என்னைக் கைது செய்யப் போகிறார்கள்

This entry is part 30 of 46 in the series 26 ஜூன் 2011

தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்?

என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து குப்பைக் கூடையாய்ப் பயன்படுத்தலாம். அல்லது உள்ளே மண் நிறைத்து செடிகள் நடலாம். விசைப் பலகையைக் கவிழ்த்தால் சமையலறையில் பாத்திரங்களை வைக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன்படுத்தலாம். போனால் போகிறதென்று மௌஸை மட்டும் சிறு குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம். இன்னும் கணினிகளை வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஏதாவதொரு முடிவை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். நாளை உங்களைக் கைது செய்த பிறகு அவை நிச்சயம் பயன்படும்.

இவ்வளவு காலமும் கணினியில் தட்டச்சு செய்து, அதனை ஏ4 தாளொன்றில் பிரதி எடுத்துத் தர, ஐம்பது ரூபாய்களை வாங்கிய கடைக்காரர்கள் இனிமேல் இருநூற்றைம்பது ரூபாய்களுக்கும் மேலே அறவிடப் போகிறார்கள். அதுபோல, ஒரு குறுந்தகடைப் பிரதி எடுத்துத் தருவதற்கு ஐநூறு ரூபாய்களுக்கும் மேலே. அது ஒரு பக்கம் இருக்க, கணினியறிவின் ஆரம்பக் கல்வியை (மௌஸைக் கையாள்வது எப்படி எனக் கற்க) மட்டும், ஒரு மாணவருக்கு ஒரு நாள் கட்டணம் ஐயாயிரம் ரூபாய்களுக்கும் மேலே.

இலங்கையினுள் கணினிகளில் மிக அதிகளவில் பாவிக்கப்படுவது விண்டோஸ் மென்பொருள்தான். இம் மென்பொருளை, கணினி மென்பொருட்களை விற்பதற்காகவே இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் மென்பொருள் விற்பனை நிலையங்களில் மாத்திரமே இனி வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 மென்பொருளானது இலங்கையினுள் விற்கப்படும் விலை 226 அமெரிக்க டொலர்கள். அதாவது கிட்டத்தட்ட 24758/= இலங்கை ரூபாய்கள். அதன் உண்மையான விலை இது இல்லை. இதற்கு இன்னும் 12% வெட் வரியையும் சேர்க்க வேண்டும். இவ் வரிகளையெல்லாம் சேர்த்த பிற்பாடு விண்டோஸ் மென்பொருளின் உண்மையான விலை கிட்டத்தட்ட 28000/= இலங்கை ரூபாய்கள். இலங்கையில் புகைப்படங்களை மெருகேற்றவென அதிகம் பயன்படுத்தப்படும் அடோப் போட்டோஷொப் உள்ளடங்கிய அடோப் க்ரியேட்டிவ் சூட் மென்பொருளின் விலையானது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் இலங்கை ரூபாய்கள். இலங்கையில் பரந்தளவில் பாவிக்கப்படும் இன்னுமொரு மென்பொருளான ஒடோகேட்டின் விலை 3995 அமெரிக்க டொலர்கள். இலங்கை ரூபாய்களில் சொல்வதாயின் கிட்டத்தட்ட நான்கு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்கள்.

என்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று தலைசுற்றுகிறதா உங்களுக்கு? விடயத்துக்கு வருகிறேன். இலங்கை அரசாங்கமானது, ஒரு சட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சட்டவிரோத மென்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகப் புலமைச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பாவனையிலிருக்கும் கணினிகளில், மென்பொருட்களின் சட்ட ரீதியான பிரதிகளைப் பயன்படுத்தாமல் எவரேனும் போலிப் பிரதிகளைப் பயன்படுத்தினால், அவரைக் கைது செய்து ஐந்து லட்ச ரூபாய்களைத் தண்டப்பணமாக அறவிடவோ அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்குள்ளாக்கவோ அரசு திட்டமிட்டிருக்கிறது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கூட ஒரு கணினியை வாங்கிவிட முடியுமாக இருப்பதால் அனேகமான மத்திய தர வீடுகளில் கூட ஒரு கணினி இருக்கிறது. ஒரு பாடசாலையில் சொற்ப கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா மாணவர்களுக்கும், அதன் பிரயோகக் கல்வியை பூரணமாகக் கொடுப்பது சாத்தியமற்றது. எனவே கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், எப் பாடுபட்டாவது தம் பிள்ளைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். கணினிக்குத் தேவையான புதிய புதிய மென்பொருள்களையும் அவர்களால் குறைந்த செலவில் இலகுவாக வாங்க முடிந்ததால், இன்று இலங்கையில் பாடசாலை செல்லும் ஒரு மாணவருக்குக் கூட அனேக மென்பொருட்களை வீட்டிலிருந்தே இலகுவாகக் கற்றுக் கொள்ளவும் கையாளவும் முடிந்திருக்கிறது. மென்பொருட்களை எல்லாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இது நாடு முழுவதும் தொடர்வதால்தான் இலங்கையானது, தகவல் தொடர்பாடலில் உச்ச வளர்ச்சி நோக்கிச் சென்றிருக்கிறது.

இன்று இலங்கையிலிருக்கும் பொருளாதாரச் சிக்கலில், அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கையில், சட்டரீதியான மென்பொருட்களை மட்டுமே எல்லோருக்கும் பயன்படுத்தச் சொன்னால், அவற்றை வாங்க இலட்சக்கணக்கான பணத்துக்கு எங்கு செல்வது? நாட்டு மக்கள் எல்லோருமே லட்சாதிபதிகளா என்ன? இதனால், கணினியும் மென்பொருட்களும் இனிமேல் மாணவர்களுக்கு நிறைவேறாக் கனவுகளாகவே ஆகிவிடும் அல்லவா? இனி எப்படி இலங்கையில் தகவல் தொடர்பாடல் அதன் வளர்ச்சியைத் தொடரும்?

சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த நேருவதன் இன்னுமொரு விளைவு, இலங்கையிலுள்ள அனைத்துப் பொருட்களினதும் சேவைகளினதும் விலை உயர்வது. கணினி வகுப்பொன்றுக்கு தனது பிள்ளையை அனுப்பும் பெற்றோருக்கு, பாடக் கட்டணமானது, அவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர சாத்தியமிருக்கிறது. ஏனெனில் வகுப்பில் பயன்படுத்தப்படும் தமது கணினிகளுக்கான மென்பொருட்களை வாங்குவதற்காக செலவளித்த இலட்சக்கணக்கான பணத்தை, அவ் வகுப்புக்களின் உரிமையாளர்கள் மாணவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளத் தீர்மானிப்பர். இன்னும், கணினி பாவனையிலிருக்கும் எல்லா இடங்களிலும், வாடிக்கையாளர்களிடமிருந்தே அச் செலவைச் சமாளிக்கத் தேவையான பணம் ஏதோ ஒரு விதத்தில் அறவிடப்படும்.

இதன் அடுத்த விளைவானது பலர் தமது வேலை வாய்ப்புக்களை இழப்பது. சிறிய நிறுவனங்கள் கூட கணினிகளை அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் தட்டச்சுப் பொறிகளுக்கும், கையால் எழுதுவதற்கும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. இணைய விடுதிகள் எல்லாம் மூடப்பட வேண்டி வரும். கணினி பாவனையிலிருக்கும்போதே அரச அலுவலகங்களில் ஏதேனும் காரியம் நிகழ வேண்டுமானால், கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் கணினியும் இல்லையானால், பொதுமக்களின் கதி அதோகதிதான். நேர விரயத்துடன், இலங்கை மக்கள் நவீன யுகத்திலிருந்து பின்னோக்கிச் செலுத்தப்படுவர் என்பது நிதர்சனம்.

உண்மையில் இம் மென்பொருட்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், வறுமை நிலையிலுள்ள நாடுகளில் அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் அம் மென்பொருட்களைத் தயாரிப்பதில்லை. அந் நிறுவனங்கள் தமது நாடுகளுக்குள்ளும், இன்னும் ஏனைய செல்வந்த நாடுகளிலும் அவற்றை விற்று உடனடியாக இலாபம் சம்பாதித்து விடுகின்றன. இலங்கை அரசாங்கமானது, இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பாவனைக்குக் கொண்டு வர முன்வந்ததன் முக்கிய நோக்கம், அந் நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதல்ல. சட்டரீதியான மென்பொருட்களை விற்கும் அரசுக்கு வேண்டியவர்களுக்கு, இலங்கைக்குள் ஒரு விற்பனைச் சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் அதன் அடிப்படைத் திட்டம். இதனால் பாதிக்கப்படும் பொது மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் அரசு சிந்திக்கவேயில்லை.

அத்தோடு அரசாங்கமானது, போலி மென்பொருட்களைக் கைப்பற்றும் பொறுப்பை காவல்துறையிடம் ஒப்படைப்பதால் என்ன நடக்கும்? காவல்துறையானது, இம் மென்பொருட்களை வைத்திருப்பவர்களை மிரட்டுவதாலும், அச்சுருத்துவதாலும் தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்ளும் சாத்தியம்தான் அதிகரிக்கும். இதனால் இச் சட்டமானது, அதிகாரத்திலிருக்கும் எவரெவருக்கோ, எவற்றுக்கெல்லாமோ பயன்படுவதன்றி, பொதுமக்களுக்கு சிறிதளவும் பயனளிக்காது.

உலக நாடுகளில் நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்களையும் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த விரும்புவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப் போகும் பாதிப்புக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும்தான். ஆனால், அதற்குச் சமமான மாற்றுப் பரிகாரத்தை ஏற்படுத்தி விட்டு, போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும். அரசாங்கமானது எதற்கெல்லாமோ கலந்தாலோசிக்கிறது, அறிக்கைகளை விடுகிறது. இத் தடை மூலம் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய பாதிப்புக்களுக்கெதிராக அரசாங்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது எனப் பார்த்தால் எதுவுமேயில்லை. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் இத் தடையைக் கொண்டு வரச் சொல்லிக் கோரியிருந்தால் கூட, அந் நிறுவனங்களிடம் இதனால் இலங்கையில் ஏற்படப் போகும் சிக்கல்கள் குறித்து எடுத்துச் சொல்ல அதிகாரத் தரப்பில் எவருமில்லை.

இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருளை மட்டுமே பயன்படுத்தக் கோரும் இச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் கருத்தைப் பார்ப்போம். எமது நாட்டுக்குள் தயாரிக்கப்படும் மென்பொருட்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கும், அவற்றுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இச் சட்டமானது பெரிதும் உதவக் கூடுமென இவர்கள் எண்ணுகிறார்கள். எனினும் இம் மென்பொருள் தயாரிப்பைக் கற்றுக் கொள்வதற்கும் இவர்களுக்கு விலை குறைந்த போலி மென்பொருள்கள்தானே தேவைப்படுகிறது. எனின், ‘எவ்வளவு சுயநலமான சிந்தனை இது?’ எனச் சொல்லலாம்தானே.

அண்மையில், இலங்கையில் தகவல்தொடர்பாடலானது 30% சதவீத வளர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதென சமீபத்திய கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன. அதன் பிரகாரம், இவ் வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்கது. இந் நாடானது இந்தளவு வளர்ச்சியை இக் குறுகிய காலத்துக்குள் பெற்றுக் கொள்ள முடிந்ததன் முக்கிய காரணமானது, கணினிகளுக்கு அவசியமான மென்பொருட்களையெல்லாம் ஐம்பது ரூபாய்களுக்குக் கூட இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமைதான். ‘எமது நாட்டை தகவல் தொடர்பாடல்களின் மையமாக்குவோம்’ என ஒருபுறம் சூளுரைத்துவிட்டு, மறுபுறம் மென்பொருட்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் நடைமுறையைத் தடுக்க அரசு முன்வருவதன் மூலம், இத் தகவல் தொடர்பாடல் வளர்ச்சியானது எமது கண் முன்னாலேயே வீழ்ந்தழிந்து போவதுதான் நடக்கும். அத்தோடு தகவல் தொடர்பாடலும், கணினிப் பாவனையும் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயென மட்டுப்படுத்தப்படும்.

இச் சட்டத்தின் பிரகாரம், இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும், வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட அரசின் பார்வையில் குற்றவாளிகள்தான். எனவே நாளை நாமும் கைது செய்யப்படலாம். நம் கணினிகள், நமது வீடுகளின் கண்டுகொள்ளப்படாத மூலைகளில் கிடத்தப்படலாம். பூந் தொட்டிகளாகவோ, சமையலறைப் பாவனைப் பொருட்களாவோ பயன்படுத்தப்படலாம். அன்றேல் ‘ஒரு காலத்தில் எனது வீட்டிலும் கணினி இருந்தது’ என விருந்தினருக்கும் வருங்கால சந்ததிக்கும் காட்டுவதற்காக, பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigationஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்கவிஞனின் மனைவி
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *