(78) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 45 in the series 2 அக்டோபர் 2011

பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப் படி சொல்ல சில சமயம் மறதியில் விடுபட்டாலும், நினைவுக்கு வந்த உடனே சொல்லி விட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன. அதற்குக் காரணம் தொடர்ந்து மிருணால் காந்தி சக்கரவர்த்தி பற்றியே எழுதி வந்ததால், அவனுடன் கொண்டிருந்த அன்னியோன்னியத்தின் பாதிப்பால் நினைவுகள் அவனைச் சுற்றியே சுழல்வதால், மற்ற சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன.

அன்று அவன் அப்பாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். நிறையவே பேசினான். நிறைய நேரம் பேசினான். உணர்ச்சி வசப்பட்டு அவன் பேசும் போது நாங்கள் கேட்டுக்கொண்டிருப்பது தான் மரியாதை. எல்லாமே நினைவில் இல்லை. அவன் தங்கைக்கு ஏதோ வாங்கி வரச் சொன்னது நினைவில் இருக்கிறது. அதன் பின்னும் என்ன பேசிக்கொண்டிருந்தான், அதன் தொடர்ச்சியாகத் தான், Dada, let me say this என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். திடீரென்று இப்படிச் சொல்ல முடியாது. இதுவும் பின்னர் அவன் அப்பா என்னை மகனாகக் கொள்ள விரும்பியிருப்பார் என்று சொன்னது நல்ல நினைவு இருக்கிறதே ஒழிய அது எந்த சந்தர்ப்பத்தில், எதன் தொடர்ச்சியில் என்பது நினைவில் இல்லை

அடுத்து, அன்று விஸ்கி மாத்திரம் தான் புதுப் பழக்கமாக அவன் காரணமாகத் தொடங்கியது என்று சொன்னேன். அது தவறு. அன்று அவன் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும் கொடுத்து விட்டான் அன்று தொடங்கியது தான் மது அருந்துவதும் புகை பிடிக்கும் பழக்கமும்.

இந்தப் பழக்கங்கள் பற்றி அப்போது எனக்கு தர்ம அதர்ம கேள்விகள் ஏதும் அப்போது எழவில்லை. உடம்புக்கு இது நல்லதா, கெடுதலா போன்ற பிரசினைகளும் எழவில்லை. இவை எது பற்றியுமான சிந்தனையே எனக்கு அப்போது இருக்கவில்லை. புதிதான ஏதோ அனுபவம் என்ற அளவிலேயே இவை என்னை வந்தடைந்தன. நாடகம் பார்க்கிறவன் புதிதாக சினிமா பார்ப்பது போல, ரம்மி விளையாடக் கற்றுக்கொண்டது போல, முதல் தடவையாக ஒரு உணவுப் பண்டத்தை, சமூசா, இல்லை குல்ச்சே சோலே ருசி பார்ப்பது போலத்தான் எல்லாமே எனக்கு இருந்தது. அதிலும் முதல் தடவையாக பஞ்சாட்சரம் வீட்டில் பிரியாணி சாப்பிட்டது, சினேகிதர் நிறைந்த சூழலில், முட்டை சாப்பிட பழகிய இடத்தில், கேலியும் வாதங்களும் வழக்கமாக இருந்த சூழலில் ஒன்றும் குற்ற உணர்வு தருவதாக இல்லை. அந்தக் காலத்தில் (ஐம்பதுகளின் ஆரம்ப வருடங்களில்) ஹிராகுட்டிலும் புர்லாவிலும் நண்பனாக இருந்த சம்பத் (முன்னாலேயே இவனைப் பற்றிப் பேசியிருக்கிறேன். பெருத்த வாயாடி, எந்தக் காரியத்தையும் செய்யும் அசகாய சூரன். ஆனால் வாழ்க்கையில் பின் வருடங்களில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தவன்) சொல்வான்,: ”நான் சாப்பிடமாட்டேனே ஒழிய என் பக்கத்தில் யாரும் உட்கார்ந்து சாப்பிட்டால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. இதுவும் ஏதோ நிறத்தில், உருவில் ஒரு தின்பண்டம் அவ்வளவே. அதில் நான் பச்சைச் சதையையும் ரத்தத்தையும் பார்க்கவில்லை. அது தான் என்னால் சகிக்கமுடியாதது,” என்பான். சம்பத் நாராயணன், என்னும் அந்த அய்யைங்கார் வீட்டுப் பிள்ளை.

ஆனால் எனக்கும் அதில் ருசி ஏற்பட்டதில்லை. அது வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தேடிச்சென்றதில்லை. கிடைத்த போது, அது எப்போதாவது அதை மறுத்ததும் இல்லை. அதை வழக்கமாகவும் கொண்டதில்லை. ஆனால் விளையாட்டாக, அதிக சிந்தனையோ, மன உளைச்சலோ இல்லாது தொடங்கியது வெகு நாட்கள் நீடித்தது என்று சொல்ல வேண்டும். அதன் மேல் வெறுப்பு ஏற்பட்டது எண்பதுக்களில் எப்போதோ தான். ஏன் வெறுப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை.

புகை பிடிப்பது பட்நாயக்கின் பிரிவு உபசாரத்தில் 1952- ஆக இருக்கலாம், 1988 வரை நீடித்தது. அது ஒரு விடாப் பழக்கமாகத் தொற்ற நான்கைந்து வருடங்களாயின. 1957-ல் தான் புகை பிடிக்காது ஒரு மணிநேரம் இருக்க முடியாது என்ற அளவிற்கு அது தீவிரமானது. மாமிசம் அப்படி இல்லை. மாதங்கள் கடந்து விடும். வருடம் கூட ஆகிவிடும். யாராவது அழைத்து நேர்ந்தால் தான். கவலை இல்லை. ஆனால் புகை பிடிக்காது தொடர்ந்து படிக்க முடியாது, எழுத முடியாது என்று ஒரு நிலை வந்து விட்டது.

.அறுபதுகளில், .என்னிடம் மிகவும் ஒட்டுதலோடு இருந்த ஒரு குடும்பத்தில் வெளியூரிலிருந்து வந்த ஒரு மூத்த வயது மாமி ஒரு நாள் சொன்னார் “இதிலே என்ன இருக்கு? இதை விட்டுத் தொலையுங்களேன்? என்றார். அதை என்னவோ என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை. அவர்கள் சொன்னபடியே விட்டுத் தொலைத்தேன். ஆனால் எந்தக் காரியத்திலும் மனம் ஈடுபட முடியவில்லை. அவர்கள் 15 நாட்களோ இருந்துவிட்டு தம் ஊர் திரும்பவே நான் தொலைத்ததைத் திரும்ப எடுத்துக் கொண்டேன்.

யாராவது ஏதும் சொன்னால், “மனுஷனுக்கு ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கணும். அப்போ தான் நாம நல்லவன்னு சொல்றதுக்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கு. “சாமிநாதன் . எப்போ பாத்தாலும் ஊதீண்டே இருப்பான். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்”னு சொல்றவங்களுக்கு இது இல்லேன்னா நல்லவன்னு சொல்றதுக்கு சான்ஸே கிடைக்காது இல்லையா? அதனாலே ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருக்கறது உபயோகமா இருக்கும்” என்று சொல்லி வந்தேன். அதையும் அதிகப் பேரிடம் அதிக நாள் சொல்ல முடியவில்லை.

அதிலிருந்து ஒரு வழியாக நான் விடுதலை பெற்றது 1988=ல் ஒரு டிஸம்பர் மாதம் இரவு 7 மணியிலிருந்து. தலை சுற்றுகிறது, நிற்க முடியவில்லை என்று ஹாஸ்பிடலில் அவசரமாக சேர்க்கப் பட்டேன். எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து தடை பட்டிருந்த ரத்த ஒட்டத்தை திரும்பக் உயிர்ப்பித்தார்கள். அன்று புகை பிடிக்கும் பழக்கம் விட்டது தான். பிறகு அதை நான் தொட்டதில்லை. அதனால் எந்த காரியமும் நிற்கவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்ற சாக்கிற்கு அவசியமும் இருக்கவில்லை கிட்டத்தட்ட இருபத்து இரண்டு வருடங்களாகி விட்டன. அதன் நினைப்பே ஒரு போதும் எழுவதில்லை..

ஆனால் மது மாத்திரம் என்னில் எந்த வித வெறுப்பையும் ஏற்படுத்தவில்லை. தர்ம/அதர்ம மோதல் பிரசினைகளும் இருக்கவில்லை. சுகக்கேடு என்ற பயமும் இருக்கவில்லை. அது எனக்கு மிக விருப்பமாகவே இருந்துவருகிறது. பழக்கம் 1952- தொடங்கியது என்றாலும், இன்று வரை, சுமார் 60 வருட காலமாக நீடித்து வருகிறது என்றாலும், அதற்கு நான் அடிமையாகி விடவில்லை. ஆனால் நண்பர்களோடு, ஆமாம் நண்பர்களோடு தான் அளவளாவிக்கழிக்கும் சந்தர்ப்பங்களை நான் ஆனந்தத் தோடு அனுபவித்திருக்கிறேன். அவை மிக சுகமான மணிநேரங்கள். அங்கு நட்பின் நெருக்கமும் இருக்கும். கவிதையும் உலவும். காரசாரமான சர்ச்சைகளும் நடக்கும். இலக்கியம், சினிமா, நாடகம், பழங்கதைகள் என பலவும் பரிமாறிக்கொள்ளப் படும். ஆழமான நட்பின் இதமான வருடல்கள், சாதாரணமாக, வெளித்தெரியாத பாசமும், நெருடல்களும் கூட அப்போது வெளிப்படும். உமர் கய்யாமின், a book of verse and a jug of wine and someone beside us singing in wilderness வரிகள் அங்கு உயிர்த்தெழும். ஆனால் அதை நான் என்றும் தேடிப்போனதில்லை. அதில்லாவிட்டால் உலகம் சூன்யமாகிப் போய்விடுவதில்லை. ஆனால் அது வரும் கணங்கள், அதில் வாழும் கணங்கள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. மாதங்கள் பல அது இன்றிக் கழியும். கவலை இருந்ததில்லை.

கஷ்மீரில் இருந்த போது இரண்டரை வருஷங்கள் அனேக மாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அலுவலகக் கட்டிடத்திலேயே தான் உமர் கய்யாம் வருகை தருவார். சில சமயங்களில் சில விழாக்களில் பங்கு கொள்ளும்போதும், புதிய நண்பர்களை, அல்லது பழைய நண்பர்களை திரும்பச் சந்திக்கும்போதும், ஒவ்வொரு நாள் மாலையும் உமர் கய்யாமின் இரவுகள் தாம். அங்கு நிஜ மனிதர்கள் உயிர்த்தெழுவார்கள். நாம் எல்லோரும் மனித ஜீவன்கள் தாம் என்பதை எந்த அரசியல் கட்சியின் சித்தாந்த உதவியும் இல்லாது நாங்கள் உணர்ந்திருப்போம். அக்கணங்கள் எனக்கு உமர் கய்யாமை மாத்திரம் நினைவு படுத்தாது. என் ஹிராகுட் நண்பன் மிருணாலையும் நினைவு படுத்தும். அவன் அத் தொடக்க முன் இரவில் சொன்ன வார்த்தைகளும் சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

தில்லியிலும் தில்லி பல்கலைக் கழக, அப்போது (1974-ல் என்று எண்ணுகிறேன்) தயாள் சிங் காலேஜில் டாக்டர் ரவீந்திரன் தமிழ்ப் பேராசிரியராகச் சேர்ந்தார். பின் தில்லி பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு மாறினார். அவர் கரோல் பாகில் ஒரு வீட்டின் இரண்டாம் மாடியில் தில்லி பாலையை உமர் கய்யாமின் ஜன்னத்தாக மாற்றியிருந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் கூடு வோம். அங்கு கூடுவோரில் நான் தான் அதிகம் படிப்பில்லாதவன். பேராசிரியர்களும், நாடக விற்பன்னர்களும், நிறைந்த கூட்டமாக இருக்கும். அங்கும் தமிழ்த் துறை மாத்திரம் இல்லை, சினிமா, நாடகம், தமிழக அரசியல், எல்லாம் காற்றில் அலையாடும். வெகு வருடங்கள் அது தொடர்ந்தது. யாத்ராவின் பக்கங்கள் அங்கு நிரப்பப் படும். பல்கலைக் கழக கருத்தரங்குகள் பற்றி சர்ச்சிக்கப்படும். ஹங்கரிய, போலிஷ், செக் படங்கள் ஒவ்வொன்றின் சிறு நுணுக்க விவரங்கள் கூட ரவீந்திரனின் நினவில் கல்வெட்டெனப் செதுக்கப்பட்டிருக்கும். அவர் சொல்லும் விவரங்களிலிருந்து தான் என் நினைவுகளை நான் புதுப்பித்துக் கொள்வேன். இது எதுவும் விஸ்கி இல்லாது சாத்திய மாகியதில்லை. அனேக வருஷங்கள் தொடர்ந்து வந்த இந்த காட்சியில் ஸ்ருதி தவறிப் போகும் சமயங்களும் சில இருந்தன.

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணிஜென் ஒரு புரிதல் – பகுதி 13
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *