பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்

This entry is part 12 of 41 in the series 25 செப்டம்பர் 2011

காலச்சூழல்களே கவிஞர்களை உருவாக்குகின்றன. அவ்வாறு காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞரே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் ஆவார். தம் காலத்தில் வாழ்ந்த பாவேந்தரைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞராகப் பட்டுக்கோட்டையார் திகழ்ந்தார். பாவேந்தரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலும் தாம் செல்லும் பாதையை தாமே தெரிந்தெடுத்து அதன் வழியே இறுதிவரைப் பிறழாது வாழ்ந்தவர் மக்கள் கவிஞர் ஆவார்.
பட்டுக்கோட்டையில் மிக எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே துன்பங்களால் சூழப்பட்டவர் மக்கள் கவிஞர். 29 வயதே வாழ்ந்த அவர், தம் வாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டிருந்தார். மக்கள் கவிஞர் தமது வாழ்நாள் முழுமையும் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து அருந்தொண்டாற்றினார்.

திண்ணைப் பள்ளியில் மட்டுமே பயின்றிருந்த மக்கள் கவிஞர் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அ.கல்யாணசுந்தரம் என்ற தன் பெயரை அகல்யா என்று சுருக்கி அந்தப் பெயரில் பல பாடல்கள் எழுதினார். மக்கள் கவிஞர் இவ்வாறு எழுதிய பாடலைப் பாவேந்தர் பாராட்ட, பட்டுக்கோட்டையாருக்கு கவிஞர் என்ற அங்கீகாரம் கிடைத்தது.

பாரதிதாசனைத் தமது குருவாக ஏற்றுக் கொண்ட மக்கள் கவிஞர் எதை எழுதினாலும் முதலில் பாரதிதாசன் வாழ்க என்று எழுதிய பின்னரே எழுதத் தொடங்குவார். பாரதிக்கு எங்ஙனம் பாரதிதாசன் அமைந்தாரோ அதுபோன்று பாரதிதாசனின் பரம்பரையில் மலர்ந்த கவிஞராகப் பட்டுக்கோட்டையார் திகழ்ந்தார்.

பகுத்தறிவுப் பாடல்களைப் பகுத்தறிவு மேடைகளில் பாடினாலும் அவரது உள்ளத்தில் இறுதி வரை நிறைந்திருந்ததும், அவர் இணைந்திருந்ததும் பொதுவுடைமை இயக்கமே ஆகும்.

பாவேந்தரும் மக்கள் கவிஞரும்

மக்கள் கவிஞர் பாரதிதாசனின் உதவியாளராகப் பணியாற்றித் தன்மானக் கருத்துகளை நன்கு உணர்ந்தவர். ஆதலின் அவருடைய பாடல்களில் தொழிலாளர் முன்னேற்றம், பொதுவுடைமைக் கொள்கைகள், தன்மானக் கருத்துகள் ஆகியன இயல்பாகவே இடம் பெற்றுள்ளன. ஆயினும் கலியாணசுந்தரம் தொழிலாளர் கவிஞராகவும் பொதுவுடைமைக் கவிஞராகவும் முன்னிலைப்படுத்தப்படுகிறார். பாவேந்தரோ பொதுவுடைமைக் கருத்துக்களைப் பாடினாலும் அவர் பகுத்தறிவு இயக்கத்திலேயே இறுதிவரை இருந்து அதன் கொள்கைகளை வீராவேசத்துடன் பாடினார் எனலாம்.

பாவேந்தரின் பரம்பரையில் வந்தவர் மக்கள் கவிஞர் என்றாலும் பாவேந்தரின் கொள்கைகளை மனத்தகத்தில் கொண்டு தனக்கெனத் தனிக் கொள்கைகொண்டு அதன்வழி வாழ்ந்து மறைந்தார் மக்கள் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கவிஞர் கலியாணசுந்தரனார் மிகக் குறைந்த வயதே வாழ்ந்திருக்கிறார். பாரதிதாசன் இறக்கும் முன்பாகவே மக்கள் கவிஞர் இறந்துவிடுகிறார். அவர் இறப்பதற்குள்ளாக தம் உள்ளத்தே முகிழ்த்த கருத்துகளையெல்லாம் அணையுடைத்த வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடச் செய்திருக்கிறார்.

பட்டுக் கோட்டையார் என்றாலே கவிஞர் கலியாணசுந்தரத்தையே குறிக்கும் எனத் தன்பெருமையை உயர்த்திக் கொண்டுள்ளார். பொது மேடைக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இவர் பெரும்பாலும் எழுதியதால் இவருடைய பாடல்கள் இசைப் பாடல்களாகவே மிகுதியும் உள்ளன. எளிய நடை; உள்ளத்தைப் பிணிக்கும் ஆற்றல்; உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகிய இவற்றின் இணைப்பே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரத்தின் பாடல்கள் என்பது நோக்கத்தக்கது. பாவேந்தரிடம் இருந்ததால் அவரது எண்ணங்களின் தாக்கத்தினைப் பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் மிகுதியாகக் காணலாம்.

நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

கணவன் மனைவி, குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோரைக் கொண்ட கூடி வாழும் ஓர் அமைப்பையே குடும்பம் என்பர். இக்குடும்ப அமைப்பே நாட்டிற்கு வளம் சேர்க்கும். பண்பட்ட நாட்டை உருவாக்கும். இக்குடும்பம் அமைதியாகவும், வளமுடையதாகவும் இருந்தால்தான் நாட்டில் அமைதியும் வளமும் ஏற்படும். இத்தகைய குடும்பத்தை இருபெரும் கவிஞர்களும் பாடியுள்ளனர்.

மேலும் மக்கள் கவிஞர் பாவேந்தருடைய எண்ணங்களோடு ஒன்றிக் கலந்தவர். பாவேந்தரின் குடும்பம் பற்றிய கருத்தும், பட்டுக்கோட்டையாரின் கருத்தும் ஒன்று போல அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாவேந்தர் குடும்ப விளக்கில், ‘‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’’ என்றார். இக்கருத்து பட்டுக்கோட்டைக்கு மிகவும் பிடித்திருந்ததால், மணமக்கள் இத்தொடரை மனத்திலே கொள்ள வேண்டும் என்பதனை,

‘‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு;
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று’’

எனப் பாவேந்தரின் கருத்தினை ஏற்றுப் பாடுகிறார். பாவேந்தரின் பாடல் பட்டுக்கோட்டையாரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கு இப்பாடல் சான்றாக அமைகின்றது.

எழுச்சிக் குரல்

பாவேந்தர் தமிழ் மொழிக்கு, தமிழருக்கு இன்னல் புரிவோரைக் கண்டு,

‘‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பொங்கும் தமிழ்ர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!’’

எனப் பாவேந்தர் முழங்குகிறார். தமிழ்ப் பகைவரைச் சங்காரம் (அழித்தல்) செய்வோம் என்று பாவேந்தர் எழுச்சிக்குரல் எழுப்புகின்றார். பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்த மக்கள் கவிஞர் இதனை அப்படியே உள்வாங்கிக் கொண்டு,

‘‘பொங்கும் தொழிலாளர்க் கின்னல் புரிந்திடும்
பன்மனப் போக்கிரிகள் – மங்கி
எங்கோ மறைந்தனர் என்றோ ஒழிந்தனர்
என்னுங் குரல்கள் எழுப்பிடுவோம்!’’

என்று சிறிது மாற்றிப் பாடுகின்றார். தொழிலாளர்களுக்கு இன்னல்கள் யார் விளைவித்தாலும் அதனைக் கண்டு பொங்கி எழுந்து அவர்களை ஒழிப்போம் என்று பட்டுக்கோட்டையார் எழுச்சிக் குரல் எழுப்புகின்றார்.

பாவேந்தர் தமிழருக்கு இன்னல்கள் புரிவோரைப் ‘பகைவர்’ என்று கூற, மக்கள் கவிஞரோ தொழிலாளர்களுக்குத் தீங்கிழைத்திடும் கயவரைப் போக்கிரிகள், காலிகள் என்பன போன்ற கடுஞ்சொற்களால் சாடுகின்றார். பாவேந்தர் தமிழரைப் பாடுவதைப் போன்று, மக்கள் கவிஞர் தொழிலாளரைப் பாடுகின்றார். இது காலத்தின் மாற்றத்தால் ஏற்பட்ட வளர்ச்சி எனக் கூறலாம்.

விதவையர் மணம்

கணவனை இழந்த பெண்களை கைம்பெண்கள், விதவையர் என்று குறிப்பிடுவர். வயது குறைவான இளம்பெண்கள் இளம் விதவையர் ஆகிவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுமையும் கைம்பெண்ணாக இருந்து இறக்கவேண்டும். இது சமுதாயத்தில் காலங்காலமாக இருந்து வரும் வழக்கமாக அமைந்துள்ளது. இவ்வழக்கத்தை இருபெருங்கவிஞர்களும் எதிர்த்துப் பாடியிருப்பது நோக்கத்தக்கது.

பாவேந்தர்,

‘‘ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?’’

எனக் கேட்கிறார் பாவேந்தர். விதவையர் மணந்து கொள்வதைத் தடுத்தல் கூடாது என்று வலியுறுத்துகின்றார். ஆண்களுக்கு உள்ள உணர்வுகளே பெண்களுக்கும் இருக்கும். அதனால் கைம்பெண்களின் மணத்தை எதிர்க்கக் கூடாது என்றும் பாவேந்தர் எடுத்துரைக்கின்றார்.

பாவேந்தர் வழிவந்த பட்டுக்கோட்டையார் அதைவிட ஒருபடி மேலே போய் சமுதாயத்தில் கைம்பெண்களுக்கு ஏற்படும் பல்வேறுவிதமான இன்னல்களையும் எடுத்துரைக்கின்றார். சமுதாயம் கைம்பெண் மணத்தை மறுக்க மட்டுமா செய்கின்றது? சமுதாயத்தில் உள்ளோர் கைம்பெண்களுக்கு மானக்கேடு நேருமாறு வீண் கதைகளையும் கட்டி விடுகின்றனரே எனக் கவலைப்பட்டு அதனை,

‘‘மனைவி மறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு மண்டை வரண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகி யானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு’’

என்று பாடலில் படைத்துக் காட்டுகின்றார் பட்டுக்கோட்டையார். இப்பாடலில் ‘சாக மட்டும் உரிமையுண்டு’ என்ற தொடரில் பொதிந்துள்ள சோகம், கோபம், வேகம் சொல்லுக்கு அடங்காததாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

காதல்

காதலைப் பாடாத கவிஞர்களோ இலக்கியங்களோ இல்லை எனலாம். சங்க கால இலக்கியங்கள் முதல் இன்றுவரையுள்ள அனைத்து இலக்கியங்களின் பாடுபொருளாக காதல் என்பது உள்ளது நோக்கத்தக்கது. பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும் இக்காதலை மிகஅழகுறப் பாடியிருப்பது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது. பாவேந்தர்,

‘‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்’’

என்று பாடுகின்றார். இதில் காதலின் இயல்பையும், அது கொடுக்கும் ஆற்றலையும் பாவேந்தர் குறிப்பிடுகிறார். பாவேந்தரைப் பின்பற்றி பட்டுக்கோட்டையார்,

‘‘மங்கையின் பார்வையில் மலையசையும்’’

என இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கின்றார். எளிமையாகவும், இனிமையாகவும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நிலையிலும் பட்டுக்கோட்டையாரின் பாடல்வரி அமைந்திருப்பது நோக்கத்தக்கது. பாவேந்தர் இருவரிகளில் கூறியதனை அவரது மாணவராக விளங்கிய பட்டுக்கோட்டையார் ஒரு வரியில் குறிப்பிடுகின்றார். இது ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்ற பழமொழியை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது.

காதலியின் கடிதம்

காதல் எனில் கடிதம் உறுதியாக இடம்பெறும். காதலன், காதலி இருவரும் தங்களது உள்ளத்து உணர்வுகளை எழுத்துக்களில் வடித்தெடுத்து கடிதமாகத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். பாரதிதாசன் படைத்துள்ள காதலியோ கல்லைக் கனியவைக்கும் விதமாகத் தன் காதலனுக்குக் கடிதம் எழுதுகின்றாள்.

பாவேந்தர் எழுதியுள்ள புரட்சிக் கவி எனும் காப்பியத்தில் மன்னன் மகள் அமுதவல்லி தீந்தமிழ்க் கவிஞன் உதாரனிடம்,

‘‘ஆரத் தழுவி அடுத்தவி னாடிக்குள் உயிர்
தீரவரும் எனினும் தேன்போல் வரவேற்பேன்’’

என்கிறாள். இதில் காதலி காதலனுக்கு, ‘இருக்கின்றேன், சாகவில்லை; என்றறிக’ என முடிப்பதாகப் பாவேந்தர் பாடுகிறார். காதலியின் நம்பிக்கையும், காதலின் ஆழமும் இக்கவிதை வரிகளில் வெளிப்பட்டு நிற்பது நன்கு புலனாகின்றது.

பட்டுக்கோட்டையாரோ, ‘இறக்கவில்லை இருக்கின்றேன்; இதுதான் நிலைமை எனக் காதலன்’ காதலிக்கு எழுதுவதாகப் பட்டுக்கோட்டை பாடுகிறார். பட்டுக்கோட்டையார் அம்பிகாபதி அமராவதிக்கு எழுதும் கடிதமாக ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில் அம்பிகாபதி,

‘‘விருப்பம்போல் சேர்ந்து விளையாடி மறுகணத்தில்
நெருப்பில் குதிப்பதென்றால் நிம்மதியாய் ஏற்பேன்’’

என அமராவதிக்கு எழுதுகிறான். காதலியுடன் சேர்ந்து வாழும் ஒரு கணப் பொழுதும் தனக்கு மிகவும் உயர்ந்தது, இனிமையானது. அதுவே ஒரு யுகத்திற்கும் தனக்குப்போதும் என நினைத்து இறப்பையும் ஏற்பேன் என்று காதலன் கூறுவது அவன் காதலின் மீதும், காதலின் மீதும் கொண்டுள்ள அளப்பறிய அவாவினையும், நம்பிக்கையினையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

சுரண்டலை எதிர்த்தல்

பாவேந்தரும் பட்டுக்கோட்டையாரும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான சுரண்டலை எதிர்த்துப் பாடியுள்ளனர். பாவேந்தர் பாண்டியன் பரிசில்,

‘‘எல்லார்க்கும் எல்லாம் என்ற இடம் நோக்கி

நகர்கின்றது இந்த வையம்’’

என்று பொதுவுடைமையைப் பற்றிப் பாடுகின்றார். மேலும்,

‘‘கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளை யடிப்பதும் நீதியோ – புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?’’

என்று பாரதிதாசன் சுரண்டுவோரை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றார்.

ஆனால் பட்டுக்கோட்டையார் பொதுவுடைமைவாதியாகவே மாறி உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவோரை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றார். உழைப்போரைச் சுரண்டுவதால் உழைப்போர் வறுமையுற்று பட்டினியால் வாடுகின்றனர். இதனை,

‘‘கூழுக்குப் பற்பலர் வாடவும் – சிற்சிலர்
கொள்ளை யடித்தலைச் சகியோம்’’

என எடுத்துரைக்கின்றார். பட்டுக்கோட்டையின் பாடல் மேலே குறிப்பிட்டுள்ள பாவேந்தர் பாடலின் தாக்கமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது. பட்டுக்கோட்டையாரின் குரல் பழுத்த பொதுதுவுடைமைவாதியின் குரலாக ஒலிப்பது நோக்கத்தக்கது.

தமிழ்ப் பற்று

பாவேந்தர் தமிழ் மொழியைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். உணர்வையும், உயிரையும் வளர்ப்பது தமிழ் என்றும் கூறினார். பாரதிதாசனாரின் தமிழ் உணர்வு அவரது படைப்புகள் அனைத்திலும் மேம்பட்ட உயிரோட்டமாகக் காணப்படுகின்றது. பாவேந்தர் படைத்திட்ட காதலன் ஒருவன் தமிழ் தெரியாத – அறியாத ஒருத்தி தனக்குக் காதலியாக இருக்கக் கூடாது என்கிறான். இதனை பாவேந்தரின் பாடல் ஒன்று,

‘‘என்மீதில் ஆசை வைக்காதே – மயிலே
என்னைப் பார்த்தும் சிரிக்காதே!
உன்மேல் நான்ஆசை வைக்க வில்லை – நீதான்
உண்மையிலே தமிழ் மகள் இல்லை (என்)
மாதொருத்தி வேண்டும் எனக்கும் – தமிழ்
மகளாய் இருந்தால்தான் இனிக்கும், ஆதலால் (என்)

என விளக்குகின்றது. தொடரும் இப்பாடலில் காதலன், காதலில் சாதிகள் அழிந்திட வேண்டும்; ஆனால் தமிழ் வீழ்ந்திடக் கூடாது என்கிறான். காதலில், சாதலில் தமிழ் கலந்து இருக்க வேண்டும். மொழி வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது. அதனைப் பிரித்துப் பார்க்க இயலாது தமிழ் இன்றேல் நாம் இல்லை என்ற உணர்வை இக்கவிதை நமக்கு ஏற்படுத்துகின்றது.

காதலன் தான் அவ்வாறென்றால் காதலியும் சளைத்தவள் அல்ல. அவளும் தீவிரமான தமிழ்ப் பற்றுடையவளாக விளங்குகின்றாள். தமிழ் படித்த, ஒருவனையே மணப்பேன் எனச் சபதம் கொள்கின்றாள். ஒருவன் பாட்டுப் படியாதவன்; தமிழ் அறியாதவன். ஆனாலும் பத்து இலட்சம் சொத்துடையவன் என்று கேள்விப்பட்ட காதலி, அவனைத் தன் வீட்டுப் படியேற வேண்டாம் என்று துரத்தி விட்டாள். சென்றவன் திருக்குறளைப் படித்துத் தெளிந்தேன் என்று திரும்பி வந்தான். அப்படியானால் வா! உன்னிட மிருந்து படித்தேன் அளவான இன்பத்தைப் பெற்றுக் கொள்வேன்; கொடு என அவனை ஏற்றுக் கொள்கிறாள். இதனை,

‘‘பாட்டுப் படியானாம்; பத்திலக்கம் உள்ளவனாம்;
வீட்டுப் படியேற வேண்டாம்என் றோட்டினாள்;
வள்ளுவன்ப டித்தேன்என் றான்நீ வழங்கிடுநான்
கொள்ளுவன்ப டித்தேன்என் றாள்’’

என்ற பாவேந்தரின் பாடல் ஒன்று விளக்குகின்றது. திருக்குறள் படித்தவனே – தமிழறித்தவனே தனக்குக் காதலனாக இருக்க வேண்டும் என்கிற காதலியின் தமிழ் உணர்வினை விளக்குவதாக இப்பாடல் அமைந்து பாவேந்தரின் தமிழ்ப்பற்றினைப் பறைசாற்றுவதாக உள்ளது.

இப்பாடல்களின் தாக்கத்தினைப் பட்டுக்கோட்டையாரின் பாடல்களிலும் காணலாம். காதலன், காதலியின் மன உணர்வினைப் பாவேந்தரின் பாடலில் கண்ட நாம் பட்டுக்கோட்டையாரின் பாடலில் மாமியாரின் மன உணர்வினைக் காணலாம். அது கவிஞரின் மனக் குரலாக ஒலிப்பதையும் உணரலாம். மாமியார் ஒருத்தி தனக்கு மருமகளாக வருபவள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லும்போது,

‘‘மருமகளாக வரும் மங்கை எவளோ? – என்
மருமகளா யிருக்கத் தகுந்தவளோ?
பொறுக்கி எடுத்த முத்துக் கருத்தைத்
தொகுத்து வைத்த திருக்குறள்
முப்பாலும் படிப்பவளோ… ஆ… கனல்
தெரிக்கக் கொதித்து மணிச்சிலம்பை புடைத்துநீதி
தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ?’’

எனப் பாடுகின்றாள். மருமகள் திருக்குறள் படித்தவளாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வதாகப் பட்டுக்கோட்டையார் பாடுவது நோக்கத்தக்கது. மாமியாரின் தமிழுணர்வின் வழி மக்கள் கவிஞரின் தமிழ் மொழிப் பற்று புலப்படுவது குறிப்பிடத்தக்கது. பட்டுக்கோட்டையார் பாவேந்தரின் வழி வந்த உன்னதக் கவிஞர் என்பதை பட்டுக்கோட்டையாரின் பாடல் தெளிவுறுத்துகின்றது.

அழகினைப் பாடுதல்

இயற்கையன்னையின் அழகினை, ‘அழகின் சிரிப்பாகப் படைத்தவர் பாவேந்தர். ‘காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்’ என அழகினைக் கண்ட பாவேந்தர் அந்த ‘அழகு’ எங்கும் உள்ளது. அதனை நசையோடு நோக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். அழகென்பவள்,

‘‘ செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்;’’

கலப்பை தூக்கிச் செல்லும் உழவன், விளைந்த நன்செய் நிலம் – இங்கெல்லாம் அழகு சிரிக்கிறதாகப் பாவேந்தர் காண்கிறார். அவர் வழிவந்த பட்டுக்கோட்டையாரும்,

‘‘கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன்
காவியம் ஓவியம் யாவையும் கண்டேன்’’

எனப் பாவேந்தரைப் போலவே அழகைக் காணுகிறார்.

அதுவே அவருக்குக் காவியமாகவும் ஓவியமாகவும் திகழ்கிறது. அழகை எங்கே கண்டார்? ஏரோட்டும் விவசாயி எருதுகளை ஏரியிலே நீராட்டுவது; அவன் மனைவி பானையைத் தலையிலே வைத்துப் பக்கவமாக நடப்பது; ஆண்களும் பெண்களும் வயலிலே வேலை செய்வது; பொன்னைப் பழிக்கும் கதிர்கள் ஒன்றை யொன்று பின்னி அசைந்தாடுவது ஆகிய இவற்றிலெல்லாம் அழகு நடனமிடக் காண்கிறார். மேலும்,

‘‘வண்ணக் கலையங்கு வாழ்ந்திடக் கண்டேன்’’

என அந்த அழகையே கலையாகக் கண்டு மகிழ்கிறார்.

பட்டுக்கோட்டையார் பாரதியாரை மதித்தவர்; அவருடைய பாடல்களில் திளைத்தவர்; அவருடைய கொள்கைகளைப் போற்றியவர்; எனினும் அவரை நேரில் பார்த்தறியாதவர். ஆனால் பாவேந்தருடனோ பணியாற்றி யிருக்கிறார்; அவரை உயிரினும் மேலாகக் கருதியிருக்கிறார்; தாளில் முதலில் வாழ்க பாரதிதாசன் என்று குறித்த பிறகே பாடல்களை எழுதியிருக்கிறார்; பாவேந்தரின் பாடற் கருத்துகளைப் பெருமளவில் எடுத்தாண்டிருக்கிறார்; பாவேந்தரின் தலைமையில்தான் அவருடைய திருமணமே நடைபெற்றிருக்கிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாவேந்தரை பின்பற்றினாலும் மக்கள் கவிஞர் காலத்துக்கு ஏற்ற பல்வேறு விதமான மாற்றங்களைச் செய்து கவிதைகள் படைக்கின்றார். அழகைப் பாடும்போதும் தொழில் தொழிலாளி என அவர்களைப் பற்றியே அவரது எண்ண ஓட்டங்களும் அமைந்தன. பாவேந்தரை மனதிற்குள் வைத்து தமது படைப்புகளை மக்கள் கவிஞர் படைத்தார் என்பது நினைந்து போற்றுதற்குரியது. பாருள்ளளவும் பாவேந்தர், பட்டுக்கோட்டையார் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருக்கும் எனலாம்.

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigationபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்மின்சாரக்கோளாறு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    tamilmani si.vadiveloo,malaysia says:

    vanak aiya.paaventhar baarathithaasan pattukottaiyar oppeedu katturai padithen.ilakkiya paravasathil thilaithen.palaya thagavalgal enakku puthiya thagavalgal.pattukottayar, paaventher eedupaadu enakku undu.antha vagaiyil tanggalin katturai enathu arivu pasikku nalla unavai irunthathu.vaalga thangalin ilakkiya thondu. tamilmani si.vadiveloo, malaysia.

  2. Avatar
    காவ்யா says:

    சிறப்பான கட்டுரை. படித்து மகிழ்ந்தேன். எழுதியவருக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *