கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்

This entry is part 5 of 37 in the series 18 செப்டம்பர் 2011


 

“இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.”

 

‘நாம் இலங்கையர்’ அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.உதுல் பிரேமரத்னவுக்கு கிளிநொச்சி இராணுவ உயரதிகாரியால் மேற்குறிப்பிடப்பட்டவாறு சொல்லப்பட்டிருந்தது.

 

அதற்கு அடுத்ததாக யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட மைதானத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளதாக நாம் கேள்வியுற்றோம். சற்குணராஜா எனும் இளைஞனுக்கு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்கையுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்தே அவருக்கு இம் மாதிரியான துயரமான சம்பவத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்திருப்பதாக சற்குணராஜாவின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மக்கள் இராணுவத்தால் பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்ட செய்தி எமக்குக் கிடைத்தது. சேனல் 4 ஒளிக் கோப்பிலுள்ள காட்சிகளை யாழ்ப்பாண மக்களும் மறுக்கிறார்களென உலகுக்குக் காண்பிக்கும் அரசு ஊடகக் காட்சியொன்றுக்காகவே அவர்கள் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

 

கடந்த ஜுலை மாதம் 10ம் திகதி சேனல் 4 வீடியோ தொகுப்பின் மீதான தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக அரசாங்கத்தால் ஒரு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டத்தைச் சேர்த்துக் கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அரசாங்கத்தின் வேலைகள் எல்லாவற்றையும் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டியிருக்கும் இராணுவத்துக்கு இந்த ஆர்ப்பாட்டத்துக்கான கூட்டத்தைச் சேர்க்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.

 

அதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரொருவர் பத்தாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருவதாகவும் மக்கள், தமது பிரச்சினைகளை அவரிடம் சொல்லலாம் எனவும் மக்களிடம் கூறி, மக்களை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்வது இராணுவத்தின் உபாயமாக இருந்தது. எனினும் இராணுவமானது இதற்கு முன்பும் மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடவெனச் சொல்லி அரசாங்கத்தின் பல்வேறுவிதமான கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்று ஏமாற்றியிருந்ததால் இம்முறை யாழ் மக்கள் அங்கு செல்ல மறுத்தனர்.

 

ஒன்பதாம் திகதி மாலை தாம் செய்த அறிவிப்புக்கு மக்களிடமிருந்து சாதகமான பதில்கள் வராத காரணத்தால் இராணுவமானது பலாத்காரமாகவாவது மக்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யும் திட்டத்தை ஆரம்பித்தது. அதற்கிணங்க மறுநாள் விடிகாலையிலேயே ஆயுதந் தாங்கிய படையினருடனான டிரக்டர் வண்டிகள் பூநகரி, ஜெயபுரம், முழங்காவில் மற்றும் இன்னும் பல பிரதேசங்களுக்கும் சென்று குடும்பத்தில் ஒருவரேனும் டிரக்டர் வண்டியில் ஏறும்படி கூறி மிரட்டியிருக்கின்றனர்.

 

ஆயுதங்களைக் காட்டி இவ்வாறு மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தமது குழந்தைகளுடன் சேர்ந்து டிரக்டர் வண்டிகளில் ஏறிச் சென்றிருக்கின்றனர். கடந்த 10ம் திகதி யாழ்ப்பாண நகரத்தில் நீங்கள் பார்த்த அரசாங்கத்தின் ஆர்ப்பாட்டமானது இராணுவ பலாத்காரத்தின் பலனொன்றாகும்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனேகமான மக்கள் இன்னும் தமது மகன், மகளுக்கு நேர்ந்ததென்னவெனத் தெரியாமல் கண்ணீருடன் வாழ்பவர்கள். தமது பிள்ளைக்கு, கணவருக்கு, மனைவிக்கு, உறவினருக்கு என்ன நடந்தது, யார் நடத்தியது என அரசாங்கத்தைக் கேட்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் கறுப்பு வரலாற்றை வெள்ளையாக்குவதற்காகக் குரல் கொடுக்கும் நிலைமையே இன்று அம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

படுகொலை செய்யப்பட்ட தமது மகன், மகளுக்காக இன்னும் கண்ணீர் விட்டபடி தம் வாழ்நாளைக் கழித்துவரும் பெற்றோருக்கு அப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்காக கொலையாளிகளுடனேயே இணைந்து ஆர்ப்பாட்டம் செய்ய நேர்ந்திருப்பதானது, எமது காலத்தின் ஜனநாயகம் குறித்த வஞ்சகமான விகடமன்றி வேறேது?

 

– ப்ரியந்த லியனகே

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationசமனில்லாத வாழ்க்கைநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *