வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்

This entry is part 30 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தனக்குரிய இருக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அது மேற்கொள்ள நேர்ந்த போராட்டங்கள், பல முனைகளிலிருந்தும் செலுத்தப்பட்ட அழுத்தங்களின் விளைவாக அது தனது முயற்சியில் அடைந்த தோல்வி, சமூக அமைப்பில் ஒரு கெளரவமான தட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அது மேற்கொண்ட மாற்று நிலைப்பாடு ஆகியவற்றை மிக விரிவாக ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்யும் ஆவணமாகத் தீவிரம் கொள்கிறது. பரந்துபட்ட ஆய்வின் நகர்வு, பல முகமூடிகளைக் கிழித்தெறிந்தும் பொதுப் புத்தியில் பதிந்து விட்டிருக்கிற நம்பிக்கைகளைக் கலைத்துப் போட்டும் முன்னேறுகையில் நூல் நாடகத் தன்மையுடன் வாசிப்பில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. வெறும் வறட்டுத்தனமான தெரிவுகளாக அல்லாமல் வாசகன் சலிப்படையாமல் ஆர்வத்துடன் படிக்குமாறு பக்கங்கள் விரைகின்றன.
கிழிபடும் முகமூடிகளுள் குறிப்பிடத்தக்கது, தமிழ்ப் பண்டித உலகில் ஒர் உயர்ந்த பீடம் அளிக்கப்பட்டுள்ள பிஷப் கால்டுவெல்லினுடையது.
திருநெல்வேலி மாவட்டமும் அதற்குத் தெற்கே நிலப் பரப்பு குறுகலாய் முற்றுப்பெறும் கன்னியாகுமரி மாவட்டமும் நாடார் அல்லது சாணார் வகுப்பினர் மிகுதியும் வாழும் பகுதிகள். இவற்றில் கன்னியாகுமரி மாவட்டம் இந்த நூல் ஆய்வுக்கு மேற்கொள்ளும் கால்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. க்ன்னியாகுமரியிலும் சரி, திருநெல்வேலியிலும் சரி, இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் கிறிஸ்தவ மதமாற்றம் மிக மும்முரமாய் நடந்தேறியுள்ளது. எனினும் மற்ற வகுப்பாரைப் போலன்றி மதமாற்றம் நிகழ்ந்தான பிறகும் சாணாரிடையே வியக்கத்தக்கவாறு வகுப்பொற்றுமை சமயங்களில் வீரியத்துடன் எழுவதற்கு மதம் ஒரு தடையாக இருக்க வில்லை. இது தேசிய உணர்வுக்குச் சமமானது. சாணார் என்கிற பிரிவு, சமூகத்தில் எதிர்ப்புக் காட்டாது தலைமுறை தலைமுறையாக மிகவும் இயல்பாக அடங்கிப் போகிற கீழ்ச் சாதி அல்ல என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.
இதில் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் மத மாற்றம் என்பது கொள்வினை-கொடுப்பினையில் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை. ஹிந்து நாடார்-கிறிஸ்தவ நாடார் என்று இரு மதப் பிரிவினராக இவர்கள் இருந்து வருகிற நிலை ஏற்பட்ட பிறகும், இன்றளவும் இவர்களிடையே மதம் என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெண் எடுப்பதும் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக ஹிந்துக்களும் கிறிஸ்தவராக மதம் மாறியவர்களும் அவரவர் சமய நம்பிக்கைகளுடன் வாழ்வது நாடார் சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது ((எனினும் எல்லாப் பிரிவினரிடயேயும் இவ்வாறான மத வேறுபாடு பாராட்டாத கொள்வினை கொடுப்பினை வழக்கில் இல்லை என ஆய்வாளர் அ. கணேசன் தெரிவிக்கிறார் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் இன்றைய சூழலில் இந்த ஒற்ற்றுமைக்கு பங்கம் விளையத் தொடங்கியுள்ளது என்றும் தெரிய வருகிறது).
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே மட்டும் எத்தகைய நிலையிலும் தமது தனி அடையாளத்தை இழந்துவிடலாகாது என்கிற உறுதிப்பாட்டுடன் அதைக் காத்துக் கொள்கிற அளவுக்குத் தமது வகுப்பு அல்லது சமூகப் பிரிவின் மீது சுயாபிமானமும் பெருமிதமும் இருக்குமானால் அது பொதுவாக இயல்பாகவே போர்க் குணம் வாய்ந்த க்ஷத்திரிய வர்ணத்திற்குரிய லட்சணமாகவே இருக்கக் கூடும்.
எனில் இந்தச் சாணார் அல்லது நாடார் எனப்படுவோர் யார்?
இந்தக் கேள்விக்கு மிகவும் விரிவாக விடை அளிக்கிறது இந்த ஆய்வு நூல். விடை இவ்வாறு விரிவடைகையில், நூலுக்கே தலைப்பாக அமையும் அளவுக்கு முக்கியத்துவம் தரப்படும் தோள் சீலைக் கலகம் இரண்டாம் பட்சமாகி, நாடார் அல்லது சாணார் எனப்படுவோர் நாடாளும் சான்றோர் குலத்தவரே என்பதை நிலை நிறுத்துவதே லட்சியமாகக்கொண்ட ஆவணமாகி விடுகிறது.
நாடார் எனப்படுவோர் நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டுமின்றி அவற்றுக்கு வடக்கே ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கணிசமாக் இருந்து வருகின்றனர். தஞ்சையிலுங்கூட இவர்கள் பெருமளவில் உள்ளனர். தூத்துக்குடி அருகே மிஷனரிகள் நாசரேத் என்கிற குடியேற்ற ஊரை உருவாக்கியபோது அதில் தஞ்சையிலிருந்துதான் மத மாற்றம் செய்யப்பட்ட நாடார் பெரு மக்களைக் குடியேற்றியதாகத் தகவல் உண்டு.

தஞ்சைக்கும் வடக்கே தொண்டை மண்டலம் என்று வந்தால், தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்கிற வழக்கே உ.ள்ளது. இந்தச் சான்றோர் சாணார்தான் என்பதை நிறுவுகிறது, சென்னை கலெக்டராக இருந்த எல்லிஸ் துரை, சென்னைப் பட்டணத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வெட்டிய இருபத்தேழு கிணறுகள் பற்றிய தகவலைப் பதிவு செய்யும் வகையில் எழுதிய தமது செய்யுளில் எடுத்தாண்ட ’ஜெயங்கொண்ட தொண்டிய சாணார் நாடு’ என்ற வழக்கு. இதனை இந்நூலும் பொருத்தமாக நினைவூட்டுகிறது. தொண்டை மண்டலத்துச் சான்றோராகிய சாணார் ஆளுமைக்க்குரிய அதிகாரம் படைத்தோர் என்பதைச் சுட்டும் விதமாக கிராமணி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் நூல் கவனப்படுத்துகிறது.

நமது சமூகத்தில் சாதி அமைப்பானது மேல், கீழ் என்கிற செங்குத்தான கோபுர அடுக்கு அமைப்பாக உருவானது அல்ல. மாறாக, அது கிடையான, அதாவது படுக்கைவாட்டில் உருவான அமைப்பு என்கிற கருதுகோளுக்கு வலுவூட்டுவதாக இந்த நூல் உள்ளது.

ஐரோப்பியப் பார்வையில் மட்டுமே மேல்சாதி கீழ்சாதி என்கிற செங்குத்து அடுக்கிலான சாதி அமைப்பு தென்பட்டுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை வழியிலேயே ஆய்வைத் தொடர்ந்து பழகிய நமது ஆய்வாளர்களும் இன்றளவும் ஐரோப்பியப் பார்வையிலேயே சாதியமைப்பை அணுகி வருகின்றனர். இத்தடத்திலிருந்து விலகி, சுயமான பார்வையுடன் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் சாதியமைப்பை அணுகியிருப்பது நூலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

சாதிகள் என்பவை உயர்வு-தாழ்வு என்கிற அடிப்படையில் உருவானவை யல்ல; ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிகள் கூட்டணியின் கை மேலோங்கி, உயர்வுநிலை பாராட்டி, பிற சாதிகளைத் தம்மைவிடத் தாழ்வானவை என்று சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை வலிந்து நிறுவி வந்துள்ளது. எனவே சாதிகளிடையே உயர்வு-தாழ்வு என்பது அவ்வப்பொழுது இடம் மாறி வந்துள்ளது. நாடாளும் வகுப்பினரான நாடார் அல்லது சாணார் இவ்வாறு வேளாளர் வகுப்பினரின் கரம் மேலோங்கியபொழுது தாழ்வடைய நேரிட்டது என்பதை இந்நூல் பல கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் சான்றாக முன்வைத்து நிறுவுகிறது.

இதன் அடிப்படையிலேதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக விளங்கிய குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த தோள் சீலைக் கலகம் ஆராயப் படுகிறது. சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் ஆதலால் சாணார் சாதிப் பெண்களுக்கு இடுப்புக்குமேல் சேலைத் தலைப்பை தோளில் சுற்றி மார்பகங்களை மறைக்கும் உரிமை இருந்ததில்லை என்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் சாணார் சாதியினரை மத மாற்றம் செய்து அவர்களை நாகரிகப் படுத்திய பிறகுதான் சாணார் சாதிப் பெண்கள் ரவிக்கை அணிந்தும் சேலைத் தலைப்பால் மார்பகங்களை மூடியும் நடமாடத் தொடங்கினர் என்பதும், சாணார் சாதிப் பெண்டிர் இவ்வாறு மார்பகங்களை மறைத்துக் கொள்வதற்கு உயர் சாதியினரான நாயர்களும் பிள்ளைமார்களும் தடை விதித்தபோது, அதனை எதிர்த்து சாணார் நடத்திய உரிமைப் போருக்கு மிஷனரிகள் துணை நின்று அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்கச் செய்தனர் என்பதும் மிஷனரிகள், ஐரோப்பிய ஆய்வாளர்கள், அவர்கள் வழியில் ஆய்வு செய்த நமது ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தி.

குறிப்பாகத் தமிழ் நாட்டுச் சாதிகள் குறித்து ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் எழுதிய ஐரோப்பியருள் பிஷப் கால்டுவெல் முக்கியமானவர். ஆதாரப்பூர்வ மான ஆய்வாளர் என்று கொண்டாடப்படுகிற இவர், திருநெல்வேலிச் சாணார்கள் என்ற தமது நூலில் சாணார்கள் கீழ்ச் சாதியினர் என்றே வகைப்படுத்துகிறார். அவர் எழுதிய சில கட்டுரைகளிலும் ஒரு இடத்தில் அவர்களை சூத்திரராகக் கொள்ள வேண்டும் என்றும் இன்னொரு இடத்தில் சூத்திரரைவிடக் கீழ்ச் சாதியினர் என்று தோன்றுவதாகவும் எழுதுகிறார். பிறகு அவரே சாணார்களில் சிலர் அவர்கள் வாழும் அவ்வப் பிரதேசங்களின் ஆட்சியாளர்களாகத் தோற்றமளிக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். இந்த முரண்பாட்டை இந்நூலாசிரியர்கள் சிந்தனைத் தெளிவின்மை என்ற விமர்சனத்துடன் பதிவு செய்துள்ளனர்.

சாணார்கள் கீழ்ச் சாதியினர் எனில் அவர்களுக்கு நில உடைமையோ தமக்குச் சொந்தமான நிலத்தை தானம் வழங்கும் பாத்தியதையோ இருந்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் முதன் முதலில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக லண்டன் மிஷனரிக்கு நிலக் கொடை அளித்தவர் ஒரு சாணார் என்கிற தகவலை இந்நூல் அளிக்கிறது. மேலும், தோள் சீலைக் கலகம் நடந்த திருவிதாங்கூர் சமஸ்தான ஆவணங்களிலேயேகூட சாணார் எனப்படும் நாடாக்கமார் சிலர் நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளமைக்குச் சான்று உள்ள விவரத்தையும் இந்நூல் தெரிவிக்கிறது.

இதேபோல் வேள்வி நடத்திக்கொடுத்த, வேத அத்யயனம் செய்த பிராமணருக்கும் சாணார்கள் நில தானம் செய்தமைக்கு ஆதாரம் உண்டு.

கால்டுவெல்லேகூட, ’தாம் குடியேறிய இடையன்குடி ஊரினை இவ்வூருக்கு அருகில் உள்ள குட்டம் என்ற சிற்றூரில் வாழ்ந்த மார்த்தாண்ட நாடாக்கள் எனப்படும் சான்றோர் குல நிலைமைக்காரர் பிரிவு நிலக்கிழாரிடமிருந்து 99 வருடக் குத்தகைக்குப் பெற்றார். இப்பகுதியில் குடியிருந்த அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மக்களுமே குட்டம் மார்த்தாண்ட நாடாக்களுக்கு ஆண்டு தோறும் குடியிருப்பு வரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகள் ஆகியவற்றைச் செலுத்தி வந்தனர்’ என்றும், ’குட்டத்தைச் சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப் பற்று, செட்டியாப் பற்று, தண்டு பற்று, பரமன் குறிச்சி, பள்ளிப் பற்று, செம்மறிக்குளம், வீரப்ப நாடார் குடியிருப்பு, காயாமொழி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் எல்லாம் (பல்வேறு சாதிகளைச் சேர்ந்த) தம் குடிமக்கள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர்’ என்றும் நூலாசிரியர்கள் தகவல்கள் அளிக்கின்றனர். இந்த உண்மை தெரிந்திருந்தும் கால்டுவெல் திருநெல்வேலி சாணார்கள் என்ற தமது நூலில் சாணார் சமூகத்தவர் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், ஹிந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும் வைதிக சமயத்துக்கு மாறுபட்ட சிறு தெய்வ வழிபாட்டினையே (இதுவும் ஹிந்துஸ்தானத்து மக்களைப் பலவாறு பிரித்துப் பின்னங்களாக்கினால் எளிதாக அவர்களை மத மாற்றம் செய்துவிடலாம் என்கிற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்டுவாதம்தான்!) பின்பற்றி வருகிறார்கள் என்றும் மந்த புத்திக்காரர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்.

நாடார் அல்லது சாணார் வகுப்பில் உயர்நிலை, இடைநிலை, கடை நிலை என்ற பிரிவுகள் இருப்பதும் உண்மையே. இதனை நூலாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும், பெரும்பாலான சாதிகளில் இவ்வாறான உயர், இடை, கடை நிலைகள் இருக்கவே செய்கின்றன. நாடார் வகுப்பு மட்டும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதையும்கூட கால்டுவெல் அறியாதவர் அல்ல. எனினும், ‘தாழ்ந்த கீழ்ச் சாதிகளில் உயர்ந்த அடுக்குகளைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கீழ் அடுக்கைச் சேர்ந்தவர்கள் என்றோதான் இவர்களை வர்ணிக்க முடியும்; இவர்கள் எழுத்தறிவில்லாத மூர்க்கர்கள்; ஆயினும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து பல மடங்கு உயர்ந்தவர்கள்’ என்றெல்லாம் தமது நூலில் சாணார்களைப் பற்றி மனம்போன போக்கில் விவரிக்கிறார். திருநெல்வேலி மிஷனரிகளின் மதமாற்றப் பணி பற்றிய உரையில், ’பிற சூத்திரச் சாதியினர் ஹிந்து சமயக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதுபோல் சாணார்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சாணார் பெண்கள் இடுப்புக்குமேல் உடையணிவதில்லை’ என்றும் குறிப்பிடுகிறார் (இந்தியாவில் உள்ள கீழ்ச் சாதி மக்களை நாங்கள் அரும்பாடுபட்டு மத மாற்றம் செய்து அவர்களை விவரம் தெரிந்தவர்களாக நாகரிகப்படுத்தி வருகிறோம். இதற்காக நாங்கள் மேல் சாதியினரின் கடும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றெல்லாம் அங்கலாய்த்து, தம் நாட்டு மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று நன்கொடையினை அதிக அளவில் திரட்டுவதே இதன் நோக்கம்).

சாணார் வகுப்புப் பெண்டிர் கிறிஸ்தவ மத மாற்றத்திற்குப் பிறகே இடுப்புக்கு மேல் ஆடை அணியும் வழக்கத்தை மேற்கொணடனர் என்றும் அது பிறகு ஹிந்து சமயத்தில் தொடர்ந்து நீடித்த சாணார் வகுப்பிலும் பின்பற்றப்பட்டது என்றும் கருதுவது தவறான தகவல் என்பதைப் பல வலுவான ஆதாரங்களுடன் நூலாசிரியர்கள் நிறுவுகின்றனர். மதம் மாறாத சாணார் வகுப்புப் பெண்டிரும் ரவிக்கை அணிந்து வந்துள்ளனர் என்பதை நிரூபணம் செய்யும் புகைப்படங்களும் பழங்காலச் சித்திரங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், கேரளத்தில் நாயர் சாதிப் பெண்டிர் இடுப்பில் வெறும் முண்டு மட்டும் கட்டிய நிலையில் வெற்று மார்புடன் நடமாடி வந்துள்ளதைக் காட்டும் படங்களையும் நூலில் காணலாம்.

(நானே கூடச் சிறுவனாக இருக்கையில் நாயர் சாதிப் பெண்களில் எல்லாப் பருவத்தினரும் இடுப்பில் மட்டும் ஒரு முண்டு (நான்கு முழ வேட்டி)உடுத்தி வெற்று மார்புடன் சர்வ சாதாரணமாக எங்கும் சென்று வருவதை எனது பூர்விக கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம் பார்த்துள்ளேன்).

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் பகுதியாக அமைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையினராக உள்ள சாணார் மட்டும் ரவிக்கை அணிந்தும் சீலைத் தலைப்பால் மார்பகத்தை மூடியும் நடமாடியது அங்கு வாழ்ந்த நாயர் சாதியினருக்கு கெளரவக் குறைச்சலாகத் தோன்றியிருக்க வேண்டும். சமஸ்தானத்தில் உயர் சாதியினரான பிராமணர்களுடன் தமது சாதிப் பெண்டிர் தொடர்பு வைத்துக்கொள்ளும் வழக்கம் காரணமாகத் தம்மையும் உயர்சாதியினராக உரிமை பாராட்டிச் சமூகத்தில் மேல்நிலை அடைந்த நாயர்கள், தமது சாதிப் பெண்டிர் இடுப்பிற்குமேல் ஏதும் அணியாமல் நடமாடுகையில் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ள சாணார் வீட்டுப் பெண்கள் மார்பை மூடிக் கொண்டு செல்வதா என்கிற ஆங்காரத்தினாலேயே சாணார் சாதிப் பெண்டிரின் ரவிக்கையைக் கிழித்தும் சேலையின் மேலாக்கை இழுத்தும் அடாவடியில் இறங்கியுள்ளனர். பின்னர், தங்களுக்குத் துணையாகப் பிள்ளைமார்களையும் இதில் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்து தோள் சீலை நீக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளன்ர். இதற்குச் சாணாரிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பி, பின்னர் அது தோள் சீலைக் கலகமாக வெடித்தது.

தோள் சீலைக் கலகத்தின் தோற்றுவாய், மேலாதிக்க மனப்பான்மையின் காரணமாகவே நாயர்-பிள்ளைமார் கூட்டணி சாணார் வீட்டுப் பெண்டிர் ரவிக்கை அணிவதையும் தோள் சீலை அணிவதையும் எதிர்த்துள்ளனரே யன்றி, சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் என்பதால் அல்ல என்பதற்கான சான்றுகள், கிறிஸ்தவ மிஷனரிகளின் சீர்திருத்தத்தாலும் அவர்களின் தலையீட்டாலும்தான் சாணார் சாதிப் பெண்டிர் ரவிக்கை அணியவும் மேலாடையால் மார்பை மூடவும் உரிமை பெற்றனர் என்பது வெறும் பிரசார நோக்கில் பரப்பப்பட்ட தவறான கருத்து என்ற வாதம் முதலான அம்சங்கள் நூலில் மிகவும் விரிவாகவே பதிவாகியுள்ளன.

சாணார் பனையேறிகளாக இருந்துள்ளனர் என்பது சரியே. ஆனால் அவர்கள் பிறர் தோப்புகளில் வெறும் பதநீரும் கள்ளும் இறக்கி ஊழியம் செய்பவர் களாக இல்லை. பனைவெல்லம் காய்ச்சும் தொழிலையும் காய்ச்சிய கருப்பட்டி, பனை வெல்லத்தை விற்பனை செய்யும் வாணிபத்தையும் மேற்கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், சாணார் எனவும் நாடார்கள் எனவும் அறியப்படும் இச்சாதியினர், ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பலவாறான வாணிபத்திலும் ஈடுபட்டு, இருநூறு-இருநூற்றைம்பது ஆண்டுகளான மிகக் குறுகிய காலத்தில் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வந்துள்ளனர். சாணார்கள் காலங் காலமாகக் கீழ்ச் சாதியினராக இருந்து வந்துள்ளனர் எனில் இது எப்படிச் சாத்தியமாயிற்று என யோசிக்க வேண்டும்.

நம் நாட்டில் விடுதலையையொட்டி சுயேற்சையான சமஸ்தானங்கள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு, மன்னர்களின் ஆளும் அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போதும் பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் அறவே கைவிடப்பட்ட பிறகும், மன்னர்களின் அரண்மனைகள் யாவும் ஐந்து நட்சத்திர விடுதிகளாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் மாறின. தலைமுறை தலைமுறையாக அவற்றை ஆண்டு அனுபவித்து வந்த மன்னர்கள் அவற்றின் நிர்வாக இயக்குநர்களாக உருவெடுத்தனர். மேலும் பல்வேறு தொழில்களிலும் வர்த்தகங்களிலும் இறங்கிச் சடுதியில் முன்னேறவும் அவர்களால் எளிதாக இயன்றது. கட்டியாளும் அனுபவமும், நிர்வாகம் செய்யும் ஆற்றலும், புதிய துறைகளில் துணிந்து இறங்கும் சாகசமும் கிளைகள் பரப்பி விரிவாக்கம் செய்தலும் இயல்பான குணாம்சமாகவே அமைந்து விட்டிருந்தமையால்தான் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டிருக்க முடியும்.

தமிழ்நாட்டில் சாணார் அல்லது நாடார் வகுப்பினரின் நிலையுடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. நாடார்கள் நாடாளும் அரச குலத்தினராக இருந்தமையால்தான் அவர்கள் நிலை அதிலிருந்து மாற நேரிட்ட போது, மிகவும் இயல்பாக வாணிபத்திற்கு மாறி அதில் எளிதாக முன்னேற்றம் காணவும் முடிந்திருக்கிறது. அரசியல் ஆதிக்கத்திற்கு இணையானதே பொருளாதார ஆதிக்கம் என்பதும், வர்த்தகத்திலும் உற்பத்தித் தொழிலிலும் இறங்குவதன் மூலம் சமூகத்தில் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியம் என்பதும்கூட கவனத்தில் கொள்ள வேண்டிய நிதர்சனம் அல்லவா?

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உணமைகள்’ ஆய்வு நூலை வாசிக்கையில் இவ்வாறாக நமது ஆய்வுப் பார்வையும் விரிவடைந்து செல்வதற்குத் தூண்டுதல் விளைகிறது. ஆகவே தமிழ்நாட்டின் சமூகவியல் ஆய்வு முயற்சிகளுக்கு மிகவும் கனமான பங்களிப்பு, இந்த நூல்.

நூல்: தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
வெளியீடு: தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,
15 காமகோடி தெரு, பத்மநாப நகர், குரோம்பேட்டை, சென்னை 600 044
தொலைபேசி: +91-44-2223 5172 பக்கங்கள்: 192 விலை: ரூ. 100/- அஞ்சலில் பெற உள்நாடு: ரூ. 125/- வெளிநாடு (விமான மூலம்): US $ 5.
++++++ .
மலர்மன்னன், 18/37 முத்துலட்சுமி சாலை, லட்சுமிபுரம், சென்னை 600 041
தொலசிபேசி இலக்கம்: 4351 4248 / மொபைல்: 97899 62333

-மலர்மன்னன்

Series Navigationஜென் ஒரு புரிதல் பகுதி 7யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்
author

மலர்மன்னன்

Similar Posts

22 Comments

 1. Avatar
  GovindGocha says:

  இந்த ஜாதி சங்க போஸ்டர்களில், மீட்டிங்கில் முன்னாள் முதல்வர் காமராஜர் படம் பார்க்கிறேன்… அவர் அந்த சங்கத்தை ஆரம்பித்தவரா..? இல்லை நாடார்களுக்கு நிறைய செய்தவரா..? ஜாதிய தலையீட்டை அனுமதித்தவரா..? ம.ம. சொன்னால் புண்ணியம்… ( திண்ணை, சீக்ரெட் க்யூஸ்டினை , சப்மிட் பட்டனுக்கு முன் வைத்தல் நலம்… )

  1. Avatar
   malarmannan says:

   காமராஜர் பிற்ப்பதற்கு முன்பே நாடார் மகிமைச் சங்கம் சுய தேவைப் பூர்த்தியை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. காமராஜர் அந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்ததால் அந்தப் பெருமையைப அந்தச் சங்கம் பாராட்டிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் காமராஜர் ஒரு தேசியத் தலைவர் என்பதில் சந்தேகமில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் நாடார்கள் உத்வேகம் பெற்றுப் பல துறைகளில் ஈடுபட்டனர். காமராஜர் அவர்களை ஊக்குவித்தார். ஆனால் அவ்ர்கள் நாடார்கள் என்பதற்காக அல்ல. அவருக்கு ஜாதி உணர்வு இருந்ததில்லை. எனினும் தேர்தலின்போது வெற்றியை உறுதி செய்துள்ள ஜாதியின் அடிப்படையில் வேட்பாளர்கலைத் தேர்வு செய்து வந்தார். ஒருவர் நாடார் என்பதற்காக சலிகை காட்டும் வழக்கம் காமராஜருக்கு இருந்ததில்லை. கருணாநிதி தன் ஜாதிக்க்காரர்களுக்கு வேண்டியட்து செய்துகொடுக்கத் தமது அலுவலக்த்தில் த்மக்கென சுய ஜாதியில் ஒரு தனிச் செயலரை நியமித்திருந்தார்!
   -மலர்மன்னன்

 2. Avatar
  Gururajan says:

  வைதீகமதத்தில் சொல்லப்பட்ட வருணாஷ்ரமத்தின் சத்திரியர்கள் என்று இரண்டாம் பிரிவினையைச் சார்ந்தவர்கள் நாடார்கள் என்று ம.ம சொல்கிறார். ஆனால் நாடார்கள் முற்கால வரலாற்றை ஆராய்ந்த கணேசலிங்க நாடார் தான் எழுதிய ‘நாடார்கள் வரலாறு’ என்ற நூலில் நாடார்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்த வைதீகப் பண்டித குருக்கள் எனவும், பிற்பாடு பாண்டியன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிருந்து அழைத்து வந்த வைதீக சாஸ்திரிகளோடு சேர்ந்து வேலை பார்த்தனரென்றும் சொல்லப்படுகிறது. இது நடந்தது கி.பி 1 அல்லது 2 ம் நூற்றாண்டுகளில். பின்னர் வைதீகத்தொழிலை விரும்பாமல் ஊருக்குள் வந்து பிற தொழில்கள் பார்க்க ஆரம்பித்தனர். கணேசலிங்க நாடார் சொல்வதன்படி நாடார்கள் பிராமணர்களே. இதனை நம்பாத கேரள நம்பூதிரிகளும் பிள்ளைகளும் நாயர்களும் நாடார்களை வெறுத்து அவர்களை இழிவாக நடத்தியதாலே ம.ம சொல்லும் கலகம் நேர்ந்தது. குமரி, நெல்லை மாவட்ட இந்து நாடார்கள் இன்றளவும் பிராமணர்களைத் தங்கள் சகோதர்களாகப் பார்ப்பதே இதற்கு ஒரு சான்று. இதே போல அம்மாவட்டத்தில் கடலோரங்களில் வாழும் பரதவர்களும் தாங்கள் நக்கீரரின் பரம்பரையென்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் ஆதாரமாகச் காட்டிக்கொள்வது: சங்கறுப்பது எங்கள் குலம் என்று நக்கீரர் சொன்னதை. இதை பரதவர்கள் நடத்தும் வலைபதிவில் காணலாம்.

  1. Avatar
   malarmannan says:

   நான் ஆய்வாளன் அல்ல. நாடார்களின் செயல்பாடுகளை கவனிக்கையில் அவர்களிடம் க்ஷத்திரிய குணாம்சம் புலப்படுவதாகவே குறிப்பிட்டுள்ளேன். வர்ணாசிரமத்தை குண அடிப்படையிலேயே நான் காண்கிறேன். பிறப்பின் அடிப்படையால் அல்ல.
   -மலர்மன்னன்

 3. Avatar
  Gururajan says:

  இதே போல நெல்லைமாவட்ட மள்ளர்கள் எனப்படும் தலித்துகள் தங்கள் தேவேந்திர குல வெள்ளாளர்கள் எனவும் அவர்கள் பாண்டியன் ஒருவனின் பரம்பரையென்று சொல்லிக்கொள்கிறார்கள். இப்படி அவரவருக்குத் தோன்றியதைச் சொல்லி வரலாறு வரைகிறார்கள். இவற்றுள் எவரை நம்புவது: மலர் மன்னனையா ? நாடார்களையா ? பரதவர்களையா ? மள்ளர்கள். இதெல்லாம் இன்னொன்றையும் நினைவுபடுத்துகிறது. வெள்ளைக்க்காரன் முதன்முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய போது ஒவ்வொரு ஜாதியினரும் சென்சஸ் அதிகாரியிடம் நீண்ட மனுக்களைக்கொடுத்து தாங்கள் இந்த மன்னன் பரம்பரை; அந்த மன்னன் பரம்பரை எனவே சத்திரியர்கள் என்றார்களாம். பிள்ளைகள் நாங்களே உண்மையான பிராமணர்கள் என்றார்களாம். இக்கூற்றை மறைமலையின் நூல்களிலும் படிக்கலாம்

  1. Avatar
   malarmannan says:

   ஆவணங்களின் அடிப்படையில் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். மேலும் எனது கட்டுரை ஒரு நூலின் திறனாய்வே இது ஆகஸ்ட் 2011 மாத கணையாழியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்த நூலில் கண்டுள்ள தகவல்களையும் தெரிவிக்கிறது.
   -மலர்மன்னன்

 4. Avatar
  GovindGocha says:

  பழக்கம் வழக்கம் என்பது இனத்தின் அடிப்படையாக பெரும்பாலும் இருக்கும். நாடார் பழக்க வழக்கமும், ஐயர்கள் பழக்க வழக்கமும் முற்றிலும் எதிர் திசை. நாடார்கள், வன்னியர்கள், தேவர்கள் இவர்களிடையே பழக்க வழக்க மற்றும் சிந்தனை ஒற்றுமையை காண முடியும். இதில் அய்யர்கள் எங்கு வந்தார்கள்…? மேலும் கறுத்த அய்யர்கள் , ராமனுஜர் புண்ணியத்தால் அய்யர் ஆனவரகள்…. வேலூர் பக்கம் பாருங்கள்…

 5. Avatar
  Gururajan says:

  ம.ம சொல்கிறார்: “இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் மத மாற்றம் என்பது கொள்வினை-கொடுப்பினையில் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை. ஹிந்து நாடார்-கிறிஸ்தவ நாடார் என்று இரு மதப் பிரிவினராக இவர்கள் இருந்து வருகிற நிலை ஏற்பட்ட பிறகும், இன்றளவும் இவர்களிடையே மதம் என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெண் எடுப்பதும் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக ஹிந்துக்களும் கிறிஸ்தவராக மதம் மாறியவர்களும் அவரவர் சமய நம்பிக்கைகளுடன் வாழ்வது நாடார் சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது ”

  இது தவறான தகவல். நெல்லை கன்யாகுமரி தூத்துக்குடி மாவட்டக் கிருத்துவ நாடார்கள் சி.எஸ்.ஐ நாடார்கள் எனப்படுவர். இவர்கள் தம்மதத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவர்கள். இவர்கள் திருமணம் சி.எஸ்.ஐ நாடார்களுக்குள்ளேயே நடைபெறும். அப்படியே இந்து நாடார்கள் சிஎஸ் ஐ நாடார்கள் சம்பந்தம் பண்ணினால் கண்டிப்பாக இந்து நாடார் பெண்ணோ பையனோதான் சி எஸ் ஐக்கு மாறியாகி வேண்டும். சி.எஸ்.ஐ நாடார்கள் தம்மதத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

  ம.ம சொல்வது போல இம்மாவட்டங்களில் நடப்பது உரோமன் கத்தோலிக்க நாடார்களுக்கும் இந்து நாடார்களுக்கும் நடக்கும் சம்பந்தமே. இதில் எவரேனும் ஒருவர் மதமாறுவர். ஒரே வீட்டில் வாழ்வர். இப்படி இம்மாவட்டத்தில் பல இதர கிருத்துவ ஜாதிகள் உள்ளன. எல்லாரிடமும் ம.ம சொல்வது பொருந்தும். சி. எஸ்.ஐ நாடார்களிடம் மட்டும் செல்லாது.

  Govind Cocha Thanks for your comments

  1. Avatar
   malarmannan says:

   நாடார்களில் எல்லாப் பிரிவுகளிலும் இவ்வாறு இல்லை என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். நாடார்களில் ஒரு பிரிவினரிடையே காணப்படும் ஒரு நல்ல அம்சத்தைப் பாராட்டுமுகமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளேன். எனது நண்பர்கள் சிலர் கிறிஸ்தவ மனைவியைப் பெற்றுள்ளனர். மனைவி கிறிஸ்தவராகத் தொடர்கிறார். கணவர் ஹிந்துவாக நீடிக்கிறார். நாடார்களில் எநதப் பிரிவு என்று நான் அவர்களிடம் கேட்டதிலை.
   -மலர்மன்னன்

 6. Avatar
  siva.saravanakumar says:

  திரு. மலர்மன்னன் அவர்களே…….

  பொதுவாகவே நாடார்கள் என்றால், மதுரைக்குத்தெற்கே, குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் வசிப்பவர்கள் என்ற எண்ணம் பெரும்பாலோரிடம் உள்ளது. பிறபகுதிகளில் எடுத்துக்கொண்டால் அதிக பட்சம் மளிகைக் கடை அண்ணாச்சிகள் மட்டுமே நாடார்கள் என்ற எண்ணம் உள்ளது. [ நீங்கள் உட்பட.] இது தவறான புரிதல். கொங்கு மண்டலத்தில் மிக அதிக அளவில் நாடார்கள் உள்ளனர்.கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் கவுண்டர் – நாடார் விகிதம் 60 – 40 என்ற அளவில் உள்ளது. இவர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. மதுரை அல்லது ஷத்திரிய நாடார்கள் [ நான் இந்த பிரிவை சார்ந்தவன் ] , கொங்கு நாடார்கள், நாட்டுவ நாடார்கள், சேவல் கட்டு நாடார்கள் என பல பிரிவுகள் உள்ளன. ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் கொள்வினை, கொடுப்பினை கிடையாது. குறிப்பாக தென் மாவட்ட நாடார்களுடன் எங்கள் பகுதி நாடார்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வது கிடையாது.கொங்குப் பகுதி நாடார்களிடம் மதமாற்றம் என்பதே கிடையாது. அனைவரும் ஹிந்துக்களே.. நாடார்கள் என்றாலே மதம் மாறிகள் என்ற அவப்பெயர் தென்மாவட்டத்தை சார்ந்தவர்களால் உண்டானது…என்னைப் பொறுத்தவரை நாடார் ஒருவன் மதம் மாறி விட்டால் அவன் நாடாரே கிடையாது…….

 7. Avatar
  malarmannan says:

  தொண்டை மண்டலத்தில் உள்ள சாணார் எனப்படும் சான்றோர், கிராமணீயார், ஆகிய நாடார்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் ஏறுமதி இறக்குமதி உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னேறியிருப்பதைக் குறிப்பிட்டுள்ள்ளேன். கொங்கு நாட்டு நாடார் பற்றித் தகவல் என்னிடம் இல்லாததால் அவர்களைப் பற்றி எதுவும் குறிப்படவில்லை. இவர்களிடையே மத மாற்றம் நிகழ்வதே யில்லை என்ற நல்ல சேதியைக் கேட்டு மகிழ்கிறேன். இதற்காகவே இவர்களைப் பற்றித் தனியே ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். த்கவல்களைத் தாருங்கள்.
  -மலர்மன்னன்

 8. Avatar
  Muttal says:

  I have been told by my elders that certain sects of Nadars in Sivakasi wear POONOOL. Probably, all nadars in that area would have been wearing POONAL and by pass of time most of them stopped wearing it due to the “inconvinient feeling” (like many present brahmins).

  I also wish to bring to your attention, many of these Sivakasi Nadars are ordent devoutees of Shringeri Shankaracharya Mutt, which is considered as highest order of the mutts by brahmins.

 9. Avatar
  malarmannan says:

  //குமரி, நெல்லை மாவட்ட இந்து நாடார்கள் இன்றளவும் பிராமணர்களைத் தங்கள் சகோதர்களாகப் பார்ப்பதே இதற்கு ஒரு சான்று.-ஸ்ரீ குருராஜன்//
  இவ்வாறான சகோதர உணர்வு ஹிந்து சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரிடையேயும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நிலவுமானால் ஹிந்து சமூகம் ஒரு மஹா சக்தியாகத் திகழும்.
  -மலர்மன்னன்

 10. Avatar
  ஜெபசிங் ஞானதுரை says:

  உயர்திரு மலர்மன்னன் அவர்கள் விமர்சனம் செய்த புத்தகம் திருவாங்கூரில் நாடார்கள் எப்படி நடத்தப்பட்டனர் எனபதைப்பற்றியதே. சிவகாசி நாடார், கொங்கு நாடார், வடமாவட்ட நாடார்கள் போன்றோரை இங்கு தொடர்பு படுத்திப் பேசக்கூடாது. திருவாங்கூர் நாடார்கள் என்போர் கன்யாகுமரி நாடார்கள், மற்றும் நெல்லை, தூத்துக்குடியும் வரும். இம்மக்களின் பெரும்போலோர் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயர் அவர்கள் இடையங்குடியைத் தலைமையிடமாகக்கொண்டு தேவ வார்த்தைகளை எங்களிடையே பரப்பினார். இடையங்குடி கன்யாகுமரியிலிருந்து முக்கால் மணினேரம்தான்.

  கிருத்துவம் வருவதற்குமுன் நடந்த செயல்களே இப்புத்தகத்தில் பேசப்படுகிறது. அப்போது திருவாங்கூர் நாயர்கள் எங்களையும் தலித் சகோதர்களையும் தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள்; எங்கள் பெண்களையும் மார்பை மறைக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தினார்கள். இது வரலாறு. தலித்துப்பெண்களின் மானத்திற்காக கேரள தலித்து தலைவரான ஐயன் காளி நாயர்களோடு போராடினார். அவர்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். எங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க திருவாங்கூரை மறைமாவட்டமாகக் கொண்டு வெள்ளைக்கார கிருத்துவ தலைவர்களாலேயே முடிந்தது.

  இன்றும் இம்மாவட்டங்களில் இந்து நாடார்கள் வறுமைப்பிடியில்தான் வாழ்கிறார்கள் பனையேறி நாடார்களாக. மேலும் இவர்களே இந்துத்வாவினரின் பிடிக்கு ஆளாகி, உரோமன் கத்தோலிக்க மீனவர்களோடு மோதினார்கள். இன்றளவும் அம்மோதல் தொடர்கிறது.

  கிருத்துவ நாடார்களிடையே கல்வியறிவு, மற்றும் வாழ்க்கைத்தர உயர்வு என்றாகி பலர் உன்னாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயரவர்கள், மறைத்திரு போப்பையரவர்கள், மறைத்திரு மர்காஷியஸ் ஐயரவர்கள் போன்றோரின் தேவ ஊழியமே இதற்குக்காரணமென்றால் மிகையாகாது. இவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்கள். இவர்கள் இல்லாதிருந்தால் நாங்களும் பிராமணர்களுக்கு அடிமைகளாகத்தான் வாழ்ந்து மீனவர்களோடும் தலித்துகளோடும் மோதிக்கொண்டிருப்போம்.

  இம்மாவட்ட நாடார்களை விடுத்துப்பார்த்தால், மதுரை மீனாட்சி கோயிலுக்குள் ஏன் நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை? உயர்திரு வைத்தியநாத ஐயர் அவர்கள் அக்கோயிலில் உள்ளுழைவு போராட்டம் நடத்திய போது, தலித்து இளைஞர்களையும் நாடார் ஜாதி இளைஞர்களையும் சேர்த்துத்தானே தன்னுடன் அழைத்துச்சென்றார். இல்லையா ? இது மற்ற மாவட்டங்களிலும் அன்று நாடார்கள் தீண்டத்தகாதவராகவே பிராமணர்கள் வைத்த‌ நீதியில் நடத்தப்பட்டார்கள் என்று காட்டுகிறது.

 11. Avatar
  மாரிய‌ப்ப‌ன் says:

  ///கொங்கு மண்டலத்தில் மிக அதிக அளவில் நாடார்கள் உள்ளனர்.கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் கவுண்டர் – நாடார் விகிதம் 60 – 40 என்ற அளவில் உள்ளது.///

  60 – 40 கொஞ்ச‌ம் அதிக‌மாக‌த்தோன்றுகிற‌து; ம‌ற்ற‌ப‌டி கொங்கு ம‌ண்ட‌ல‌த்தில் ப‌ர‌வ‌லாக‌ உள்ள‌ன‌ர் என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. இது சேல‌ம் மாவ‌ட்ட‌ம் வ‌ரை நீள்கிற‌து.

  ஒரு முறை வேலை நிமித்த‌ம் கோபிசெட்டிபாளைய‌ம் அருகே உள்ள‌ ந‌ம்பியூர் என்ற‌ ஊருக்கு சென்றிருந்த‌ போது; அந்த‌ ஊரில் ந‌ம்ப‌முடியாத‌ அள‌விற்கு நாடார்க‌ள் அதிக‌ம் இருப்ப‌தை பார்த்த‌துண்டு.

  ************************

  ம‌துரையை ஆண்ட‌ பாண்டிய‌ர்க‌ள் நாடார்க‌ள்தான் என்று கூற்று எந்த‌ அள‌விற்கு நிஜ‌ம்?

  நாய‌க்க‌ர்க‌ளின் ப‌டையெடுப்பால் சித‌றுண்டு போயி தேரிக்காட்டில் த‌ஞ்ச‌மைடைந்த‌தாக‌‌, ஒருமுறை காம‌ராஜ‌ர் சிலை திற‌ப்பு விழா ஒன்றில் க‌‌ல‌ந்து கொண்ட‌ கும‌ரி அன‌ந்த‌ன் கூறினார்.

  அகில‌னின் க‌ய‌ல்விழி என்ற‌ வ‌ர‌லாற்று நாவ‌லில் பாண்டிய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் குல‌தெய்வ‌ம் “ப‌த்ர‌காளிய‌ம்ம‌ன்” என்று கூறுகிறார். விருதுந‌க‌ர் ப‌குதி நாடார்க‌ள் பெரும்பாலும் ப‌த்ர‌காளிய‌ம்ம‌னை வ‌ழிப‌ட்டு வ‌ருகிறார்க‌ள் என்ப‌து க‌ண்கூடு.

 12. Avatar
  Daniel says:

  நட்டாத்தி ஜமிந்தார்கள் நாடார் இனத்தை சேர்த்தவர்கள் என்று கூறபடுகிறது….

  அவர்களை பற்றி தகவலை வரலாற்று சான்றோடு தாங்கள் எழுதினால் பலருக்கு அதைப்பற்றி
  தெரிய வரும்.

  அதைப்பற்றி

  நன்றி,
  டேனியல்

 13. Avatar
  Daniel says:

  நட்டாத்தி ஜமிந்தார்கள் நாடார் இனத்தை சேர்த்தவர்கள் என்று கூறபடுகிறது….

  அவர்களை பற்றி தகவலை வரலாற்று சான்றோடு தாங்கள் எழுதினால் பலருக்கு அதைப்பற்றி
  தெரிய வரும்.

  நன்றி,
  டேனியல்

 14. Avatar
  MAHI says:

  “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” (Yaadhum Oore, Yaavarum Kelir) which means, ‘every country is my own and all the people are my kinsmen

  Vasudhaiva Kutumbakam (Sanskrit: वसुधैव कुटुम्बकम. from “vasudha”, the earth; “iva” = is as a; and “kutumbakam”, family;) is a Sanskrit phrase

 15. Avatar
  சிவ says:

  இது வெல்லாம் வரலாறல்ல தங்களின் சாதிய அபிமானம் சாணர் (பின்னாளில்சாணார்) எனும் நாடார் அரச பரம்பரை பெரும் நிலஉரிமையாளர் ஜமீன் என்பது பள்ளர் பறையர் வன்னார் மற்றும் பண்டாரத்தார் உட்பட இதர சாதியினர் கூறிக்கொள்வது போலத்தான் தற்சமயம் தொழில் துறைகளில் தாங்கள் பெருமளவு இருப்பதால் தங்களின் வரலாறு தாங்கள் கூறுவதாக அமைந்து விடாது ஆதாரமற்ற செய்கை பொய்மை பேதமை ஆணவம் உங்கள் இனத்தையே இல்லாமல் செய்து விடும் சாதிய வெறியேற்ற ஆண்ட பரம்பரை புனைவு கதை எழுதுவதை விட்டு மனித நேயம் வளர்க பாரும் இல்லையேல் எலுசபெத் ராணி ட்ரம் கூட உங்க ஆளுகனு பேசிக்கிறாங்க அதபத்தியு கட்டுரை வரைக

  1. Avatar
   Benson says:

   Sanrar enbadhu varalaaru……shanar endru matriyathu sethupathikku vari vasul seiya endru sethupathiye sollivittare……1871 census record l irunthe Nadar endra jathi majority aga record ayirukku…..Shaanan endra head l nattukottai chettiyum ,agambadiyarum adakkam…………….nadarai shanar endrathu politics…….read history before 1850

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *