ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உண்டென்றால் விளங்கிக் கொள்ளுங்கள் அது சாரதா வீட்டில் தீர்க்கப்படு மென்று. வாழையூரில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அதிசயப் பெண்மணிதான் சாரதாம்மாள். வீட்டில் விறகடுப்புதான். அதில் நெருப்பு அணைந்ததே யில்லை. யாரிந்த சாரதாம்மாள். இவரின் கடந்த காலக் கதையை கால் நிமிடத்தில் சொல்லிவிடலாம். கேட்கத் தயாராகுங்கள்.
இப்போது வயது 45. 20வது வயதில் திருமணம். கணவர் துளசிராமுக்கு மலேசியாவில் மளிகைக் கடை. அண்ணன் பசுபதி. அவரும் மலேசியாவில்தான். 21வது வயதில் மகள் சித்ரா பிறந்தாள். இப்போது கடலூரில் கணவருடன் தனிக்குடித்தனம் நடத்துகிறாள் 26வது வயதில் மகன் சஞ்சீவன். 27வது வயதில் விதவை. சஞ்சீவனைக் கருவுற்றிருந்த போது துளசிராமின் நெஞ்சில் முகம் புதைத்து சாரதா சொன்னார் ‘ஆறாண்டு கால திருமண வாழ்வில் நாம் சேர்ந்திருந்தது 60 நாட்கள்தான். அங்கு நடத்தும் கடையை ஏன் இங்கே நடத்தக்கூடாது.’ துளசிராம் ஆமோசித்துச் சொன்னார். ‘அதற்குத்தான் ஏற்பாடு செய்கிறேன் சாரதா. புழுவைவிட கேவலமானது இந்த வாழ்க்கை. பொறுத்திரு. ஆறே மாதத்தில் வந்து விடுகிறேன்’ ஆறு மாதத்தில் மரணம் அவருக்கு விசா கொடுத்துவிட்டது. துளசிராமின் கடையை அண்ணன் பசுபதியே நடத்துகிறார். அப்பா வழிவந்த பூர்வீக வீடு. ஆண்டுக்கு 30 மூட்டை நெல் வரும் போக்கிய நிலங்கள். அவ்வப்போது பசுபதி அனுப்பும் பணம். கால் நிமிடம் கூட ஆகியிருக்காது. இதுதான் சாரதாவின் கதை. மகன் சஞ்சீவன் பிளஸ் டூ தேர்வை அதிகப்படியாக இரண்டு முறை எழுதித் தோற்று சாரதாவிடம் இருந்த காசையெல்லாம் வாங்கிக் கொண்டு இப்போது துபாயில் துள்ளுகிறான். அவன் நாட்குறிப்பில் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கொடுத்ததாகக் கணக்கிருக்கும். அம்மாவுக்கு அனுப்பியதாக ஒரு 50 ரூபாய்கூட இருக்காது. அவன் இருக்கும்போதே கூட உப்பு சீனி சாரதாதான் வாங்கிவர வேண்டும். அவனால் சாரதாவுக்கு எந்த உதவியும் இல்லை. சாரதாவுக்கு மறுமணம் செய்ய முயன்றார்கள் பலர். சாரதா சொன்னார், ‘என் வேருக்கு வேறொருவர் நீரூற்றினால் என் பிள்ளைகள் வெம்பிவிடுவார்கள். மறுமணம் செய்துகொள் என்பதும் மரணித்துவிடு என்பதும் எனக்கு ஒன்றுதான்.’
2
துபாயிலிருக்கும் சஞ்சீவனிடமிருந்து ஒரு தகவல் வந்தது. அடுத்த மாதம் ஊர் வருகிறானாம். பெண் பார்க்க வேண்டுமாம். சாரதா எல்லாருக்கும் சேதி அனுப்பினார். படிப்பிலையென்று சிலர், பணமில்லை என்று சிலர், சொத்தில்லை என்று சிலர், பொறுப்பில்லை என்று சிலர் ஓரம் கட்டினார்கள். சாரதா முயற்சியை விடவில்லை. சஞ்சீவன் வந்து சேர்ந்தான். ஒரு வாரம் இருந்தான். பிறகு சொன்னான், ‘என் நண்பன் மலேசியாவில் தொழில் தொடங்கப் போகிறானாம். என்னையும் பங்குதாரராகச் சேரச் சொல்கிறான். நான் உடனே மலேசியா போகவேண்டும்.’ என்று. திருமணத்திற்கு ஆசைப்பட்டவன் எந்த ஏற்பாடும் செய்து கொண்டு வரவில்லை. இருக்கும் காசோடு சாரதாவிடம் இருந்ததையும் வளித்துக் கொண்டு மலேசியா புறப்பட்டு விட்டான். 15 நாளில் வந்துவிடுவானாம்.
மலேசியாவில் அப்பா வைத்திருந்த கடையையோ தன் பசுபதி மாமாவையோ கூடப் பார்க்கவில்லை.அங்கு சாந்தாராம் என்ற மனிதரின் தொடர்பு கிடைத்தது. சாந்தாராம் வாழையூருக்குப் பக்கத்து ஊரான சோலைப் பட்டணத்தைச் சேர்ந்தவர்.சஞ்சீவனை ஒரு மதியம் சாப்பிட அழைத்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாந்தாராம் சொன்னார். ‘தம்பீ! உங்கள் தகப்பனாரை நான் நன்கு அறிவேன். உங்களின் தாயார் சாரதாம்மாவையும் எனக்குத் தெரியும். உங்களுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். இதுவரை ஏதும் அமைந்திருக்காவிட்டால் என் பெண்ணைத் தருகிறேன். எனக்கு படிப்பு வேண்டாம். பணம் வேண்டாம். சொத்து வேண்டாம். திருமணத்துக்குப் பின் நீங்கள் வீட்டோடு வந்துவிட்டால் போதும். நிர்வாகத்துத் துணையாக என் பேச்சைக் கேட்டு என் வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும்.’ புகைப்படங்கள் கைமாறின. சஞ்சீவன் சம்மதித்தான். ஊருக்குத் திரும்பினான். சம்பிரதாயத்துக்காக சாரதா சோலைப்பட்டிணத்துக்கு வந்தார். சாந்தாராமும் வாழையூருக்கு வந்தார். எந்தத் தேதியில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று மட்டும்தான் கேட்டார். வேறு எந்தத் தகவலும் பேசவில்லை.
சாரதா 10 பேரை மட்டும் அழைத்துச் சென்றார். திருமணம் முடிந்தது. சஞ்சீவனை விட்டுவிட்டு சாரதா வாழையூருக்கு வந்துவிட்டார். சோலைப்பட்டணத்தில் புது வாழ்க்கையில் நுழைந்தான் சஞ்சீவன். மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று எல்லாரும் மகுடி ஊதினார்கள். பாம்பாக ஆடினான் சஞ்சீவன். ஆறு கறிகளோடுதான் எப்போதும் சாப்பாடு. பல்
3
குத்தும் குச்சி கூட மங்குத் தட்டில் வைத்தார்கள். அடுத்த வீட்டுக்குக் கூட மாமனாரின் குளிரூட்டப்பட்ட அம்பாசிடர் காரில் சென்றான். நாலைந்து ஆண்டுகள் ஓடின. இதற்கிடையே துபாய்க்கும் இரண்டு முறை சென்று திரும்பிவிட்டான். வாழையூர், தாயார் சாரதாம்மாள், அக்காள் சித்ரா எல்லாரும் அவன் நினைவிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டார்கள்.
சாரதா வாழையூரில் சில நாட்கள் கடலூரில் சில நாட்கள் என்று பொழுதைக் கழித்தார். ஒரு நாள் வாழையூருக்கு வந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்திருந்தது. தன் உடம்பில் பெட்ரோலை ஊற்றி யாரோ நெருப்பு வைப்பதுபோல் உணர்ந்தார் சாரதா. சாரதாவின் அந்த பூர்வீக வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இன்னொரு புதுப்பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. மொத்த உடம்பும் பற்றி எரிவதுபோல் உணர்ந்த சாரதா உடனே அண்ணன் பசுபதியிடம் தொடர்பு கொண்டார். பசுபதி ரொட்டியைத் தின்றுகொண்டே பேசினார். ‘ஆம். நான்தான் பூட்டுப் போடச் சொன்னேன். அது அப்பா வீடு. எனக்குத்தான் சேரவேண்டும். உன் பிள்ளைகள் வளரட்டும் என்று விட்டு வைத்திருந்தேன். நீ உன் பிள்ளைகளிடம் இருந்துகொள்.’ சாரதா அழுதார். ‘முக்கியமான பல சாமான்கள் இருக்கின்றன. எதுவுமே கேட்காமல் இப்படி இடியை இறக்கிவிட்டீர்களே! போக்கிய நிலங்கள் மற்றபடி எதைவேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே வேண்டாம். எனக்குச் செலவுக்குக்கூட எதுவும் தரவேண்டாம். இந்த வீட்டை மட்டும் என்னிடமிருந்து பிரிக்காதீர்கள். அது நான் 40 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு. பல நல்ல காரியங்கள் நடந்த வீடு. நீங்கள் சம்மதிக்காவிட்டால் எனக்குச் செத்துப்போவது மட்டும்தான் விடுதலையாக இருக்கும் அண்ணே’ என்றார். அதைக் கேட்டாரோ இல்லையோ மறுமுனையில் போன் வைக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே சஞ்சீவன் துபாயிலிருந்து வந்திருப்பதாகவும் சோலைப்பட்டணத்தில் அவனைப் பார்த்ததாகவும் ஒரு தகவல் வந்தது. சாரதா உடனே சோலைப்பட்டணம் சென்றார்.
ஏழாண்டுகளுக்குப் பின் தன் சம்பந்தி வீட்டுக்குச் செல்கிறார். அந்த இரண்டு மாடி வீட்டில் பொத்தானை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். எட்டுமுழ வேட்டியை ஒற்றையாகக் கட்டிய புடவை. பாலைவனமாக நெற்றி, கழுத்து, காது, மூக்கு, கைகள். செருப்பில்லாத கால்கள். தன் கணவர் இறந்ததிலிருந்து அவர் செருப்பு அணிந்ததில்லை. அந்த மே மாத வெயிலில்
4
புளுங்கிக் கொண்டிருந்தார் சாரதா. அம்பாசிடரில் சில நண்பர்களுடன் வந்த சஞ்சீவி சாரதாவை கவனித்துவிட்டான். காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றான். அந்தக் கோலத்தில் தன் தாயாரை அறிமுகப்படுத்துவதைக் கேவலமாக நினைத்தான் சஞ்சீவன். நண்பர்களை இறக்கிவிட்டு ஒரு வேப்ப மரத்தடியில் நின்றுகொண்டு ஒரு பையனை அனுப்பி சாரதாவை அழைத்துவரச் சொன்னான். சாரதா வந்தார். முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆனால் சஞ்சீவனை ஏறிட்டுப் பார்த்தார் சாரதா. சஞ்சீவன் கேட்டான். ‘இந்தக் கோலத்தில் இந்த வெயிலில் ஏன் இங்கு வந்தீர்கள்.’ சாரதா சொன்னார். ‘கொஞ்சம் உட்கார வேண்டுமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்.’ பக்கத்து மளிகைக் கடையிலிருந்து கள்ளிப்பலகையில் கோர்த்த ஸ்டூல் ஒன்று வந்தது. பித்தளை டபரா டம்ளரில் ஒரு காப்பி வந்தது. அமர்ந்து கொண்டார் சாரதா. குனிந்தபடி பேசினார். கண்ணீர் தன் பாதங்களில் இறங்கியது. ‘என் வீட்டில் உன் மாமா பூட்டுப் போட்டுவிட்டார். நாற்பது ஆண்டுகளாக நான் வாழ்ந்த வீடு. நீ பிறந்த வீடு. நீ பேசினால் அவர் மனம் மாறக்கூடும். இப்போதே பேசு. இதுதான் அவரின் போன் நம்பர்.’ அந்தத் தாளை சஞ்சீவன் வாங்கவில்லை. அவன் சொன்னான். ‘அதோ தெரிகிறதே அதுதான் இங்கு நான் புதிதாகக் கட்டும் வீடு. நாளை கான்கிரீட். ஒரு லட்சம் தேவைப்படும். அதற்காக அலைந்து கொண்டிருக்கிறேன். அந்த மாட்டுக் கொட்டகை வீட்டுக்காக உன் அண்ணனிடம் என்னால் பேசமுடியாது. நீ சித்ராவிடம் போய் இருந்துகொள். மற்ற சேதியை பிறகு பேசிக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு ஒரு ஆயிரம் ரூபாயை அந்த டபராவுக்கு அடியில் வைத்து ஊருக்குத் திரும்பச் சொன்னான் சஞ்சீவி. சாரதா விருட்டென்று எழுந்தார். ‘இந்தப் பணத்தை உன் கான்கிரீட் செலவுக்கு என் பங்காக வைத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்தார். மசாலா தடவிய கோழித்துண்டு அந்த வெயிலில் வெந்துவிடும். அந்த வெயிலில் காலில் செருப்பின்றி நடந்ததைப் பார்த்துக் கொண்டே நின்றான். சஞ்சீவி.
சாரதா நேராக இராமேஸ்வரம் சென்றுவிட்டார். பிடுங்கிப் போட்ட நாற்றுபோல் ஆனார் சாரதா. இராமேஸ்வரத்தில் ஒரு காப்பகம் இருக்கிறது. அதன் தலைவர் வெள்ளச்சாமியை சாரதாவுக்குத் தெரியும். இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கிவிட்டார். இங்கே சித்ரா அம்மாவைத் தேடி பல பக்கமும் ஆள் விட்டுக் கொண்டிருந்தார். வெள்ளச்சாமி சித்ராவுக்கு
5
விபரத்தைச் சொல்லி உடனே புறப்பட்டுவரச் சொன்னார். சித்ராவும் தன் கணவரை அழைத்துக் கொண்டு துரித ரயிலில் புறப்பட்டுவிட்டார். சித்ரா வரும் தகவலை சாரதாவிடம் சொன்னார் வெள்ளச்சாமி. அன்று மாலை வரும் ரயிலுக்காக காலையிலிருந்தே அந்த ரயில் நிலையத்தில் அலைமோதிக் கொண்டிருந்தார் சாரதா.
ரயில் வந்து சேர்ந்தது. சித்ரா தன் கணவருடன் இறங்கினாள். சாரதா கட்டிப் பிடித்து அழுதார். வெள்ளச்சாமியும் அங்கு வந்துவிட்டார். ரகசியமாகச் சித்ராவின் காதில் சொன்னார். ‘தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள். உடனே இங்குள்ள மனநல மருத்துவர் சௌந்தரராஜனிடம் அழைத்துச் செல்லுங்கள்.’
சௌந்தரராஜன் மருத்துவமனை. சாரதாவைச் சோதித்தார் மருத்துவர். இரத்த அழுத்தம் எகிறி யிருந்தது. இசிஜி கிறுக்கியது. எதையோ பிடிப்பதுபோல் கையைத் தூக்குவதும் இறக்குவதுமாக இருந்தார் சாரதா. மருத்துவர் சொன்னார். ‘இவரை உடனே தூங்க வைக்க வேண்டும். மின்சார சிகிச்சை உடனே செய்ய வேண்டும்.’ சித்ரா சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். அந்த அறை மின்சார சிகிச்சைக்குத் தயாரானது. சாரதா கிடத்தப்பட்டார். அந்த இரும்புத் துண்டை தொடையில் வைத்ததும் உடம்பு மொத்தமும் மூன்றங்குலம் பறந்து விழுந்தது. பற்கள் இடுக்கிக் கொண்டன. உதடு கடிபட்டது. இரத்தமும் உமிழ்நீரும் ஒழுகியது. அங்கு சஞ்சீவி ‘கேரம்’ விளையாடிக் கொண்டிருந்தான். சித்ரா அம்மாவைப் பார்க்கச் சகிக்காமல் முகத்தை மூடிக் கொண்டாள். தேம்பினாள். கணவர் ஆறுதல் சொன்னார். சிகிச்சை முடிந்தது. உப்பில்லாத ஒரு கஞ்சி உணவு வந்தது. அதை சாப்பிட முடியாமல் குமட்டினார். அங்கே சஞ்சீவி கழுத்துவரை தின்றுவிட்டு பல் குத்திக் கொண்டிருந்தான். மருத்துவர் ஏகப்பட்ட மாத்திரைகளைக் கொடுத்தார். அத்தனையும் தூக்க மாத்திரையாம். ஆறுமாதம் சிகிச்சை தேவையாம். அடுத்த வாரம் மீண்டும் அழைத்துவரச் சொன்னார்.
அம்மாவை அழைத்துக் கொண்டு கடலூர் வந்து சேர்ந்தாள் சித்ரா. சாரதாவைத் தேடி ஒரு ஆள் வந்தார். சாரதா எப்போதோ வாங்கிப் போட்டிருந்த மனைக்கட்டு அவருக்கு வேண்டுமாம். 5 லட்சம் தருவதாகச் சொன்னார். உடனே சம்மதித்தார் சாரதா. மிக தைரியமாக சித்ராவுடன்
6
பத்திரப் பதிவு அலுவலகம் சென்றார். கையெழுத்துப் போட்டார். கைமாறியது 5 லட்சம்.
நான்கு லட்சத்தை சித்ராவிடம் கொடுத்துவிட்டு ஒரு லட்சத்தை சஞ்சீவனிடம் கொடுக்கச் சொன்னார் சாரதா. ‘நம் உறவினர்கள் எத்தனையோ பேர் ஒரு வேளைச் சோறில் உயிரைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு லட்சத்தை அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாம். இந்தப் பணத்தின் அருமையை சஞ்சீவன் உணரமாட்டான்.’ என்றார் சித்ரா.
சாரதா சிரித்தார். உடனே அழுதார். மீண்டும் சிரித்தார். கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அந்த டம்ளரைக் கையில் வைத்துக் கொண்டே சொன்னார். ‘நீ அவனைத் தேடிப் போகக் கூடாது சித்ரா. நான் செத்துப்போன சேதி கேட்டு அவன் வருவான். நிச்சயம் வருவான். ஒரு துளி கண்ணீராவது சிந்துவான். அந்தக் கண்ணீருக்கு விலைதான் இந்த ஒரு லட்சம்.’ சொல்லி முடித்ததும் டம்ளர் டங்கென்று விழுந்து குதித்தது. அந்தச் சிரிப்பு உதட்டிலேயே நின்றுகொண்டது. கலவரமின்றி கண்கள் மூடிக்கொண்டது. அந்தக் கண்கள் பிறகு திறக்கவே இல்லை.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!
- “மச்சி ஓப்பன் த பாட்டில்”
- பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)
- பூரணச் சந்திர சாமியார்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 10
- நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !
- கண்ணீருக்கு விலை
- தீயின் தரிசனம்
- புதிய சுடர்
- தொலைந்த ஒன்று.:-
- மாலை சூட
- வைகையிலிருந்து காவிரி வரை
- இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்
- மாணவ பிள்ளைதாச்சிகள்
- மட்டைகள்
- அந்த இருவர்..
- நிலா அதிசயங்கள்
- கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நட்பு அழைப்பு. :-
- எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்
- அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-
- இலைகள் இல்லா தரை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)
- மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா
- TAMFEST 2011
- பேசும் படங்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்
- முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்
- உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011