ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்
சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். மந்தையின் இடையே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் கண்டான். ஆடுகளிரண்டும் ஆங்காரத்துடன் விலகிப் பின் வாங்குவதும், மீண்டும் ஓடிவந்து அகன்ற நெற்றி மண்டைகளோடு ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வதுமாயிருந்தன. மண்டையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. பேராசை பிடித்த குள்ளநரியொன்று இந்த சண்டையைப் பார்த்தது. மாமிசம் தின்ன விரும்பிய நரி அவற்றிற்கிடையே புகுந்து ரத்தத்தைப் பருகி ருசித்தது. இதைத் தேவசர்மா கவனித்தான், ”அடபாவமே! இந்தக் குள்ளநரியின் மடத்தனத்தைப் பார்! ஆட்டுச்சண்டையினிடையே சிக்கிக் கொண்டால் இந்த நரி நிச்சயம் சாகும். வேறெதுவும் நடக்கப்போகிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை” என்று சிந்தித்தான்.
மீண்டும் ஒருமுறை ஆடுகள் முட்டிக்கொள்ள நெருங்கின. ரத்தத்தை ருசி பார்த்து ருசி பார்த்து ஆவலோடு நெருங்கி வந்து கொண்டேயிருந்த குள்ள நரி இடையே சிக்கிக்கொண்டது. கீழே தள்ளப்பட்டு உயிர் விட்டது. ”ஆட்டுச் சண்டையிலே குள்ளநரி செத்தது” என்று சொல்லி அதைப் பற்றிச் சிந்தித்தபடியே தேவசர்மா நடக்கலானான், பணப்பையைப் பெற்றுக் கொள்வதற்காகத் திரும்பி வரலானான்.
யோசனையிலே மூழ்கிப்போய் மெதுவாக நடந்துவந்த தேவசர்மா, ஆஷாடபூதி கண்ணில் தட்டுப்படவில்லை என்று கண்டதும் அவசர அவசரமாகக் கால் கழுவிக் கொண்டு திரும்பிவந்து கந்தையைப் பிரித்துப் பார்த்தான். பணப்பை காணவில்லை. ”ஐயையோ, திருடிவிட்டானே! திருடிவிட்டானே!” என்று கூக்குரலிட்டுக் கொண்டே மூர்ச்சை போட்டுத் தரையில் விழுந்தான். ஒரு கணப் பொழுதில் மீண்டும் நினைவு பெற்று எழுந்து உட்கார்ந்தான். ”ஆஷாடபூபதியே! என்னை வஞ்சித்து விட்டு எங்கே போனாய்? பதில் சொல்!” என்று பலபடி அலறினான். கடைசியில் அவனுடைய காலடி அடையாளங்களைத் தேடிப் பின்பற்றியவாறு ”ஆஷாடபூதியால் வஞ்சிக்கப் பட்டோம்” என்று முணுமு1துக்கொண்டே மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினான்.
நெசவாளியின் மனைவி
போகிற வழியில் பக்கத்து நகரத்தில் கள் குடிப்பதற்காகத் தன் மனைவியோடு சென்று கொண்டிருந்த ஒரு நெசவாளியைத் தேவசர்மா சந்தித்தான். ”நண்பனே! அஸ்தமன வேளையில் விருந்தாளியாக உன்னிடம் வந்திருக்கிறேன். இந்தக் கிராமத்தில் யாரும் எனக்குத் தெரியாது. அதிதி தர்மத்தைச் செய்வாவாயாக! ஒரு பழமொழி கூறியிருப்பதுபோல்:
அந்திப் பொழுதில் வந்த விருந்தாளியைக் குடும்பஸ்தர்கள் தள்ளக்கூடாது. விருந்தாளியைப் பூஜிப்பதால் ஒருவன் தெய்வாம்சம் பெறுகிறான்.
நல்லவர்கள் இல்லத்தில் கோரைக்கும், தரைக்கும், நீக்கும் நல்ல சொல்லுக்கும் எனறும் குறைவில்லை.
விருந்தாளியைக் கண்டு ”வருக” என்று வரவேற்பதால் அக்னியும், ஆசனமளிப்பதால் இந்திரனும், கால் கழுவுவதால் கிருஷ்ணபகவானும், அன்னமளிப்பதால் பிரஜாபதியும், திருப்தியடை கின்றனர்.
என்றான் தேவசர்மா.
இதைக்கேட்ட நெசவாளி தன் மனைவியைப் பார்த்து, ”அன்பே! இந்த விருந்தாளியை அழைத்துக்கொண்டு நீ வீட்டுக்குப் போ. கால் கழுவி, ஆகாரம், படுக்கை முதலியவை தந்து உபசரித்து நீ அங்கே இரு. நான் போய் உனக்கு நிறைய மதுவும் மாமிசமும் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
தேவசர்மாவை அழைத்துக்கொண்டு, யாரோ பரபுருஷனை மனதில் எண்ணியபடி சிரித்த முகத்தோடு அந்த வேசி மனைவி வீடுநோக்கி நடந்தாள். ஒரு பழமொழி கூறுவதுபோல்:
அமாவாசையன்று இருட்டிக் கிடக்கிற போதும், நகர் தெருக்களில் சேறு குழம்பி நிற்கும்போதும், கணவன் வெளியூருக்குச் சென்றிருக்கும்போதும் சோரம் போகிறவளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.
கள்ளக்காதலனைக் கொண்ட பெண்கள் கட்டிலில் கணவனோடு படுத்து இன்பமாய்த் தூங்குவதை புல்லுக்குச் சமானமாகக் கருதுகிறார்கள்.
பரபுருஷனைச் சேரும் மனைவி தன் குலநாசத்திற்கும், ஊராரின் பழிச் சொல்லுக்கும், சிறை வாசத்திற்கும், ஏன், மரணத்திற்கும் கூடத் துணிந்துவிடுகிறாள்.
நெசவாளியின் மனைவி வீடு அடைந்ததும் தேவசர்மாவுக்கு ஒரு உடைந்த கட்டிலைக் காட்டி, ”உத்தமரே! கிராமத்திலிருந்து என் சிநேகிதியொருத்தி வந்திருக்கிறாள். அவளைக் கண்டு பேசிவிட்டு சடுதியில் வந்து விடுகிறேன். வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினாள். தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு யாரோ ஒரு புருஷனை நாடி வெளியே சென்றாள்.
போகிற வழியில், கள் குடித்து உடல் தளர்ந்து போய் கையில் ஒரு கள் பானையைப் பிடித்துக்கொண்டு தலைவிரி கோலமாய் தள்ளாடி தள்ளாடி நடந்தபடி அவளுடைய புருஷன் எதிரே வந்தான். அவனைக் கண்டதும் அவள் சரேலென்று வீடு நோக்கி ஓட்டம் பிடித்தாள். உள்ளே போய் அலங்காரத்தையெல்லாம் கலைந்து விட்டு முன்போலவே இருந்து கொண்டாள். அலங்காரங்களுடன் ஓடுகிற மனைவியை நெசவாளி பார்த்துவிட்டான். அவள் நடத்தையைப் பற்றி ஜனங்கள் பேசிக்கொள்வதை ஏற்கனவே பராபரியாகக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, வருத்தமும், கோபமும் அடைந்து வீட்டில் நுழைந்தான். ”அடி பாவி! வேசி! எங்கே புறப்பட்டாய் வெளியே?” என்று கத்தினான்.
”உன்னை விட்டு வீட்டுக்கு வந்தபின் நான் எங்கும் போகவில்லையே? குடிபோதையிலே ஏன் என்னைத் திட்டுகிறாய்? ஒரு பழமொழி கூறுவது போல்:
உடல் நடுக்கம், தரையில் சாய்தல், தகுதியற்ற பிதற்றல், இவை எல்லாம் குடிபோதைக்கும் காயச்சலுக்கும் உள்ள அடையாளங்கள்.
கையோங்குவது, உடை நழுவவிடுவது, பலம் குறைவது, கோபப்படுவது, – இவை எல்லாம் குடிகாரனின் அவஸ்தைகளாகும்.
கிரணங்கள் வீசுவது, வானதத்தைத் துறப்பது, ஒளி மங்குவது, செந்நிறம் கொள்வது, இவை எல்லாம் அஸ்தமிக்கிற சூரியனுக்கு உண்டு.
(சூரியனுக்கும் குடிகாரனுக்கும் சிலேடையாக இந்தச் செய்யுள் அமைந்துள்ளது.)
எதிர்த்துப் பேசுகிற மனைவி உடை மாற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்த நெசவாளி, ”விபச்சாரி! வெகுநாளாக உன்னைப் பற்றி ஊரில் பல அபவாதங்களைக் கேட்டு வருகிறேன். இன்றைக்கு எனக்கே ருஜு கிடைத்துவிட்டது. இப்பொழுதே தகுந்தபடி தண்டிக்கிறேன், பார்!” என்று சொல்லி ஒரு தடியெடுத்துவந்து அவளை அடி அடி என்று அடித்தான். தூணோடு சேர்த்துக் கெட்டியாகக் கட்டிப் போட்டான். பிறகு குடிபோதையிலே உடல் சோர்ந்து படுத்து அயர்ந்து தூங்கினான்.
அந்த நேரத்தில் அவள் சிநேகிதியான நாவித ஸ்திரீ ஒருத்தி வந்து, நெசவாளி தூங்குவதைக் கண்டு வீட்டில் நுழைந்தாள்.
”என்னடீ, அந்த ஆள் அங்கே உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானே! சீக்கிரம் போ!” என்று கூறினாள்.
”என் அவஸ்தையைப் பார்! நான் எப்படிப் போவேன்? இப்போது அவனைச் சேரமுடியாது என்று போய்ச் சொல்லிவிடு!” என்றாள் நெசவாளியின் மனைவி.
”அப்படிச் சொல்லாதேடீ! அது வேசிகளின் தர்மமல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்:
சிரமத்தையும் தூரத்தையும் பாராமல் இன்பமனுபவிக்கிறவன் இருக்கிறானே, அவன் ஒரு ஒட்டகம் மாதிரி, எதைக் காண்கிறானோ அதையே விடாமல் பின் தொடர்கிறான்.
மறு உலகம் என்பது சந்தேகமான விஷயம். உலகத்தின் பழிச் சொல்லோ விந்தையானது. எனவே, பிறத்தியாரின் கணவன் தன் கைவசமாகும்போது அவன் சுகததை அனுபவிக்கிறவளே பாக்கியசாலி.
காதலன் என்று இருந்தால் போதும், அவன் குரூபியாயிருந்தாலும் கஷ்டங்கள் யாவற்றையும் சகித்துக்கொண்டு சோரம் போனவள் அவனை இரகசியத்தில் கூடுகிறாள்.
”என்னைக் கட்டிப்போட்டிருக்கிறதே, எப்படிப் போவேன்? அந்தப் பாவி புருஷனும் இங்கேயே தூங்குகிறானே!” என்றாள் நெசவாளியின் மனைவி.
”அவன் குடிபோதையிலே சோர்ந்து தூங்குகிறான். விடிந்த பிறகுதான் விழித்துக்கொள்ளப் போகிறான். உன்னை விடுவித்து உன் இடத்தில் நான் இருந்து கொள்கிறேன். நீ போய் அந்த ஆளைச் சேர்ந்துவிட்டு சீக்கிரம் திரும்பி வந்துவிடு!” என்றாள் நாவித ஸ்திரீ.
நெசவாளியின் மனைவி வெளியே சென்றாள். கொஞ்ச நேரத்தில் நெசவாளி கண்விழித்தான். கோபம் சிறிது தணிந்திருந்தது. ஆனால் கள்வெறி இன்னும் தொலைந்தபாடில்லை. அவளைப் பார்த்து, ”ஏ பொய் சொல்லி! இன்று முதல் வீட்டை விட்டுப் போக மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன் என்று சொல்! உன்னை விடுவிக்கிறேன்!” என்று சொன்னான்.
பேசினால் குரல் வேறுபாடு தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுமே என்று பயந்துபோய் நாவித ஸ்திரீ பதில் பேசாமலிருந்தாள். அவன் சொன்னதையே திருப்பவும் சொல்லிப் பார்த்தான். அதற்கும் அவள் பேசாமலே இருந்தாள். அவனுக்கு ஒரே ஆத்திரமாய்ப் போய்விட்டது. ஒரு கூரிய கத்தி எடுத்து வந்து அவளுடைய மூக்கை அறுத்துவிட்டான். ”வேசி! இங்கேயே கிட! உன்னோடு இனிமேல் நான் சந்தோஷமாயிருக்கப் போவதில்லை, போ!” என்று கத்திவிட்டு, மறுபடியும் நித்திரையில் ஆழ்ந்துவிட்டான்.
பணப்பை பறி கொடுத்ததினால் உண்டான மனோவேதனையும், பசியால் தொண்டை வறண்டுபோயிருந்த நிலைமையும், சேர்ந்து தேவசர்மாவுக்குத் தூக்கம் வரவொட்டாமற் செய்தன. படுத்துக்கிடந்த படியே அந்த ஸ்திரீயின் சகல நடவடிக்கைகளையும் அவன் கவனித்துக்கொண்டிருந்தான்.
நெசவாளியின் மனைவி தன் கள்ளக் காதலனோடு விருப்பம்போல் சுகித்துவிட்டுக் கொஞ்ச நேரத்தில் வீடு திரும்பினாள். ”ஏண்டீ நீ சரியாகத்தானே இருக்கிறாய்? நான் இல்லாதபோது இந்தப்பாவி எழுந்திருக்கவில்லையா?” என்று சிநேகிதியைக் கேட்டாள்.
”மூக்கு மட்டும் இல்லை, மற்றபடி உடம்புக்குச் சௌக்கியந்தான்! சீக்கரம் கட்டவிழ்த்துவிடு. அவன் எழுந்திருப்பதற்குள் விடுவித்துவிடு. வேகமாய் வீட்டுக்குப் போய்விடுகிறேன். இல்லாவிட்டால் இன்னும் மோசமாகக் காது முதலியவற்றை அறுத்துவிடுவான்” என்றாள் சிநேகிதி.
நாவித ஸ்திரீயைக் கட்டவிழ்த்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பெண் அவள் ஸ்தானத்தில் கட்டுண்டு நின்றாள். புருஷனை நிந்திக்கத் தொடங்கினாள். ”சீச்சீ, பரம முட்டாள்! நான் சாது, நான் மகாபதிவிரதை. என்னைக் கெடுக்கவோ, அங்கஹீனம் செய்யவோ யாரால் முடியும்? ஹே, உலகை ரட்சிக்கும் தெய்வங்களே, கேளுங்கள்.
சூரியனே! சந்திரனே! வாயுவே! அக்னியே! வானமே!
பூமியே! ஜலமே! மனமே! யமனே! பகலே! இரவே! காலை மாலைச் சந்திகளே! மனித நடத்தையின் நியாயத்தை அறியுங்கள்!
நான் பதிவிரதையானால் முன்போல் எனக்கு மூக்கு உண்டாகும்படி தேவர்கள் செய்யட்டும்; அப்படியில்லாமல் நான் பரபுருஷனை மனத்தால்கூட விரும்பியிருந்தால் என்னைச் சாம்பலாக்கட்டும்!” என்று சொன்னாள். மறுபடியும் கணவனைப் பார்த்து, ”துராத்மா! என்னைப் பார்! என் கற்பின் மகிமையால் முன்போலவே எனக்கு மூக்கு உண்டாகிவிட்டது!” என்றாள்.
நெசவாளி விளக்கு எடுத்துவந்து பார்த்தான். அவளுக்கு மூக்கு இருப்பதையும், தரையெல்லாம் ஒரே ரத்தவெள்ளமாயிருப்பதையும் கண்டுவிட்டு அவன் ஆச்சரியமடைந்து போனான். உடனே அவளைக் கட்டிலிருந்து விடுவித்து, பல இனிய மொழிகள் பேசி, அவளை திருப்தி செய்தான்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேவசர்மா ஆச்சரியத்தோடு பின்வருமாறு சொன்னான்:
உசனன் (அசுரர்களின் குரு) அறிந்த சாஸ்திரமு, பிரகஸ்பதி (தேவர்களின் குரு) அறிந்த சாஸ்திரமும் ஸ்திரீ சாகஸத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. இந்த நிலைமையில், ஸ்திரீகளைக் கட்டுப்படுத்தி வைப்பது சாத்தியமா?
பொய்யும் சாகஸமும், ஏமாற்றும் மடமையும், பேராசையும், அசுத்தமும், இரக்கமின்மையும் பெண்களின் கூடப்பிறந்த தோஷங்களாகும்.
பெண்ணழகுக்கு அடிமையாகிவிடாதே! உன்னைத் துன்புறுத்தக்கூடிய சக்தி அவர்களிடம் அதிகரிக்கச் செய்ய விரும்பாதே! சிறகொடிந்த பறவைகளுடன் விளையாடுவது போல் அடிமைப்படும் ஆண்களுடன் அவர்கள் விளையாடு கிறார்கள்.
பெண்கள் வாயில் தேனும், நெஞ்சில் நஞ்சும் இருக்கின்றது. அதனால்தான் ஆண் அவளது வாயிதழ்களைப் பருகுகிறான், நெஞ்சில் அறைகிறான்.
சந்தேகம் நிறைந்த குளம்; வணக்க மின்மையின் அரண்மனை; சாகஸத்தின் தலைநகர்; தோஷங்களின் சமூகம்; எண்ணிலா ஏமாற்றங்களின் இருப்பிடம்; அவநம்பிக்கையின் கோவில்; சகல மாயைகளும் நிரம்பித் தளும்பும் கலயம்; உத்தமர்கள் பெறத் தகுதியற்ற அமுதமயமான விஷம்; இதுதான் பெண். தர்மத்தை அழிப்பதற்கு இந்தக் கருவியை யார் சிருஷ்டித்தார்களோ?
கனமுலையும், சுடர்விழியும், பிறை நுதலும் போற்றப் படுகின்றன. சுருள் கூத்தலும், மென் சொல்லும், பரந்த நிதம்பமும், மட நெஞ்சும், சாகஸப் பேச்சும் பெண்களின் லட்சணங்கள். அவை தோஷங்களின் கூட்டுத்தொகை. மான் விழி மாதரை விலங்குகள் விரும்பட்டும், மனிதர்கள் நேசிக்க வேண்டாம்.
பெண்கள் அழுவதும் சிரிப்பதும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளத்தான். உன் நம்பிக்கையைப் பெற்றுப் பேணுகிறார்கள்; தாம் மட்டும் பிறரை நம்பவே மாட்டார்கள்; சுடுகாட்டுச் சட்டிகள் போன்ற இவர்களை குலமும் குணமும் உள்ள மனிதர்கள் விலக்கிவிட வேண்டும். பரந்து அடர்ந்த பிடரிமயிருடன் பயங்கரமாய்த் தோற்றமளிக்கும் சிங்கங்களும், மதஜலப் பெருக்கால் கன்னங்கள் பிரகாசிக்கும் யானைகளும், அறிவாற்றலில் மேதாவிகளாய் போரில் வீரர்களாய் விளங்குபவர்களும், ஸ்திரீகளின் முன்னே கோழையிலும் கோழையாகி விடுகின்றனர். உள்ளே விஷம் நிரம்பி, வெளியே அழகு சொட்டும் காஞ்சிரப்பழம் மாதிரி பெண்! இவளை யார் சிருஷ்டித்தார்களோ!
இப்படியெல்லாம் அந்தச் சந்நியாசி சிந்தித்தவாறே அன்றிரவு முழுவதும் கழிந்தது.
மூக்கறுபட்ட நாவித ஸ்திரீ வீடு போய் சேர்ந்தாள். ”இனி என்ன செய்வது? இந்தப் பெரிய அங்கஹீனத்தை மறைப்பதெப்படி?” என்று சிந்திக்கலானாள். இந்த யோசனைகளிலே இரவு முழுவதும் இவள் ஆழ்ந்திருக்க, இவள் புருஷன் அரண்மனையிலே காரியம் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் அவன் வீடு திரும்பினான். பலவிதமான நகர அலுவல்களைப் பார்க்க வேண்டியிருந்த அவசரத்தில் அவன் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு, அன்பே! ஷவரப் பெட்டியைச் சீக்கிரம் எடுத்துவா! நான் நகர வேலைகளைப் பார்க்கப் போகவேண்டும்” என்று பெண்டாட்டிக்குக் குரல் கொடுத்தான்.
மூக்கறுபட்ட மனைவிக்கு ஒரு யோசனை உதித்தது. வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு அவனை நோக்கி ஒரே ஒரு கத்தியை மட்டும் எடுத்து வீசி யெறிந்தாள். ஷவரப் பெட்டியைக் கேட்டாள் வெறும் கத்தியை மட்டும் எடுத்து வீசுகிறாளே என்று கோபமடைந்தான் நாவிதன். அந்தக் கத்தியை அவள்மேல் திருப்பி வீசினான். இதைச் சாக்காகக் கொண்டு அந்த துஷ்டப் பெண் வானை நோக்கி கைகளைத் தூக்கிக் கதறியழுதுகொண்டு வெளியே ஓடிவந்தாள். ”நான் பதிவிரதையாச்சே! என் மூக்கை அறுத்துவிட்டானே இந்தப் படுபாவி! ஐயையோ! என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று அலறினாள்.
ராஜ சேவகர்கள் வந்தார்கள். அவனை நையப்புடைத்து, பலமான கயிற்றால் கட்டி,பெண்டாட்டியுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துப் போனார்கள். நீதி வழங்கும் அதிகாரிகள், ”உன் மனைவிக்கு என்னு இப்படிப்பட்ட கொடுமை செய்தாய்?” என்று கேட்டனர். ஆச்சரியத்திலே நாவிதனுக்கு மூளை குழம்பிப் போயிருந்தது. ஒன்றும் பதில் பேசவில்லை. இதைக்கண்ட அதிகாரிகள் நீதி நூல்களில் கூறியிருப்பதை எடுத்துரைத்தனர்.
குற்றம் செய்து பயந்துவிட்ட மனிதன் குழறிய பேச்சும், வெளிறிய முகமும், மிரண்ட பார்வையும், ஒடுங்கிய கர்வமும் உடையவனாய்க் காணப்படுவான்.
தள்ளாடி தள்ளாடி நடப்பான்; முகம் வெளுத்துப் போகும்; நெற்றியில் வியர்த்துக் கொட்டும்; வார்த்தை திக்கித் திக்கி வரும்; உடல் நடுங்கிக் கொண்டிருக்கும்; பார்வை கீழ் நோக்கிச் செல்லும்; இந்த வெளிப்படையான அடையாளங் களைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இன்னொருபுறத்தில், களங்கமற்ற இனிய முகபாவமும், தெளிந்த பேச்சும், கோபிக்கும் பார்வையும், வெறுப்புத் தட்டிய முகமும், தன்மதிப்பு மிகுந்த தோரணையும் உடையவனாய் நிரபராதி நீதி மன்றத்தில் காணப்படுவான்.
ஆகையால் இவன் குற்றவாளியாகக் காணப்படுகிறான். பெண்ணைத் தாக்கும் குற்றத்துக்குத் தண்டனை மரணமே. இவனைக் கொண்டுபோய் கழுவில் ஏற்றுங்கள்?” என்றனர்.
நாவிதனைக் கொலைக்களத்திற்குள் கொண்டு போனார்கள். இதைத் தேவசர்மா பார்த்து, உடனே அதிகாரிகளிடம் போய், ”பெரியோர்களே! இந்தப் பரிதாபகரமான நாவிதனைக் கொல்வது அநியாயம். அவன் நல்லவனே. நான் சொல்வதைக் கேளுங்கள்!
”ஆட்டுச் சண்டையில் நுழைந்த குள்ளநரியும், ஆஷாடபூதியால் வஞ்சிக்கப்பட்ட நம்மை போன்றவர்களும், பிறர் காரியத்தில் தலையிட்ட அந்தப் பெண்ணும் தம் செய்கைகளாலேயே தீங்கு வரவழைத்துக் கொண்டார்கள்” என்றான். ”சந்நியாசியே, அது எப்படி?” என்று அதிகாரிகள் கேட்டதும், நடந்த மூன்று சம்பவங்களையும் அவன் விவரமாகத் தெரிவித்தான். எல்லோரும் ஆச்சரியமடைந்தார்கள். நாவிதனை விடுதலை செய்துவிட்டு, அதிகாரிகள் சொன்னதாவது:
”பிராம்மணனும், குழந்தையும், பெண்ணும், சந்நியாசியும், நோயாளியும், கொல்லத்தகாதவர்கள். அவர்கள் பெரிய குற்றம் புரிந்தால் அதற்குத் தண்டனை அங்கஹீனமே.
தன் செய்கையின் விளைவாக அந்தப் பெண் மூக்கு அறுபட்டான். அதற்குமேல் ராஜதண்டனையாக அவளது காதுகளையும் அறுத்தெறியுங்கள்!” என்றனர்.
தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு உதாரணங்களையும் கண்டு மனத்தை திடப்படுத்திக் கொண்டு தேவசர்மா மடாலயத்துக்குத் திரும்பிப் போனான்.
அதனால்தான் ‘ஆட்டுச் சண்டையால் குள்ளநரியும்…..’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்று கூறி முடித்தது தமனகன்.
”அப்படியா விஷயம்? சரி, இப்போது என்ன செய்யலாம்?” என்று கேட்டது கரடகன்.
”இந்த நிலைமைக்கு நாம் வந்துவிட்ட போதிலும் பரவாயில்லை. சஞ்சீவகனைப் பிங்களகனிடமிருந்து பிரித்து விடுவதற்கு எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றத்தான் போகிறது பார்! மேலும், நமது எஜமானர் பிங்களனகன் கெட்டவழியில் செல்கிறார்.
மன்னர்கள் மதிமயங்கிக் கெட்ட வழியில் பிரவேசிக் கின்றனர். ராஜசேவகர்கள் பல முயற்சிகள் செய்து வேத சாஸ்திரங்களைக் காட்டி அவர்களைத் தடுத்துத் திருத்து கின்றனர்
என்றது தமனகன்.
”எஜமானர் என்ன பாபம் செய்கிறார்?” என்று கேட்டது கரடகன்.
”உலகில் ஏழுவிதமான தீச்செயல்கள் உள்ளன. அவை:
காமம், கள், சூதாட்டம், வேட்டை, கடுஞ்சொல், குரூரச் செயல், பேராசை, இவை ஏழும் தீயசெயல்கள்.
ஆசை என்ற ஒரே துர்க்குணத்திலிருந்துதான் இந்த ஏழும் கிளை பிரிகின்றன” என்றது தமனகன்.
”என்ன? அது ஒன்றுதானா அடிப்படையானது? இதர அடிப்படையான தோஷங்கள் இல்லையா?”
”உலகில் ஐந்து விதமான தோஷங்கள் அடிப்படையாகவுள்ளன.”
”அவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன?”
”குறைவு, ஊழல், ஆசை, அழிவு, தவறான கொள்கை என்று தோஷங்கள் ஐந்து வகைப்படும். இதில் முதலாவது, குறைவு. அரசன், மந்திரி, மக்கள், கோட்டை, பொக்கிஷம், தண்டிக்கும் சக்தி, நண்பர்கள் என்கிற ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்று இல்லாமல் போனாலும் அதைக் குறைவு என்கிறோம்.
”இரண்டாவதாக ஊழல், வெளிநாட்டார்களோ அல்லது உள் நாட்டு ஜனங்களோ, தனி நபராகவோ அல்லது கூட்டமாகவோ குமுறிக் கொந்தளித்தால், அந்தத் தீய நிலைமையை ஊழல் என்று குறிக்கிறோம்.
”மூன்றாவதாக, ஆசை, இதைப்பற்றி ”காமம், கள், சூதாட்டம்…” என்கிற செய்யுளில் மேலே குறிப்பிட்டிருக் கிறோம். இதை இரண்டு வகுப்பாகப் பிரிக்கலாம். காமம், கள், சூதாட்டம், வேட்டை என்பவை காமத்தின் பாற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை. கடுஞ்சொல் முதலிய மற்றவை கோபத்தின் பாற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை. இதில் முதல் வகுப்பில் தோல்வி கண்டவர்கள் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த தீய பழக்கங்களில் இறங்குகின்றனர். காமத்தின் பாற்பட்ட வகுப்பைப் பற்றிய விஷயம் நன்றாகத் தெரிந்ததே. கோபத்தின் பாற்பட்ட வகுப்பு மூன்று வகையுள்ளது என்று முன்பே சொன்னோம். அதை இன்னும் கொஞ்சம் விரமாகச் சொல்ல வேண்டும். எதிரிக்குத் தீமை செய்யும் நோக்கத்தோடு சரிவர யோசிக்காமல் அனாவசியமாகக் குற்றம் கற்பிப்பதைத் தான் ‘கடுஞ்சொல்’ என்கிறோம். மரணதண்டனை, சிறையிலடைத்தல், அங்கஹீனம் செய்தல் முதலிய தண்டனை களில் அனாவசியமாக இரக்கமற்ற சித்திரவதைகளைச் செய்வதைத்தான் ‘குரூரச் செயல்’ என்கிறோம். அளவு முறை எதுவுமின்றி பணத்தின் மீது மோகம் கொள்வதையே பேராசை என்கிறோம். ஆசை என்பது இப்படி ஏழுவகை களாகப் பிரிந்துள்ளன.
”நான்காவதாக, அழிவு. இது எட்டு வகைப்படும். கடவுள், செயல், தீ, நீர், நோய், தொத்து வியாதி, கிலி, பஞ்சம், அசுர மழை ஆகியவற்றால் எட்டு வகை அழிவுகள் உண்டாகின்றன. மிதமிஞ்சிய மழையைத்தான் இங்கே அசுர மழை என்று குறிக்கிறோம். ஆக, இவை எட்டும் அழிவு என்பதைக் குறிக்கும்.
”கடைசியில் ஐந்தாவதாக, தவறான கொள்கை, சமாதானம், சண்டை, போர்த்தளம் மாற்றுதல், இடம் பெயராது இருத்தல், நேச உறவுகள் கொள்வது, கபடம்&& ஆகிய ஆறு உபாயங்களையும் பிசகாக உபயோகப் படுத்துவது, அதாவது, சமாதானம் செய்து கொள்ளவேண்டிய நிலைமையில் சண்டை செய்வது, சண்டைக்குப் போக வேண்டிய நிலைமையில் சமாதானம் பேசுவது, இது மாதிரியே இதர உபாயங்களைக் கையாள்வதிலும் தவறுகள் செய்வது. இதைத்தான் தவறான கொள்கை என்று குறிப்பிடுகிறோம்.
”குறைவு என்கிற கேடு இருக்கிறதே, அதில் நம் அரசர் பிங்களகன் விழுந்திருக்கிறார். சஞ்சீவகன்மீது ஒரே மோகம் கொண்டு விட்டதனால், ராஜ்யத்தைத் தாங்கி நிறுத்துகிற மந்திரி முதலான ஆறு வகை சாதனங்கள் எதிலும் கவனம் செலுத்தாமலே இருந்துவருகிறார். புல் தின்கிறவனின் தர்மத்திலும் கர்மத்திலும் கருத்துச் செலுத்தியபடி எப்பொழுதும் இருக்கிறார். வார்த்தை வளர்ப்பானேன்? எப்படியாவது பிங்களகனைச் சஞ்சீவகனிடமிருந்து பிரிக்க வேண்டும். விளக்கு இல்லாவிட்டால் வெளிச்சமும் இராதல்லவா?” என்று முடித்தது தமனகன்.
”உனக்குத்தான் அதிகாரம் இல்லையே, நீ எப்படிப் பிரித்துவிடுவாய்?” என்று கேட்டது கரடகன்.
”நண்பனே! இந்தப் பழமொழி எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது, பார்!
உடல் பலத்தால் ஆகாததை மனோபலத்தால் முடிக்க முடியும். பெண் காகம் பொன் மாலையை உபயோகித்துக் கருநாகத்தைக் கொன்றது”
என்றது தமனகன்
”அது எப்படி?” என்றது கரடகன். தமனகன் சொல்லத் தொடங்கியது:
- இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!
- “மச்சி ஓப்பன் த பாட்டில்”
- பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)
- பூரணச் சந்திர சாமியார்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 10
- நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !
- கண்ணீருக்கு விலை
- தீயின் தரிசனம்
- புதிய சுடர்
- தொலைந்த ஒன்று.:-
- மாலை சூட
- வைகையிலிருந்து காவிரி வரை
- இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்
- மாணவ பிள்ளைதாச்சிகள்
- மட்டைகள்
- அந்த இருவர்..
- நிலா அதிசயங்கள்
- கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நட்பு அழைப்பு. :-
- எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்
- அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-
- இலைகள் இல்லா தரை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)
- மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா
- TAMFEST 2011
- பேசும் படங்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்
- முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்
- உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011