அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-

This entry is part 23 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் அதீதத்தின் ருசி.

உடல் அழிய அழிய உயிர் சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாகும். உடலின் சுமையும் நினைவின் சுமையும் குறையக் குறைய பறக்கலாம்தானே..ஒரு சுடரைக் கிள்ளி எடுக்க முடியும் உங்களால்.

ஒரு வெற்றிட வெளியைப் பார்க்கிறீர்கள். உங்களை அந்த வெற்றிடமும் கண் கொண்டு பார்க்கிறது. ஒரு மைதானத்தில் மகளை வழியனுப்பி அவளின் ஒற்றைத் திரும்புதலுக்காய்க் காத்திருக்கிறீர்கள். தகப்பன்கள் சேமித்ததெல்லாம் அன்புக் குப்பை தவிர ., தூங்கும்போது தோளில் வடியும் எச்சில் அமுதம் தவிர வேறு என்னவாய் இருக்கக்கூடும்.. நீங்கள் அந்தத் தகப்பனாய்க் காலத்தின் வெளியில் காத்துக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மகள் பள்ளிக்குச் செல்வது போல மணமுடித்தும் சொல்லிச் செல்கிறாள். திரும்புவதேயில்லை உங்கள் மார்பில் படுத்துக் கதை கேட்க.. என்றபோதும் ஏங்கியபடியே நீங்கள் காத்திருக்கிறீர்கள்.

மாமிசத்தின் வாள் கொண்டும் வாழ்கிறீர்கள். வாழ்க்கை எல்லா இன்பங்களாலும் ஆனதுதானே. மனமுவந்து விரியும் ஒன்றைப் பருகுவது போல மதுவைப் பருகுகிறீர்கள் குரல்வளை எரிய.. அதேபோல் சாக்லேட்டுக்களையும் மதுக்குப்பிகளையும் அன்புப்பரிசாய்ப் பெற்றுக் கொள்வதில் தயக்கமில்லை உங்களுக்கு.. அவை தேவையோ இல்லையோ அன்பால் வழங்கப்படும்போது வாங்கி அடுக்கி வைத்து ஒவ்வொரு மணத்திலும் ஒவ்வொருவரை உணர்கிறீர்கள். குளித்தபின் எழும் உடலின் வாடை போல பல நேரங்களிலும் ஆளுயரக் கண்ணாடி முன்னும் உங்களை வாடையையும் உங்கள் உடலையும் நீங்களே காதலிக்கிறீர்கள். அது சிறிய புகழை உடைய மனிதனின் ஒரு பிம்பத்தைப் போலிருக்கிறது. நிர்வாணமாய் யாரும் எதுவுமற்ற ஒரு ஆளாய் வெளியே வரும் ஆவலை அனைவருக்கும் அது விதைக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் கணவனோடு உரையாடுகிறீர்கள்., அவள் தற்கொலைக்கு நீங்கள் தான் காரணம் என்பதை மறைத்தபடி.. பூட்டுக்கள் உங்களை உடைக்கச் சொல்கின்றன். விடுவிக்கின்றீர்கள் அனைவரையும் அவர்கள் தளைகளில் இருந்து.வழமையான ஆண்கள் போல எல்லாவற்றையும் சூதில் இழந்தபின் எல்லாவற்றையும் சரி செய்யலாம் என நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் உங்கள் உரிமைகளை நிலை நாட்ட விரும்புகிறீர்கள். அது இலவசமாகத் தரப்பட்டால் தோல்வியில் கண்ணீர் வடிக்கிறீர்கள். புதியவர்களோடு இருக்கும் மனநிலையை உங்கள் மனைவிக்குத் தருகிறீர்கள். வாழ்க்கையை மாற்றுவதாக வருபவர்களுக்குக்கூட மன அறைகளைத் திறந்து காட்டுகிறோம். மனைவிக்கு அல்ல.

வேலையை விட்டுச் செல்லும் போது ஒரு பெண் அருந்தும் காப்பியே உங்கள் களைப்பையும் அயர்வையும் நீக்குவதாய் இருக்கிறது. எல்லா மனிதர்களையும் போல கடவுள் உங்களைக் கைவிட்டாரென்றும். சிறிதளவே அளி்த்திருக்கிறார் என்றும் கருதுகிறீர்கள். நீங்கள் உங்களை நடிகன் என்று சொல்லிக் கொள்ளும் போது சிரிப்பு வருகிறது . ஏனெனில் நாங்கள் இன்னும் துணை நடிகர்கள் அந்தஸ்தை அடையப் போராடுகிறவர்கள்..

ஒரு மழை என்னைக்கடந்து சென்றது தன் அகலக் கால் பரப்பி மிருகம்போல அதன் காலிடுக்கில் மாட்டி தப்பிப் பிழைப்பது எப்படி என நான் பயந்து கிடந்த போது அது என்னைக் கடந்திருந்தது ஒரு இரவு நேரக் குதிரையாய். நான் ஒரு நிரப்ப முடியாத கூழாங்கல்லாய் நின்றிருந்தேன். கடல் பூதங்கள் அலை ரூபத்தில் என்னை அடித்து புத்தகங்கள் நிரப்பிய ஒரு குகையில் விட்டுச் சென்றது. மொழி புரியாத நான் புத்தகங்கங்களைத் தடவியபடி இருந்தேன்.

பிசாசுகளும் பைத்தியங்களும் நிரம்பிய இடத்தில் குளிரையும்., மழையையும் வெய்யிலையும் விதம் விதமான சித்திரங்களாகக் காண்கிறீர்கள். எடுக்கும் பொருட்கள் என் கையிலிருந்தும் தண்ணீராய் வடிந்தது. சுவர்., வீடு., அறை., புகைப்படங்கள் மனசாட்சியைப் போல என்னையும் பார்த்துத் தொடர்ந்து கொண்டிருந்தன.குளிரைப் போல உள்ளே நுழைவது எளிதாயிருக்கிறது உங்களுக்கு.காத்திருக்கும் போது உடல் இன்னொரு உடலாகி விடும் மாற்றத்தையும் கண்டேன்.திடீரென புயலை எளிய நட்பாக்குதல் எப்படிச் சாத்தியம் எனப் புலப்படவில்லை. யாரையும் விரும்பாமல் யாரோடும் இருக்கலாம் என்பது போலவா,.நாம் விரும்பாத உணர்ச்சியைப் பிரதிபலிப்பதைப் போல விரும்பிய உணர்ச்சிகளின் உச்சங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற பேராவல் மின்னுகிறது. ஒரு கடவுச் சொல் அதைக் கெடுத்துவிடாதிருக்கட்டும்.

அம்முவும் அப்புவும் எந்தக் கோரிக்கைக்கும் தீர்வுகளைத்தருவதில்லை. எப்படி வாழ்வது எனக் கற்றுக் கொடுக்கிறார்கள். குழந்தைகளாய் எப்படி இருப்பது., ஒரு மழையை ரசிப்பது., ஒரு குறுக்கெழுத்துப் புதிரை விடுவிப்பது., ஒரு பள்ளிக்கு ., இறந்த காலத்தை நோக்கி அழாமல்., தனது எதிர்காலத்தை நோக்கி எப்படி கம்பீரமாகச் செல்வது. எனக் கற்பிக்கிறார்கள். அன்பை பாசத்தைப் போல அவர்கள் நம் ரத்தத்தைக் கூட விரும்புகிறார்கள்.. எல்லார் வீட்டிலும் உள்ள குழந்தைகள் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல உதவுவது போல வீட்டிற்கு வண்ணங்களைக் குழைத்துப் பூசுகிறார்கள்.குளிரை அணைக்க வைக்கிறார்கள். குழந்தைகளற்ற வீட்டின் உறைந்த ஒழுங்குகள் அச்சமூட்டுகின்றன. காலி அறைகள் ஏற்படுத்தும் அதிர்வை விட அதிகமாய்.

எந்தக் கேள்விக்கும் விடை கிடைப்பதில்லை கருணை மனுக்கள் நிராகரிக்கப்படும்போதும் சரி., கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் துரோகமாயினும் சரி., சாத்தான்களிடம் சரணடைவதுதான் கடவுளை வெற்றி கொள்ளும் வழியாய் இருப்பதும் சரி. அதே அளவு ஏற்படுத்தப்படும் காயமாயினும் சரி. அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டமாகித் துரத்தும் போதும் சரி., சிநேகிதியை எப்படி அழைப்பது என்ற வினாவுக்கும் சரி..பாத்ரூமிலோ., பலர் முன்னிலையிலோ அடிக்கடி அழும் ஒரு பெண்ணை ஆண்கள் கடக்கும் விதமாயினும் சரி.. அழாத ஆண்கள் உலகத்தில் நுழைந்து பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது அது.

யுத்தத்தின் பெயரால் நம்மை அழித்து உருக்குலைத்ததை., யுத்தமற்றபோது நினைவுகளில் ஏற்படுத்திய ஆக்கிரமிப்பை.,

”அவர்கள்
நம் கவிழ்ந்த முகங்களில்
டார்ச் விளக்குகளை அடித்துப் பார்த்தபோது
அங்கே எரியும் நினைவுகளைப் பார்த்தார்கள்.

அப்போது புரிந்து கொண்டார்கள்
அவ்வளவு எளிதாகத்
திரும்பிப் போக முடியாதென்று.

அப்போது
துவங்கினார்கள் நம்முடன்
நம் நினைவுகளுக்கு
எதிரான இந்த யுத்தத்தை.”

“அது நமக்கு நடந்தவை
எதுவும் நமக்கு நடந்தவை அல்ல
என்று நம்ப வைக்கப்படுகிறது”

இழந்து போனபின் எல்லாவற்றிலும் அமைதி திரும்புவதைத்தான் ஏற்க முடியாதிருக்கிறது. சாத்தான்கள் ஒதுக்கிய இடத்தில் வாழ்வது மிகக்கடினம். மாறுதல்களுக்குப் பழகுவது முடிவ்தில்லை. , இளமையின் தேவதைகள் சாத்தானாக மாறும் துன்பத்தைப் போல.

அமிர்தவல்லியின் குறிப்புகளோடு கொண்ட சகவாசம் மண்புழுக்களை மட்டுமல்ல மரமல்லிகள் பேசிக்கொள்வதுகூட காதில் விழுந்தது போலிருக்கிறது. எல்லாரும் வீடுகளுக்குள் இருங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலம் எத்தகைய ஒரு பாதுகாப்பின்மையில் இருக்கிறோம் நாம் என நினைக்க வைத்தது கொள்ளை நோய்.

புவி ஈர்ப்புக்கும் அப்பாற்பட்டவன் கவிஞன். எந்தக் காரணத்துக்காகவும் அவன் யாரையும் அடிமையாக்குவதில்லை. எதனோடும் அடிமைப் பட்டுக் கிடப்பதுமில்லை.

யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை.

முக்கியமாகச்
சக்கர நாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப் படுவதேயில்லை..

உலகம் சுற்றுவதைப் போல சூரியன் ஒளி வீசிக் கொண்டிருப்பது போல யதார்த்தமாய் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன மனுஷ்யபுத்திரனின் கவிதைகள். கவிதைளைப் படிக்கும் போது நம்மையே கவிதைகளாக உணர வைப்பது சிருஷ்டி கர்த்தாக்களுக்கே சாத்தியம். இங்கே ஒவ்வோரு கவிதையிலும் நுழைந்து என்னை அந்தக் கவிதையாகவே உணர்ந்தேன். அதீதத்தின் ருசியை ருசித்தபின் எதுவுமே ருசிக்காது.

நான் அநாவசியமாக
ஒரு வெறுப்பைக் காட்டுகிறேன்.

சம்பந்தமில்லாமல்
ஒரு உதாசீனத்தைக் காட்டுகிறேன்.

வேறெப்படியும்
இந்த இடத்தை விட்டுப்
போக முடியாது.

இதற்கு முன்னும் இதற்குப் பின்னும் பல கவிதைகள் தங்கள் இடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும்., இவற்றைத் தொட்டு உணர்ந்ததன் மூலம் தன் உணர்வுகளோடு கலந்து விட்டவர்களுக்கு….நடனமாடுபவர்களுக்கும்., நடனத்திற்குக் கை தட்டுபவர்களுக்கும் இடையே நடனம் தனியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நூல் :- அதீதத்தின் ருசி., இதற்கு முன்னும் இதற்குப் பின்னும்

ஆசிரியர்:- மனுஷ்ய புத்திரன்

வெளியீடு- உயிர்மை பதிப்பகம்

விலை – ரூ 150/- .&, 190/-

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்இலைகள் இல்லா தரை
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *