மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)

This entry is part 37 of 45 in the series 2 அக்டோபர் 2011

உயிர்கள் பிறக்கின்றன. இருக்கின்றன, இறக்கின்றன. பிறந்த பின்பு உயிர்கள் இருக்கின்றன. இருந்தபின்பு இறக்கின்றன. இறந்தபின்பு உயிர்கள் என்னாகின்றன? மீண்டும் பிறக்கின்றனவா? முன் பிறவியைவிட உயர்வான பிறவியில் பிறக்கின்றனவா… அல்லது முன்பிறவியை விட தாழ்வான பிறவியில் பிறக்கின்றனவா…..அதே பிறப்பில் மீண்டும் பிறக்கின்றனவா… இப்படிப் பதில் தெரியாத, அறியமுடியாத கேள்விகள் பலப்பல.

பிறவியே இல்லாத நிலை வந்துவிட்டால் இருப்பே இல்லாத நிலை, இறப்பே இல்லாத நிலை வந்துவிடும். இறப்பே இல்லாத நிலை வந்துவிட்டால் மீண்டும் பிறக்கவே முடியாது. பிறவியே இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புண்டா? உயிர்கள் எல்லாம் பற்பல பிறவியை எடுக்கின்றன. என்றாவது ஒருநாள் அவை பிறப்பதில் சலிப்புற்று பிறவியை நிறுத்திவிடாதா……

சீவனைச் சிவமாக்கினால் பிறவி இல்லை. இருப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சாதாரணமான வாழ்க்கை உடைய சீவனைச் சிவமாக்க முடியுமா? ஆசை, களவு, கோபம் எனப் பலப்பல வடிவங்களைப் பலப்பல நேரங்களில் எடுக்கும் மனிதப் பிறவியைச் ஒரே நிலையில் இருக்கச் செய்திட அதாவது சிவமாக ஆக்கிட இறைவனின் நீழலில் இளைப்பாறச் செய்திட இயலுமா….

இயலும். முடியும். நம்பிக்கைகளை நமக்குள் ஊட்டுகின்றன ஞானிகளின் வாக்குகள். ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்திதானந்த சற்குரு சுவாமிகளின் நல்வாக்குகள் சீவனைச் சிவமாக்க ஊக்கமளிக்கின்றன. பிறவியே இல்லாத நிலையைச், சீவனைச் சிவமாக்கும் முறைமையை சற்குருவின் வார்த்தைகள் எளிமையாக்கித் தருகின்றன.

ஆதிமத்யம் அந்தம் முன்றுந் திரட்டி உருட்டி
கெவனமணியாக்கும் இந்த நாதன்

என்று தொடங்கும் சீவனைச் சிவமாக்கும் கெவனமணிமாலிகா சாதாரண சீவனைச் சிவமாக்கி வெற்றியடையச் செய்கிறது.

ஆதி என்றால் இப்போது பிறந்திருக்கிற இந்தப் பிறவிக்கு எல்லாம் முன்பிறவிகளில் முத்த பிறவியாகிய ஆதிபிறவி என்று பொருள் கொள்ளவேண்டும். அந்தம் என்பது இனிமேல் தொடர்ந்து வருப்போகிற பிறவிகள். மத்யம் என்றால் இப்போது உயிர் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்தப் பிறவி. இந்த முப்பிறவிகளையும் ஒன்றாக்கித் திரட்டி, உருட்டி அருள் அனுபவப் பெருக்கை உணரச் செய்து, ஆனந்தக் கோட்டையெனும் இறைவனின் இருக்கையாக விளங்கும் கோட்டையில் மணியாக அணியாக விளங்கச் செய்யக் கூடியவர் சற்குரு என்பதே இந்த அடிகளின் பொருளாகும்.

கெவுனி என்றால் கோட்டை வாயில் என்று பொருள். கோட்டை வாயிலில் கட்டப் பெற்று இருக்கும் மணிபோல உயிர்களின் இயக்கம் அமைந்திருக்கிறதாம். மணி முன்னும் போகும். பின்னும் போகும். நடுவிலும் நிற்கும். முன் போவதன் காரணமாக அது முற்பிறவிகளைச் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம். பின்னும் போவதால் அந்தத் தன்மை பின்னே வரப்போகிற பிறவிகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம். இயக்கமே இல்லாமல் மணி நிற்கிறபோது அது தற்காலமாகிய இந்தப் பிறவியை எடுத்துக் காட்டுகிறது என்று கூறலாம். இப்படி முன்று வகைப்பட்ட பிறவிகளிலும் இந்த உயிர்கள் உழந்துத் துன்பப்பட்டுக் கொண்டுக் கிடக்கின்றன. இந்த உயிர்களை உன்னத நிலையை அடையச் செய்யக் கூடியவர் சற்குரு என்று தெள்ளந் தெளிந்து இந்த அடிகள் அறிவிக்கின்றன.

மதியீனம் மலவிர்த்தி ஜெனித்த மாய்கை
சூனியமாக்கிவிடும் இந்த நாதன்

மனிதப் பிறவிக்குள்ள ஈன புத்தியையும், குற்றங்களையும், மாயையும் தவிர்த்து குற்றம் குறை இல்லாத நிலைக்கு உயிரை அழைத்துச் செல்லும் வல்லமை பெற்றவர் சற்குருநாதர். குற்றங்கள் நீங்கப் பெற்றால் தூய்மை அங்குக் குடியேறும். மனிதருக்குள் உள்ள குற்றங்கள் நீங்கினால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.

முன்றுலகும், முத்தமிழும், முப்பொருளெல்லாம்
சிற்சபையில் தொண்டு செய்ய சேர்க்கும் நாதன்

குற்றங்கள் நீங்கித் தூய்மை அடைந்தபின் அந்த இடத்தில் பிறர் நலம் கருதும் தொண்டு என்னும் செயல்பாட்டைக் கொண்டு வந்து நிறைக்கிறார் சற்குருநாதர். அவ்வாறு தொண்டினை, அதன் சிறப்பை எடுத்து இயம்புவதற்கு முத்தமிழ் உதவி புரிகின்றனது. இதன் காரமணாக முன்று உலகமும் தொண்டு பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புண்டு. தளைகளாக உள்ள முன்று பொருள்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. இவ்வகையில் தொண்டு செய்து பெருமை பெற்ற நல்ல உயிர்களையெல்லாம் சிற்சபைக்கு அழைந்துச் சென்று நல்எழில் உருவமாக இறை உருவத்தைக் காட்டி உயிர்களை அருள் வழியில் வாழவைக்கும் தன்னிகரில்லாத் தொண்டினைச் சற்குரு செய்து கொண்டுள்ளார். அவரின் தன்னிகரில்லா அருள் வழியைப் பின்பற்றினால் உயிர்களுக்கு நற்பேறு கிட்டும். அதன் வழி தொடருவோம்.

முனைவர் மு. பழனியப்பன்
இணைப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி,புதுக்கோட்டை

Series Navigationபயனுள்ள பொருள்வானம் வசப்படும்.
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Comments

  1. Avatar
    Ravi says:

    Aasai, Kobam, Kalavu – all the three have been condemned as being bad. Partly because they destroy social order (if I have uncontrolled desire, I will ‘steal’ and if anyone prevents I will take up ‘anger’ and harm them). Partly because the very having of desire, anger and grasping prevent the soul to transcend the mind and become pure.

    This is the traditional view and is also highlighted in the passage above.

    If you think deeply, though, Aasai is the very spark of life, Kobam is the fight and struggle to survive and Kalavu or stealing material from another living thing (in the form of eating) is the essential activity of life.

    By trying to condemn the three, are we not setting ourselves a logically impossible goal? In other words, our desires, anger and cravings define our ego, if these need to be transcended? Who is to transcend? I am asking if this line of thinking above is just a theoretical discussion passed along from generation to generation without clear ideas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *