விடியல்

This entry is part 12 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ராதிகாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்த திருமணம் . ராதிகா வீட்டின் கண்மணி . புத்திசாலி . இன்ஜினியரிங் வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிட்டாள். பிடித்த கணிதத்தில் பி.ஹெச்டி பட்டம் .உள்ளூர் கல்லூரியில் வேலை . பேசுவதில் , எழுதுவதில் எல்லாவற்றிலும் தெளிவு . பிறரைப் புண்படுத்தியதாக நிகழ்ச்சியே கிடையாது . யாராவது சுள் என்று பேசினாலும் ஒரு இளம் புன்னகையால் ஒதுக்கிவிடுவாள் . அவளுடைய வாழ்க்கையில் ஒரு மரண அடி .
ராஜரத்தினம் உள்ளூரில் இருப்பவன். குடும்ப வியாபாரத்தைக் கவனித்துக் கொள்பவன் . பீ .ஈ .படித்தவன். வியாபாரம் செய்யும் இடத்தில் திருமணம் வேண்டாமே என்றாள் ராதிகா.
எங்கு தவறு நேர்ந்தது ? தெரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு இப்போது என்ன ஆகப்போகிறது ? விவரங்கள் சிறிது சிறிதாகத்தான் தெரியவந்தது . அதற்குள் பூரண சிதைவு ஏற்பட்டுவிட்டது.

ராஜரத்தினம் எப்போது வைலேன்ட் ஆக நடந்து கொள்வான் , எப்போது இயல்பாக இருப்பான் என்பது
தெரியாத விஷயம் . அவனே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். யாருடனோ பேசிக் கொண்டிருப்பது போல் பேசிக் கொண்டிருப்பான். நேரம் ஆக ஆக உடம்பில் சிறிது சிறிதாக நடுக்கம் ஏற்படும் .அது அதிகரித்து வாய் கோணும். அருகில் இருக்கும் பொருள்கள் பறக்கும் . அவனுடைய அம்மா ஓடி வந்து மாத்திரைகளை அவன் வாயில் போடுவாள் முதலிரவுக்கு முன் “ராதிகா நீ படிச்சபொண்ணு . அவன் உடம்பு முடியாதவன் .பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருப்பவன் போல் தோணும் .ஆனால் சில சமயங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்வான் கல்யாணச் சடங்குகள் அவனுக்கு எரிச்சல் உண்டாக்கி யிருக்கலாம் .இந்தா இநத மாத்திரைக்களை வைத்துக்கொள் தேவைப்பட்டால் இந்த மாத்திரைக்களை அவனுக்கு கொடுத்துவிடு .கொஞ்சம் அனுசரிச்சிண்டு போம்மா “.
அவளுக்கு முதலிரவு பூகம்ப இரவு . மாமியார் கொடுத்த மாத்திரைகள் அவனை அடித்துப் போட்டாற்போல் தூங்கவைத்தது. வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பது ராதிகாவுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது .
தன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் ?
காலை ஏழு மணியாகிவிட்டது . அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. எப்படி கதவை திறந்துக்கொண்டு தான் மட்டும் தனியாக வருவது ? என்ன பதில் சொல்வது ? முடிவில் தான் மட்டும்,தன்னை சீர்படுத்திக் கொண்டு ,கதவை சிறிதளவு திறந்துக்கொண்டு வெளியே வந்து மாமியாரிடம் நேராக சென்றாள் . மாத்திரைகள் கொடுத்தது பற்றி சொன்னாள்.மாமியார் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.மகனுக்காகவா இந்த அணைப்பு , இல்லை தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை புரிந்துகொண்டதற்கான அணைப்பா என்று ராதிகாவுக்கு புரியவில்லை .
அன்றிலிருந்து இன்று வரை மாத்திரைகளை சடங்குபோல அவன் சாப்பிடுவது ராதிகா வீட்டிற்கும் தெரியவந்தது .நளினமான ராதிகாவுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழிந்தது .அவள் புற உருவத்தில் மாறுதலை உண்டு பண்ணியது .அவன் எப்போது என்ன,எவ்வளவு சாப்பிடுவான் என்பது முடிவில்லாததாக இருந்தது . இரவு பன்னிரண்டு மணிக்கு இவளை எழுப்பி சப்பாத்தி பண்ணிக் கொடு என்பான் . ஆறு,ஏழு என்று போகும் .தீடீரென்று டீ கேட்பான் . தானாகப் பேசிக் கொள்பவன் இவளைப் பார்த்து பேச ஆரம்பிப்பான் .இவள் முகத்துக்கு நெருக்கமாக தன் முகத்தை கொண்டு வந்து பேசிக்கொண்டே போவான் .இவள் பதில் சொல்லவேண்டும்.இல்லையென்றால் … முதன்முதலில் அவன் அடித்த அடி இன்னும் வலிக்கிறது . அதன் பிறகு எவ்வளவோ அடிகள் வாங்கிஆகிவிட்டது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அவன் உடம்பு கனமாக இருக்கும் .அவனை திருத்தி திரும்பிப்படுக்க வைப்பது கஷ்டமாக இருக்கும்.
ராதிகா குடும்பத்துக்கு அவன் அப்நார்மல் என்பது முழுமையாக தெரிந்துவிட்டது .எப்படி திருமணம் செய்து வைத்தார்கள்? என்ன முடிவு எடுப்பது? எப்படி சொல்வது? ராதிகா குடும்பத்தினர் ஊமை அடி வாங்கியவர்கள் போல் இருந்தனர். மிக இயல்பாக,சந்தோஷமாக சென்று கொண்டிருந்த ராதிகா வாழ்க்கை அடிபட்டுப்போனது , அவளுடைய குடும்பத்தனரையும் ஆட்டிவைத்தது . .. . .. … … … … கல்யாண பத்திரிகைகள் அடித்து சொந்தக்காரர்களுக்கு,நண்பர்களுக்கு கொடுத்தாச்சே ராஜேஷ் . இப்ப இப்படி சொல்றிங்களே.நான்என் அப்பாவிடம் இதைஎப்படி சொல்வேன்?

பாருங்க ஜெகதீசன் இன்னும் ஒரு வாரம் இருக்கு. உறுதியா இந்த இடத்துசம்பந்தத்தை நிறுத்துங்க. என்தங்கை வத்சலாவுக்கு நாங்க பார்த்து கழிச்ச இடம் இது. ராதிகாவும் வத்சலாவும் நெருங்கிய நண்பர்கள். உங்களால முடியலேன்னா உங்க அப்பா கிட்ட நான் வந்து பேசறேன் .அந்தப்பையன் நார்மலான பையன் இல்லே .செலவழிந்தது போகட்டும். பேப்பர்லே கலியாணம் நின்று போய் விட்டது என்று போட்டுடுவோம் .உங்க அப்பாவுடன் நானும் அவங்க வீட்டுக்கு வர்ரேன் .தைரியமாக பேச சொல்லுங்க

பத்திரிகை கொடுக்கப்போனபோது எதிர்கொண்ட தைரியமான ,அழுத்தமான பேச்சு

‘அப்பா இப்ப என்ன பண்றது ?’

‘குழப்பமா இருக்குடா ‘

‘என்னப்பா குழப்பம் .தைரியமா சொல்லிடலாம் ராஜேஷும் வரேன்னு சொல்றாரே.’ ‘உன் அம்மா கல்யாணம் நின்னு போச்சுங்கறத தாங்கமாட்டா ‘.

‘நிதானமா சொல்லிடலாம்ப்பா ‘.ராதிகா வாழ்க்கை பாழாச்சுன்னா நம்மாலதாங்க முடியாதுப்பா’.

உறுதியா கலியாணத்தை நடத்தினார்.விஷயம் கசிந்து வெளியே வந்த போதுஅதற்கு முதல் பலியானது ராதிகாவின் அப்பாதான்.
****** ***** ******
-“ ராதிகா குழந்தை எப்படி இருக்கா? ” வத்சலா கேட்டாள்.

“அம்மா பாத்துக்கறா.இதுவரைக்கும் பிரச்னை இல்லே. என்ன குழந்தையை என்கூட வச்சிக்கமுடியலே. ”

” ராதிகா நீ தான் தைரியமா முடிவெடுக்கணும் . இன்னும் இதுலே சிக்கிண்டு கஷ்டப்படக்கூடாது . ”

” என்ன பண்ணலாம்ன்னு சொல்லறே ? ”

” தப்பா நினச்சிக்கலேன்னா …..டிவோர்ஸ் பண்ணிடு . இந்த ஜாதகம் எனக்கும் வந்ததாம் .பையனைப் பற்றி நல்ல விஷயங்கள் வரலேன்னு ஒதுக்கிட்டா.. என் அண்ணா சொன்னார் .பெரியவங்க விஷயம்னு இருந்துட்டேன். அப்போ விவரம் தெரிச்சிருந்தா உன்கிட்டே சொல்லிருக்கலாம் இல்லையா ? ”

“ரொம்பவும் வருத்தமாக இருக்கு வத்சலா ”

******* ****** *************

ராதிகா நான் ஏன் இப்படி நடந்துக்கறேன்னு தெரியமாட்டேங்குது .யாரோ என் நரம்பை முறுக்கறாப் போல இருக்கு. பல்லை கடிக்கிறேன்.என்ன செய்யறேன்னு தெரியமாட்டேங்குது.உன்னை போட்டு அடிச்சுடறேன். நானும் மத்தவங்கபோல இருக்கணும்னு ஆசைபடறேன்.இன்னும் எத்தனை நாள் தான் கொத்துக்கொத்தாய் மாத்திரைகளை சாப்பிடுவதுன்னு தெரியலே
அப்பா சின்ன வீடு வச்சிருக்கிறார். நம்ம கல்யாணத்துக்கு அவளும் அவ பையனும் வந்திருந்தாங்க. அம்மாவாலே தங்கமுடியலே.ஒருசமயம் கோயில்ல அவங்களுடன் அப்பா வந்திருந்தாங்க .அந்த பையனை கீழே தள்ளிட்டு ஓடி வந்துட்டேன் .அன்று இரவு என்னை கட்டையால் அடித்துப்போட்டு போய்ட்டார் .

எங்க அப்பா வீட்டிலே இப்படி வியாதி வந்துடுமாம். நான் என்ன பண்றது ……பற்களை நறநறன்னு கடிக்க ஆரம்பித்து மயங்கி விழுந்தான்.

******** ***** *******

ராகவன் அங்கிள் .

எனக்கு கல்யாணம் ஆனதிலேர்ந்து இன்று வரை என் மாமனாரை பார்க்க அடிக்கடி வரும் ஒரே நண்பர். அவர்கள் இருவரும் பேசும் இடத்தில் சிரிப்பு இருக்கும், உரிமை இருக்கும், கோபம் இருக்கும், குரல்கூட உச்சிக்கு போகும் .கோயம்புத்தூர் போகும்போது பார்த்து பேசணும்.

“என்ன ராதிகா , கோயம்புத்தூர் போறியாமே ! ” “ஆமாம் மாமா.பாரதியார் சர்வகலாசாலையில் இருபத்தோரு நாள் பயிற்சி .”

“ராகவனுக்கு போன் போட்டு சொல்லிடறேன் .அவன் வீட்டிலேயே தங்கிக்க.”

“ஹாஸ்டல்ல தங்கிக்கறது தான் சவுகரியம்.நான் நடுவிலே போய் பாத்துட்டு வர்ரேன்.”

“அவன் போன் நம்பரையும் வீட்டுவிலாசத்தையும் எடுத்துக்கோ . ”

” நீ அவள ஏமாத்திட்டே , .அவங்க வீட்லே முன்கூட்டி சொல்லிருக்கணும். எப்படி இருந்த பொண்ணு எப்படி போயிட்டாபாரு .”

எல்லாம் தன்னைப் பற்றியது என்று ராதிகாவுக்கு தெரியும். ஆனாலும் நேரிடையா அவரிடம் எப்படி பேசுவது? இந்த தடவை நிச்சயமா பேசியே ஆகணும்.

********** ********* *********

இரவு சாப்பிட்டு விட்டு கூடத்தில் வந்து உட்கார்ந்தனர் . ” என் பிரெண்ட் எப்படி இருக்கான் ? ”

“மாமா நல்ல இருக்கார் , அங்கிள் “.

“உன் குழந்தை ? ராஜிக் குட்டி எப்படியிருக்கு ? ” ” ம் ம் ….இருக்கா. ”

“அப்படின்னா? ”

” பாட்டிக்கிட்டேஇருக்கா .கொஞ்சம் கொஞ்சமா விவரம் ,சூழ்நிலை தெரியவரது .”

கனத்த அமைதி நிலவியது.

ஒவ்வொருவருக்கும் மனதில் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஏக்கம். ஆனால் நெஞ்சுக்கு மேல் வரவில்லை.

” நான் என்ன பண்றதுஅங்கிள் ? என்னை பாருங்களேன் . எப்படி குண்டடிச்சிருக்கேன் ? மனதுக்கு வருத்தமாய் இருக்கு.எனக்கு மன இறுக்க நோய் வந்து மன நோயாளியாய் போய்டுவேனோன்னு பயமா இருக்கு…”

****** ************ ************

என்ன அங்கிள் பேசமாட்டேங்கிறீங்க ?

என்னத்தம்மா பேசறது ? நெருங்கிய நண்பன் , இப்படி செய்வான்னு எதிர்பார்கலே. எங்கிட்டே ராஜா கல்யாணத்தை பத்தி பேசவே இல்லே. டேய் ராஜாவுக்கு நிச்சயம் பண்ணிட்டேன்னு சொன்னான். அந்த குடும்பத்திட்டே முழு விவரம் சொல்லிட்டியான்னு கேட்கறேன் . ‘ இப்படி நேர்மையா பேசித்தான் வந்த வரனெல்லாம் தட்டிப்போச்சு ‘ன்னு சொன்னான். ராஜாவுக்கு கல்யாணம் பண்ணறதுன்னா டாக்டரிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் செய்யனும்னு குடும்ப டாக்டர் சொன்னார். சில சமயங்களிலே பித்து பிடித்தவன் போல் இருப்பான். பொண்ணு வீட்டிலே சரின்னுட்டாங்க .எனக்கும் சம்மதம்னு சொல்லிட்டேன் என்கிறான்.அது எப்படி உங்க வீட்லே தீவிரமா விசாரிக்கலைன்னு .தெரியலே ”

“அங்கிள் இந்த வரன் வேண்டாம்னு சொன்னேன். நல்ல இடம்னு சொல்லி சம்மதிக்க வச்சிட்டாங்க”

” அவன் குடும்பமே ஒரு மாதிரியான குடும்பம்மா . எப்ப பாத்தாலும் கூச்சல் ,சண்டை . சுமுகமே இருக்காது எங்கவீட்டுக்கு வந்துடுவான். அழுவான். ராஜா .அம்மா நல்ல குடும்பத்திலேர்ந்து வந்தவங்க.ரொம்பவும் அமைதி. எடுத்து பேசமாட்டாங்க.”

” அங்கிள் , தப்பா எடுத்துக்கலேன்ன …ஒவ்வொரு ராத்திரியும் நரகம் தான். எப்ப அடிப்பார் , எப்ப கழுத்தை நெரிக்க வருவார் , எப்ப சாப்பிடுவார்….ஒண்ணும் தெரியாது. அடிக்க ஆரம்பிச்சார்னா உடனே மாத்திரை கொடுத்தா கொஞ்சம் அடியுடன் தப்பிக்கலாம். இல்லேன்னா … ” .ஒரு விக்கல் ராதிகாவின் தொண்டையிலிருந்து எழுந்தது.

“அங்கிள் இப்ப நான் என்ன பண்ண ? அப்பா வீட்டுக்கு போயிடட்டுமா . இல்லே விவாகரத்து செஞ்சிடலாமா? மனசிலே ஒரே குழப்பமா இருக்கு. இல்லே அவர் கொடுக்கற அடியெல்லாம் வாங்கிண்டு ஒரு நடமாடும் ஜடமா அங்கயே இருக்கட்டுமா? காலேஜிலே எல்லோருக்கும் தெரியும்.என்கிட்டே படிக்கிற பிள்ளைங்களுக்கும் தெரியும்.”

ராகவன் ஒன்றும் பேசவில்லை

” என்ன அங்கிள் பேச மாட்டேங்கிறீங்க ?

” ஒரு பக்கம் நண்பன். இன்னொரு பக்கம் நீ . என்ன பண்றது. சொல்ல முடியாம தவிக்கிறேன்.”

” அங்கிள் , நீங்க சொல்றது எனக்குத்தான் பொருந்தும் .”

” இங்க பாருங்க , இந்தமாதிரி பேசி தப்பிச்சிக்க பாக்காதீங்க. உங்களை மாத்தவே முடியாது.” அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ராகவன் மனைவி பேசினாள்.

“ஏதோ வெண்டக்கா வாங்கற சமாச்சாரமா இது !.பொறுப்பான முடிவு எடுக்கணும் . அவசரமா ஒரு முடிவுக்கு வந்துறக்கூடாது .”

” என்னமோ ராதிகா கல்யாணம் போன மாசம் தான் நடந்தா போல பேசறிங்க . இப்ப நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பதில் சொல்லுங்க .”

” அடேங்கப்பா ம் ம் கேளு .”

” உங்க நண்பருடைய பையனுக்கு இருக்கறாப்போல வியாதி உள்ள பொண்ணை அவனுக்கு கல்யாணம் செஞ்சிடராங்கன்னு வச்சிக்கீங்க. மறைச்சிட்டாங்கன்னு பின்னாலே தெரியவருது. அப்பா ஒங்க நண்பர் என்ன பண்ணுவார்? நீங்க சொல்றாப்போலே நிதானமா யோசிச்சு முடிவு எடுப்பாரா ?”

” அதுஎப்படி? ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சுடுத்துனா உடனே விவாகரத்து பண்ணிட்டு வேற பொண்ணை கட்ட வேண்டியதுதான் ” ” ராதிகா, உங்க மாமா எப்படிப்பட்டவர்னு காண்பிச்சுட்டார் பாத்தியா ! இப்படித்தான்.குடும்பத்தை உருப்பட விடமாட்டாங்க. ராதிகா எழுந்து வா . நாம ரூமுக்கு போய் தூங்கலாம். நல்லா நிம்மதியா தூங்கு . காலைல எழுந்து ஹாஸ்டலுக்கு போலாம் . ”

உறுதியான முடிவுடன் ராதிகா அவள் கூட ரூமுக்குச் சென்றாள். அவள் உடம்பு காற்றில் மிதப்பது போன்ற விடுதலை உணர்ச்சி ராதிகாவின் மனதெங்கும் பரவிற்று. . *** *** ***
பத்மநாபன்
mcpaddu1967@gmail.com

Series Navigationபிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழாஅறமற்ற மறம்
author

பத்மநாபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *