‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“
என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப மேலைநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வ. வே. சு. ஐயர் என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்காக தீவிரமாகப் போராடினார். சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது வ.வே.சு.ஐயர் சிறந்த இலக்கிய வாதிகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
இத்தகைய சிறப்புகளை உடைய வ.வே.சு.ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 1881-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 02-ஆம் நாள் மகனாகப் பிறந்தார். வ. வே. சு. ஐயர் பிறந்தார். அவரது இயற்பெயர் வேங்கடேச சுப்பிரமணியம் என்பதாகும். இப்பெயரே நாளடைவில் அவரது ஊர்ப்பெயருடன் சேர்ந்து வ.வே.சு.ஐயர் என்று மாற்றம் பெற்று அதுவே நிலைத்து நின்றுவிட்டது.
கல்வியும் திருமணமும்
வ வே சு.ஐயர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். அக்காலத்தில் இருந்த வழக்கத்திற்கேற்ப அவ்வயதிலேயே வ.வே.சு.ஐயர் தமது அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வ.வே.சு.ஐயர் தமது பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் சென்னை மாகாணத்தில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை சென்று வழக்கறிஞர் தேர்வில் முதல் பிரிவில் தேர்வுபெற்று, சென்னை மாநகர் மாவட்ட நீதிமன்றத்தில் முதல் வகுப்பு வழக்குரைஞராகச் சேர்ந்து பணியாற்றினார். வ.வே.சு.ஐயர் கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
லண்டன் செல்லுதல்
பின்னர் தமது பத்தொன்பதாம் வயதில் திருச்சிக்கு வந்து அங்கேயே வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பவர், வ.வே.சு.ஐயரை லண்டனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். அதன்படி 1907-ஆம் ஆண்டில் வ.வே.சு. ஐயர் ரங்கூன் வழியாக இலண்டன் சென்றார். அங்கு அவர் இந்தியா ஹவுஸில் தங்கினார்.
லண்டனில் அரசியல் போராட்டம்
பாரிஸ்டர் பட்டம் பெற வந்த வ.வே.சு.ஐயரை இந்தியா ஹவுஸ் சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியயது. இந்தியா ஹவுஸிற்கு அவர் அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, டி.எஸ்.எஸ். ராஜன், வீர சாவர்க்கர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இவர்களின் நட்பால், இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சு.ஐயர் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கிருந்த மற்ற விடுதலைப்போராட்ட வீரர்களான விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.
இந்தியா விடுதியில் இயங்கி வந்த அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. இங்கு வ.வே.சு.ஐயர் ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை கற்றுக் கொண்டார். அவர் மனதில் விடுதலை வேட்கை குடியேறியதால், அவரது பாரிஸ்டர் படிப்பு இரண்டாவது பட்சமாகியது. இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து வ.வே.சு.ஐயரும் துப்பாக்கிப் பயிற்சி பெற்று மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.
1909-ஆம் ஆண்டில் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் அங்கு தங்கியிருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் இந்தியர்களை இழிவாக நடத்திய கர்னல் கர்ஸான் வில்லி என்ற ஆங்கிலேயர் லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் இந்தியா விடுதியில் தங்கியிருந்த மாணவர் மதன்லால் திங்காரா என்பவராவார். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. ஐயராவார் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் வீரரான திங்கராவிற்குப் பலவிதமான சோதனைகளை வ வே சு.ஐயர் வைத்தார். மதன்லால் திங்கராவின் புறங்கையில் பெரிய ஊசியினைக் குத்தினார். அவ்வாறு குத்தப்பட்ட ஊசியானது திங்காராவின் கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிக் கொண்டார். இவ்வாறு பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவிய பின்னரே கர்ஸான் வில்லியைக் கொல்வதற்கு திங்காரா நியமிக்கப்பட்டார். திங்காராவும் தாம் ஏற்ற பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
திங்கரா, கர்ஸன் வில்லியைக் கொன்றதன் விளைவாக, திங்காராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றது. வீரத்தின் விளைநிலமாக விளங்கிய அவ்விளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தை மகிழ்ச்சியுடன் தழுவினார்.
விடுதலைப் போராட்டத்தில் வ.வே.சு.ஐயர் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் பாரிஸ்டர் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்துத் தேர்வில் வெற்றி பெற்றார். லண்டனில் பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் இங்கிலாந்து அரசரின் நம்பிக்கையாளன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டுமே பாரிஸ்டர் பட்டம் அளிப்பர். இதுவே இங்கிலாந்தில் வழக்கம். ஆனால் பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு.ஐயர் பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.
வ.வே.சு.ஐயர் பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வ.வே.சு.ஐயர் கலங்காது வீர சாவர்க்கரை மாறுவேடத்தில் சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு. ஐயரை எவ்வாறாயினும் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிடுமாறு கூறினார். இந்தியர்களை இழிவாக நடத்திய கர்ஸானின் மரணத்தின் காரணமாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும் தலைமறைவாயினர். சாவர்க்கர் கைது செய்யப்பட்டார்.
சாவர்க்கர் கூறியது போன்று வ.வே.சு.ஐயரும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை உளவு பார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். வ.வே.சு.ஐயரின் அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக ஏமாற்றி பயணம் செய்த பின், வ.வே.சு.ஐயர் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 9 நாள் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்குவதற்காக வ.வே.சு.ஐயர் பல கட்டுரைகளை தேசபக்தன் இதழில் எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை சிறைபிடிக்க நினைத்தது. இதனால் தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுரோகக் குற்றம் சாட்டி எதேச்சதிகார ஆங்கிலேய அரசு செப்டம்பர் 11ம் தேதி வ.வே.சு.ஐயரைக் கைது செய்து பெல்லாரி சிறைக்கு அனுப்பியது.
கல்விப் பணி
சிறையிலிருந்து விடுதலையான வ.வே.சு.ஐயர் 1922-ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க் குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். தமது குருகுலத்தில் தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்
மொழிபெயர்ப்பாளர்
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு.ஐயர் இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். தமிழிலக்கியத்திற்கு அவரின் பங்களிப்பு அளப்பரியதாகும். 1909-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த “இந்தியா” (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுஸப் கரிபால்டி (Giuseppe Garibaldi) சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர். இதைத் தொடர்ந்து 1909-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி இந்தியா இதழில், “ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது. இக்கட்டுரை வ.வே.சு.ஐயரை மொழிபெயர்ப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. வ.வே.சு.ஐயர், தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் (1920),”குறுந்தொகையிலும், கலித்தொகையிலும் சில செய்யுள்கள் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக,”குறிப்பிட்டுள்ளார்.
கடித இலக்கியத்தின் முன்னோடி
“இந்தியா” பத்திரிக்கையில் 1908-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி முதல் வ.வே.சு.ஐயர் எழுதிய “இலண்டன் கடிதங்கள்” வெளிவரத் தொடங்கின. வ.வே.சு.ஐயரின் தொடக்க கால எழுத்துப் பணியில் இலண்டன் கடிதங்கள் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலும் அப்பத்திரிக்கையில் “பாரதப்பிரியன்” எனும் பெயரிலேயே எழுதி வந்தார். தேசிய – சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழக தேசிய மாவீரர்கள் பற்றிய செய்திகள் இலண்டன் கடிதங்களில் வெளிவந்தன. “இந்தியா” பத்திரிக்கையில் மட்டுமல்லாமல், புதுச்சேரியிலிருந்து வெளிவந்த “சூரியோதயம்”, “விஜயா” ஆகிய இதழ்களிலும் வ.வே.சு.ஐயரின் இலண்டன் கடிதங்கள் வெளிவந்தன. பின்னாளில் அவர் 1924-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய “பாலபாரதி” எனும் அருமையான இலக்கிய மாத இதழில், “இராஜகோபாலன் கடிதங்கள்” எனும் தலைப்பில் எழுதிய கடிதங்களும் பன்முகப்பார்வை கொண்டவையாகும்.
திறனாய்வின் முன்னோடி
1918-ஆம் ஆண்டில் வெளிவந்த வ.வே.சு.ஐயரின் “கவிதை” எனும் கட்டுரை தான் கவிதை பற்றிய விமர்சனத்துறைக்கு ஓர் ஆரம்பம் செய்து வைத்திருக்கிறது என்பதை திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரிய ஒப்பியல் ஆய்வில் வ.வே.சு.ஐயர் சங்க இலக்கியமான “மலைபடுகடாம்” கவிதையை பிரெஞ்சு எழுத்தாளர் சேனாங்கூர், தாகூர், வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார்.
குறள் நெறி பரப்பிய வ.வே.சு.ஐயரின் பணி மகத்தானதாகும். வ.வே.சு.ஐயர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து, அதற்கு மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் வழங்கித் திறனாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு. ஐயர் ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகளாக வடித்தார்.
வ.வே.சு.ஐயர் மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, “கம்பராமாயணம் – ஓர் ஆராய்ச்சி” போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவு செய்த பெருமை வ.வே.சு.ஐயரையே சாரும்.
பதிப்பாசிரியர்
வ.வே.சு.ஐயர் 1916-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் “கம்ப நிலையம்” என்ற பெயரில் பதிப்பகம் ஒற்றை மண்டயம் எஸ்.சீனிவாசாசாரியாருடன் இணைந்து தோற்றுவித்தார். கம்ப நிலையம் வெளியீடுகளில் ஒன்றாக 1917-ஆம் ஆண்டில் வெளிவந்த “கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம்” எனும் பதிப்பு நூல், வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் தவத்தில் வெளிவந்த முதல் சாதனை நூலாகும். வ.வே.சு.ஐயர் இந்நூலில் கம்பராமாயணத்தில் உள்ள பாலகாண்டத்தின் 1399 பாடல்களில் 545 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்தார். இவர் தாம் எழுதிய நூல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டுச் சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தார்.
சிறுகதை இலக்கிய முன்னோடி
வ.வே.சு.ஐயர் “குளத்தங்கரை அரச மரம்“ என்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதையாகும். இச்சிறுகதையின் வாயிலாக தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1917-ஆம் ஆண்டில் வெளிவந்த “மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பை கம்ப நிலையம் சார்பில் வெளியிட்டார். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
இந்நூல், வ.வே.சு.ஐயரை தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர் என்று தமிழ் இலக்கிய உலகிற்கு உணர்த்தியது. 1927-ஆம் ஆண்டில் வெளிவந்த பதிப்பிற்கு அளித்த முகவுரையில், “இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும், உன்னதமான எண்ணங்களும் ததும்பும்,” என்று இராஜாஜி குறிப்பிடுவது வ.வே.சு.ஐயரின் படைப்பிலக்கியத்திற்கு சிறந்த திறனாய்வாக விளங்குகின்றது எனலாம்.
மறைதல்
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வராகிய வ.வே.சு.ஐயர் பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் நாள் மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளின் பதிவுகள் பாரத மக்களின் நெஞ்சங்களில் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
- இழவு வீடு
- முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..
- வேஷங்கள்
- பயணம்
- வேடிக்கை
- “கானுறை வேங்கை” விமர்சனம்
- பெண்பால் ஒவ்வாமை
- தாய் மனசு
- தூசு தட்டப் படுகிறது!
- மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்
- என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்
- அந்த ஒருவன்…
- பிரியாவிடை:
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்
- எதிர் வரும் நிறம்
- அவள் ….
- ஸ்வரதாளங்கள்..
- வலி
- வட்டத்துக்குள் சதுரம்
- 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7
- அபியும் அப்பாவும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
- நினைவுகளின் தடத்தில் – (72)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)
- பூமராங்
- ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.
- “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “
- ஓரிடம்நோக்கி…
- சோ.சுப்புராஜ் கவிதைகள்
- நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!
- அழையா விருந்தாளிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)
- தூரிகையின் முத்தம்.
- விழிப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8
- பகுப்பாய்வின் நிறைவு