மிகவும் அதிகமென்று அறிவான். இருவருமாகச் சேர்ந்து பிணத்தை அப்புறப்படுத்தியபிறகு தங்களைக்குறித்து யோசிக்கமுடியும்.

 

இப்ப்டியொரு யோகத்தை நினைத்த மாத்திரத்தில், காலைவேளையைப் பற்றிய கனவில் திளைத்தான். அடுத்த கணம் இவன் கட்டிலில் கிடக்கிறான், அதுவும் எங்கே பிணம் கிடக்கிறதோ அதே இடத்தில். இவன் உடலுக்குக்கீழே கட்டில் உறைபனிபோல சில்லென்று இருக்கிறது. கணத்தில் எல்லாம் மிகக் கடுமையாக முரண்பட்டதுபோன்ற அனுபவம்.

 

நாற்காலியில் ஒழுங்கற்று சரிந்துகிடந்த தெரெஸாவிடமிருந்து எவ்வித அசைவுமில்லை. சன்னலூடாகக் கிடைத்த வெளிச்சத்தில் அவளுடைய வாரிமுடிந்திருந்த தலைமயிரின் மேற்பகுதி தெரிந்தது. அவளுடைய முகத்தை உள்ளங்கைகளில் தாங்கியிருந்தாள். இக் கதிக்கு அவளை ஆளாக்கிய மன நிலையைப் புரிந்துகொள்வது அத்தனை எளிதானதாக இல்லை. ஒருவேளை மிகப்பெரிய நெருக்கடியை கடந்திருந்த நிலையில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் மனநிலையா? மிதமிஞ்சிய குற்ற உணர்வா? காதலனின் இறுதி உறக்கத்தில் ஆழ்ந்தது பற்றிய கவலையா? நிதானமாக அவனது இறுதிச்சடங்கினைப்பற்றி யோசனை செய்கிறாளா? பயத்தின் சூறையாடலை இருட்டில் மறைக்கும் முயற்சியா? இவனால் எதுவென்று சொல்ல முடியவில்லை. கடுமையான நிசப்தத்தை குலைக்க நினைத்ததுபோல கடிகாரம் அடித்து ஓய்ந்தது.

 

தெரெஸா எழுந்தாள், அவளுடைய குளிக்கும் அறையில் மெழுகுத் திரிகளை ஏற்றினாள். திடமாக எப்போதுமே அவளிடமிருக்கிற நிதானத்துடன் திரும்பவும் வந்தாள். பட்டு திரைகளின் பின்னே கால் பரப்பிக் கிடந்த பிணத்தை மறந்திருக்கவேண்டும், கதவை அடைத்துக்கொண்டு வேறு பிரச்சினையையை தலைக்குள் கொண்டவளவாக அவள் போவதும் வருவதுமாக இருப்பதைப் பார்க்க அப்படித்தானிருந்தது. முடிந்திருந்த தலையை அவிழ்த்தபடி தலையைத் திருப்பாமலே கூறினாள்.

 

” மாளிகையில் நடக்கவிருக்கும் விருந்திற்காக நான் உடுத்தவேண்டும்.. யாராவது வந்தால் கட்டிலுள்ள இடத்தில் மறைந்துகொள்”. அவன் எழுந்திருக்கவில்லை.  நீண்டகால உறவின் அடிப்படையில் இருவருக்கு நல்ல புரிந்துணர்வு உண்டென்பதுபோல கொடிய திட்டத்தை அவள் அவனிடத்தில் கூறியவகையில் அவனை அவள் காதலனாகவே நடத்தத் தொடங்கியிருந்தாள் என்பது புரிந்தது.

 

அவள் கைகள் உயர்ந்தன, தலைமுடியை ஒழுங்குபடுத்திக்கொண்டாள். முதுகு  அப்பட்டமாகத் தெரிந்தது, பலவீனமான தோள்களையும் மெல்லிய கைகளையும் காற்றில் நிதானமாக அசைத்து காதணிகள் அணிவதை, உடல் நடுங்க பார்த்துக்கொண்டிருந்தான். அவனை கவர்வதற்கான முயற்சியா? பார்த்தாயா எத்தகைய காதலி உனக்குக் கிடைக்க இருக்கிறாள் என்பதைத் தெரிவித்து அதன்மூலம் தைரியமூட்ட நினைக்கிறாளா?

 

காதணிகளை அணிந்தாள், காலடிச்சத்தம் நெருக்கத்தில் கேட்டதும்” சீக்கிரம் பதுங்கிக் கொள்”, எனத் தாழ்ந்த குரலில் சொன்னாள். சட்டென்று பாய்ந்து விறைத்துக்கிடந்த கொலொம்பெல் பிணத்தின் மீது சற்று முன்பு மறைக்கவைக்க உதவிய அத்தனை அலங்காரதுணிகளையும் வாரிப்போட்டு அவசரமாக மூடினாள். துணிகளில் கதகதப்பும், வாசமும் இன்னமும் ஒட்டிக்கிடந்தது. உள்ளேவந்தவள் பிரான்சுவாஸ். அறைக்குள் நுழைந்தபோது அவள் குரலும் சேர்ந்தே வந்தது.

 

“மத்மசல் உங்களுக்காக எல்லோரும் காத்திருக்காங்க

 

– போறேன் பிரான்சுவாஸ், தெரெஸாவிடமிருந்து பதில் அமைதாக வெளிவந்தது. கொஞ்சம் இப்படிவா! ஒத்தாசை பண்ணு. அந்த ஸ்கர்ட்டை எடேன். ” திரைத்துணிகளின் இடைவெளிகளூடாக இருவரையும் ஜூலியனால்  பார்க்க முடிந்தது. இளம்பெண்ணின் துணிச்சலைக் கண்டு உள்ளூர குலுங்கினான், பற்கள் கொஞ்சம் கூடுதலாகவே அடித்துக்கொண்டன, விரல்களைமடித்து கையினால் வாயைப்புதைத்தான். நல்லவேளை குரல் வெளியில் வரவில்லை. அவனுக்கு வெகு அண்மையில் பெண்கள் சட்டையொன்றின் கீழ் கொலொம்பெலின் சில்லிட்ட காலொன்று நீட்டிக்கொண்டிருந்தது. பிராசுவாஸ், கொலொம்பெலின் தாய்க்காரி மட்டும் திரைத்துணியை விலக்கினால் போதும், நீட்டிக்கொண்டிருக்கின்ற தன் மகனில் காலில் இடித்துக்கொள்ள நேரிடும்.  “கவனம் கவனம்..மெல்ல போ   பூக்களை கொட்டவச்சுடாதே!” தெரெஸாவின் குரல் எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் வெளிவந்தது. பிறகு சிரித்தாள், நடனம் ஆடவிருக்கும் பெண்ணின் இயல்பான மகிழ்ச்சி அவளிடம் வெளிப்பட்டது. அவளுடைய ஸ்கர்ட் வெண்மை நிறம் பட்டாலானது. துணியெங்கும் மலரும் பூக்கள், அவற்றின் இதயப்பகுதியில் சிவப்பு வண்ன புள்ளிகள். அறை நடுவே நிற்கிறபோது, மாசுமருவற்ற வெண்ணிற மலர்க்கொத்தை நிறுத்தியதுபோன்றதொரு தோற்றம்.ஆடையற்றிருந்த கைகளும், மூடப்படாத அவளுடைய கழுத்தும், பட்டின் வெண்மையை எதிரொலித்தன.

 

“ஓ! எவ்வளவு அழகு! எவ்வளவு அழகு! பிரான்சுவாஸ் புகழ்ந்தாள். பிறகு நில்லுங்க! உங்க தலையலங்காரத்தை மறந்திட்டீங்களே! அந்த அம்மாள் தேட முற்பட்டாள். கைகள் திரைத்துணியை விலக்க முற்பட்டன, ஏதோ கட்டிலுக்குக்கீழ் அதை தேட நினைத்தவள்போல. ஜூலியன் மயிரிழையில் தப்பினான். ஆனால் தெரெஸாவுக்கு பதட்டமேயில்லை, கண்ணாடி முன் நிற்கிறபோது முகத்திலும் எப்போதும் காணும் புன்சிரிப்பு.

 

” என்னுடைய தலை அலங்காரல் அலங்கார மேசைமேல் இருக்குது பார், எடுத்துக்கொடு ..ஓ, இல்லை இல்லை! என்னுடைய கட்டில் பக்கம் போகாதே! என்னுடைய துணிமணிகளெல்லாம் அதன் மேலே போட்டது போட்டபடி கெடக்குது! உனக்கு எல்லாத்தையும் கலைச்சுப் போடணும்”

 

காட்டு ரோஜாவினால் செய்யப்பட்ட அந்த தலை அலங்காரத்தை பொறுத்த பிரான்சுவாஸ் உதவினாள். அதன் வளைந்த ஒருமுனை கழுத்தில் ஆடியது. பிறகு ஓரிரு வினாடிகள் திருப்தி அடைந்தவளாய் தெரெஸா நின்றாள். கையுறைகளையும் அணிந்துகொண்டாள். நடைபெறுகிற கொண்டாட்டத்திற்கு அவள் தயார்.

 

” கடவுளே! எப்படி இருக்கீங்க தெரியுமா? உங்களைக்காட்டிலும் இத்தனை பரிசுத்தமான கன்னியாஸ்த்ரீயை தேவாலயம் பக்கங்கூட பார்க்கவியலாது.” இப்புதிய பாராட்டு மறுபடியும் இளம்பெண்ணை புன்னகைகொள்ள செய்தது. கடைசியாக ஒருமுறை கண்ணாடியில் தன்னைப்பார்த்து திருப்தி அடைந்தபிறகு  கதவை நோக்கி நடந்தாள்: “போகலாம் .. மெழுகுத் திரியை அணைச்சுடுவோம்”, அடுத்த கணம் இருட்டின் ஆதிக்கத்தின் கீழ் அறை வந்தது. தொடர்ந்து கதவுகள் சாத்தப்படும் சத்தம், பின்னர்  நடைகூடம் நெடுக கேட்ட தெரஸாவின் பட்டாடை சலசலப்பு- அனைத்தும் ஜூலியன் காதில் விழுந்தன. பதுங்கிய இடத்திலிருந்து வெளியில்வர பயந்து அப்படியே தரையில் அமர்ந்தான். இருள் திரைபோல அவன் கண்கள் முன்னால் விழுந்திருந்தது; ஆனால் பிணத்தில்  மூடப்படாத கால்கள் ஏற்படுத்தியிருந்த உணர்ச்சிகள் இவனோடு உள்ளன, அறைமுழுதும் உறைபனியில் இருப்பதுபோன்ற நிலமை.. அரை மயக்கத்தில் ஏதேதோ நினைவுகளுடன் ஒளிந்திருந்ததில் கணிசமான நேரம் கரைந்திருந்தது.   கதவு திறந்தது. பட்டாடையின் சன்னமான மொரமொரப்பின வைத்து வந்திருப்பது தெரெஸா எனப் புரிந்துகொண்டான். அறையில் அதிக தூரம் உள்ளே வரவில்லை. அலங்கார மேசைமீது எதையோ வைப்பது கேட்டது பிறகு இரகசியக் குரலில்:

 

” இராத்திரி சாப்பிடிருக்க மாட்ட.. ஏதாவது சாப்பிடணும், என்ன?.. நான் சொல்றது காதில் விழுதா” -முன்புபோலவே சிறு சிறு ஓசைகள். ஸ்கர்ட் இரண்டாவது முறையாக கிளம்பிப்போகிறது, சலசலப்பு நடைகூடம் முழுதும் கேட்கிறது. ஜூலியன் உடல் சிலிர்க்க எழுந்தான். எவ்வெளவு நேரம் அடைபட்டு கிடப்பது, கொஞ்சம் மூச்சுவிடவேண்டும் போலிருந்தது. இப்படி கட்டிலில் கொலொம்பெலுக்கருகில் காத்திருப்பது நரகம். கடிகாரம் எட்டுமுறை அடித்து ஓய்ந்தது. இன்னும் நான்கு மணிநேரம் காத்திருக்கவேண்டும். சத்தமின்றி மெல்ல நடந்தான். நட்சத்திர இரவின் சன்னமான ஒளி அறையெங்கும் வியாபித்திருந்தது, அவ்வொலியில், அரையிலிருந்த தள்வாடங்களை அவனால் அடையாளப்படுத்த முடிந்தன.

 

அறையில் சில பகுதிகள் இருளில் கிடந்தன. கண்ணாடியில் மட்டும் பழையவெள்ளியின் மினுமினுப்புபோல நட்சத்திரங்களின் எதிரொளி. பொதுவாக அவன் பயந்தாங்கொள்ளியல்ல: ஆனால் இந்த அறையில் முகத்தில் வெள்ளம் போல வியர்வை பெருக்கெடுத்து வழிந்தது. இருட்டில் கிடக்கும் மர தளாவடங்களும் பிறவும் உயிர்ப்பெற்று எழுந்தன. மூன்று முறை கட்டில் போட்டிருந்த இடத்தின் சுவாசத்தினை கேட்டதாக நம்பினான். பயத்தில் மூச்சே நின்றுவிடும்போல விருந்தது.

 

பின்னர் காது கொடுத்து ஒழுங்காக கேட்டபொழுதுதான் கீழே கொண்டாட்டத்தினால் வருகிற ஓசை யென்பது விளங்கிற்று. நடனத்தின் ஓசைகள், விருந்தினர் கூட்டத்தின் அடக்கமான சிரிப்பு கண்களை மூடினான்; மறுகணம் இருட்டிக்கிடந்த அறையில் ஒளிக்கோளம் வெடித்து சிதறுகிறது- ஒளிவெள்ளத்தில் திளைக்கும் வரவேற்புகூடம்- அங்கே பரிசுத்த தேவதையாக தெரெஸா, காதல் மெட்டொன்றின் இசைக்கொப்ப நடனக்காரனின் கைகளில் இணைந்துகொள்கிறாள். சந்தோஷமான இசை ஒலியில், மாளிகை அதிருகிறது. அச்சமூட்டுகிற மூலையில் பயந்து நடுங்கிக்கொண்டு தன்னந்தனியே இருந்தான். ஒரு கணம் சட்டென்று பின்வாங்கினான். ரோமங்கள் குத்திட்டுநின்றன.ஓர் இருக்கை ஒளி பெற்றதுபோல பிரகாசிக்கிரது. துணிச்சலுடன் மெல்ல நெருங்கி தொட்டான். சாட்டின் வெள்ளையில் தெரெஸாவின் மார்புகச்சு  இளம்பெண்ணின் மார்பகங்களைத் தழுவித் தழுவி மென்மையுற்றிருந்த மார்பு கச்சு. கையிலெடுத்து  முகத்தைப் புதைத்தான், அது தரும் போதைக்காக  வாசத்தை நிதானமாக உள்வாங்கினான்.

 

ஓ! எவ்வளவு சுகம்! பிற எல்லாவற்றையும் மறக்க நினைத்தான். தவிர இக்காத்திருப்பும் அக்கறையும் பிணத்திற்காக அல்ல, காதலுக்காக. இதயத்தை பறிகொடுத்த கதையை நினைவூட்டிக்கொண்டான். வீதியின் எதிர்ப்புறம் நடந்த கதை. இன்னமும் அவனுடைய அறையின் சன்னற்கதவுகள் திறந்தவை திறந்தபடியிருக்கின்றன. அங்குதானே அவனுடைய தெரெஸை ஈர்ப்பதற்பதற்காக பல நீண்ட இரவுகளை இசைக்காக அர்ப்பணித்தது.

 

அவனுடய புல்லாங்குழல் காதலை பாடியது, அதை ஒளிக்காமல் தெரிவிக்கவும் உதவியது. மிகவும் சாதுவான கோழையொருவனுக்குச் சொந்தமானதென்பதால் அக்குரலில் நடுக்கமிருந்ததும் நிஜம். அதனாலென்ன கடைசியில் அப்பெண் தோற்றதும், இவனைப் பார்த்து சிரித்ததும்  உண்மையில்லை என்றா ஆகும்? அவன் முத்தமிட்ட சாட்டின் துணி அவளுடைய சரீரத்தைச் சேர்ந்தது, அவன் பொறுமை இழக்ககூடாதென்பதற்காகவே அவன் கண்ணிற்படும்படி விட்டுச் சென்றிருக்கிறாள். அவனுடைய கனவு கன கச்சிதமாக நனவாகியுள்ளது, சன்னலை விட்டு விலகியதும் இறங்கியதும், அவளுடைய கதவை நோக்கி ஓடிவந்ததும், அவள் குரலை கேட்க இருக்கிற நம்பிக்கையில் நடந்து முடிந்தது.

 

அறையிலிருந்த குளிர் இவன் தோளில் இறங்கி, அனைத்தையும் கலைத்தது. அவன் எங்கிருக்கிறான் என்பதை நினைவுபடுத்திக்கொண்டதும் கோபத்துடன் ஒரு முடிவுக்கு வந்தான். அவளை இனி வெறுப்பதில்லை. அன்றிரவே அவளிடம் திரும்பவும் வருவான்.

 

அவள் பேரழகி, அவளை அளவுக்கு அதிகமாக நேசிக்கிரான். ஒரு குற்றத்திற்காக ஒருவரை ஒருவர் நேசிக்கிறபோது ஒரு வித பற்றார்வத்துடன் ஒருவர் மற்றவரை நேசிக்கிறார்கள். அக்காதல் வலிமையானது. உண்மை அவன் திரும்பவும் வருவான்.-ஓடிவருவான்- பொதியை ஆற்றில் எரிந்த மறுகணம் அவளிடம் இருப்பான்ஒரே ஒரு நிமிடங்கூட தாமதித்தல் கூடாது. என்ன நடந்தது?  பைத்தியக்காரனைபோல அவளுடைய சாட்டீன் மார்புகச்சையை கடிக்கிறான். தனது இச்சை விம்மல்களை தணித்துக்கொள்ள நினைத்தவன்போல  தலையை அதில் வைத்து புரளுகிறான்.

 

பத்து மணி அடித்தது. காது கொடுத்து கேட்டான். சுயநினைவின்றி பல வருடங்களாக அங்கே காத்திருப்பதைப்போல உணர்ந்தான். ரொட்டியும் பழங்களும் கைக்குக் கிடைக்க பெரும் ஆர்வத்துடன் நின்றே தின்றான், வயிற்றில் வலியுடன் பசியாற சிரமப்பட்டான். ஒருவேளை அது பலத்தை  அளிக்கக்கூடும். தின்றுமுடித்ததும் பெருங்களைப்பு. இரவு மேலும் மேலும் நீள்வதைபோல உணர்ந்தான். மாளிகை வீட்டில் வாசிக்கின்ற இசை தெளிவாகக்கேட்டது. நடனமொன்றின் வேகமான அசைவினால் தரைவிரிப்புகள் அதிர்கின்றன. வாகனங்கள் ஒன்ற்ன்பின்னொன்றாக கிளம்பிப்போகின்றன. சாவிதுவாரத்தில் நட்சத்திரம்போன்று ஒன்று தெரிய இவனது கவனம் கதவில் படிந்தது. தன்னை ஒளித்துக்கொள்ளவேண்டுமென்று இவனுக்குத் தோன்றவில்லை. யாராவது உள்ளே வந்தால்? வரட்டுமே.

 

“வேண்டாம், பிரான்சுவாஸ்- தெரெஸா கையில் மெழுகுத்திரியுடன் நின்றாள்.  உடைகளை அவிழ்க்க நீ இருக்கவேண்டுமென்றில்லை. நான் பார்த்துப்பேன் நீபோய் படு.. ரொம்ப களைச்சிருக்க” வலிந்து அவளை வெளியிற்தள்ளி தாளிட்டாள்.

 

ஓரிரு விநாடிகள் அமைதியாக இருந்தாள். விரலொன்று உதடுகளில் இருந்தது. கையில் இன்னமும் மெழுகுத் திரி தாங்கி. சற்று முன்புவரை ஆடிய நடனம், கன்னங்களை சிவக்க வைக்க தவறியிருந்தது. அவள் மௌனமாக இருந்தாள், மெழுகுத் திரித் தாங்கியை மேசையொன்றில் வைத்தாள். ஜூலியன் முன்பாக உட்கார்ந்தாள். அரைமணிநேரத்திற்கு கூடுதலாக அவர்கள் அவ்வாறு உட்லார்ந்திருந்தார்கள். காத்திருந்தார்கள் ஒருவரையொருவர் மார்த்துக்கொண்டார்கள்.

 

கதவுகள் அடைபட்டன. மாளிகை உறக்கத்தில் ஆழ்ந்தது. தெரெஸாவை கவலைகொள்ள வைத்த விஷயம், அவளுடைய அடுத்த அறையிலிருக்கும் பிரான்சுவாஸ். வயதான பெண்மணி அங்குதான் தங்கியிருந்தாள். ஒரு நில நிமிடங்கள் பிரான்சுவாஸ¤டைய காலடிகள் கேட்டன. பின்னர் படுத்ததின் அடையாளமாக அவளுடைய கட்டில் கிறீச்சிட்டது. வெகுநேரம் தூக்கமினமையால் அவதிப்பட்டவள்போல கட்டிலில் அவள் புரள்வது கேட்டது. ஒருவழியாக அடுத்த அறையிலிருந்து உரத்தும் சீராகவும் மூச்சிவிடும் சப்தம்.

 

தெரெஸா ஜூலியனைதொடர்ந்து கவலையுடன் பார்த்தாள். ஒரே ஒரு வார்த்தைதான் அவள் வாயிலிருந்து வந்தது.

 

” ம்… புறப்படலாம்” – தெரெஸா.

 

இருவருமாக திரைத் துணியை விலக்கினார்கள். குள்ளன் கொலொம்பெல் பிணத்திற்கு ஆடை அணிவிக்க விரும்பினார்கள் அவன் ஏற்கனவே   கவலையில் தோய்ந்த பொம்மைபோல விறைத்திருந்தான். வேலையை  முடித்தபோது இருவர் நெற்றியும் வியர்த்து ஊற்றியது.

 

” நேரமாகுது, புறப்படலாம் _ இரண்டாவது முறையாக தெரெஸா கூறினாள்.

 

” ஜூலியன் தயக்கமின்றி முதல் முயற்சியிலேயே குள்ளன் கொலொம்பெல் சரீரத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டான், மாட்டிறைச்சி விற்பவர்கள் அறுத்த உடலை சுமப்பதுபோல. உயரமான தனது உடலை போதுமான அளவு வளைத்திருந்தான். பிணத்தின் கால்கள் தரையிலிருந்து ஒருமீட்டர் அளவில் இருந்தன. “இரு! உங்களுக்கு முன்பாக நான் நடக்கிறேன்”, தெரெஸாவின் குரல் வேகவேகமாக ஒலித்தது. “எங்கள் மேலங்கியை பிடித்துக்கொண்டு முன்னால் போவேன். நீங்கள் செய்யவேண்டியது பேசாமல் என்னை தொடர்வது, அவ்வளவுதான். ம் வாங்க”. முதலில் பிரான்சுவாஸ் அறையைக் கடந்தாக வேண்டும். மிகவும் கடினமான காரியம். அந்த அறையைக் கடந்தபோது, கொலொம்பெலின் கால்கள் நாற்காலியொன்றில் மோதின. சத்தம்கேட்டு பிரான்சுவாஸ் விழித்துக்கொண்டாள். அவள் தலையை உயர்த்தியதும், ஒன்றிரண்டு வார்த்தைகளை வாயில் மென்றதையும் கேட்டார்கள். இருவரும் அசையாமல் நின்றார்கள். எங்கே மகனின் பிணம் ஆற்றில் அடித்துச்செல்கிறபோது  தாய் பார்த்துவிடுவாளோ என்கிற பயம்  இருவருக்கும், அவள் கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டும், அவன் பிணத்தின் பாரத்தில் வருந்திக்கொண்டும் இருந்தார்கள். இருவருக்கும் கொடூரமான தருணம். பிரான்சுவாஸ் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கவேண்டும். கவனத்துடன் இருவரும் மெதுவாக நடைகூடத்தை கடந்தார்கள்.

 

அங்கே அவர்களுக்கு இன்னுமொரு சோதனைக் காத்திருந்தது. பிரபு தம்பதியர் இருவரும் உறங்கச் செல்லவில்லை.அரைகுறையாக திறந்திருந்த கதவினூடே ஒளிக்கீற்று தெரிந்தது. இருவருக்கும் குழப்பம். தொடர்ந்து போவதா அல்லது வந்த வ்ழியே திரும்பிவிடுவதா என யோசித்தார்கள். குள்ளன் கொலொம்பெல் பிணம் தோளிலிருந்து எந்நேரமும் விழுந்துவிடக்கூடும் எனபதுபோல பயமுறுத்துகிறது. இரண்டாவது முறை பிரான்சுவாஸ் அறையைக் கடந்து செல்வதும் அத்தனை சுலபமல்ல. கால்மணிநேரத்திற்குமேல் இருவருமே மேலேசெல்லாமல் அங்கேயே நின்றார்கள். ஜூலியன் அலுத்துப்போகக்குடாதென்பதுபோல அசாதரன தைரியத்துடன் தெரெஸா நடந்துகொண்டாள். இறுதியில் இலேசாகத் திறந்திருந்த கதவில் தெரிந்த விளக்கொளி அணைந்தது. இனி இருவரும் மாடியிலிருந்து  இறங்கி மாளிகையின் கீழ்ப்பகுதிக்குச் செல்லமுடியும். நல்ல வேளை இருவரும் தப்பித்திருந்தார்கள்.

 

இதுநாள்வரை உபயோகத்திலில்லாமல் மூடி¢க்கிடந்த பிரதான கிராதிக்கதவை திறந்தவள் மறுபடியும் தெரெஸாதான். இறங்கினால் காத்ரு- ·பாம் சதுக்கம். நடனத்திற்கென்று பிரத்தியேகமாக அணிந்த கையற்ற வெள்ளை நிற ஸ்கர்ட்டில், நுழைவாயில் படிகட்டில் அவனுக்காக காத்திருந்தாள்.

 

V

 

 

ஜூலியன் ஒரு காளை. பால்ய வயதில் தனது கிராமத்துக்கருகில் இருந்த காட்டில் விறகுவெட்டிகளுக்கு உதவுவது அவனுக்கு பொழுதுபோக்கு, அந்த வயதிலும் முதுகில் மரங்களை சுமந்திருக்கிறான். அவனுக்கு குள்ளன் கொலொமெல் சரீரத்தை சுமப்பதும் இறகை சுமப்பதும் ஒன்றுதான். அவனை பொறுத்தவரை கழுத்தில் பறவையொன்றை சுமப்பது எப்படியோ அப்படித்தான் குள்ளனின்  பிணத்தை சுமப்பதும். அவனொரு சுமையேயில்லை. எடைகுறைந்து, நோஞ்சானாக, பிணமான பிறகும் கேவலமாக இருக்கும் அவனது நிலமையை எண்ணி அநாகரீகமாக சிரித்தான். புல்லாங்குழல் வாசிக்கிற நாட்களில் அவன் வீட்டு சன்னல்பக்கம் இனி வரவும் மாட்டான் சிரிக்கவும் போவதில்லை. நகரத்தில் இருவரும் எதிர்ப்படுகிறபோது ஏளனப்பேச்சால் துளைத்தெடுக்கமாட்டான். இறந்தவனுடன் ஒப்பிட்டுப்பார்க்க இவன் சந்தோஷமான எதிராளி, வளைந்துகொடுக்காதவன், எதற்கும் கலங்காதவன். நினைத்துப்பார்க்க எல்லாம் நல்லபடியாக முடிந்ததென்கிற திருப்தி, பிணத்தை தோளிலிருந்து கழுத்தின் பிடறிக்குக் கொண்டுபோனான். பற்களை நறநறவென்று கடித்தபடி நடையை எட்டிவைத்தான்.

 

நகரம் இருண்டுக்கிடந்தது. இருந்தபோதிலும் காத்ரு-·பாம் சதுக்கத்தில் காவல்துறை அதிகாரி பிடூவின் சன்னலில் வெளிச்சம் தெரிந்தது. சந்தேகமேயில்லை, அவரை அநேகமாக பார்க்க நேரலாம். சன்னல் திரைக்குப்பின்னால் அவரது பெரியவயிற்றின் அசைவு, அதைக் கண்டதும். ஜூலியன் பயந்தான், அதிக ஓசையற்ற தும்மல் ஒலி அவனை உறையச்செய்தபோது எதிர் தரப்பிலிருந்த வீடுகளையொட்டி நழுவிக்கொண்டிருந்தான். ஒரு வீட்டின் கதவருகில் நின்றான். பத்திரம் எழுதும் சவூர்னன் மனைவியை அறிவான். அவள்தான் அங்கு நட்சத்திரங்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி காற்றுவாங்க்கிக்கொண்டிருந்தாள். இப்படி ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுமென நினைத்ததில்ல. வழக்கமாக இந்த நேரத்தில் காத்ரு-·பாம் சதுக்கம் ஆழ்ந்த உறக்கதிலிருக்கும். நல்லவேளை மதாம் சவூர்னன் மீண்டும் கணவனின் கட்டிலைத் தேடி  உறங்கப் போய்விட்டாள், பத்திரம் எழுதுபவரின் குறட்டைச்சத்தம் கப்பி சாலையில் திறந்திருந்த சன்னல் வழியாக கேட்டது. சன்னல் மூடப்பட்டதும் தாமதமின்றி சுறுசுறுப்பாக சதுக்கத்தைக் கடந்தான், கடக்கின்றபொழுது காவல் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற பிடூ வின் ஆர்ப்பாட்டமான, நிலையற்ற குணத்தைப்பற்றி யோசித்துக்கொண்டு நடந்தான். போசொல்ய் வீதியில் இறங்கி நடந்த பொழுது சற்று முன்பிருந்த அச்சமில்லை. அங்கே வீடுகள் மிகவும் நெருக்கமாக இருந்தன. கப்பிபோட்ட சாலை வளைந்தும் நெளிந்தும் செல்லும். நட்சத்திரங்கள்தரும் துலக்கம், இருட்டொழுக்கின் அடர்த்தியை விஞ்சப்போதாது. இனிக்கவலைகளில்லை என்று நினைத்தவுடன், ஓடவேண்டுமென்ற விருப்பம் அவனை ஆட்டிப்படைத்தது, வெறி பிடித்தவன் போல ஓடினான். அப்படி ஓடுவது ஆபத்தானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதுங்கூட என்பதை அவனது மனம் தெளிவாகவே உணர்த்தியது, ஆனாலும் ஓடுவதை அவன் நிறுத்தவில்லை. இவனுக்குப் பின்னே காத்ரு-·பாம் சதுக்கம் இன்னமும் கூட துலக்கமாகவும், சந்தடியின்றி இருப்பதாகவும் உணர்ந்தான். பத்திரம் எழுதுபவர் மற்றும் காவக்துறை அதிகாரியின் சன்னல்கள் உமிழும் ஒளி இரண்டு பெரிய கண்களின் பார்வைபோல இருப்பதையும் அவன் மறக்காமல் நினைத்தான். கப்பிச்சாலையில் இவனது சப்பாத்து எழுப்பிய ஒலியைக் கேட்டு யாரோ தன்னை பின்தொடர்வதாக நினைத்தான். அடுத்த கணம் நின்றான். முப்பது மீட்டர் தொலைவில் ஒரு விதைவைப் பெண்மணி நடத்துகின்ற விடுதியில் ராணுவ அதிகாரிகளின் பேச்சுக்குரல் கேட்கிறது. மாற்றலாகிப்போகும் நண்பர்களுக்காக அநேகமாக மதுபான விருந்து நடந்திருக்கும். இனி அவர்கள் தங்கள் ஜாகைக்குத் திரும்பலாம். அப்படி வருபவர்களை எதிர்கொள்ள நேர்ந்தால் ஆபத்து. அவர்களிடமிருந்து தப்பிக்கலாமென்றால் போ-சொலெய் வீதியை விட்டால் வேற் மார்க்கமில்லை. இனி வந்த வழியே திரும்பலாமென்றாலும் நேரமில்லை. ராணுவ அதிகாரிகளின் சப்பாத்துகள் ஒலியும் அவர்களின் இடையிலுள்ள கத்திகளின் சிணுங்கலும் தெளிவாகக் கேட்கின்றன, பதட்டத்தில் நெஞ்சை அடைத்தது. அச்சத்தம் இவனை நோக்கிவருகிறதா அல்லது விலகிச்செல்கிறதா என்பதைக்கூட அவனால் தீர்மானிக்கமுடியவில்லை. ஓரிரு விநாடிகள் குழப்பத்திலிருந்தான். ஆனால் அவ்வோசை மெல்ல மெல்ல குறைந்துபோனது. சிறிதுநேரம் காத்திருந்தான். பிறகு தொடர்ந்து நடப்பதென்று முடிவுசெய்து வைத்த அடிகள் வலுவாக இருந்தன. சப்பாத்துகளை கழற்றமட்டும் நேரம் இருந்திருந்தால், அநேகமாக வெற்று காலகளுடன் அவன் நடந்திருக்கக்கூடும்.

 

ஒருவழியாக நகரத்தின் நுழைவாயிலை அடைந்திருந்தான். நகர சுங்கச்சாவடியோ அல்லது அதுபோன்ற வேறொன்றோ  அங்கில்லை, எனவே தடங்கலின்றி கடந்து செல்ல முடிந்தது. போ-சொலெய் வீதி முடியுமிடத்தில் நின்று பார்க்க பிரம்மாண்டமாகத் தெரிந்த இயற்கைவெளி அவனை பயமுறுத்தியது. பரந்திருந்த காடு கரம்பைகளும், வயல்வெளிகளும் இரவில் நீல நிறத்திலிருந்தன. இனிமையும் மென்மையும் கலந்த நீல நிறம். குளிர்ச்சியான காற்று உடலைத் தொட்டது. எதிரே மிகப்பெரிய மக்கள் கூட்டம் இருப்பதுபோலவும் அவர்கள் அனைவரும் சேர்ந்து மூச்சை இழுத்து இவனது முகத்திற்கு நேராக விடுவதுபோலவும் இவனுக்குத் தோன்றியது. அவனை எல்லோரும் பார்க்கிறார்கள், ஓவென்று கூச்சல்வரலாம், இவன் உறைந்துபோகலாம். நல்லவேளை பாலம்வந்துவிட்டது. வெள்ளைவேளெரென்ற பாதையும், உயரம் குறைந்த சாம்பல்நிற இரு பக்க தடுப்புச்சுவர்களும் நன்றாகத் த்ரிகின்றன. வளர்ந்த புல்களில் படிகம்போல உருண்டோடும் ஷாந்த்கிளேரின் மெல்லிய இசைகூட காதில் விழுகிறது. கூன்போட்ட நடையுடன் முன்னேறினான். தன்னைச் சுற்றிலும் ஊமைகளாக அநேகர் இருப்பதுபோன்ற உணர்வு, அவர்கள் கண்களிலிருந்து தப்புவது அவசியம் என்பதால் கவனமாக திறந்தவெளிகளைத் தவிர்த்தான். குறிப்பாக பாலத்தைக் கடப்பது மிகவும் முக்கியம். அதை எப்படித் தாண்டிச்செல்வதென்று கலங்கினான். நகரத்தினை பார்வையாளராகக்கொண்ட அரைக்கோள வடிவ நாடகமேடை அது, அதிலேறினால் மிகசுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். இனிய மாலைப்பொழுதுகளின் புத்தம்புதிய வாசங்களை எப்போதும் காலை தொங்கவிட்டபடி நுகர்வதற்கான இடமொன்று பாலத்தின் மறுமுனையிலுண்டு, அங்கே செல்ல விரும்பினான்.

 

ஷாந்த்கிளேர் நதியில் ஆழ்தடமொன்றிருந்தது. கன்னகறேலென்று உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நீர்ப் படுகை. கடுமையான நீர்ச்சுழலால உருவான ஆழ்நீர் சூறாவளி பறித்த குழிவுகள் அவை.  பலமுறை அந்நீர்ப்படுகையில் கல்லெறிந்து நுரைத்து சிதறும் நீரளவைக்கொண்டு ஆழ்தடத்தை அளந்திருக்கிறான். பாலத்தைக் கடந்தபோது கடைசியாக ஒருமுறை செய்யுங்காரியத்தின் மீதான விழைவு மேலோங்கியிருந்தது.

 

ஆமாம் இந்த இடம் தான்! அவன் வழக்கமாக உட்காரும் இடம். அங்கிருந்த பக்கசுவரில்மேலே வைத்து பூசியிருந்த பாளமும் ஜூலியன் அடிக்கடி உட்கார்ந்ததால் ஏற்பட்டிருந்த வழவழப்பும் அதனை உறுதிசெய்தது. குனிந்தான். நீர்ப்படுகையையும் பாய்ந்து செல்லும் சுழல்களையும் கண்டான், சிரிப்பதைபோல இருந்தது. ஆக அவன் நினைத்த இடம். பொதியை பக்கசுவரின் மீது இறக்கி வைத்தான். குள்ளன் கொலொம்பெலை எறிவதற்கு முன்பாக ஒருமுறை அவனை நன்றாகப் பார்க்கவேண்டும்போலவிருந்தது. நகரத்தின் அவ்வளவு பூர்ஷ்வாக்கள் கண்களும் அவன்மீதுதான் படிந்திருக்கின்றன, இருந்தும் அவனுக்கேற்பட்ட மனநிறைவை தடுக்க இயலவில்லை. ஓருசில விநாடிகள் பிணமும் அவனும் எதிரெதிரே இருந்தார்கள். நெற்றிப்பொட்டிலிருந்த ஆழமான காயம் இப்போது கறுத்திருந்தது. தூரத்தில் உறக்கத்திலிருக்கும் கிராமம்புறத்தை எழுப்ப முனைந்ததுபோல வண்டியொன்றின் விம்மியழும் ஒலி.

 

ஜூலியன் வேகமாய் செயல்பட்டான். பெரும் ஓசையுடன் நீரில் பிணம் மூழ்குவதைத் தடுக்க, செத்த உடலை மீண்டும் தூக்கினான். நீரில் எறிந்தபோது சேர்ந்துவிழுந்திருந்தான். அவனுக்கு விளங்கவில்லை, பிணத்தின் கைகள் இறுக்கமாக இவநுடையை கழுத்தைச் சுற்றியிருந்தன, விழும்போது அவனையும் விடாமற் சேர்த்து இழுத்துக்கொண்டு தண்ணீரில் விழுந்திருக்கிறது. அதிசயமாக, நீட்டிக்கொண்டிருந்த ஏதோவொன்றில் சிக்கியிருந்தான். குள்ளனுக்கு அவனையும் தன்னோடு அழைத்து செல்ல விருப்பம்.

 

மீண்டும் தடுப்புச்சுவரில் அமர்ந்தபோது, உடல் மிகவும்  களைத்திருந்தது. அப்படியே இருந்தான், அசையவில்லை.  உடைந்திருந்தான், முதுகுத் தண்டு வளைந்திருந்தது, நடைபயணத்தின் முடிவில் வழக்கமாக அவனது கால்கள சோர்ந்துவிடுவதைபோல மாறியிருந்தன. உறங்கும் நீர்படுகையைப் பார்த்தான். அங்கே நீர்க்குழிவுகள் திரும்பவும் சிரிந்தன. ஒன்று மட்டும் உறுதி குள்ளன் அவனை தன்னோடு அழைத்துச்செல்ல விரும்பினான். கழுத்தை அவன் இறுக்கியதுபோது உயிர் இவனிடத்திலில்லை. நல்லவேளை தப்பித்தான்..  வயல்வெளிகளின் புத்தம் புதிய நறுமணத்தை கணிசமாக உள்வாங்கினான். மரங்களின் வெல்வெட்டுபோன்ற நிழல்களுக்கிடையில் வெள்ளிபோல பிரதிபலிக்கிற நதியின் கண்கள் மீது கவனம் சென்றது. இலைமறைகாயாக சந்தோஷத்தை ஒளிந்திருக்கும் இயற்கையின் இப்பகுதி அமைதிக்கு உத்தரவாதம் தருமிடம், நிரந்தரமான தாலாட்டுங்கூட.

 

தெரெஸாவின் நினைப்பு வந்தது. அவள் நிச்சயம் காத்திருந்திருப்பாள், உறுதியாகச் சொல்லமுடியும். மரப்பகுதியை பூஞ்சைக்காளான்கள் தின்கிற நுழைவாயிற் கதவின் படிகளின் உயரத்தில் இந்த நேரத்திலும் நிற்பதைபோல காண்கிறான்.  இதயப்பகுதியில் சிவப்புப் புள்ளிகளைக்கொண்ட பூக்கள் அச்சிட்ட வெள்ளை நிற ஸ்கர்ட்டில் நேராக நிற்பாள். அநேகமாக அவள் குளிர்தாங்கமாட்டாள், அதனால் அவளுடைய அறைக்குத் திரும்பி அங்கே கூட காத்திருக்கலாம். கதவைத் திறந்துவைத்து, புது மணப்பெண் முதலிரவுக்கு காத்திருப்பதைப்போல கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடும்.

 

நினைக்கும்போதே எவ்வளவு மகிழ்ச்சி! அதுபோல காத்திருந்த பெண்ணை அவன் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததில்லை. இன்னும் ஒரு நிமிட நேரம், சொன்னதைப்போல நேரத்திற்கு அவளிடமிருப்பான். ஆனால் அவனுடைய கால்கள்தான் கனப்பதுபோலிருக்கின்றன. உறங்கிவிடுவோமோ என அஞ்சினான் அல்லது அவனிடம் இன்னமும் கோழைத்தனமா? விடுபட நினைத்து, குளியலறையில் ஆடை களையும் தெரெஸாவைக் கற்பனை செய்தான். அவள் கைகள் உயர்ந்திருந்தன, விறைத்திருந்த மார்பு, பலவீனமான தோள்களும் மெல்லிய கைகளும் காற்றில் நிதானமாக அசைகின்றன.  அவளுடைய நினைவுகள், அவள் உடலில் வீசிய மணம், அவளுடைய மென்மையான உடல், தனக்கு போதையை அளித்த பயங்கரமான அக்கட்டில் எனை அனைத்தையும் சாட்டைகொண்டு விரட்டினான்.  அவனுக்கு வாய்த்த அவ்வளவு சுகங்களையும் வேண்டாமென்று சொல்லபோகின்றானா? முடியுமா? முடியாதென்றுதான் தோன்றியது. கால்களுக்குப் பலமில்லையென்றால், தவழ்ந்தாவது அவளிடம் போவதென்று முடிவெடுத்தான்.

 

ஆனால் தோல்விகண்ட யுத்தம், யுத்தத்தில் அவனுடைய காதல் தோற்றுவிட்டது. அவனுக்குள்ள தவிர்க்கமுடியாத தேவை உறங்குவது அதாவது நிரந்தரமாக. தெரெஸா என்ற ஓவியம் சோபை இழந்துவிட்டது. மிகப்பெரிய சுவரொன்று எழுந்து அவனிடமிருந்து அவளைப் பிரித்தது. இப்பொழுது அவளுடைய தோளை விரல்கள் தீண்ட அவன் இறந்தால்தான் சாத்தியம். அவனுடைய விருப்பம் பிணமொன்றின் வாசத்தில் மரித்துப்போனது. அவன் அவளுடைய அறைக்குள் பிரவேசித்து சரீரமோடு சரீரமாய் சேர்த்துக்கொண்டிருந்தால், கூரை அவர்கள் தலையில் இடிந்து விழுந்திருக்கும். இனி காணவும் சந்தோஷம் கொள்ளவும் எதுவுமில்லையென்றான பிறகு உறக்கம், நிரந்தரமான உறக்கம், அதுதான் வேண்டும். மறுநாள் அஞ்சலகம் போகும் எண்ணமில்லை, போய் என்ன ஆகப்போகிறது? புல்லாங்கழலையும் இனித் தொடப்போவதில்லை, சன்னல் அருகில் உட்காரும் தேவையும் இனியில்லை. ஆக நிரந்தரமாக உறங்கினால்தான் என்ன? அவனுடைய இருப்பு முடிந்துபோனது, அவன் படுக்க விரும்பினான். மறுபடியும் ஓடும் நதியைப் பார்த்தான், அப்படி பார்க்கிறபொழுது, குள்ளன் பிணம் இன்னமும் போட்டவிடத்தில் கிடக்கிறதா என்றும் தேடினான்.

 

கொலொம்பெல் புத்திசாலியான பையன்: அவன் இவனை உடன் அழைத்து செல்ல விரும்பியபோது, தான் என்ன செய்கிறோமென்பதை அவன் அறிந்திருக்கவேண்டும்.

 

நீர்ப்படுகையின் பரப்பு கூடியிருந்தது, பெரும் நீர்ச்சுழிகள் அவற்றில் சல்லடைக்கணகளைப்போல நீர்குழிவுகளை ஏற்படுத்தியிருந்தன. இயற்கைவெளியில் இருள்கவ்வியிருக்க அங்கே எதேச்சதிகாரமான அமைதி வீ£ற்றிருந்தது. ஜூலியன் மூன்றுமுறை தெரெஸாவின் பெயரை உச்சரித்தான். பொதிபோல உருண்டு, நுரைகளுடன் தண்ணீர் சிதறியடிக்க நீரில் விழுந்தான். ஷாந்த்கிளேர் ஆறு பச்சிலை, பூண்டினங்களிடையே தனது பாடலை மீண்டும் தொடர்ந்தது.

 

இரண்டு உடல்களையும் பார்த்தவர்கள். இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருக்க வேண்டுமென நம்பினார்கள். கதையொன்றையும் ஜோடித்திருந்தார்கள். தன்னை கேலிசெய்திருந்த கொலொம்பெலைக்கொல்ல ஜூலியன் சரியான தருணத்திற்குக் காத்திருந்திருந்தானென்றும், அதன் படி ஒருநாள்  அவனைக் கல்லால் அடித்துக்கொன்ற பிறகு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டானென்றும் அக்கதை பேசியது.

 

மூன்று மாதங்கள் கழிந்தன. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த மத்மசல் தெரெஸா வெத்தெய் பகுதியைச்சேர்ந்த கோமான் ஒருவனை மனந்தாள். திருமணத்தின்போது தூய வெள்ளை ஆடையை அணிந்திருந்தாள், முகத்தில் அழகும் அமைதியும்  உயர்குடி பெண்ணுக்குரிய தூய்மையும் குடிகொண்டிருந்தது.

 

 

Series Navigationபீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *