ஆள் பாதி ஆடை பாதி

This entry is part 31 of 34 in the series 17 ஜூலை 2011

சமீபத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய உணவு பொருளை வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்தபோது தரமில்லாமல் இருப்பது தெரிந்தது. சரி, சிரமத்தைப் பார்க்காமல் திருப்பி கொடுத்து விட்டு, தரமான பொருளை விற்க வலியுறுத்தலாம் என்று தோன்றியது. மறு நாள் கடையின் மேலாளரை சந்தித்து பொருளின் தரக்குறைவை தெரிவித்தேன். புளுவை பார்ப்பது போல் பார்த்தார். எங்கே பொருள் என்று கோபமாக கேட்டார்? பொறுமையாக பொருளை எடுத்துக்கொடுத்தேன். இப்படி அப்படி பார்த்தார். நான் பொய் சொல்கிறென் என்று நினைத்த மாதிரி தான் இருந்தது. சரி. ஒரு பேப்பர் தருகிறேன் உங்கள் குறைபாட்டை எழுதிக்கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்கி செல்லுங்கள் என்றார். பொறுமையாக கடிதம் எழுதிக்கொடுத்தேன். தரமற்ற பொருளை விற்றுவிட்டோமே என்று வருத்தப்படுவராக இல்லை. இதற்கிடையே ஏரியா மானேஜருக்கு தொலைபேசியில் அழைத்து விபரம் தெரிவித்தார். தொலைபேசியை என்னிடம் கொடுத்தார். ஏரியா மானேஜர் கொஞ்சம் பொறுமையாக விசாரித்தார். அவரிடம் என்னுடைய நோக்கம் புதியதாக பொருள் வாங்கி செல்வதல்ல, தரமற்ற பொருளை 1905-லிருந்து இருப்பதாக சொல்லிக்கொள்ளும் உங்கள் நிறுவனம் விற்பதை சுட்டிக்காட்டுவது தான் என்றேன். புரிந்துகொண்டதாக தான் சொன்னார். மறு நாளே மாதிரியை பெற்று சோதிப்பதாக சொன்னார். நான் வேறு பொருளை வாங்கிகொண்டு வெளியே வந்தேன்.

நான் விற்ற பொருளில் குறையா என்று இருமாப்புடன் இருந்த ஸ்டோர்ஸ் மானேஜர் நான் ஏரியா மானேஜருடன் பேசிக்கொண்டிருந்த போது கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த எனது அலுவலக முகவரியை படித்திருக்கிறார். ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் என்று தெரிந்த பிறகு என்னை “உட்காருங்க சார்” என்று பலமுறை “சார்” போட்டு பொறுமையாக பேச ஆரம்பித்தார். சரி, ஏன் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை என்று யோசித்தேன்?

எல்லாம் இந்த உடை அணியும் விசயத்தில் தான் இருக்கிறது என்று புரிந்தது. பொதுவாக விலை உயர்ந்த ஆடை அணிபவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் என்று பார்த்தவுடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். எளிமையாக இருப்பவர்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவுகட்டி விடுகிறார்கள். ஆனால், உயர்ந்த இடத்தில் இருந்த போதே டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்திருந்ததை பல நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. அவர் எளிமை புரிந்துக்கொள்ள கூடியதாக தான் இருக்கிறது. ஆனால், உயர்ந்த இடத்துக்கு போய்தான் எளிமையாக இருக்க வேண்டும் போல இருக்கிறது. அப்போதுதான் அது விமர்சிக்கவும் போற்றவும் படும். (தற்போதைய தமிழக முதல்வர் காதணி அணிவது பத்திரிக்கைகாரர்களால் கேள்வி எழுப்பப்பட்டு அவரால் அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே).

சாதரணர்கள் எளிமையாக இருந்தால் இங்கே உரிய மரியாதையும் கிடைக்காது, அவர்களின் உணர்வுகள் புறக்கணிக்கவும் படும். ஒருவருடைய விருப்பம் சார்ந்த விசயங்கள் எல்லாம் இங்கே ஒருவருடைய அந்தஸ்தோடு தொடர்பு படுத்தப்பட்டுவிடும்.

நான்கு பேர் கூடி ஆங்கிலத்தில் உரையாடும் போது நாம் தமிழில் பேசினால், நாம் தமிழ் பற்றினால் பேசுகிறோம் என்றில்லாமல் நமக்கு ஆங்கிலத்தில் பேச தெரியாது என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பு முடிந்து சில நாட்கள் கழித்து ஒரு பெரிய ஸாப்பிங் மாலுக்கு செல்ல நேர்ந்தது. கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. சில நாட்கள் சோதனை இருப்பதும் பின்பு காணாமல் போவதும் திருப்பி குண்டு வெடிப்பு நடந்தவுடன் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்லவே?!. நான் வழக்கம் போல என் வசதிக்கு(Convenient) ஏற்ப எனக்கு வசதியான(Convenient) சாதரண உடையில் சென்றிருந்தேன். கையில் ஒரு பை வைத்திருந்தேன். எனக்கு முன்னாள் சென்றவரும் கையில் ஒரு பை வைத்திருந்தார். மிக நேர்த்தியான உடை அணிந்திருந்தார். அவர் ஒரு சோதனையும் இன்றி உள்ளே அனுப்பபட்டார். என் முறை வந்தது. முழு சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டேன். சிறிது நாள் கழித்து மும்பை வெடிகுண்டு வழக்கில் கைதான அப்துல் கசாப்பின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி போன்ற தோற்றத்துடன் இருந்தான். தீவிரவாதி எல்லாம் எங்களை மாதிரி இருக்க மாட்டான், எனக்கு முன்னாள் போனார் பாரு அவரு மாதிரி தான் இருப்பான்னு யாரு இவங்களுக்கெல்லாம் புரிய வைக்கிறது?

உடை என்பது அவரவர் வசதிக்கு(convenient) ஏற்ற படி அணிந்து வருகிறார்கள் என்பதை உணராமல் அவருடைய நேர்மை, நாணயம், வருமானம் இவற்றோடு தொடர்புபடுத்திக்கொண்டு விடுகிறார்கள். இன்றும் கூட கிராமங்களில்(நகரங்களிலும்) மிக எளிமையான உடை உடுத்தி மிகவும் நேர்மையாக வாழும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தீவிரவாதிகள் எல்லாம் மெத்தப்படித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத்தெரிந்து நேர்த்தியான உடை அணியும் கொலைகாரர்களாக இருக்கிறார்கள்.

இதனுடைய மறு பக்கத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்கள்(ஆமா, இவர் தமிழ் சினிமாவில் நிறைய புரட்சி செய்திருக்கிறாரே, இவருக்கு ஒரு புரட்சி பட்டம் கூட தரலியே?!!!) பதிவு செய்திருக்கிறார்.

இவருக்கு முன்புவரை ஒரு கொடுமைக்காரன் என்பவன்(தமிழ் சினிமா வில்லன்) கடா மீசையுடன், தொப்பி வைத்து முடிந்தவரை அலங்கோலமாக சட்டை, பாண்ட் அணிந்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருப்பான். ஒரு கொடுமைக்காரன் ஒரு குடும்பத்தின் தலைவனாகவும் இருக்க முடியும் என்பதை “உதிரிப்பூக்கள்” சொல்கிறது. உதிரிப்பூக்கள் நாயகன் விஜயனின் நடை, உடை, பாவனை எல்லாம் வெகு இயல்பாகவும் சாதாரணமாகவும் இருக்கும்.

சரி. இது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுதெல்லாம் கணினி நிறுவனங்களையும் சேர்த்து தானே எல்லாவற்றையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அங்கே என்ன நிலைமை என்று விசாரித்தேன். அங்கே “Dress Code” என்று ஒன்று இருக்கிறது என்றார்கள். அப்பாடா! இங்கே நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கே என்று தோன்றியது. அது என்ன “Dress Code”, கோடு போட்ட ட்ரெஸ் போட்டு வரவேண்டுமா என்று என் அறியாமையை வெளிப்படுத்தினேன். அப்படி இல்லை திங்கள் முதல் வியாழன் வரை மிக நேர்த்தியான உடை அணிந்து ஷூ எல்லாம் போட்டு வரவேண்டும் என்றார்கள். சரி அப்ப வெள்ளிகிழமை என்றேன். அன்றைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். நானும் விடாமல் எப்படி வேண்டுமானாலும் என்றால் எப்படிதான் வருவார்கள் என்றேன். ஆண்கள் அரைக்கால் டிரவுசருடன் கூட (பெர்முடாஸ்ன்னு சொல்லாட்டி கோவிச்சுக்க போறாங்க) வரலாம் என்றார்கள். சரி, பெண்கள் என்றேன். அவர்களும்தான் என்றார்கள். இந்த புது வகையான “Dress Code” விளக்கத்தை கேட்டவுடன் தலை சுற்றியதுடா சாமி!.

எனக்கு தெரிந்த பெண் ஒருவர் பெரிய கணினி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ஒரு வெள்ளிக்கிழமை அலுவலகம் சென்ற அவர் மதியமே திரும்பி வந்து மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். என்ன விசயம் என்றேன்? அவர் வெள்ளிக்கிழமை “Dress Code” – ல் சென்றிருக்கிறார். என்றைக்கும் இல்லாத திருநாளாக புராஜெக்ட் மானேஜர் பக்கத்தில் உட்கார சொல்லி, மேலே இருக்கும் அந்த file-ஐ எடு, இந்த சிடி-யை எடு என்று தொல்லை கொடுத்திருக்கிறார். மிகவும் நொந்து போய் வீட்டுக்கு வந்து வருந்திக்கொண்டிருந்தார். அந்த மனிதர் மிக உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்து அலுவலகத்திற்கு காரில் வந்து செல்வாராம்.

இதுபோன்ற பாலியல் வன்முறைகள் சக மனிதர்கள் மீது எல்லா தளங்களிலும் எல்லா காலங்களிலும் நடந்தப்பட்ட வண்ணமே இருக்கின்றது. ஆசிரியர் – மாணவி, மானேஜர் – காரியதரிசி, கொத்தனார் – சித்தாள், டாக்டர்-நர்ஸ், புராஜெக்ட் மானேஜர் – டெவலப்பர், வீட்டு முதலாளி – வேலைக்காரி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார் ”உலகத்திலேயே மிகப்பெரிய வன்முறை நம்மை திருப்பி அடிக்க முடியாதவரை போட்டு அடிப்பதுதான்” என்று. அந்த வன்முறை தான் இங்கே நடக்கிறது.

முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அரசு அலுவலத்தில் அரைக்கால் டிரவுசருடன் வந்ததை பார்க்க நேர்ந்தது. இதைப்பார்த்து ஊழியர்கள் ஒரு அலுவலகத்திற்கு எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூடவா தெரியாது என்று முகம் சுழித்ததை அவர் எங்கே கவனித்தார்?

ஒரு எழுத்தாளர் முழு நீள லுங்கியுடன் பிரவுசிங் சென்டருக்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதையும், அரைக்கால் டிரவுசருடன் சென்றவர்கள் எல்லாம் அனுமதிக்கப்பட்தையும் குறித்து வார இதழ் ஒன்றில் வருந்தி இருந்தார்.

நண்பர் ஒருவரின் புதிய அலுவலத் திறப்பு விழாவிற்கு பெண் ஊழியர்கள் அனைவரும் சேலையில் வந்திருந்ததை பார்த்த அவர்களின் வெளிநாட்டு முதலாளி ஆண்களை பார்த்து நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் பாரம்பரிய உடையில் வரவில்லை என்று வியந்திருக்கிறார். எல்லாரும் நெளிந்துவிட்டு பிறிதொரு சமயம் வேட்டி, சட்டையில் சென்றதாக தெரிவித்தார். அதுவும் ஒரு கணினி நிறுவனம் தான்.

சரி. இருக்கட்டும். இதனால் சகலாமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

”தொழுதகை யுள்ளும் படை யொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.

வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும் இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.

Series Navigationஅம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்புஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9
author

அ.லெட்சுமணன்

Similar Posts

9 Comments

 1. Avatar
  புலவர் தருமி says:

  அருமையான பதிவு!பணக்காரர்கள், நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் சும்மா இருந்தாலும் இந்த அல்லக்கைகள் அவர்களை ஏற்றிவிடுவர். இது அடிமை புத்தியை தான் காட்டுகிறது. 1000 வருடமாக அடிமையாக இருந்தவர்கள் அல்லவா. 64 வருடத்தில் 1000 வருட அடிமை புத்தி போய்விடவா போகிறது.

  இப்படி தான் ஒரு முறை சென்னையில் சுந்தரி சில்க்ஸுக்கு கேமராவுடன் செல்ல முயன்றேன். காவலாளி அதை பையோடு சேர்த்து வெளியே வைத்துவிட்டு போகச் சொன்னார். மேல்மாடியில் கொஞ்சம் நேரம் துணிகளை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இன்னொருவர் கேமராவுடன் வந்திருந்தார். காவலாளியிடம் இதைப் பற்றி புகார் சொன்ன போது, உருப்படியான எந்தப் பதிலும் இல்லை.

  இந்தியர்களுக்கு பொதுவாகவே நிறைய தாழ்வு மனப்பான்மை உள்ளது. குஷ்டம்மப்பா, சாரி, கஷ்டம்மப்பா!

 2. Avatar
  Maruthu says:

  ‘ஒரு முறை அரண்மனையில் மன்னர் வைத்த விருந்துக்கு, முல்லா கிழிந்த, அழுக்கான ஆடை அணிந்து செல்ல, வாசலில் சேவகர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். சற்று தொலைவில் நின்று இருந்த அமைச்சரும் தளபதியும் ‘அந்த ஆளை வெளியே அனுப்பு!’ என்று குரல் கொடுத்தனர். முல்லா வீட்டுக்குத் திரும்பி, பிரமாதமான ஜரிகை உடை ஒன்றைக் கடன் வாங்கி அணிந்துகொண்டு, மறுபடியும் அரண்மனைக்குப் போனார். எல்லோரும் வழிவிட்டனர். மன்னரும் அவரை விருந்தில் அமரச் சொன்னார். பதார்த்தங்கள் பரிமாறப் பட்டன. முல்லா ஒவ்வொன்றையும் எடுத்து ஜரிகை உடை மீது தேய்த்துக்கொள்ள ஆரம்பித்தார். மன்னர் திகைப்புடன், ‘என்ன இது… லூஸா நீங்க?’ என்று கேட்டதற்கு முல்லா, ‘அரசே! விருந்தைச் சாப்பிட எனக்குத் தகுதி கிடையாது. அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு வந்ததே இந்த ஜரிகை உடைதான். நியாயமாக அதுதான் விருந்து சாப்பிட வேண்டும்!’ என்றார்!

  ———————
  உடையை வைத்து ஒருவரை எடை போடும் பழக்கம், பல காலமாக உள்ளது. புலம்பி ஒன்றும் ஆக போறது இல்லை. ஆனால் நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும்.

  எல்லாரும் கோவணம் கட்டும் பொழுது, ஒருவன் மட்டும் வேஷ்டி கட்டினா, அவன் பைத்தியக்காரன் தான்.

  வாழ்த்துக்கள்
  மருது

 3. Avatar
  Ananthu says:

  இது அனைவரின் ஆதங்கம். அருமையான நடை. ஆதங்கபட்டாலும் செயல் படுத்த பிடிக்காத சமுதாயம்.

  1. Avatar
   Lakshmanan says:

   உண்மை. குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாம் குற்றவாளி இல்லை என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
   ராசா உதாரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

   சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *