சொன்னேனே!

This entry is part 31 of 41 in the series 25 செப்டம்பர் 2011


வே.ம.அருச்சுணன்- மலேசியா.

மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்!

“ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார்.

“ஆமாம்மா நம்ம குடியிருப்புப் பகுதியில இருக்கிற அம்மன் கோயில் திருவிழாவுக்குத்தான் போறேன். அதுக்குத்தானே இன்றைக்கு வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்தேன்!” பட படப்புடன் கூறுகிறாள்.

“கோயில் திருவிழாவுக்கு உன்னைப் போல வயசுப் பொண்ணுங்க அவசியம் போய்க் கலந்து கொண்டு இறைவனை வணங்கனும். அப்பத்தான் நம்ம கலை,கலாசாரம் இந்த நாட்டில நீடித்து வாழும் வளரும். கோயில்னா…நாலு நல்லவங்க கெட்டவங்க வந்து போற இடம். அதனால, பொண்ணுங்க நம்ப பண்பாட்டு உடையை முறையாஅணிந்து அழகா போகனும்.அப்பத்தான் நமக்கு மரியாதை!” அம்மா உறுதியாகக் கூறுகிறார். தோட்டப் புறத்தில் பிறந்து வளர்ந்தாலும் அவர் தமிழ்ப் பண்பாட்டை ஒரு போதும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை!

“போங்கம்மா…நீங்க ! சுத்தம் பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க! காலம் இப்ப ரொம்ப மாறிப் போயிடிச்சிம்மா…!காலத்துக்கு ஏற்றார் போல விதவிதமா உடை அணிந்து போனாதான் மற்றவங்க நம்மைப் பார்த்துப் பெருமையா பேசுவாங்க!” வறட்டு தைரியமுடன் கூறுகிறாள் மாத்திகா.

“ஆமா…உம்பெருமையில எருமை போக! பெரியவங்க சொன்னா மரியாதையா கேட்டுக்கனும். அதான் நல்ல பிள்ளைக்கு இலட்சணம். கோயிலுக்குப் போகும் போது இப்படிக் குட்டைப் பாவாடையை உடுத்திக்கிட்டு அரைகுறை உடையோடுப் போனா யாரும் உன்னை மெச்சமாட்டாங்க?” அம்மா சற்று அழுத்தமுடன் கூறுகிறார்.

“ தோழிங்களெல்லாம் என்னோட உடை மாதிரியில்தான் வரப்போறாங்க. இப்ப நான் மட்டும் அந்தக் காலத்துப் பொண்ணுங்க மாதிரி ‘பத்தாம்பசிலியா’ உடை அணிந்து போனா கேலி பண்ணுவாங்கம்மா!” ஆத்திரமும் அழுகையும் கலந்தவளாகச் சிணுங்கினாள். எனினும், தான் அரைகுறையாக உடையணிந்து புனிதமான இடமான கோயிலுக்குச் செல்வது அம்மாவுக்கு அறவே பிடிக்கவில்லை என்பதை மட்டும் அவள் தெளிவாகப் புரிந்து கொண்டவள் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றாள்!

மகள் பிடிவாதம் அம்மாவுக்குத் தெரிந்ததுதானே! சொல்வதை அவள் இனி கேட்கவா போகிறாள்? நல்ல நாளும் அதுவுமா மகள் கண்ணீர் சிந்துவதை சிவபாக்கியம் விரும்பவில்லை!

“ ம்…உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். உன் விருப்பம் போல் போயிட்டு வா. போனமா சாமியைக் கும்பிட்டமா நேரத்தோட வீட்டுக்கு வந்தோமானு இருக்கனும். அங்கே,இங்கேனு வேடிக்கைப் பார்த்திட்டு சுற்றித்திரியாம விரைவா வீடு வந்து சேர்.காலம் கெட்டுக்கிடக்கு!” தனக்கே உரித்தான அதிகாரத் தோரணையில் சொல்லி அனுப்புகிறார் சிவபாக்கியம்.

‘கூண்டிலிருந்து விடுபட்ட கிளி விருட்டென்று பறந்து செல்வது போன்று ‘ மாத்திகா வீட்டைவிட்டு “அம்மா…போயிட்டு வரேன்மா…!”அம்மாவின் பதிலுக்குக்கூடக் காத்திராமல் வாசலை விட்டு வெளியேறுகிறாள் மாத்திகா!

மகள் மிகுந்த ஆர்வமுடன் பரபரத்துச்செல்லும் மகளின் வேகத்தைக் கண்டு வியந்து
பார்க்கிறார் சிவபாக்கியம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாள் கணவர் மாரடைப்பினால் காலமான பிறகு இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற சிறிது சிரமங்களை எதிர்க்கொள்ள நேரிட்டது. இரத்தத் தொடர்வு கொண்ட அருகிலுள்ள தன் உடன் பிறப்புகளின் உதவி தக்க சமயத்தில் கைகொடுத்தது மனதுக்கு ஆறுதலாகப் போய்விடுகிறது!

தனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் மாத்திகா இரண்டாவது பெண்.மூத்தவள் சகுந்தலை பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி மூன்று பிள்ளைகளுடன் பேராக் மாநிலத்தில் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.

மாத்திகாவுக்கு இருபத்தோரு வயது. பெரியவள் சகுந்தலை விட சிவந்த மேனியும் மூக்கும் விழியுமா செக்கச் சிவந்த மேனியுடையவள்,தமிழ்த் திரைத் தாரகை தாமனா போன்று உடல் வாகுவைக் கொண்டவள். இப்போதைக்குத் திருமணமே வேண்டாமென தனியார் நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பாதிக்கிறாள். கொஞ்ச நாளைக்குச் சுதந்திரப் பறவையாக இருப்பதில் தணியாதத் தாகம் கொண்டவள். பிடிவாதத்தைத் தவிற வேறு எந்தவொரு குறையும் இல்லாதவள்.

அவள் விருப்படியே கொஞ்ச நாளைக்கு மகிழ்ச்சியா இருந்துட்டுப் போகட்டுமே! திருமணம் என்று வந்து விட்டால்,கணவன்,குழந்தைக்குட்டி என்று, வீட்டோடு அடங்கிவிட வேண்டியதுதான்.என்ற எண்ணத்தில் அவளது விருப்பத்திற்கு எந்தவொரு தடையும் போடாமல் இருந்துவிடுகிறார் தாயார் சிவபாக்கியம்.

காலை பத்து மணிக்கு கோயிலை அடைகிறாள் மாத்திகா.அவளுக்கு முன்பே வந்துவிட்ட தோழிகள் அழகுப்போட்டிக்கு வந்தவர்கள் போல் இந்திர இலோகத்து தேவதைகள் போல் வரிசைப் பிடித்து நிற்கின்றனர்! அந்தத் தேவதைகளின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள் போன்று இளைஞர்களின் படையெடுப்பு அவர்களைச் சுற்றி வட்டமிட்டது!

பெண்களை மயக்கும் கண்ணன்களாக அந்த இளங்காளைகள் தங்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்தவாறு பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தங்களுக்கே உரித்தான கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்! சினிமாவின் சாயல் நடிவடிக்கைகள் அங்கு திமிலோகப் படுகின்றன. வாய்ப்பாகக் கருதிய இளஞ்சிட்டுகள், வானில் வண்ண ஜாலங்கள் புரியும்
நட்சத்திரங்களாகிப்போகின்றனர். கேலிகளுக்கும்கிண்டல் பேச்சுகளுக்கும் அளவில்லாமல் போகின்றன!

அந்தக் கூட்டத்தினூடே, மாத்திகாவின் எடுப்பான தோற்றமும் குட்டைப் பாவாடையின் கவர்ச்சியான உடையும் தூக்கலாகவே இருக்கின்றன.அவளது அழகு இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்கின்றன. பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதிபடுத்துவது போல் அவர்களின் பதில் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.அவை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காலம் செய்யும் கோலம் போலும்.

கோயில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பக்தர்கள் பக்திப்பரவசத்தில் மூழ்கிப்போயிருந்தனர். மாத்திகா தன் தோழிகள் புடைசூழ பக்தியுடன் இறைவனை வணங்குகிறாள். வழங்கப்பட்ட இறைவனின் பிரசாரத்தைப் பெற்றுக் கொண்டு கோயிலைவிட்டு வெளியே வருகிறாள்.தோழிகளும் அவளுடன் ஒருசேர வருகின்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து கேலி செய்து கொண்டு இளைஞர் கூட்டம் ஆர்பாட்டமுடன் வருகின்றது!

காதில் கடுக்கன் அணிந்தவர்கள், தலைமுடியைப் பல்வேறு கோணத்தில் வெட்டி அவற்றுக்கு வண்ணக்கலவையைப் பூசி முடியைச் சீவியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அவர்களெல்லாம் வேறு நாட்டிலிருந்து வந்தவர்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது! அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் வேற்றுலக மனிதர்களை நினைவு கூர்ந்தது. ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற உயர்ந்த நிலைப்பாடு அங்கு தவிடு பொடியாகிப் போயிருந்தது!

மாத்திகாவைச் சுற்றியே ஒரு குறிப்பிட்டக் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. அவர்களின் வரம்பு மீறியச் செயல் திருவிழாவுக்கு வந்திருந்த மற்ற பக்த கோடிகளுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது! அந்த அநாகரியமானக் கூட்டத்தைக் கண்டு முகம் சுளித்தனர்.

பொறுப்பற்ற இந்த இளைஞர்களால் பக்தி போய் ‘கத்தி’ பேசும் கலாசாரம் மேலோங்கி வருவதால் அமைதியாக வாழ வழிகாட்டும் சமயம், தமிழ்ச் சமுதாயம் அமைதி இழந்து போகும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிடுமோ என்ற திகிலில் பலர் தயங்கிய நடையுடன் சென்று கொண்டிருந்தனர்! அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும் அவர்களின் மனதை உறுத்தவே செய்தது!

தீமிதி அந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். தீமிதி நடைபெறும் இடத்தில் பக்த கோடிகளின் கூட்டம் அலை மோதியது. தீமிக்கென்றே ஒரு தனிக் கூட்டம் அங்குக் கூடியிருந்தது. தீமிதியில் இறங்க பலர் வரிசைப் பிடித்துக் காத்துக் கிடந்தனர்.முதியவர்களைக் காட்டிலும் சுமார் இருபது வயது நிரம்பிய இளைஞர்களே அதிகம் இடம் பிடித்திருந்தனர்!

மாத்திகாவும் அவளது தோழிகளும் தீமிதி நடைபெறும் இடத்தின் அருகில் சென்றனர். குட்டைப் பாவாடை அணிந்த குமரிகளைக் கண்ட காளையர் கூட்டத்திற்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தீமிதி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ மாத்திகாவைச் சுற்றி இளைஞர் கூட்டம் சதா வட்டமிட்ட வண்ணமாக இருந்தது!

நண்பகல் நேரம், வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். உணவுப்பொட்டலங்களைப் பெற்றுக் கொள்வதில் முறையாக வரிசையில் பலர் செல்லாமல் முட்டிமோதிச்சென்றனர்.

“வரிசையில் வாங்கப்பா, எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு “
கோயில் தலைவர் கனகரத்தினம் நீண்டு வளர்ந்துள்ள தன் மதுரைவீரன் மீசையை முறுக்கிவாறு சிங்கக்குரலில் அதட்டிப் பேசுகிறார். எழுபது வயது என்று யாரும் கூறிவிட முடியாது. சிலம்புக்கலையில் கறுப்பு பட்டை எடுத்தவர். தினம் ஒரு மணி நேரம் சிலம்பக்கலைப் பயிற்சியில் ஈடுபடுவது அவரது இளமையின் இரகசியமாகும்! தலைவரின் அதட்டலுக்குப் பின் கூட்டம் சீர்பட்டது

“சுயமாய்ச் சிந்திக்கும் இனமாக தமிழர்கள் இன்னும் மாறவில்லையோ? யாராவது திட்டினால் மட்டுமே சுதாரிக்கும் நிலையில்தான் இருக்கின்றனரோ?” வயது நிறைந்த முதியவர் ஒருவர்அருகிலுள்ள மற்றொரு முதியவரிடம் கூறிக்கொண்டிருக்கிறார்!

சாப்பிட்ட உணவுப் பொட்டலங்களைப் பலர் உரிய இடங்களில் போடாமல் கண்ட இடங்களில் வீசிய எறிந்த காட்சியைக் கண்டு ஆலய நிர்வாகத்தின் ஒலி பெருக்கியின் மூலம் பக்தர்கள் குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசவேண்டாம் என்று அறிவிப்பு செய்துக் கொண்டிருந்தனர்!

பிற்பகல் மூன்று மணியாகியது. மாத்திகா தன் தோழிகளுடன் இல்லம் திரும்புகிறாள். அவள் குடியிருப்பில் அவளது வீடு சற்று தொலைவில் இருக்கிறது. மற்ற தோழிகள் தத்தம் வீடுகள் வந்ததும் விடை பெற்றுச் சென்றனர்.

மாத்திகா இப்போது தனியாகச் சென்று கொண்டிருந்தாள்! அவள் வீட்டை அடைய இன்னும் சில மீட்டர் தூரமே இருந்தது! அப்போது கறுப்பு நிறத்திலான ஒரு மூடுவண்டி திடீரென அவளையொட்டி மிக அருகில் வந்து நிற்கிறது! சூழலைச் சுதாரிக்கும் முன்பே வாகனத்திற்குள் இழுத்து போடப்படுகிறாள்! அடுத்த வினாடி வண்டி மின்னலாகப் பறந்து செல்கிறது!

சத்தம் போடாத வண்ணம் அவளது வாயைத் துணியால் அடைத்த போது அவனை அடையாளம் கண்டு கொண்டாள்! கோயில் திருவிழாவில் அவன் தன்னைச் சுற்றி வந்து கலாட்ட செய்தவன் என்பதைத் தெரிந்துக் கொண்டாள்! காதில் கடுக்கன் போட்டவன். தலை முடியை வெள்ளை நிறத்தில் மாற்றியிருந்தவன்.
அந்த மூடுவண்டியில் நான்கு நபர்கள் இருந்தனர்.அவர்கள் அனைவரும் குடித்திருந்தனர்! வண்டி முழுவதும் மதுபான வாடை வீசியது! அவர்கள் அனைவரும் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள அவள் வெகு நேரத்தை எடுத்துக் கொள்ளவில்லை!

மாத்திகா கத்த முயற்சித்தாள்.அவள் வாய் துணியால் அடைபட்டுப் போனது! தன் பலம் கொண்ட மட்டும் துள்ளிப் பார்த்தாள்.அவளது முயற்சி வீணாகிப் போனது! வண்டி திக்குத்தெரியாதத் திசையை நோக்கி மிக வேகமாகக் காற்றாய்ப் பறந்து செல்கிறது!

அந்த வழியாக வந்து கொண்டிருந்த காவல் துறையினரின் கார்,அதிக வேகமாகப் பயணிக்கும் மூடுவண்டியைச் சந்தேகித்து வண்டியைப் பின் தொடர்கின்றனர். சில நிமிட விரட்டலுக்குப் பின் காவல் துறையினரின் சாதுரியத்தால் அந்த மூடுவண்டி தடுத்து நிறுத்தப் படுகிறது. அந்த வண்டியில் இருந்த நபர்கள் காவல் துறையினரால் பல ஆண்டுகளாகப் போதைப் பொருள் கடத்தல், பெண்களைக் கடத்திக் கற்பழித்தல்,கொலை,கொள்ளை போன்ற குற்றங்களுக்காகத் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது!

தகவல் அறிந்த, சிவபாக்கியம் துடிதுடித்தப் போனார்! மாத்திகாவின் உயிரைக் காப்பாற்றிய பொறுப்பு மிக்க காவல் துறையினர் மகளைத் தன்னிடம் பத்திரமாக ஒப்படைத்த போது, “அப்பவே நான் சொன்னேனே மாத்தியா, நீ கேட்டியா?”
ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர, மகளை இறுகக் கட்டிக்கொள்கிறார். தன் தவற்றை உணர்ந்து கொண்ட மாத்திகா கதறி அழுதாள்!
“மாரியாத்த, என் மகளைக் காப்பாற்றிட்டா!” காவல் துறையினரை நோக்கி தன் இரு கரங்களையும் கூப்பித் தலைக்கு மேல் உயர்த்துகிறார். இளம் புன்னகையோடு அவர்கள் கையசைத்து விடை பெறுகின்றனர்!
முற்றியது

Series Navigationபுராதனத் தொடர்ச்சிகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Comments

  1. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    வணக்கம்,இக்கதை மலேசிய வானோலியான மின்னல் எப்.எம் யில் ஒலியேற்றப்பட்டது.சபாக் பெர்னாம் தமிழ்ச்சங்கம் நடத்திய இலக்கிய போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *