கூடு

This entry is part 14 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் இல்லை.கலையரசன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். அவன் இப்போது மடாலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனைத்திலுமே தோல்வியடைந்திருக்கிறான். காதல்,கல்வி,வேலை என அனைத்தும் அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன.

ஊருவிட்டு ஊரு வந்து சென்னையிலுள்ள பெண்ணைக் காதலிக்க நெஞ்சுரம் வேண்டாமா? கடைசியாக அப்பெண் வானனும் பூமியும் எப்போதும் ஒன்று சேர்வதில்லை என வசனம் பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டாள்.

கல்லூரியில் கடைசி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் வகுப்பில் தான் தேர்ச்சி பெற முடிந்தது கலையரசனால்.

கிட்டதட்ட அரை சதம் அடித்திருப்பான் நேர்முகத் தேர்வில். அதில் சில இடங்களில் வேலை பார்த்தும் சரிவராமல் விட்டுவிட்டான். மனதை ஒரு முகப்படுத்தி எந்த இடத்திலேயும் அவனால் நிலைக்க முடியவில்லை.

தோல்வியால் துவண்டிருந்த அவன் இந்த உலக இயக்கத்திற்கு அடித்தளமாக விளங்கும் சக்தியை அறிந்து கொள்வதற்கு முயன்றான்.

பணம் பிரதானமாய்ப் போன உலகமாக ஏன் மாறியது இவ்வையகம் என தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பேருந்து முன்னோக்கிச் செல்ல மரங்களும்,வீடுகளும் பின்னோக்கிச் சென்ற வண்ணமிருந்தன. இதுவரை தான் சந்தித்த நபர்களில் பலபேர் தாங்கள் என்னமோ வானிலிருந்து குதித்து வந்தவர்கள் மாதிரியும் மற்றவர்கள் மட்டும் பிறந்து வந்த மாதிரியும் நடந்து கொண்டதைக் கண்டு மனம் குமைந்திருக்கிறான்.

பணம் முதன்மைப்படுத்தப்படும் உலகில் வாழப்பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வது? பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி எது. வாழ்க்கையின் பொருள் என்ன. பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் மனிதன் சிறு தூசு என தன்னை உணராமல் ஏன் தான்தோன்றியாக் குதி்க்கிறான்.

உண்மையின் பாதை கடினமானது என்பதை உணர்ந்திருந்தான் கலையரசன். கைபட்டவுடன் சுருண்டு கொள்ளும் மரவட்டை மாதிரி தோல்வி என்ற அடி கிடைத்த பின் மனம் ஏன் உள்முகத் தேடலில் ஈடுபடுகிறது.ஆலயங்களில் கூட்டம் குவிகிறது இருந்தும் பாலத்காரமும்,கொலையும்,திருட்டும் குறைந்திருக்கிறதா என்ன?

கோவிலிலுள்ள தெய்வங்கள் மனிதனால் படைக்கப்பட்டவை, ஆதலால் தான் தங்க ஆபரணங்கள் சூட்டி அழகு பார்க்கிறார்கள். ஒவ்வொருவனுக்கும் தனித்தனி தெய்வமா என்ன? எல்லோருக்கும் ஒரே தெய்வம் தானே, தெய்வங்களை நேசிப்பவர்கள் அவர்களின் படைப்பான மனிதர்களை மட்டும் ஏன் வெறுக்கிறார்கள்.

மனசாட்சிக்கு விரோதமாய் தவறுகளை செய்துவிட்டு யாகம் வளர்த்தால் சொர்க்கத்துக்கான சாவி கையில் கிடைத்துவிடுமா என்ன? மக்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும், சித்து வேலைக் காட்டுபவர்களும் தான் பணத்தை குவிக்கிறார்கள். இதெல்லாம் விட கொடுமை இவர்களின் நன்கொடையில் தான் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த பாரத மண்ணில் எத்தனையோ ஞானிகள் தோன்றி இருக்கிறார்கள். தெய்வ அனுபூதி பெற்ற அவர்களிடம் மக்கள் சென்று செல்வத்தையும், வசதி வாய்ப்பையும் வேண்டுகிறார்கள். இந்த பேருந்து மாதிரி காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யங்கள், சக்கரவர்த்திகள், பேரழகிகள் அடித்துச் செல்லப்பட்டு மண்ணோடு மண் ஆனார்கள்.

குருமார்களிடம் நான் மட்டும் ஏன் அவஸ்தைபடுகிறேன் எனக் கேட்டால். கர்ம வினை என இரண்டே வார்த்தைகளில் வாயை அடைத்துவிடுவார்கள். கண்ணுக்குப் புலனாகாத வலையில் சிக்கிக் கொண்டுள்ளேன் என்பது மட்டும் உண்மை. தீபம் இருட்டை விரட்டுவது போல குரு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் ஒளியேற்ற மாட்டாரா என மனம் சரணடைய புனிதருடைய பாதக் கமலத்தை தேடியலைகிறது.

வாழ்க்கையின் இன்னல்களைக் காணும் போது மரணம் ஒரு விடுதலையாகப்படுகிறது. மரண சர்ப்பம் எவரையும் தீண்டாமல் விடாது என்கிற போதும் மனிதர்கள் அகங்காரத்துடன் நடந்து கொள்வது ஏன்? கண்முன்னே ஒவ்வொருவராக சாகும் போதும் மனிதன் தன்னை சாவு நெருங்காது என ஆணவத்துடன் நடந்து கொள்வது எதனால்?

காலமே புதிர்களைப் போடுகிறது. காலமே புதிர்களை அவிழ்க்கிறது. மனிதம் தொலைத்த மானுடம் தன்னுடைய கோர முகத்தை மறைத்து முகமூடியுடன் உலாவுகிறது. மடாலயத்தில் ஓர் இரவு கழித்த பிறகாவது வாழ்க்கையில் திருப்பம் நேருமா என்ற யோசனையில் பயணித்து வந்தான் கலையரசன்.

“மடப்புரம் எல்லாம் எழுந்து வாங்க” என்ற கண்டக்டரின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. பேருந்தை விட்டு கீழே இறங்கினான். கோயிலை நோக்கி நடந்தான்.மன்னார்குடியிலிருந்து கிளம்பும் முன்பு சிக்கலில் உள்ள தனது நண்பன் முகுந்தனுக்கு போன் செய்து எட்டரை மணிக்குள் வந்துவிடச் சொல்லியிருந்தான்.

தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தியானம் செய்தான்.கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஏழு ஆனது.முகுந்தனை எதிர்பார்த்து கோயில் பிரகாரத்தில் அமர்ந்தான்.

முன்பு இரண்டொரு முறை இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறான்.இரவில் எங்கு படுப்பார்கள் என்ற விவரமெல்லாம் கலையரசனுக்குத் தெரியாது.முகுந்தன் தான் அடிக்கடி வியாழக்கிழமை இரவுகளில் வந்து தங்கிவிட்டுப் செல்வதாகச் சொல்வான்.

ஆலயத்திற்கு வருவோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிது.மணி ஒன்பதரையை நெருங்கியது. அப்போது பின்னால் யாரோ தொடுவது போலிருந்தது கலையரசன் திரும்பிப் பார்த்தான், முகுந்தன் நின்றிருந்தான்.கலையரசனுக்கு இப்போது தான் உயிர் வந்தது.

முகுந்தன் “இன்றிரவு தங்க வேண்டாம் வா போகலாம்” என்று சொல்லி கலையரசனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். இவ்வளவு வேகமாக ஒருவனால் நடக்க முடியுமா என வியந்தபடி அவன் பின்னால் சென்றான் கலையரசன்.இருவரும் திருவாரூர் பேருந்து நிலையத்தை அடைந்தார்கள்.”மன்னார்குடிக்கு இதான் கடைசி பஸ்” ஏறு என்றான் முகுந்தன்.

கலையரசனுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை பேருந்தில் ஏறி அமர்ந்தான்.வீட்டை அடைந்து படுத்துறங்கினான்.காலை மணி ஒன்பது இருக்கும் தொலைபேசி அழைப்பு மணி ஒலித்தது, கலையரசன் போனை எடுத்தான்.மறுமுனையில் முகுந்தன் “நேற்றைக்கு என்னால் வரமுடியலைடா மாப்ள, வேலை இருந்துச்சி தப்பா நினைச்சிக்காத. நீ கோயில்ல தான் படுத்து இருந்தியா?” என்றான்.

உறைந்து போனான் கலையரசன், அப்போ வந்தது யாரு என்று தனக்குள் கேட்டபடி நாற்காலில் சாய்ந்தான்.

ப.மதியழகன்

Series Navigationஅறமற்ற மறம்நூலிழை
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *