This entry is part 2 of 34 in the series 17 ஜூலை 2011

ஆரூர் ஔரங்கசீப் கருணாநிதியின் இந்து விரோத ஆட்சியின் போது, இந்து வெறுப்பியல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் சட்ட விரோதமாக இடித்துத் தள்ளப்பட்டன. அது பற்றித் திண்ணை (5 ஜூன் 2011 ) இதழில், “கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?” (http://puthu.thinnai.com/?p=890) என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் இல. கணேசனின் தலையீடு காரணமாக இந்து இயக்கங்கள் அந்தப் பாதகச் செயலைக் கண்டித்துப் பெரிய அளவில் போராடாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய சட்டசபை வளாகம் கட்டுகிறோம் என்ற போர்வையில் அங்கிருந்த ஆலமர இயற்கை விநாயகர் ஆலயம் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தேன். ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு, கருணாநிதியால் நயவஞ்சகமாக இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இந்தக் கோரிக்கையை இந்து இயக்கங்கள் எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்து நலன்கள் பற்றித் தமிழக இந்து இயக்கங்களுக்கு உண்மையிலேயே எந்த அக்கறையும் இல்லை என்பதையே இத்தகைய போக்கு மறுபடியும் நிரூபிக்கிறது. “ஓம் பூர் புவ ஸுவஹ…” என்று நீட்டி முழக்கி 1008 காயத்ரி மந்திரம் ஓதுதல், பிற ஜப தபங்கள், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது போன்றவற்றையே இராம. கோபாலன், சூரிய நாராயண ராவ் போன்ற தமிழக இந்து இயக்கங்களின் மூத்த தலைவர்கள் முக்கியமாகக் கருதுகின்றனரே தவிர இந்து நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் அவர்கள் இப்போது எதையுமே செய்வதில்லை

திண்ணை வாசக அன்பர்கள் சிலர், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சண்முகநாதன் நாடாரின் கவனத்துக்கு இக்கட்டுரையைக் கொண்டு சென்றனர். அறநிலையத் துறை அமைச்சரின் மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதியால் இடிக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயம் ரூ. 18.5 லட்சம் செலவில் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று ஜூன் 11, 2011 அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பின் மூலம் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாகக் கட்டப்படும் கோயில் வளாகத்திலேயே, முன்னர் இருந்த 23 பரிவார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையைச் சகித்துக் கொள்ள முடியாத இந்து துவேஷி கருணாநிதி, ஏதோ ஆல மரத்து விநாயகருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று கேலி செய்திருக்கிறார். முழுப் பூசனியைச் சோற்றுப் பருக்கைகளால் மறைக்க முயல்வது போல, அந்தக் கோயில் தன் ஆட்சியில்தான் இடிக்கப்பட்டது என்ற உண்மையையே மறைக்கப் பார்க்கிறார்.

திண்ணை கட்டுரையின் எதிரொலியாகவே தமிழக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சி தருகிறது. கருணாநிதியால் இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயத்தைப் புனரமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆரூர் ஔரங்கசீப்பின் ஆட்சியில் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் அனைத்தும் உடனடியாகக் கட்டப்பட வேண்டும் என்றும் கோருகிறேன்.

Series Navigationகரியமிலப்பூக்கள்விபத்து தந்த வெகுமதி