அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

This entry is part 14 of 38 in the series 10 ஜூலை 2011

(பெயர்கள் அனைத்தும் உண்மையல்ல.)
ஒரு மலைப்பாம்பு சுற்றிக்கொண்டு இறுக்குவதுபோல் உணர்ந்தார் தர்மலிங்கம். பாதித் தூக்கத்தில் எழுந்தமர்ந்தார். நிமிடத்துக்கு அறுபது மூச்சுக்கள் இழுத்தார். கால்கள் உடம்புக்குச் சம்பந்த மில்லாததுபோல் தொங்கிக் கொண்டிருந்தது. கால் விரல்களின் இடைவெளியை வீக்கம் மூடியிருந்தது. தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி கோமளாவை எழுப்ப நினைக்கிறார். வார்த்தைகள் வரவில்லை. ஆனாலும் அத்தனையும் கோமளாவின் கனவில் ஓடிக் கொண்டிருக்கிறது. கோமளாவின் மணிக்கட்டை இறுகப் பற்றினார். கோமளா விழித்தபோது பயக் கோடுகள் முகமெங்கும் பரவி யிருந்தது. கனவில் கண்டது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது. கோமளா எழுந்தபோது கால்கள் நிற்க முடியாமல் நடுங்கின. ஏதாவது செய்தாக வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மகள் ஆண்டாள் கணவர் ஆதித்யாவுடன் வந்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் தஞ்சாவூர் ஏபி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் சங்கூதிக் கொண்டு வந்து நின்றது. தெருவே விழித்துக் கொண்டது. மக்கள் வெளியே நின்றனர். அடுத்த சில நிமிடங்களில் தர்மா என்கிற தர்மலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில். முழங்கை நரம்பில் ரத்தம் எடுக்கப்பட்டது. பின் சலைன் ஏற்றப்பட்டது. ஆக்ஸிஜன் உருளை மூச்சுவிட உதவி செய்தது. அடிவயிற்றில் தேங்கிய சிறுநீர் செயற்கையாக அகற்றப்பட்டது. ஆடிக்கொண்டிருந்த தராசு அமைதி நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
அந்த ஈச்சங்கோட்டை மக்கள் கொத்துக் கொத்தாக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார்கள். எல்லாரும் கண்ணீர் சிந்தினார்கள். எல்லாரிடமும் கோமளாவும் ஆண்டாளும் அழுதார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் கோமளா கூட அனுமதிக்கப்படவில்லை. பாக்டீரியாப் பிரச்சினையாம். ஆதித்யா தலைமை மருத்துவருக்காகக் காத்திருந்தார். நான்கு மணி நேரம் கழித்துத்

2
தலைமை மருத்துவர் வந்தார். கோமளா ஆண்டாள் ஆதித்யா மூவரும் அவர் அறைக்குச் சென்றார்கள். மருத்துவர் சொன்னார்.
‘சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை. உடனடியாக மாற்றவேண்டும். டயாலிஸிஸ் உடம்பு தாங்காது. ஏற்கனவே இருதயத்தில் இரண்டு அடைப்புக்கள் இருக்கின்றன. மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் தர்மாவுக்குப் பொருந்தக் கூடிய சிறுநீரகம் தயாராக இருக்கிறது. உடனே வாங்கிவிடலாம். உங்களின் அனுமதி தேவை. மொத்தச் செலவு நான்கு லட்சம் ஆகலாம்.
உடனே சொன்னார் ஆதித்யா.
‘சம்மதம். உடனே செய்யுங்கள்.’
இரவு 9 மணி. கோமளா மட்டும் தர்மா அருகில். ஆண்டாள் வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார். கையில் சிறு பை இருந்தது. தர்மாவின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். கோமளாவும் ஆண்டாளும் மீண்டும் ஒரு முறை கட்டிப்பிடித்துத் தேற்றிக் கொண்டார்கள். அந்தப் பையைக் கோமளாவிடம் கொடுத்தார் ஆண்டாள்.
கோமளா திறந்தார். தர்மா ஆண்டாளுக்காக சிங்கப்பூர்க்காரரிடம் வாங்கிய 50 பவுன் ஐந்தடுக்குச் சங்கிலி அது. ஆண்டாள் திருமணத்தின்போது இந்தச் சங்கிலியை ஒரு கண்காட்சி பார்ப்பதுபோல் பார்த்தார்கள். அந்தச் சங்கிலிதான் இங்கே பையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டாள் சொன்னார்.
‘4 லட்சம் உடனே நம்மால் சேர்க்க முடியாது. இதை விற்றுவிடுங்களம்மா. உடமைகள் உயிர் காக்கத்தானே. ஆதித்யாவிடம் சொல்லிவிட்டேன்.’
‘இதை விற்கவேண்டாமம்மா. வேண்டுமானால் அடமானம் வைப்போம். பிறகு திருப்பிவிடலாம்.’
‘சரியம்மா.’
ஆண்டாள் விடை பெற்றார்.

3
இன்னும் இரண்டு நாட்களில் சிறுநீரகம் வந்துவிடும். அறுவை சிகிச்சைக்கு ஆயத்தங்கள் நடக்கின்றன. இரண்டு நாட்களும் கழிந்தன. காலை 9 மணி. ஆண்டாளும் ஆதித்யாவும் வந்தார்கள். கோமளா சொன்னார்.
‘மகளே இதில் 3 லட்சம் இருக்கிறது. இதை ஆதித்யாவிடம் கொடுத்து செலவுகளைப் பார்த்துக் கொள்ளச் சொல். நகையை அடகு வைத்துவிட்டேன். அடகுச் சீட்டு அலமாரியில் அந்த மஞ்சள் டப்பாவில் இருக்கிறது. ‘
‘ஏனம்மா இதெல்லாம் சொல்கிறீர்கள்?’
‘சொல்ல வேண்டியதில்லை. சொன்னாலும் தப்பில்லை.’
தர்மாவைப் பற்றிச் சில தகவல்கள் நாம் தெரிந்தாக வேண்டும். தர்மா துணிக்கடை தஞ்சாவூரில் மிகப் பிரபலம். திருபுவனம் பட்டுக்கு அவர்தான் முக்கியமான முகவர்.அந்தக் கடை நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லி இடிக்க வேண்டும் என்று ஆணை வந்தது. தர்மாவுக்கு ஏற்கனவே இருதய நோய். வயது 70. தொடர்ந்து வியாபாரம் செய்ய விரும்பவில்லை. மொத்தத்தையும் கைமாற்றிவிட்டதில் ஒரு பெரும் தொகை கிடைத்தது. தர்மா காலனி உருவானது. எச்செலவும் போக நாற்பதாயிரம் கிடைக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தர்மாவும் கோமளாவும் முதுகு சொரியும் கைகளாக ஒருவருக்கொருவர் துணையாக அந்த ஈச்சங்கோட்டையில் இருக்கிறார்கள். ஈச்சங்கோட்டை தஞ்சாவூரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம்தான். ஊரிலுள்ளவர்கள் அவசரத்திற்கு தர்மாவிடம்தான் வந்து நிற்பார்கள். யாருக்கும் அவர் இல்லையென்று சொன்னதில்லை. கொடுப்பதை வெளியே சொல்வதுமில்லை. பத்தாயிரம் அவர்கள் செலவு. மீதி எப்படிச் செலவாகிறது என்று அவர்கள் கணக்குப் பார்த்ததுமில்லை.
இப்போது கோமளா சொன்னார்.
‘காலனியில் கிடைக்கும் பணத்தில் இந்த நகை போல் இன்னொன்று கூட வாங்கிவிடலாமம்மா.’
அறுவை சிகிச்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது சிகிச்சைக் கூடம். காலை 10 மணிக்கு மருத்துவர்கள் நுழைந்தார்கள். மாலை 3
4
மணிவரஅறுவைசிகிச்சை நடந்தது. அடுத்த அறைக்கு தர்மா மாற்றப்பட்டார். மருத்துவர் சொன்னார்.
‘அபாயக் கட்டம் தாண்டவில்லை. இரவு பத்துமணி வரை பொறுக்கவேண்டுமம்மா. நீங்களும் ஆண்டாளும் இருங்கள். மற்ற அனைவரையும் போகச் சொல்லுங்கள்.’
அவர் சொன்ன கணக்குக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. பழைய தர்மாவாக வீடு திரும்ப வேண்டுமென்று ஊரே பிரார்த்தித்தது. மணி பத்தைத் தாண்டியது. ரத்தக் குழாய் நுரை தள்ளியது. ஆக்ஸிஜன் உருளை அதிர்ந்தது. விழிகளின் விளிம்பில் கண்ணீர்த் துளி நகர்ந்து நின்று போயிருந்தது. கோமளாவின் குங்குமப் பொட்டு கரைந்து வழிந்து கொண்டிருந்தது. தர்மா முடிந்துவிட்டார்.
ஈச்சஙகோட்டையில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. தர்மலிங்கம் என்கிற தர்மாவை வழியனுப்பிவைத்தது ஈச்சங்கோட்டை. எல்லாரும் சென்றபின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் வீட்டில். இரவு மணி 11. ஆண்டாளும் ஆதித்யாவும் கூடத் தூங்கிவிட்டார்கள். கோமளா தனியாக அவர் அறையில். எல்லாம் முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தர்மாவும் கோமளாவும் எப்படி வாழ்ந்தார்கள். இதோ நினைத்துப் பார்க்கிறார் கோமளா. என்ன அழகான வாழ்க்கை. காலையில் சேர்ந்து நடப்பார்கள். சேர்ந்து தேநீர் அருந்துவார்கள். அன்று என்ன சாப்பிட்டால் நன்றாக இருக்குமென்று யோசித்து சமைப்பார்கள். மதிய உணவுக்குப் பின் வெற்றிலை இடித்துக் கொடுப்பார் கோமளா. அதை இரண்டு பேரும் மெல்வார்கள். தர்மா சொல்வார். ‘இறந்ததற்குப் பின் சொர்க்கம் என்பது பொய் கோமளா. நான் இறந்தபின் நீ இங்குதானே இருப்பாய். நீ இல்லாமல் எனக்கெப்படி சொர்க்கம்.’ கோமளா தர்மாவின் வாயை மூடுவார். ‘அப்படியெல்லாம் பேசாதீர்கள்.’ செல்லமாக அதட்டுவார். பல சமயம் குழுவாக சுற்றுலா செல்வார்கள். அவர்கள் பிரிந்திருந்த வினாடிகள் கழிவறையில் இருந்த வினாடிகள் மட்டுமே. எல்லாம் முடிந்து தூங்கப் போகுமுன் தான் மிகவும் நேசிக்கும் பழைய பாடல்களை இசைக்கவிடுவார். கேட்டுக் கொண்டே உறங்கிப் போவார். இசைத்தட்டு வெகுநேரம் கழித்து தானாகவே நின்றுபோகும். எல்லாக் காட்சிகளுமே கோமளாவுக்கு நினைவு வந்தது. அவர் விரும்பிப் படுக்கும் அந்த இலவம் பஞ்சுத் தலையணை
5
அழுதது. எடுத்து அணைத்துக் கொண்டார். இரவு மணி 3. தூங்கவே இல்லை. தாகமாக இருந்தது. வெளியே வந்தார். இரவு விளக்கில் அந்த வீடு மங்கலாக அழுது கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் அந்த வெற்றிலைக் கூடை பாலைவனத்தில் தப்பித் தவறி முளைத்துவிட்ட ஒரு முட்செடிபோல் பரிதாபமாகப் பார்த்தது. அதைத் திறந்து பார்த்தார். இன்னும் ஒன்றிரண்டு வாடாமல் இருந்தது. மீண்டும் வந்து படுத்தார். தர்மா கடைசியாக என்ன பாடல் கேட்டிருப்பார்? அந்த இசைத்தட்டு எடுக்கப்படாமல் இருந்தது. இசைக்கவிட்டார்.
‘பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாறவேண்டும்
பசியாற வேண்டும்’
நெற்றி மையத்திலிருந்து ஒரு சிலிர்ப்பு உடம்பெங்கும் பரவியது. அப்போது ‘கோமளா’ என்றழைப்பதுபோல் தர்மாவின் குரல் முற்றத்திலிருந்து கேட்டது. எழுந்து ஓடினார் கோமளா. அப்படி ஒரு ஒலியை யாருமே கேட்கவில்லை. ஆனால் கோமளா கேட்டது உண்மை. மீண்டும் வந்து படுத்தார். இசைத்தட்டை மீண்டும் இசைக்க விட்டார்.
‘அடித்தாலும் உதைத்தாலும் நானுந்தன் பிள்ளை.
நானுந்தன் பிள்ளை. அம்மாவென்றே அழைக்க நீயின்றி இல்லை
நீயின்றி இல்லை.’
மீண்டும் தர்மாவின் குரல். ‘கோமளா’
இதோ வந்துவிட்டேன் என்று கோமளா சொல்கிறார். ஆனால் உதடுகள் அசையவில்லை. எழுந்து நடப்பதுபோல் இருக்கிறது. அவர் எழுந்திருக்கவே இல்லை. இசைத்தட்டை நிறுத்துவதுபோல் இருக்கிறது. அவர் நிறுத்தவே இல்லை. விடிந்தால் மூன்றாம் நாள். யாருமே எதிர்பார்க்கவில்லை. அது கோமளாவின் கடைசி நாளென்று.

மூன்று நாட்களுக்குள் இன்னொரு ஜன சமுத்திரத்தை ஈச்சங்கோட்டை சந்தித்தது. எல்லாரும் பேசிக் கொண்டார்கள். ‘வாழ்ந்தால் இப்படியல்லவா வாழ வேண்டும்.’

6
கோமளா கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தார். ஒரு முக்கியமான மனிதர் வெகுவேகமாக வந்தார். அவர்தான் ஈச்சங்கோட்டை விக்னேஸ்வரி கோயிலின் தர்மகர்த்தா. ‘நான் ஆதித்யாவை உடனே பார்க்கவேண்டு’ மென்று உறவினர்களிடம் சொன்னார். ஆதித்யா வந்தார். இருவரும் ஒரு தனி அறைக்குப் போனார்கள். தர்மகர்த்தா சொன்னார்.
‘ஆதித்யா! கோயில் உண்டியலில் இந்தச் சங்கிலி கிடந்தது. அதில் ‘ஆண்டாள்’ என்று எழுதியிருக்கிறது. 50 பவுன். நிச்சயமாக இது உங்களுடையதுதான். நீங்கள் விரும்பித் தந்ததா அல்லது வேறு வழியில் வந்ததா என்று தெரியவில்லை. இன்னும் இதைக் கோயில் கணக்கில் சேர்க்கவில்லை. இந்த ஊருக்காக தர்மா எவ்வளவோ செய்திருக்கிறார். உங்களின் பதிலுக்குப் பிறகுதான் இதைக் கணக்கில் சேர்க்க வேண்டும்.’
ஆதித்யா வாங்கிப் பார்த்தார். நிச்சயமாக இது ஆண்டாளுடையதுதான். ஆண்டாளிடம் வந்தார். ஆண்டாள் சொன்னார். ‘இது எப்படி சாத்தியம். அம்மா அடகு வைத்ததாகச் சொல்லி அடகுச் சீட்டைக்கூட…. கொஞ்சம் இருங்கள்.’
ஆண்டாள் வேகமாக உள்ளே சென்றார். அந்த அலமாரியைத் திறந்தார். அந்த மஞ்சள் டப்பா. அதைத் திறந்தார். அதில் ஒரு சீட்டு இருந்தது.

‘மகளே! எங்களுக்குப் பிறகு உனக்குத் துணையாக இந்த விக்னேஷ்வரி அம்மன் இருப்பாளம்மா. காணிக்கையாக இந்தச் சங்கிலியை அவளிடம்
சேர்த்துவிட்டேன். நம் காலனி உனக்குத்தான். ஆனாலும் உனக்குத் தந்த சீதனத்தை உன்னைக் கேட்காமல் கொடுத்ததற்கு பிழை பொறு தாயே!’

கடிதத்தை கண்ணீரில் ஊறவிட்டார் ஆண்டாள்.
ஆதித்யா தர்மகர்த்தாவிடம் சொன்னார். ‘நாங்கள் விரும்பித் தந்ததுதான். கோயில் கணக்கில் எழுதிவிடுங்கள்.’

இரண்டு மாதங்களுக்குப் பிறகு. விக்னேஸ்வரி அம்மனுக்கு பூச்சொறிதல் விழா.சிறப்பு வழிபாட்டுக்கு ஆண்டாளும் ஆதித்யாவும் அழைக்கப்பட்டார்கள். ஆண்டாளின் சங்கிலி விக்னேஸ்வரியின் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அங்கே அன்னை தெரிந்தார் பிதா தெரிந்தார் பிறகுதான் விக்னேஸ்வரி அம்மன் தெரிந்தார் ஆண்டாளுக்கு. ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.’

Series Navigationபிரியாவிடை:மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

  1. Avatar
    unmaivirumbi says:

    அருமையான கதை! வாழ்த்துக்கள்

    தாயிர்சிறந்த கோவிலுமில்லை,தந்தச்சொல்மிக்க மந்திரமில்லை!

    உண்மைவிரும்பி.
    மும்பை.

  2. Avatar
    unmaivirumbi says:

    தாயிர்சிறந்த கோவிலுமில்லை,தந்தைச்சொல்மிக்க மந்திரமில்லை!

    உண்மைவிரும்பி.
    மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *