வாரக் கடைசி.

This entry is part 43 of 47 in the series 31 ஜூலை 2011

“சாப்பாடு எடுத்துக்கிட்டியா மா?” புளிச்சை மறைக்கும் பார்வையுடன் தூக்கத்திலிருந்து எழுந்த லலிதா. காலை 7 : 15 மணிக்கு வண்டி ஏற வேண்டிய காயத்திரி, குளித்து முடித்து வருவதற்குள் சிற்றுண்டியைத் தயார் செய்துவிட்டு, கணவன் எழும் வரை ஒரு ‘குட்டி’ தூக்கம் போடலாம் என்று படுத்தார் லலிதா. மகள் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் ‘தாய்மை’ விழித்துக் கொண்டது.

“எடுத்துகிட்டேன்”, ரயிலில் பயணிக்கும் போது தான் சிற்றுண்டியை உண்பாள் காயத்திரி. அதுவும் சென்ட்ரலில் இறங்கி, பறக்கும் ரயிலில் ஏறும் போது தான் வயிற்றில் மணி அடிக்கும். கூவம் ஏரியின் அசுத்தத்தையும், மதராசப் பட்டினம் படத்தில் வரும் காட்சிகளையும், சுற்றியிருக்கும் ‘பெட்டி’

‘பெட்டி’யான வீடுகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே, இரண்டு இட்லிகள் அல்லது ஒரு தோசை உள்ளே போகும். சில நாட்களில், ஒரு கரண்டி கிச்சடி அல்லது பொங்கல்.

அடுத்து சேப்பாக்கம் ஸ்டேடியம். தனக்கு பிடித்த ‘விராத் கோலி’-ஐ தூரத்திலிருந்து பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் எட்டிப் பார்த்தாள். அவள் பார்வைக்கு ‘வெள்ளை’யாய் எதுவும் தென்படவில்லை. அவள் தலை குனிவதற்குள், சேப்பாக்கம் ரயில் நிலையத்தினுள் வண்டி புகுந்தது. அவளுடன் வேலை பார்க்கும் தோழிகள் ஏறும் நிலையம் அது. எப்போதும் முதல் வகுப்புக்கு அருகில் இருக்கும் பெண்கள் பகுதியில் தான் ஏறுவது வழக்கம். அதனால் அவர்களை தினமும் ரயிலில் சந்திப்பது உறுதி.
“என்ன டீ? எங்களப் பாத்ததும் நடிக்கிறியா? கோழி கூவிச்சா?” என்றாள் ஷாந்தி.

“அது கோழி இல்ல. கோலி”

“படிச்சிருக்கியே தவிர நீயும் ‘சூப்பர்ஸ்டீஷியஸ்’ தான். டெய்லி ஸ்டேடியத்தை பாத்தா அவன் வந்துடுவானா?”

“ஆமா நீ மட்டும் ஒழுங்கு. சூர்யாவுக்கு கல்யாணம் ஆனப்போ இவ என்ன செஞ்சா தெரியுமா டீ?” காயத்திரி, மற்றவர்களை ஷாந்திக்கு எதிராக திருப்பி விட முனைந்தாள்.

“என்ன செஞ்சா?”
“எனக்கு ஜோ புடிக்கும்-னு பேகுக்குள்ள அவ போட்டோ வெச்சிருந்தேன் டீ. இவ அத எடுத்து பீஸ் பீசா கிழிச்சு போட்டுட்டா. இல்லன்னு சொல்லச் சொல்லு”

“அடிப் பாவி!”, கீச்சுக் குரல்கள் பக்கத்து பெட்டி வரை பரவின.

“இதுங்களை எல்லாம் படிக்க அனுப்பினா சூர்யா, ஜோதிகா-ன்னு பேசிகிட்டு இருக்குங்க பாருங்க”, என்றார் ஒரு பெரியவர். ஜன்னல் வழியாக அவர் விமர்சனம் சாந்தியின் காதுகளை எட்டவே,

“படிக்க அனுப்பல பெருசு. வேலைக்கு அனுப்பியிருக்காங்க”, என்று தன் குழுவுக்கு மட்டும் கேட்கும் குரலில் முனுமுனுத்தாள். அவர்கள் எல்லோரும் திரும்பவும் ‘கீச்சி’ட்டனர்.

சில நிமிடங்களில் கடற்கரை காற்று, காதோரமாக ஒதுக்கிவிட்டிருந்த முடிகளுக்கு சுதந்திரம் அளித்தது. அதை திரும்பவும் காதோரத்தில் சொருகியபடி நீல நிறத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் காயத்திரி.

“ஏய் என்னங்கடீ? ஒரு நாள் ஈவனிங் கட் அடிச்சிட்டு பீச்சுக்கு போகலாம்-னு சொன்னேனே? என்ன ஆச்சு?” மறந்து போன திட்டத்தை ஞாபகப் படுத்தினாள் ஷாந்தி.

“இது என்ன காலேஜா கட் அடிக்க?”, குழலி.

“பெண்கள் நினைத்தால் எதுவும் முடியும்”, கண் அடித்தாள் ஷாந்தி.

“அது நல்ல விஷயங்களுக்கு சொல்லப் பட்டது. என்னால கட் எல்லாம் அடிக்க
முடியாது. லாஸ் ஆப் பெ!”, காயத்திரி.

“தோடா. வன்டாங்க அரிச்சந்திரன் வப்பாட்டி”, குழுவுடன் சேர்ந்து தானும் சிரித்தாள் ஷாந்தி.

“திஸ் இசின்ட் ஃபன்னி அட் ஆல். லோக்கலா பேசாத”

“பின்ன என்ன மேன்? ரொம்ப தான் பண்ற? ஒரு நாள் காசு போனா என்னவாம்?”

“அது, அவங்க அப்பா என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? நீயே சம்பாதிச்சு உன் கல்யாணத்தை நடத்திக்கோ-ன்னு சொல்லிட்டாராம். அதான் மேடம் வாச்சிங்கா இருக்காங்க”
“நான் வரல”, காயத்திரிக்கு கேலி பிடிக்காது. இரு வார்த்தைகளில் மறுத்துவிட்டு அமைதியானாள்.

“சரி வீக் எண்டு-லயாவது வருவாங்களா மகாராணி?” குழுவின் மூலமாக வார்த்தைகள் திருப்பிவிடப் பட்டன.

“பாக்கலாம்”, அந்த குழுவிலிருந்து தற்காலிகமாக காயத்திரியின் இணைப்பு துண்டிக்கப் பட்டது. மற்றவர்கள் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் பயணத்தை கழிக்க, காயத்திரி மட்டும் ஜன்னல் வழியாக மௌனத்துடன் பேசினாள்.

சுமார் பத்து மணி அளவில் அலுவலகத்தை அடைந்த குழுவினர் தனித் தனியாக பிரிந்து தங்கள் இருக்கையில் உட்கார்ந்தனர்.

“அப்துல் கலாம் சொல்லியிருக்காரு. நைட் டைம்-ல கம்பியூட்டரை ஸ்லீப் மோடுல போடாதீங்க; இன்னிக்கு காசு கொடுத்தா கெடைக்கிற மின்சாரம், நாளைக்கு காசு இருந்தும் கெடைக்காம போகலாம்-னு”, பொது அறிவு பேசினாள் குழலி.

“அவர் கெடக்குறாரு. நாம தூங்கறோம். கம்பியூட்டர் தூங்க வேண்டாமா?”, என்று கேணச் சிரிப்பு சிரித்த ஷாந்திக்கு,

“எதை தான் கிண்டல் செய்யிறது-ன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?” என்ற முனகலால் முரண்பாட்டை கொடுத்துவிட்டு மின்னஞ்சல்களை படித்தாள் காயத்திரி.

அதில் முக்கியமானவற்றிற்கு பதிலளித்துவிட்டு அன்றாடம் செய்யும் வேலையை அசதியுடன் தொடங்கினாள். காயத்திரி, ஜாவா ப்ரோக்ராமிங் செய்யும் மென்துறை பொறியியலாளர். இரண்டு வருடங்கள் முன்பு இளநிலை பட்டப் படிப்பை முடித்த அவள், ‘கேம்பஸ்’ நேர்காணலில் தேர்ச்சிபெற்று, ஒரு முன்னணி மென்துறை நிறுவனத்திற்கு வேலை செய்து வருகிறாள்.
சலிப்புடன் ஆரம்பித்த வேலையை சில நிமிடங்களில் முனைப்புடன் செய்யலானாள். கணினியின் திரையினுள் மூழ்கிவிட்டிருந்த அவள் கவனத்தை சுமார் 11 மணி அளவில் சீர்குலைத்தது ஒரு மின்னஞ்சல்.

“கேன் யு கம் ஃபார் சாட்?” என்ற அந்த மின்னஞ்சலின் முன்னறிவிப்பை திரையின் ஓரத்தில் பார்த்ததும் அதன் மீது சொடுக்கி,
“பிஸி”, என்று ஒரு வார்த்தையில் பதில் அனுப்பினாள். சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஓரத்தில் அறிவிப்பு. தலையில் அடித்துக் கொண்டு தன் நிலையை ‘விசிபிள்’ என்று மாற்றினாள். “உரையாடலுக்கு தயாரா” என்ற கேள்விக்கு, அவள் ‘பச்சை’ வண்ணம் தயார் என்றது.

“என்ன வேணும்?” காயத்திரி.

“நீ தான்”, தன் அலுவலகக் கணினியிலிருந்து அவள் மனம் கவர்ந்த சரோ என்கிற சரவணன்.

“இதுக்கு இதுவா நேரம். விஷயத்தை சொல்லு”

“ஏன் டீ வேலைக்கு வந்தாலே சிடு சிடுன்னு பேசுற? எங்கள பாரு. கலர் கலரா பொண்ணுங்களை ரசிச்சிட்டே வேலை பாக்குறோம்”

“இங்க எந்த பயலும் கலரா இல்ல. அது சரி,. என்ன விஷயம்? அத சொல்லு மொதல்ல”

“ஒண்ணும் இல்ல. இந்த வீக் எண்டு PVR போகலாமா? twilight அடுத்த பார்ட் வந்திருச்சு”

“நோ வே! என் டீம் பொண்ணுங்க ரொம்ப நாளா பீச்சுக்கு கூப்பிட்டுகிட்டு இருக்காங்க. என்னால வர முடியாது”

“ஹேய்! பொண்ணுங்க எல்லாரும் சேந்து பீச்சுக்கு போய் என்ன செய்யப் போறீங்க?”

“சுண்டல் விக்கப் போறோம். இதெல்லாம் உனக்கு எதுக்கு?”

“எனக்கு எதுக்கா? ஓகே ஃபைன்”, சில நொடிகள் அமைதி நிலவியது.

“என்ன கோவமா?” இணைய ஊடகத்தின் உதவியுடன் இருவரின் ஊடல் தொடங்கியது.

“ஆமா. பின்ன பப்லூ கூப்பிடுறேன். பலூனுங்க கூட போறேன்-ன்னு சொல்றியே!”

“ஏய். அவங்க என்னோட ஃபிரெண்ட்ஸ். கிண்டல் செய்யாதே. உன் கூட வந்தா அவங்களுக்கு என்ன சொல்றது? அதுக்கு மொதல்ல பதில் சொல்லு”
“உனக்கா டீ பதில் வராது? அப்பாவுக்கு அலசர். அம்மாவுக்கு அடிவயிறு எரியிது-ன்னு ஏதாவது பிட்டு ஓட்டு”

“சரி பாக்கலாம். டீம் லீடர் வராரு. அப்புறம் பேசறேன்”, ‘இனிவிசிபிள்’ ஆனாள். மணியை கவனித்தபோது, 11:30 என்று காண்பித்தது. இடைவேளை நேரம் என்பதால் இருக்கையிலிருந்து எழுந்து சிற்றுண்டியகத்தை நோக்கி நடந்தாள். பொதுவாக அவளுடன் நடந்து வரும் தோழிகள் அன்று வரவில்லை.

“கோவமா? அப்படி எல்லாம் இருக்காது. சீக்கிரம் போயிருப்பாங்க”, என்று நினைப்புடன் வாய்க்குள் நொறுங்க தின்பண்டம் வாங்கினாள். கொரிப்பும், யோசனையும் பத்து நிமிடங்களை கடத்த, மறுபடியும் இருக்கையில் வந்து உட்கார்ந்தாள்.திரும்பவும் வேலை; முதலில் சோம்பல், பின் அக்கறை.
மதியம் ஒரு மணி வரை தொடர்ந்த பணி, உணவு இடைவேளை நேரத்தில் நிறுத்தப் பட்டது. வெஜ் பிரியாணியும், விருப்பத்திற்கினிய தோழியின் அழைப்பும் ஒரு சேர அவளை உற்சாகம் கொள்ளச் செய்தது. செல் பேசியில் அழைப்பை ஏற்று,

“என்ன ஜெஸ்சி மேடம்? அதிசயமா இருக்கு? எனக்கெல்லாம் கால் செய்ற? டேவிட் ஊர்-ல இல்லையா?”

“ஆமா. எங்க நிச்சயத்துக்கு டிரஸ் செலக்ட் செய்ய காஞ்சிபுரம் போயிருக்கான்”

“என்ன கிண்டலா? சரி என்ன விஷயம்?”

“உண்மையா தான் டீ. எங்க ரெண்டு பேருக்கும் இந்த சண்டே நிச்சயதார்த்தம். ஈரோடுல”

“அடிப் பாவி. உண்மையாவா? உங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டாங்களா? சொல்லவே இல்ல”

“இப்போ தான் முடிவாச்சு”

“சூப்பர். கலக்குற?”

“ஹ்ம்ம். நீ என் கூடவே வந்துடற. கார்-ல கூட்டிகிட்டு போறேன்; காலை-ல ஃபங்க்ஷன் முடிஞ்சதும், சண்டே நைட் உங்க வீட்டுல விடுறது என் பொறுப்பு”

“சண்டேவா?”
“எதுவும் பேசக் கூடாது. உனக்காக தான் வீக் எண்டா பாத்து ஃபங்க்ஷன் வைக்கச் சொன்னேன். வரலேன்னு சொன்னா ஒத்துக்க முடியாது”

“சரி டீ. வரேன்.சனிக் கிழமை பாக்கலாம்”

“ஹ்ம்ம். அது”, ஜெஸ்சி அழைப்பை துண்டிக்க, மற்ற இரு திட்டத்தையும் எப்படி துண்டிப்பதென்ற யோசனையில் காயத்திரி. அன்றைய மதிய உணவு நாக்கில் பட்டாலும் மூளைக்குள் ருசி ஏறவில்லை. சாத்தியக் கூறுகளும், தந்திரங்களும், பொய்களும் தான் சிந்தையை சூழ்ந்திருந்தது.

உணவு இடைவேளை முடிந்து மேஜைக்கு திரும்பியவள் மூளைக்குள் முட்டி மோதும் யோசனைகளை ஒதுக்கிவிட்டு காரியத்தில் கண் செலுத்தினாள். மாலை ஒரு தேநீர் மட்டும் அருந்திவிட்டு அலுவல் தொடர்ந்தது.
இரவு ஏழு மணி..

உப்பில் விழுந்த அட்டையைப் போல அனைவரின் உடலும் நெளிந்தது. காலை சீக்கிரம் வந்தவர்கள் வேலை முடிந்ததும் வெளியேறுவதை பார்த்ததிலிருந்து வேகத்தை துரிதப் படுத்தியவர்கள், கொஞ்சம் அதிகமாகவே கலோரிகளை செலவழித்துவிட்டனர்.

இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்தாள் காயத்திரி. வீட்டை அடைய குறைந்தது இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அலுப்பின் உச்சத்தில் இருந்தாலும் வேலை முடிந்துவிட்டதென்ற எண்ணம், பாலைவன ரொட்டியைப் போல இனித்தது.

கால்கள் வேண்டாம் என்று சொல்ல, மூளை வேண்டும் என்று கூற, முன்னும் பின்னும் அசைந்தாடிக் கொண்டே பயணம். ரயிலில் இருக்கைகள் காலியாய் இருந்தும், அடியில் பூத்த ரோஜா முள் ‘நிற்பதே நன்று’ என்று முரண்டு பிடித்தது. கால்களும் ‘மடங்காதிரு’ என மன்றாடியது.

இரவு 9 : 30 மணி..

தனக்குப் பின்னால் வேலைக்குச் சென்ற காயத்திரியின் அப்பா, ஓய்வெடுத்து முடித்துவிட்டு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்.

“அம்மா எனக்கு சாப்பாடு வேணாம். வழிலேயே நெறைய சாப்பிட்டேன்”, என்று வார்த்தை விழுவதற்குள், கட்டிலின் மீது அவள் உடல் சாய்ந்தது. சில நிமிடங்களில் குறட்டை.
அடுத்த வாரத் தொடக்கம்..திங்கட் கிழமை. காயத்திரியின் முகத்தில் சோகம்.
“பவழ மல்லி வாடலாம். ‘பிளாஸ்டிக்’ பூ எப்படி வாடும்? ஏம்மா இப்படி உக்காந்திருக்க?” என்று அவள் கூந்தலை வருடிய அப்பாவிடம் தன் குறையைச் சொன்னாள். இதற்கிடையில் மூன்று வீடுகளில், மூன்று கோபக் கனல்கள்.

“பாரு டீ. அவ சேட் ஹிஸ்டரி-ஐ வேவு பாத்தது நல்லதா போச்சு. நமக்கு டிமிக்கி கொடுத்துட்டு சரோவோட படம் பாக்கப் போயிட்டா”, முதல் கனல்; ஷாந்தி.

“நான் குடுத்த அல்வாவை எனக்கே திரும்பக் கொடுத்துட்டா பாரு டா மச்சா! பீச்சுக்கு தான் போயிருக்கனும் அவ”, இரண்டாம் கனல்; சரோ.

“இனிமே அவ கூட பேசவே மாட்டேன். வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டா. அதுக்கு காரணம் சொன்னா பாரு. அது தான் கடுப்ப கேளப்பிடுச்சு”, கடைசி கனல்; ஜெஸ்சி.

“அப்படி என்ன தான் சொன்னே?” காயத்திரியின் அப்பா.

“உண்மைய தான் பா சொன்னேன்”

“என்ன உண்மை?”

“தூங்கினேன் பா! எப்பவும் போல”, என்ற படி அவர் தோளில் சாய்ந்தாள்.

“அடப் பாவமே!சரி எழுந்திரி. மறுபடியும் போகவேண்டாமா?”

“ஹும்ம்.ஹும்ம்”, விழி திறந்தாள் மறுபடியும். அவள் கிளம்பும் நேரத்தில்,

“அடுத்த வாரம் அம்மாவை செக்கப்புக்கு கூட்டிகிட்டு போகணும். வாரக் கடைசிய காலியா வெச்சுக்கோ!” நான்காம் கனல் தயாரானது.

Series Navigation“நடிகர் சிகரம் விக்ரம்”ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *