காரும் களமும்

This entry is part 44 of 54 in the series 4 செப்டம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பண்டைத் தமிழரின் இலக்கியங்களை மூன்று பெரும் பரிவுகளாகப் பகுப்பர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். அவற்றில் பதினெண் கீழ்க்கணக்குத் தோன்றிய காலத்தைச் சங்கம் மருவிய காலம் என மொழிவர். இவ்விலக்கியங்கள் நீதி இலக்கியங்கள், அற இலக்கியங்கள் என வாழங்கப்பெறுகின்றன.
சங்க காலத்தில் காதலும், வீரமும் பாடு பொருளாக விளங்கியது. அதனை அடியொற்றி வந்த சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் இத்தகைய பாடுபொருள் அமைந்திருப்பதைக் காணலாம். சங்க இலக்யகிங்களில் காணப்படும் பாடுபொருளின் தொடர்ச்சியாகக் கார் நாற்பதும், களவழி நாற்பதும் விளங்குகின்றன எனலாம். பா அமைப்பிலிருந்து இந்நூல்கள் மாறுபட்டிருப்பினும், உள்ளடக்கத்தால் ஒன்றுபட்டு அமைந்திருப்பது நோக்கத்தக்கது. இவ்விரு நூல்களும் சங்க இலக்கியப் பாடுபொருளின் தேய்வாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கார் நாற்பதும் களவழி நாற்பதும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பது அகத்துறையைச் சார்ந்தது. களவழி நாற்பது புறத்துறையைச் சார்ந்தது ஆகும். இவை இரண்டும் அகம் மற்றும் புறச் செய்திகளை வெண்பா யாப்பு வடிவில் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளீட்டச் செல்கின்ற கணவன் கார் காலம் வருவதற்குள் வந்து விடுகின்றேன் என்று மனைவியிடம் கூறிவிட்டுச் செல்கிறான். கார் காலமும் வர கணவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கி வருந்துகிறாள் மனைவி. அவ்வாறு வருந்தும் தலைவியை அவளது தோழி, ‘உனது கணவன் வருவதற்கு அறிகுறியாக மழழி பொழியத் துவங்கிவிட்டது. மலர்கள் மலர்ந்து விட்டன. அதனால் நீ கலங்காதே’ என்று ஆறுதல் கூறித் தேற்றுகிறாள். பொருள் தேடச் சென்ற தலைவனும் தனது மனைவியைக் காணவேண்டும் என்று கருதி தேர்ப்பாகனை விரைந்து தேரினைச் செலுத்துமாறு கூறுகின்றான். இவ்வாறு முல்லைத்திணை ஒழுக்கமான, ‘இருத்தலும இருத்தல் நிமித்தமும்’ என்ற உரிப்பொருளை மையமிட்டதாகக் கார்நாற்பது அமைந்திலங்குகிறது. மேலும் இக்கார் நாற்பது கற்புக்காலத் தலைவன் தலைவியரின் வாழ்க்கையை எடுத்துரைக்கின்றது. இக்கார் நாற்பது எட்டுததொகையில் இடம்பெறும் அகநூல்களில் உள்ள முல்லைத் திணைப் பாடல்கள், பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப் பாட்டு ஆகியவற்றின் உள்ளடக்கத்தைப் போன்று அமைந்துள்ளது படித்து இன்புறத்தக்கது.
களவழி நாற்பது சோழ மன்னன் கோச்செங்கணானின் வீரத்தையும் அவன் செய்த போரினால் போர்க்களத்தில் காணப்பட்ட காட்சியையும் எடுத்துரைக்கிறது. வீரர்களின் நிலை, யானை, குதிரைகள், தேர் ஆகியவற்றின் நிலை உவமை நலத்துடன் ஆசிரியரால் எடுத்துரைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இரத்தத்தால் நிலத்தின் தோற்றம் எவ்வாறு மாறிக் காட்சியளிக்கின்றது என்பதை ஆசிரியர் காட்சிப்படுத்துவது மனதைத் தொடுவதாக அமைகின்றது. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் போன்று போர்க்களத்தை மையமிட்ட காட்சிகள் இடம்பெறுவது ஒப்புநோக்கத்தக்கதாகும்.
கார் நாற்பது
கார்காலத்தை வருணிக்கும் நாற்பது பாக்களைக் கொண்டது. முல்லை நிலத்திற்குரியது. எனவே இப்பாடல் முலலைத் திணையைச் சார்ந்தது. பொருள் தேடச் சென்ற தலைவன் ‘கார் காலம் வருவேண்’ என்றான். கார் வந்தது. தலைவன் தேர் வரவில்லை. மனத்தால் கலங்கினாள் தலைவி. தலைவனுக்காகக் காத்திருந்தாள். காத்திருப்பு வீணாகாது தலைவிக்கு இன்பம் தந்தது. இதுவே முல்லை தரும் கார்காலம்.
இதன் ஆசிரியர் மதுரை கண்ணங் கூத்தனார். இவர் பெயர் கூத்தனார். கண்ணன் என்பது இவரது தந்தை பெயர். ஊர்ப் பெயரையும், தந்தையார் பெயரையும் தனது பெயருடன் தனது பெயருடன் இணைத்துக் கொண்டார். இவரது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டாகும்.
கார் நாற்பதில் முல்லைத் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் முறையாகக் கூறப்பட்டுள்ளன. சங்கச் செய்யுள்களின் சாயலில் இது அமைந்துள்ளது. திருமால், பலராமன், சிவன் ஆகிய கடவுளர்களைக் கூறியிருப்பதன் மூலம் சமயப் பொறையின் முன்னோடியாகக் கண்ணங்கூத்தனார் விளங்குகிறார்.
கார் நாற்பது பாடல்களில் அமைந்துள்ள துறைகள்
கார் நாற்பதில் இடம் பெற்றுள்ள பாடல்களை ஐந்து வகையான துறைகளில் வகைப்படுத்தலாம். அவையாவன,
1. தலைவன் வருவான் வருந்தாதே எனத் தோழிதலைவிக்கு நம்பிக்கையூட்டி ஆற்றுவித்தது. இதில் 21 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. (பாடல் எண்கள், 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 23, 37, 40)
2. தோழி தலைவியின் வருத்தம் கண்டு ஆற்றாமை தோன்றக் கூறியதாக அமைந்துள்ள பாடல்கள் 6 ஆகும். ( பாடல் எண்கள் 3, 25, 34, 38, 39)
3. தலைவன் தன் பாகனுக்குக் கூறியதாக அமைந்துள்ள பாடல்கள் 8 ஆகும். (பாடல் எண்கள் 19, 20, 21, 22, 31, 32, 33, 36)
4. தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது 4 பாடல்கள் ஆகும். (பாடல் எண்கள், 24, 28, 29, 30)
5. ஊடல் கொள்ளக் கூடாது எனத் தலைவியைத் தோழி வற்புறுத்திக் கூறியது ஒரு பாடல் ஆகும்.(பாடல் எண் 27)
ஆகியன ஆகும்.
தோழியின் பண்பு
தோழி செவிலி மகளாவாள். அவள் தலைவியின் வாழ்க்கை நன்கு அமைய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுபவள். தலைவி துன்புறும்போதும் தவறான முடிவினை எடுக்க முயல்கின்றபோதும், அவளுக்குத் தேறுதல் கூறி அவளை நல்வழிப்படுத்துபவளாக விளங்குகின்றாள். கார் நாற்பதில் இடம்பெறும் தோழி தலைவியின் கவலையைப் போக்குபவளாக இருக்கின்றாள்.
தலைவியிடும் ‘கார் பருவம் வருவதற்குள் நான் வந்து விடுகின்றேன்’ எனக் கூறிப் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் கார் பருவம் வந்தும் வரவில்லை. தலைவி வருந்துகிறாள். அதனைக் கண்ட தோழி திருமால் மார்பில் அணியும் மாலை போன்று இந்திர வில்லைக் குறுக்காக நிறுத்தி மேகம் மழை பெய்தது. ‘மழை பெய்யத் தொடங்கும்போது வருவோம் என்று கூறிவிட்டுப் போன தலைவன் மேகம் கருக்கொண்டிருந்து நீர்த்துளிகளாகப் பெய்யும்போது வாராமல் இருப்பாரா? உறுதியாக வருவார். நீ கலங்காதே’ என வற்புறுத்திக் கூறித் தலைவியை ஆற்றுவிக்கின்றாள்.
தலைவியின் துன்பங்கண்டு தானும் துன்புறாது மனத்துணிவுடன் தலைவியைப் பார்த்து, ‘வளைந்த காதணியை அணிந்த தலைவியே! சூரியன் வறுமையடையவும், கார்காலமானது செல்வத்தை அடையவும் காடெல்லாம் மிக்க அரும்புகளை ஈனவும் எழுச்சியையுடைய மேகம் நம் தலைவர் இப்போதே வருவார், நீ கலங்காதே’(2) என்று தலைவிக்குத் தோழி நம்பிக்கையூட்டுகின்றாள்.
தலைவி வருந்தி, ‘தலைவன் வந்தவுடன் அவனோடு ஊடல் கொள்வேன் என்று தோழியிடம் கூறுகிறாள். ஆவலோடு வரும் தலைவன் ஏமாற்றம் அடைந்தால் தலைவியின் வாழ்க்கையில் துன்பம் வருமே என்று உணர்ந்த தோழி, தலைவியைப் பார்த்து, ‘தலைவியே நமது வருத்தத்தைப் பாராமல் சென்றான் தலைவன் என நாம் அவனோடு ஊடினோமானால் படுக்கையிடத்தில் பசலை மிகும். அதனால் தலைவன் வரும்போது அவனோடு ஊடல் கொள்ளாது இன்முகத்துடன் வரவேற்று அவனுடன் மகிழ்ச்சியாக இருப்பாயக!(27) என்று தலைவ செய்யவிருந்த சிறு தவறினை அறிந்து அதனால் நேரும் துன்பத்தைக் குறிப்பாக எடுத்துக் கூறித தலைவியை நல்வழிப்படுத்துகின்றாள்.
தலைவியோடு சேர்ந்து தானும் துன்புறுவது போன்று பலவற்றையும் எடுத்துக கூறித்தலைவியை ஆற்றுப்படுத்தும் பாங்கு,
‘‘காட்டவும் காட்டவும் காணாள்
கலுழ்சிறந்து பூப்போல் உன்கண் புலம்பு முத்துறைப்ப’’
(முல்லைப்பாட்டு)
என்ற பாட்டில் இடம்பெறும் பகுதியுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
தலைவனின் பண்பும் காதல் மணமும்
குடும்பம் வளம் பெறுவதற்காகப் பொருளீட்டச் செல்கின்றான் தலைவன். ஆனால் தலைவியோ வருந்துகின்றாள். தலைவன் நான் கார்காலம் வருவதற்குள் பொருளீட்டிக் கொண்டு வந்துவிடுவதாகத் தலைவிக்கு உறுதி கூறிவிட்டுச் செல்கின்றான். பொருளீட்டி முடித்த தலைவன் கார்காலம் வருவதை உணர்ந்து தேரினை ஓட்டும் தனது பாகனைப் பார்த்து, ‘பலராமனின் நிறம் போன்று வெண்கடம்ப மரங்கள் மலர்ந்தன. அதனால் என் உள்ளம் விரைந்து என் தலைவியிடத்தே சென்றது(19) அதனால் தேரை விரைவாகச் செலுத்துவாயாக’ என்று கூறுகின்றான். தேரின் வேகத்தைவிட தலைவனின் மனவேகம் அதிகமாக இருப்தை இப்பாடல்,
‘‘நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு’’
என உணர்த்துவது குறிப்பிடத்தக்கது. தலைவன் தலைவியின் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள உள்ளார்ந்த அன்பினை இவ்வரிகள் புலப்படுத்தி நிற்பது சிறப்புக்குரியதாகும்.
முல்லை மலர்களைப் பார்க்கும் தலைவனுக்கு அம்மலர்கள் தலைவியை நினைவு படுத்துகின்றன. அதனால் பாகனைப் பார்த்து,
‘‘செல்வ மழைத்தடங்கண் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயிறு ஏய்ப்ப வடிந்து’’(21)
எனக் கூறி தேரை விரைவாகச் செலுத்தும்படி கூறுகின்றான். தலைவனின் மனம் முழுவதும் தலைவியே நிறைந்துள்ளாள் என்பது தலைவனின் கூற்றால் அறிய முடிகிறது. மேலும் தலைவி தலைவனின் மனதுள் நிறைந்ததால்தான் அவனுக்கு நோக்குபவை எல்லாம் தலைவியைப் போன்றே காட்சியளிக்கின்றன.
தலைவன் பாகனுடன் மட்டும் தனது மனக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தனது நெஞ்சத்துடனும் பகிர்ந்து கொள்கிறான். தனது மனதைப் பார்த்து, ‘‘மனமே வானத்தில் மழை மெல்லத் தோன்றும். நான் அவள் ஆற்றியிருப்பதற்காகக் கூறிய சொற்களை இனிப் பொறுக்க மாட்டாள். அதனால் எல்லாத் தெழில்களம் ஒழிந்து நிற்கட்டும். நீ தலைவியைப் பார்ப்பதற்காகப் புறப்படுவாயாக’(24) என்று பொருள்மீது நாட்டம் கொண்ட மனதைத் தலைவியைப் பார்ப்பதற்குத் தயார்படுத்துகின்றான். இவ்வாறு தலைவன் கூறுவது பிற எட்டுத்தொகை அக நூல்களில் இடம்பெற்றுள்ள முல்லைத் திணைப் பாடல்களில் தலைவன் பாகனைப் பார்த்துக் கூறுதல் போல் அமைந்திருப்பது நினைத்தற்குரியது. தலைவனது பண்பும் தலைவியின் மீது அவன் கொண்டிருக்கும் அன்பும் இப்பாடல்களில் மிளிர்கின்றன.
கார் நாற்பது பாடல்களின் சிறப்பு
கார் காலத்திற்கு முன்னும், கார் காலத்திற்குப் பின்னும் காட்டின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை,
‘‘……………..
செல்வர் மனம்போலக் கவின்ஈன்ற நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு’’ (18)
என்ற பாடல் அழகிய உவமையில் எடுத்துரைக்கின்றது.
கார்த்திகை மாதம் வீடுதோறும் வரிசையாக விளக்கேற்றும் வழக்கம் இருந்தமையைத் தோன்றிப் பூக்கள் பூத்தமைக்கு உவமையாக்குகிறார். இதனை,
‘‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி’’ (26)
என்ற பாடல் மொழிகின்றது.
‘‘கண்திரள் முத்தம் கடுப்ப
கருங்கால் வரகின் பொரிபோல்’’ (23)
‘‘முருகியம்போல் வான்முழங்கி’’ (27)
‘‘கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்’’ (32)
‘‘அலவன்கண் ஏய்ப்ப அரும்பீன்று அவிழ்ந்த’’ (39)
என இப்பாடல்களில் இடம்பெறும் உவமைகள் அழகியல் தன்மை வாய்ந்தவையாகவும், முத்து, வரகு, குறிஞ்சி, முழவு, செல்வர் மனம், அலவன் கண் என இயற்கையில் காணலாகும் பொருள்களே உவமைகளாக அமைந்துள்ளமையும் நோக்கத்தக்கது.
களவழி நாற்பது
இதன் ஆசிரியர் பொய்கையார் ஆவார். இதில் வெண்பாவாலான 41 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறத்திணையில் வாகைத் திணையைச் சார்ந்த நூலாக இது அமைந்துள்ளது. போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்ட நூல் ஆகையால் இதற்குக் களவழி நாற்பது என்ற பெயர் ஏற்பட்டது. பதினெண் கீழ்க்கணக்கில் புறம் சார்ந்த ஒரே நூல் இது மட்டுமேயாகும். பொதுவாக ஏர்க்களத்தைப் பாடுதல், போர்க்களத்தைப் பாடுதல் இரண்டுமே களவழிப்பாடல்கள் எனப்படும்.
சோழன் கோச்செங்கணானும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறம் என்றழைக்கப்பட்ட கழுமலம் என்னும் ஊரில் போரிட்டனர். சேரமான் தோற்கவே அவனைக் குடவாயில் கோட்டம் என்னுமிடத்தில் சோழன் சிறை வைத்தான். சிறையில் அடைக்கப்பட்ட சேரமானை காவலாளன் முதற்கொண்டு இழிவாக நடத்தினர்.
சேரமான் கணைக்காலிரும்பொறையின் மீது அன்பு கொண்டவர் பொய்கையார். சேரமானைச் சிறையில் இருந்து விடுவிப்பதற்காக, திருப்போர்ப்புறம் போரின் வெற்றியை 40 வெண்பாக்களில் கோச்செங்கணான் மீது பொய்கையார் பாடினார். அப்பாடல்களே களவழி நாற்பது எனப்படுகிறது. களவழி நாற்பது பாடியதற்கான பரிசாகச் சேரமான் கணைக்காலிரும்பொறையின் சிறை விடுதலையைப் புலவர் முன் வைத்தார். கோச்செங்கணானும் புலவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான்.
புறநானூற்றில் சேரமான் கணைக்காலிரும்பொறை சிறையில் காலம் தாழ்த்திக் காவலன் தந்த நீரை உண்ணாது மானம் பெரிதெனக் கருதி என்றும் அழியாப் பாடலைத் தந்து உயிர் துறந்தான் என்று அப்பாடலின் அடிக்குறிப்பு(பா.74) குறிப்பிடுகின்றது. ஆயின் சேரனின் பாடல், நீர் குடிக்கா நிலையை மட்டுமே சுட்டுகிறது. எனவே புறத்தில் பாடிய சேரன் வேறு. பொய்கையார் விடுவித்த சேரன் வேறு என்பர். ஆயின் இதற்குப் போதுமான சான்றுகளிஜல்லை. பொய்கையார் சோழ மன்னனைப் பாடி விடுதலை ஆணை பெற்ற நிலையில் சேரன் மான உணர்ச்சியால் இறந்திருக்கலாம் எனக் கருதவும் இடமுள்ளது.
யானைப் படையின் போர்த்திறன் இந்நூலில் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. புறநானூறு போன்ற வீர இலக்கியங்கள் அரசர் வெற்றியைப் பாடிய தனி நூல் எனும் பெருமை களவழி நாற்பதுக்குரியது. பிற்காலப் பரணி நூல்களுக்க இது முன்னோடி எனலாம்.
பொய்கையார் தம் பாடலால் சேர மன்னனைச் சிறையிலிருந்து விடுவித்தமையைமூவருலா, கலிங்கத்துப் பரணி, தமிழ் விடுதூ ஆகிய நூல்களும் குறிப்பிடுகின்றன.
சோழ மன்னனி சிறப்பு
புலவர் சோழ மன்னனைப் புகழும்போது நீர் வளமுடைய சோழன் என்று 26 பாடல்களில் குறிப்பிடுகின்றார்(பாடல் எண்கள், 1, 2,3,7,8,9,10,12,14,16,17,19,20,22,24,25,26,27,28,31,32,35,36,37,39,41). பிற பாடல்களில், செங்கண்மால், அணியை உடைய மார்பையும் விரைந்து செல்லும் தேரையும் உடைய செங்கண் சோழன், கலங்காத போரைச் செய்யும் செங்கண் சோழன், போர் செய்யும் வன்மையுடைய சோழன், சினம் உடைய செங்கண் சோழன், வாளையும், மலர் மாலையையும் உடைய சோழன், சினமால், வெற்றியை உடைய வேலைக் கையில் கொண்ட படையையும் கொடி கட்டப்பட்ட தேரையும் உடைய செம்பியன், செங்கண் சினமால், குறைவு படாத மறத்தையுடைய மார்பையும், சிவந்த கண்ணையும், சினத்தையும் உடைய செங்கணான், குதிரையையும், திண்மையான தேரையும் உடைய செங்கணான், பொன்னால் ஆன அணியை அணிந்த செங்கணான், போர் செய்யும் வலிமையையும், பொன்மாலையை அணிந்த மார்பையும், கட்டப்பட்ட வீரக் கழலையும் உடைய செங்கணான், பல வேல்களையும் முரசு ஒலிக்கும் போர்ப்படைகளையும் சினததையும்உடைய செங்கணான் என்ற அடைமொழிகளால் 15 பாடல்களில் (பாடல் எண்கள்4, 5, 6, 11,13,15,16,21,23,29,30,33,34,38,40) புலவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வடை மொழிகள் சோழனின் வாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, அவனது வீரம், அவனது பண்பு, அவனது செல்வச் சிறப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்க்களக் காட்சி
களவழி நாற்பதில் உள்ள அனைத்துப் பாடல்களும் போர்க்களக்காட்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போரில் வாள் ஏந்திப் போரிட்ட வீரனின் கையானது கேடயத்தோடு அறுபட்டு கீழே விழுந்து கிடக்கின்றது. அதனை நரிகள் தங்கள் வாயில் கவ்விக் கொண்டு செல்கின்றன. இத்தோற்றம் பக்கத்தில் நின்றவர்க்குக் கண்ணாடியைக் காட்டுபவரைப் போல இருப்பதாக(26) பொய்கையார் காட்சிப்படுத்துகிறார்.
வீரர்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சி
போர்க்களம் வீரர்களும், குதிரை, யானை ஆகியவை வெட்டப்பட்டு வீழ்வதால் சிவந்து காணப்படுகின்றது. அஃது லம் என்ற மங்கை சிவந்த போர்வையைப் போர்த்திக் கொண்டவள் போன்று சிவந்த நிறததைப் பெற்றதைப் போல் காட்சியளிக்கின்றது(32) போரிட்ட வீரர்களின் உடலில் வேல் பாய்ந்ததால் அவர்களது குடல் சரிந்தது. அவ்வாறு சரிந்து சிந்திய வீரர்களின் குடல்களை வாயால் கவ்வி குறுநரிகள் இழுத்தன. அத்தோற்றம் தூணிலே சங்கிலியால் கட்டப்பட்ட வேட்டை நாய் சங்கிலியை இழுத்ததைப் போன்று விளங்கியது(34)
ஆளும், ஆளும் ஓடிப்போய்த் தாக்கிப் போரிட்டு ஆயுதங்களை வீசுவதால் இரத்தம் நிலத்தில் சொரிகின்றது. இக்காட்சி கார்த்திகை விழாவில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளைப் போன்று காட்சியளித்தன(17). போர்க்களக் காட்சியைக் கூறும்போதுகூட மக்களின் பண்பாட்டுக் கூறுகளை ஒப்பிட்டுக் கூறியிருப்பது போற்றுதற்குரியதாகும்.
போர்க்களததில் வீரர்களைக் குதிரைகள் உதைக்கின்றன. அதனால் பகைவரின் குடைகள் எல்லாம் கீழ் மேல் ஆகி கீழே விழுகின்றன.ட இக்காட்சி பசுக்களால் உதைக்ப்பட்ட காளாம்பியைப் போல் விளங்கின(36). போர்க்களததில் காலாட்படை வீரர்களிடையே வாட்போர் தீவிரமாக நடைபெற்றது. அதில் வீரர்களது கைகள் வாளால் துண்டிக்கப்பட்டு வீழ்ந்தன. அவ்வாறு துண்டிக்கப்பட்டு வீழ்ந்த கைகளை ஆண் பருந்துகள் தம் வாயில் கவ்விக் கொண்டு வானத்தில் பறந்து சென்றன. அவ்வாறு சென்ற காட்சி கருடன் ஐந்து தலைகளை உடைய பாம்பினை வாயில் கவ்விக் கொண்டு வானததில் பறப்பதைப் போன்று தோன்றின(26).
யானைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சிகள்
குதரைப் படைகள் யானைப் படைகள் மீது மோதிப் போரிட்டன. யானைகளும் அஞ்சாது குதிரைகளை எதிர்த்தன. இவ்வாறு குதிரைகள் பாய்ந்தது.மலையில் பாயும் பெரிய வேங்கைப் புலிகளைப் போல ஒத்து விளங்கின(15). வீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த வேலினை யானைகளின் கொம்பிடையே வீசி எறிகின்றனர்.அது யானைகளின் முகத்தில் ஆழமாகப் பதிக்ன்றது. இதனால் யானைகள் எல்லாம் நடை தளரப் பெற்று மூன்று கொம்புகளையுடைய யானைகள் போன்று விளங்கின(19).

வீரர்கள் வெண்கொற்றக் குடைகளையும், யானையின் துதிக்கைகளையும் வெட்டி வீழ்த்துகின்றனர். வெட்டுண்ட யானையின் கைகள் வெண்கொற்றக் குடையின் அருகில் கிடந்தன. அத்தோற்றம் சந்திரனைத் தீண்டும் பாம்பினைப் பொன்று விளங்கியது(22). வீரர்கள் ஆயுதங்களை எடுத்து வீசினர். அதனால் யானைகளின் நெற்றி பிளந்து குருதி பெருகியது. அக்குருதி வெள்ளத்தில் யானைகளின் உடல்கள் மூழ்கின. அத்தோற்றம் வானத்தில் சேர்ந்த கரிய மேகத்தைப் போல் காட்சியளித்தது(23) மேலும் வீரர்களால் குத்தப்பட்டுக் கால்கள் தளர்ச்சியடைந்து யானைகள் விழுந்து கிடப்பது பெரிய நிலமடந்தை கூறும் உபதேசத்தை அவை கேட்பதைப் போல்விள்ங்கியது. இதனை,

‘‘கால்நிலம் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து

மாநிலம் கூறும் முறைகேட்பு போன்றவையே’’(41)

என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.

களவழி நாற்பதின் சிறப்பு

போர்க்களத்தின் சிறப்பு, போரின் கொடுமை, நாற்படைகளின் போர்நிலை ஆகியவையும் நன்கு விளக்கப்படுகின்றன. நச்சினார்க்கினியர் இந்நூலை மேற்கோள் காட்டியுள்ளார். யானையின் துதிக்கை வெட்டுண்டு, இரத்தம் கொட்டுகிறது. இரத்தம் கொட்டுவது பையிலிருந்து(துதிக்கை)பவளம்(சிவப்பு) கொட்டியது போல இருந்தது என்பதை,

‘‘கவளம்கொள் யானையின் கைதுணிக்கப்பட்டுப்

பவளம் சொரிதரு பைபோல் திவள்ஒளிய

ஒண்செங் குருதிஉமிழும் புனல்நாடன்

கொங்கரை அட்ட களத்து’’(14)

என்ற பாடலில் பொய்கையார் எடுத்துரைக்கின்றார். களவழி நாற்பதில்,

‘‘ஊணில் சுறபிறழ்வ போன்ற புனல்நாடன்

நேராரை அட்ட களத்து’’(10)

‘‘தீவாய்க் குருதி இழிதலால் செந்தலைப்

பூவலம் குன்றம் புயற்கேற்ற போன்றவே’’ (12)

‘‘பவளஞ் சொரிதரு பைபோல் திவள்ஒளிய

ஒண்செங் குருதி உமிழும்’’ (14)

என உவமைகள் வாயிலாகவே ஆசிரியர் போர்க்களக் காட்சியை விளக்குவது குறிப்பிடத்தக்கது.

களவழி நாற்பதில் காட்டப்படும் போர்க்களக் காட்சியானது, மகாபாரதப் போரினைப் பார்க்க இயலாத திருதராட்டிரனுக்குச் சஞ்சயன் போர்க்களததில் நடந்த நிகழ்புகளைக் கூறியதைப் போன்று அமைந்துள்ளது ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது. போர்க்களக் காட்சியைச் சுட்டிக்காட்டிப் போரின் கொடுமையை இவ்வுலகத்தாருக்கு உணர்த்திய போரிலா உலகம் படைக்கவும், சமாதான சகவாழ்வு வாழவும் விரும்பும் புலவரின் உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்துவதாகக் களவழி நாற்பது அமைந்துள்ளது.

அதைப் போன்று இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்புடையோராய் மகிழ்வுடன் வாழ்க்கை நடத்துதல் வேண்டும் என்பதையும் கார்நாற்பது ஆசிரியர் நூலின் உள்ளீடாக மொழிந்துள்ளனர். அக வாழ்வும் புறவாழ்வும் அமைதியாகவும், இனிமையாகவும் அமைந்தால் உலகம் இன்புறும் என்ற உலகியல் வாழ்க்கைத் தத்துவத்தை இப்புலவர்கள் தமது பாடல்களின் வழி உணர்த்தியுள்ளமை, எக்காலத்திற்கும் பொருந்தும். வாழ்வியல் உண்மையாக விளங்குகின்றது எனலாம். குடும்பத்தில் அமைதி நிலவி குடும்பம் சிறப்படைந்தால் மட்டுமே உலகத்தில் வளம்பெருகி அமைதி நிலவும். செம்மொழிப் புலவோர் மொழைியும் வாழ்க்கை உண்மைகளை உணர்ந்து இல்லறத்திலும், உலகிலும் வளம் பல சிறக்க வாழ்வோம். வளம் பெறுவோம்.

Series Navigationநிலா மற்றும்..கனவு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *